தந்தையும் மகனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 10,218 
 

கதை ஆசிரியர்: அமரர் கல்கி.

1

     தேச சரித்திரம் படித்தவர்கள் ‘சிவாஜி’ என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர் எலியா அல்லது புலியா என்பதைப் பற்றிச் சரித்திரக்காரர்களிடையே அபிப்பிராய பேதம் உண்டு. ‘புலி நகம் படைத்த ஓர் எலி’ என்பதாகவும் சிலர் சமரசமான தீர்ப்புக் கூறியிருக்கின்றனர். நம்மைப் பொறுத்தவரையில், ஓர் எலியாவது புலியாவது எந்தக் காலத்திலும் ஒரு மகா சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்ததாக நாம் கேள்விப்பட்டிராதபடியால், சிவாஜியை ஒரு வீர சிம்மமென்றே கொள்கின்றோம். [கடைசியில் நாமும் அவரை ஒரு வனசரமாகவே குறிப்பிட வேண்டியிருக்கிறது.]

     அந்த மகாராஷ்டிர சிம்மம் பூனாவில் கர்ஜனை புரியத் தொடங்கியிருந்த காலத்தில் – அதாவது, சுமார் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் – செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த தொண்டை மண்டலத்தில் திருவண்ணாமலைக்குச் சமீபமான ஒரு கிராமத்தில் கேசவன் என்ற பெயருடைய ஒரு குடியானவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடு மாடுகளும், வயல் காடுகளும் வேண்டிய அளவு இருந்தன. அழகிற் சிறந்த மனைவியும் வாய்த்திருந்தாள். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் திருவேங்கடம் என்று பெயர் வைத்துச் சீராட்டித் தாலாட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர்.

     “ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய துரதிர்ஷ்டங்களில், மனைவி அழகியாய் வாய்ப்பதைப் போல் வேறொன்றுமில்லை” என்று யாரோ அநுபவ ஞானி ஒருவர் கூறியிருக்கிறார். கேசவன் விஷயத்தில் அது உண்மையாயிற்று. அறுவடைக் காலத்தில் ஒரு நாள், அப்போது பன்னிரண்டு வயதுப் பையனாயிருந்த தன் பிள்ளையுடன் கேசவன் வயல் வெளிக்குச் சென்றிருந்தான். அவன் சாயங்காலம் திரும்பி வந்தபோது வீடு அல்லோல கல்லோலமாய்க் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன் வாழ்க்கைத் துணைவியைக் காணாமல் பதறினான். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், அன்று ஆற்காட்டு நவாப் அந்தக் கிராமத்தின் வழியாகச் செஞ்சிக் கோட்டைக்குப் போனதாகவும், அந்தக் காட்சியைக் காண ஊர் ஸ்திரீகள் எல்லாம் வந்து சாலையின் இரு புறமும் நிற்க, அவர்களில் கேசவன் மனைவி மேல் நவாபின் ‘தயவு’ விழுந்துவிட்டதாகவும், அவளை உடனே பல்லக்கில் ஏற்றிக் கொண்டு போனதாகவும், தகவல் தெரிய வந்தது.

     அன்றிரவு கேசவன், பித்துப் பிடித்தவன் போல் ஊரெல்லாம் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். மறுநாள் காலையில், தன் மனைவியைப் பற்றி நல்ல செய்தி வந்த பிறகு தான் அவன் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தது. செஞ்சிக் கோட்டையின் மேல் செங்குத்தான ஓரிடத்தில் பல்லக்கு ஏறிக் கொண்டிருந்தபோது கேசவன் மனைவி திடீரென்று பல்லக்கிலிருந்து கீழேயுள்ள அகழியில் குதித்துப் பிராணத்தியாகம் செய்து நவாபின் ‘தயவி’லிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள். ஊரார் சென்று அவள் உடலை எடுத்துக் கொண்டு வந்தனர்.

     கேசவன், சிதையில் வைத்திருந்த தன் மனைவியின் உயிரற்ற உடல் முன்னிலையில் ஒரு பிரக்ஞை செய்து கொண்டான்: “ஸ்திரீகளின் கற்புக்குக் காவலில்லாத நாட்டில் என்னுடைய சந்ததிகளை விட்டுச் செல்லேன். இனி நான் மறுமணம் புரியமாட்டேன். என் மகனுக்கும் கலியாணம் செய்து வைக்க மாட்டேன்” என்று அவன் சபதம் செய்தான்.

2

     மேற்கண்ட சம்பவம் நடந்து எழெட்டு வருஷங்களுக்கு அப்பால், வடக்கே பண்டரிபுரத்திலிருந்து ஒரு பெரியவர் திருப்பதி மலைக்கு வந்திருந்தார். அவருக்குச் ‘சமர்த்த ராமதாஸ்’ என்ற பெயர் வழங்கிற்று. அவர் ஆஞ்சநேயருடைய அவதாரம் என்றும், பகவானை நேருக்கு நேர் தரிசித்தவர் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். ஆறு மாத காலம் அவர் மரக்கிளைகளிலேயே “ராம், ராம்” என்று ஜபித்துக் கொண்டு காலம் கழித்தாராம்.

     அந்த மகானிடம் உபதேசம் பெறுவதற்காகத் தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஜனங்கள் வந்தார்கள். ஆனால் அவர்களில் அநேகர் இவருடைய உபதேசம் பிடிக்காமல் திரும்பிப் போய்விட்டனர்.

     அப்படிப்பட்டவரிடம் ஒரு நாள் கேசவனும், அவனுடைய மகன் திருவேங்கடமும் வந்து சேர்ந்தனர். திருவேங்கடம் இப்போது இருபது வயதைக் கடந்த திடகாத்திர வாலிபனாக இருந்தான்.

     கேசவன், ராமதாஸரின் பாதங்களில் விழுந்து, “ஸ்வாமி! இந்த ஏழைகள் இருவரையும் தேவரீரின் சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு அருள் புரியவேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினான்.

     அப்போது திருவேங்கடத்தின் கண்களில் கண்ணீர் துளிப்பதை ராமதாஸர் பார்த்தார். அவனுடைய மார்பில் கையை வைத்துச் சற்று நேரம் அவன் முகத்தை உற்று நோக்கினார். பிறகு, கேசவனைப் பார்த்து, “அப்பா! இந்தப் பிள்ளையாண்டான் உலகத்தைத் துறப்பதற்கு இன்னும் பக்குவம் அடையவில்லையே; இவனை ஏன் அழைத்து வந்தாய்?” என்று கேட்டார்.

அப்போது கேசவன் கண்ணீர்விட்டுக் கதறி அழ ஆரம்பித்தான். அம்மகானுடைய தேர்தல் மொழியால் கொஞ்சம் ஆறுதல் பெற்றதும், தன் மனைவியின் கதியையும், தான் செய்த பிரதிக்ஞையையும் விவரித்தான். பிறகு, “ஸ்வாமி! அந்த விரதத்தை இந்தப் பையன் கெடுத்து விடுவான் போல் இருக்கிறது. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ரங்கம் என்று ஒரு பெண் இருக்கிறாள். அவள் எப்படியோ சொக்குப் பொடி போட்டு இவனை மயக்கி விட்டாள். ‘ரங்கத்தைக் கலியாணம் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் உயிரை விடுவேன்’ என்று பிடிவாதம் பிடிக்கிறான். ஸ்வாமிகள் இவன் மனத்தை மாற்றி அருள் புரிய வேண்டும்” என்றான்.

     சமர்த்த ராமதாஸர் சிறிது யோசனை செய்துவிட்டுக் கூறினார்: “அப்பா! உன் மகன் மனத்தை மாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவனை அழைத்துக் கொண்டு மகாராஷ்டிரத்துக்குப் போ. அங்கே சிவாஜி மகாராஜா தர்மராஜ்யத்தை ஸ்தாபனம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய சைன்யத்தில் நீயும் இவனும் சேர்ந்து விடுங்கள். அப்போது இந்தப் பையனுடைய மனம் மாறும். மேலும் உங்களைப் போன்ற திடகாத்திர சரீரங்களுக்கு இந்த நாளில் சந்நியாசம் ஏற்றதல்ல. உங்களுடைய ஜன்மதேசத்தின் விடுதலைக்காகவும், ஹிந்து தர்மத்தைக் காப்பதற்காகவும் நீங்கள் யுத்த களம் சென்று போர் புரியவேண்டும்” என்று சொல்லி, இன்னும் பல நல்லுபதேசங்களும் செய்தார். (அவருடைய உபதேசம் பலருக்குப் பிடிக்காமல் போனதன் இரகசியம் இப்போது தெரிகிறதல்லவா?)

     ஆனால் கேசவனும் திருவேங்கடமும் அவ்வுபதேசத்தைச் சிரமேற்கொண்டனர். அவர்கள் உடனே புறப்பட்டு இரவு பகலாகப் பிரயாணம் செய்து, பிரதாபக் கோட்டையை அடைந்து, ராமதாஸர் கொடுத்த அடையாளத்தைக் காட்டி, ஸம்ராட் சிவாஜியின் வீர சைன்யத்தில் சேர்ந்தார்கள்.

3

     இந்தப் பொல்லாத உலகத்தின் இயல்பை நாம் அறிந்திருக்கிறோம். அது ஒரு கணங்கூடச் சும்மா இராமல் சுற்றிச் சுற்றிச் சுழன்று வருவது. இதன் காரணமாக நாட்கள் அதி வேகமாக மாதங்களாகி, மாதங்கள் வருஷங்களாகி வந்தன. ஆறு வருஷங்கள் இவ்வாறு அதி சீக்கிரத்தில் சென்றுவிட்டன. இதற்குள் கேசவனும் திருவேங்கடமும் அநேக சண்டைகளில் ஈடுபட்டு, தீரச்செயல்கள் பல புரிந்து, உடம்பெல்லாம் காயங்களடைந்து, பெயரும் புகழும் பெற்றுவிட்டனர்.

     ஒரு நாள் சிவாஜி கேசவனைக் கூப்பிட்டு, திராவிட தேசத்தில் அவன் பிறந்து வளர்ந்தது எந்த இடம் என்று கேட்டார். கேசவன், “திருவண்ணாமலைக்கு அருகில்” என்று சொன்னான். “செஞ்சிக்கோட்டை பார்த்திருக்கிறாயா?” என்று அவர் வினவ, “செஞ்சிக்கோட்டையில் ஒவ்வொரு கல்லும் புல்லும், ஒவ்வொரு மூலையும் முடுக்கும் எனக்குத் தெரியும்” என்று பெருமையுடன் கூறினான் கேசவன்.

     “சரி, அப்படியானால் நீயும் உன் மகனும் என்னுடன் வாருங்கள்” என்றார் சத்ரபதி. பொறுக்கி எடுத்த சில போர் வீரர்களுடன் அவர் மறுநாளே தென் திசை நோக்கிப் புறப்பட்டார்.

     அடுத்த மாதத்தில் ஒரு நாள் சிவாஜியின் வீரர்கள் செஞ்சிக்கோட்டையின் மேல் எதிர்பாராத சமயத்தில் இடி விழுவது போல் விழுந்தார்கள். நவாபின் வீரர்களைச் சின்னாபின்னமாக ஓடச் செய்து கோட்டையைக் கைப்பற்றினார்கள்.

     கோட்டை வசப்பட்ட அன்று சிவாஜி, கேசவனை அழைத்து அவனுடைய உதவியினால் தான் அவ்வளவு சுலபமாக அந்தப் பிரசித்தி பெற்ற கோட்டையைப் பிடிக்க முடிந்தது என்று சொல்லித் தமது நன்றியைத் தெரிவித்தார். பிறகு, “ஆனால் நமது ஜயம் இன்னும் நிலைப்பட்டு விடவில்லை. கோட்டையைக் கைவிட்ட நவாபின் வீரர்கள் இப்போது கோட்டைக்கு வெளியே பலம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆற்காட்டிலிருந்து புது சைன்யங்களும் வந்து நம்மை முற்றுகையிடக்கூடும். ஆகையால் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இங்கே நம்முடைய பலம் இவ்வளவுதான் என்று நம் எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. ஆகவே கோட்டையிலிருந்து யாரும் வெளியே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கோட்டையின் இரகசிய வழிகள் நம் வீரர்களுக்குள்ளே உனக்கு மட்டுந்தான் தெரியும். ஆகையால், நீதான் கோட்டையைச் சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். யாராவது வெளியில் போக எத்தனித்தால் தாட்சிண்யம் பாராமல் உடனே சுட்டுக் கொன்றுவிடு” என்று கட்டளையிட்டார். கேசவன் தன் வாழ்நாளில் எக்காலத்திலும் இல்லாத இறும்பூதுடன், “மகாராஜ்! அப்படியே!” என்று கூறிச் சென்றான்.

4

     கோட்டை மதிலுக்கு மேற்புறத்தில் சூரியன் அஸ்தமித்தான். அதிவிரைவாக நாலாபக்கங்களிலும் இருள் கவிந்து கொண்டு வந்தது. கேசவனுடைய கவலை அதிகமாயிற்று. பகலை விட இரவில் மூன்று மடங்கு அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டிய அவசியத்தை அவன் உணர்ந்திருந்தான். சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தான்.

     ஆ! அதென்ன அந்தப் பாறைகளினிடையே! ஒரு மனித உருவமல்லவா ஒளிந்து கொள்வது போல் தோன்றுகிறது? அந்த உடை – அது நவாப் சைன்யத்தின் உடையல்லவா? ஓஹோ! எதிரியின் ஒற்றன் உளவறிந்து கொண்டு செல்கிறான்!

     ஒரு மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் கேசவன் மனத்தில் மேற்படி எண்ணங்கள் தோன்றி மறைந்தன. இரண்டே பாய்ச்சலில் அந்த உருவம் ஒளிந்து கொண்ட இடத்தை அடைந்தான். அவன் கழுத்தைப் பற்றி ஒரு குலுக்குக் குலுக்கி, “அடே! நீ யார்?” என்று கர்ஜித்தான். பதில் வராமல் போகவே, முகத்தை திருப்பிப் பிடித்து உற்று நோக்கினான்; நோக்கியது நோக்கியபடியே அசையாமல் நின்றான். அவன் கண்களிலிருந்து விழிகள் வெளியே வந்து விடும் போல் இருந்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் வாயிலிருந்து வரவில்லை.

     அந்த முகம், அவனுடைய மகன் திருவேங்கடத்தின் முகந்தான்! திருவேங்கடத்தின் முகத்தை யாரும் திருடியிருக்க முடியாததலால், அவன் தான் ஒரு முஸ்லிம் வீரனின் உடையைத் திருடி அணிந்து கொண்டு கிளம்பியிருக்கிறான். அவன் எங்கே கிளம்பியிருக்கக்கூடும்? பகைவர்களுக்கு உளவு சொல்லத்தான். “அட பாவி! துரோகி! சண்டாளா! என் பிள்ளைதானா நீ? இதற்காகவா உன்னைப் பெற்றெடுத்து இத்தனை காலமும் வளர்த்தேன்? இதெல்லாம் நிஜந்தானா? அல்லது ஒரு வேளை சொப்பனம் காண்கிறேனா?”

     “அப்பா! என்னை விடுங்கள். ரொம்ப அவசர காரியமாய்ப் போகிறேன். தயவு செய்யுங்கள்” என்று திருவேங்கடம் சொன்னபோது, கேசவன் தான் கனவு காணவில்லையென்பதை உணர்ந்தான். “என்ன, அவசரமாய்ப் போகிறாயா? ஆமான்டா! அவசரமாய் யமலோகத்துக்குப் போகப் போகிறாய்” என்று கூறிக் கொண்டே கேசவன் கோபச் சிரிப்புச் சிரித்தான்.

     “இல்லை, அப்பா! யமலோகத்துக்கு இல்லை. நான் யமலோகத்துக்குப் போய்விட்டால் தங்களுக்கு யார் கர்மம் செய்வார்கள்?”

     “அட பாவி! நிஜத்தைச் சொல்லிவிடு. எங்கே கிளம்பினாய்? ‘என்ன துரோகம் செய்வதற்காக இந்த வேஷத்தில் புறப்பட்டாய்? கோட்டையை விட்டு யாரும் வெளிக் கிளம்பக் கூடாது என்று சத்ரபதி உத்தரவிட்டிருப்பது தெரியாதா?”

     “அப்பா என்னை நம்பமாட்டீர்களா? பிசகான காரியம் ஒன்றுக்காகவும் நான் போகவில்லை. மிகவும் முக்கியமான அவசரமான வேலைக்காகவே போகிறேன். தயவு பண்ணி என்னை நம்புங்கள்.”

     “முடியாது, முடியாது. நிஜத்தைச் சொல்லிவிடு. மகாராஜாவிடம் உன்னை அழைத்துச் சென்று காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டுகிறேன். இல்லாவிட்டால் உன்னை எடுத்து வளர்த்த இதே கையினால், இந்த இடத்திலேயே உன்னைக் கொன்று விடுவேன்.”

     திருவேங்கடம் சற்று யோசித்தான். “அப்பா! நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். மன்னியுங்கள் – என்னுடைய ரங்கத்தைப் பார்க்கத்தான் போகிறேன். பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடுகிறேன்…” என்பதற்குள், கேசவன், “பொய், பொய், பொய்! ரங்கத்தைப் பார்க்கப் போவதற்கு இவ்வளவு அவசரம் என்ன? ராத்திரியில் கிளம்புவானேன்?” என்றான்.

     “அப்பா! ரங்கத்துக்கு உடம்பு சரிப்படவில்லையாம். சாகக் கிடக்கிறாளாம். நாளை வரையில் உயிரோடிருப்பாளோ, என்னவோ தெரியாது.”

     “அடே! நேற்றுப் பையன் நீ, என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்? ரங்கம் சாகக் கிடப்பதெல்லாம் உனக்கு எவ்வாறடா தெரியும்? யார் வந்து சொன்னார்கள்? – வேண்டாம்; நிஜத்தைச் சொல்லிவிடு, திருவேங்கடம்! – உன்னைப் பிடிப்பதற்குச் சற்று முன்னால் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா? ‘என்னுடைய சபதம் தீர்ந்து விட்டது; அதற்கு இனிமேல் அவசியமுமில்லை; தர்ம ராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டபடியால் நம் குழந்தை இனி மேல் கலியாணம் செய்து கொள்ளலாம். நாமே மகாராஜாவிடம் உத்தரவு பெற்றுப் போய் அந்தப் பெண்ணை பார்த்துவிட்டு வரவேணும்’ என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், நீயோ… அட பாதகா! துரோகிப் பயலே! எங்கேடா ஓடுகிறாய்!…”

விஷயம் என்னவென்றால், கேசவன் அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, திருவேங்கடம் திடீரென்று அவன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டு ஒரு துள்ளுத் துள்ளி ஓட்டம் பிடித்தான். அடுத்த க்ஷணத்தில் புதர்கள், பாறைகளிடையில் அவன் மறைந்து விட்டான்.

     கேசவன் முதலில் ஓடித் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். பிறகு திருவேங்கடத்தைத் தேடினான். எவ்வளவு தேடியும் பயனில்லை. இதற்குள் நன்றாய் இருட்டியும் போய்விட்டது.

     இவ்விருவருடைய சம்பாஷணையையும் அதன் முடிவையும் மூன்றாவது மனிதர் ஒருவர் மறைவாக இருந்து கவனித்து விட்டுச் சென்றது அவர்கள் இருவருக்கும் தெரியாது.

5

     மறுநாள் பொழுது விடிந்து கொஞ்ச நேரம் ஆனதும் கேசவன் மகாராஜாவிடம் வந்தான். இரவெல்லாம் கண்விழித்ததனால் அவனுடைய கண்கள் கோவைப் பழம் போல் சிவந்திருந்தன. அவன் பேயடித்தவன் போல் காணப்பட்டான். கீழே சாஷ்டாங்கமாய் விழுந்து தண்டனிட்டு, “மகாராஜ்! கடமையில் தவறிவிட்ட பாதகன் நான், என்னைத் தண்டியுங்கள்” என்று கதறினான். சிவாஜி அவனைத் தூக்கி நிறுத்தி, “என்ன சமாசாரம்?” என்று கேட்டார். கேசவன் முதல் நாள் நடந்ததையெல்லாம் விவரமாகக் கூறினான். அவன் கூறி முடிக்கும் சமயத்தில், அங்கே வந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம்; அவன் பிள்ளை திருவேங்கடந்தான்!

     கேசவன் அவனைப் பார்த்ததும் பரபரப்புடன் தன் பிச்சுவாவை உருவிக் கொண்டு, “அடே! துரோகி” என்று கூறியவண்ணம் குத்தப் போனான். சிவாஜி அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்தார். “கொஞ்சம் பொறு; முதலில் அவன் போன சங்கதி காயா, பழமா என்று சொல்லட்டும்” என்றார்.

     “பழந்தான் மகாராஜ்!” என்றான் திருவேங்கடம். தன்னுடைய இடுப்பில் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த மகாராஜாவின் முத்திரை மோதிரத்தை அவிழ்த்து அவரிடம் கொடுத்தான்.

     கேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “மகாராஜா அதென்ன? தாங்கள் தான் இவனை அனுப்பினீர்களா?” என்று கேட்டான்.

     “ஆமாம்; செங்கற்பட்டு ஏரியில் நம்முடைய சேனாதிபதி சில சைன்யங்களுடன் காத்திருக்கிறார். அவரை அங்கிருந்து நேரே வேலூருக்குச் சென்று தாக்கச் சொல்லிச் செய்தி அனுப்ப வேண்டியிருந்தது. அதற்காகத் தான் இவனை அனுப்பினேன். வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தேன். இந்த முக்கியமான வேலையைச் செய்து முடித்ததற்காகத் திருவேங்கடத்துக்கு ஜமேதார் பட்டம் அளிக்கிறேன்” என்றார் சத்ரபதி.

     அதைக் கேட்டுக் கேசவன் வெறுப்புடன் ‘ஹும்’ என்னவும், சிவாஜி நிமிர்ந்து பார்த்தார்.

     “மகாராஜ்! தாங்கள் இவனுக்குப் பட்டம் அளிக்கிறீர்கள். நானாயிருந்தால் நாலு அறை கொடுத்துப் புத்தி கற்பித்திருப்பேன். இந்த முட்டாளிடம் அவ்வளவு முக்கியமான வேலையைக் கொடுத்தீர்களே! எப்போது மகாராஜாவின் காரியமாகப் போகிறானோ, அப்போது யாராயிருந்தாலென்ன? கையிலே கத்தி இல்லையா? அப்படியா பேசிக் கொண்டு, பொய்ச் சாக்குச் சொல்லிக் கொண்டு நிற்பார்கள்? நான் அவனைச் சுட்டுக் கொன்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? காரியம் கெட்டுப் போயிருக்குமே?” என்றான் கேசவன்.

     “ஆமாம், அந்தக் குற்றத்திற்காக இவனைத் தண்டிக்கவும் போகிறேன்! ஆறு மாதத்திற்கு இவனை நமது வீர சைன்யத்திலிருந்து தள்ளியிருக்கிறேன்” என்றார் சிவாஜி.

     “ஐயோ! மகாராஜா; நிஜமாகவா?” என்று திருவேங்கடம் கதறினான்.

     “ஆமாம் நிஜமாகத்தான், கேசவா! சீக்கிரம் அந்த ரங்கம்மாளை அழைத்துக் கொண்டு வா! நமது முன்னிலையிலேயே கலியாணம் நடக்க வேண்டும். அவன் ஆறு மாதம் இல்லறம் நடத்திவிட்டு அப்புறம் நம்முடன் வந்து சேரட்டும்” என்றார் சிவாஜி.

நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)