தண்ணீர் தீவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 9,798 
 
 

சித்தப்பா கேவிக்கேவி அழுது கொண்டிருந்தார்.துக்கத்தின் தீவிரம் தெரிந்தது கேவலில்.அதனினும் தூக்கலாக அவர் உள்ளே ஏற்றியிருந்த நாட்டுச்சரக்கின் நாற்றம் வயிற்றை குமட்டுவதாக இருந்தது.தனது மடியில் முகம் புதைத்து அழும் அவரது தலையை கோதிவிட்டோ அல்லது முதுகில் அரவணைப்பாய் தடவிவிடவோ கைகள் பரபரத்தாலும் தன்னினும் பதினைந்து வருடங்கள் பெரியவரான அவருக்கு தனது ஆறுதல் செய்கைகள் தேவையா என்று மனது கிடந்து யோசித்தது.அதே அறையில் இருந்த அம்மாவையும் அப்பாவையும் பாட்டியையும் அவரது செல்லத்தங்கையான எனது அத்தையையும் விடுத்து என் மடியில் முகம் புதைத்து அழும் அவரை பார்க்க பாவமாய் இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

‘’டேய் குட்டி சல்மாவை பொண்ணு கேட்டு வந்தானுங்களே அவளை பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்கடா..’’குழறினர்.வாயிலிருந்து உமிழ்நீர் ஒழுகியது.

இவனது தங்கை சல்மாவை பெண் பார்க்க வந்தவர்கள் சித்தப்பாவின் நெருங்கிய நண்பர்கள்.அதனால் அவரே முன்னின்று அனைத்தையும் செய்வதாய் சொல்லி பொறுப்பேற்றிருந்தார்.என்ன காரணமோ அவர்களுக்கு இவனது தங்கையை பிடிக்கவில்லையென்று கூறியிருக்கிறார்கள்.அதை எப்படி சொல்வதென்று தெரியாது உள்ளே தண்ணீ போட்டுக்கொண்டு வந்து இப்படி குழறிக்கொண்டிருக்கிறார்.

அம்மா தான் சொன்னார்.’’ஆயிரத்தெட்டு பேர் வரானுங்க.எல்லாருக்கும் எல்லாத்தையும் பிடிச்சிடுமா.எதோ தெரிஞ்சவங்களாச்சே.பையனும் பாக்க லச்சணமா இருக்கானேனுன்ட்டு பாத்தோம்.அதுக்கு போயி இப்படி செஞ்சிக்கினு வந்து நிக்கிறியே’’.

சித்தப்பா மெதுவாக எம்பி தனது அண்ணியை பார்த்தார்.அப்படியே தாவிச்சென்று அவரது மடியில் விழுந்து மறுபடியும் அதே செய்தியை கேவியபடியே கூற ஆரம்பித்தார்.உள்ளே சென்ற தண்ணியின் லீலையோ இதுவென்று இவன் எண்ணிக்கொண்டான்.

அம்மாவுக்கு கல்யாணமாகி இங்கு வந்த போது சித்தப்பாவுக்கு ஐந்து வயது தான் ஆகியிருக்குமென்று அம்மா அடிக்கடி கூறக்கேட்டிருக்கிறான்.”அவன் எனக்கு மொத பிள்ளைடா”என்பாள்.

சங்கோஜமோ சதுர்புத்தியோ தெரியாத நிலையில் நிலை தடுமாறி தவிக்கும் மனதுடன் அல்லலாடும் சித்தப்பாவை பார்க்கும் போது இவன் மனதுள் நிறைந்த கனமாய் ஏதோவொன்று கரைந்து கசிய ஆரம்பித்தது.

தொழுகைக்காய்(நமாஸ்) சுத்தபத்தியாய்(வஸு)அமர்ந்திருந்தவன் மீது நாஜாயிஸ் எனப்படும் அசுத்தி சித்தப்பாவின் வாய் வழி மதுரசமாய் வழிந்தோடியதால் மறுபடியும் சுத்திகரணம் செய்ய வேண்டி குளியலறையினுள் நுழைந்து தாழிட்டுக்கொண்டான்.ஏனோ ஓவென்று கதறியழ வேண்டும் போலிருந்தது.தண்ணீர் குழாயை வேகமாக திறந்துவிட்டு தபதபவென்று பக்கெட்டில் வீழ்ந்த தண்ணீரின் ஓசையோடு இயைந்து அழ ஆரம்பித்தான்.

1983

சார்மினார் ஓட்டலின் குடும்ப அறையில் நண்பர்கள் சகிதம் அமர்ந்து ஓல்ட்மங்க் முழுபாட்டிலின் மதுவை பகிர்ந்தளித்தபடி இரண்டாவது ரவுண்டுக்கு இவர்கள் தாவும் போது தான் அவர்கள் இருவரும் உள்ளே வந்தமர்ந்தனர்.அவர்களது கைகளிலே பீர்பாட்டில் இருந்தது.காலியாயிருந்த ஒரு மேசையை ஆக்கிரமித்து நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர்.

“ஜமீல் பாய்…ஜமீல் பாய்”குரல் கொடுத்தான் இவன்.

லேசான வழுக்கையுடன் முகம் முழுக்க சிரிப்புடன் உள்ளே எட்டிப்பார்த்தவர்,

”எஜ்மான் என்ன வேணும்”என்று கேட்டார்.

”ஆனியன் சலாது…சிக்கன் பிரியாணியிலிருந்து சிக்கன் பீஸை எடுத்து அதை சுக்கா பிரை போட்டு குடுத்துடுங்க.ஆங் ரெண்டு பிளேட்டு”.

பந்தி களை கட்ட துவங்கியிருந்தது.புதியதாய் உள்ளே நுழைந்த பீர்பாட்டில்காரர்களில் ஒருவர்,

“ராமு..அந்த பசங்கள்ள செகப்பா இருக்கானே அவன் முஜிப்போட அண்ணண் பையன் சலீம் தானே…”.

அவர்கள் இவனை குறிபார்த்ததை இவனும் தெரிந்து கொண்டான்.சித்தப்பா முஜிப்பின் நண்பர்களில் யாராவது ஒருவராய் இருக்க வேண்டும்.இவனுக்கு தெரியவில்லை.ஆனால் அவர்களால் இவன் இனம் கண்டுக் கொள்ளப் பட் டான்.சாதுர்யமாய் மதுவை தொடாது அமைதியாய் அமர்ந்திருந்தான்.உள்ளே சென்றிருந்த இரண்டு ரவுண்டுகள் மெதுவாக சுருதியை கூட்டிக் கொண்டி ருந்தது.

ராஜன் தான்,”டேய் என்னடா நிறுத்திட்டே”.குசுகுசுப்பதாய் எண்ணி பெருங்குரலில் இரகசியம் பேசினான்.

“உஸ்…உஸ்…மெதுவாடா”கண்களால் ஜாடை காட்டினான் சலீம்.ராஜனின் காதருகே சென்று,”டேய் என் சித்தப்பாவோட பிரண்டுங்க போலிருக்கு அவங்கள பாத்தா.கொஞ்சம் சும்மாயிருடா”.

“ஆங்…ஆங்’என்ற ராஜன் திடீரென்று “எந்தம் மய்…இருந்தா எனக்கின்னாடா”வென்று உச்சஸ்தாயியில் கத்த ஜமீல் பாய் எட்டிப்பார்த்தார்.கலவரமே இல் லாத சிரித்த முகமாய்,

“என்ன சார்”என்றார்.

“பாய்..ஏன் இவனுங்களே உள்ள உட்டே”.

மேற்கொண்டு ராஜன் ஏதும் கூறும் முன்னரே பீர்பாட்டிலோடு இருவரும் வெளியேறிச்சென்றனர்.சலீமுக்கு சற்று உதறல் ஏற்பட்டிருந்தது. சித்தப்பாவிடம் சென்று இவர்கள் ஏதாவது கூறிவிட்டால்…?அய்யோ… அப்பா ஏதும் சொல்வாரோ மாட்டாரோ சித்தப்பா உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்.லேசான கிறக்கத்திலும் பழைய நினைவுகளை அசை போடத்துவங்கியது மனது.பின்னோக்கி பறப்பது போல் ஏதோ ஒரு உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தான்.

1975-ஆம் ஆண்டின் துவக்கம் அது.

‘அஞ்சாங் கிளாஸ் படிக்கிற.சைக்கிள் பெடல சரியா மெரிக்க தெரியில”தலையின் மீது டப்டப்பென்று தட்டினார் முஜிப்.

சலீமுக்கு அழுகைஅழுகையாய் வந்தது.தெரியாத்தனமாய் சித்தப்பாவிடம் சைக்கிள் கற்றுத்தர சொல்லி மாட்டிக்கொண்டுவிட்டோமே என்று கலங்கினான்.

இவன் சைக்கிள் ஓட்ட கற்றுத்தரச்சொல்லி கேட்டதும் சற்றும் தாமதியாமல் ஒரு வாடகை சைக்கிள் கொண்டு வந்து அவனை அரைப்பெடல் முக்கால் பெடல் என்று போட்டு வாட்டாமல் நேரடியாகவே சீட்டின் மீது அமர்த்தி ஹேண்டிலை ஒரு கையாலும் இவன் அமர்ந்திருந்த சீட்டை ஒரு கையாலும் பிடித்து தள்ளியபடி ,

“பெடலை இப்பிடி மெரி.அப்பிடி மெரி.ஆங் அந்த கால மேல தூக்கும் போது இந்த காலாலே மெரிக்கனும்”என்று சொல்லி கொடுத்தபடிக்கு வியர்வை வழிய கூடவே நடை பயின்றார்.ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து தலையில் தட்டும் வரையில் நிலைமை பெரிதாகிப்போக இவனது அழுகை சிறிது நேரம் பயிற்சியை நிறுத்தியது.

அதன் பின் சைக்கிளை இவனிடம் தந்தவர் “சரி…தள்ளிட்டு வா”என்று கூறிவிட்டு விடுவிடுவென சாலையின் மேடான பகுதிக்கு சென்று நின்றுகொண்டார்.இவன் ஒரு வழியாக அங்கு வந்து சேர்ந்ததும் அவனை சீட்டின் மீதமர்த்திவிட்டு ,

’நேரா முன்னாடி பாக்கனும்.ஹேண்டிலை இப்படி அப்படி அசைக்கக்கூடாது’ என்று கூறியபடியே சைக்கிளை மெதுவாக தள்ளிவிட்டார்.இவனும் தடுமாறியபடியே சைக்கிள் பெடலை சித்தப்பா கூறியது போலவே மிதித்துக் கொண்டு சற்று தூரம் சென்றான்.மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதி வரும் வரை சைக்கிள் நேராக சென்றது.சமதளம் வந்தவுடன் சைக்கிளை செலுத்துவது கடினமாகப்பட்டது.அப்போது தான் சித்தப்பா தன் கூட சைக்கிளை பிடித்தபடி வரவில்லையென்பதை அறிந்து கொண்டவன் நிலைதடுமாறி கீழே தடாலென்று விழுந்தான்.விழுந்தவனின் மீது சைக்கிள் விழ இடுப்பில் லேசான சிராய்ப்பும் ஹேண்டில் பட்டு மார்புப்பகுதியும் வலியெடுக்க ஹோவென அழ ஆரம்பித்தான்.சித்தப்பா ஓடி வந்தார். சைக்கிளை தூக்கி நிறுத்தினவர் இவனை எழுப்பி,

“ஊஹூம்…இது வேலக்கி ஆவாது.ஓடு…வீட்டுக்கு போயி அடிபட்டதுக்கு மருந்து வச்சிக்க”.சொன்னவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இவன் வீட்டையடைந்து அடிபட்ட இடத்துக்கு மருந்தையும் வலி மிகுந்த இடத்தை தேய்த்தும் சற்று இளைப்பாறும் நேரத்தில் சித்தப்பா திரும்பி வந்தார்.

“இன்னா சைக்கிள் ஓட்றான் இவன்.இந்த வயசுல நான் டிரிபிள்ஸ் போவேன்.அவ்ளோ தான்.ஒனக்கு சொல்லித்தர முடியாது”.

இதை கேட்டதும் இவன் அழ ஆரம்பித்தான்.அம்மா உள்ளேயிருந்து எட்டிப்பார்த்து “முஜிப்…ஏன் அவன சத்தாயிக்கிற.அவனே அடிபட்டு அழுதுகினு இர்க்கான்.சலீம்…நீ வாடா என் கண்ணு”.செல்லமாக குரல் கொடுத்தாள்.

பிறகு அடிபட்டுக்கொண்டே சைக்கிள் ஓட்டவும் டி.வி.எஸ்.50 மொபெட்டையும் ஹீரோஹோண்டாவையும் ஓட்ட கற்றுக்கொடுத்தவர் சாட்சாத் அதே சித்தப்பா தான்.

சலீமுக்கு தலை லேசாக கனத்துபோனது போல் தோன்றியது.இப்போது சித்தப்பாவின் நண்பர்கள் இவனை ஓட்டலில் மது அருந்தும் கோலத்தில் கண்டு அதோடு இவனை மட்டும் குறிப்பாக அடையாளம் கண்டுகொண்டது இவனுக்குள் பதற்றத்தை அதிகரிக்க செய்தது.சித்தப்பாவிடம் இவர்கள் கூறிவிட்டால் என்னவாகும் என்ற படபடப்பும் சேர்ந்து கொள்ள கிளுகிளுக்கும் சஞ்சரிப்பில் மிதந்து கொண்டிருந்தவனுக்கு லேசாக வயிறு கலக்க பெரும் குமட்டலோடு ’உவேக்’கென்று பெருஞ்சத்தத்தோடு உள்ளிருந்ததை வெளியே வாந்தியெடுத்தான்.வெங்காயத்துண்டுகள் எண்ணெய்யில் வறுத்தெடுத்த சிக்கன் துண்டுகள் தங்க நிற திரவமென கலக்கலாக தரையில் சிதறியவை ஏற்படுத்தின கவுச்சி நாற்றம் அந்த அறையையே நாறடித்தது.ஜமீல் பாய் எட்டிப்பார்த்தார்.சற்றும் சலிப்பே யில்லாத சிரித்த முகம்.இது மாறவே மாறாதோ.

“பையன அனுப்பறேன்.சுத்தம் பண்ணிடட்டும்.வேற எதாவது வேணுமா.லெமன் கொஞ்சம் குடுக்கிறேன்”.சென்றுவிட்டார்.

சலீமின் தலையை ராஜன் தான் கெட்டியாக பிடித்திருந்தான்.

“ராவாக கொஞ்சம் உள்ள விட்டா எல்லாம் சரியாயிடும்”.அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே ’உவேக்’கென்று அவன் மீது மறுபடியும் வாந்தியெடுத்து மயங்கி சரிந்தான் சலீம்.

தட்…தட்…தட்.

கதவு தட்டப்படும் ஓசையும்,

‘’எவ்ளொ நேரமா குழாய தொறந்து வச்சிட்டு அப்படியென்ன பண்றீங்க”என்ற மனைவி ஜமிலாவின் குரலும் தான் சலீமை இவ்வுலகிற்கு மீட்டு வந்தது.வேகமாக குளித்துவிட்டு தொழுகைக்காய் வஸு செய்து கொண்டு துவாலையால் முகம் துடைத்தவாறு வெளியே வந்தான்.

சித்தப்பாவை காணவில்லை.

“சாச்சா போயிட்டாரா.கொஞ்ச நேரம் இங்கயே இருக்க சொல்லியிருக்க லாம்லே”என்றான் தாடியை துவாலையால் நன்கு கிளர்த்தி துடைத்தபடி.

‘அவன் எங்க கேக்கறான்.கெளம்பி போயிட்டான்”என்றாள் அம்மா.

எப்படி போனாரோ இந்த நிலைமையில் என்றெண்ணியபடி தனது அறைக்குள் நுழைந்து தொழுகைக்காய் தயாராகி வீட்டிலிருந்து வெளியேறி பள்ளிவாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

எதிரே மாரியப்பன் வந்தான்.இவனை கண்டதும்,

”பாய் உங்க சித்தப்பா ரோட்டோரம் உலுந்து கெடக்குறாரு.எலுப்பினாலும் எள மாட்டேன்றாரு.போயி சீக்கிரமா பாரு”என்றான்.

சலீம் நடையில் வேகம் கூட்டி மாரியப்பன் கூறிய இடத்தை அடைந்தான்.சித்தப்பா சாலையோரமாய் கைகளையும் கால்களையும் பரத்தியபடி மல்லாந்து படுத்துக்கிடந்தார்.கொளுத்தும் வெயிலில் தார் ரோட்டின் மீது சுயநினைவின்றி கிடக்கும் அவரை பார்த்ததும் கதறி அழ வேண்டுமென்ற உந்துதல் ஏனோ தானாய் உருவானது அவனுள்.அவர்களை கடந்து சென்ற இருவர் கூட இவர்களை கண்டும் காணாதது போல் சென்றனர்.அவர்களுள் ஒருவன்,

“இந்த முஜிப் பாய் கொஞ்ச நாளாவே ஓவரா தண்ணி போட்டுட்டு இப்படி உளுந்து கெடக்கிறாரு.மொத எல்லாம் கொஞ்சமா குடிச்சிபுட்டு அப்படியே சைடாவே போயிடுவாரு”என்றபடி ஆதங்கப்பட்டான்.

சலீமுக்கு அதிர்ச்சி.சித்தப்பா இன்று தான் முதன்முதலாய் குடித்திருக்கிறார் என்று நினைத்தவனுக்கு சம்மட்டி அடியாய் இறங்கியது அந்த பேச்சு.

சாலையில் வேகமாக ஒரு கார் இவர்களை கடந்து சென்றது.இவனுக்கு மனது பதைத்தது.மெதுவாக குனிந்து சித்தப்பாவை ஒருக்களித்து படுக்க வைத்து அவரது இடது கையை மேலே இழுத்து தனது தோளில் சார்த்தி அப்படியே முதுகுப்புறம் இரு கைகளையும் கொடுத்து நேராக நிமிர்த்தினான்.வாயிலிருந்து ஒழுகிய ஒழுகலின் நெடி அதிகமாய் படுத்தியது. வியர்வையும் வழிந்தபடி இருந்ததால் அவரது சட்டை நனைந்திருந்தது.

சலீம் சித்தப்பாவை தூக்கிக்கொண்டு நிமிர்ந்தான்.

தூரத்தில் பள்ளிவாசலிலிருந்து லுஹர் தொழுகைக்கான பாங்கொலி காற்றில் இசைந்தபடி வந்து இவன் செவிகளில் விழுகிறது.கண்களிலிருந்து தானாக கண்ணீர் தாரையாய் வழிந்து தாடியை நனைத்தபடி சித்தப்பாவின் வியர்வை நனைத்த சட்டையில் வீழ்ந்து அதோடு அய்க்கியமாகிறது.

இன்ஷா அல்லாஹ்…!சித்தப்பாவும் தன்னைப்போலவே மாற்றப்படுவார். நம்பிக்கையோடு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *