கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 860 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சரியாக மணி ஐந்தடித்து ஓய்ந்த போது பவித்ராவின் கார் அந்த அழகிய ரெட்டை மாடி வீட்டின் வாசலில் வந்து நின்றது. காரை ஷெட்டில் போட்டுவிட்டுக் கைநிறைய பைல்களையும் “ஹேண்ட் பேக்கையும்” தூக்கிக் கொண்டு நடந்தவள் தன் காலுயர்ந்த காலணிகளை கழற்றுவதற்கு முன்பு குழந்தை சித்ரா ஓடி வந்து முழங்கால்களைக் கட்டிக் கொண்டாள். அந்த வருகையைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பவித்ரா சற்றே தடுமாற காலில் மாட்டியிருந்த காலணியே அவளுக்கு எதிரியாகி கால் மடக் கென்று சுளுக்கிக் கொள்கின்றது.

‘ஏய் லட்சுமி… என்னாடி பண்றே அங்கே… இங்கே வந்து இந்தக் கழுதையைப்பிடி…” என்று வேலைக்காரியைக் கூச்சலிட்டு அழைக்கிறாள். காலையிலிருந்து அம்மாவைப் பார்க்காமலிருந்த குழந்தையின் முகம் வெயிலில் விழுந்த பூவாய் வாடிப் போகிறது. வேலைக்காரி ஓடிவந்து சித்ராவைத் தூக்கிக்கொள்ள பவித்ரா கையிலிருந்த பொருட்களுடன் உள்ளே நுழைகிறாள். தொடர்ச்சியாக வேலைக்காரப் பெண்ணுக்கு வசை மொழிகள் விழுந்து கொண்டே இருக்கின்றன. அந்த அப்பாவிப் பெண் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறாள். பவித்ரா குளித்து முடித்து உடையை மாற்றிக் கொண்டு வந்து சமையலறைக்குப் போய் ஒரு தட்டில் சாப்பாடும் ஒரு குவளையில் குளிர்ந்த நீருமாய் வந்து அமர்கிறாள். அம்மா சாப்பிட உட்கார்ந்ததைப் பார்த்த குழந்தை சித்ராவுக்கு அம்மாவிடம் கொஞ்ச வேண்டும் என்ற ஆசை. வேலைக்காரியை விட்டுவிட்டு உள்ளே ஓடி வருகிறாள். அம்மாவின் முதுகுப்புறமாய் வந்து கழுத்தைக் கட்டிக் கொள்கிறாள். அளவு கடந்த சந்தோஷத்தில் அம்மாவின் கன்னத்தில் இப்படியும் அப்படியும் மாறி மாறி முத்தமிடுகிறாள்.

கையிலிருந்த உணவை மேசையில் வைத்துவிட்டு அவளை இடது கையால் இழுத்து கன்னத்தில் பளார் பளாரென்று அறைகிறாள் பவித்ரா! குழந்தை அதிர்ச்சியில் விறைத்துப் போகிறாள். சில நிமிடங்களில் “வீல்” என்று அலறுகிறாள். மேலே மாடி அறையில் படுத்திருந்த சங்கரன் சத்தம் கேட்டுக் கீழே வருகிறான். குழந்தை படிகளில் ஏறி அவனிடம் ஓடுகிறாள். அவளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு தன் அறைக்குப் போகிறான் சங்கர்.

அவனது சமாதானத்தில் அழுகை ஓய்ந்து குழந்தை உறங்குகிறாள். நீண்டநேரத்துக்குப் பின் மேலே வந்த பவித்ரா படுக்கையில் ஓய்ந்து விழுகிறாள். சில நிமிடங்களில் அவள் அயர்ந்து தூங்கிப் போகிறாள். தன் பக்கத்தில் மரக்கட்டை போல் படுத்துக் கிடக்கும் மனைவியை வெறுப்புடன் பார்த்தவனாய்ச் சங்கரன் எழுந்து போய் ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கிறான். என்றோ வேண்டாம் என்று ஒதுங்கிய விஷயம் தான் அது. ஆனால் இன்று…இந்த இறுக்கமான சூழ்நிலையில் அது அவனுக்குத் தேவைப்பட்டது. இன்று மட்டுமல்ல…. கடந்த ஒரு வார காலமாக அவன் இப்படி புகையில் புதைந்து கொண்டிருக்கிறான்.

பொழுது புலர்கின்றது. பவித்ரா எழுந்து குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள். சங்கர் படுக்கையில் புரண்டு கொண்டே வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தான். வழக்கமாய்க் காலையில் கண் விழித்ததும் படுக்கையிலிருந்து எழுந்ததும் அப்பா மேல் வந்து விழுந்து புரண்டு அந்தப் பூவிதழ்களால் முத்தமிட்டுக் கொஞ்சி விளையாடும் சித்ரா வழக்கத்திற்கு மாறாக உறங்கிக் கொண்டிருப்பது சங்கருக்கு வியப்பாக இருந்தது. சிறிது நேரம் காத்திருந்தான். பின் பெயர் சொல்லி அழைக்கிறான். குழந்தை கண் விழிக்காமல் உறங்குகிறாள். அச்சத்துடன் அருகில் போய் உசுப்புகிறான்.

குழந்தை மெல்லக் கண் விழிக்கிறாள். நெற்றியில் கைவைத்துப் பார்க்கிறான். உடல் நெருப்பாய்ச் சுடுகிறது. பதறிப் போய்க் குழந்தையின் மேல் கிடந்த போர்வையை நீக்கிவிட்டு அள்ளி நெஞ்சில் அணைக்கிறான். உடம்பின் உஷ்ணத்தால் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறுகிறாள். தலைமாட்டில் இருந்த அழைப்பு மணியை அழுத்துகிறான். கீழே வேலையாய் இருந்த லட்சுமி ஓடி வருகிறாள். அவளிடம் சொல்லி பவித்ராவை அழைக்கச் சொல்கிறான். பவித்ரா ஒவ்வொரு படியாய் ஏறிவரும்போது அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சல் அதிகமாகிறது.

“என்னடி அன்ன நடை போட்டுக்கிட்டு வர்றே! மணவறைக்குப் போற நெனைப்போ… பேயாட்டம் அறைஞ்சு பிள்ளையைப் படுக்க வெச்சிட்டியே பாவி… இங்கே வந்து என் பிள்ளையைப் பாரு…

கையில் குழந்தையை ஏந்தியவாறு கத்துகிறான். அவள் விபரம் புரியாமல் அவனைப் பார்க்கிறாள். வேலைக்காரப் பெண் பயந்து கொண்டு ஒதுங்கி நிற்கிறாள். கணவனின் அருகில் வந்து குழந்தையைத் தொட்டுப் பார்த்தவள் திடுக்கிட்டுப் போகிறாள். என்னங்க”! என்ன ஆச்சு கொழந்தைக்கு.. என் உடம்பு இப்படிக் கொதிக்குது… அய்யோ நான் என்ன பண்ணுவேன்.” எதுவும் புரியாமல் புலம்புகிறாள். அவன் அவளைச் சுட்டெரித்து விடுவது போல் பார்க்கிறான்.

“போதும்டி உன்னோட கரிசனம்… முதல்ல போய் காரை எடு… டாக்டர்கிட்டே கொழந்தையைக் கொண்டு போகணும்… போ சீக்கீரம்…!”

அவன் அவளை அதட்டுகிறான். அவள் பயத்துடன் தயங்கி எதையோ சொல்ல வருகிறாள்.

“என்னங்க….இன்னிக்கு டெஸ்ட்…!” அவள் முடிப்பதற்குள் அவன் படிகளில் இறங்கிப் போகிறான். வேலைக்காரப் பெண் அவன் பின்னால் தடதடவென்று ஓடிவருகிறாள். அவன் குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டுக் காரில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்கிறான். வேலைக்காரப் பெண் குழந்தையை நெஞ்சில் அணைத்தவளாய்க் காரில் அமர்கிறாள். கதவைச் சாத்த முனையும் போது பவித்ரா ஓடிவந்து காரில் உட்காருகிறாள்.

அவள் மனம் குழம்பிக் கிடக்கிறது. இன்றைக்கு அவளது அலுவலகத்தில் அவளது சக ஊழியர்களுடன் அவளும் ஓர் நேர்காணலில் இடம் பெற்றிருந்தாள். அந்த நேர்காணலில் வெற்றி பெற்று விட்டால் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளம் உயரும்… பெருமையும் கூடும்… ஆனால் அத்தனையும் இப்போது வீணாகிப் போய்விடுமோ என்ற கவலை வந்து விட்டது. அவள் பரபரப்புடன் தவித்துக் கொண்டிருந்தாள். அவன் காரை வேகமாய் ஓட்டிக் கொண்டிருந்தான். குழந்தைக்கு முடியாமல் போய் மருத்துவரிடம் சென்று சோதனை செய்து வீடு திரும்புவதற்குள் நேரம் ஆகிவிடுமே என்ற பதட்டத்திலேயே அவள் இருந்தாள். இந்த வாய்ப்பு நழுவிப் போனால்… பதவி உயர்வு போய்விடும். சம்பளமும் உயராது. தனக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் கிடைக்காது என்ற கவலை புயலாய் எழும்பத் தொடங்கியது. சாதாரண கடை முதலாளியான சங்கரனுக்குப் படிப்பின் பெருமையும் பதவியின் மகிமையும் தெரியாத காரணத்தினால் தன் கடந்த ஒரு வார காலமாய் அவன் அவளை ஏசிக் கொண்டிருப்பதாக அவள் நினைத்தாள். அவன் மேல் இருந்த வெறுப்பு பிள்ளையின் மீதும் படர்ந்து விட்டது.

கார் பொது மருத்துவமனையின் முன் நின்றது. குழந்தையைச் சங்கரன் தூக்கிக் கொண்டு ஓடினான். அவன் பதட்டப் படுவதைப் பார்த்து மனதுக்குள் திட்டிக் கொண்டே பவித்ரா நடந்தாள். சிறப்புப் பிரிவில் உள்ள டாக்டர் வந்ததும் சங்கரன் பதட்டத்துடனேயே பேசினான். அவளுக்கு அது அவமானமாய் இருந்தது.

“கொழந்தைக்கு ஒன்றுமில்லே டாக்டர். ராத்திரி தூங்கப் போனப்ப நல்லாத்தான் தூங்கப் போனாள்… காலையில தான் இப்படி?

நிதானமாய்ச் சொன்னாள் பவித்ரா… டாக்டர் குழந்தையைச் சோதித்தார். பின் படுக்கையில் கிடத்தி விட்டு வெளியே வந்தார்.

“இப்ப நீங்க போகலாம்… யாராச்சும் உதவிக்கு இருக்க விரும்பினா இருக்கலாம்… இப்ப ஜுரம் குறையறதுக்கு மருந்து கொடுத்திருக்கோம்… அப்புறமா கொழந்தை கண்திறந்ததும் வந்து பார்க்கலாம்…” என்று டாக்டர் சொன்னதும் பவித்ரா அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

“நீங்க இங்கே இருக்கறதுன்னா இருங்க…நான் ஆபிஸ் போய்ட்டு வந்துடறேன்…?”

அவன் பதிலுக்குக் காத்திராமல் அவள் மின்னலாய் மறைந்தாள். அலுவலகத்தில் அவசரமாய் நுழையும்போது நேர்காணலுக்குச் சில மணித்துளிகளே இருந்தன. அலுவலகத்தில் நுழைந்து தன் இருப்பிடத்தில் அமர்ந்த மறுகணமே அவளது நேர்காணலுக்குப் பவித்ரா அழைக்கப்படுகிறாள். இரண்டு மாத கால உழைப்பு இரண்டு வருட எதிர்பார்ப்புகள்… எல்லாமே அவளை முறையான பதில்களைத் தர வைத்தன. வெற்றிக் கனியைக் கையில் தட்டிக் கொண்ட பெருமிதத்துடன் வெளியே வருகிறாள். மேலதிகாரியின் கைகுலுக்கல் பாராட்டுகள், நண்பர்களின் வாழ்த்துக்கள் எல்லாவற்றையும் ஏந்திக் கொண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு ஓடுகிறாள். வாசலில் அவளுக்காகவே காத்துக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண் அவளிடம் ஓடி வந்து வாய்விட்டுக் கதறுகிறாள். பவித்ரா பதட்டத்துடன் படுத்திருந்த குழந்தையிடம் ஓடுகிறாள். படுக்கையில் படுத்திருந்த குழந்தை அம்மாவைக் கண்டதும் பூவாய்ச் சிரித்து ஆசையோடு கைகளை நீட்டிக் கொண்டு அம்மா” என்று தாவுகிறாள். பவித்ராவின் மனம் பாலாய்ப் பொங்குகிறது. ஆவலாய் குழந்தையை அள்ளிக் கொஞ்சுகிறாள். சில மணித்துளிகள் ஓடுகின்றன. சட்டென்று குழந்தையைத் தன் பக்கம் திருப்பி…

“சித்ரா… சித்ரா” என்று அழைக்கிறாள். குழந்தை காதில் விழாதவளாய்த் தாயின் தோளில் அசையாமல் கிடக்கிறாள். பல தடவைகள் தாய் அழைத்தும் குழந்தை பேசாமல் இருப்பது கண்டு தவித்துப் போன பவித்ரா டாக்டரை அதிர்ச்சியுடன் பார்க்க அவளை கணவன் எரித்து விடுவது போல் பார்க்கிறான்.

“அங்கே என்னடி பார்க்கறே… உன்னோட ஆசைதான் நிறைவேறிடுச்சே… இனிமே என்மகள் பேசமாட்டா… நீ எதைச் சொன்னாலும் கேட்கமாட்டா… தாயிங்கற பாசத்தை மறந்து போய் பேய் மாதிரி அவளை அறைஞ்சியே… அது அவளை ஊமையாக்கிடிச்சிடி பாவி… என் பிள்ளையை உயிரோடு கொன்னுட்டு அங்கே என்னடி பார்க்கறே…!”

பவித்ராவின் தலையில் இடிவிழுந்தது போன்ற பேரதிர்ச்சி…பதறிப் போனாள். குழந்தையின் முகத்தைத் திருப்பித் திருப்பிப் பேச்சுக் கொடுக்கிறாள். குழந்தைப் பூவாய் சிரிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாமல் தவிப்பதையே அவளால் காணமுடிகிறது.

“வருத்தப்பட்டு எதுவும் ஆகப்போறதில்லே மேடம்… உங்க டென்ஷன்ல நீங்க உங்கள் மறந்து நடந்துக்கிட்டதனால் வந்த நஷ்டம் அது. ஒரு தாய் எப்படி இருக்கணும்னு யாரும் தாய்க்குப் புத்தி சொல்ல வேண்டியதில்லே… உங்க குழந்தையோட எதிர்காலத்தை வண்ண ஓவியமா வரைய வேண்டிய நீங்களே கலைச்சிப் போட்டுட்டீங்க… கோபமோ பிரச்சனையோ எதுவாயிருந்தாலும் அதை நீங்க உங்களோடத்தான் வெச்சுக்கனும்… பூவை பூவா நெனைச்சுதான் பறிக்கனும்… அங்கே மென்மையும் கருணையும் இல்லேன்னா பூ உதிர்ந்துவிடும். அப்படித்தான் குழந்தைகளும்…

அன்பே உருவான தாயிடம் தான் உலகத்தையே குழந்தைகள் பார்க்குறாங்க… அவளோட முகத்தில் தான் பாசம்கிற மழையை அனுபவிச்சு வளர்ராங்க… அவுங்களோட பாதங்கள் பட்ட இடமெல்லாம் அவுங்களுக்கு சொர்க்கமாகி இன்ப மயமாக வாழ்க்கையை அனுபவிக்க உதவியா இருக்கு… அதை நீங்க மறந்துட்டீங்க… உங்க குழந்தைக்கு நீங்க ஏற்படுத்தின நஷ்டத்துக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கலாம். ஆனா அதையும் விட பெரிய தண்டனை உங்க மனச்சாட்சி கொடுக்கப்போறது தான்… என்ன செய்யச் சொல்றீங்க எங்களை… இப்போதெல்லாம் மருந்து கொடுக்கிற வேலையை விட புத்தி சொல்ற வேலைதான் எங்களுக்கு அதிகமாயிருக்குங்க…”

டாக்டர் வெளியேறி விட்டார். பவித்ரா பேச வாயெழாமல் நிற்கிறாள். அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட அவள் கணவன் ஆறுதலாய் அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

“கவலைப்படாதே பவித்ரா… வீடும் குழந்தையும் தான் உலகம்ணு நீ இருந்திருந்தா இவ்வளவு பெரிய நஷ்டம் உனக்கு ஏற்பட்டிருக்காது. வாழ்க்கை வசதிகளைப் பெருக்கணும்னு ஆசைப்பட்டு பிரச்சனைகளை வளர்த்துக்கிறதால் வந்த டென்ஷன் உன்னை இந்தமாதிரி மாத்தியிருக்கு. பணம் தேவைதான் வாழ்க்கைக்கு! ஆனா பணமே வாழ்க்கைன்னு அலையக் கூடாது. ஆடம்பரம் ஆர்ப்பட்டமான வாழ்க்கையை விட அன்பான அமைதியான வாழ்க்கைதான் முக்கியம்… உன்னோட அன்பையும் பரிவையும் இனிமேலாச்சும் இந்தக் குழந்தைக்கு முழுசா கெடைக்கிற மாதிரி பார்த்துக்க… உன்னோட உண்மையான அன்புக்கும் கண்ணீருக்கும் கடவுள் கை கொடுப்பார்னு நம்பிக்கையோட இரு… மனசைத் தளர விட்டுடாதே…!”

பவித்ரா கணவனின் தோளில் தலை சாய்த்துத் தேம்புகிறாள். தந்தையின் தோளில் துவண்டு கிடந்த குழந்தை தாயின் தலையில் தன் பிஞ்சு விரல்களால் நீவி விடுகிறது. அதை அண்ணாந்து பார்க்கிறாள். அழகான பூவொன்று மலர்வது போன்று சிரிக்கும் அந்தச் சிரிப்பே அவளைக் கொல்வது போன்ற தவிப்பு… இந்தப் பூவையா நான்…. தேம்புகிறாள்.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *