கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 11,141 
 
 

“என்னங்க சாப்பிடத் தட்டு வச்சாச்சு. சாப்பிட வரீங்களா?”-மனைவி ஜெயந்தியின் குரல் கேட்டு சங்கரன் வியந்தார். பசிக்குது. சீக்கிரம் சாப்பாடு போடு என்று சொன்னால்கூட டிவி சீரியலைவிட்டு எழுந்து வர மனமில்லாமல் கொஞ்சம் இருங்க. ‘இப்ப முடிஞ்சிடும், வரேன்’ என்று உட்கார்ந்திருப்பவள் இன்று என்னடா அதிசயமாக அவளாகவே கூப்பிடுகிறாள். இது கனவா என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டார். வலித்தது.

தன் மகன் அரவிந்திடம் “டேய், சாப்பிடவந்துடு. உங்கம்மாவே கூப்பிடும்போது போய்டுவோம். இல்லே, அப்புறம் சாப்பாடு கிடைக்குமோ என்னவோ” என்று தமாஷ் செய்தபடி எழுந்தார்.

“ஆமாம், உங்களுக்கு என்னிக்கும் கேலிதான். எனக்கு வேலை இருக்கு. சீக்கிரம் சாப்பாட்டுக்கடை முடிந்தால் நான் வேலையைப் பார்ப்பேன்” என்று முனகினாள் ஜெயந்தி.

“எஜமானியம்மாக்கு இந்த நேரத்துக்கு மேலே அப்படியென்ன வேலை”

“அப்பா, உங்களுக்குத் தெரியாதா? இன்னிலேருந்து ஒரு புது மெகா சீரியல் ஆரம்பமாறதுப்பா, அதான் இருக்கும்.” என்று அப்பாவும் பிள்ளையும் தன்னைக் கிண்டல் பண்ணுவதை ரசித்துச் சிரித்தாள் ஜெயந்தி.

“சான்ஸ் கிடைச்சதுன்னு இரண்டு பேரும் ஆரம்பிச்சுட்டீங்களா?” என்றபடி தன் தட்டிலும் சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டாள்.

“நான் வேலைன்னு சொன்னது என்னத்தெரியுமா? அடுத்த வாரம் நவராத்திரி ஆரம்பம். கொலு வைக்கணும். கொலுக்கு வருபவர்களுக்கு கொடுக்க கிஃப்ட் வாங்கணும். அப்புறம் என் சித்திப்பெண் உஷா, கொலு சமயம் மதுரையிலிருந்து வரதால எப்போதும் யாராவது ஒருத்தருக்கு கொடுக்கற புடவையை இந்தமுறை அவளுக்குக் கொடுத்துடலாம்னு இருக்கேன். அதுதான் கடைக்குப் போகணும். என்னென்ன அயிட்டமெல்லாம் வாங்கணுமென்று லிஸ்ட் எடுக்கணும். அதுதான் வேலை. ஏங்க உங்களுக்கு நாளைக்கு லீவுதானே. என்னை ஷாப்பிங் கூட்டிண்டு போகவேண்டிய வேலை உங்களுடையது” என்றாள்.

சங்கரன் திடுக்கிட்டு பள்ளிக்கூடம் தங்கர்பச்சன் போல் “அய்யோடா” என்றார்.

“நான் எதுக்கும்மா? உன்னுடைய சினேகிதியைக் கூட்டிக்கொண்டு போய்ட்டுவா. நான் வீட்டில் இருக்கேன். நான் வந்தேன் என்றால் இது எதுக்கு? அது எதுக்கு? என்று நான் கேட்க, உனக்கு மூடுஅவுட் ஆக, இதெல்லாம் தேவையா? உனக்கு வேணுங்கற பணம் எடுத்துக்கோ, போய்விட்டுவா” என்றார்.

“சரி, நாளைக் காலை வேலைக்காரி கமலா வந்து வேலையெல்லாம் முடித்துப் போனவுடன் நான் கிள்ம்புகிறேன்“ என்று முடித்தாள்.

அடுத்தநாள், சொன்னபடி எந்த வேலையும் நடக்கவில்லை. கமலா வேலைக்குத் தாமதமாகத்தான் வந்தாள். ஏனென்று கேட்டதற்கு, “அத்தை(மாமியார்)க்கு உடம்பு முடியலம்மா. அவங்கள ஆஸ்பத்திரிக்கு அழைச்சுப்போய் காட்டிட்டு வீட்டுல விட்டுட்டு வரேம்மா. அதான் நேரமாயிடுச்சு என்றாள்.

“ஏன், உன் வீட்டுக்காரர் கூட்டிட்டுப் போகமாட்டாரா?”

“பாவம், அவருக்கு எங்கம்மா நேரம்? டுட்டிக்குப் போயிருக்காரு” என்றாள். பாதி வேலையில், “அத்தைக்கு சாப்பிட ஏதாச்சும் கொடுத்துட்டு வந்துடறேம்மா. பாவம் ராத்திரிலேருந்து பட்டினியா இருக்கு. ஒண்ணுமே சாப்பிடலம்மா’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.

ஜெயந்தியால் அடுத்தநாள்தான் வெளியே போகமுடிந்த்து. பண்டிகைக்கு வேண்டிய சாமான்கள் மற்றும் சித்திப்பெண்ணுக்காக இரண்டுமூன்று கடையேறி விலையுயர்ந்த புடவையாக தேர்ந்தெடுத்து வாங்கிவந்தாள்.

இரண்டு நாளில் நவராத்திரி வைபவம் ஆரம்பமாகிவிட்டது. அவர்களின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் இருக்கும் ஆறு வீடுகளில் ஒன்று. வருவோரும் போவோரும் அந்தக் காம்பவுண்டே கலகலவென்று இருந்த்து.

ஜெயந்தி மற்றவர் வீட்டுக்குப் போவதும் மற்றவர்கள் இவர்கள் வீட்டுக்கு வருவதுமாக மூன்று நாள் ஓடியது.

மறுநாள் மதியம் ரயிலில் சித்திப்பெண் உஷா வருகிறாள்.

காலையில் வேலையெல்லாம் முடித்துவிட்டு ஜெயந்தி ரயில்நிலையம் சென்று உஷாவை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும். காலையில் எழுந்து ஜெயந்திதான் பறந்தாலே தவிர வேலைக்கு, கமலா வந்து சேரவில்லை. ஜெயந்தி வாசலில் போய் நின்று விட்டாள். கமலா வருகிறாளா என்று பார்த்துக்கொண்டு. அப்போது தூரத்தில் கமலா மாதிரி தெரிந்தது. ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்துவிட்டுக் கோபத்துடன் ஜெயந்தி உள்ளே போனாள்.வரட்டும் அவள் வரட்டும் அவள். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுடணும். நம்ம வீட்டைத் தவிர இன்னும் எத்தனை வீடு வேலைக்கு போகிறாள் என்று. அவள் மனதுக்குள் கறுவிக் கொண்டிருக்கும்போதே கமலா உள்ளே நுழைந்தாள்.

ஜெயந்தி மௌனமாக இருக்க முயற்சித்தாள். அவள் வேலை முடிக்குமுன் ஏதாவது பேசி சண்டையாகி விருந்தாளி வரும்நேரம், பண்டிகை நாளில் ஆளில்லாமல் கஷ்டப்பட நேரிடுமோ என்று பயந்து கோபத்தை அடக்கிக்கொண்டாள்.

ஆனால் கமலா வெள்ளந்தியாக அவளே ஆரம்பித்தாள். “அம்மா, இன்னிக்கு என்னாச்சுத் தெரியுமா? நான் வர வழியிலே காம்பவுண்ட் கேட்டுக்கிட்ட பளப்பளன்னு என்னமோ மின்னித்தா, என்னதுன்னு பார்த்தேன், சின்னக்குழந்தைங்க கையில் போடற வளை. பார்த்தா தங்கம். மினுமினுத்தது. யாரோடது என்னன்னு ஒண்ணும் தெரியாம முழிச்சேனா? அப்புறம் பார்த்தேன். எப்படியும் இந்த அஞ்சு வீட்டுக்காரங்களுக்கு தெரியாமயா இருக்கும்னு ஒவ்வொரு வீடாப் போய் விசாரிச்சதிலே நம்ப மூணாவது வீடு வாத்தியாரம்மா வீட்டுக்கு நேத்து பொம்மக்கொலுக்கு கைக்குழந்தையோட 2 பேரு வந்திருந்தாங்களாம். அவங்கதான் தொலச்சுட்டாங்களாம். நேத்து ராத்திரியே ஃபோன் பண்ணாங்களாம். இவங்களும் தேடிருக்காங்க, கிடைக்கலை. அப்புறம் வளையை அவங்கக்கிட்ட கொடுக்கச்சொல்லி கொடுத்துட்டு வந்தேன். ஜெயந்திக்குக் கோபமெல்லாம் பொங்கும் பாலில் தண்ணீர்த் தெளித்ததுப் போல் அடங்கியது.

“கமலா, நான் ரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்பிண்டே இருக்கேன். நீ வேலையை முடித்துவிட்டு வீட்டைப்பூட்டி பக்கத்துவீட்டில் சாவியைக் கொடுத்துட்டுப்போ” என்றாள்,

“அம்மா, ஒரு விஷயம்……” என்று இழுத்தாள் கமலா. “வந்து… எனக்கு ஒரு 1000ரூபாய் கடனாக் கொடும்மா. மாசாமாசம் சம்பளத்துல புடுச்சுக்கோ”

“இப்ப என்ன உனக்கு அவசரச்செலவு?”

“இல்லம்மா, நேத்து எம்பையன் வீட்டு வாசல்ல விளையாட்ண்டுருக்கச்சொல்ல, எவனோ பாவிப்பய அவன் மேலே வண்டிய உட்டுட்டு ஓடிட்டாம்மா. ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்கோம். அதான் செலவுக்கு வேணும்” என்றாள்.

பையிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு ஜெயந்தி கிளம்பினாள்.

ஒரு மணிக்கு வரவேண்டிய ரயில் 1 மணிநேரம் தாமதமாக 2 மணிக்கு வந்தது. உஷா முதல் வகுப்பு ஏசிப்பெட்டியிலிருந்து இறங்கினாள். முன்புப் பார்த்தைவிட இருமடங்காகி இருந்தாள்.

சகோதரிகள் சந்தித்தவுடன் வாய் ஓயாமல் பேசிக்கொNண்டே வந்தனர். ஜெயந்தி “உன்னைப்பார்த்து எவ்வளவு நாளாச்சு! உஷா. மூணுவருஷம் முன்னாடி நம்ப சாந்தா கல்யாணத்துல பார்த்தது. எப்படி இருக்கே? உன் வீட்டுக்காரர் திவாகர் எப்படி இருக்கார்? உன் மாமியார், நாத்தனார் எப்படி இருக்காங்க? இப்போ உன் பையனும், பெண்ணும் என்ன படிக்கிறாங்க?” என்று சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தாள். “அதையேன் கேட்கிறே? மாமியார் போய்ச்சேர்ந்து வருஷம் ரெண்டாகறது. பையன் மனோ ஸ்டேட்ஸில் இருக்கான். பெண் டிகிரி 2வது வருஷம்”. என்று பரஸ்பரம் குடும்பவிஷயங்கள் பேசிவந்தார்கள்.

அன்று முழுவதும் இருவரும் பேசியேப் பொழுதைக்கழித்தார்கள். அடுத்தநாள் உஷா கோவில்களுக்குப் போகணுமென்று சொன்னதினால் வாடகை கார் ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தாள். ஜெயந்தியுடனுடைய நெருங்கிய தோழி பானு கொலு பார்க்க வருவதாகச் சொல்லியிருந்ததால் ஜெயந்தி அவளுடன் போகமுடியவில்லை.

பானு ஜெயந்தியுடைய நெடுநாளையத் தோழி. பள்ளி,கல்லூரியில் ஒன்றாகப் படித்தார்கள். அப்பொழுதெல்லாம் எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்கள். இருவருக்கும் திருமணம் ஆனபிறகு சிறிதுகாலம் வேறுவேறு ஊரில் இருக்கவேண்டிய சூழ்நிலை. இப்பொழுது இருவரும் ஒரே ஊரில், அடுத்தடுத்தத் தெருவில் வசித்து வந்ததால் அதே நெருக்கம் தொடர்ந்தது.

பானு, “ஏய், ஜெய், என்ன கெஸ்ட் இருக்காங்களா?” என்றபடியே உள்ளே நுழைந்தாள். ”வா பானு, கோவிலுக்குப் போயிருக்காங்க. நீ வருவியே என்று நான் போகலை. வா, உட்கார். நாம்பப் பார்த்துண்டே ஒரு வாரம் ஆச்சு. என்னெல்லாம் விஷயம்? சொல்லு” என்று மகிழ்ச்சியுடன் தோழியை வரவேற்றாள்.

“ஆமா, உனக்குக் கெஸ்ட் வேறு. நீ பிஸியாக இருப்பாய் என்றுதான் நான் வரலை. முந்தாநாள் உன்னுடன் ஆட்டோவில் வந்தாங்களே அவங்கதான் உன்னுடைய சித்திப் பெண்ணா? அவங்களை நான் எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது. எந்த ஊர்?”

“மதுரை”

“ஓ! இப்போ ஞாபகம் வருது. அவங்கப் பேரு உஷாவா?” என்று கேட்டாள்.

“ஆமா உனக்கு எப்படித் தெரியும்?”

“அது பெரிய கதை. இரு சொல்றேன். என்று வாசல்ப்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு, “நாம் பேசிக்கொண்டிருக்கும்போது வந்திடமாட்டாங்களே” என்று கேட்டாள்.

“திரும்ப சாயந்திரம் ஆகும். என்னச் சொல்லு.”

“நீ தப்பா எடுத்துக்கமாட்டியே” என்று பானு பீடிகை போட்டாள்.

“இல்லை, சொல்லேன். இவ்வளவு சஸ்பென்ஸ் வைக்கிறே”

“நான் கொஞ்சநாள் மதுரையில் இருந்தேனே, அப்போ, என் வீட்டுப் பக்கத்துவீட்டில்தான் உஷா இருந்தாள். அவள் மாமியாரும் அவங்கக்கூடத்தான் இருந்தாங்க. ஆனா, பாவம் தெரியுமா, அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்களை உஷா பாடாய் படுத்துவா. அவளைப் பார்த்து அவள் பெண்ணும் அவங்களை மதிக்காது. ஒருநாள் அந்தம்மா பாவம் மதியம் மாடியில் காய்ந்தத் துணிகளை எடுக்க வந்தவங்க என்னைப் பார்த்தவுடன் என்னுடன் கொஞ்சம் பேசிட்டிருந்தாங்க. அவங்க வீட்டுக்குப் போவதற்குள், உஷாவும், அவள் பெண்ணும் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டார்கள். அந்தம்மா, வீடு பூட்டியிருக்கறதப் பார்த்துட்டு வாசல்லேயே உட்கார்ந்திருந்திருக்காங்க. ரொம்ப நேரம் போனவங்க வரவேயில்லை. இந்தம்மாக்கு சர்க்கரை அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. நான் எதேச்சையாக வெளியில் வந்தபோது பார்த்தேன். உடனே பக்கத்திலிருந்தவங்க உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்து, எப்படியோ அவங்க பிள்ளைக்கு தகவல் தெரிவிச்சு, அவர் வந்தாரு. உன் சித்திப்பெண் ராத்திரி வந்தாங்க. அப்புறம் இரண்டுநாள் ஆஸ்பத்திரியிலிருந்தவங்க போய்ச்சேர்த்துண்டாங்க.” என்று முடித்தாள்.

ஜெயந்தி திகைத்துப்போய் கேட்டுக்கொண்டிருந்தாள். மேலும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, பானு வீட்டிற்குக் கிளம்பினாள். போகும்போது, ஜெயந்தியிடம் இந்த விஷயமெல்லாம் உனக்குத் தெரிந்தமாதிரி காட்டிக்காதே என்று சொல்லிப்போனாள்.

அடுத்த இரண்டாவது நாள் உஷா ஊருக்குக் கிளம்பினாள். ஜெயந்தி அவளுக்கு வெற்றிலைப்பாக்கு, மற்றும் அவளுக்கு என்று வாங்கிய புடவையைத் தவிர மற்ற எல்லா மங்கலப்பொருட்களும் வைத்துக்கொடுத்தாள். அதைப் பார்த்த சங்கரன் வியந்தார். “இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான் போல. எத்தனைப் புடவை இருந்தாலும் அவங்களுக்கு மனசே வராது”என்று நினைத்தார்..

சரஸ்வதி பூஜை விமரிசையாக நடந்தேறியது. பூஜை முடிந்த கையுடன் ஜெயந்தி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த கமலாவிடம், கமலா கை,காலெல்லாம் நன்றாக கழுவிக்கொண்டு இங்கேவா. என்று அழைத்தாள். கமலா, ஒன்றும் புரியாமல் வந்தாள். ஜெயந்தி பூஜையறைக்குக் கமலாவை அழைத்து, ஒரு மனைபோட்டு உட்காரவைத்தாள். வெற்றிலைப்பாக்கு, மங்கலப்பொருட்கள், அதனுடன் உஷாவுக்கென்று வாங்கி வைத்திருந்த புடவை எல்லாம் தட்டில் வைத்து கமலாவுக்குக் கொடுத்தாள்!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *