டோக்கன் நம்பர் 24

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 10,660 
 
 

ஆரார் மிதுன்
Subject: டோக்கன் நம்பர் 24

கதை:
India
சில நேரங்களில், நாம் ஒருவருக்கு உதவுவதாக நினைத்து செய்யும் செயல்கள் வேறு சிலரைப் பாதிப்பதோடல்லாமல் அவர்களின் எரிச்சலையும் சம்பாதித்துக் கொடுக்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. எந்த சூழ்நிலையிலும், கொஞ்சம் யோசித்து, நிதானமாக செயல்பட்டால், முடிந்தவரை இம்மாதிரியான இக்கட்டான நிலைமைகளை நம்மால் தவிர்க்கமுடியும்.
—————–
நேற்று காலை என் மகள் ஜானவி – பி.இ. முடித்துவிட்டு மேற்கொண்டு படிப்பதா அல்லது வேலைக்குச் செல்வதா என்று இன்னும் முடிவு செய்யாமல், ‘பார்ப்போம்’ என்று இப்போது ஃப்ரீயாக இருப்பவள் – வீடு திரும்பியபோது நான் முக்கால்வாசி சமையல் வேலையை முடித்துவிட்டு, அன்றைய பேப்பரில் “பிள்ளைகள் படிப்பில் பெற்றோரின் பங்கு” என்ற தலைப்பில் வந்திருந்த கட்டுரையில் மூழ்கியிருந்தேன். இரண்டு நாட்களுக்கும் மேலாய் தொந்திரவு கொடுத்துக்கொண்டிருந்த கால் சுளுக்கை வீட்டிலிருந்த எந்த மருந்தும் “போயே போச்சு!” என்று சொல்லவைக்காததால், அரைமனதுடன் டாக்டரிடம் காட்டப் போயிருந்தாள் ஜானு.

“என்ன ஜானு, நிறைய கூட்டமா?” பேப்பரிலிருந்து கண்ணை எடுக்காமலே கேட்டேன், அவள் போய் வர நான்கு மணி நேரத்திற்கும் மேலே ஆகியிருந்ததால்.
“ஆமாம்மா. இன்னும் கொஞ்சம் சீக்கிரமே வந்திருக்கலாம்”, என்று சொன்னபடியே சோஃபாவில் வலியால் முகத்தைச் சற்று சுளித்துக்கொண்டடே என் எதிரில் உட்கார்ந்த ஜானு, “அந்த தாத்தா வேறு…………….…பாவம்!” என்றாள்.

எந்த தாத்தாவாம்? என்று நினைத்தபடியே, “டாக்டர் என்னடி சொன்னார்?” என்றேன்.

”ரெண்டு மாத்திரை குடுத்திருக்கார், மூணு நாளைக்கு சாப்பிடணுமாம். கேள்வியே படாத ஒரு ஆயிண்ட்மெண்ட்டும் எழுதிக் கொடுத்திருக்கார். இப்பவே கொஞ்சம் வலி கொறஞ்சாப்பலதான் இருக்கு.” என்று ஜானு சொன்னதும், வலி குறைந்ததற்கு டாக்டரிடம் காட்டியது மட்டுமில்லாமல் வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என ஊகித்த நான், ”யார் அந்த தாத்தா? என்னாச்சு அவருக்கு?” என்றேன்.

”அது ஒண்ணுமில்லம்மா,” நான் கேட்கமாட்டேனா என்று காத்திருந்தவள் போல் ஜானு தொடர்ந்தாள், “என்னுடைய டோக்கன் நம்பர் 24. நான் உள்ளே நுழைஞ்சப்பதான் டோக்கன் 18 போயிருந்தது. காத்துண்டே……..யிருந்து, ஒரு வழியாய் 23-ம் நம்பர் பேஷண்ட் உள்ளே போனார். அடுத்தது நான் போகணும்.”

“அது சரி. நீ திங்கட்கிழமை டாக்டரிடம் போனால் கூட்டம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்.”

“கரெக்ட், ஆனா அதப்பத்தி நான் கவலப்படலை, எனக்குதான் இப்ப காலேஜ், ஆஃபீஸ் என்று ஒரு அவசரமும் இல்லையே.”

இன்னும் ஏதோ சொல்லப் போகிறாள் என்று தெரிந்து நான் மெளனமாய் இருந்தேன்.
”அப்பத்தான் அந்தப் பெரியவர் உள்ளே நுழைஞ்சார். துணைக்கு அவருடன் வந்த நடுத்தர வயது பெண்மணி.டோக்கன் நம்பர் 36-ஐப் பெற்றுக்கொண்டாள். அந்தத் தாத்தாவைப் பார்த்தாலே பாவமாக இருந்தது. ஜுரத்தில் முனகிக்கொண்டே இருந்த அவர், இன்னொருவர் எழுந்து இடம் கொடுத்த நாற்காலியில் உட்காரக்கூட ரொம்பக் கஷ்டப்பட்டார்.”

“அடடா, அப்புறம்?”

”அவர் அவ்வளவு கஷ்டப்படுவதைப் பார்க்கப் பொறுக்காமல் நான் அந்தப் பெண்மணியிடம், உள்ளே சென்றுள்ள நபர் வெளியே வந்ததும் தாத்தாவை உள்ளே அழைத்து போகும்படியும் நான் அதற்கு அடுத்ததாக போவதாயும் சொன்னேன்.”
”நல்லதுதானே,” என்ற நான், “அதான் உனக்கு வர இவ்வளவு லேட்டாயிடுத்தாக்கும்?” என்றபடியே என் பெண்ணின் படிப்பில் என் பங்கைச் சரிவர செய்தேனா என்று தெரிந்துகொள்ள மறுபடியும் பேப்பருக்குத் திரும்பினேன்.

“அம்மா!” என்று என் கவனத்தை கொஞ்சம் கோபமாய் தன் பக்கம் திருப்பிய ஜானு, கால் மேல் கால் போட்டுக்கொள்ள முயன்று, முடியாமல் தவிப்பதைப்பார்த்த நான், ’ஐயோ பாவம், வலிக்கிறதாக்கும்,’ என்று நினைத்தபடியே பேப்பரை மூடிவைத்து விட்டு என் முழு கவனத்தையும் அவளிடம் செலுத்தினேன். “சொல்லுடா செல்லம்” என்றேன்.

”எனக்கப்புறம் அந்த தாத்தா போகட்டும் என்று நான் சொன்ன உடனே, கண்ணாடி, கையில் எட்டாக மடித்த ந்யூஸ்பேப்பர், சட்டைப்பையில் இரண்டு பேனா இவற்றோடு அப்பப்ப கையிலிருந்த பழங்காலத்து வாட்சையும் சுவர் கடிகாரத்தையும் பொறுமையில்லாமல் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த அந்த ஆள் திடீரென்று எழுந்தார்.”

“ம்?”

‘ஹலோ, மேடம்!’ என்று ஜானுவைக் கூப்பிட்ட அவர், தன் டோக்கன் 34-ஐக் காண்பித்தபடியே, ‘இட்ஸ் நாட் ஃபேர்’ என்று சொல்லியிருக்கிறார். ஜானு, ‘என்ன சார், அந்த அங்கிள் ரொம்பக் கஷ்டப்படறாரே, அவரப் பாத்தா பாவமாயில்லையா சார் உங்களுக்கு?’ என்று கேட்க அதற்கு அவர், ‘பாவந்தாம்மா, இல்லேன்னல. ஆனா உனக்குப் பரவாயில்லை என்பதற்காக எங்கள் எல்லோருக்குமே பதினைந்து இருபது நிமிடங்கள் லேட் ஆனா பரவாயில்லைன்னு நீ எப்படித் தீர்மானிக்கலாம்?’ என்று கூறிவிட்டு அங்கு பொறுமையாய் இந்தமாதிரியெல்லாம் யோசிக்கத் தோன்றாமல் அப்பாவியாய் உட்கார்ந்திருந்த மற்ற பேஷண்ட்களை நோக்கித் தலையை ஆட்டவும், அவர்களும் ‘அதானே?’ என்பதுபோல் ஒட்டுமொத்தமாய் ஜானுவைப் பார்த்தார்களாம்.
“ஆனா நான் அந்த வயதான அங்கிளுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்னு நெனச்சேம்மா. முப்பத்தாறாவது டோக்கன் வரவரைக்கும், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் எப்படிம்மா அவரால உட்கார்ந்திருக்க முடியும்? அப்பவே குளிரால் நடுங்குவது போல அவர் உடம்பு ஆடிண்டிருந்தது.” என்ற ஜானு, ‘குப்’பென்று முகம் கோபத்தால் சிவக்க, ”இப்படியும் சில பேர் கொஞ்சங்கூட மனிதாபமில்லாமல் இருக்காளேன்னு நெனச்சா ஆத்திரம் ஆத்திரமா வர்ரது.” என்றாள்.

நான் எழுந்து அவள் அருகில் இருந்த சோஃபாவில் சென்று அமர்ந்தேன். மெதுவாக என் வலது கை விரல்களை அவளது இடது கை விரல்களோடு கோர்த்துக்கொண்டே, “உடு ஜானு, நெறைய பேர் அப்படித்தான். சரி, மாத்திரை, ஆயிண்ட்மெண்டெல்லாம் வாங்கிட்டயா?” என்றேன்.

”இல்லம்மா,” என்று நான் கேட்டதைக் காதில் வாங்கமலே சொன்ன ஜானு தொடர்ந்து,

”ஆனா நான் கொஞ்சம் யோசிச்சதில் அந்த ஆள் சொன்னதிலும் ஒரு நியாயம் இருந்ததுன்னு தோணித்தும்மா. எனக்கு அவசரமில்லைன்னா எல்லாருக்குமே அவசரமில்லைன்னு நெனக்கறதும் ஒரு விதத்தில் தப்புதானே?” என்றாள்.

“புரியலையே!” என்று நான் உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டினேன்.

”கேளும்மா. இப்ப 23-ம் நம்பர் டோக்கன் வெளிய வந்ததும், அந்த 36-ம் நம்பர் டோக்கன் தாத்தாவைப் போகவிட்டால் எனக்கு மட்டுமா அரை மணி லேட்டாகும்? எனக்குப் பின்னால் இருந்த அத்தனை பேருக்கும் ஆளுக்கு கிட்டத்தட்ட அரை மணி லேட்டாகாதா?”

ஆமாம் என்று நினைத்துக்கொண்டே நான், “ஆமாம், அதுவும் கரெக்ட் தானே? அப்புறம்?” என்றேன்.

“அப்புறம் என்ன அப்புறம்,” என்று லேசான புன்முறுவலோடு சொன்ன ஜானு, “அந்த தாத்தாவும் ரொம்பநேரம் காத்திருக்கக்கூடாது, மற்றவர்களுக்கும் லேட்டாகக்கூடாது. அதற்கு என்ன செய்யணும்னு கொஞ்சம் யோசிச்சேன், செஞ்சேன்,” என்றாள்.

ஜானு என்ன செய்திருப்பாள் என்று என்னால் ஊகிக்கமுடிந்தாலும், ”என்ன செஞ்சே?” என்றேன் நான், ஒன்றும் தெரியாதது போல்.

”சிம்பிள் ஐடியாம்மா, 23-ம் நம்பர் டோக்கன் வெளியே வந்ததும் அந்த தாத்தா உள்ளே போனார், யாரும் வாயத் தறக்கல. அவ்வளவு ஏன், அந்த கண்ணாடி போட்ட, இரண்டு பேனா ஆள் கூட சரி சரி என்பதுபோல் தலையை ஆட்டினார்னா பாத்துக்கோ,” என்றாள்.

”அதான் எப்படிங்கறேன்?” என்றேன் நான், அவளுடைய ஆர்வத்தை கெடுக்க மனதில்லாமல்.

“என்னம்மா, இதுகூட யோசிக்கமுடியலயா உனக்கு? நேர அந்த தாத்தாவுடன் வந்திருந்த பெண்மணியிடம் என் 24-ம் நம்பர் டோக்கனைக் கொடுத்துவிட்டு, அவர்களுடைய 36-ம் நம்பர் டோக்கனை நான் வாங்கிண்டுட்டேன். அப்புறம் ஒன்றரை மணி நேரம் காத்திண்டிருந்து டாக்டரைப் பாத்துட்டு வரேன். எப்படி என் ஐடியா?” என்ற ஜானுவை சிறிதுநேரம் பெருமையோடு நான் பார்த்துக்கொண்டே நின்றேன்.

“சரிதான்! இன்னும் புரியலையா?” என்ற ஜானுவிடம், “எல்லாம் புரிஞ்சுது, புரிஞ்சுது. கை கால் அலம்பிண்டு சாப்பிட வா,” என்றபடியே எழுந்தேன்.

”ஒங்கிட்டப்போய் சொன்னம்பாரு,” என்று முணுமுணுத்துக்கொண்டு ஜானு மெதுவாக எழுந்து மெதுவாக நடந்து மெதுவாக என் பின்னே வந்தாள்.
சிரித்துக்கொண்டே நான் ரைஸ் குக்கரைத் திறந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *