டெய்லர் சிவன்பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 4,782 
 
 

(இதற்கு முந்தைய ‘கொசுத்தொல்லை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

மொத்தம் ஐந்து கொசுவலைகள் தைக்க வேண்டும்.

டெய்லர் சிவன்பிள்ளை எங்களுடைய படுக்கை அறைகளை நேரில் வந்து பார்த்து அளவெடுத்து ஒரு பெரிய பேப்பரில் குறித்து எடுத்துப் போயிருந்தார்.

வீட்டில் நானும் என் தம்பி தங்கைகளும் அப்பா எப்போது மதுரையில் இருந்து திரும்பி வருவார் என ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தோம். கொசுவலை என்ற பெயரை கேள்விப் பட்டிருந்தோமே தவிர, அது எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. அதனால் அதைப் பற்றிய ஆர்வமும் கற்பனையும் நிறைய இருந்தது. என்னுடைய மனநிலை ஒருவிதமாக மிதந்து கொண்டிருந்தது.

தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்குவதற்கு அப்பா சிவகாசி கிளம்பிப் போயிருக்கும் போதும் நாங்கள் வீட்டில் இப்படித்தான் காத்துக் கொண்டிருப்போம்.

காலை பத்து மணிக்கு மதுரைக்கு கிளம்பிப்போன அப்பா, இரவு ஒன்பது மணிக்குத் திரும்பி வந்தார். ஆனால் கொசுவலைத் துணிகளோடு நேராக டெய்லர் சிவன்பிள்ளையோடு அவரது கடைக்குப் போய்விட்டார். அப்பா வீட்டுக்கு வெறும் கையை வீசிக்கொண்டு வந்தார்.

சிவன்பிள்ளைக்கு ஐந்து கொசுவலைகளையும் தைத்துக் கொடுப்பதற்கு பத்து நாட்களாகி விட்டன. ஐந்து நாட்களில் தைத்துக் கொடுத்து விடும்படிதான் அப்பா சொல்லிவிட்டு வந்திருந்தார். சிவன் பிள்ளையின் எல்லா சமாச்சாரமும் இந்த மாதிரிதான். எங்களுக்கு சட்டை தைத்துக் கொடுக்கும் போதெல்லாம் இன்று நாளையென்று சொல்லிச் சொல்லி இருபது நாட்கள் கூட லேட் பண்ணுவார். அதற்காக எங்கள் அப்பாவிடம் நிறைய திட்டும் வாங்குவார் சிவன்பிள்ளை. அறுபது வருடத்திற்கு முன்பு மொபைல் ஏது? அதனால் திட்டெல்லாம் நேரில்தான்…

அவ்விதம் திட்டு வாங்கும் போதெல்லாம் தலையைச் சொரிந்தபடி சிவன்பிள்ளை ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பார். இன்னும் இரண்டு நாட்களில் எல்லாத் துணிகளும் கண்டிப்பாக தைக்கப்பட்டாக வேண்டும் என்று அப்பா ரொம்பக் கோபமாகக் கத்துவார். சரியென்று சொல்லிவிட்டு கடைக்கு ஓடுவார் சிவன்பிள்ளை.

இரண்டு நாட்களில் எல்லாம் தைக்கப்பட்டு வீடு வந்து சேரும். எல்லாச் சட்டைகளும் பிரமாதமாக வெட்டப்பட்டு ரொம்பக் கச்சிதமாக, அழகாகத் தைக்கப் பட்டிருக்கும். இதற்குத்தான் சிவன்பிள்ளையை கட்டி அழ வேண்டியிருக்கிறது என்பார் அப்பா. தையல் வேலைகளில் சிவன்பிள்ளை அப்படி ஒரு கில்லாடி.

சட்டைகளை அவர் தாமதமாகத்தான் தைத்துத் தருவார் என்பது வழக்கமாகிப் போயிருந்ததால், என் சட்டைகளை அவர் எப்போது தைத்துத் தருவார் என்று ஆசையோடு ஒவ்வொரு நாளும் நான் காத்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால் கொசு வலைகளுக்காக ரொம்பவும் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருந்தேன்.

அவ்வப்போது பாளை தெற்கு பஜாரில் உள்ள சிவன்பிள்ளையின் கடைப் பக்கம் போய் கொசு வலை தைக்கின்ற வேலைகள் நடக்கின்றனவா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். வேலை நடந்த மாதிரி எதுவும் எனக்குத் தெரியவில்லை.

கொசுக்களின் உபத்திரவம் ரொம்ப ஜாஸ்தியாக இருந்தது. ஒவ்வொரு நாள் ராத்திரியும் கொசு மருந்து அடிக்கிற போதெல்லாம், மருந்து அடிப்பது இன்றுதான் கடைசிநாள் என்று நினைப்பேன்.

பத்தாவது நாள் கொசு வலைகள் வந்து சேர்ந்தன. ஐந்து கொசு வலைகளையும் சிவன்பிள்ளை இரண்டு கைகளிலும் அள்ளி எடுத்து வந்தார். வெள்ளையாக கடல் நுரையை அள்ளிக்கொண்டு வந்த மாதிரி இருந்தன அவைகள். ஒருவித சாதனையைச் செய்த பெருமிதத்துடன் சிவன்பிள்ளை கொசு வலைகளை தரையில் போட்டார். பஞ்சுப் பொதி போல புஸ் என்று கிடந்த கொசு வலைகளை ஆச்சர்யத்தோடும், ஆசையோடும் பார்த்தேன். அவற்றின் மேல் விழுந்து புரள வேண்டும் போல் இருந்தது.

அப்பா கொசு வலைகளைத் தூக்கிக்கொண்டு மாடிக்குப் போனார். பின்னாடியே நாங்களும் அவரைத் தொடர்ந்து மாடிக்குப் போனோம்.

கொசு வலை வந்ததும் அதை அப்படியே எளிதாகத் தூக்கிக் கட்டிவிடலாம் என்று லேசாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் விஷயம் அந்த மாதிரி இல்லை. கொசு வலைகளின் மேல் துணிப் பகுதியில் கொஞ்சம் இடம் விட்டு இடம் விட்டு சின்னச்சின்ன துணி வளையங்கள் பொருத்தி நேர்த்தியாகத் தைக்கப் பட்டிருந்தன.

அந்த வளையங்களில் மெல்லிய கயிறுகளின் ஒரு முனையால் இறுக்கமான முடிச்சுகள் போட்டார் அப்பா. பின் அறைச் சுவர்களில் அந்தக் கயிறுகளின் மறு முனையை தூக்கிப் பிடித்து கட்டுவதற்கு ஏற்றமாதிரி அளவு பார்த்து ஆணிகள் அடிக்க வேண்டி இருந்தது. ஆணிகளை அடிப்பதற்கு முன்பு கொசுவலை தரை மட்டத்தில் இருந்து சற்று இடைவெளி தெரிவது மாதிரி; அதேநேரம் கொஞ்சம் மேலாக உயர்ந்து தொங்காதபடி அளவு பார்த்துப் பார்த்து ஆணிகளை அடித்தார் அப்பா. பின் கொசுவலையின் வளையங்களில் கட்டப்பட்டிருந்த கயற்றின் மறு முனைகளை அப்பா நன்றாக இழுத்து அந்த ஆணிகளில் கட்டினார். இப்படியே ஒவ்வொரு கொசு வலையாகக் கட்டித் தொங்க விடப்பட்டன.

அவைகளைப் பார்க்கப் பார்க்க உற்சாகத்தை அடக்க முடியவில்லை எனக்கு. படுக்கை விரிக்கப் படுவதற்கு முன்னாடியே எனக்கான கொசு வலைக்குள் போய் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டேன். ஒரு நைலான் துணியால் செய்யப்பட்ட அழகான கூடாரத்திற்குள் இருக்கிற மாதிரி இருந்தது. – அந்த நிமிடம் என் மனதில் ஏற்பட்ட உவகையைச் சொல்ல நிஜமாக எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.

ராத்திரி கொசு வலைக்குள் விரித்த படுக்கையில் படுத்துக்கொண்ட போது அந்த உவகை மேலும் பல மடங்கு அதிகமாக இருந்தது. மங்கலான நீல வெளிச்சம் பரவியிருந்த என் படுக்கை அறையில் ஏதோ ஒன்று முழுமை அடைந்திருந்தது. கொசு வலை ஒரு புதிதான பாதுகாப்பை எனக்குத் தந்த மாதிரி இருந்தது. மிருதுவான துணி சல்லடை போலிருந்த கொசு , வலையில் சிலசில நொடிகள் உடம்பு உராய்ந்த போது, இதற்கு முன் அனுபவித்திராத சுகம் ஒன்று இருந்தது. அந்தரங்கமான இடத்திற்குள் இருக்கின்ற பாதுகாப்பு உணர்வோடு அன்று கொசு வலைக்குள் தூங்கிப் போனேன்.

அப்போது ஆரம்பித்ததுதான். அதற்குப் பின் பல வருடங்களாகியும் ராத்திரி தூக்கம் என்பது எனக்கு கொசு வலைக்குள்தான். என் படுக்கை என்பது கொசு வலையும் சேர்ந்தது. எப்போதேனும் வெளியூர்களில் ஹோட்டலில் தங்கி இருக்கும்போதோ அல்லது ஏதேனும் உறவினர் வீடுகளில் இருக்க நேரிட்ட சமயத்திலோதான் கொசு வலை இல்லாமல் தூங்க வேண்டி வந்தது. அப்போது கொசு வலை இல்லாமல் ஒருவித அம்மணமாக வீட்டுத் திண்ணை போல் தெரியும். நிறைய பேர் பார்க்கிற மாதிரி மொட்டை மாடியில் படுத்துக் கிடப்பது போல இருக்கும். தூக்கம் வராது எனக்கு. சுற்றியும் கொசு வலை இல்லாத படுக்கை, அழகு இழந்து போயிருக்கும்.

எனக்குக் கல்யாணமாகி மனைவி வந்த பிறகு கொசு வலையின் ரம்மியம் இன்னும் கூடிப் போனது என்னவோ நிஜம்…..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *