மாணிக்க முதலியார், ரத்னசாமிப் பிள்ளை இரண்டு பேரும் டயரி போட் டார்கள். இரண்டு பேர் போட்ட டயரி களும் லக்ஷக்கணக்கில் செலவழிந்தன. ஆனால், ஒவ்வொரு வருஷமும் முதலியா ருக்கு மட்டும் அதிக லாபம் கிடைத்தது. அதன் ரகசியம் பிள்ளைக்கு விளங்க வில்லை.
ஒரு நாள், முதலியாரைக் கண்டு பேசினார்… ”நீங்களும் டயரி போடுகிறீர் களல்லவா?”
”ஆமாம்!”
”உயர்ந்த அட்டையுடன்தானே?”
”ஆமாம், முதல் தரம்!”
”டயரியில் பென்ஸில் வைத்துக் கொடுப்பதுண்டா?”
”உண்டு. பென்ஸில் ஒன்றே அரையணா விலையாகிறது!”
”அப்படியிருந்தும் உமக்கு அதிகப்படி லாபம்…”
”வருஷத்துக்கு இரண்டாயிரம் கிடைக்கிறது.”
”எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நானும் உங்களைப் போலத்தான் தயார் செய்கிறேன். அதே பேப்பர், அதே பென் ஸில், அதே பைண்டிங்! நீங்கள் வாங்குகிற இடத்தில்தான் நானும் பேப்பர் வாங்கு கிறேன். அச்சுக்கூலியும் அப்படியே! ஆனாலும்…”
”ஆனால், ஒரே வித்தியாசம்தான்!”
”என்ன அது?”
”எனக்குப் பேப்பர் அதிகம் செலவாகிறதில்லை.”
”அதெப்படி.?!”
”நீர் போடும் டயரி ஜனவரி முதல் தேதி ஆரம்பமாகி டிசம்பர் 31-ம் தேதி முடிகிறதல்லவா?”
”ஆமாம்.”
”என் டயரி அப்படியில்லை. நீர் போடும் டயரிக்கும் நான் தயார் செய்யும் டயரிக்கும் இங்கே தான் வித்தியாசம். என் டயரியில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பக்கங் கள் விட்டுப்போயிருக்கும். தேதி வாரியாக ஒழுங்காயிரா!”
”ஏன் அப்படி?”
”ஏனா? சேர்ந்தாப்போல் இரண்டு மாசத்துக்கு மேலே யார் ஒழுங்காக டயரி எழுதுகிறார்கள்? ஆகையால், மற்ற தேதிகள் போடுவது வீண்தானே! எனவே எனக்குக் காகிதம் அவ்வளவு செலவழிகிறதில்லை. அதனால் லாபம் அதிகம் கிடைக்கிறது!”
– 3-11-1940