ஞானச் செருக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 1,504 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அனைத்துலகச் சாங்கி விமான நிலையத்துக்கு வாடகை வண்டியில் கதிரவன் வந்து இறங்கியபோது மாலை மணி நான்கு இருக்கும்.

சென்னை செல்லும் பயணிகள் வரிசை பிடித்து நின்றனர். சில பயணிகள் வளாகத்தில் கும்பலாகவும், சிலர் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டுமிருந்தனர். பயணிகளோடு பயணியாய் வரிசையில் நின்று கொண்டிருந்த கதிரவனின் கண்களில் பளிச் சென்று பட்டாள் அந்த நீலப்புடவை அணிந்திருந்த பெண்.

அளவுக்கு அதிகமான சாமான்களைக் கொண்டு வந்து அவதிப்படுவதைக் கண்ணுற்ற கதிரவன்… அவளிடம் பரிவுடன் பேச எண்ணி… “மேடம் நீங்க எங்கே போகனும்… உங்களுக்கு என் உதவி தேவைன்னா கேளுங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் அவனை அதிசயமாய்ப் பார்க்கிறாள்…! அவள் “ஆமாம்; ஆமாங்க உதவி செய்வீங்களா?” என்றாள். மீண்டும் கதிரவனைப் பார்க்கிறாள்… “என்னுடைய சாமான்களுக்குக் கட்டணம் செலுத்தனும்னு சொல்வாங்க… நான் தனியே சென்னைக்கும் போகனும். நீங்க உதவி செஞ்சா நிறைய புண்ணியம் உண்டாகும்…”

கதிரவனிடம் அதிகமான பொருள்கள் இல்லை. அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வது என்று முடிவு செய்து கொண்டு, அவளுக்குத் தீர்வை இல்லாமல் சென்னைக்குச் சென்று சேர்க்க உதவியாக அவளுடைய பொருட்களை வாங்கினான்.

இருவரின் பொருள்களையும் ஒரே எடையில் போட்ட போது மிகச் சரியாக இருந்தது. விமானத்துறை அதிகாரி எதுவும் தீர்வு இல்லாமல் அவன் கையில் பாஸ்போட்டையும் போர்டிங் கார்ட்டையும் கொடுத்தார்.

வெகுநேரம் காத்திருந்த பெண்ணிடம் அவன் கொண்டுவந்த பயணச்சீட்டைக் கொடுத்ததும்… அவசரமாக அவனுக்கு நன்றி மட்டுமே கூறிவிட்டு சிட்டாய்ப் பறந்தாள் அப்பெண்… அவன் விக்கித்துப்போய் நின்றான்.

இந்திய விமானம் குறித்த நேரத்தில் பயணம் செய்யும் என்பதைச் சாங்கி விமான நிலைய அறிவிப்புக் காட்டியது. சில பயணிகள் விமானப்பாதை நோக்கிச் செல்கின்றனர். விமானத்தில் ஏறிய பயணிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இருக்கைகளையும், பொருள்களையும் சரி செய்து கொண்டிருந்தனர்.

கதிரவன் தன் இருப்பிடம் தேடிக் கண்டுபிடிக்க சில மணித்துளிகள் ஆயிற்று. ஒரே பரபரப்பு “அந்தச் சிறு நேரப் பாதிப்பில் அவள் மேகத்தில் மறையும் நிலாவாகிப் போனாளோ?” கேள்வியாய் அவனுடைய கண்கள் இருக்கும் இடத்தில் படிந்தன.

அவள் தட்டுத் தடுமாறி “என் இருக்கை 14K தானே? என்று கேள்வியாய் அமர்ந்தாள்…” வானத்து நிலவு வந்து அமர்ந்த மாதிரி….

அவன் சிலிர்த்துக் கொண்டான்… சில நேரங்களில் மனசு எதிர்பார்க்கின்ற இப்படிச் சில அபூர்வங்கள் நிகழ்வதும் உண்டுதான் என்று… மனதுக்குள் கிளர்ந்த மகிழ்ச்சியை அவன் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தபோது, அவள் அவன் பக்கமாய்த் திரும்பினாள். ஓசையின்றி இதழ்பிரியும் பூவைப் போல் பல் தெரியாமல் மென்மையாகச் சிரித்தாள்.

விமானம் மெல்ல மெல்லப் பறக்கத் தொடங்கியது… வெளியில் மாலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஊடாடித் தங்கம் பூசப்பட்ட தடாகமாய்க் காட்சியளிக்கிறது. கடவுளின் படைப்புகளின் அற்புதங்களை வியந்து கொண்டிருந்த சமயம்… கதிரவன் தனது புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

“ஸார்… ப்ளீஸ்… கையில இருக்கிற புத்தகத்தைக் கொஞ்சம் தர்ரீங்களா?”

அவன் அனிச்சையாய்த் தன் கையிலிருந்த புத்தகத்தை அவளிடம் நீட்டினான். “தாங்ஸ்” என்றவள் மீண்டும் தன் பழைய நிலைக்கு மீண்டாள். இவனுக்கு மின்சாரப் பாயச்சல்.

***

விமானம் மலாக்கா நீரிணையைத் தாண்டிப் பறந்து கொண்டிருந்தது. வெளியில் வெப்பம் கக்கும் சூரியன் தங்க ஒளி… அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத விமானம் பசுமை கலந்த குளிர் இருக்கைகளிடையே புகுந்து குளிரவைத்தது.

மீண்டும் அவள் அவன் பக்கம் திரும்பினாள். “தாங்ஸ்” என்று புத்தகத்தைக் கொடுத்தாள்.

“அதற்குள்ளவா படிச்சிட்டீங்க !” “இதென்ன பெரிய விஷயம் யானைப் பசிக்கு சோளப் பொறி மாதிரிதானே…!” என்றாள். எங்க வீட்டுல எனக்கு என்ன பேரு தெரியுமா? “புத்தகப் பிசாசு” என்று பளிச்செனச் சிரித்தாள்.

அவன் அவசரமாய்த் தன் பைக்குள் கையை விட்டு “இந்தாங்க” என்று ஒரு புதுப்புத்தகத்தைக் நீட்டினான். அவள் முகத்தில் புதுப் பொம்மை கிடைத்து விட்ட குழந்தையின் குதூகலம்.

***

விமானம் வேகத்தோடு போட்டி போடும் காற்றாடிச் சிறகு மேலும் கீழுமாய் நடனம் புரிகிறதை ரசிக்கக் கண்ணாடிக் கதவை நீக்கித் திறக்கிறான், அவன்.

அவள் கையிலிருந்த புத்தகத்தை மூடிய நிலையில் பார்வையைக் கண்ணாடி வழியே செலுத்துகிறாள். அவள் பார்வை உடனே நிமிர, அவன் சட்டென்று கதவை மூடினான். இலேசாகப் புன்னகையைச் சிந்தினாள். அதில் நன்றியுணர்ச்சி இழையோடியது. மறுபடியும் புத்தகத்தில் மூழ்கினாள்.

விமானம் தெளிவான வானில் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. விமானம் அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தைக் கடந்து செல்வதாக விமானத்துறை அதிகாரி அறிவிப்பு செய்கிறார்… அவன் கண்ணாடிக் கதவைத் திறந்து பார்வையை ஓடவிடுகிறான்… அவன் கண்களுக்குத் திட்டுத்திட்டாகக் குன்றுகள் சில தெரிகின்றன. நீண்ட பயணத்திற்குப் பின் உணவுகளை விமானப் பணிப்பெண்கள் பரிமாறுகின்றார்கள்.

அவனும் அவளும் சைவ உணவையே கேட்டு உண்டனர்…. பின்பு ஒய்வாகச் சில மணித்துளி அமைதியாயினர். சில பயணிகள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தபோது… அவனிடம் இருந்த யாசிகா கேமிராவை நீட்டி ஒரே சமயத்தில் வரும் அந்த அழகிய விமானப் பணிப்பெண்ணை லாவகமாய்க் கிளிக் செய்தான்… கேமிராவைத் தன் பையில் வைக்கின்றதை அவள் பார்த்துப் புன்னகையைச் சிந்த… அவனும் இலேசான புன்னகையைச் சிந்தினான்…

அவள் அவனிடம் புத்தகத்தைக் கொடுத்து “ரொம்ப நல்ல கதைங்க” என்ற மதிப்புரையும் வழங்கினாள். அவன் அகம் மலர்ந்து முகமும் மலர்ந்தான். ஏனெனில் அது அவனது சொந்தப் படைப்பு ஆயிற்றே…

“நிஜமாகவா?” “தேவையில்லாம பொய் சொல்ற பழக்கமில்லிங்க” “அப்ப தேவைப்பட்டா சொல்லுவீங்க… “நிச்சயமா… ஏன்னா நானும் இந்த உலகத்தில வாழ்ந்தாக வேண்டியிருக்கே…” அந்த யதார்த்தம் அவனுக்குப் பிடித்திருந்தது.

***

விமானப் பயணம் தொடரத் தொடர அவளது பேச்சும் அவனிடம் தொடர்ந்தது. தடங்கலே இல்லாத அருவியின் மொழியாய் அது அமைந்திருந்தது. அதில் சிக்காத பிரச்சனைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவன் அவளது ரசிகையாகவே மாறிப் போனான்.

“சாதிப் பிரச்சினையைப் பற்றி நீங்க எழுதியிருக்கிற கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதைப் படிச்சதும் எனக்கு என்ன தோணுச்சி தெரியுமா…!”

“…..”

“இப்ப நாம ரெண்டு பேரும் இவ்வளவு நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறோமே… நாம என்ன ஜாதி மதம்னு கேட்டுக் கிட்டோமா…? இல்லையே! ஏன்னா அது நமக்குத் தேவையில்லே… ரொம்பப் பேருக்கு அப்படித்தான்.!”

கதையைப் படித்ததோடு மட்டுமில்லாமல் அதன் உள்ளேயும் போய்ப் பார்க்கும் பக்குவம் அவளுக்குப் பிடித்திருந்தது. எதிர்ப்புறமாய்ப் பார்வையைச் செலுத்தியவாறு அமர்ந்திருந்தவள் விமானத்தில் ஓடிக் கொண்டிருந்த தொலைக் காட்சியில் காட்டப்பட்ட விளம்பரம் ஒன்றைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தாள்.

“இவங்களால எவ்வளவு பிரச்சினை பார்த்தீங்களா… வேண்டப்படாத கழிவுப் பொருட்களைக் கொஞ்சமும் பொறுப்புணர்ச்சி இல்லாம ஆறுகளிலும் கடல்களிலும் கொட்டிப் போறதனால எவ்வளவு நஷ்டம் ஏற்படும்னு இவங்களுக்கு ஏன் தெரியமாட்டேங்குது. இவுங்களும் இந்த நாட்டுக் குடிமக்கள் தானே… நாட்டுக்கு ஏற்படற நஷ்டத்தைப் பற்றி இவுங்களுக்குக் கவலையே வராதா… தன்காரியம் ஆனா போதும்… யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை… இந்த மனோபாவம் ஒரு தொத்து நோய் மாதிரி எல்லார் மனசிலேயும் வேகமாப் பரவிக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கறப்ப ரொம்ப கவலையா இருக்கு..”

அவள் முகத்தில் தெரிந்த கவலை அவனுள்ளும் பரவியது.

விமானம் சில மணித்துளிகள் ஏற்றமும் இறக்கமுமாய்த் தடுமாறிச் செல்வதை உணர்ந்ததும் திடீரென்று அவள் மௌனமானாள். அவளது மெளனத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“என்னங்க; ஏதாவது தியானம் பண்றீங்களா என்ன…? பேச்சு மூச்சையே காணோம்”

விமானம் திரும்ப வழக்க நிலைக்கு வந்ததும் அவள் திரும்பினாள். லேசாகச் சிரித்து உதட்டைச் சுழித்தாள்.

“நான் தியானம் செய்யறது இருக்கட்டும் நீங்க தியானம் செய்றது இல்லீங்களா ஸார்?”

“இல்லீங்க!”

“அடடே… அவசியம் செய்யணுமே… கவலைகள் நீங்கவும் நினைத்தது நடக்கணும்னா அதுக்கு ஒரே வழி இறைவழிபாடும் தியானமும் தான் ஸார். அது தான் மனதை ஒருமுகப்படுத்தும். மனசு ஒருமுகப்பட்டுச்சின்னா எந்தக் காரியமுமே எதிரே வந்து கைகட்டி நிக்குமே…!”

“அதுக்கு முன்பெல்லாம் நான் ஒரு கோவிலைக் கூட விடமாட்டேன். சுத்தோ சுத்துன்னு சுத்துவேன். இப்போ அப்படியில்லே…. தியானம் செய்யச் செய்ய எல்லாமே நமக்குள்ளேதான்கிற எண்ணம் வந்துடிச்சு…”

“ஓகோ!”

“இன்னொரு வேடிக்கை தெரியுங்களா? எனக்குப் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரையும் பிடிக்கும். அதே சமயம்… புத்தனையும் இயேசுவையும் முகம்மதுவையும் பிடிக்கும்” என்று கூறிச் சிரித்தாள்.

அவனுக்கு அடக்க முடியாத பிரமிப்பு. ஒரு சாதாரணப் பெண்ணால் இப்படியெல்லாம் சிந்தித்துப் பேச முடிகிறது… தனக்குள் வியந்து கொண்டான்!..

சிறிது நேர அமைதிக்குப் பின் அவளே தொடர்ந்தாள்…

“நீங்க பாரதியை முழுசா படிச்சிருக்கீங்களா ஸார்…?”

“கொஞ்சம்… கொஞ்சம்…” கூச்சத்துடன் சொன்னான்.

“முழுசாவே படிச்சிடுங்க, அவர் மாதிரி கவிஞர் ரொம்பவும் அபூர்வம்தாங்க… அவரோட கற்பனையைப் பாருங்களேன்.

தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா – நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா…!” தீயென்று சொல்கிறாரே; நெருப்பைத் தொட்டால் எப்படிங்க இன்பம் வரும்? அதுவும் கண்ணனைத் தீண்டும் இன்பம்?”

அவன் ரொம்பவும் தடுமாறிப் போனான். “எனக்கு ரொம்ப நாள் வரை இது புரியாத புதிராகத்தான் இருந்துச்சு. ஒரு நாள் எரியுற அடுப்பையே பார்த்தபடி இருந்தேன். அதிலேயிருந்து தகதகவென எரியும் ஆரஞ்சு வண்ணச் சுடர் பூவின் இதழைப் போன்று காற்றோடு ஒட்டிக் கொண்டு நெளிந்து நெளிந்து நடனமாடும் அழகு, அதைச் சட்டென்று கையில் எடுத்துக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. அப்போது தான் நினைத்துக் கொண்டேன். எனக்கே இப்படி என்றால்…? அந்தக் கவிதை கவிஞருக்கு எப்படியிருந்திருக்கும்?

அவன் புருவங்கள் நெளிய அவளை உற்றுப் பார்த்தான். இவளால் எப்படி இப்படித் தொடர்பில்லாத விஷயங்களுக்கு “டக் டக் என்று தாவிக் கொள்ள முடிகின்றது… இவள் தலையில் என்ன கம்ப்யூட்டர் மூளையா பொருத்திருக்கு…? என்று குழம்பிக் கொண்டிருக்கிறான்.

விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. தன் கைப்பைக்குள் எதையோ துழாவிக் கொண்டிருந்தவள்…

“இந்த மாதிரி ஏதாவது வேலையா வெளியூர் போயிட்டு வீட்டுக்குத் திரும்பினா; வாசல்லே இருக்கிற பூச்செடிங்கள்ளாம் “இத்தனை நாளா எங்கள விட்டுட்டு எங்கே போயிட்டேன்னு அழுகையும் ஆத்திரமுமா கேக்கற மாதிரியிருக்கும். நான் உடனே அதுங்க பக்கத்தில போய் இவைகளை இதமா தடவிக் கொடுப்பேன். அவை அப்படியே நெகிழ்ந்து போகும்”,

“..”

“இதைப் பார்த்துட்டு தொடக்கப் பள்ளி ஐந்தாம் வகுப்பில் படிக்கிற என்னோட பையன்…!

என்னம்மா, கைக்குழந்தையை விட்டுட்டுப் போனாப்பல வந்ததும் வராததுமா செடிகளைக் கொஞ்ச ஆரம்பிச்சிட்டீங்கன்னு கேலியாப் பேசுவான்…

இப்படிச் சொல்லிவிட்டுச் சிரித்தவளை ஒரு அதிசயம் போலப் பார்த்தான் கதிரவன். எப்படி… எப்படி இவளுக்கு இப்படி ஒரு மனசு! நினைக்க நினைக்க வியப்பும் மகிழ்ச்சியும் விரிவாகிக் கொண்டே போயிற்று. அதே உணர்வுடன் அவளை நன்றாகப் பார்த்தான்.

சிவப்பிலும்… இப்படி ஒரு சிவப்பா! “தீச்சிவப்பு… !” பேசும் போது அழகாய்க் குவிந்து விரியும் சின்ன உதடுகள். அதனுடன் சேர்ந்தே சிரிக்கும் கண்கள். அதில் தனியாய் மின்னும் தீட்சண்யம். உறுத்தாத வசீகரத் தோற்றம். தெளிவான சிந்தனை, அறிவார்ந்த பேச்சு, பேச்சிலே அதிகமாய் மின்னும் மனத்தின் ஈரம்.

ஒருவேளை இவளைப் போன்ற ஒரு பெண்ணைப் பார்த்த பிறகுதான் “அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம், என்றெல்லாம் மகாகவிக்குப் பாடத் தோன்றி இருக்குமோ..!”

அந்த ஆச்சரியம் மாறாமலே சொன்னான். “நெஜமாச் சொல்றேன். உங்க வீட்டுக்காரர் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவருங்க…”

சரேலென்று அவள் முகம் சுருங்குவதுபோல் இருந்தது.

“யாரு… எங்க வீட்டுக்காரரா…? நான் ஏதாவது பேச ஆரம்பிச்சா போதும் அதைப்பாரு…ஏற்கனவே எனக்குத் தலை வலிச்சிக்கிட்டு இருக்கு; நீ வேற அறுக்க ஆரம்பிச்சுடாதே, தாங்க முடியாதுன்னு எழுந்திருச்சிப் போயிடுவாரு…. இவ்வளவுதான் என்னைப் பத்தின இவரோட அபிப்பிராயம்.”

இதைச் சொல்லி விட்டும் அவள் சிரித்தாள்.

ஆனால் அவனுக்குப் புரிந்தது. அது மனதில் எழும் வலியை மறக்க முயலும் சிரிப்பு என்று.

விமானம் சென்னை வந்து விட்டது. “உண்மையைச் சொல்றேங்க… உங்களைப் பார்த்ததிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சிங்க…” என்று நெகிழ்ந்து போனான் கதிரவன்.

“எனக்கும்தான்!” என்றவள், “வாங்களேன் அருகில் உள்ள மீனம்பாக்கத்திலேதான் எங்க வீடு. ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டுப் போகலாம்,”

தயக்கமாக இருந்தாலும் மறுப்பதற்கு மனமின்றி அவளைப் பின் தொடர்ந்தான்.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *