கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,750 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வென்றுவிட்டாயடி, ரத்தினா!” “வென்றுவிட்டாயடி ரத்தினா!” “வென்றுவிட்டாயடி ரத்தினா!…” என்று திருப்பித் திருப்பி மனதுக் குள்ளே சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அடுத்தாற்போல் எழுதப் போகும் ஒரு கதைக்கு இந்தப் பெயரைத்தான் போடுவதாக நிச்சயித் திருந்தேன். கண்ணை மூடிக்கொண்டு அந்தக் கதையை எப்படி ஆரம் பிப்பதென்ற சிந்தனையில் ஆழ்ந்தேன்.

திடீரென்று யாரோ என் கழுத்தைப் பிடித்து நெரிக்கவே, திடுக்கிட் டுக் கண்ணை விழித்தேன். என் நண்பன் சோமுதான் இந்தப் பயங்கர மான காரியத்தில் ஈடுபட்டிருந்தான்.

“அடே, டே டே… இதென்ன வேலையடா இது!” என்றேன் மூச்சுத் திணற,

“இதுவா? இந்த வேலைக்குத்தான் கொலை செய்தல்’ என்று பெயர் தெரிந்ததா? இப்படியே உன்னுடைய கழுத்தை நெரித்து…”

“ஐயையோ, நான் என்ன செய்தேனப்பா உனக்கு?”

“ஓகோ! இது வேறே கேட்கிறாயா? நான் ஒருவன் வந்து உன் மூஞ்சிக்கு நேரே நிற்கி றேன்; நிற்கிறேன்; நிற்கிறேன்… நீ உன் பாட்டுக்குக் கண்ணை மூடிக்கொண்டு….”

“தப்பு: தப்பு; தப்பு! மன்னித்துக் கொள்ளப்பா… அடேடே! கழுத்தை வலிக்கிறது; கையை விட்டா !”

“இனிமேல்….” “இல்லை ! இல்லை !”

இதற்கு மேல் சோமு மனமிளகி எனக்கு உயிர்ப்பிச்சை அளித்தான். நான் கழுத்தைத் தடவிக்கொண்டே, “என்னடா இது, இன்றைக்கென்ன இவ்வளவு உற்சாகம்?” என்று கேட் டேன். சோமுவுக்கு ஏதாவது உற்சாக மேற்பட்டால்தான் அவன் இந்தமாதிரி பயங்கர வேலை களில் ஈடுபட்டு விடுவது வழக்கம்.

“எனக்குக் கல்யாணம்!” என்றான் சோமு.

நான் கண்களை அகல விழித்து, “உண்மையாகவா? நிச்சயமாச்சா?” என்றேன். அவன் திடீரென்று என் மூக்கைப் பிடித்து என் தலையை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டே, “நிச்சயமாச்சு நிச்சயமாச்சு! இந்த மாதம் 27-ம் தேதி முகூர்த்தம் தெரிந்ததா?” என்றான். நான் மூக்கை விடுவித்துக்கொண்டு, நாற்காலியை – அவன் கைக்கெட்டாத தூரத்தில் பின்னுக் கிழுத்துக் கொண்டேன்.

அவன் மேலும் சொன்னான்:

“கல்யாணம் என்றால் சும்மா ஏதாகிலுமொரு பெண் ரூபத்துக்குத் தாலி கட்டப் போகி றேன் என்று நினைக்காதே…”

“பெண்ணைப் பார்த்தாயா?”

“இல்லை. உன்னைப்போல ஒரு நாட்டுப்புறத்தைக் கண்ணை மூடிக் கொண்டு கல் யாணம் செய்யப் போகிறேன்…”

“பரிகாசஞ் செய்கிறாயே!”

“பின்னே என்னடா! நான் பெண்ணைப் பார்த்தேன்; அவளோடு பேசினேன்….. பெண் ணென்றால். அவள் அழகிலே ‘ரதி’. பேச்சிலே கிளி, மனிதரோடு பழகிறதிலே…. 1947ஆம் ஆண்டு நாகரீகமடா! இங்கிலீஷ் எஸ்.எஸ் ஸி.வரைபடித்திருக்கிறாள். உன்னுடைய கதை களில் எழுதுவாயே, அந்த மாதிரிக் கதாநாயகியடா!”

“புழுகு! புழுகு!”

“புழுகா? நீ அவளைப் பார்த்தால் ….!”

“அதல்ல என்னுடைய ‘கதாநாயகியைப் போல என்றாயே, நீதான் கதையே படிக்காத ஜன்மமாச்சே!”

“இல்லையடா, எப்போதோ ஒரு நாள் படித்தேன். ஆனால் இனிமேல் அதற்குக் கூட நேரம் வராது. உன்னுடைய கதையைப் படிக்கிற நேரம், அவளுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் அவளுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கலாம்…”

“அவளுடைய கண்கள் கயல்மீனைப் போலவும், மூக்கு எள்ளுப்பூவைப் போலவும், உதடுகள் கொவ்வைப் பழத்தைப் போலவும்…”

“ஓகோ. உனக்குப் பகிடியாய் இருக்கிறதோ? எல்லாம் வந்து பார்த்து விட்டுச் சொல்லு… அது சரி; 27ந் தேதி முகூர்த்தம். இரண்டுநாள் முன்னாகவே நீ வந்துவிட வேணும். தெரிந்ததா?”

“இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை எதற்கு?”

“எதற்கா? உனக்குத்தான் தாலி கட்டப் போகிறேன் ….. நான் சொல்கிறேன், பார் அவரை! 25-ந் தேதியே வராவிட்டால் பிறகு தெரியும்?…. வரமாட்டாய்தானோ?….” என்று சொல்லிக்கொண்டு அவன் என்னை நோக்கி எழுந்து வந்தான். அவனுக்கு அப்போதிருந்த உற்சாகத்தில் என்னுடைய மூக்கைப் பிய்த்து நெற்றியிலே ஒட்டினாலும் ஒட்டிவிடுவான். அவன் என்னைத் தொடுமுன்னரே, “வருகிறேனடா, வருகிறேன் இருபதாந்தேதியே வேணுமானாலும் வந்துவிடுகிறேன்!” என்று கூச்சல் போட்டேன்.

“அப்படிச் சொல்லு, நல்லபிள்ளை !…. சரி. எனக்கு எத்தனையோ வேலை இருக்கிறது. நான் போய் வரட்டுமா?” என்றான்.

“சரி; சரி. இந்தச் சமயத்தில் உன்னை மினைக்கெடுத்தக் கூடாது. போய் வா அப்பா! ஏதோ புத்தியைச் சரியாக வைத்துக்கொள்” என்றேன்.

“சரிதான்” என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.

இவ்வளவு தூரம் சோமு பயப்படுத்தியிருந்தும் என்னால் அவனுடைய கல்யாணத்துக்கு இரண்டுநாள் முன்னர் போகமுடியவில்லை; கல்யாணத்தன்றும் போகவில்லை. அதன் பிறகு ஒருவாரம் வரைக்கும் நான் வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை. நானென்ன செய்யமுடியும்? தெய்வத்தின் சோதனை போல அந்தச் சமயம் பார்த்து என்னைச் சுகவீனம் பிடித்துக் கொண்டது. அவனுடைய கல்யாணத்தின்பின் ஒருவாரம் கழித்து, சோமு தம்பதிக ளைப் பார்ப்பதற்காகப் போனேன். நான் சுகவீனமாயிருந்த விஷயம் ஏற்கனவே சோமுவுக்குத் தெரிந்திருந்ததால் என்னுடைய மூக்குக்கோ, கழுத்துக்கோ ஆபத்து ஏற்படவில்லை.

“கல்யாணத்துக்கு வரவேணுமென்று உனக்கு உள்ளூர விருப்பமில்லை;அதனால் தான் அந்தச் சமயம் பார்த்து படுக்கையில் கிடந்துவிட்டாய்!” என்றான் சோமு.

“ஓமோம், அதனால்தான் இப்படி இன்னும் நல்ல சுகமாகும் முன்னமே எழுந்தோடி வந்தேன், உன்னைப் பார்ப்பதற்கு!”

“உன்னையா? ‘உங்களை’ என்று சொல்லடா! என்னை மாத்திரமா பார்க்க வந்தாய்?” என்று கூறி அவன் கலகல வென்று சிரித்தான். பிறகு, உள்ளே பார்த்து, ‘உமா! உமா!…. உமாராணி! …..ஓ, மிஸிஸ் சோமசுந்தரம்…!” என்று சத்தம் போட்டான். இந்த வாயாடியின் காரியம் என் மனதை என்னவோ செய்தது. அந்தப் பெண்ணைப் பிறர் முன்னிலையில் இப்படி ‘லோட்டி’ அடிக் கிறானே! பாவம் ; அவள் தலையில் பிரமன் எழுதிவிட்டான், சீவியகாலம் வரையும் இந்த நட்டாமுட்டியோடு காலந்தள்ளும்படி!

“ஓ! கோபிக்க வேண்டாம், என் துரையே! இதோ வந்துவிட்டேன்” என்ற வீணாகானம் உள்ளிலிருந்து கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு தோகை மயில், மான்போலத் துள்ளி வந்தது. அட…..!

நான் கண்களை அகல விழித்துப் பார்த்தேன்

‘அட, இவளா!

நான் திகைத்துக் கொண்டிருக்கும் போதே, அவள் என்னைப் பார்த்து, “அ! மிஸ்ரர் சிவஞானம்! நீங்களா?” என்றாள்.

ஆம். நான்தான். இந்த சிவஞானத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவள் அறிந்திருந்தாள். நானும் உமாராணியை நன்றாகத் தெரிந்திருந்தேன். அப்போது… அது ஒரு கதை. என்னால் மறக்கமுடியாத நினைவு.

இரண்டு வருடங்களின் முன், நான் கல்யாணம் செய்து சில மாதங்கள் தான் கழிந்தி ருந்தன. என் மனைவியை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்யவில்லை. பெரியோர்கள் நிச்சயம் செய்துதான் நடந்து, அந்தக் கல்யாணம். ஆனாலும் கல்யாணத்தின் பின்னர் அவளை நான் காதலித்தேன். அவள் ஏதோ கொஞ்சம் படித்திருந்தாலும், பெரிய சங்கோசி. என்மேல் தனக்குள்ள ஆசையை, அட்டகாசமாகக் காட்டிக் கொள்ள மாட்டாள். மௌனமாக தலையைக் குனிந்து கண்ணிதழ்களைச் சற்றே உயர்த்தி அவள் பார்க்கையில், நான் தெரிந்துகொண்டு விடுவேன்: அவளுக்கு நான் உயிர்.

எங்களிடையே ஒட்டிக்கொண்ட இந்த உறவுக்குக் குறுக்கே வந்தவள் தான் உமா ; இப்போது ஸ்ரீமதி சோமசுந்தரமாகி விட்டவள்.

என் மனைவி பானுமதிக்கும், உமாவுக்கும் சம வயதேயென்றாலும், உமா அப்போதும் படித்துக்கொண்டிருந்தாள். எங்கள் ஊரில் அவளுடைய சித்தப்பா வீடு இருந்தது. இரண்டு வருடங்களின் முன் ஒருசமயம் கிறிஸ்மஸ் லீவின்போது அங்கே வந்திருந்தாள். பானுமதி அவளுடைய பள்ளித்தோழி. எனவே உமா அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தாள். சோமுவைக் கண்டால் எனக்கு எப்படி இருக்குமோ அதுமாதிரித்தான் பானுமதிக்கும் உமாவைக் கண்டுவிட்டால்! பானுமதியைக் கேலி பண்ணி அவமானப்படுத்துவதில் உமாவுக்கு வெகு உற்சாகம். அவளால் எவ்வளவு அவமானப்பட்டாலும் பானுமதிக்கு அவளைக் கண்டால் வெகு குதூகலம்.

முதலில் உமாவின் மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. எந்த நேரமும் அவள் பானுமதியோடு முஸ்பாத்தி பண்ணிக்கொண்டிருந்தால். நான் என்ன செய்கிறதாம்? அவளை எப்படியாவது கடத்திவிடும் கெட்டித்தனம் பானுமதிக்குக் கிடையாது. ‘இங்கே ஒரு ஆண் பிள்ளை பானுமதிக்காகக் காத்திருக்கிறானே’ என்ற எண்ணம் அந்த நாசமாய்ப் போன உமாவுக்கும் கிடையாது. எனக்கு ஆத்திரம் வராதா? எனக்கு மாத்திரம் கொஞ்சத் தபோபலம்’ இருந்திருந்தால்…. பாவம். அந்த உமாவின் கதி என்னவாயிருக்குமோ?

கொஞ்ச நாளில் இந்த நிலைமை மாறிவிட்டது. ஏனெனில், உமா-பானுமதி சம்பாஷணையில் நானும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். இத்தகைய சந்தர்ப்பத்தை நானாக வலியச் சென்று பயன்படுத்தும் வழக்கம் இல்லை. ஆனால் இங்கு வலிந்திழுக்கப்பட்டேன் உமாவினால்! மெல்ல மெல்ல அவள் என்னையும் தங்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொண் டாள். அடேயப்பா! ‘பானுமதியும் ஒரு பெண்: இவளும் ஒரு பெண்; என்று சொல்ல முடியுமா! இவளிருக்குமிடத்தில் ‘கலகல வென்று எந்த நேரமும் வெண்கலநாதம் கேட்டுக் கொண்டே யிருக்கும். பானுமதி என்னவோ நல்ல பெண்தான்; என்மேல் ஆசையாயிருப்பவள்தான். ஆனால், உமாவின் கலகலப்பும் மிடுக்கும் அவளுக்கு ஒரு தனிக்கவர்ச்சியை அளித்தன. பச்சையாகச் சொன்னால், உமா என் மனதைக் கவர்ந்தாள். அவளைப் பார்ப்பதிலே. அவளோடு பேசுவதிலே, பழகுவதிலே ஒரு தனி இன்பம் கண்டேன் நான். ஆனால், உமா! அவளுடைய பேச்சுகள், நடத்தைகள், சிரிப்பு, தலையசைப்பு, கண்வெட்டு….ஒ, உமாவுக்கும் என்மீது… ஏன், நான் ஒரு அழகான வாலிபன் தானே!

உமாவினால் நான் கவரப்பட்டேன; நானும் உமாவைக் கவர்ந்து விட்டதாக நிச்சயமாக நம்பினேன். என்னுடைய சில சிருங்காரச் சாடைகளை அவள் குதூகலத்துடன் அங்கீ கரித்ததை அனுபவத்தில் கண்டேன்.

இத்தனைக்கும் பானுமதியோ தன்பாட்டில் சாதுவாய், வழக்கம் போலச் சந்தோஷ மாகவே இருந்தாள். பாவம், உலகம் தெரியாதவள். இவளை ஏமாற்றுகிறோமே’ என்று சில சமயம் தோன்றும். அடுத்த நிமிஷம் , உமாவின் ‘கலகல’வென்ற ஒரு ஒலியினால் இந்த உணர்ச்சி மறைந்துவிடும்.

எனக்கும் உமாவுக்குமிடையே இப்படிச் சில சிருங்காரச் சேட்டைகள் நடந்தனவானா லும், என்னால் நிச்சயமாக இன்னும் அவளை நம்பமுடியவில்லை. ஒருவேளை அவள் தன் னுடைய இயற்கையான முஸ்பாத்திக் குணத்தினால் செய்யும் சேட்டைகளை நான் தப்பர்த்தம் செய்துகொண்டேனோ’ என்ற சந்தேகம் இடையிடையே தோன்றும். ஆனால், அவளுடைய நடத்தைகள் மறுபடியும் எனக்கு நம்பிக்கை அளிக்கும். ஒருநாள் இந்த உறவை நிச்சயம் செய்துகொள்ள விரும்பினேன். மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு. உமாவுக்கு ஒரு கடிதம் காதல் கடிதம் எழுதினேன். அவள் மீது எனக்குள்ள காதலை அலங்காரமான எழுத்துகளிலே அள்ளி வீசினேன். நான் முன்பின் யோசியாமல் கல்யாண விஷயத்தை ‘பெரியோர்கள் நிச்ச யிக்கும்படி விட்டுவிட்டேன் என்றும், அதனால் என் வாழ்க்கையே பாழாய்ப் போய்விட்டதென் றும் எழுதினேன். இப்போதும் அவளாக ஒரு புதிய பாதையை -ஆனந்தமயமான பாதையைக் காட்டுவாளானால், அதன் வழியே செல்லத் தயாராயிருக்கிறேனென்றும் குறிப்பிட்டேன்.

கடிதத்தைப் பத்திரமாக ஒரு கவரில் போட்டு மேலே அவளுடைய பெயரையும் அழகாக எழுதித் தயாராக வைத்திருந்தேன். ஒருநாள் உமா எங்கள் வீட்டை விட்டுப் புறப்பட்ட போது, பானுமதிக்கு வேறு ஏதோ பராக்குக்காட்டி, அவளை உள்ளே போகும்படி செய்தேன். பிறகு, வெளியே போய்க்கொண்டிருந்த உமாவிடம் ஓடிப்போய், “உமா!” என்றேன்.

“ஓ” என்று அவள் திரும்பிப் பார்த்தாள். என் முகத்தில் எதைக் கண்டாளோ, அவள டைய முகத்தில் ஏதோ ஒரு புதிய பாவத்தைக் கண்டேன். என்னால் அதிகமாக ஒன்றும் பேச முடியவில்லை . அவளிடம் கடிதத்தைக் கொடுத்து “இதை வீட்டிலே போய் வாசித்துப் பார். என்றேன். என் கைகளிலும், குரலிலும் என்றுமில்லாத ஒரு பதட்டம் தோன்றிற்று. அவள் கடிதத்தை வாங்கினாள். தன் வேல்விழிகளால் என்னை ஆராய்ந்தாள். பிறகு பேசாமல் தலையசைத்து விட்டுத் திரும்பி நடந்தாள்.

அவளுடைய இந்த நடத்தை எனக்கு ஒரு விஷயத்தை நிச்சயமாக எடுத்துக் காட்டிற்று. அதாவது கடிதத்திலிருக்கும் விஷயத்தின் போக்கை அவள் இப்போதே ஊகித்துக்கொண்டாள். அவளால் எப்படி இந்த விஷயத்தை ‘டக்’ கென்று அறிய முடிந்தது? ஆம், அவளுடைய உள்ளத்திலும் இதே சிந்தனைக் குமுறல் இருந்ததென்பது நிச்சயம்…

அடுத்தநாள் அவளுடைய கடிதம் கிடைக்குமென்றும், அதிலே என்மேல் அவளுக்குள்ள ஆசையைத் தேனினுமினிய வார்த்தைகளால் வர்ணிப்பாளென்றும் எதிர்பார்த்தேன். இன்னும் அவளுடைய யோசனைகள்…

ஆனால் ….. அடுத்தநாள் அவள் வரவேயில்லை ; அதற்கடுத்தநாளும் அவள் வரவில்லை!

எனக்கு யோசனையாய்ப் போய்விட்டது! இரண்டாம் நாள் மெதுவாகப் பானுமதியிடம் கேட்டேன்: “ஏன், இரண்டு நாட்களாய் உன் தோழியைக் காணவில்லையே?” என்று, சாதார ணமாகக் கேட்பது போலத்தான் கேட்டேன்.

“அவளா? அவள் நேற்று வந்தாள். “ஊருக்குப் போகிறேன்” என்று சொல்லி விட்டுப்போய் விட்டாள்” என்றாள் பானுமதி.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

இப்போது இரண்டு வருடம் கழிந்துவிட்டது. உமாவின் விஷயத்தில் நான் நடந்து கொண்டதை நினைத்தால் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. நல்லவேளை ; நான் செய்த ‘வெட்கங்கெட்ட வேலை’யை அவள் பானுமதியிடம் சொல்லவில்லை. ‘இனிமேல் அவ ளுடைய கண்ணிலே படக்கூடாது; அவள் இருக்குந் திக்கையே நோக்கக்கூடாது!’ என்று நினைத்திருந்தேன்.

இந்த நிலையில்தான்…

“ஆம்! மிஸ்ரர் சிவஞானம்! நீங்களா?” என்று உமா கேட்டுக் கொண்டே வந்தாள்.

என் நெஞ்சு துடித்தது;உடல் பதறிற்று. என்ன பேசுவது, என்ன செய்வது என்று தெரி யாமல் தடுமாறினேன். வாயைத் திறந்தால் சத்தம் வெளியில் வராது போல் தோன்றிற்று.

“அடே, சிவஞானம்!உனக்குத் தெரியுமா உமாவை!” என்று வாயைப் பிளந்தான் சோமு.

என் முகத்தில் அசடு வழிந்தது.

உமா சொன்னாள்:

“ஓ; அவருடைய மனைவி பானுமதி என்னுடைய தோழி…”

உமா மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்துக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள். பிறகு சோமுவைப் பார்த்து, ‘நான் சொன்னேனே, முன்பு?…. எனக்கு அந்தக் காதல் கடிதம் எழுதிய வர்…” என்று சொல்லிச் சிரிப்பை அடக்க முடியாமல் வாயைக் கையினால் மூடிக்கொண்டு கலகலத்தாள்.

“ஓஹோஹோ !… நீதானா அது!…. அடேடே!….. சபாஷ்!….. ஆளைப் பார்த்தால் பூனைமாதிரி….” என்று சொல்லிச் சோமுவும் விழுந்து விழுந்து சிரித்தான்.

நான்…?

என்னுடைய நிலைமை எப்படி இருந்ததென்று தெரியவில்லை. ஏதாவது சொன் னேனா, அல்லது தலையைக் குனிந்து கொண்டேனா – எனக்கு ஒன்றும் இப்போது நினைவில்லை.

வீட்டுக்குத் திரும்பி வருகையில் ஒரு விஷயம் மாத்திரம் தெரிந்து கொண்டேன்: அந்த இருவருந்தான் சரியான ஜோடிகள்; ஆளுக்காள் சளைக்காத வாயாடிகள்.

– மறுமலர்ச்சி சித்திரை – 1947, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *