ஜீ வி த ம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 6,184 
 
 

“தமிழு….தமிழு…” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி.
வாசலில் ‘சளப்…சளப்’ – எனத் தண்ணீர் தெளிக்கும் சத்தம்.
“ஏண்டா அதுக்குள்ளாறயும் தமிழு…தமிழுங்குறே…? ஒந்தங்கச்சி விடியங்காட்டி எப்டி வந்து உம்முன்னாடி நிக்கும்? சூரியன் உதிச்சு வெயிலு போட வேணாமா?”
ராமுத்தாயி மகனுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வாசலைப் பெருக்க ஆரம்பித்தாள். மாரிக்கு அப்படிப் பதில் சொல்லி விட்டாளே தவிர அவள் மனதிலும் ஒரு கலக்கமிருக்கத்தான் செய்தது.
அப்படியான ஒரு சஞ்சலத்தோடுதான் மகனையும் மகளையும் வேலைக்கு அனுப்பி வைக்கிறாள் அவள். பையனையாவது தினமும் பார்க்க முடிகிறது. பெண்ணை அப்படியில்லையே? வாரத்தில் ஒரு நாள் லீவன்றுதான் அவளைக் கண்கொண்டு காண முடிகிறது.
தன் முன்னே அந்தப்ப+ உதித்து, மலர்ந்து, ஒரு நாள் ஆட்டம் காட்டிவிட்டு மறுநாள் மறைந்து விடுகிறது. ஒவ்வொரு வாரமும் அவளை வேலைக்கு அனுப்பி வைக்கையில் அவளுக்குக் கலக்கம்தான்.
“பார்த்துப்பா…ஜாக்கிரதையா இருந்துக்கோ….” என்று அவள் சொல்லும் ஒரு பேச்சில் தமிழரசி ஆயிரம் அர்த்தங்களைப் புரிந்து கொள்வாள்.
“நீ ஏம்மா இவ்வளவு பயப்படுறே? நா வேணும்னா வேலைக்குப் போகல…” –
“போகலைன்னா எப்டிறி? உங்கப்பன் உண்டாக்கி வச்சிருக்கிற கடன எவன் அடைக்கிறது? உங்கண்ணன் பாவம் வாங்குற சம்பளத்த அப்டியே கொண்டாந்து எங்கைல கொடுத்திடுறான். அவனயும் எந்தக் குத்தமும் சொல்ல முடியாது…நீயும் போயி ஏதாச்சும் வருமானத்தப் பார்த்தாத்தானடி நா ஏதாச்சும் ரெண்டு துட்டைச் சேர்த்து வச்சு கண்ணால பார்க்க முடியும்? உன்ன ஒருத்தன் கைல பிடிச்சிக் கொடுக்கிற வரைக்கும் எனக்கு வயித்துல நெருப்புதாண்டி….”
“போம்மா, எப்பப் பேசினாலும் நீ இதத்தான் சொல்லுவ…நாந்தான் கலியாணமே கட்டிக்கப் போறதில்லைன்னு சொல்றேன்ல…அண்ணன் கூடப் பேசாமத்தான் இருக்குது…நீதான் அடிக்கடி சொல்லிட்டேயிருக்க…சொல்லும்போதே அந்த முகத்தில் பரவும் வெட்கமும், உதட்டோரம் விரியும் ஒரு சின்னப் புன்னகையும் அது பொய் என்றுதான் கூறியது.
“Nஉற…Nஉற…Nஉற…பார்யா, இவுக கலியாணம் கட்டிக்கிற மாட்டாகளாம்யா? அடி ஆத்தி இந்த அளக நாங்களேவா பார்த்திட்டுத் திரியறது? இத ஒருத்தனுக்குச் சொந்தமாக்கினாத்தான அளகுக்கு அளகு….அப்டியே விட்ருவமா? ஒரு சரியான உறீரோவப் பார்த்துத்தான தூக்கிக் கொடுப்போம்…நா பார்க்க அவன் ஒன்ன எப்பவும் தலைல தூக்கி வச்சிட்டு ஆடணும்….அப்டி ஆள் ஒருத்தன மனசுல வச்சிருக்கோம்ல….”
“அது யார்றா அவென்? எனக்குத் தெரியாத ஆண்மகேன்….எங்கண்ணுல படாமயா இந்த ஊர்ல திரியுறான்…”
“அதெல்லாம் இப்பச் சொல்ல முடியாது…அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் போவணும்…”
“கொஞ்ச நாளா? கொஞ்சநாள்னா எம்புட்றா?”
“ஒரு வருஷம்னு வச்சிக்கயேன்…”
மனசு கொஞ்சம் நிறையத்தான் செய்தது ராமுத்தாயிக்கு. அதற்குள் ஓரளவு கடனை அடைத்து விடமுடியும்…பிறகு மாரி கொண்டுவரும் காசில் சமாளித்துக் கொள்ளலாம்.
“உங்கண்ணன் என்ன நினைக்கிறான்னு உனக்குத் தெரியாதுடி…அது எனக்குத்தான் தெரியும்…அவன் ஒன்னைப்பத்தி பெரிய நெனப்பெல்லாம் வச்சிருக்கான்…இங்க மில் ஆளுக எவனுக்கும் நீ கெடையாதாம்….இங்கருந்து படிச்சிப்பிட்டு கவர்ன்மென்டு உத்தியோகத்துல எவன் இருக்கானோ அவனுக்குத்தான் உன்னைக் கொடுப்பானாம்….மனசுல எதையெதையோ வச்சிட்டுத் திரியறாண்டி அவன்…”
கவர்ன்மென்ட் உத்தியோகம் என்று சொன்னவுடனேயே தமிழரசி மனத்தில் ஆறு மாசம் முன்பு வி.ஏ.ஓ. வேலை கிடைத்து விழுப்புரம் பக்கத்தில் ஏதோ ஒரு ஊருக்குப் போன காத்தமுத்து உருவம்தான் தோன்றியது.
தன் ஊகம் சரியாகத்தான் இருக்கும் என்பது அவள் எண்ணம். ஆனால் அண்ணன் வேறு யாரையும் மனதில் வைத்துக்கொண்டு சொல்லுமோ? வேறு யாரும் இப்போதைக்கு இங்கிருந்து வேலைக்குப் போனமாதிரி இல்லையே? இந்தச் சந்தேகத்தோடுதான் இருந்தாள். ஆனாலும் அண்ணனின் விருப்பத்திற்கு மாறாய் எதுவும் செய்ய ஏலாது. அதனால் மனசில் அனாவசியக் கற்பனைகளை வளர்த்துக் கொள்வது தவறு.
காத்தமுத்துதான் அவளுக்குத் தெரிய அந்த ஊரிலிருந்து அரசு உத்தியோகத்திற்குப் போனவன். போனவன் அவன்பாட்டுக்குக் கிளம்பிப் போக வேண்டியதுதானே? ஏன் அம்மாவிடம் வந்து ஸ்பெஷலாகச் சொல்லிக் கொண்டு போனான்? போகும்போது தன்னை வித்தியாசமாய் ஒரு பார்வை வேறு பார்த்துவிட்டுப் போனானே? அது என்னவாக இருக்கும்? எதற்காக இருக்கும்?
அது சரி! அவன் பார்த்தான் என்பது தனக்கு எப்படித் தெரியும்?
‘நீயும் பார்க்கத்தானடி செஞ்ச? ஒழுங்கா வேலைக்குக் கிளம்பிப் போகுற வழியப் பாரு…எவனயாவது நீயா மனசுல நெனச்சிக்கிட்டு அப்புறம் கஷ்டப்பட்டிட்டுத் திரியாத…எல்லாம் உங்க அண்ணன், ஆத்தாளுக்குத் தெரியும்….புரியுதா?’
மனதில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தன்னை உறுதிப் படுத்திக்கொண்டு விட்டாள் தமிழரசி. அது அவள் தந்தை கொடுத்த உறுதி. அவர் மனசு அவளுக்கு. அம்மாவுக்கு அவரை அவ்வளவாகப் பிடிக்காது.
“மில்லுல ஆட்குறைப்பு செய்தாகன்னா நானும் போறேன்னு இவரும் ஏண்டி முன்னுக்கு நின்னாரு? அவுகளாப் பார்த்து யார அனுப்புறாகளோ அவுக போயிட்டுப் போறாக…”
“அதெல்லாம் இல்லம்மா…தெரியாமப் பேசாத…அப்பாவுக்கு இருபத்தஞ்சு வருஷம் சர்வீஸ் ஆயிப் போச்சி…முதல்ல அவன் எடுத்த லிஸ்டே அதுதான்…”
“உனக்கென்னடி தெரியும்? இன்னும் ரெண்டு மூணு வருஷம் வேலை பார்த்தாருன்னா இந்த வீட்டுக் கடன முழுசா அடைச்சிப்புடுவேன் நா….பெறவு உன் கல்யாணங் காட்சின்னு வேற இருக்குல்ல? எம்பாடு எனக்கு…”
மருத்துவ ரீதியாக முடிவெடுத்து வெளியேற்றிய சிலரில் அப்பாவும் ஒருவர். அதை அம்மா புரிந்து கொள்ள மாட்டேனென்கிறாள். அப்படியான வெளியேற்றலே அப்பாவின் நோயாக மாறிவிட்டது. அவர் மனத் துன்பத்தை யார் அறிவார்?
“இன்னொரு மூணு வருஷம் தாக்குப்பிடிச்சிறலாம்னு நெனச்சேன்…நாட்ஃபிட்னு சொல்லிட்டாங்க….ஆட்குறைப்பு செய்றதுக்கு இது ஒரு பலமாப் போச்சு அவுகளுக்கு…தூக்கு தண்டனை பெற்றவனுக்குக் கூடக் கருணை மனுன்னு ஒண்ணு இருக்கு….அந்த மாதிரி ஒரு மனுவக் கொடுக்கக் கூட அவகாசம் தரல…நன்றி கெட்ட உலகம்…”
சொல்லியவர்தான். அதன் பிறகு அந்த மில் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அத்தனை வைராக்கியமாய் இருந்துவிட்டார். ஒரு முறை முன்னாள் பணியாளர்கள் என்று சொல்லி ஏதோ கௌரவிப்பதாகக் கூட ஒரு செய்தி வந்தது. அதைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை அவர்.
“மூத்த பணியாளர்களக் கௌரவிக்கிறதுங்கிறதெல்லாம் பேருக்கு…தங்களோட கௌரவத்த நிலைநாட்டிக்கிறதுக்கு…பழையவங்கள கௌரவப்படுத்துறத அவுங்க சர்வீசுல இருக்கைலயே செய்யணும்…அவுங்களோட நியாயமான கோரிக்கைகள மதிக்கணும்….செய்து கொடுக்கணும்…வெறுமே ஒரு துண்டு போர்த்துறதுலயும், கைல ஒரு நினைவுப் பொருளக் கொடுக்கிறதுலயும்தானா இருக்கு?”
என்னவோ ஒரு மன பாரத்தில் அப்பாவின் உயிர் பிரிந்தது. நல்ல ஆத்மா. முதல்நாள் இரவு தொழிலாளர்களின் பண்டிகைச் சீட்டுக் குலுக்கலுக்குப் போய்விட்டு வந்தவர். அவர்தான் வந்து நடத்தித்தர வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அவருக்கு ஒன்றும் பரிசு விழவில்லை. அதைச் சொல்லிப் பெரிதாகச் சிரித்துக் கொண்டார். ஊருக்கு ஒழைக்கத்தான உங்களுக்கு எப்பவும் யோகம் என்று அம்மாகூடப் பரிகாசம் செய்தாள். அதையும் கேட்டு இடிஇடியென்று சிரித்து மகிழ்ந்தார் அப்பா. அப்படியே படுக்கையில் விழுந்தவர்தான். அந்தச் சிரித்த முகம் காலையில் கூட அப்படியே இருந்தது. முகத்தில் அத்தனை தெளிர்ச்சி.
“பார்ரீ…அந்த முகத்துலதான் எம்புட்டு சந்தோசம்னு…கொடுத்துவச்ச மகராசன்;;டீ ஒங்கப்பன்…ஊருக்கெல்லாம் என்னைக்கும் நல்லவரு…அதுதான என்னையும் அவுருகிட்ட இழுத்துப் போட்டுச்சி…” – சொல்லியவாறே அப்படியே இடிந்து போய்விட்டாள் அம்மா.
“நா வேலைக்குப் போறேம்மா….நா காப்பாத்துறேன்….நீ கவலப்படாத…தங்கச்சி இருக்கு…நாங்க பார்த்துக்கிடுறோம்…”
படிப்பு நின்று வேலைக்குப் போக ஆரம்பித்து நான்கைந்து ஆண்டுகள் கடந்து விட்டன.
“என்னம்மா…இன்னுமா தங்கச்சி வரல்ல…?” – கேட்டவாறே படுக்கையிலிருந்து விதிர்த்து எழுந்து உட்கார்ந்த மாரிச்சாமியைப் பார்த்தபோது ராமுத்தாயிக்கும் மனசை என்னவோ செய்ய ஆரம்பித்தது.
“எப்பவும் தோப்புப் பக்கம் சூரியன் உதிக்கைல வந்திடுவாளே…இன்னைக்கு என்ன ஆச்சு?” – கேட்டுக் கொண்டே வாசலுக்கும் உள்ளுக்குமாக இருப்புக் கொள்ளாமல் அல்லாடினாள் ராமுத்தாயி.
“எதுக்குப் பதறுற? எல்லாம் வந்திடுவா…பேசாம உன் வேலையைப் பாரு…” என்றவாறே எழுந்தான் மாரி. ; அவனுக்கும் மனசுக்குள் ஒரு உதறலதான்.; ஊரெல்லாம் பேச்சுத்தான். வேலைக்கு அழைத்துச் செல்லும் பெண்களை அத்தனை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்கிறார்கள் என்று. சரியாக வேலைத் தளத்தில் கொண்டு இறக்கி விடுவது, முடிந்ததும் சாயங்காலம் அத்தனை பேரையும் ஏற்றித் தங்குமிடத்தில் கொண்டு பாதுகாப்பாய்ச் சேர்ப்பிப்பது. பிறகு யாரும் எங்கேயும் போக முடியாது.
“எங்கே போக? சக்கையாப் பிழிஞ்சுதான அனுப்புறாங்க… வந்தமா, சாப்டமா, விழுந்தமான்னுதான இருக்கு? பொணங்கணக்கா…”
“அது கெடக்கட்டும்டி…பாதுகாப்பா இருக்கீகள்ல? அதுதான முக்கியம்? பொம்பளைங்க மொத்தமும் கூட்டமா ஒரு எடத்துல இருக்கிறது ஒருத்தருக்கொருத்தர் ஆதரவுதான? அதுல கவனமா இருக்காங்கள்ல…அப்டி உறுதிமொழி கொடுத்துத்தானடி உங்களயெல்லாம் பிடிச்சிக்கிட்டுப் போனாங்க வேலைக்கு…அப்பக்கூட எத்தன பேரு மாட்டேன்னாக? தைரியமா அனுப்பிச்சது நானும் முக்கு வீட்டு ஆயாவும்தானடி…நீங்க ஒழுங்கா வேலைக்குப் போயிட்டு வர்றதப் பார்த்துப்பிட்டு பெறவு எத்தன பேரு சேர்த்து விட்டாக…? பொம்பளைங்கள சாக்கிரதயாப் பார்த்துக்கிறாகள்ள? அந்த மட்டுக்கும் அவுகளுக்கு ஒரு கும்பிடு போடணுமாக்கும்…”
அதே மில்லில்தான் மாரியும் வேலை பார்க்கிறான். அவன் அறிவான் அங்கே என்ன பிரச்னை என்று. ஆட்கள் ஓய்வு பெறப் பெறப் புதிதாக ஆட்களைச் சேர்ப்பது என்பதே கிடையாது என்று இருந்தது.காலி எண்ணிக்கை காலிதான். அதிலும் குறிப்பாக ஆண்களை வேலைக்கெடுப்பது என்பது அங்கே அறவே நின்று போயிருந்தது.
வேலைப் பளு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. எந்தப் போராட்டமும், எந்தக் கோரிக்கைகளும் அங்கே எடுபடவில்லை. மீறினால் வேலையிழப்புதான்.. அதுவே மாரிச்சாமியைப் பல சமயங்களில் எரிச்சல் படுத்தியிருக்கிறது. இதென்ன? தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்று எதற்குமே செவி சாய்க்காமல்? நிர்வாகம் அவர்கள் இஷ்டத்திற்கு எதையோ பண்ணிக் கொண்டிருக்கிறது. செக்கு மாடு போல் எல்லோரும் அமைதியாக வேலைக்குப் போவதும் வருவதுமாகவே இருக்கிறார்களே? இதற்கு ஒரு முடிவேயில்லையா? இதென்ன அடிமை வாழ்க்கை? சோற்றுக்காக இப்படி அடிமைப்பட்டுக் கிடக்க முடியுமா? அவன் அப்பாவின் வேகம் அவனிடம் இல்லாமல் இல்லை. ஆனால் அவன் சர்வீசுக்குப் புதுசு. அதுதான் அவனை யோசிக்க வைத்தது. பதினைந்து, இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் என்று பழம் தின்று கொட்டை போட்டவர்கள் எல்லாம் இருந்தார்கள்.
“துள்ளாதரா கன்னுக்குட்டியாட்டம்…நாங்கள்லாம் பார்த்துக்கிட்டுத்தான இருக்கோம்…பொறு…ஏதாச்சும் செய்வோம்…” – சொல்லிச் சொல்லி அவனை அடக்கித்தான் வைத்தார்கள்.
அப்பா காலத்தில் எத்தனையோ போராட்டங்களைக் கண்ணாரக் கண்டவன் அவன். எல்லாவற்றிற்கும் தைரியமாக முன்னிற்பவர் அவர். எத்தனை முறை கைதாகியிருக்கிறார்? எத்தனை முறை தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்? எத்தனை முறை சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்? அப்பா சந்தித்த போராட்டங்கள் எத்தனையோ? அதுவல்லவா கௌரவமான வாழ்க்கை? அப்பா மேல் எவ்வளவு மரியாதை இருந்தது. எத்தனை பேர் அப்பாவைத் தேடித் தேடி வருவார்கள்? ராவென்றும், பகலென்றும் பாராமல், லீவு நாள் என்றும் பாராமல் அப்பா எவ்வளவு அலைந்திருக்கிறார்? எத்தனையோ நாட்கள் எங்கு போனார்? என்ன ஆனார்? என்று கூடத் தெரியாதே? அம்மா கிடந்து உருண்டு புரண்ட கதைகளெல்லாம் எத்தனை?
“இம்புட்டு நேரம் கழிச்சு ராத்திரி பன்னெண்டுக்கும் ரெண்டுக்கும் வர்றீகளே…சாப்டீகளா?”
“ஆமா…காலைல அஞ்சு மணிக்குக் கேளு சாப்டீகளான்னு…போடீ…போடீ…போய்த் தூங்கு…போ…”
பொழுது விடிந்து அம்மா கண்விழிக்கு முன்னே அப்பா கிளம்பிப் போயிருப்பார். தலைமறைவாய்க் கூட அங்கங்கே இருந்ததாய்ச் சொல்வார்கள். எங்கே, எதற்கு என்றெல்லாம் கேட்கத் தோன்றாத இளம் பிராயம் அது.
“உங்களுக்கு உங்க வீட்டப்பத்தி நெனப்பே கிடையாது. இங்க மூணு உசிரு உங்கள நம்பிக் கெடக்குதுன்னு என்னைக்காச்சும் நெனச்சிருக்கீகளா? நீங்க பாட்டுக்குப் போறீக, வர்றீக..எதுக்கு வர்றீக…எங்க போறீகன்னு என்னிக்காச்சும் வாய்விட்டுப் பொறுப்பா சொல்லியிருக்கீகளா? உங்களுக்கு உங்க தலைவரு, சங்கம், தொழிலாளிக….அவுக பிரச்ன…இதுதான்….எல்லாம் என் தலையெழுத்து…ஊர் பிரச்னயெல்லாத்தையும் தலை நிறைய வழிய விட்டுக்கிட்டு அலையுறீக…சொந்த வீட்டுல என்னான்னு கூடக் கேட்கமாட்டேங்கிறீங்க….”
எதற்கும் பதில் சொல்ல மாட்டார் அப்பா. மௌனம்தான் அவர் பதில். அந்த நேரத்தில் எந்தத் தோழரின் பிரச்னையையாவது மனதில் நினைத்து உருட்டிக் கொண்டிருப்பார். ஒரு நாள் லீவு, அரை நாள் லீவு என்று கூட வரும் புகார்களுக்கெல்லாம் அப்பாதான் போய் நிற்பார். அவர் மூலமாகத்தான் அவர்களுக்கு அதுகூடக் கிடைக்கும்.
அம்மா இப்படிச் சொன்னாளே தவிர அந்தத் தலைவர்களில் ஒரு சிலர் சமயங்களில் வீட்டுக்கு வந்திருந்தபோது விழுந்து விழுந்து உபசாரம் செய்தவள் அவள்.
“எப்டிப் பேசுறாக விபரமா? அந்த ஐயாவுக்கு காலு ஏன் அப்படி இருக்கு? சிறு பிராயத்துல ஏற்பட்டதோ? காலு ஊனமா இருந்தா என்ன? மனசு ஊனமில்லாம இருந்தாச் சரி…அதுதான் அவுகள ஊரே கொண்டாடுதே…”
அம்மாவின் பணிவிடைகள் அப்பாவை நெகிழ்ச்சியுறச் செய்த காலங்கள் அவை.
அப்படியே கொத்துக் கொத்தாக அத்தனை பெண்டுகளையும் பிடித்துக் கொண்டு போய்விட்டார்களே? வாரத்தின் முதல் நாள் வந்து அள்ளிக் கொண்டு போனால்; பின் ஊரில் வெறும் கிழடு கட்டைகளாகத்தானே அலைகிறது? இப்படி வலை போட்டு ஊரைக் காலி பண்ணுவார்கள் என்று யாரும் நினைக்கவேயில்லை.
பெண்களை வைத்துத்தான் இன்று மில்களில் வேலை நடக்கிறது. இதை வெளிப்படையாகச் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
“இன்னும் கொஞ்ச நாள்ல பார்றீ….ஒத்த ஆம்பள கூட இருக்க மாட்டான் பாரு….கையக் கட்டு…வாயைப் பொத்து…ன்னு அம்புட்டுப் பிள்ளைங்களையும் வச்சு வேலைய வாங்கிட்டு விட்ருவாங்ஞ…எல்;லாம் எங்கப்பன் காலத்தோட போச்சு மாப்ள…ஆம்புள ஆம்பிளயாத் திரிஞ்ச காலம் அது….இன்னைக்கு? சேலை கட்டின பொம்பளைங்களையே வச்சிக்கிடுவோம்னு செய்துக்கிட்டு இருக்கானுக…இதெல்லாம் எங்க போயி நிக்கப் போகுதோ?” – நினைக்க நினைக்க வயிறெறிந்ததுதான் மிச்சம்.
காலம் எப்படி மாறிப் போய்விட்டது? ஆனாலும் பிரச்னைகள் என்று வந்தால் இன்றும் மீதமிருக்கும் ஆண் பணியாளர்கள்தான் முன்னே நிற்கிறார்கள். ஏதாவது முடிவு கண்டு விடுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அந்தச் சமாதானத்தில்தான் இன்றும் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறான் மாரிச்சாமியும். அப்பாவின் பங்கில் பாதியாவது தன்னிடம் இருக்க வேண்டாமா? என்று எல்லாவற்றிலும் பங்கேற்றுக் கொண்டுதான் சமாதானமடைகிறான்.
“என்னாடா இன்னைக்கு இன்னும் வண்டி வரல்ல…? இந்நேரம் கொண்டாந்து எறக்கி விட்ருக்குமே?”
அம்மா கொடுத்த டீத்தண்ணியை சூடு பத்தவில்லையென்று மனசில்லாமலேயே உறிஞ்சிக் கொண்டிருந்த மாரிச்சாமிக்கு அவளின் கேள்வி திடீரென்று ஒரு கலக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்தது.
மடக்கென்று மொத்தத்தையும் ஒரே வாயில் ஊற்றியவன், “இந்த வர்றேம்மா…” என்றுவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு விருட்டென்று வெளியேறினான்.
மெயின்ரோடில் மில் பஸ்ஸை எதிர் நோக்கிப் பலரும் நின்று கொண்டிருப்பார்கள். அங்கு சென்று ஏதாச்சும் விபரமுண்டா என்று கேட்கலாம். இதை நினைத்தானே தவிர அவன் கால்களும், உடம்பும் என்னவோ அவனையறியாமல் ஒரு பதட்டம் கொள்ள வேகமெடுத்து ஓட ஓரம்பித்தான்.
போன வாரம் சற்று முன்னதாக ஒரு புலர் காலையில் இதே மாதிரி தங்கச்சியை எதிர்நோக்கிப் போய் அழைத்து வந்தபோது, “அண்ணே எனக்குப் பயமா இருக்குண்ணே, நா இனிமே வேலைக்குப் போகலண்ணே…”என்று தமிழரசி திடீரென்று குரலெடுத்து அழுததும்;, ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல…அண்ணன் இருக்கேன்ல..’.என்று தான் சமாதானம் கூறி, அம்மாவுக்கு அது சொல்லப்படாமல் விட்டதும், அதற்கு மறுநாள் மில் முதலாளியின் உறவினர் என்று சொல்லிக் கொண்டு திரிந்த அந்த சூப்பர்வைசரின் நடத்தை பற்றிய ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதும், அவன்தான் தங்கச்சியும் மற்ற எல்லாப் பெண்களும் தங்கியிருக்கும் இடத்தின் கேர் டேக்கர் என்றும் கேள்விப்பட்டிருந்ததும், எல்லாமாகச் சேர்ந்து கொண்டு அவனை விரட்டியடிக்க…மெயின்ரோட்டினை எட்டிய அவனை அந்தப் பஸ்ஸிலிருந்து இறங்கிய மொத்தப் பெண்கள்கூட்டமும் எதிர் கொள்ள, அவர்களுக்கு நடுவில் தன் அன்புத் தங்கச்சி தமிழரசி இல்லாதது அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *