ஜிம்மி பேசறேன்…

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 4,079 
 
 


வணக்கங்க, நான் தான் ஜிம்மி பேசறேன். நீங்கள்லாம் உங்க அனுபவங்களை சொல்லும்போது, நான் மட்டும் சொல்லகூடாதா? அதான் என்னோட வாழ்கையில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்க போறேன். அதுக்கு முன்னே நான் பார்க்க எப்படி இருப்பேன்னு சொல்லிடறேன், தேன் நிறத்துல புசுபுசுன்னு பார்க்க அழகா இருப்பேன். காதுகள் இலேசா கறுப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். நிறைய அன்பு அப்புறம் கொஞ்சம் சாப்பாடு அவ்ளோ தாங்க என் தேவை. பல சமயம் எனக்கு தேவையானது கிடைச்சதுல்லை ஆனாலும் எப்பயும் சந்தோஷமா இருப்பேன். இப்போ என் கதைக்கு வருவோம்.

நான் பொறந்தவுடனே எங்க அம்மா என்னை விட்டுட்டு எங்கேயோ போய்ட்டாங்க, பச்சை குழந்தையா இருந்த என்னை மெர்ஸி ஆன்ட்டிதான் தூக்கி வளர்த்தாங்க. அவங்க பெயருக்கேத்த மாதிரியே கருனையோட இருப்பாங்க. தினமும் எனக்கு முட்டை தருவாங்க.

ஞாயிரு ஆனா, மீன், ஆடு, கோழின்னு ஜமாய்ச்சுடுவாங்க. நான்தான் அவங்களோட இளவரசி.. அதாங்க லிட்டில் பிரின்ஸஸ்.. விக்டர் அங்கிள், மெர்ஸி ஆன்ட்டியோட வீட்டுகாரரு, ரொம்ப நல்லவரு. என்னை குட்டி-ன்னு தான் கூப்பிடுவாரு.

காலைல அவருக்கு பேப்பர் வாசல்லேருந்து எடுத்துட்டு வந்து குடுப்பேன், அவரு என்னை தடவி குடுத்து பிஸ்கெட் போடுவாரு. அப்புறம் ஆன்ட்டி மார்க்கெட் போவாங்க, விடுவேனா, துரத்திட்டே போயிருவேன், அப்பதானே எனக்கும் நிறைய சாப்பிட வாங்கி தருவாங்க. பாவம் அவங்களுக்கு குழந்தை இல்லை, என்னை தான் அவங்க குழந்தை போல் பார்த்துகிட்டாங்க. நான் கொஞ்சம் சோர்ந்து போனாலும் ரெண்டுபேரும் தவிச்சு போய்டுவாங்க.

அப்படி, தாயா பிள்ளையா பழகின நாங்க பிரியற சந்தர்ப்பம் வந்தப்போ, ஆன்ட்டி ரொம்ப அழுதாங்க. அங்கிளும் கலங்கிட்டாரு, எனக்கும் வருத்தம் தான், ஆனா என்னை அப்படி பார்க்க அவங்களுக்கு பிடிக்காது அதான் என் சோகத்த காட்டிக்கல. அவருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சு மும்பை போகவேண்டிய கட்டாயம், என்னை அனாதையா ரோடுல விடாம, ராமு ஆசைப்பட்டான்னு என்னை அவங்கிட்ட பத்திரம்மா பாத்துக்க சொல்லி குடுத்துட்டு போனாங்க.

ராமுவோட அப்பா கிட்டு மாமா ரொம்ப கண்டிப்பானவர். கலா மாமி ரொம்ப அன்பானவங்க. ராமு எப்ப பார்த்தாலும் என் கூட தான் விளையாடுவான், அவங்க பொண்ணு கோகிலா, ரொம்ப அழகா இருப்பாங்க, கல்யாணம் ஆகி ஊருக்கு போய்ட்டாங்க. மெர்ஸி ஆன்ட்டி வீட்ல இருந்த சந்தோஷம் இங்க இல்லை, ஆனால் நிம்மதியா இருந்தேன். வெறும் பால், தயிர்சாதம் தான், கொஞ்சம் இளைச்சுட்டேன், பரவாயில்லை தயிர்சாதமும் சூப்பரா இருந்துச்சு. ஒரு நாள் கிட்டு மாமா அவசரமாக எங்கேயோ போயிட்டு இருந்தாரு, நான் குறுக்க ஓடி வந்துட்டேன், அவ்வளவு தான் மாமா ருத்ரதாண்டவம் ஆடிட்டாரு. இந்த சனியனை எங்கிருந்து கொண்டு வந்தீங்க? இதை முதல்ல ஒழிச்சுகட்டனும், என்று கத்தினார். மாமிதான் என் வாடிய முகத்தை பார்த்து தடவி கொடுத்தாங்க.

ராமுவை ஒரு நல்ல பள்ளிக்கூடம் சேர்க்கனும்னு யாரோ சொந்தகாரங்க வீட்டுல விட்டுட்டாங்க. அவ்ளோதான் என் கதை அம்பேல். மாமி, எவ்வளவோ சொல்லியும், மாமா என்னை கொண்டுபோய் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல விட்டுட்டாரு. என்ன ஒரு வில்லதனம், சாப்பாடு தண்ணி இல்லாம இரண்டு நாள் அலைஞ்சேன், அப்புறம் ஒரு குப்பத்துக்குள்ள போனேன்.

அங்க முனியம்மா வீட்டுகிட்ட போய் நின்னேன். சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க, எனக்கும் கொஞ்சம் சாப்பாடு போட்டாங்க. அப்படியே அங்கேயே தங்கிட்டேன். முனியம்மாக்கு இரண்டு பசங்க, அவங்களை நன்றாக படிக்க வைக்கனும்னு அவளுக்கு ஆசை, ஆனா அவ புருஷன் தண்ணி அடிச்சே எல்லாத்தையும் அழிச்சான். தினம் அடி, உதை, சித்தரவதைதான். ஏதாவது உதாரணம் சொல்லனும்னா நாய் பொழப்புனு சொல்வாங்க, இந்த மாதிரி சில மனுஷங்க பொழப்புக்கு நாய் பொழப்பு எவ்வளவோ தேவலாம்.

இப்படியே போச்சு காலம், எனக்கு அஞ்சு குட்டிங்க பொறந்துச்சு, அவ்வளவும் அப்படி ஒரு அழகு, என்னை மாதிரியே.. சில பேர் என் குட்டிகளை விலைக்கு கேட்டாங்க, முனியம்மா தயங்கிட்டே குடுத்துட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமாப்போச்சு. நாயானாலும் பேயானாலும் தாய்,தாய்தானே! கொஞ்ச நாள் அதுங்க நினைப்பாவே இருந்துச்சு, சரி, குழந்தைங்க படிப்பு செலவுக்கு ஆகுமேன்னு மனச தேத்திகிட்டேன்.

ஒருநாள், முனியம்மா புருஷன் அவ கூட சண்டை போட்டுட்டு இருந்தான். எங்கயாவது யாருக்காவது ஒரு பிரச்சினை வந்தா தட்டி கேக்கனும், நம்மால் முடிஞ்ச வரை உதவி செய்யனும், அதவிட்டு சில மனிஷங்க போல வீடியோ எடுத்து நாலு பேருக்கு அனுப்பி மேலும் அவங்கள சங்கட படுத்தறது, என்ன நியாயம்? அத விடுங்க, நான் சொன்னா யாரு கேப்பாங்க.. முனியம்மா அடி வாங்கறத பார்க்க முடியாம, அவ புருஷன பாத்து குலைச்சேன், அவனுக்கு வந்துச்சே ஒரு கோவம், எல்லா பலத்தையும் கூட்டி ஒரு உதை விட்டான், நான் நாலு வீடு தள்ளி போய் விழுந்தேன்.

எனக்கு இப்போ யாருமே இல்லை, யாராவது என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா? என்னோட அடையாளம் தெரியுமில்லையா? தேன் நிறத்துல புசுபுசுன்னு, காதுகிட்ட லேசா கறுப்பா, பார்க்க அழகா இருப்பேன். ‘ஜிம்மி’ன்னு கூப்பிட்டா வாலாட்டுவேன்…

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஜிம்மி பேசறேன்…

  1. அருமையான கதை,ஜிம்மி நேரில் நம்மிடம் பேசுவது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.இயல்பான சரளமான நடை.வாழ்த்துகள்.மேலும் நிறைய படைப்புகளை எதிர்பார்க்கிறேன்

  2. கிரேஸி என்றொருவளைப் பற்றி இதே போல் தோனியில் கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் அப்படி எழுதியிருந்தால் கூட இப்படி சிறப்பாக வந்திருக்குமா என்பது சந்தேகமே.. அருமை தோழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *