கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 6,068 
 
 

(1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணி நாலரையாகி விட்டது. வாசலைப் பார்த்தபடியே நின்ற ஜானகி அப்போது தான் தனக்குப் பின்னால் வந்து தன் தோள்களில் கை வைத்த ஜெயலட்சுமியை நோக்கி முகமசைத்துப் புன்னகை செய்தாள். ஜெயலட்சுமிக்கும் ஜானகியைப் போலத்தான் மூன்று மணியோடு ஆஸ்பத்திரியில் வேலை முடிந்து வீட்டது.

“இன்னும் அம்மா வீட்டிலிருந்து வரலில்லையே?”

ஜெயலட்சுமியின் கேள்விக்கு இல்லையென்று தலையசைத்துப் பதிலளித்தாள் ஜானகி.

“பஸ் பிந்தியிருக்கலாம். கொஞ்ச நேரத்திலை வந்திடுவா…”

ஜானகியின் நெஞ்சிற்கு அவளின் சொற்கள் ஆறுதலாயின . ஜானகி தாதிகள் பயிற்சி நிலையத்திற்கு மாணவத் தாதியாக வந்து ஏழு மாதங்களாகி விட்டன. இதுவரை ஒரு முறையாகிலும் அவளுடைய தாயார் கௌரி அம்மாள் நாலுமணிக்கு பிந்தி வந்ததில்லை இன்றும் மூன்று மணிக்கு வருவதாகக் கடிதம் எழுதியிருந்தவள் – இப்போது நேரம் ஜானகி கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் மணி நாலு நாற்பது.

“ஜெயா சொல்லுவது போலை தான் இருக்கவேணும். பஸ்சைத்தான் விட்டிருப்பா வீட்டிலும் அலுவலுகள் இருந்திருக்கும். பாவம் அவவும் தனியாள் தான்” தன்னுடைய மனதை ஆறுதல் படுத்த ஜானகி முயல்கிறாள், இப்போது தாதிகள் பயிற்சி நிலைய முன் முகப்பிலே பல மாணவிகள் உறவினருடன் கதைத்துக் கொண்டு நிற்கின்றனர். அவர்கள் நிற்குமிடமெல்லாம் சிரிப்பும் களிப்புமாய் ஆனந்தமே சூழ்ந்திருக்கிறது.

ஜானகி தனியளாய் வாசலிலேயே தாயார் கௌரியம்மாள் வரு வாளென்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டு நிற்கின்றாள்.

சிவசுப்பிரமணிய சர்மாவின் இரண்டு பிள்ளைகளில் இளையவள் ஜானகி. மூத்தவன் சுந்தரேசன். சுந்தரேசசர்மா பதுளை சித்தி விநாயகர் கோவிலில் பூசகராயிருக்கிறார், அவரை ஊர்க்கோயிலிலேயே பூசகராக இருக்கும்படி ஊர்மக்கள் வேண்டியதற்கு இணங்கி அவர் பூசகவேலை செய்து இரண்டு மாதங்கள் கழிய முன்னர் அங்கே இருக்க விரும்பாமல் பதுளைக் குப் போய்விட்டார். மிகக் குறைந்த சம்பளத்தினால் அவர் அதிருப்பட்டி ருந்தாரென்பதை கோயில் நிர்வாகிகள் அறிந்திருந்த போதிலும் அதில் எவ்வித மாற்றமும் செய்யும் நிலைமையிலே அவர்கள் இருக்கவில்லை. சிவசுப்பிரமணிய சர்மா தன் காலத்தில் ஊரின் கிருத்தியங்கள் எல்லாவற்றி லும் கலந்து கொள்வதற்கும் அதிக வருவாய் பெறுவதற்கும் அவரின் கம்பீரமான தோற்றமும், வயது முதிர்ச்சியும் பிரதான காரணங்களாயிருந்தன. சுந்தரேசசர்மா இருபத்திநாலு வயதேயான மெலிந்த இளைஞன்.

சிவசுப்பிரமணியசர்மா மூன்று ஆண்டுகளுக்கு முன் திடீரென்று இறந்து போனார். இப்போது தகப்பனாரை நினைக்கையில் ஜானகிக்கு நெஞ்சைப் பிளந்து கொண்டு அழுகை வந்தது. இன்னும் அவர் உயிருடனேயே இருப்பது போல ஜானகியின் நெஞ்சிற்குள் பிரமை. ‘ஜானகீ’ என்ற அந்த ஆதரவான அழைப்பிற்குள் உள்ள வாஞ்சை இன்றும் அயலில் கேட்பது போல இருக்கின்றது. பொழுது விடியும்போது அவரின் வெண்கலக்குரல் தான், பூபாள முணுமுணுப்பே ஜானகியை நித்திரையினின்று மெதுவாகத் தொட்டு எழுப்பும். அவர் சொல்வன ஏதோ சமஸ்கிருத சுலோகங்கள் தான். ஆனால் அந்தக் குரல் அதற்குக் கொடுத்த இனிமையும், வலிவும் அதுவே மனதினை உருக்கி எங்கும் நாதமாய் இழையும்.

தன்னுடைய பரந்த தோளில் ஓடும் பூணூலைப் புனிதமான பக்கு வத்தோடு தொட்டுக்கொண்டே அவர் அடிக்கடி அடங்கிய குரலிற் கூறுவார்.

“நாங்கள் எப்போதும் உயர்ந்தவர்கள். பிராமண சம்பிரதாயங்கள் இறைவனை அவர்களுக்கு வெகு அண்மையில் வைத்திருக்கின்றன…”

அவள், காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வீட்டு வாசலிலே கோலமிட்டு நிமிர்கையில் சிவசுப்பிரமணிய சர்மா அவளின் முகதரிசனங் கண்டு கோயிலுக்குப் புறப்படுவார். கோயிற் பூசகரான அவர் அந்த ஊரிலுள்ளவர்களின் ஏனைய சடங்காசாரங்களையும் செய்து வந்தமையால் மத்தியதர வாழ்க்கையினை வாழ்வதற்கு சந்தர்ப்பங்களிருந்தன. தனது பிள்ளைகளை ஆசாரசீலம் தவறாது தனது வழியிலேயே வளர்க்க வேண்டு மென்பதற்காக அவர் படாத கஷ்டங்கள் பட்டார். தன் பிள்ளைகளை மற்ற எல்லோரோடும் ஒன்றாக இருந்து படிக்க விடுவதற்குக்கூட அவர் மனம் விரும்பவேயில்லை. எனினும் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரான அவரது நண்பர் கனகசபாபதி அவருக்குக் கொடுத்த வாக்குறுதியினால் சுந்தரேசனும், ஜானகியும் கிராமப் பள்ளிக்கூடத்திற்குப் போக முடிந்தது. கிராமப் பள்ளிக்கூடத்திலே சுந்தரேசனுக்கும். ஜானகிக்கும் தனி வசதி கள் இருந்தன. அவர்களுக்கென்று தனி இருக்கை. நட்பற்ற தனி வாழ்க்கை.

படிக்கும்போது சுந்தரேசன் தான் வைத்திருந்த குடுமியினால் பட்ட கஷ்டம் சொல்லித்தீராது. வாத்தியார் இல்லாத நேரத்திலே, தனக்குப் பின்னாலிருந்து மாணவர்கள் “டே, டே குடும்பாஸ்” என்று அடித்தொண்டையிலே கேலி செய்வதைக்கூட சுந்தரேசன் கேட்டுவிட்டு வந்து தாயின் முன்னாலே விசும்பி விசும்பி அழுதானே தவிர சர்மாவிடம் ஒரு வார்த்தை தன்னும் சொன்னதேயில்லை. தனக்குத்தானே அப்படியொரு கட்டுப்பாட் டினைச் சுந்தரேசன் விதித்துக் கொண்டதற்கு, சர்மா அவனுக்குச் செய்த நித்திய உபதேசங்களே காரணம்.

சுந்தரேசனுக்கு விளையாட்டுத் தோழர்களில்லை. பஸ்ஸிலே என் று மே அவன் பிரயாணம் செய்ததில்லை. சினிமாப்படத்தைப் பற்றி அவ னுக்கு எதுவுமே தெரியாது. அவனைப்பற்றி ஊர் நினைக்கும் : ‘புராண காலத்து முனிவன் தான் இந்தப்பிள்ளையினுடைய உருவத்திலே பிறந்திருக்கிறான்!’

‘இந்தக் காலத்திலும் சுந்தரேசனைப் போலை ஆசாரசீலம் பார்க் கிறவை யார் இருக்கிறார்களென்று ஊர் சொல்லவேண்டும். ஜானகி பெரிய பக்தையாக, சங்கீத மணியாக வரவேண்டும். இவை தான் என் னுடைய ஆசைகள். பாவமும், நாசமும், நிறைந்த இந்த உலகத்திலை நான் இதற்காகத்தான் மாடுபோல உழைக்கிறேன்…”

இப்படி அவர் தம்முடைய மனைவி கௌரி அம்மாளுக்கு அடிக்கடி சொல்வார். கௌரி அம்மாள் தன்னுடைய பெரிய கண்களால் உணர்ச்சி வசப்பட்டிருக்கும் அவரையே பார்த்தபடி இருப்பாள். இப்படி அவர் சொல் கையில் அவரின் ஆழ்ந்த கண்களில் இனம் புரியாத பரவசம் பொங்கிப் பூத்திருக்கும். அப்படியே, அந்தச் சொற்களையே வடிவமாய், காட்சியாய் காணும் பாவனையில் அவர் முகத்திலே, மலர்ச்சி எல்லை மீறிய நம்பிக்கை யோடு பிரகாசிக்கும்.

அவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் என்ன, ஜானகிக்கு அவை என்றுமே நினைக்க அலுக்காத நிகழ்ச்சிகள் தான். தாதி மார் பயிற்சி நிலையத்திற்கு வந்து சேர்ந்த முதலிரு மாதங்களும் அவள் எல்லையில்லாத மனவேதனைப்பட்டாள். எந்த நிமிஷமும் தகப்பனின் எண் ணந்தான். அவருடைய கனவுகளையும் ஆசைகளையும் தான் பொடிப்பொடி யாக நொருக்கி எறிந்துவிட்டேனே என்ற குற்ற உணர்வோடு அவள் மனம் நைந்தாள். தன்னாலே தகப்பனின் ஆத்மா சாந்தியற்று உலாவும் என்று அவள் தன்னுள்ளேயே கலங்கினாள். நடு இரவினில் திடீரென்று திடுக்கிட்டெழுந்து கட்டிலில் இருந்து மௌனமாய் அழுது , அதுவே தாங் காத வேதனையின் விசும்பலாய், விக்கலாய் வருகையில் அதை அவள் பிர யத்தனப்பட்டு அடக்கும்போது அவளின் அறைத்தோழி செல்வராணி எழுந்து கூறுகின்ற ஆறுதல் மொழிகள் தான் அவளிற்கு குளிர் தரு நிழலா யிருந்தன.

”வாழ்ந்த வாழ்க்கையையே நினைவில் பதித்துக்கொண்டு வாழ்வதிலை என்ன பிரயோசனம்? காலத்துக்கு சரிவராத சம்பிறதாயங்களைக் கட்டிக் கொண்டு வாழ விரும்பினால் காட்டுக்குள்ளை போய்விட்டால் நல்லது…”

இதை ஜானகிக்கு செல்வராணி அடிக்கடி சொல்வாள். செல்வ ராணி கதைப்பது குறைவு. அதிகமான நேரம் அவள் புத்தகங்களைப் படித் துக்கொண்டிருப்பாள். கதைக்க ஆரம்பித்துவிட்டாலோ அவளின் ஆழ்ந்த இதயமும், அறிவின் தெளிவும் எவரையும் அவள் மீது மதிப்புவைக்கச் செய்துவிடும்: மெல்லிய அவளின் உருவமே மறைத்துபோய் எதற்கும் கலங்காத சித்தமுடைய யுவதி ஒருத்தி தோன்றி நிற்கிறாள் என்று நினைக்க வைக்கும்.

ஜானகியைக் கௌரி அம்மாள் கூட்டிக்கொண்டு தாதிகள் பயிற்சி நிலையத்திற்கு வந்தபோது அவர்களுக்குப் பக்கத்தில் செல்வராணியும் நின்றாள். அந்தநேரத்தில் அவர்கள் நிற்கும் பக்கமாக வந்த சிஸ்ரர் அரிய மலர், கௌரி அம்மாளைப் பார்த்து இரண்டுபேரும் உங்களுடைய பிள்ளை களா?” என்று கேட்டாள். கௌரி அம்மாளின் முழுச்சாயலும் செல்வ ராணியில் அப்படியே இருந்தது; ஜானகியின் தமக்கை போலிருந்தாள். கௌரியின் முகத்திற்கே பொலிவு தருவது அவளின் கண்கள். அந்தக் கண்க ளோடு மூக்குத்தியின் மின்னல் பிரகாசிக்கும். செல்வராணி மூக்குக்குத் தாதவள். சினேகிதிகளான ஜானகியையும் செல்வராணியையும் விடுதியிலே எப்போதும் இணைபிரியாது காணலாம் என்று எல்லா மாணவிகளுமே சொல்லிக்கொள்வார்கள்.

ஏதோ நினைவில் ஜானகி தன்னுடைய மூக்கைத் தடவிப் பார்க் தாள். பேஸரி அணிந்து, இப்போது சிறிது தூர்ந்து போய்விட்ட மூக்குத் குத்திய துவாரம் விரலில் நெருடிற்று. தாதிமார் பயிற்சி நிலையத்திற்கு வரும்போது பேஸரியை அடைவு வைத்துவிட்டுத்தான் வரமுடிந்தது. அடைவு மீட்க இந்த மாதந்தான் வழி பிறந்திருக்கிறது. கௌரி அம் மாள் இன்றைக்கு வரும்போது அந்தப் பேஸரியைக் கொண்டு வருவாள்.

மீண்டும் ஜானகி வெளியே வந்து பார்த்தாள். தாயைக் காண வில்லை. ஏழு மணிக்கு வேலை முடிந்து வந்த செல்வராணிக்கு ஜானகியின் முகத்தைப் பார்த்தவுடன் அவளின் தாய் வரவில்லை என்பது தெரிந்து விட்டது.

”செல்வா , என்னவோ தெரியேல்லை. எனக்கு ஒரே பயமாகத்தான் இருக்குது. அம்மா இண்டைக்கு வாறனெண்டு எழுதினவ. பிறகு ஏன் வராமல் விட்டவ எண்டு எனக்குத் தெரியேல்லை….”

”சிலவேளை பஸ்சை விட்டிருப்பா…” செல்வராணி ஆறுதல் சொன்னாள்.

‘கீரிமலையிலிருந்து அரை மணித்தியாலத்துக்கொரு பஸ் இருக்கு’

செல்வராணி மீண்டும் மௌனமானாள். ஜானகியின் கண்கள் கலங்கி யிருந்தன. சிறிது நேரத்தின் பின் ஜானகியே கதைத்தாள்: ‘

”நான் நேர்சாக இஞ்சை வந்த விஷயம் அண்ணணுக்குத் தெரி யாது. அப்பாவின்ரை அந்திரட்டிக்கு வந்தவர் பிறகு வீட்டுக்கு வரேல்லை. என்ரை அயலிலை உள்ளவைக்கு என்னைப் பிடிச்சுத் தின்னாத கோவம்… நான் நேர்சானதாலை எங்கடை சாதி போட்டு தாம், சம்பிரதாயங்கள் போட்டு தாம்…”

ஜானகி துயரோடு பேசாதிருந்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள் :

செல்வா, நான் இங்கை வந்ததற்குப் பிறகு இரண்டு தரந்தான் வீட்டிற்குப் போனனான். அம்மா அங்கை கூனிக்குறுகிக்கொண்டு சீவிக்கிறா. எல்லாரையும் விடப் பெரிய சாதியாம் நாங்கள். ஆனால் இப்ப நான் எல்லாருக்கும் புண் கழுவிற வேலை செய்யிறனாம். இப்படி என்னாலை அம் மாவுக்கு ஊரிலை ஒரே வசை” ஜானகி மெல்ல விசும்பினாள். செல்வராணி அதே வேளையில் தன்னையும் நினைத்துக்கொண்டு மனதினுள்ளே சிரித்துக் கொண்டாள்.

ஜானகி நீர் அழாதேயும். ஊர் நூறு சொல்லும். பத்து வரு ஷத்துக்கு முந்தி முதல் முதல்லை கவுண் போட்டுக்கொண்டு கொன்வெள் ருக்கு எங்கடை அக்கா படிக்கப் போனதுக்காக எங்கடை குடும்பத்தை ஊர் முழுதுவே திட்டித் தீர்த்தது. இண்டைக்கோ எங்கடை ஊரிலே ஆறு குமருகள் சயிக்கிளிலை பள்ளிக்கூடத்துக்குப் போய் வருகுதுகள். யார் என்ன சொன்னாலும் காலம் மாறிக்கொண்டு வருகுது. நீ நேர்ஸ் வேலையை ஒரு தொழிலாக நினையாதை, தொண்டாக நினைச்சுக்கொள். அந்த உcter மைக்காக என்ன பேச்சு வாங்கினால்த்தான் என்ன?”

பேசாமலேயிருந்த ஜானகி ஏதோ நினைவில் கூறினாள் :

“நான் ஏன் பிராமணத்தியாய் பிறந்தேன்?”

அந்தச் சோகமான சூழ்நிலையிலும் தன்னை மீறிக்கொண்டு செல்ல ராணி கொல்லென்று சிரித்தாள். ஜானகியின் பெருமூச்சு அப்போது சீறியழிந்தது. அதன் சுவடுகள் மறையுமுன் வெளியிலிருந்து இரண்டு

மூன்று குரல்கள் திகைப்பில் நடுங்கிக் கேட்டன.

“ஜானகிக்கு தந்தி வந்திருக்குது!”

இரண்டு

வீட்டு வாசலை அடையும் வரை அந்தத் தந்தியிலிருந்த சொற்கள் பேரொலியாக ஜானகியின் மனதினுள் கூவிக்கொண்டிருந்தன. உள்ளும் புறமும் அந்தச் சொற்கள் அவளைக் கலக்கத்தில் சிலிர்க்க வைத்து, “தெய்வமே விபரீதமாக ஒன்றும் நடந்து விடக்கூடாது…. என்ற வேண்டு தலை பஸ்ஸில் வரும் போது வீதியோரமாயுள்ள கோயில்களைக் காணும் போதெல்லாம் வாயில் பிரார்த்தனையாய் வரச் செய்தது.

கைக்குள் மடித்து வைத்திருந்த தந்தியை மீண்டும் எடுத்துப் பார்த் தாள் ஜானகி — ‘ அம்மாவிற்குக் கடுமை. உடனே வரவும். சுந்தரேசு சர்மா’ தந்தி அவசரமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜானகி பஸ்ஸிலிருந்து இறங்கிப் படலையடிக்கு வந்தாள். இனந் தெரியாத கலவரத்தால் நெஞ்சு துடித்துக் கொண்டிருந்தது. மெல்லப் படலையைத் திறந்தாள். படலையைத் திறந்தவள் தலைவாசலைப் பார்த்த வுடன் திறந்த படலையை அப்படியே பிடித்தபடி நின்று விட்டாள்.

“ஜானகீ..”

கூப்பிட்டுக்கொண்டே கௌரியம்மாள் கனிவோடு படலையடிக்கு வந்தாள். கௌரியம்மாள் மூன்று நான்கு அடிகள் எடுத்து வைக்குமுன் உள்ளேயிருந்து சுந்தரேசனின் செருமல் கேட்டது. கௌரியம்மாள் சுந்த ரேசனை எரிப்பது போல நிற்க ஜானகி அவனைப் பார்க்காமலே தலை குனிந்தாள்.

“போய்க் குளிச்சிட்டு உள்ளை வாருங்கோ”

சுந்தரேசனின் குரலில் கேலியும் கண்டிப்பும் கலந்திருந்தன. ஜான இக்கு ஏதோ விபரீதம் நடக்கப்போகிறதென்பது விளங்கிவிட்டது.

ஜானகி கிணற்றில் குளிக்கும் வரை கௌரியம்மாள் ஒன்றும் பேசா மலே கிணற்றடியில் நின்றான். மகளை அவள் கவலையோடு பார்த்து நெடு மூச்செறிந்தாள். ‘மனம் தியங்கி அனுங்கிற்று.

‘ஜானகிக்கு இப்ப கலியாணம் ஆகவேண்டிய வயது. என்ரை தவம், குடும்பத்துக்காக இப்பிடியே தேய்ந்து கொண்டு போகுது. என்ரை தெய்வம் மேலையிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எப்பிடியெல் லாம் புலம்புறாரோ… அவரின்ரை ஆத்மாவே சாந்தியில்லாமல் துடிச்சுக் கொண்டிருக்குமோ?…”

கௌரியம்மாளின் கண்கள் கலங்கின, நெஞ்சைப் போல:

‘முந்தி இந்தப் பிஞ்சு முகத்திலையிருந்த சந்தோஷம் எங்கை? ஜானகி எண்டு கூப்பிட்ட உடனை என்ன மாதிரி என்ரைபிள்ளை துள்ளிக் குதிச்சுக்கொண்டு ஓடிவரும், இப்ப முருங்கக்காய் மாதிரி வத்தல் பத்தி வந்திருக்குது. ஊருக்குள்ளையும் நிம்மதியில்லை. இவ்வளவு நாளும் நாங்க பட்ட கஷ்டத்தைக் கேட்க ஆளில்லை. இப்ப இவன் வந்து சாதிபோட்டு தெண்டு சத்தம் வைக்கிறான்’

ஜானகி குளித்துத் துடைத்துவிட்டு திருநீற்றுக் குடுவைக்குள் திரு நீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு நிமிர்கையில் சிவசுப்பிரமணிய சர்மா படமாகி மேலே தெரிந்தார். செவ்வரத்தைப் பூச்சரம் அவரின் படத் திற்குச் சூட்டப்பட்டிருந்தது. ஜானகியின் கைகள் கூம்பி, கண்கள் பிரார்த் தனைக்காகக் குவிய ‘அப்பா’ என்ற தளதளத்த குரலில் வாய் முணு முணுத்தது.

”ஜானகீ…” சுந்தரேசனின் குரல் கர்ண கடூரமாக ஒலித்தது. ஜானகி கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்ப, கௌரியம்மாள் அவளின் பக்கத்திலே வந்து நின்றாள்.

சுந்தரேசன் இப்போது தலைகீழாக மாறியிருந்தான். தலையில் குடு மிக்குப் பதிலாக பாகவதர் குறோப், கிளீன் சேவ், முகத்திலே இரண் டொரு காயங்களின் வடு. முன்னையை விடு ஒரு சுற்றுப் பருத்திருந்தான்.

குரலிலேயும் கர்ண கடூரமிருந்தது.

”எனக்கு இண்டைக்கு ரெண்டத்தொரு முடிவுவேணும்!”

சுந்தரேசன் சினந்த குரலில் கடுகடுத்தான்.

‘ஜானசி… சாதிகுலம் என்ற சம்பிரதாயங்கள் சும்மா வரேல்லை. அவை தெய்வம் அருளியவை எண்டு அப்பா சொன்னது பொய்யில்லை. சம்பிரதாய விதிகளையும், வைதீக நெறிகளையும் நாங்க மறந்தாலும் நீங்க மறக்கப்படாது. அதுவும் நீ ஒரு நாளும் அதுகளை மீறி நடக்கப்படாது…”

கௌரியம்மாள் மகனை ஏளனம்மேவப் பார்த்தாள்.

‘இரண்டரை வருஷங்களாக வீட்டிற்கு ஒழுங்காகக் காசு அனுப் பாதவன் – இன்று சாதிசம்பிரதாயங்கள் போய்விட்டதென்று கொந்தளிக் கின்றான். ஜானகியும் கௌரியம்மாளும் சாப்பாட்டிற்கு வழியின்றி எத் தனையோ நாட்கள் பட்டினி கிடந்திருக்கின்றார்கள். பக்கத்து வீட்டுப் பூரணம் அவர்களின் நிலைமைக்கிரங்கி ஒரு கொத்தரிசி கொடுத்தபோது, அவ ளிடம் வாங்கினால் அது தங்கள் சாதிக்கு இழுக்கு என்ற பயத்தினால் நிரா கரித்திருக்கிறார்கள். பிறகு பசி தாங்கமுடியாத நிலைமையில் தாங்கள் பிராமண குலத்தில் பிறந்தமைக்காக தங்களையும், தங்கள் சம்பிரதாயங் களையும் நொந்து நொந்து அழுதார்களே…’

“சுந்தரேசா, நீ இப்ப என்ன கேக்கிறாய்?” கௌரியம்மாளின் கேள்விக்குத் தாமதமின்றிப் பதில் வந்தது. “ஜானகி இனிவேலைக்குப் போகப்படாது…”

ஜானகிக்கு நெஞ்சில் இடிவிழுந்தது. அவனின் மனக்கோட்டைகள் யாவுமே தரைமட்டமானாற்போல இதயத்துள் துக்கம் பரவிற்று. ஆனால் கௌரியம்மாளினது முகத்திலோ ஏளனம்.

“பிரபு கட்டளையிடுகிறார். ஜானகி நீ கேள் ..”

”அம்மா, நீ என்ன சொல்லுறாய்?” சுந்தரேசன் உறுமினான்.

”சுந்தரேசா, நீ எனக்குத் தெரியாமல் பொய்த்தந்தி அடிச்ச போதோ நான் உனக்கு மறுமொழி சொல்லியிருக்கவேணும். விட்டிட்டன் இப்பிடிச் சித்திரவதை செய்யத்தான் ஜானகியைக் கூப்பிட்டனியா? நீ பெரிய சாத்திரமெல்லாம் கதைக்கிறாய். மானம் போட்டுதென்று சத்தம் வைக்கிறாய். ஜானகி ஒற்றை உடுப்போடை வெளியிலை வெளிக்கிட முடி யாமை இருக்கேக்கை சீத்தைத் துணியிலை ஒரு யார் எண்டாலும் நீ எடுத்துக் கொடுத்திருக்கிறியா? ஓரு மூக்கு மின்னியை வாங்கு இந்தா தங்கச்சி போடு என்று சொல்லியிருக்கிறியா? அவர் போய் மூன்று வரு ஷங்களுக்கு மேலையாப் போச்சு….. அதுக்குப்பிறகு நீ எங்களுக்கு எவளவு காசனுப்பினாய்? மானத்தைப்பற்றிக் கதைக்கிற நீ எங்களுக்கும் வயிறிருக் குது எண்டதைப்பற்றி மட்டும் ஏன் யோசிக்கிறாயில்லை?”

கௌரியம் மாளின் குரல் கலங்கிற்று. முகத்தில் வைராக்கியம்.

“நீ இதுவரை அனுப்பின காசு எல்லாமாகச் சேர்த்து முன்பை ரூபாவும் வராது. இந்தக் காசிலை நாங்க சீவித்திருக்கேலுமே? சம்பிறதா யங்கள் பேச வயிறு விடுகுதில்லையே…. வயிறை நிரப்பிவிட்டு உல்லாசமாக இருக்கிறவைக்குத்தான் சம்பிறதாயங்கள் சரிவரும்…”

“ஊருக்குள்ளை வந்த உடனை சனங்கள் எல்லாம் என்னைப்பார்த் துச் சிரிக்குது . ”

சுந்தரேசனின் சொற்கள் கொதித்தன .

“ஊருக்குச் சிரிக்கத்தான் தெரியும்…. ஊர் சிரிக்கிறதுக்காக நாங்க நெடுக அழுது கொண்டிருக்கேலாது, ஜானகி தானாகப்போகேல்லை. நானா கத்தான் அனுப்பினனான்”

கௌரியம்மாளின் குரலில் பாதிக்கப்பட்ட வாழ்க்கையின் சீற்ற மிருந்தது.

“சுந்தரேசா நீ சொல்லிறமாதிரி ஜானகி நிக்கப்போறதில்லை…”

கௌரியம்மாள் நிதானமாகச் சொல்லிமுடிக்க, சுந்தரேசன் கைக ளைப் பிசைந்தபடி சண்டையில் தோற்ற நாயைப்போல அவர்களைப் பார்த் தான். நரும்பியபடி கூறினான்.

இண்டைக்குத்தான் நான் உங்களைக் கடைசியாகப் பார்க்கிறன். இனி நீங்கள் செத்திட்டீங்கள் எண்டு நான் நிம்மதியாயிருப்பன்”

சுந்தரேசனின் சொற்கள் ஜானகியின் மனதை வலிய கால்களாகி உதைத்தன. அவன் நிற்கவில்லை. தன்னுடைய சூட்கேசை எடுத்துக்கொண்டு உன் மத்தம் பிடித்தவன்போல வெளியே வேகமாகச் சென்றான்.

ஜானகி கூவினாள் : ” அண்ணா போகாதை நில்…” கௌரியம்மாள் திகைத்து வாயடைத்து நின்றாள். அவன் போயேவிட்டான்.

மூன்று

தாதிகள் பயிற்சிப்பாடசாலை உறக்கத்தில் கிடந்தது. ஜானகி கட் டிலில் இருந்தாள். வெளியேயிருந்து நிலவின் கதிர் கீற்றுக அறையுள் விழுந்தது. பாடசாலைக்கு முன் ஓங்கி வளர்ந்து நிற்கும் வாகைமரத்தில் காற்று மோதுண்டு ஒலி கிளம்பிற்று. எதிரே தெரியும் ஒற்றைத் தென்னை மரத்தின் பச்சையோலை களில் நிலவு வெளிச்சந்தடவி மண்ணில் வழிந் திருந்தது.

ஜானகி நடந்ததெல்லாவற்றையும் செல்வராணிக்குச் சொல்லி விட் டாள். இப்போதுமென்ன; ஜானகியின் இருளிலாழ்ந்த கண்கள் கலங்கியே கிடக்கின்றன.

”செல்வா, பெண்ணாய்ப் பிறக்கிறது பாவம். அதிலையும் என்னைப் போலை பிறக்கிறது கொடிய பாவம்…”

செல்வராணி தன்னுடைய சிறிய நெற்றியைத் துடைத்துக்கொண் டாள்.

“ஜானகி உலகத்திலை நீர் ஓராள்த்தான் இப்பிடி இருக்கிறதெண்டு யோசிக்கிறீர். உம்மை விட மோசமான நிலைமையிலை இங்கை ஏராளம் பேர் சீவிக்கினம். வறுமை, ஒடுக்கு முறைகள், சம்பிரதாயங்கள், சமூகத் தின்ரை அவச்சொல் – எல்லாத்தையும் தாங்கிக்கொண்டுதான் நாங்க வாழவேண்டியிருக்குது. நீர் எனக்கு உம்முடைய துயரங்களை யெல்லாம் சொல்லி அழுகிறீர். ஆனால் மற்றவையளுக்கு சொல்லாமலே இந்த அறை களுக்குள்ளையிருந்து எத்தினைபேர் அழுதிருப்பினை … அழுது கொண்டிருப் பினை … அதெல்லாம் ஆருக்குத் தெரியாமலே காற்றோடை கலந்து போயி ருக்கும் …. நாங்க பரமேசுவுக்குப் பஞ்சங்கொட்டியெண்டு பட்டப் பேர் வைச்சம். அதுக்காகச் சிரிக்கிறம். பரமேஸ் பாவம். ஏழு சகோதரிகள் அவளுக்குப் பின்னாலை இருக்குது. குடும்பத்துக்காகச் சீவிக்கிறாள். அவள் காசு மிச்சம் பிடிக்கேக்கை நாங்க பழிக்கிறம்…. ஆனால் நாங்க: நாங்கள் எங்களுக்குள்ளையே ஒருத்தியை ஒருத்தி ஏமாத்துறம், டிஸ்ரில் வாட்டரை மருந்து என்று சொல்லி ஊசி ஏற்றி நாங்கள் நோயாளியை மட்டும் நித்திரை கொள்ள வைக்கேல்லை. எங்களையும் அதுபோலை பொய்யாலை ஏமாற் றிக்கொண்டு நாங்களிருக்கிறம். நாங்கள் ஒவ்வொருத்தியும் பணக்காரி யெண்டும், நல்லசாதியெண்டும், ஏதோ தற்செயலாகத்தான் இங்கை வந்த மாதிரியும் பாவனை பண்ணிறம் …. பெண்பாவம் செய்தவள் எண்டு சொல் லிறது அறியாமை. அவளுக்குள்ள கஷ்டத்துக்குக் காரணம், அவள் மற் றப் பொருட்களைப்போல இண்டைக்கு ஒரு வியாபாரப் பொருளாயிருக் கிறதுதான்…”

செல்வராணி பெருமூச்செறிந்தாள்.

”ஜானகி என்னைப்பாரும். நான் இங்கை வரமுந்தி பள்ளிக்கூடத் திலை படிக்கிற போது ஒவ்வொரு நாளும் அழுதழுது என்ரை மனம் வாழ்ந் திருக்குது. அண்டைக்கு நீர் அழுதுகொண்டு ஏன் பிராமணத்தியாய்ப் பிறந்தனெண்டு புலம்பினது நினைவிருக்குதே? உம்மைப்போலை படிக்கிற போது, போடிங்கிலை இருக்கேக்கை நானும் புலம்பி அழுதிருக்கிறன் ”

”என்ன?” ஜானகியின் சோகக் குரலில் வினவுகின்ற அதிசயம்.

ஓம்… ஆனால் நான் ஏன் பறைச்சியாகய் பிறந்தேனென்று புலம்பி யிருக்கிறன்”

அந்த வினாடி அமைதி அங்கு வெளிச்சமாய் எரிந்தது. இருவருமே தத்தமது சிந்தனைக்குள் சுழன்றனர்.

‘ஜானகி உமக்கு இது அதிசயமாயிருக்கும், சமூகத்தின் அடித் தளத்திலை பறையர் குலத்திலை நான் பிறந்தன். ஆறாம் வகுப்பிலையிருந்து எஸ். எஸ். சி. வரை ஸ்கொலசிப்பிலை படிக்கேக்கை என்ரை சாதி தெரி யப்படாதே என்ற பயத்தோடையும் சஞ்சலத்தோடையுந்தான் நான் வாழ்ந்தேன். ஆமை ஓட்டுக்குள்ளை அடங்கிற மாதிரி நானும் புத்தகங் களையே தஞ்சமென்று அடங்கினன். ஜானகி, புத்தகங்கள் என்ற உலகத் துக்கை எனக்கு நல்ல விளக்கங்கள் கிடைத்தன. பிறகுதான் உலகத்திலை எனக்கு நம்பிக்கையே வந்தது. கொஞ்சப்பேரினுடைய நலத்திற்காகத் தான் சாதி, சமயம், சம்பிரதாயமெல்லாம் இருக்குதென்று என் மனம் உணர்ந்தது. இங்கை வரும்போது நான் புதுப்பிறவியாக வந்தன், எடியே , நீ நேர்சாகப் போறாய், உனக்குக் கலியாணமே நடக்காது எண்டு கூடப் பலர் சொல்லிச்சினை. இன்னுஞ் சிலர் நேர்ஸ் வேலையே ஆட்டக்காரியளுக் குத்தான் என்று சொல்லிச்சினை. முந்தி ஆரேனும் பிழை விட்டிருக்கலாம். ஆனால் எல்லாக் காலமும் இந்த நேர்ஸ்மார் ஆட்டக்காரியளா இருக்கிற தில்லை. அவையள் கெட்டுப்போறதுக்கு அவையளுக்கு மேலை பல சந்தர்ப் பங்கள் திணிக்கப்பட்டிருக்கு. நான் இஞ்சை வந்த பிறகுதான் நேர்ஸ் மாரைப்பற்றி வெளியுலகம் எவ்வளவு தவறான அபிப்பிராயம் வைத்திருக் கெண்டு தெரிஞ்சுது. நேர்ஸ் ஒரு பெண். அவளுக்கு எல்லோரையும் போலை மன உணர்வுகள் இருக்கு என்பதை வெளியுலகம் விளங்கிக் கொள்ளாத தற்கு இந்த அமைப்பிலே பெண் அடிமையாய் இருக்கிறது தான் கார ணம். எங்கையோ எப்பவோ படிச்ச ஞாபகம். அந்த வசனம் இப்பவும் மனதிலை நிக்குது. அதென்னவென்று சொல்லட்டுமா? பெண் பிள்ளைப் பெறும் இயந்திரமாகவும் விற்கவும் வாங்கவுமுரிய பொருளாகவும் எந்த அமைப்பில் இருக்கிறாளோ, அங்கே அவள் அடிமையாகத்தான் இருப்பாள்…. இது முழு உண்மை . இப்பெண் நினைச்சவனைக் கலியாணம் முடிக்கேலாது. சுதந்திரமாய் வாழேலாது எண்டிறதுக்கு நீர் நினைக்கிற மாதிரி சாதி காரணமில்லை கோளாறு வேறை எங்கையோ இருக்குது”

செல்வராணி நிறுத்திவிட்டுத் தொடர்ந்தாள் :

‘உம்மடை கவலையை நான் தூண்டிவிடேல்லை. என்னவோ இதெல் லாம் என்ரை மனதுக்குள்ளை நீண்ட நாளாய்க் குறுகுறுத்துக் கொண்டு கிடந்தது. சொல்லியிட்டன். வீட்டிலை நடந்த தொண்டுக்கும் நீர் யோசியா தையும். இந்தச் சாதிசம்பிரதாயமெல்லாம் எப்பிடி உடைஞ்சு போகுது எண்டு நாங்க இரண்டு பேரும் ஒண்டாய் இருக்கிறதிலையிருந்து தெரியும். எவ்வளவு தான் விரும்பாவிட்டாலும், எத்தினை பேர் குறுக்காலை நிண்டு மறிச்சாலும் ஓடி வாற ஆறை ஆரும் பின்னாலை தள்ளி விடேலாது. அது தான் அவையளைத் தலை குப்புறத் தள்ளி விழுத்தும். உங்கடை அண்ணன் சாதி போகுதெண்டு குளறலாம். ஆனால் உங்கடை வயித்தைப் பற்றி யோசிக்கத்தான் அவருக்குத் தெரியேல்லை…”

செல்வராணி கதையை முடித்துவிட்டு யோசித்த வண்ணமிருந்தாள்

நான்கு

அவள் வீட்டிற்குப் போய் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது ஜானகிக்கும் செல்வராணிக்கும் அன்று மூன்று மணிவரை வேலை. மிகுந்த ஆதரவான மென்மையோடு ரெம்பரேச்சரைப் போட்டு ஜானகி மணிக்கூட்டைப் பார்த்தாள். இரண்டு பத்து.

இருபத்தாறாம் கட்டிலில் கால்வலி தாங்காமல் துடித்துக் கொண் டிருந்த நோயாளிக்குச் செல்வராணி ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள். பதினெட்டாங் கட்டிலில் தலையிலும் காலிலும் பலத்த பன்டேஜ்க் கட்டு களோடு கிடந்த நோயாளியை நோக்கி ஜானகி நடந்தவள்… அந்த முகத்தை …

பன்டேஜ் கட்டுக்குள் மறைந்திருந்த அந்த முகத்தைப் பார்த்த வள் உலகம் குலுங்கி எகிறிக் கவிழ்ந்தது போலப் பிரமையுற்றால்.

ஜானகி மயக்கமானாள்!

” அண்ணா !” மயக்கம் தெளிந்த ஜானகி கூவினாள்…

“அண்ணனைப் பார்க்கவேணும்… செல்வா…. நான் இப்ப அண்ண னைப் பார்க்கவேணும்…”

சிஸ்ரர் அரியமலர் ஜானகியின் தலையை ஆதரவாய் வருடினாள் . போவம், நீர் வெளிக்கிடும். பயப்பிடவேண்டாம்.”

செல்வராணி ஜானகியைக் கேட்டாள்.

“ஜானகி, உங்கடை அண்ணன் லொறியிலை வேலை செய்யிறவராம் ரெண்டரை வருஷமாய் அவர் கிளீனராகத்தான் இருந்தவராம். மூண்டு நாளைக்கு முந்தி லொறியில் அடிபட்டு அறிவில்லாமை இங்கை கொண்டு வந்ததாம்…”

ஜானகி கிறீச்சிட்டாள்.

”என் அண்ணா … ஒரு நாளும் இராது. அண்ணன் கிளீனராய் நிண்டவரா? பொய்… என்னாலை நம்பமுடியாது”

ஜந்து

வார்ட் வந்தது. ஜானகி எட்டி முன்னே போனாள்,

ஜானகியின் மனக்கண்களில் சிவசுப்பிரமணிய சர்மாவும், சுத்தரேச னும் மாறிமாறித் தெரிகின்றனர். தங்கள் சாதிக்கௌரவத்தை அவர்கள் நிலைநிறுத்த எவ்வளவு பாடுபட்டார்கள். சுகங்களைத் துறந்தார்கள். தியாகம் செய்தார்கள். அத்தகையவர்களில் ஒருவனான சுந்தரேசனா Ak னராக… சுத்தப் பொய்…

ஜானகி வெகு ஆவேசமான பார்வையினை அந்தக்கட்டிலிலே விழுத் தினாள்.

செல்வராணி சொன்னது பொய்யில்லை; பொய்யேயில்லாத உண் மையையே அவள் சொல்லியிருக்கின்றாள்!

தலையிலும் காலிலும் கட்டோடு கிடப்பது அவளின் அண்ண ன் சுந்தரேசன் தான்.

குற்றவாளியைப் போல சுந்தரேசன் அவளைக் கண்டதும் தலையைச் சரித்தான், பயங்கரமான தோல்வியை அவன் முகம் ஏற்றிருந்தது.

மௌனத்தின் வேதனை கலங்கியது. செல்வராணி சொன்னது உண்மைதான்.

இரண்டரை வருஷங்களுக்கு முன்பே சுந்தரேசசர்மா தம் குலத் தொழிலைக் கைவிட்டு விட்டார். சம்பிரதாய வரம்பிற்குள் வாழமுடியாது மாற்றத்தின் தாக்குதல்கள் அவரைக் கிளீனராக்கி விட்டன.

வெளியே போகும்போது செல்வராணி சொன்ன சொற்கள் ஜான கியின் மனதினுள் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

“ஓடிவாற ஆறை ஆரும் பின்னாலை தள்ளிப் திருப்பேலாது. அது தான் அவையளைத் தள்ளி விழுத்தும்”

– ஒளி நமக்கு வேண்டும் (குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1973, மலர் பதிப்பகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *