சொர்க்கவாசல் கதவு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 9,524 
 

“திருச்சியில குஷ்புக்கு கோயில் கட்டுனாங்கல்ல, அதை அறநிலையத்துறையில சேர்க்கணும்னு பெரிய போராட்டம் நடந்தது தெரியுமா?”

வீட்டுக்கு வந்திருந்த நண்பரிடம் சின்நைனா கேட்டுக்கொண்டிருந்தார். எதையோ பிடிக்க வீசிய தூண்டிலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது. இதே வேறொரு சமயமாயிருந்திருந்தால் மறுத்துக் கூட பேசியிருப்பேன். ஆனால் அது சரியான நேரமும் கிடையாது, சரியான இடமும் கிடையாது.

இருவருக்கும் போதை தலைக்கேறத் தொடங்கிய நேரம் அது. வாழ்க்கையிலே போதை என்னை போதை எப்போதுமே விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. பேச்சின் பாதையை மாற்ற விரும்பிய சித்தி.

“இவன் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல யூரினே போறதில்லை.”

“வேறென்ன ஹீரோன்னு நினைப்பு, அடிக்கடி பாத்ரூம் போனால் அசிங்கம்னு நினைச்சிருப்பான்.” சின்நைனா.

Poor family “ஒரு நாளைக்கு கிளின்டன் எத்தனை தடவை பாத்ரூம் போனான், எந்த பாத்ரூமில போனான்னு கேட்டா தெரியும், ஆனா சொந்தமா பாத்ரூம் போகத் தெரியாதா.” அவர் நண்பர்.

குடிச்சிட்டா எது வேணா பேசலாம், என்ன வேணா செய்யலாம் அதை காலையில் கூட இருந்தவங்க மறந்திறணும். இந்த ஒருமைப்பாடு இல்லாத குடிகாரனே கிடையாது நாட்டில்.

நீண்ட வீதி, அகலமான, அழகான சாலைகளும் சாலையோரங்களில் மரங்களும் கொண்ட வீடு, இரவில் எட்டு மணிக்கெல்லாம் உறங்கத் தொடங்கிவிடும் மக்கள், இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது அந்த நாட்கள்.

அம்மா விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, முன்பக்கம் உள்ள ஹாலின் ஜன்னலருகில் நின்று கொண்டிருக்கும். எனக்கும் அக்காவுக்கும் முன்பே தோசை கொடுத்து நாங்கள் தூங்கத் தொடங்கியிருப்போம். நான் தூங்காமல் அம்மாவையே பார்த்துக் கொண்டிருப்பேன். அன்று அம்மாவின் கண்களில் தெரிந்தது, கோபமா, ஏக்கமா, பரிதாபமா, விரக்தியா, பயமா இன்னும் புரியவில்லை எனக்கு. சில சமயங்களில் நான் கண்விழித்திருப்பதைப் பார்த்து, அம்மாவிடம் செருப்படி வாங்கியிருக்கிறேன். ஒருவேளை அம்மா நினைத்திருக்கலாம் அடித்தால் அழுகையுடனே தூங்கிவிடுவேனென்று, அதுதான் நடந்திருக்கும் பல நாட்களில்.

ஒன்பது பத்து மணிக்கு, அப்பா ஊரையே அளந்து கொண்டுவருவார். வந்ததில் இருந்தே, அம்மாவிற்கு அடியும் இடியும் உதையும். அம்மாவின் தலையை பிடித்து அப்பா சுவற்றில் இடிக்கும் அந்த சப்தம் இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது. உள்புற கதவின் அருகில் நின்று நான் அழுது கொண்டேயிருப்பேன், தூக்கத்திலிருந்து எப்பொழுது எழுந்தேன் என்று தெரியாமல். அதுபோலவே தூங்கியும் போவேன்.

காலையில் அம்மா காப்பி போட்டு கொண்டுவந்து தவலையை தரையில் வைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வருவேன். அம்மாவும் அப்பாவும் சுவாரசியமாக தினமலர் படித்துக்கொண்டு உரையாடிக்கொண்டிருப்பார்கள். மிகச்சில நாட்களிலேதான் இரவின் தொடர்ச்சியாக பகல் எனக்கு இருந்திருக்கிறது. பல சமயங்களில் இரவில் ஒரு வாழ்கை முடிந்து பகலில் ஒரு புது வாழ்க்கை. ஆனால் நினைத்துப் பார்க்கிறேன், அந்த சமயங்களில் என் பக்கத்தில் படுத்திருந்த அக்கா என்ன செய்து கொண்டிருந்தாள் என்று. ஞாபகம் வரமறுக்கிறது.

சில நாட்கள் ஆட்டோ வரும் இரவில், எங்கேயோ விழுந்து கிடந்த அப்பாவை தூக்கிக் கொண்டு, சில சமயம் ஆள்வரும் உன்புருஷன் இங்கே விழுந்து கிடக்கிறார்னு தகவல் கொண்டு. அம்மா அந்த பத்து மணிக்கு மேல் போய் ஆட்களை தேடிப் பிடிச்சு அப்பாவை வீட்டுக்கு ஆட்டோவில் எடுத்துக்கிட்டு வரும். சாப்பிடாமல் படுத்தா குடல் எரிந்திடும்னு சாதத்தை கறைத்து மயங்கிக் கிடக்கிற அப்பாவுக்கு ஊட்டிவிடும்.

முப்பது வருஷமா தன்னை தவிர வேறொருவனை நினைத்துக்கூட பார்க்காத தன் மனைவியை நம்பாமல், இரவிலே தன் குழந்தைகளோடு அவளையும் அறைக்குள் பூட்டி வைக்கும் அப்பா. அவ்வளவு நேரம் எங்கப்பாகிட்ட பேச்சும் அடியும் வாங்கிய அம்மா, அப்புறம் எங்கக்காகிட்ட திட்டுவாங்கும். அவசரத்துக்கு பாத்ரூம் போகமுடியாத ஆத்திரம் அக்காவுக்கு. என்னென்ன கேள்விகள் என்னென்ன பேச்சுகள். அப்பப்பா.

இத்தனையும் பார்த்துவிட்டு மத்தியானத்திற்கு பிறகு தண்ணீர் குடிப்பதையே நிறுத்திய நான் கூட சில சமயத்தில் தொந்தரவு பண்ணியிருக்கிறேன், எங்க குடிச்சேன்னே தெரியாத தண்ணீரால். கணவனை எழுப்ப பயந்து ஏதேதோ வழி ஏற்பாடு செய்யும் எங்கம்மா. சிலசமயம் ஜன்னலுக்கு மேலேர்ந்து சிலசமயம் பீரோவுக்கு பின்னால, இன்னும் சிலசமயம் பெட்ஷீட்டுல இப்படியெல்லாம் ஆத்திரத்தை அடக்கியிருக்கிறோம்.

இந்தக் காலம் எல்லாம் மாறியது, எங்கப்பாவுக்கு ரத்தம் வேகமா ஓடுன நாட்கள் அவை. இரத்தம் சுண்டத் தொடங்கிய பிறகு கொஞ்ச நாளைக்கு முன்பு வரை பயம் விட்டப் போய் கதவைத் தட்டியிருக்கிறோம் அவசரத்திற்கு. அப்பா வீட்டிற்குள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார். இதனால் அம்மாவிற்கு ஒரு இரண்டு மூன்று மணிநேரம் கூட அடி விழுந்தாலும் நான் அம்மாவை அந்த ஜன்னலருகில் பார்த்ததில்லை. அய்யோ அந்த முகம், அந்த அமைதியான சாலை, இரவு நேரம், மறக்கவே முடியவில்லை. இன்னமும் ஜன்னல்களைப் பார்த்தால் என் அடிவயிற்றை பிடிக்கும் ஒரு பயம்.

இளங்கலை முடித்து வேலை பார்க்கும் நான், இன்றும் பூட்டப்பட்டிருக்கும் இரவின் கதவு. அம்மாவிற்காக அக்காவிற்காக எதையும் கேட்கமுடியாத கோழையாய் நான் இப்போது டெல்லியில். என்னுடைய கோபங்களை இப்படித்தான் வெளிப்படுத்த முடிகிறது.

கோழையென்று சொல்லிவிட்டேன தவிர இன்றும் கேட்டுவிடமுடியும் என்னால். ஆனால் இத்தனை நாள் அம்மா பட்ட கஷ்டத்துக்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விடும். அம்மா வெளியில் வந்தால் பிழைத்துக் கொள்வாள். நானும் எங்கக்காவும் கூட வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவோம். ஏனென்றால் நாங்கள் வளர்ந்த நிலை அப்படி. ஆனால் எங்கப்பாவை நினைத்தால் தான் பயமாயிருக்கிறது. எங்கம்மா இல்லாமல் ஒருநாள் கூட வாழமுடியாதவர்.

இது தெரியாதவரும் இல்லை எங்க அப்பா. ஆனால் அந்த போதை அதை மறக்க வைக்கும். மனிதனை கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாதவனாய் மாற்றிவிடும். இன்று, திறந்தே இருக்கும் கதவு, வந்து கொண்டேயிருக்கும் தண்ணீர், அழகான வேலைப்பாட்டுடன் பாத்ரூம் இத்தனை இருந்தாலும் வந்துதான் தொலைக்கமாட்டேங்குது இங்கே.

ஸ்ரீரங்கத்தில், திருச்சியிலென மாறி, மாறி நான் இருந்த பொழுது சொர்க்கவாசல் திறக்கும்போது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போவது உண்டு. கடவுள் நம்பிக்கையில்லாத நான் சொர்க்கவாசல் திறக்கும் நாளில் மட்டும் கோவிலுக்கு போவது ஏதோவொரு நம்பிக்கையில் எங்கள் வீட்டு கதவும் திறக்குமென்றுதான்.

Print Friendly, PDF & Email

1 thought on “சொர்க்கவாசல் கதவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *