(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலையில் எழுந்து குளித்துவிட்டு மனதில் குதூகலத்துடன் இறைவனைக் கும்பிட்டு எழுந்த சுகன்யா வாசலில் அழைப்பு மணி ஒலிக்கவே கதவைத் திறந்தாள் .அங்கே அவளுடைய தாய் கமலம் தயங்கியபடி நின்றிருந்தாள், ஆனந்த வெள்ளமாய்க் கரைபுரண்டு ஓடிய மகிழ்ச்சித் திக்குமுக்காடலை மறைத்துக்கொண்டு அதிர்ச்சியிலிருந்து மீண்டு ஏம்மா அங்கேயே நிக்கற வாம்மா உள்ளவா என்றாள் சுகன்யா.
எப்பிடி இருக்கே என்ற அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க அப்படியே அம்மாவின் மேல் சாய்ந்து கட்டிக்கொண்டு உன்னைப் பாத்து எவ்ளோ நாளாச்சு, எப்பிடிம்மா என்னைப் பாக்க வந்தே அப்பாவுக்குத் தெரியுமா என்றாள்.
இல்லை தெரியாது நான் சீக்கிரம் போகணும் கோயிலுக்கு போய்ட்டு வரும்போது மாப்பிள்ளையை யதேச்சையா வழிலே பாத்தேன். அவர்தான் சொன்னார் நீ முழுகாம இருக்கறதை மனசு கேக்கலையே அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று தழுதழுத்தாள் கமலம்.
இந்தா உனக்குப் பிடிக்குமே அந்த மூலைக் கடையிலே போயி பொக்கடா வாங்கிண்டு வந்தேன்,இப்போ இதான் இனிப்பு உனக்கு. சாப்புடு என்று கூறிவிட்டு காதில் மெதுவாக அறிவுறைகளை சொன்னாள் கமலம்.சரிம்மா அப்பிடியே நடந்துக்கறேன், நீ கவலைப்படாதே நீயும் உடம்பைப் பாத்துக்கோ என்றாள் சுகன்யா.
சரி நான் கிளம்பறேன் அப்பா கொஞ்ச நேரம் ஆச்சுன்னா தேடிண்டு வந்துடுவார் என்றபடி கிளம்பிப் போனாள் கமலம்.
வீட்டுலெ எல்லாரையும் பகைச்சுண்டு காதல் ஒண்ணுதான் பெரிசுன்னு கார்த்திக்கை பதிவுத் திருமணம் செய்துகொண்ட நாள் முதலா அம்மா அப்பா, வேற சொந்த பந்தமே இல்லாமல் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதுவும் தாய்மைப் பேறு அடைந்துள்ள இந்த நிலையில் அம்மா வந்து பாத்துட்டுப் போனது மனதுக்கு ரொம்ப ஆறுதலாய் இருந்தது. வயிற்றைத் தடவி குழந்தை ஆணா பெண்ணா என்றும் தெரியாத நிலையில் டேய் உங்க பாட்டி டா உன்னைப் பார்க்கத்தான் வந்தா என்றாள்.என்னவோ தெரியலை அவளுக்கு சிரிப்பும் அழுகையும் கலந்து வந்தது. இந்த சிரிப்புக்கும் அழுகைக்கும் நடுவே எத்தனையோ சரித்திரங்கள் இருக்கே.
விளையாட்டாய் மாதங்கள் ஓடிற்று. திடீரென்று ஒரு வலி இடுப்பில், என்னதான் அம்மா சொல்லிட்டுப் போனாலும் தாங்க முடியாத வலி வார்த்தைகள் அனுபவத்தை கொடுக்குமா என்ன. அனுபவித்துப் பார்க்கும் பொழுதுதானே அது எத்தனை அவஸ்தை என்று தெரியும். எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும் என்னும் வெறி அவளைத் தடுமாறவைத்தது. எதுவோ கிடைத்தது பற்றிக்கொண்டாள். சுய உணர்வு வந்து பார்த்த பொழுது அவளுடைய அம்மா கமலம் நின்றிருந்தாள்.
பக்கத்தில் பூப்போல ஒரு குழந்தை. மலர்ந்து சிரிக்க முயன்று உடல் பலகீனத்தால் தோற்றுப் போனாள் அவள், ஆனால் மனதில் ஒன்று தோன்றியது.
புதுசாய்ப் பிறந்திருக்கிற இந்தக் குழந்தை, ஏற்கெனவே பார்த்த தன் தாய் கமலம் இவர்கள் இரண்டு பேர்,தாய்மை. இதைத் தவிர உலகத்தில் காதல் பணம் அந்தஸ்து போன்ற வேறு எதுவுமே உயர்வில்லை சொர்கமில்லை என்று புரிந்தது. அயர்வாய்க் கண் மூடி நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தாள் சுகன்யா.
தூக்கம் வருவதற்குள் ஒரு நினைவு எப்போ கார்த்திக் வந்து குழந்தையைப் பார்ப்பான் அவன் குழந்தையை கையில் தூக்கும் போது பாக்கணுமே என்னும் நினைவுடன் தூங்க ஆரம்பித்தாள்.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.