கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 23,873 
 
 

ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டும் உரசித் தள்ளிக் கொண்டும், மந்தையாக வருகிற செம்மறி ஆடுகளை, பட்டிக்குள் பத்தியனுப்பினான் செல்லாண்டி. கைக் கம்பால் அதன் முதுகுகளில் செல்லத்தட்டுகள் தட்டுகிறான். பட்டிக்குள் நெட்டித்தள்ளி மூங்கில் தப்பைக் கதவைச் சாத்தி, கொண்டியை மாட்டுகிறான்.

குப்புறக் கவிழ்ந்துகிடந்த கூடையைத் தூக்கித் திறந்தவுடன், உள்ளுக்குள் அடைப்பட்டுக்கிடந்த இளங்குட்டிகள் ஆவல் பறப்பும் ஆசைப் பரபரப்புமாகத் தெறித்தோடின. தத்தம் தாய் ஆடுகளைத் தேடிக் கனைத்தன. தாய் ஆடுகளும் குட்டிகளைத் தேடிக் கத்துகின்றன. அதுகளுக்கும் மடுவில் பால் கட்டியிருக்கிற வேதனை. புழுதி மிதக்கும் காற்று இல்லாத வெயிலில் இளங்குட்டிகளின் சிறிய கனைப்புச் சத்தங்கள் அலை அலையாக அதிர்ந்து அலைந்தன. அதுகளுக்கும் தாய்ப்பால் குடிக்கிற பசி.

வயிறு புடைத்திருக்கிற செம்மறி ஆடுகளுக்கு ராத்திரி கடிக்க இரை வேண்டும். ‘எந்தப் புஞ்சையில் கொழை ஒடித்து வரலாம்’ என்ற யோசனை, செல்லாண்டிக்குள். தெருவைப் பார்த்து வேக நடை போடவைக்கிற பசியின் காந்தல். தெருவைப் பிளந்து உள்ளே போனால், மையத்தில் இவனது குடிசை. குளிக்கிற நிதானம் இல்லை. பசி ஆளைத் தின்று தீர்க்கிறது. பொறுமை இல்லை. வெளிப் பானைத் தண்ணீரில் கை வைத்துப் பார்த்தான். வெயிலில் காய்ந்து வெதுவெதுப்பாக இருக்கிற தண்ணீர். ரெண்டு கையாலும் அள்ளி முகத்தில் அறைந்து, கழுத்து, கட்கம், முதுகு, மார்பு எல்லாம் அலசிக் கழுவி, மேல் துண்டால் அழுந்தத் துடைத்தான். அந்தி வெயில் தங்கத் தூளாக மிதந்தது.

ஆவுடை, வாசலை ஒட்டிய தரையில் காலை நீட்டி உட்கார்ந்து இருக்கிறாள். மடியில் குழந்தை. பால் குடிக்கிற பயலின், ‘ம்ள்ச்சூ… ம்ள்ச்சூ’ என்ற உதட்டுச் சத்தம். பால் குடிக்கிற மகிழ்ச்சியில் பிஞ்சுக் கால்களின் சின்னத் துள்ளல். பிஞ்சுக் கைகளின் அலைபாய்வு. சிறு கை, அம்மாவின் இடுப்பில் உரச… மறு கை முகத்தில் விழுகிற சீலையை ஒதுக்குகிறது. அந்தக் கையைச் செல்லமாக மெல்லத் தட்டுகிற ஆவுடை, ”ஏலேய்… கையை வெச்சுக்கிட்டு சும்மா இரேன். உங்கப்பன் கை கணக்கா ஒனக்கும் நீளுது.”

இதை நின்று நிதானித்து ரசிக்க முடியாத அளவுக்கு, அடிவயிற்றைக் கவ்வுகிற பசிக் காந்தல்.

”வகுறு கெடந்து தீயாப் பசிக்குது. திங்குதுக்கு என்னமாச்சும் இருக்கா?”

”அந்தா… தண்ணிச் சால்லே ஒரு பொட்டலம் இருக்கும். எடுத்துப் பாரு.”

ஆவலோடு பாய்ந்தான். பரபரக்கிற கையின் பதற்றத்துடன் பிரித்தான். கருப்பட்டி மிட்டாயும் காராச்சேவும் இருந்தன.

இந்தக் காட்டுக்கான அயிட்டம் கருப்பட்டி மிட்டாய். பின்னல் பின்னலான வட்டமாக இருக்கும். கன்னங்கரேலென இருக்கும். கடித்தால் மொறுமொறுப்பாக இருக்கும். கருப்பட்டிப்பாகு உள்ளுக்குள் வழிந்து, படர்ந்து, உயிர் வரைக்கும் வாசத்துடன் தித்திக்கும்.

ஆவல் பறப்போடு ஒடித்தான். வாய்க்குள் திணித்துக்கொண்டான். மிச்சம் இருந்த சின்னத் துண்டோடு கிட்டத்தில் வந்தான்.

”அண்ணாக்க நிமிர்ந்து, வாயைத் திற” என்றான்.

”எனக்கு வேண்டாம்யா. நீ தின்னு.”

”பகுந்து தின்னாத்தான் பசியாறும்.”

அவளது இரண்டு கைக்கும் வேலை இருக்கிறது. ஒரு கை மடிப்பயலை ஏந்தியிருக்கிறது. மறு கை, மற்றொரு மார்பகத்தின் இறுக்கத்தை தளர்த்திக்கொண்டிருக்கிறது.

”வாயைத் தொறன்னா… தொறயேன்” கண்டிப்புடன் அதட்டுகிற கெஞ்சல். திறந்த வாயில் பக்குவமாகத் திணிக்கிற இவன். உதடு விரியாமல் மென்மையாக மெல்லுகிற ஆவுடை.

”கருப்பட்டிப்பாகு ரொம்ப வாசமா இருக்குய்யா!”

”மொறுமொறுப்பாவும் இருக்கு. நல்லாச் சாப்புடு.”

”நீ… பசியாறுயா மொதல்லே. காட்டு வெளியிலே ஆட்டுவால் பின்னாலே அலைஞ்சு சீரழிஞ்சு வந்தவன்” – அவள் மென்று விழுங்குவதையே ரசித்தவனின் பார்வை, கீழே இறங்கியது. மகன் கை ஒதுக்கிற சீலையை மீறி தெரிகிற பகுதியை உற்றுப்பார்க்கிறான். பார்வையில் மொட்டு அவிழ்கிற குறும்பு.

”கண்ணைக் குத்தணும்” – செல்லச் சீறலாக ஆவுடை.

”என்னத்துக்கு?”

”புள்ளை பசியமத்துறதைப் பாத்தா… புள்ளைக்கு வகுறு வலிக்கும்.”

”அதெல்லாம் வலிக்காது.”

கருப்பட்டி மிட்டாயும் காராச்சேவும் அவளுக்கும் தந்து, இவனும் தின்று, வயிறு முட்டத் தண்ணீர் குடித்தான். வெறும் குடலில் ஏதோ விழுந்த ஆறுதல். வயிறு நிறைந்த மாதிரியான மனநிறைவு. எழுந்தான். ரெண்டு காலும் ரெண்டு பக்கமாக அகலிக்கின்றன. ரெண்டு முழங்கால் மூட்டுகளும் பருத்து, புடைத்து, உள்முகமாக துருத்திக்கொண்டிருக்கின்றன. கோணல் காலன்.

எட்டு வயதில் இருந்து ஆடு மேய்க்கிறவன். காட்டு வெளியில் வாட்டுகிற வெயிலில் ஆட்டு நிறங்களைப் பார்த்துக்கொண்டு, கம்பு ஊன்றி கால் கடுக்க நின்றவன். வருடக்கணக்காக உடற்பாரம் முழுவதும் சுமந்தே நின்ற முழங்கால் மூட்டுகள். மூட்டுகள் மட்டும் பெருத்து, திரண்டு, ஒன்றையொன்று உரசுகிற கோணல் காலாயிற்று, பெரும்பாலான ஆட்டுக்காரர்களைப் போல.

இவன் பிறந்த மறு மாசம் அய்யா சாவு. இவனது ஆறு வயதில் முத்தையா கோனாரிடம் ஒப்படைத்துவிட்டு உயிரைவிட்டாள் அம்மா முனியம்மா. கோனார், இவனை ஒரு பிள்ளையாக வீட்டுக்குள் வைத்து வளர்க்கத் தயாராக இருந்தார். ஆனால், சாதி அமைப்பு விடவில்லை. ஆட்டுத் தொழுவத்தில் கஞ்சியும் படுக்கையுமாயிற்று. எட்டு வயதில் கையில் ஆட்டுக் கம்பு. கால்கள், காட்டு வெயிலில். இப்ப வரைக்கும் அவரது ஆடுகள் மேய்ப்பதே தொழில். ஆவுடையைப் பார்த்துப் பேசி… கோனார்தான் இவனுக்கு ‘மூய்த்து’ வைத்தார்.

அதில் வந்த வம்பு தும்பு கொஞ்சமா? கோணல் காலைக் கண்டு வெறுத்த ஆவுடை, ”வாழ்க்கைப்பட்டு வந்தவளை வெச்சுக்கிட்டு பூசை பண்ணுவானா… கோணக்காலை வெச்சுக்கிட்டு” என்று மறுத்த ஆவுடை. அது ஒரு தனிப் பஞ்சாயத்து.

கோணல் கால்களோடு குடும்பம் நடத்தி, ஓர் ஆண் மகனையும் பெற்று, ‘முத்துசாமி’ என்று கோனார் பெயரையும் வைத்தாகிவிட்டது.

”என்னய்யா…” என்று விசாரிக்கிற ஆவுடை. கொழைக்கட்டு கட்டுகிற நூல் கயிறை ரெட்டை மடிப்புகளாக இடுப்பில் கட்டிக்கொண்டு, துரட்டியை எடுத்து வெளியில்வைக்கிற செல்லாண்டி.

”கொழைக்குத்தான். ஆடு குட்டிகளுக்கு ராப்பாட்டுக்கு வேணும்ல!”

”அது தெரியுது. இந்நேரத்துலயா? வெளிச்சம் இருக்கே!”

”கொழை களவாங்கணும்னா… இருட்டுன பெறவுதான் போவேன். இன்னிக்கு எங்க வெங்கடம்மா தோட்டத்துலேதான் கொழை ஒடிக்கப்போறேன்.”

”அதுக்கு… தொரட்டி என்ன செய்ய?”

”செவல் தரிசுலே நிக்குற பெரிய வாகை மரங்கள்லே நாலைஞ்சு கொப்புகளை வெட்டி இழுக்கலாம்ல?”

”குளிக்கலியா?”

”போயிட்டு வெருசா வந்துருவேன். படுக்குறதுக்கு முந்தி குளிச்சிட்டு வர்றேன்” கண்ணுக்குள் குறும்புச் சிரிப்பு ஒளிர்கிறது. அது ஒரு மனக்குறி; ரகசிய மொழி.

”நீ… நல்லா… மப்பேறிப்போய்த் திரியுதே!”

அடி உதட்டைக் கடித்து, கண்டனத் தொனியில் சீறுகிறாள்.

”தவுட்டுக்குத் தட்டழியுற வீட்டுப்புள்ளே,

இஞ்சிப் பச்சடி கேட்டானாம். அப்பன் பிழைப்பறியாத புள்ளே, அநேக நேரம் பல்லக்குலே போகணும்னானாம்.”

”என்னத்துக்கு இம்புட்டுச் சொலவடைக?”

”எல்லாம்… காரணமாத்தான். போயிட்டு வா. வந்த பெறவு வெளக்கமாப் புளியைப் போட்டுத் துலக்குதேன்!” கேலிக் கிண்டல் இல்லாத – மிரட்டல் இல்லாத – கனிவான குரலில், நெஞ்சுக்கு நெருக்கமான உணர்வுத் தொனியில் சொன்னாள். அதனால் உள்ளுக்குள் மிரண்டான், செல்லாண்டி. அடிவயிற்றைக் கலக்கியது.

துரட்டியும், கால் செருப்புமாக தெருவில் எட்டெடுத்து வைக்கிற செல்லாண்டி, இடதும் வலதுமாக பாதங்கள் விலக இரண்டு முழங்கால் முட்டிகளும் உரசிக்கொண்டு நடக்கிறான்.

ஆவுடையை நினைத்துப் பார்த்தான். பொறுப்பு இல்லாத சிறு பிள்ளையின் சேட்டைகளைப் பொறுத்துக்கொண்டு, கனிவுடன் பொறுப்பை உணர்த்துகிற தாயைப் போன்ற ஆவுடை. நாதியற்றவன்; ஏதுமற்றவன்; வெறும் தெருக் கல்லாக ஓரமாகக் கிடந்தவன். அவனை ஒரு மனிதனாக ஆக்கியவள்; புருஷனாக உயர்த்தியவள்; உணவுக்கு ருசி சேர்க்கும் உப்புக்கல்லாக மாற்றியவள். ஒரு குடும்பஸ்தனாக, ஒரு பிள்ளையின் தகப்பனாக ஆக்கியவள்.

வெங்கடம்மா தோட்டம், பம்ப் செட் மோட்டார் போட்ட பெரிய தோட்டம். எட்டு ஏக்கர் சமுத்திரம். அகத்திக் கொழையும் ஆமணக்கும் செழித்துக்கிடக்கின்றன. பொழியோரங்களில் ஆமணக்கு வாய்க்கால் வரப்புகளின் வரிசையாக அகத்தி. தோட்டத்து முதலாளி ராமானுஜம் இருந்தார்.

”என்னப்பா… தயாரிப்போட வந்துருக்கே?”

”ரெண்டு கொழைக ஒடிக்கணும் சாமி.”

”கோனார் ஆடுகளுக்கு, எங்க கொழையா?!”

”என்ன செய்ய சாமி? எங்க கிடந்தாலும் நாந்தானே போய் ஒடிக்கணும்?”

”இருந்தாலும்… வெங்கடம்மா ஒனக்கு ரொம்பத்தான் ‘எடம்’ குடுக்கா…”

”எல்லாம்… சாமியவுக சம்மதிக்கிறதாலேதான்.”

”சரி… சரி… ஓடிச்சுட்டுப் போ…”

‘எடம்…’ என்ற சொல், இந்த இடத்தில் ‘சலுகை’ என்று அர்த்தப்படும்.

செல்லாண்டிக்குள் ரகசியமான குறும்புச் சிரிப்பு, உள் ஆழத்தில் வெடித்து வாசம் பரப்பும். அந்த அம்மா தந்த ‘எடம்’ ரொம்ப ரொம்ப…

தலையில் ஒரு பெரிய கொழைக்கட்டு. கைலியை விரித்து கொழையைக் கட்டாகக் கட்டி, தோள்பட்டையில் ஒரு கட்டு தொங்குகிறது. அதே கையில் துரட்டி. முதுகிலும் தலையிலும் பாரம் அழுத்துகிறது. கழுத்தெலும்பு முறிகிற மாதிரி நெரிபடுகிறது. நெஞ்செலும்பு நெரிபட்டு மூச்சுத் திணறுகிறது. பாரச்சுமையின் அழுத்தத்தால் திணறுகிற உடம்பின் கண்ணீராக வியர்வைப் பெருக்கு.

கோனார் வீட்டுக்கு சோற்றாங் கைப் பக்கம், செம்மறி ஆடு அடைப்பட்டு இருக்கிற பட்டி. அதற்குள் கூரைச் சாய்ப்புத் தாழ்வாரம். படுத்துக்கொண்டு அசைபோடுகிற ஆடுகளைத் தாண்டிக்கொண்டு, காலில் வந்து உரசுகிற ஆடுகளை நெட்டித் தள்ளிவிட்டுத் தாழ்வாரத்துப் பரண் மேல் கொழைக்கட்டையை எக்கிப் போடுகிறான். முதுகில் கிடக்கிற கொழையை ஆங்காங்கே ஊன்றப்பட்ட கட்டைக் கம்பில் தொங்குகிற கயிற்றில் கட்டினான்.

துரட்டியோடு ஊரின் கிழக்கு மூலையில் இருக்கிற தனது தெருவுக்கு நடையை எட்டிப்போட்டான். தென் கிழக்கு மூலையில் இருக்கிற தனது தெரு, ஊரின் கால்மாட்டில் பணிவாகப் படுத்திருக்கிறது.

பொழுது விழுந்து, கருகருவென்று இருட்டு பரவிக்கொண்டிருக்கிறது. பாரம் இறக்கிய ஆசுவாசம். கழுத்தெலும்பு, பழைய மாதிரிக்குப் போகாமல் விறைத்து நிற்கிறது. கழுத்தை இடது கையால் நீவிவிட்டுக்கொண்டான், செல்லாண்டி.

வாலைச் சுழற்றி ஆட்டிக்கொண்டு பெரிய பன்றிகள் மெதுவாக நடைபோட… கன்னங்கரேலென சாக்கடைச் சகதி சொட்டடிக்கிறது. மாட்டுக்கறி ஜவ்வுகளின் வாசம் மனதை வருடுகிறது.

வெளிப் பானைத் தண்ணீரில் அப்படியே குளித்தான். இடுப்பில் துண்டு கட்டியிருந்தான். இருட்டு முழுதாக ஆக்கிரமித்துவிட்டாலும், தெருவிளக்கின் வெளிச்சம் வந்துவிடுகிறது.

”சோத்தை வைக்கட்டா?”

”வை… பய, என்ன செய்றான்?”

”தொட்டில்லே ஒறங்குதான்…”

”அவங்கூட வெளையாடலாம்னு ஆசையா வந்தேன்…”

”இப்ப என்ன?”

”ஓங்கூட வெளையாடவா?”

”குறும்புக்குப் பஞ்சமில்லே. கோணக் காலனுக்கு நெஞ்சுலே கொழுப்புதான்.”

கூப்பன் கடை (நியாயவிலைக் கடை) அரிசி, விதை விதையாகக் கிடந்தது. கருவாட்டுக் குழம்பை மீறிக்கொண்டு ஒரு கெட்ட வீச்சம் வந்தது.

”என்ன இது… இந்த வாடை… கெட்ட நாத்தமா நாறுது?”

”நம்ம பொழைப்பு மாதிரிதான்…”

”நம்ம பொழைப்புக்கு என்ன கொறை வந்துச்சு? ஆட்டுச்சாணிக்குள்ளேயும் ஆடுகளுக்குள்ளேயும் உண்டு ஒறங்கி வளர்ந்த நான்… ஓங்கூட கதகதப்பா… சொந்த வீட்லே உக்காந்துருக்கேன்.”

”கருவாட்டுக் கொழம்பு எப்படியிருக்கு?”

”ஒன்னை மாதிரி… மணம்ம்ம்மா… இருக்கு. ஓங் கைப் பக்குவம் அப்படி. கொழம்பு வாசத்துலேதான் சோறு உள்ளே போகுது.”

ரெண்டு காலையும் அகல விரித்து நடுவில் வட்டிலை வைத்து குனிந்து குனிந்து சாப்பிடுகிறான் செல்லாண்டி.

”ஆவுடை… நீ சாப்புட்டீயா?”

”இனுமேத்தான்.”

”முட்டைக்கோழி முட்டையிட இடம் தேடி தட்டழிஞ்சு அலைஞ்சுதே… அது கூட்டுக்கு வந்துருச்சா?”

”எங்க வந்துச்சு? நாம் போய் தேடித் திரிஞ்சு புடிச்சுட்டு வந்தேன்…”

”சாம்பக் கோழியும் செவலைச் சேவலும் கெடக்குதா?”

”ம்… குஞ்சுக்கோழியும் வெடைக் கோழிகளும்கூட அடைஞ்சுகிடக்கு.”

உண்டு முடித்து, வட்டிலிலேயே கை கழுவினான். உள் வளைவாக வளைந்து பெருத்த கால்களை ‘வசத்துக்கு’க் கொண்டுவந்து எழுந்திருப்பதற்குள், ‘ஆத்தாடி… அம்மாடி…’ என்றாகிப்போகிறது.

ஆவுடை சாப்பிட்டு முடித்தாள். அதற்கு முன்பே குளித்திருந்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கவும், முத்துசாமி ஒன்றுக்கிருந்துவிட்டு தறியமுறிய நெளியவும் சரியாக இருந்தது.

”முழிச்சிட்டான்…”

”போயா… போய், புள்ளையோட வெளையாடணும்னீயே… வெளையாடு.”

அவளையே ‘ஒரு தினுசான’ சிரிப்போடு வெறிக்கிற அவன்.

”நீ… அவனை… மொதல்லே அமர்த்து. அப்புறம் வெளையாட்டை வெச்சுக்கலாம்…”

”நீதான் கிறுக்குப் பிடிச்சுப்போய்த் திரியுறியே… நீ அங்குட்டுப் போனாத்தான், ஒம் புள்ளைக்குப் பசியாறும்.”

கண்டிஷனாகச் சொல்லிவிட்டாள் ஆவுடை. தொட்டிலில் இருந்து பயலைத் தூக்கினாள். ”ஐயா… ராசா… எஞ்செல்லாம்… எந்தங்கக்கட்டி” என்று முகத்துக்கு மேலாகத் தூக்கித் தூக்கி இறக்க சிரிப்பாணி பொங்குகிற மழலை. ஏங்கி ஏங்கிச் சிரிப்புச் சிரிப்பில் கூடுதலாகக் குலுங்குகிறான்.

”உங்க அப்பன்… கோணக்காலன்… கொழுப்பேறித் திரியுதான்… கொம்பு முளைச்ச கிடாய்கணக்கா…”

இவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு சிரிப்பாக மழலைச் சிரிப்பு.

சாணிப்பால் போட்டு மெழுகிய மண் திண்ணையில் படுத்துக்கொண்டு மகனையும் மனைவியையும் ரசிக்கிற செல்லாண்டிக்கு, முகமெல்லாம் சிரிப்பில் மலர்ந்திருக்கிறது.

அவனுக்குள் கொம்பு முளைத்து திருகல் முறுகலாக நீண்டிருக்கிற கிடாய்கள். காயடிக்காத கிடாய்கள். மேய்கிற ஆடுகளைத் துரத்துவதும்… மேல் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு காமக் கனைப்புக் கனைப்பதும்…

பிள்ளை பால் குடிக்கிற சுகப் பரவசத்தில் கண் சொருகுகிற ஆவுடை. முகமெல்லாம் மனத்ததும்பல். நிறைந்து தளும்புகிற இன்ப உணர்வின் திளைப்பு. தாய்மைக் கனிவு.

பயலை தொட்டிலில் போட்டு நாலு ஆட்டு ஆட்டிவிட்டு, கிராக்கி பண்ணாமல் செல்லாண்டிக்கு அருகில் வந்தாள் ஆவுடை.

”என்னய்யா..?”

”எடக்குப் பண்ணாம வந்துட்டே!”

”எடக்குப் பண்ணி என்ன ஆகப்போகுது..?

நீ விடப்போறீயா? ஒழைச்சக் கட்டையை ஒறங்க வுடாம நச்சரிப்பே…”

அவள், அவன் மீது சரிந்தாள். பால் வாடை மொச் என்று வந்து மோதுகிறது.

ஆடு மேய்க்கிற கோணல் காலன், அவளை மேய்கிறான். களைப்பும் இளைப்புமாக வியர்வைப் பிசுபிசுப்புமாக விலகுகிறபோதுதான் அந்தக் கேள்வி கேட்டாள்.

”ஏய்யா… வரப்போற தீபாவளிக்கு என்ன செய்யப்போறோம்?” மென்னகையோடு அவள் பூப்போல கேட்ட கேள்வி, இவனுக்குள் இடிமுழக்கமாக உருண்டது.

இந்தக் கேள்வி அவனை இதுவரை தொட்டதே இல்லை. இவனும் கேட்டதே இல்லை. ‘தீவாளிக்கு என்ன செய்ய?’ என்று எந்த நாளிலும் கவலைப்பட்டதே இல்லை. நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை.

போன வருஷம் – தீபாவளி நினைப்பு வருவதற்கு முன்பே இவனையும் இவளையும் முத்தையாக் கோனார் வரச் சொல்லியிருந்தார். போய்… வாசற்படிக்கு வெளியே நின்று கும்பிட்டனர்.

”ஆவுடை அம்மாவும் செத்துப்போயிட்டா.ஒனக்கும் ஒருத்தரும் இல்லே. இது ஒனக்குத் தலை தீபாவளி…”

செல்லாண்டி ஏதும் புரியாத குழப்பத்தில் திகைத்தான்.

”நானே துணிமணிக எடுத்துத் தந்துருதேன். கறி, புளி எடுக்க… அரிசி, சாமான் வாங்க ரூவாயும் தந்துருதேன். நீங்க ரெண்டு பேரும் ஜாம்ஜாம்னு தலை தீவாளியைக் கொண்டாடுங்க.”

அவர்களுக்குள் நெகிழ்ச்சி. கண்ணீர் வழிந்ததில் மனக்குழைவு தெரிந்தது. ‘ஆட்டும் சாமி’ என்று சொல்லக்கூட மதி இல்லாமல் தலையை ஆட்டினர்.

”தீவாளிக்கு மொத நாளே வந்து வேட்டு வெடி பார்சல் வாங்கிட்டுப் போயிரு.”

அதற்கு முன்பெல்லாம்… தீபாவளி என்பது செல்லாண்டிக்கும் கொண்டாட்டம்தான். வெங்கடம்மா வீட்டில் பணியாரம், தோசை, இட்லி. இன்னொரு வீட்டில் கறிச் சாப்பாடு. வெங்கடம்மா ஒரு புதுக் கைலியும், கட்டம் போட்ட புதுத் துண்டும் எடுத்துக் கொடுத்துவிடுவாள்.

அஞ்சு வருஷம் அவர்கள் வீட்டு வெள்ளாடுகளையும், கிடாய்களையும் முத்தையா கோனார் ஆடுகளுடன் சேர்த்து மேய்த்தான். அதற்காகவா… இந்தப் புதுத் துணி? கல்யாணமாகி எட்டு வருஷமாகப் பிள்ளை இல்லாமல் பழிச்சொல்லின் கத்தியால் கிழிபட்டுக்கிடந்த வெங்கடம்மா, இவன் வெள்ளாடுகளை மேய்க்க ஆரம்பித்த பிறகுதான் இரண்டு பெண் பிள்ளைகள் பெற்றாளே… அந்த மகிழ்ச்சியிலா? ஆடுகளை அவிழ்க்கவும் கட்டவும் போகிற போதெல்லாம் பலகாரம் கொடுத்து உபசரித்த வெங்கடம்மா… அவளே பலகாரமான அந்தரங்கம் காரணமா?

ஒவ்வொரு தீபாவளியும் ஓசித் தீபாவளியாகக் கழியும். கல்யாணமான முதல் வருஷம் முத்தையாக் கோனார் புண்ணியத்தில் தலை தீபாவளி போயிற்று.

இந்த வருஷம்தான்… தீபாவளி இந்தக் குடும்பஸ்தன் நெஞ்சில் வந்து மோதுகிறது. ‘என்ன செய்ய… ஏது செய்ய?’ என்ற திகைப்பில் அல்லாடினான் செல்லாண்டி. ஆவுடை, கூடுதலாக ஒரு கண்டிஷனும் போட்டுவிட்டாள்.

”ஏய்யா… நான் கண்டிசனாச் சொல்லுதேன்… இந்தத் தீவாளி ஓசித் தீவாளியா இருக்கக் கூடாது. மானமரியாதையோட குடும்பமா வாழ்ற நாம… நம்ம தீவாளியா இந்த வருஷம் கொண்டாடணும்யா!”

இந்த நிபந்தனைதான் இவனை யோசிக்க வைத்தது. மலைப்பும் திகைப்புமாகத் தவிக்க வைத்தது.

காட்டு வெயிலில், ஆட்டு மந்தைக்கு நடுவில், கம்பை ஒரு சாயலாகச் சாய்த்து அதன் பலத்தில் உடல் பாரத்தைப் போட்டு நின்ற பகலில் கொழை ஒடிக்கையில்… சுடுகாட்டுக்கு மத்தியில் நடந்து வருகையில்… எல்லா நேரமும் இதே சிந்தனைதான். ‘தீவாளிக்கு என்ன செய்ய?’

தொட்டியை ஆட்டிக்கொண்டிருந்த ஆவுடையின் பக்கத்தில், குறாவிப் போய் வந்து நின்றான்.

”என்னய்யா..?”

”கண்ணுமுழி பிதுங்குது. மூணு நாளா கிறுக்காடாகச் சுத்தி வாரேன். ஒரு வழியும் தெரியலே… சொந்தமான ஒண்ணும் இல்லே. சொந்தத் தீவாளி எப்படி?”

”விதை மொதலா குஞ்சுக் கோழியை மட்டும் நிப்பாட்டிக்கிட்டு… மத்த கோழி சாவல் எல்லாத்தையும் வெலைக்குப் போட்டா… சொந்தத் தீவாளி செலவைச் சமாளிச்சிர முடியாது..?”

அவனுக்குள் படாரென்று பல கதவுகள் திறக்கும் உணர்வு. அவனுக்குள் பொங்கிய வெளிச்சம், முகத்துப் பூரிப்பாக மின்னியது. சாமியைப் பார்க்கிற பக்திப் பரவசத்துடன், அவனது ஆவுடையும்மனைப் பார்க்கிற செல்லாண்டி.

”சொந்தக் கோழிக… சொந்த தீவாளி… நம்ம கால்லே நாம நிக்குற தீவாளி…”

குதூகலக் கூத்தாட்டமாக அவன்.

”நெனைச்சுப் பாத்தா… இந்தத் தீவாளிதான், நம்ம தீவாளி. நமக்கான தலை தீவாளி” – தொட்டியை ஆட்டுகிற உடல் குலுக்கத்துடன் சொல்கிற அவள் குரலில், ஒரு கம்பீரமும் சுயமரியாதைப் பெருமிதமும் பொங்குகின்றன.

தெருக்கல்லை உப்புக்கல்லாக்கிய அந்த வைரக்கல்லை, வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு பார்க்கிறான் செல்லாண்டி!

– ஏப்ரல் 2014

Print Friendly, PDF & Email
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *