கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 3,693 
 

“அம்மா ! அம்மா ! இங்க வாங்களேன். அவுங்க வைத்திருக்காங்க..”மோனிகா, பரபரப்பாய் வந்து கிசுகிசுப்பாய் அழைக்க ……

‘யாராய் இருக்கும்..?’என்று நெற்றியைச் சுருக்கியவாறே மகளுடன் நடந்து வாசலுக்கு வந்த சொர்ணம்…..

அங்கு நின்ற ஆளைப் பார்த்ததும் அதிர்ந்தாள்.

சுந்தரி..!

‘இவளா..? ! ஏன் இங்கு வந்தாள்…?…. ,பூவிழந்து, பொட்டிழந்து… எல்லாம் போய்விட்ட நிலையில் எதற்காக இங்கு வரவேண்டும்..? வர என்ன யோக்கிதை இருக்கிறது..?’- மனதில் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் அடுக்கடுக்காய் முளைக்க…எதிரில் நின்றவளை நிமிர்ந்து பார்த்தாள் சொர்ணம்.

முகம் முழுக்க சோகம். கழுத்தைச் சுற்றி இழுத்துப் போர்த்தியப்புடவை. கையில் சின்னதாய் சுருட்டி மடக்கிய மஞ்சள் பையுடன் நின்றவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

‘வீடு தேடி வந்திருப்பவளை உள்ளே அழைப்போமா, வேண்டாமா..?’- சொர்ணம் மனசுக்குள் சின்னதாய் ஒரு தயக்கம், கொஞ்சம் தடுமாற்றம்.

‘இத்தனை நாட்களாக வீடு தேடி வராதவள் இப்போது வந்திருக்கிறாளென்றால் ஏதாவது உள் நோக்கம் இருக்க வேண்டும்.

வெறுப்பு, கசப்பில் இவளை “வா..! “அழைக்காமல் முகத்திலடிப்பது போல் கதவைச் சாத்தித் திருப்பி அனுப்பிவிட்டால்….ஏன், எதற்காக வந்தாள் என்று தெரியாது. அழைத்து விசாரித்தால்தான் அவள் விசயம் தெரியும். அதன்பின்தான்… அதற்குத் தக்கவாறு நடவடிக்கையோ, நடக்கவோ முடியும். !’மனதில் ஓடியது.

“அ அக்கா ! நான் உங்களிடம் கொஞ்சம் பேசனும்….”சுந்தரி சொல்லி சொர்ணத்தைப் பயத்துடன் பார்த்தாள்.

‘ஆனதெல்லாம் ஆகிவிட்டது. இனி பேச நீ இருக்கிறது…? எதை பற்றிப் பேசப்போகிறாள்..? அவள் எதை பற்றிப் பேசினாலும், தன்னை மீறி எதுவும் நடந்து விடப்போவதில்லை ! என்று தெளிந்து தைரியமான சொர்ணம்…

“உள்ளே வா…”ஒற்றையில் அழைத்து உள்ளே சென்றாள்.

சுந்தரி மிரண்டவளாய் தயக்கத்துடன் அவளைத் தொடர்ந்தாள் .

சொர்ணம் நாற்காலியில் அமர… மகள் மோனிகா தாய் அருகில் அமர்ந்தாள்.

“உட்கார்”என்று சொல்லாமல் சொர்ணம் எதிரில் உள்ள நாற்காலியைக் கை காட்டினாள்.

சுந்தரி நாற்காலியில் அமர்ந்து மஞ்சள் பையை மடியில் வைத்துக் கொண்டாள்.

தங்கள் பேச்சில்… சூடு, காரம்,….விவகாரம் எதுவும் இருக்கலாம் !’என்று ஊகித்த சொர்ணம்…..

“மோனி..! நீ மாடிக்குப் போம்மா..”சொன்னாள்.

அவள் அகன்றதும்… எதிரில் இருந்த சுந்தரியை ஏறிட்டாள் சொர்ணம். மனம் பழசைத் தாவியது.

“சொர்ணம்..! “இருட்டில் கணேசின் கை அவளைத் தொட்டது.

“என்ன…: “கணவன் பக்கம் திரும்பி படுத்தாள்.

“என் மனசுல ஒரு சுமை இருக்கு. அதை உன்னிடம் இறக்கனும்…”

“என்ன…?”

“எ….. என்னை ஒருத்தி காதலிக்கிறாள்..!”

“மெய்யாலுமா..?”

“ஆமா…”

“நீங்க..?”

“தெரியல. ஆனா பாவமா இருக்கு..”

“யாரவ..? எப்படி..?”

“அவள் என் அலுவலகத்தில் என்னோட வேலை பார்க்கிறாள். பக்கத்து இருக்கை. அம்மா, அப்பா இல்லாத அநாதை. வேலை தொடர்பா பேசி பழக…அவளுக்கு என் மேல் காதல்..!”

“அவளே சொன்னாளா..?”

“ஆமா..”

“நீங்க திருமணமாகி, குழந்தை ஒருத்தி இருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரியுமா..?”

“நல்லாத் தெரியும். அவள்..’இதைச்’சொன்னதும் நானே…’நான் இப்படி !’என்கிற விசயத்தைச் சொல்லிட்டேன். அதுக்கு அப்புறமும் அவள் என்னைக் காதலிக்கிறதாய்ச் சொல்றாள்.”

“சரி. விசயத்துக்கு வாங்க…”

“தினம் அவளோடு அமர்ந்து வேலை செய்யிறதுனால…பார்க்கப் பாவமா இருக்கு. அதான் உன்கிட்ட உத்தரவு கேட்டு ஒரு முடிவு எடுக்கலாம்ன்னு இருக்கேன்.”

“என்ன முடிவு..?”

“எல்லாம் உன் சம்மதத்தைப் பொறுத்துதான் இருக்கு. வேணும்ன்னா வேணும். வேணாம்னா வேணாம்..!”

”…………………………”

“அவள் அனாதை, தனிமரம் என்கிறதுனால….கணவன் என்கிற உறவு, உரிமையில் ஒரு ஆண் துணை தேவை. ஏ குணம், மனம் பிடிச்சிருக்கு. அதனால் நான் தனக்குப் பொருத்தமானவனாய் இருப்பேன் என்கிறது அவள் எண்ணம். அந்த அடிப்படையில்தான் அவள் என்னைக் கேட்டாள். மனசைத் திறந்தாள்.”

“எனக்குச் சம்மதமில்லே.!!”
“சம்மதிச்சாலும் அதனால் பாதிப்பில்லே.”

“அத்தான்..! “துணுக்குற்றாள்.

“சொல்றதைக் கேளு. அவளும் என்னைப் போல் சம்பாதிக்கிறாள். நான் பத்து பைசா அவளுக்காகச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லே. தாலி கட்டி ஒரு தனி வீட்டில வைச்சுட்டா பிரச்சனை இல்லே. நீ சம்மதிச்சாதான் இந்த முடிவு. இல்லேன்னா மறக்கணும். நாம வேற இடம் மாறனும்…”

“புரியல…? !”

“ஒரே அலுவலகத்தில் அருகருகே அமர்ந்து வேலை செய்யும்போது மறக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படியும் வேலை தொடர்பா நாங்க பேசியே தீரனும். பழகியே ஆகனும். அந்த வகையில்… மறப்பது என்பது ரொம்ப கஷ்டம். அது இல்லாம… நாம இந்த ஊர்ல இல்லாம தொலைதூரமா…எங்கேயாவது மாற்றல் வாங்கிப் போய்விட்டால்…இவள் தொடர்பு துண்டிக்கப்பட்டு சுலபமா மறந்துடலாம்.”

“மாற்றல் வாங்கிடலாமா…?”

“கொஞ்சம் கஷ்டம். கொஞ்சம்ன்னா கொஞ்சமில்லே. கொஞ்சம் அதிகமாவே…”

“புரியல…?!”

“விழாதவங்க கால்ல விழுந்து கட்சிக்காரர்களை புடிச்சி அமைச்சர் அளவுக்குப் போய் லட்சக் கணக்குல லஞ்சம் கொடுத்து முடிக்கனும். அது அவ்வளவு சுலமில்லே. நமக்குத் தேவைன்னா முடிச்சித்தானாகனும். அப்புறம் கிடைக்கிறது எந்த மாவட்டம் தெரியாது. தூரம்ன்னா கன்னியாக்குமரி… கேரளாகிட்ட வாங்கனும். அதுதான் சரி. ஆனா… இது நமக்கு வீடு, சொந்த ஊர். பூர்வீக பூமி. பழக்கப் பட்ட இடம். அங்கே வாடகை வீடு. தெரியாத மக்கள்.”கஷ்டங்களை சொல்லி நிறுத்தினான்.

“இவ்வளவு கஷ்டங்கள் இருக்கா..? ! “சொர்ணத்திற்கு மலைப்பு வந்தது.

“ஆமாம் !”

மௌனமாய் இருந்தாள்.

“என்ன முடிவு..?”

“மாற்றல் வாங்கிடுங்க..”

“சொர்ணம் ! “இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அதை அந்தக் குரலே காட்டிக் கொடுத்தது.

“நான் வாழ்க்கையைப் பங்கு போடமுடியாது. அப்படிப் போட்டு வாழ முடியாது.”

“சொர்ணம். ! அஞ்சு லட்சம், பத்து லட்சம் கொடுத்து மாற்றல் வாங்க நம்மகிட்ட பத்துப் பைசா இல்லே.”

”இருக்கு.”

“வீட்டை அஞ்சு லட்சத்துக்குப் போக்கியத்துக்கு விடலாம். அதுக்கு மேலேயும் தேவைன்னா… என் நகைகள் இருக்கு. அடமானம் வைச்சுக்கலாம்.”

“சொர்ணம்.! இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நாம மாற்றல் வாங்கி, அங்க போய் கஷ்டப்படனும். பொண்ணை வேற பள்ளிக்கூடத்துல சேர்க்கனும். அதுக்கு இன்னும் பணம் வேணும். புரட்ட முடியாது. வட்டிக்கு வாங்கணுமா..? ரொம்ப கஷ்டம்..!”

“இதுக்குத் தீர்வு…?”

“ஒரு தாலியைக் கட்டி அவளைத் தனிக்குடித்தனம் வச்சிட்டா யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது.”

“நீங்க இங்கேயும் அங்கேயுமாய் வாழ்வீங்க…??….”

“ஆமாம் ! வேற வழி…?”

“அது ஒருக்காலும் நடக்காது ! !”

“சொர்ணம்…?”

“சொல்லுங்க…?”

“இதையெல்லாம் முன் கூட்டியே யோசனை செய்துதான் நான் ஒரு முடிவுக்கு வந்து அதுக்கு முற்றுப்புள்ளி வைச்சிருக்கேன்.”

“என்ன முடிவு…?”

“அஞ்சு மாசத்துக்கு முன்னாடியே நான் அவளுக்குத் தாலி கட்டி தனிக்குடித்தனம் வைச்சுட்டேன். இப்போ உனக்குத் தெரியப்படுத்தனும் என்கிறதுக்காக பேச்சு கொடுத்து சேதி சொன்னேன். மன்னிச்சுக்கோ…”தள்ளிப்படுத்தான்.

இடி !!!

“அக்கா…!! சுந்தரி கலைத்தாள்.

“சொல்லு…?”

“நாங்க செய்தது மன்னிக்க முடியாத குத்தம் மன்னிச்சுக்கோங்க…”

“பத்து வருட வாழ்க்கைக்குப் பிறகு இந்த பேச்சு, மன்னிப்பு எல்லாம் தேவை இல்லாதது. முட்டாள்தனம். ! இப்படியும் அப்படியுமாய் வாழ்ந்து அவர் போய் சேர்ந்தும் ரெண்டு வருசமாச்சு. இப்போ ஏன் வந்தே..?”

“பொண்ணுக்குக் கலியாணம் வச்சு பணத்துக்கு கஷ்டப்படுறீங்கன்னு கேள்வி பட்டேன்.”

“அதுக்கு உதவி செய்ய வந்தியாக்கும்..”

“ஆ… ஆமாம்…!”

“எனக்கொன்னும் உன் உதவி தேவை இல்லே…”

”அக்கா ! கோபப்படாதீங்க. பொறுமையா கேளுங்க. இது உங்க சொத்து. உங்களுக்குத் சேரவேண்டியது.”

“என்ன உளர்றே..?”

“ஆமாம்க்கா. ! நான் உங்க வாழ்க்கை, புருசனைத்தானே பங்கு போட்டுக்கிட்டேன். அவர் எனக்கு செய்து போட்ட நகை, பணம். அடுத்து என் புள்ளைக்காக சேர்த்த தொகை எல்லாம் மொத்தமா பத்து லட்சம் இருக்கு.”

”’………………………..”

“இந்த பணம் நகை எல்லாம் அப்பவே உங்களுக்குச் சேரனும், பொண்ணுக்குக் கொடுக்கனும்ன்னு அவர் கொடுக்க கொடுக்க வாங்கி வச்சுக்கிட்டேன். இப்போ அவர் இருந்தாலும் இதையெல்லாம் உங்ககிட்டத்தான் கொடுப்பேன். அக்கா ! எனக்கும், என் பையனுக்கும் என் சம்பாத்தியம்,சேமிப்பு போதும்க்கா. இதை தயவு செய்து மறுக்காம ஏத்துக்கோங்க. நீங்க ஏத்துக்கலைன்னாலும் நான் வைச்சுட்டுப் போவேன் ! “சொல்லி சொர்ணம் எதிரில் வைத்தாள்.

‘என்ன உள்ளம். மனம்.!! இவள் சக்களத்தி இல்லை. சமத்தோழி. சகோதரி !’என்கிற உணர்வு… வெள்ளமாகப் பெருக்கெடுக்க….

“சுந்தரீஈ….”- என்று கூவி அவளைத் தாவி அணைத்தாள் சொர்ணம்.

அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மோனிகா..

“சித்தி..! “தழுதழுத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *