சைக்கிள் ப்ராண்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 6,836 
 
 

அடையாறு, சென்னை.

புதன்கிழமை, காலை பதினோருமணி. வெயில் சுட்டெரித்தது.

டாக்டர் மூர்த்தி தன் கிளினிக்கில் நோயாளிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். குடிப்பவர்களை அதிலிருந்து மீட்பதுதான் அவருடைய டாக்டர் தொழில். நிறையப்பேர் அவரிடம் தகுந்த சகிச்சை பெற்று தற்போது குடிப் பழக்கத்திலிருந்து மீண்டு, நல்லவிதமாக குடியும் குடித்தனமுமாக இருக்கிறார்கள்.

அப்போது நடுத்தர வயதில் சர்வ லட்சணமும் பொருந்திய ஒரு அழகிய குடும்பப் பெண்மணி டாக்டரைப் பார்க்க வந்தாள்.

வரவேற்பறையின் ஏ.சியின் இதத்தில் அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு டாக்டரைப் பார்த்தாள்.

“டாக்டர் என் பெயர் சுந்தரி. தாம்பரத்திலிருந்து வருகிறேன்….எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். என் கணவர் கடந்த மூன்று வருடங்களாக தினமும் மாலை நேரத்தில் குடிக்கிறார். குடிக்கும்போது மட்டும் நிறைய சிகரெட் புகைக்கிறார். அப்போது மட்டும் நான்வெஜ் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார். அவரது குடிப்பழக்கத்தை நீங்கதான் எப்படியாவது நிறுத்த வேண்டும் டாக்டர்…”

“உங்கள் கணவர் வருமானத்துக்கு என்ன செய்கிறார்?”

“சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் க்வாலிட்டி மானேஜராக இருக்கிறார்.

“தனியாகவா தினமும் குடிக்கிறார்?

“ஆமா டாக்டர்…. வீட்டில் எப்போதும் டபுள் ப்ளாக் ஸ்காட்ச் விஸ்கி ஸ்டாக் வைத்திருக்கிறார். மாலை எழுமணிக்கு வீடு வந்ததும், வீட்டின் பெட்ரூமில் தனியாக அமர்ந்து மூன்று பெக்குகள் மட்டும் குடிப்பார்; நிறைய சிகரெட் பிடிப்பார். வாட்ஸ் ஆப்பில் ‘சப்-வே’யில் க்ரில்டு சிக்கன் சலாட் ஆர்டர் செய்வார். ப்ரிட்ஜிலிருந்து பாட்டில்களில் தண்ணீர் எடுத்து அவற்றை விஸ்கியில் கலந்து குடிப்பார்.”

“நான்வெஜ் வீட்டில் சமைப்பதில்லையா?”

“இல்லை…. நாங்கள் சுத்த சைவக் குடும்பம். இவர்தான் இப்படி….”

“சரி, இந்த அப்ளிகேஷனை நிரப்பிக் கொடுங்கள்….அவரை வரும் சனிக்கிழம இதே நேரம் இங்கு கூட்டி வர முடியமா?”

“கண்டிப்பாக டாக்டர்.”

அப்ளிகேஷனை நிரப்பிக் குடுத்துவிட்டுச் சென்றாள்.

அவள் சென்ற பிறகு டாக்டர் சைக்கிள் பிராண்ட் நிறுவனத்தைப் பற்றி ‘கூகுளில்’ விலாவாரியாகப் படித்து நிறைய தெரிந்து கொண்டார்.

சனிக்கிழமை…

சுந்தரி தன் கணவருடன் வந்தாள்.

டாக்டர் மூர்த்தி அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

பார்ப்பதற்கு பரம சாதுவாக இருந்தான்.

“டாக்டர் என் பெயர் சுந்தரம். நான் இந்தக் குடிப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று தினமும் நினைத்துக்கொள்வேன். ஆனால் மாலை ஏழுமணிக்கு என் மனசும் உடம்பும் பரபரக்கும்…அமைதியாக மூன்று பெக் விஸ்கி குடித்துவிட்டு மட்டையாகி விடுவேன்.”

“பரவாயில்லை. விட்டுவிட வேண்டும் என்பதே நல்ல அறிகுறிதான்…அந்த கில்டி பீலிங் இருந்தாலே போதும்.”

டாக்டர் சுந்தரியிடம் “நான் இவரிடம் சற்றுத் தனியாகப் பேசவேண்டும்… நீங்கள் வெளியே காத்திருக்க முடியமா?” என்றார்.

சுந்தரி உடனே வெளியே சென்று கணவனுக்காக காத்திருந்தாள்.

“சுந்தரம் நாம் இருவரும் பேசுவது வீடியோவாக தற்போது பதிவு செய்யப்படும். இது எங்களுக்கு உங்களின் கேஸ்-ஹிஸ்டரி தயாரிக்க உதவும்.”

நிமிர்ந்து பார்த்தான். ஒரு காமிரா தொங்கிக் கொண்டிருந்தது.

“ஓகே டாக்டர்…”

அடுத்த ஒருமணிநேரம் கழித்து சுந்தரம் வெளியே வந்தான். மிகவும் சீரியஸாக காணப்பட்டான். வீட்டிற்கு செல்கின்றவரை சுந்தரியிடம் எதுவும் பேசவில்லை.

அன்று இரவும், அதைத் தொடர்ந்த நாட்களிலும் அவன் குடிக்கவில்லை. குடிப்பதை அறவே நிறுத்திவிட்டான்.

மாறாக தினமும் மாலை நேரங்களில் தன் பெண் குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவழித்தான். வாரம் இரண்டுமுறை மனைவியையும் குழந்தைகளையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். ஒரு நல்ல குடும்பத் தலைவனாக மாறிவிட்டான்.

சுந்தரிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இது எப்படி ஒரே நாளில் சாத்தியம்?

நான்கு வாரங்கள் சென்றன….

சுந்தரி டாக்டர் மூர்த்தியைப் நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்தாள்.

கண்களில் நீர்மல்க, “டாக்டர் நீங்கள்தான் என்னுடைய தெய்வம்….என் கணவர் குடிப்பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டார். அதனால் சிகரெட் புகைப்பதில்லை, நான்-வெஜ் ஆர்டர் செய்வதில்லை. நாங்கள் தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்கிறோம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அது எப்படி டாக்டர் ஒரு டிரீட்மெண்டும் இல்லாமல் அவரை மாற்றினீர்கள்?” என்றாள்.

“இது ஒன்றும் பெரிய வித்தையில்லை…ஒரு மனிதனுக்கு தன்னுடைய குறைந்தபட்ச வாழ்வாதார பெருளாதாரம் என்பது மிக முக்கியம்…அதைச் சொல்லி மிரட்டினால் அவன் அடங்கிவிடுவான். அதைத்தான் உங்கள் கணவரும் செய்தார்.

“புரியவில்லை டாக்டர்….”

“அன்று நடந்ததை அப்படியே வீடியோவில் அடுத்த அறைக்குச் சென்று பாருங்கள்… ஆனால் உண்மையை நீங்கள் உங்கள் கணவரிடம் மிகுந்த அன்பிலோ அல்லது சண்டையிடும்போதோ அல்லது வேறு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலோ மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சொன்னீர்கள் என்றால், அவர் மறுபடியும் குடிக்க ஆரம்பிக்க சாத்தியக்கூறுள் நிறைய உண்டு. அதனால் நீங்கள் ரகசியம் காக்க வேண்டும்…”

“கண்டிப்பாக டாக்டர்.”

டாக்டர் தன் உதவியாளரை அழைத்து, அந்த வீடியோவை சுந்தரிக்கு காண்பிக்கச் சொன்னார். வீடியோவைப் பார்த்தாள்.

-௦-

“சுந்தரம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள்?”

“சைக்கிள் பிராண்ட் ஊதுபத்திகள் தயாரிக்கும் நிறுவனத்தில்.”

“என்னது சைக்கிள் ப்ராண்டா? அங்கு என்னவாக இருக்கிறீர்கள்?”

“க்வாலிட்டி மனேஜராக…”

“உங்களது நிர்வாக இயக்குனர் ஆர்.என்.மூர்த்தியைத் தெரியுமா?”

“தெரியுமாவா? டாக்டர் அவர்தான் எங்க கம்பெனி ஓனர்… நான் வெறும் மேனேஜர் ரிப்போர்ட்டிங் டு ஜெனரல் மனேஜர். வருடத்திற்கு ஒருதடவை ஆனுவல்டே அன்று கம்பெனியின் வளர்ச்சிபற்றி எங்களிடம் அவர் நிகழ்த்தும் உரையைக் கேட்பேன். அவ்வளவுதான்…அதற்குமேல் அவரை எனக்குத் தெரியாது.”

“அவர் என்னுடைய சொந்த அண்ணன்…நாங்கள் ஒரிஜினலாக கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்… என் அப்பாவும், அண்ணனும்தான் இந்தக் கம்பெனியின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்… நான் எஸ்.என்.மூர்த்தி, அவர் ஆர்.என்.மூர்த்தி….வாரம் ஒருமுறை ஞாயிறுகளில் அண்ணன் வீட்டிற்கு செல்வேன். கம்பெனியின் முன்னேற்றம் பற்றி என்னிடம் நிறையப் பேசுவார்…நாளைக்கு அவரைப் பார்க்கச் செல்வேன்.”

“……………………….!”

“சைக்கிள் ப்ராண்டின் பேக்கிங்கை சாதாரண டிஷ்யூ பேப்பருக்கு மாற்றி, குறைந்த விலையில் தரமான ஊதுபத்திகளை அளிக்கும் முடிவு நாங்கள் சேர்ந்து எடுத்த முடிவுதான்…”

“அப்படியா டாக்டர்?”

“ஒரு க்வாலிட்டி மானேஜரான உங்களின் வேலை என்ன?”..

“ஊதுபத்திகளை நன்றாக முகர்ந்து பார்த்து அதன் வாசனையான சுகந்தத்தை உறுதி செய்வது….”

“வேறு வேலை ஏதாவது தேடிக் கொண்டிருக்கிறீர்களா?”

“ஐயோ….சத்தியமாக இல்லை. நான் இந்த வேலையில் சந்தோஷமாக இருக்கிறேன்.”

“ஊதுபத்தி கம்பெனியின் க்வாலிட்டி மானேஜராக இருக்கும் ஒருவரின் மூக்கில் உள்ள சிலேட்டுமப் படலத்தின் நுண்ணிய திசுக்கள் எப்போதும் உயிர்ப்புடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் உங்களது குடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்களால் அத்தகைய நுண்ணிய திசுக்கள் நாளடைவில் நசிந்து மரத்து விடும். உங்களால் எங்கள் கம்பெனி நஷ்டப்படுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் நீங்கள் இந்த வேலையை விட்டுவிடுவது எங்களுக்கு நல்லது. நான் இதுபற்றி என் அண்ணாவிடம் நாளை பேசுகிறேன்….”

“வேண்டாம் டாக்டர் ப்ளீஸ்…. எனக்கு என் வேலையும், இந்தச் சம்பளமும் மிக முக்கியம். இந்த நிமிஷத்திலிருந்தே சத்தியமாக நான் குடி, சிகரெட்டை விட்டுவிடுகிறேன். என்னை நீங்கள் நம்பலாம்.”

“சரி…நம்புகிறேன். சத்தியத்தை நீங்கள் மீறினால் உங்கள் வேலை போய்விடும்…என் டாக்டர் தொழில் எனக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட என் அண்ணனின் கம்பெனி எனக்கு மிக முக்கியம்…”

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.”

தொய்ந்துபோய் வெளியேறினான். வீடியோ நின்றது.

-௦-

சுந்தரி டாக்டரின் அறைக்கு வந்தாள்.

“நல்லவேளை டாக்டர், கம்பெனி ஓனர் உங்கள் ப்ரதர் என்பதால், எல்லாம் நல்லபடியாக முடிந்தது.”

“அவர் ஒன்றும் என் ப்ரதர் இல்லை. கூகுளில் சைக்கிள் ப்ராண்ட் பற்றி படித்து தெரிந்து கொண்டேன். ஓனர் பெயர் மூர்த்தி என்பதால் என்னால் எளிதாக பொய் சொல்ல முடிந்தது. ஒருவேளை அப்படியில்லை என்றால் வேறுமாதிரி பொய் சொல்லியிருப்பேன்.”

“ரொம்ப நன்றி டாக்டர்.”

“குடிப்பவர்களை திருத்துவதற்கு அவர்களை மிரட்டலாம், யாரையும் பாதிக்காத பொய்கள் சொல்லலாம்….நான் அதைத்தான் செய்தேன். நீங்கள் கணவருடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

சுந்தரி தன் இரு கைகளையும் கூப்பி விடைபெற்றுக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *