சேலத்தார் வண்டி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 20,290 
 
 

சேலத்தார் வண்டியை முதன் முதல் எப்போது கூப்பிடச் சென்றேன் என்பது சரியாய் நினைவில் இல்லை. மூடு பனியில் வரும் வாகனங்கள் மெல்லியதாகத் தெரிவதுபோல ஒரு நினைவு மட்டும் இருக்கிறது. தாத்தாவுக்குக் கடுமையான காய்ச்சல் வந்துவிட கம்பவுண்டர் கோபாலனை அழைத்து வரச் சேலத்தார் வண்டியைக் கூப்பிடச் சென்ற காட்சி மட்டும் தெரிகிறது. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அப்பா என்னை அழைத்து, “”பெருமாள் கோயில் நந்தவனத்துக்குப் பின்னால போயி சேலத்தாரு வண்டி இருக்கும். மாடி வீட்ல சொன்னாங்கன்னு அதைக் கூப்பிட்டுக்குனு போயி கம்பவுண்டரை ஏத்திகிட்டு வா” என்றார். எங்கள் தெருவில் எல்லாமே ஓட்டு வீடுகள்தாம் எங்கள் வீடு மட்டுமே மாடி வீடாக இருந்தது.

சேலத்தார் வண்டிநானும் வண்டியில் போகும் ஜோரில் கிளம்பி விட்டேனே தவிர, நான் சேலத்தாரையோ அவர் வண்டியையோ அதுவரை பார்த்ததில்லை. எங்கள் தெருவின் கடைசியில் ஒரு பெருமாள் கோயில் இருக்கிறது. அக்கோயிலின் வாசலின் பக்கத்திலேயே ஒரு தெரு சிறியதாகச் சென்று ஏதோ கோபித்துக் கொண்டதுபோல் பட்டென்று திரும்பும். அந்தத் தெருவில் சென்றால் உடனே கோயிலின் பின்னால் நந்தவனம் தெரியும். அங்கு சென்று பார்த்தபோது வண்டியும், இரண்டு மாடுகளும் அமைதியாக நின்று கொண்டிருந்தன.

யாரைக் கேட்பது என்று திருவிழாவில் அப்பா அம்மாவைத் தவற விட்ட குழந்தையைப்போல் விழித்துக் கொண்டிருந்தபோது, என் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் வேணு பக்கத்தில் இருந்த குடிசை ஒன்றிலிருந்து வந்தான். அவன் நன்றாகவே படிப்பவன்.

“”என்னடா பாலா இங்க வந்திருக்க என்று அவன் கேட்க, நானோ அவனுக்குப் பதில் சொல்லாமல் ஒங்க வீடு இங்கதான் இருக்கா?” என்றேன்.

“”ஆமாண்டா அதுதான்” என்று வண்டிக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டைக் காண்பித்தான். மேலும் விசாரித்ததில் அவனுடைய அப்பாதான் சேலத்தார் என்பதுவும் சேலம் பக்கத்திலிருந்து அவன் முன்னோர் வந்ததால் சேலத்தார் எனும் பெயரே நிலைத்து விட்டது என்றும் தெரிந்தது. இதுதான் நான் சேலத்தாரை அறிந்த புராணம்.

அப்பொழுதெல்லாம் வளவனூரில் ஆட்டோவெல்லாம் வரவில்லை. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து குமாரக்குப்பம், அற்பிசம்பாளையம், சாலையாம் பாளையம் போவதற்கும் சேலத்தார் வண்டிதான் அனைவர்க்கும் உதவியாக இருந்தது. விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரிக்கும், திரும்ப பாண்டிச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கும் பாசஞ்சர் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதுவும் காலை ஐந்தரை வண்டியில் விழுப்புரத்திலிருந்து நிறையப் பேர் இறங்குவார்கள். அதேபோல இரவு ஒன்பதரை வண்டிக்கு விழுப்புரம் செல்ல அதிகம் பேர் ஏறுவார்கள். ஒவ்வொரு ரயிலுக்கும் சரியாக சேலத்தார் மாட்டு வண்டி நிற்கும். சேலத்தார் வண்டிக்குப் பக்கத்திலேயே நிற்கும் மண்ணாங்கட்டியின் வண்டியில் யாரும் ஏற மாட்டார்கள். ஏனெனில் அவர் சற்றுக் கறார் பேர்வழி. பேரமெல்லாம் கிடையாது. சேலத்தார் வண்டி சவாரி போய் விட்டு வரும் வரைக்கும் கூட சிலர் காத்திருப்பதுண்டு.

தாத்தாவுக்கு அடிக்கடி காய்ச்சல் வரும். தவிர, தொடையில் பிளவை மாதிரி ஒரு கட்டி வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. எண்பத்திரண்டு வயதான அவர் அடிக்கடி “”என் சீட்டை அவன் எடுக்கிறான். ஆனா என்னைக் கொண்டு போக வேணாம்னு மறுபடியும் வச்சுடறான். ஏன்னெ தெரியலெ” என்று புலம்புவார்.

இப்போது இருபத்தைந்து வயதான எனக்கு இராமாயணம், பாரதம் எல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்கக் காரணம் சேலத்தார்தான். அடிக்கடி தாத்தாவிற்காக

அவரைப் பார்க்கப் போய் எனக்கும் அவருக்கும் மிகவும் பழக்கமாகி விட்டது. மாலை பள்ளி விட்டதும் ஸ்டேஷனுக்குப் போய் விடுவேன். ரயில் வரும்வரை அவர் என்னிடம் பேசிக் கொண்டிருப்பார்.

வேணு நன்றாகப் படிப்பதில் அவருக்குப் பெருமை அதிகம்.

“” அவனை எப்படியாவது எஞ்சினீயர் ஆக்கணும்பா” என்பார். அடிக்கடி “”நீயும் என் புள்ள மாதிரி நீ இன்னும் நல்லா படிக்கணும்” என்று கவலையுடன் கூறுவார். அவருடன் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. சிரிக்க சிரிக்கப் பேசுவார்.

சீர்காழியில்தான் எனக்கு திருமணம் முடிந்தது. மாலை ஐந்தரை வண்டியில் நானும் என் புது மனைவியும் வந்து இறங்கியவுடன் எங்களது பெட்டி, படுக்கைகளையும் தூக்கிக் கொண்டு வந்து அவரது வண்டியில் ஏற்றினார்.

“”இருங்க, இருங்க” என்று தடுத்தபோது

“”சும்மா இருப்பா. ஏம்பா நீ பத்திரிகை வைச்சதுக்கு கல்யாணத்துக்குதான் வர முடியல: இதாவது செய்யக்கூடாதா?” என்று கண்டிப்புடன் கேட்பதுபோல் கேட்டார்.

என் மனைவியைப் பார்த்து, “”வலது காலை வைச்சு ஏறு தாயி இன்னும் ஒரு வருஷத்துல பேரப் புள்ளயோட தான் வண்டியில ஏறணும்” என்று சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது.

பதிலுக்கு என் அப்பாவும் “”பொறந்தா ஒங்க பேருதான் சேலத்தாரே அவன் வைப்பான்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

“”இந்த தடவ ஊட்டுக்குப் போறதுக்கு வண்டி சத்தம் கொடுக்கக் கூடாது. ஆமாம் சொல்லிட்டேன். பொண்ணு மாப்பிள என் வண்டியில ஊர்கோலம் போறாங்கல்ல” என்று மிக மகிழ்ச்சியுடன் சேலத்தார் சொல்லி விட்டார்.

காலம்தான் மிக வேகமாக ஓடியது. சென்னையில் ஒரு நாளிதழில் எனக்கு நிருபராக வேலை கிடைத்து, படிப்படியாக வேகமாக முன்னேற்றம். துணை ஆசிரியர் நிலைக்கு உயர்ந்தேன். சொந்த ஊரான வளவனூர் மிகத் தூரமாக நெருங்க முடியாததாகப் போய்விட்டது. ஆயிரம் வசதிகள் இருந்தும் மனத்தின் ஓரத்தில் நீருக்குள் பாசிபோல் கவலை ஒட்டிக் கிடந்தது. மழைக்கேங்கும் சாதகப்பறவைகள் போல நானும் என் மனைவியும் ஒரு குழந்தைக்கு ஏங்கினோம்.

சேலத்தார் சொன்னதுபோல ஓராண்டிற்குள்ளேயே பிறந்திருக்க வேண்டும். திருமணமான உடனே தரித்த கரு இவ்வுலகைக் காணப் பிடிக்காமல் மூன்றாம் மாதத்திலேயே கலைந்து விட்டது. விழுப்புரம் பண்டாரி ஆஸ்பத்திரியில்தான் அவளைச் சேர்த்திருந்தது. மயக்கம் தெளிந்த அவளைத் தேற்றவே முடியவில்லை. ரயிலில் பித்துப் பிடித்தவள்போல் உட்கார்ந்திருந்தாள். ஸ்டேஷனிலிருந்து மெதுவாகக் கைத்தாங்கலாக அவளைப் பிடித்து அழைத்து வந்தேன். சேலத்தாரைப் பார்த்ததும் புடவைத் தலைப்பை வாயில் திணித்துக் கொண்டு விம்ம ஆரம்பித்தாள்.

அவரோ “”என்னா தாயி ஊட்டுக்கு வர்ற பொண்ணு கண்கலங்கக் கூடாது. தோ பாரு. அடுத்த வருஷமே பேரன் வந்திடுவான். கண்ணைத் தொடைக்கற மாதிரி நடந்ததையும் தொடைச்சிட்டுப் போ” என்று ஆறுதல் கூறினார். ஆனால் அவர் சொன்ன அடுத்த வருஷம் என்பது அடுத்த பத்தாவது வருஷமாகி விட்டது. அதற்குள் அப்பா காலமாகிப் போய்விட்டார். வளவனூர் வீட்டையும் இருந்த கொஞ்ச நிலங்களையும் விற்று விட்டு அம்மாவும் எங்களுடன் வந்து விட்டார்.

இப்போது அம்மாவையும் அழைத்துக் கொண்டு நாங்கள் மயிலம்

வந்திருக்கிறோம். பிறந்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்குள் குல தெய்வம் கோவிலுக்குச் சென்று முடி இறக்கி விடுவது எங்கள் குடும்ப வழக்கம். குழந்தைக்கு இப்போது பத்தாவது மாதம் முடிந்திருக்கிறது. கோயில்களில் சாதாரண நாள்களில் கூட இக்காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பக்தி அதிகமாகி விட்டதா அல்லது ஒரு வேளை பயம் அதிகமாகி விட்டதா என்று தெரியவில்லை. இதைத்தான் பயபக்தி என்று சொல்கிறார்களோ? என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

சென்னையில் நல்ல வெளிச்சம் வந்துதான் கிளம்பினோம். இடையில் ஓரிடத்தில் நிறுத்திக் குழந்தைக்குப் பால் கொடுத்தோம். மயிலம் வரும்போது மணி பத்தாகி விட்டது. கோயிலில் நான்கு திருமண கோஷ்டிகள் வேறு வந்து விட்டனர். முடி இறக்கி அர்ச்சனை செய்து மாவிளக்கும் போட்டு முடிய அவை நான்கு மணி நேரத்தை எடுத்துக் கொண்டு விட்டன. கூட்டேரிபட்டு சென்று மதிய உணவை ஒரு விடுதியில் முடிக்கும்போது மதியம் மூன்று. வண்டியைக் கிளப்பும் போது நான் அம்மா, “”இன்னும் நேரம் இருக்கும்மா ஊருக்குப் போயிட்டுப் போகலாமா?” என்று கேட்டேன்.

“”எந்த ஊருக்குடா?”

“”என்னாம்மா, நம்ம ஊருக்குதாம்மா, வளவனூருக்கு”

“”அங்கதான் இருந்த எல்லாத்தையும் வித்துட்டு வந்திட்டோமே? இன்னும் அங்க யாரு இருக்காங்க?”

“”என்னாம்மா அப்படி கேட்டுட்ட பக்கத்துவீட்டு சுப்புப் பாட்டி இல்லியா? இன்னும் பெருமாள்கோயிலு, செட்டியார் கடை, சத்திரத்துல ரெட்டியார் ஓட்டலு, கடைத்தெரு, நான் படித்த ஸ்கூலு, ஏரிக்கரை, ரயில்வே ஸ்டேஷன், சேலத்தார் வண்டி எல்லாம் இருக்குல்ல”

“”கொழந்தையும் வச்சுகிட்டு அங்கெல்லாம் போயி சுத்தப்போறியா?”

“”இல்லம்மா அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு பாத்துட்டு சீக்கிரம் பொறப்பட்டுடலாம். எங்கியுமே எறங்க வாணாம்”

கடைத்தெருவும் சத்திரமும் அடையாளமே தெரியவில்லை. சாலையோரக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு விழுப்புரம் ரோடு மிகவும் அகலமாக இருந்தது. செட்டியார் கடை இருந்த இடத்தில் ஒரு ஜவுளிக் கடை குடியேறி இருந்தது. பெருமாள் கோயில் கோபுரம் கீற்றுத் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகம் செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன். சென்னை போனதும் நம்மால் முடிந்த சிறு தொகை கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சார்யார் பேருக்கு அனுப்ப வேண்டும்.

எங்கும் இறங்க வேண்டாமென்று சொல்லி விட்டேனே தவிர சேலத்தார் வீட்டருகில் என்னால் இறங்காமலிருக்க முடியவில்லை. சூரியன் இறங்கத் தொடங்கிய நேரமானதால் வீட்டு வாசலில் கட்டில் மீது அவர் மெல்லிய உடலுடன் அமர்ந்திருந்தார். பக்கத்தில் அவர் வண்டி நின்று கொண்டிருந்தது. ஆனால் அதன் சக்கரங்களின் சட்டங்கள் சில காணாமல் போயிருந்தன. அது இப்போது பயன்பாட்டில் இல்லை எனப் புரிந்து கொண்டேன்.

கார் வந்து நின்ற சத்தம் கேட்டு அவர் திரும்பிப் பார்த்தார். நான் மட்டும் இறங்கினேன்.

கண்களுக்கு மேல் கையை வைத்துக் கொண்டு, “”யாரு மாடி வூட்டுத் தம்பியா?” என்று கேட்டார்.

“”பரவாயில்லியே, சரியா அடையாளம் கண்டு பிடிச்சுட்டீங்க” என்றதற்கு,

“” எப்படிய்யா ஒன்னை மறக்க முடியும்?” என்றார்.

“”என்னாங்க வண்டி இப்படி கெடக்குது?”

“”ஆமாய்யா, யாரும் இப்ப இந்த வண்டியில ஏறதில்ல. ஆட்டோதான் அஞ்சு வருஷமாச்சு. மாட்டெல்லாம் வித்துட்டேன். வண்டியை யாரும் கேக்க மாட்டேங்கறாங்க. ஒடைக்க மனசு வரல்ல”

“”வேணு எங்க இருக்கான்?”

“”அதான்யா ரொம்ப சந்தோஷம். இந்த வண்டியை வச்சுதான் அவனை நான் சொன்ன மாதிரி இஞ்சினியர் ஆக்கிட்டேன். மாயவரத்துல வேலை. ஒவ்வொரு சனி ஞாயிறும் வந்திடுவாங்க. எங்களை அங்கியே கூப்பிடறான். சரி, இருக்க முடிஞ்ச மட்டும் இருப்போம்னு இருக்கேன். ரெண்டு புள்ளைங்க. ஆமாய்யா நீ எப்படி இருக்க?”

“”ஒங்க ஆசிர்வாதத்துல நல்லா இருக்கேன் காரு என்னுடையதுதான்” என்று சொன்னவன் காரின் அருகில் சென்று கதவைத் திறந்தேன். குழந்தையுடன் என் மனைவியும் அம்மாவும் இறங்கியதும் சேலத்தாரின் முகம் பெரிய தாமரைப் பூப் போல மலர்ந்தது.

“” என்னாய்யா சொல்லவே இல்லியே இவங்கள்ளாம் வந்திருக்காங்கன்னு இந்த நேரம் பாத்து வீட்ல வேற கடைத் தெருவுக்குப் போயிருக்காங்க” என்று சொன்னவர், “”வாடா மொட்டைப் பேராண்டி” என்று குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டார். அவனும் முன்பே தெரிந்தவன் போல அவரிடம் போய் விட்டான்.

குழந்தையின் தலையைத் தடவியவர், “”சந்தனம் போறாதப்பா. இன்னும் நெறைய தடவணும்” என்று சொன்னவர் “”நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டவாறே குழந்தையை அவர்களிடம் தந்தார்.

அடுத்துத் தன் இடுப்பின் வேட்டியில் சொருகியிருந்த நான்காய் மடித்து வைக்கப்பட்டிருந்த பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து, “”டேய் நல்லாப் புடிச்சுக்கோ” என்று குழந்தையிடம் கொடுத்தார். அத்துடன் நில்லாமல் மறுபடியும் குழந்தையைக் கையில் வாங்கினார்.

வண்டிக்கருகில் சென்றார். வண்டியில் குழந்தையை வைத்துப் பிடித்துக் கொண்டு,

“”டேய், பேராண்டி, இது ஒங்க அப்பாருக்குத் தாத்தா ஏறிய வண்டி. அப்புறம் ஒங்க அப்பாவும் அம்மாவும் ஏறிய வண்டி. இப்ப நீயும் ஒக்காந்திருக்கற வண்டி” என்று கூறிக்கொண்டே கண்களில் நீர் வரச் சிரித்தார். அது எந்தக் கண்ணீர் என்று தெரியவில்லை. எனக்கோ சேலத்தாரைவிட அந்த வண்டியைப் பார்த்தால்தான் பரிதாபமாகத் தெரிந்தது.

– மே 2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *