(1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஸ்கூட்டரை கம்யூனிட்டி ஷெட்டில் விட்டுவிட்டு, பசுபதி படிக்கட்டுகளில் ஏறினார். மூன்றாவது மாடியில் உள்ள குவார்ட்டர்ஸ்.
கணவனுடன் சீக்கிரமாகச் சண்டை போடணும் என்று நினைத்தவளாய், அவசரமாகக் கதவைத் திறக்கப்போன காமாட்சி, “அவரே தட்டட்டும் என்று கோபத்தோடு நின்றாள்.
பகபதி, கதவைத் தட்டினார்.
“எனக்கென்ன காதா செவிடு? ஒரு தடவ தட்டினா போதாதாக்கும்” என்று சொல்லிக்கொண்டே காமாட்சி கதவைத் திறந்தாள்.
பகபதி எதுவும் பேசவில்லை. வாஷ்பேசினில் முகத்தைக் கழுவிக் கொண்டார். உள்ளேபோய் ஆடைகளைக் களைந்துவிட்டு, ஒருநாலு முழுவேட்டியைக் கட்டிக்கொண்டு வராந்தாவில் வெறுமையாக இருந்த ஒரு சாப்பாட்டுத் தட்டையும், மனைவியையும், உள்ளே சமையலறையும் மாறி மாறிப் பார்த்தார்.
காமாட்சியால் தாள முடியவில்லை. என்றாலும் அமைதியாகவே பேச்சைத் துவக்கினாள்.
“ராஜகோபாலன் வந்திருந்தார்.”
“அடடே, அப்படியா. நம்மவீட்டுக்கெல்லாம் சாதாரணமாய் வரமாட்டானே. என்ன விஷயமாம்.?”
“அவர் மகள் ரேவதிக்குக் கல்யாணமாம். நோட்டிஸ் கொண்டு வந்தார்.”
“நல்லா இருக்கட்டும்.”
“ராஜகோபாலன், குடும்பத்தப் பத்திக்கவலப்படுற மனுஷன். பொறுப்பான தகப்பன். நல்லாத்தான் இருப்பார்.”
“சரி. நான் நல்லா இல்லாட்டா போறேன். விஷயத்தைச் சொல்லு. மாப்பிள்ளை யாராம்?”
“எல்லாம் தெரிஞ்ச இடம்தான். திருச்சில பெல்லுல வேலை பார்க்கிற சாரங்கன்தான்.நம்ம மோகனாவைக் கேட்டாங்கல்லா? அவன்தான்.”
“அடடே. அந்தப் பையனா. ரொம்ப நல்ல பையனாச்சே.”
“அதனாலதான் மோகனாவுக்கு நகை போட்டாலுஞ் சரி, போடாட்டாலுஞ் சரி, கட்டிக் கொடுங்கன்னு கேட்டாங்க. இந்த வீட்ல நல்லது நடக்கறதுதான் ஒங்களுக்குப் பிடிக்காதே”
பகபதி, மனைவியை ஏறிட்டுப் பார்த்தார். உள்ளறையில் இருந்துதன்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தமகள் மோகனாவைப் பார்த்தார். நடக்கப்போகும் சண்டையை எதிர்பார்த்து ரசனையுடன் நின்றமகனையும், லைட்டுப்போட்டால்மருமகள் திட்டுவாள் என்று பயந்தவள் மாதிரி இருட்டு வீட்டுக்குள் குருட்டுப் பூனை மாதிரி பதுங்கிக் கிடந்த அம்மாவையும், அவள் முழங்காலைப் பிடித்துக் கொண்டிருந்த தங்கை சிவகாமியையும் பார்த்தார்.
“நான் மட்டும் முடியாதுன்னா சொன்னேன்? தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்கேன், சீக்கிரமா முடிஞ்சிடும். ஆறுமாசம் பொறுங்கன்னு சொன்னேன். ஆறு மாசம் பொறுக்க முடியாதவன், நம்ம பொண்ணுகிட்டே ஏதாவது குற்றம் குறை இருந்தால் ஆயுள் முழுதும் பொறுப்பான் என்கிறது என்ன நிச்சயம்?”
“ஒவ்வொருத்தர் வீட்டில் அக்காள வச்சிட்டுத் தங்கச்சிக்குக் கல்யாணம் நடக்குது. இந்த வீட்ல அத்தக்காரிக்காக, என் பொண்ணு மொட்ட மரமாக நிக்க வேண்டியதிருக்கு, ஒங்க தங்கைக்கு அவளோட தலவிதிப்படி கல்யாணம் நடக்கல. அந்த விதிய என் பொண்ணுமேலே சுமத்துனா எப்படி?”
“இந்தா பாரு காமாட்சி. வீணய் மேல மேல பேசிக்கிட்டு போகாதே. சிவகாமி, மோகனாவைவிட வயசிலே பெரியவள். அவளுக்குக் கல்யாணம் பண்ணுமுன்னே மோகனாவுக்கு நடக்காது. அப்படி நடக்கிறதும் நாகரீகமல்ல.”
“என் மவளும் ஒங்க தங்கச்சியும் ஒண்ணு? கழுதயும் கவுரிமானும் ஒண்ணுயிடுமா? ஏற்கனவே அவளுக்கு வயசாயி கிழட்டு மாடு மாதிரி ஆயிட்டா. அவளுக்குக் கிழட்டு மாப்பிளகூடக் கிடைக்கமாட்டான். இதுக்காவ என் பொண்ண பலியிடணுமுன்னா முடியாது. நீங்க சம்மதிச்சாலும் சரி இல்லாட்டாலும் சரி, நான் நடத்தப்போறேன்.என் பொண்ணும் ஒங்கதங்கச்சி மாதிரி கிழவியா போறத என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.”
காமாட்சி அழுகிறாளா அல்லது கணவனை அழவைக்கிறாளா என்று புரிந்துகொள்ள முடியாத அந்த நிலையில், இருட்டறைக்குள் இருந்த கிழவி தட்டுத் தடுமாறி வெளியே வந்து, தன் தலையில் பலங்கொண்ட மட்டும் அடித்துக் கொண்டாள். மகனிடம் முகம் பார்த்து கேட்டாள். கூடப் பிறந்த தங்கச்சிய நாயவிடக் கேவலமாப் பேகறாள். நீ பார்த்துக்கிட்டு இருக்கியே. இருக்கியே.?”
மருமகள் காமாட்சியும், தனது தலையிலும் அடித்துக் கொண்டு, மாமியாரிடம் சொல்லால் மல்லாடினாள்.
“நீ என்னைக்கு இந்த வூட்லவெள்ளைச்சேலையோட காலடி வச்சியோ அன்னைக்கேஎன்புருஷன் எனக்கில்லாமப்போயிட்டாரு”
மோகனாவும் சிவகாமியும் தத்தம் அம்மாக்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்கள். பகபதி, இவர்கள் சத்தம் பிளாக்கின் இதர காதுகளுக்குக் கேட்க வேண்டாம் என்று நினைத்தவர்போல், இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஒட்டை ரேடியோவைச் சத்தமாக வைத்துவிட்டு வெளியே நடந்தார்.
பசுபதிக்கு, உச்சி முதல் உள்ளங்கால் வரை வலித்தது. நெற்றிப் பொட்டைத் தேய்த்து விட்டுக்கொண்டு, எதிரே இருந்த மைதானத்தில் போய் உட்கார்ந்தார்.
பசுபதி, அலவலகத்தில் நேர்மையாக நடப்பவர். கண்டிராக்டர்களுடன் கிசுகிசு பேசி அறியாதவர். இதனால் ‘கிககிக பேசிய பெரிய அதிகாரிகளால் முட்டுக்கட்டையாகக் கருதப்பட்டு, ஜீவனில்லாத எலும்புகட்டையாக நடத்தப்பட்டவர்.அவருக்குக் கீழே இருந்தவர்கள் மேலே போய்விட்டார்கள். அவருக்குச் சமமான பொறுப்பில் இருக்கும் இளைஞர்கள் கூட கார்வாங்கிவிட்டார்கள். சிலர், ‘நான் வாங்கித் தரேன். நீரு பேசாமக் கையெழுத்து மட்டும் போடும் என்று கூட அவரை அசைத்தார்கள். அவர் அசைந்து கொடுக்கவில்லை.
அன்று பகபதிக்கு முக்கியமான வேலை இருந்தது. மனைவியின் நச்சரிப்பில் பத்தாண்டுகளுக்கு முன்பு, சகாய விலையில் ஒரு பிளாட் வாங்கிப் போட்டிருந்தார். அவர் வேலைபார்க்கும் கம்பெனி, வீடு கட்டுவதற்காக ஊழியர்களுக்குக் கடன் கொடுக்க முன்வந்தது. பலர் கட்டிய வீட்டையே இரண்டாவதாகக் கட்டிக் கடன் வாங்கி இருக்கிறார்கள். பசுபதி மீண்டும் மைைவியின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் கடனுக்கு மனுப்போட்டார்.’லேயவுட் அங்கீகாரமானால் கடன் கிடைக்கும்.
வரைபடங்கள் அடங்கிய ஒரு காகிதக் கட்டுடன், பசுபதி ஸ்கூட்டரில் ஏறினார். முந்தின நாள் நடந்த சண்டைக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலோ அல்லது அவரை அவமானப்படுத்தும் வகையிலோ பார்த்த சக பிளாக் ஆசாமிகளைப் பார்த்தும் பார்க்காதவர்போல் புறப்பட்டவர், நோ என்ட்ரியில்’ ஸ்கூட்டரை விட்டு விட்டார். போக்குவரத்து கான்ஸ்டேபிள் நேரிடையாகவே கேட்டுவிட்டார்.
“நோ என்ட்ரி போர்டு போட்டிருக்கே. பார்க்கலியா?”
“பார்க்கல வார்.”
“சரி. பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. உங்க பேரு அட்ரிளையச் சொல்லுங்க”
பசுபதி, அவரிடம் முகவரியைக் கொடுத்துவிட்டு, லே அவுட்டை அங்கீகரிப்பதற்காக உள்ள அலுவலகம் வந்தார். காகிதக் கட்டைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்.
அவரது லே அவுட் பிளான் ஆயிரத்தெட்டு கேள்விக் கணைகளுடன் திரும்பி வந்தது. அதேசமயம், அவரது பிளாட்டுக்கு அருகேயுள்ள பிளாட்காரருடையபிளான்.அங்கீகாரத்துடன் வந்தது.
பசுபதியால் தாள முடியவில்லை. ‘என்ன உலகம். என்ன மனிதர்கள். சீச்சி’
அவருக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அந்தப் பாடாவதி ஸ்கூட்டரை விற்றால் என்ன? பிளாட்டையும் விற்றால் என்ன? இரண்டிலேயும் கிடைக்கிற பணத்தில் தங்கச்சிக்கு ஒரு வழி பண்ணிடலாம்.
ஒரு மாதத்தில், அவர்தங்கை சிவகாமிக்கு, கமாரான இடத்தில் முப்பத்தாயிரம் ரூபாய் விலையில், ஒரு பையன் கிடைத்தான். காமாட்சி, தாலிக்கட்டப்படும்வரை திட்டியதைக் கணக்கில் எடுத்துப் பார்த்தாலும், கல்யாணம் நன்றாகத்தான் நடந்தது.
சிவகாமி, கணவன் வீட்டுக்குப் போய்விட்டாள். ஆனால், அவளால் எழுந்த பிரச்சினைகள் போக மறுத்தன.
காமாட்சியும் சரி, பிள்ளைகளும் சரி, பசுபதியை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். இப்போதெல்லாம், அவர் துணிமணிகளை அவர்தான் துவைத்துக் கொள்ளவேண்டும். மனைவிக்காரி, மனம் போன போக்கில், மஞ்சகடுதாசி கொடுக்கும் அளவிற்கு, பல புடவைகளை இன்ஸ்டால்மெண்டில் வாங்கினாள். பிள்ளைகள் கண்ட கண்ட சினிமாக்களுக்குப் போனார்கள். அவர், இலைமறைவு காய மறைவாகக் கேட்டால், “அத்தைக்கு நீங்க முப்பதாயிரம் செலவழிக்கும்போது, நாங்க கேவலம் ஒரு இரண்டாயிரம் ரூபாய் செலவளிக்கக்கூடாதா?” என்று பதிலடி கொடுத்தார்கள்.
ஒரு மாதம் ஓடியது.
கணவன் நீட்டிய முப்பது நூறு ரூபாய் நோட்டுக்களை ‘இப்பவாவது புத்தி வந்ததே என்கிற மாதிரி காமாட்சி சிரித்துக் கொண்டே வாங்கினாள். அவர் வேலையில், அதற்கு மேலே கூட வாங்கலமாம். பணத்தை வாங்கி வைத்துவிட்டு, முதல் தடவையாக அவருக்கு மோர் கொண்டு வரப்போனாள். இதற்குள் மகன்களும் மகள்களும் அவரை மொய்த்துக் கொண்டார்கள். டி.வி. வாங்கணும். டைனிங் டேபிள் வாங்கணும். ஃபிரிட்ஜ் வாங்கணும். எதிர் வீட்ல வாங்காத சிலதையும் வாங்கணும்.
பகபதி அமைதியாகப் பேசினார்.
“நானும் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன், காமாட்சி. இந்த பணமும் முதல் தவணதான். இன்னும் தருவாங்க”
“அய்யோ. மெள்ளபேகங்க. எதிர் வீட்டுக்காரிக்குப் பாம்புக் காது.”
“அதுக்கென்ன… நல்லா யோசித்துப் பார்த்தேன். நான் வாங்குற சம்பளத்தையும் நீங்கள் செலவழிக்கிற செலவையும் பார்த்தா.மோகனாவுக்குக் கல்யாணத்துக்காகப் பைசா கூட மிச்சம் பண்ண முடியாது. அதனால வாலண்டியரா ரிட்டையராகிட்டேன். கிராசுவிட்டி பணம் முப்பதாயிரம் ரூபாய் வந்தது. மாதம் முன்னுறு ரூபாய் பென்ஷன் வரும்.”
காமாட்சி காட்டு கத்தலாய்க் கத்தினாள். அண்டை வீட்டுக்காரிக்கு காது கிழியும்படி கத்தினாள்.
“யாரைக் கேட்டு ரிட்டையரர் ஆனிங்க? ஒங்களுக்குப் பைத்தியமா? உத்தியோகத்துலே இருந்தாதானே மோகனாவுக்கு ஏதாவது இடம் வரும்?கெடுத்துத் தொலைச்சிட்டீங்களே கெடுத்து.”
“கவலப்படாத காமாட்சி! நம்ம ஆடிட்டர் ஜெயராமன் மகன் வக்கீல் கந்தரம் இருக்கானே அவனுக்கு மோகனாவ கொடுக்கிறதா செட்டில் பண்ணிட்டேன்.நம்ம வரதராஜன்தான், முடிவு பண்ணிக் கொடுத்தான்.”
“ஒங்களுக்குப் பைத்தியமா. நீங்க பினாத்துர வரதராஜன் மகளுக்கும் கந்தரத்திற்கும் இன்னைக்கு நிச்சயதாம்பூலம்.”
பசுபதி திகைத்தார்.
“என்னது மோகனாவுக்கு செட்டில் பண்றதாகச் சொல்லி என்கிட்ட ஆயிரம் ரூபாய் கடன் வாங்குன வரதராஜனா இப்படிப் பண்ணிட்டான்? அவனா எனக்குத் துரோகம் பண்ணிட்டான்?”
காமாட்சி, மீண்டும் கத்தினாள்.
“நீங்க ஒரு சரியான பைத்தியம். இந்த ரூபாயை வச்சி ஒங்க தங்கச்சிக்குப் பிரசவ செலவு பார்க்கலாமுன்னு நினைக்காதீங்க. சரியா சீர்வரிசை பண்ணலியாம். பிரசவத்துக்கு வர முடியாதுன்னு ஒரு லெட்டர் எழுதியிருக்காள். நன்றி கெட்ட நாய்.”
இதுவரை மெளனமாக இருந்த கிழவி, இப்போது தட்டுத் தடுமாறி வந்தாள்.
“ஏண்டியம்மா! எதுக்காக என் மவள கரிச்சுக் கொட்டுற? ஒன் மவளுக்குச் சீக்கிரமாக கல்யாணவமாவணுமுன்னு ஒன் புருஷன், நான் பெத்த மவள அவசர அவசரமா பாழும் கிணத்துல தள்ளிட்டான்.”
“வேலையை விட்டாச்சுன்னா குவார்ட்டர்ஸைக் காலி பண்ணிட்டுக் குடிசைக்குப் போக வேண்டியதுதானா?” என்றான் மூத்த மகன் சபாபதி.
“பைத்தியக்கார அப்பா இருக்கிற வீட்ல நம்மால இருக்க முடியாது” என்று எங்கோ புறப்படப் போனான் இளைய மகன்.
“நீங்களே சொல்லுங்கப்பா. முன்னபின்ன யோசிக்காமல் பைத்தியக்காரத்தனமா வேலய விடலாமா?” என்றாள் மோகனா. பகபதியை கைப்பிடித்த காமாட்சி, கணவனை, அங்கேயே உதறினாள். மாறி மாறி உதறினாள்.
“நீங்க பைத்தியம். பைத்தியம். பைத்தியமேதான். அய்யோ, யாராவது இந்த பைத்தியத்த எங்கேயாவது சேருங்களேன். அய்யோ அய்யய்யோ.
காலப்போக்கில் பகபதியின் முகம் விகாரப்பட்டு வந்தது. சாடை மாடையாகவும், நேரடியாகவும், ஏச்சுக்கள், பேச்சுக்கள். மூன்று மாதத்தில், கீழ்ப்பாக்கம் ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அன்று கத்த துவங்கியவர் இன்னும் கத்திக்கொண்டே இருக்கிறார்.
‘நான் பைத்தியமில்ல. நல்லவன். நல்லவன்.’
– குமுதம், 1982 – வாக்கில்.
– தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை.