(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது.
செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன் பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும் போதும், அவன் கண்கள் பூரிப்படையும்- மகிழ்ச்சியால். கரியனிடம்-அவனுடைய முதல் பையன்- காட்டியதைவிட அதிகமான அன்பும், அக்கறையும் காட்டுகிறாரே என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது குப்பிக்கு.
“குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சிடப் போகுது. ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று-ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு வீச்சாகவும் இருக்கும், உருண்டையாகவும் இருக்கும்-ரொம்ப ருசி-பழத்தைக் கண்ணாலே பார்த்தாக் கூடப் போதும்; பசியாறிப் போகும்” என்று குப்பியிடம் பெருமையாகப் பேசுவான் செங்கோடன்.
அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப்பார்கள்-அது மட்டுமா-பக்கத்துக் குடிசை-எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமையைத்தான் பேசிக் கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக் கொள்ள முடியும்-அப்பா வாங்கிய புதிய மோட்டாரைப் பற்றியா, அம்மாவின் வைரத்தோடு பற்றியா, அண்ணன் வாங்கி வந்த ரேடியோவைப் பற்றியா, எதைப் பற்றிப் பேச முடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைரமாலை, சகலமும்!
மூத்த பயல் கரியன், “செவ்வாழைக் குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்” என்று சொல்லுவான்.
“ஒண்ணுக்கூட எனக்குத் தரமாட்டாயாடா-நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும்-வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன்; கவனமிருக்கட்டும்”-என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்…
கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக் கொண்டே “உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு” என்று குறும்பாகப் பேசுவாள்.
மூன்றவாது பையன் முத்து, “சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதீங்க ஆமா-பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்து விடுவாங்களோ, யாரு கண்டாங்க” என்று சொல்லுவான்-வெறும் வேடிக்கைக்காக அல்ல-திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தே விட்டான்.
செங்கோடனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை. உழைப்பு அதிகம் வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும் சகித்துக் கொள்வான்-செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்துபோகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும், செவ்வாழையைத்தான் கவனப்படுத்துவான்!
குழந்தைகள், பிரியமாகச் சாப்பிடுவார்கள், செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள் ஆப்பிள், திராட்சை தின்ன முடிகிறது-கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான் செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லமாக வளர்க்கும்படிச் செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடுபட்டாலும், குழந்தைகளுக்குப் பழமும், பட்சணமும், வாங்கித் தரக்கூடிய ‘பணம்’ எப்படிச் சேர முடியும்? கூலி நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும்-குப்பியின் ‘பாடு’ குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! பலனில் மிகப் பெரும் பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்து விடுகிறது. இந்தச் ‘செவ்வாழை’ ஒன்றுதான் அவன் சொந்தமாக மொத்தமாக பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு!
இதிலே பங்கு பெற பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப் படுக்க வேண்டிய நேரத்திலே பாடுபட்டு, கண்ணைப் போல வளர்த்து வரும் செவ்வாழை! இதன் முழுப் பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான் பட்ட பாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்று சந்தோஷம் செங்கோடனுக்கு.
இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துகள் அல்ல. புகைப்படலம் போல, அந்த எண்ணம் தோன்றும், மறையும்-செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.
கன்று வளர்ந்தது கள்ளங்கபடமின்றி. செங்கோடனுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது.
“இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?” கரியன் கேட்பான் ஆவலுடன் செங்கோடனை.
“இரண்டு மாசமாகும்டா கண்ணு” என்று செங்கோடன் பதிலளிப்பான்.
செவ்வாழை குலை தள்ளிற்று-செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டு விட்டது. நிமிர்ந்து பார்ப்பான் குலையை பெருமையுடன்.
பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப் பெண் முத்துவிஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைர மாலையைக் கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்க மாட்டார்!
செங்கோடனின் கண்களுக்கு அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின் வைர மாலையைவிட விலைமதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்றமுற்ற செங்கோடனின் குழந்தைகளின் ஆவலும், சச்சரவும் பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமோ ‘அப்பீல்’ செய்வதும் ஓங்கி வளரலாயிற்று.
“எப்போது பழமாகும்?” என்று கேட்பாள் பெண். ‘எத்தனை நாளைக்கு மரத்திலேயே இருப்பது?’ என்று கேட்பான் பையன்.
செங்கோடன், பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தரவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகிறோம-இடையே தரகர் இல்லை-முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக் கொள்ளும் முதலாளி இல்லை. உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது-அவர் எடுத்துக் கொண்டது போக மீதம் தானே தனக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப் பற்றி எண்ண வேண்டும்-அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்.
இரண்டு நாளையில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான்-பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால். மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் ‘சேதி’ பறந்தது-பழம் தர வேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, ‘அச்சாரம்’ கொடுத்தனர் பல குழந்தைகள் கரியனிடம்.
பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம் கூட இராது-ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால் பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும்பகுதி.
இதோ, இந்தச் செவ்வாழை நம்மக் கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது-எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது-இதுபோல நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா! உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம்-பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான். செவ்வாழை இதுபோன்ற சித்தாந்தங்களைக் கிளறி விட்டது அவன் மனதில். குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று.
செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப் பெண் முத்துவிஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, ‘ஐயரிடம்’ சொல்லி விட்டார். கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு, ‘பட்டி’ தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக் குறிப்பு எழுதும் போது, ‘பழம்’ தேவை என்று தோன்றாமலிருக்குமா? ‘இரண்டு சீப்பு வாழைப்பழம்’ என்றார் பண்ணையார்.
“ஏனுங்க பழம்-கடையிலே நல்ல பழமே இல்லை-பச்சை நாடன்தான் இருக்கு” என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.
“சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்?-வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!” என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், “நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க-அதைக் கொண்டுகிட்டு வரலாம்” என்றான். “சரி” என்றார் பண்ணையார்.
செங்கோடனின் செவ்வாழைக் குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!
அதற்கு மரண ஓலை தயாரித்து விட்டான் சுந்தரம்!
எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைக்காரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம்பிக்கை இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.
தெருவிலே, சுந்தரமும், செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று-நாக்குக் குழறிற்று-வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.
மாட்டுப் பெண்ணுக்கு பிறந்த நாள் பூஜை-என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை-அவன் குழந்தைகளின் நாக்கில் நீர் ஊறச்செய்த ஆசை-இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல்-எனும் எதைத்தான் சொல்ல முடியும்?
கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லி விட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம், ஒரு வாழைக்குலை! அவருடைய அந்தஸ்துக்கு இது ஒரு பிரமாதமா!-என்று ஊர் ஏசுகிறது போல் அவன் கண்களுக்குத் தெரிகிறது.
‘அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான் கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன்-மாடு மிதித்து விடாதபடி பாதுகாத்தேன்-செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டு போல இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய்.
அப்பா! தங்கச்சிக்குக் கூட, ‘உசிர்’ அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது ஏமாற்றுகிறாயே. நாங்கள் என்னப்பா, உன்னை கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கித் தரச் சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா!’-என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், ‘குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா?’ என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக்கண்களுக்குத் தெரிந்தனர்!
எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான். ‘அப்பா, குலையை வெட்டப் போறாரு-செவ்வாழைக்குலை’ என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான்-உள்ளே கொண்டு வந்தான்-அரிவாளைக் கீழே போட்டான்-‘குலையைக் கீழே வை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்’ என்று குதித்தன குழந்தைகள். கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன். “கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன்-அழாதீங்க-இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கண்ணு மரமாகிக் குலை தள்ளும். அது உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்து விடறேன்” என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல் மனதைப் பிளப்பதற்குள்.
செங்கோடன் குடிசை, அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று. இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்கு வர! அழுது அலுத்துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக் கொண்டு, படுத்துப் புரண்டான்-அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள். செவ்வாழையை, செல்லப்பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்…!
அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல-ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு…? அந்த ஒரு குலையைக் காண அவன் எவ்வளவு பாடுபட்டான்-எத்தனை இரவு அதைப் பற்றி இன்பமான கனவுகள்-எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசை காட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கறை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!
நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு, அன்னநடை நடந்து அழகுமுத்துவிஜயா அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.
நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தைகளின் குமுறல் ஓயவில்லை. கரியன் ஒரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள் பழம் வாங்கிக் கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.
கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான்-அவன் விற்றான் கடைக்காரனுக்கு-அதன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்! “பழம், ஒரு அணாடா, பயலே-காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா-போடா” என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலு வீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள் அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான் வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே. செங்கோடன் கொல்லைப்புறத்திலிருந்து வெளியே வந்தான் வாழை மரத்துண்டுடன்.
“ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?” என்று கேட்டான் கரியன்.
“இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா, அந்தப் பாடையிலே கட்ட” என்றான் செங்கோடன்.
அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு!
பாடையைச் சுற்றி அழுகுரல்!
கரியனும், மற்றக் குழந்தைகளும் பின்பக்கம்.
கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். “எங்க வீட்டுச் செவ்வாழையடா” என்று.
“எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக் குலையைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்து விட்டோம்-மரத்தை வெட்டி ‘பாடை’யிலே கட்டி விட்டோம்” என்றான் கரியன்.
பாபம் சிறுவன்தானே!! அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணச் சம்பவம் என்பதை.
– செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள், முதல் பதிப்பு: மே 1950, பரிமளம் பதிப்பகம், காஞ்சீபுரம்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஏன்?எதற்காக? செவ்வாழை கதையை எழுதினார். காரல் மார்க்ஸ் எழுதியுள்ள புத்தகங்களை படித்து அந்த தாக்கத்தில் எழு தினாரா என்று அறிய விரும்புகிறேன்.