கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,373 
 
 

“ம்ம்மே ஏ ஏ…’

தன் எஜமானி வந்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டு, வீட்டுக்குப் பின்புறம் கீற்றுக் கொட்டகையில் கட்டியிருந்த ஆடு குரல் கொடுத்தது.

கல்லூரிக்குப் போயிருந்த தாமரை அப்போதுதான் உள்ளே நுழைந்தாள். கையிலிருந்த புத்தகத்தையும் டிபன் பாக்ûஸயும் மேஜை மீது வைத்துவிட்டு கொல்லைப்புறம் சென்றாள்.

சாதாரணமாக, அவள் தன்னை பார்க்க வருவதற்குள் இந்நேரம் நான்கு தடவைகளாவது குரல் கொடுத்திருக்கும் அது. ஆனால் இப்போதோ அதாவது கடந்த பத்து நாட்களாகவே சோகமாக இருக்கிறது. சரியாகப் புல் தின்பதில்லை. எதையோ பறி கொடுத்ததுபோல்… எதையோ என்ன எதையோ.. தன் குட்டிகள் இரண்டையும் காவு கொடுத்த சோகம் இன்னமும் அதைவிட்டு விலகவில்லை. இப்போது, மீண்டும் அது எல்லாவற்றுக்கும் இதே கதிதானோ என்று நினைத்ததுவோ என்னவோ கவலை, மீண்டும் அதனைப் பற்றிக் கொண்டது.

செல்விஅந்த ஆடு, தாமரைக்கு மிகவும் பிடித்தமானது. உடல் முழுவதும் சுத்தமான வெள்ளை நிறம். திருஷ்டிபடுமே என்று குழந்தையின் கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைப்பதுபோல், அதன் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு ஒரு கறுப்புப் புள்ளி. இரண்டு காது நுனியிலும் கறுப்பு நிறம். காதணி போன்று. பள்ளிக்குப் போகும் சிறுவர்கள் ஷூ அணிந்து போவதுபோல், அதன் நான்கு கால்களிலும் இரண்டு அங்குல உயரத்துக்கு கறுப்பு நிறம். பார்த்ததும் பிடித்துவிட்டது தாமரைக்கு.

செல்லியம்மன் கோயில் ஆடி மாதத் திருவிழாவின் போது, பக்தர்கள் அம்மனுக்குக் காணிக்கையாக நேர்ந்துவிட்ட ஆட்டுக்குட்டி அது. இப்போதெல்லாம் ஆடுமாடுகள் பலியிடும் வழக்கம் பெரும்பாலான கோயில்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குப் பதில், காணிக்கையாக வரும் ஆடு, கன்று, கோழி போன்றவற்றை கோயில் நிர்வாகம் ஏலத்துக்கு விடும். அதில் கிடைக்கும் தொகையை கோயில் பராமரிப்புக்காக பயன்படுத்திக் கொள்வது வழக்கமாயிற்று.

அப்படி ஏலத்தில் எடுத்ததுதான் இந்த வெள்ளை நிற ஆடு. அப்பாவிடம் அடம்பிடித்து அதை ஏலத்தில் எடுக்கச் சொல்லி ஒரு குழந்தையைத் தூக்கி வருவதுபோல் மார்போடு அணைத்து எடுத்து வந்தாள், தாமரை.

செல்லியம்மன் கோயிலிருந்து எடுத்து வந்ததால் அதற்குச் செல்லி என்றே பெயரும் வைத்தாள். அம்மா கூட அது வந்த புதிதில் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள், “”ஊர்ல உலகத்துல நாய்க்கும் பூனைக்கும் பேரு வச்சி கொஞ்சுவாங்க. நீ என்னடான்னா ஆட்டுக்குட்டிய கொஞ்சுறியே” என்று.

என்னவோ அந்த செல்லியைப் பிடித்துப் போயிற்று அவளுக்கு. அதற்கும்தான்.

குழந்தைபோல் வளர்த்தாள். சின்னதாக ஒரு மணி வாங்கி கறுப்புக் கயிறில் கோர்த்து கழுத்தில் தொங்கவிட்டாள். அது நடக்கும்போதும் ஓடும்போதும் கிணி… கிணி… சப்தம் இனிமையாக இருக்கும். தத்தக்கா பித்தக்கா என்று நடைபயிலும் குழந்தைக்கு, “பீய்ங்.. பீய்ங்’ என்று ஒலி எழுப்பும் ஷு மாட்டிவிட்டு அது நடக்கும் அழகைப் பார்த்து ரசிக்கும் தாய்போல், செல்லியை ரசிப்பாள் தாமரை.

செல்லி வளர்ந்தாள். பெரியவளானாள். இரண்டு குட்டி ஈன்றாள். இரண்டும் தாய் போலவே கொள்ளை அழகு. குளோனிங் முறையில் பிறந்த குட்டியோ என்றெண்ணும் அளவுக்கு அப்படியே அச்சு அசலாக இருந்தது.

குட்டிகள் இரண்டும் மடமடவென்று வளர்ந்தன. அதற்கும் மணி கட்டிவிட்டாள். அங்குமிங்கும் மணி சப்தத்தோடு திரிவதைப் பார்த்து தாமரைக்கு மட்டுமல்லாது, அவள் அம்மா லலிதாவுக்கும் சந்தோஷம்தான்.

அந்த வாயில்லா ஜீவன்களின் சந்தோஷத்துக்கு கேடு வருமென்று தாமரையோ அதுகளோ கூட நினைக்கவில்லை. கேடு வந்தது ஒருநாள்.

லலிதாவின் அண்ணனும் அண்ணியும் குழந்தைகளும் ஊருக்கு வருவதாகத் தகவல் வந்தது. சிங்கப்பூரிலிருக்கும் அவர்கள் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை வந்து நான்கைந்து நாட்கள் தங்கிப் போவார்கள். வந்தார்கள். தங்கினார்கள். அவர்களுக்கு ஆட்டுக்கறி என்றால் மிகவும் விருப்பம். சிங்கப்பூரிலிருந்து துணிமணிகள், செண்ட், சாக்லேட், பவுடர் என்று ஆசையோடு வாங்கி வரும் மச்சான் குடும்பத்துக்கு அவர்களுக்கு விருப்பமான விருந்தைப் படைப்பதுதானே முறை.

கண்ணப்பன் பையை எடுத்துக் கொண்டு கறிக்கடைக்குச் சென்றார். அந்தக் கிராமத்தில் அது ஒரு கடைதான். கடைக்காரர் ஏதோ ஜோலியாக வெளியூருக்குச் சென்றிருப்பதாகவும், வர நான்கு நாட்களாகும் என்றும் சொன்னார்கள். பைக்கை எடுத்துக் கொண்டு டவுனுக்குக் கறி வாங்கப் புறப்பட்டார்.

“”ஏன் மச்சான் கைல வெண்ணெய்யை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையறீங்க. நம்ம கொல்லைலதான் ரெண்டு குட்டிங்க இருக்கே. நாங்களும் இளம் ஆட்டுக்கறி சாப்பிட்டு நாளாச்சு” என்றார். வெளிநாட்டிலிருந்து வந்த விருந்தாளி. ஆசைப்பட்டுக் கேட்கிறபோது எப்படி வேண்டாம் என்பது என்று நினைத்த கண்ணப்பன், இரண்டு குட்டிகளையும் இரையாக்கினார்.

தாமரை வீட்டிலிருந்திருந்தால் அப்படி நடந்திருக்காது. நடக்கவும் விட்டிருக்கமாட்டாள். கல்லூரி பேருந்து காலை எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடும். மேலும் அப்போது கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்ததால், விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை.

அன்று மாலை கல்லூரியிலிருந்து வந்த தாமரை, குட்டிகளைக் காணாமல் அதிர்ந்தாள். அம்மா விஷயம் சொல்ல உள்ளத்தால் உடைந்து போனாள். அத்தை, மாமா இருக்கும்போது என்ன செய்வதென்று சப்தம் போடாமல் கண்ணியமாய் நடந்து கொண்ட தாமரை, அவர்கள் ஊருக்குச் சென்ற பின் அப்பாவைத் திட்டித் தீர்த்தாள். அவருடன் ஒருவாரம் பேசவும் இல்லை. பிறகு நாட்கள் செல்லச் செல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினாள், தாமரை.

இப்போது செல்லி மீண்டும் சினை கண்டிருந்தது. தன் குட்டிகள் இரண்டும் பலியாகிவிட்டனவே என்ற சோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனாலும், இப்போது போடும் குட்டிகளையாவது இந்த மனிதர்கள் விட்டு வைப்பார்களா என்ற பயம் செல்லிக்கு வந்துவிட்டதோ என்னவோ என்று நினைத்தாள் தாமரை.

செல்லியின் பக்கத்தில் உட்கார்ந்து அன்பாய்த் தடவிக் கொடுத்தாள். அம்மா காபியோடு வந்தாள். காபி டம்ளரைக் கையில் வாங்கிக் கொண்ட தாமரை, “”அம்மா.. செல்லி எப்பம்மா குட்டிபோடும்” என்றாள்.

“”இது இருக்கிறதப் பார்த்தா எப்படியும் இன்னும் இருவது நாள்ல போட்டுரும்னு நெனைக்கிறேன். மடி இறங்கியிருக்கு. வயித்துல குட்டிங்க முண்டுறது நல்லாத் தெரியுது. பத்து பதினைஞ்சு நாள்ல கூட போட்டுடலாம்” என்றாள் அம்மா.

அவ்வளவுதான் நாட்களை எண்ண ஆரம்பித்துவிட்டாள் தாமரை. சரியாகப் பதினெட்டாம் நாள் இரண்டு குட்டி போட்டது. இரண்டுமே வெள்ளையும் கறுப்பும் கலந்ததாய் அழகாகவே இருந்தன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிப்பாள் தாமரை. இந்தத் தடவை அப்பா கண்ணப்பன் கூட அதுகளைப் பரிவோடு பார்த்தார். பாசத்தோடு பழகினார்.

அன்று இரண்டு குட்டிகளையும் அறுத்து விருந்து வைத்துவிட்டதைப் பற்றி அப்பாவிடம் கேட்டபோது, “”அதுக்கென்னம்மா… வீட்ல விருந்தாளி வந்திருக்கிறாங்க.. கடைல இல்லேங்கிறப்ப என்ன செய்யறது. போய்ப்பாரு. ஒரு நாளைக்கு நம்ம பாய் கடைல எத்தினி ஆடு, கோழிங்கள்லாம் அறுபடுதுன்னு” என்று வியாக்யானம் பேசினார்.

“”ஏம்பா அதுவும் இதுவும் ஒண்ணாப்பா. அது அவங்க பிசினஸ். விலைக்கு வாங்கி காசுக்கு விக்கிறாங்க. அதுவும் ஓர் உயிருன்னாலும், அவங்க கூட அதுக ஒட்டி உறவா பழகலை. அதனால அந்த வருத்தம் அவங்களுக்குத் தெரியாது. ஆனால் நம்ம செல்லி அப்படியில்லையே. நம்ம வீட்ல நம்ம கண்ணு முன்னால் குழந்தை மாதிரி துள்ளி விளையாடி வளர்ந்ததாச்சேப்பா. அதைக் காவு கொடுத்துட்டீங்களே ” அன்று மிகவும் கோபமாகவும் வருத்தப்பட்டும் பேசினாள் தாமரை.

கண்ணப்பனுக்கு மனசு என்னவோ போலாகிவிட்டது. அப்போது முதலே செல்லியை அவருக்கும் பிடித்துவிட்டது. பாசத்தோடும் பரிவோடும் பழக ஆரம்பித்தார்.

அன்று கல்லூரியிலிருந்து தாமரை வந்தபோது வீடு பரபரப்பாக இருந்தது. இரண்டு குட்டிகளும் மே.. மே.. என்று அதன் தாயை அழைத்துக் கொண்டிருந்தன. செல்லியைக் காணவில்லை.

“”எங்கேம்மா?” அம்மாவைக் கேட்டாள்.

“”தெரியலேம்மா. ரொம்ப நேரமா குட்டிங்க கத்துதேன்னு வந்து பார்த்தா, செல்லியைக் காணோம்” என்றாள்.

மூவரும் தேடினார்கள்.

தெருமுனையில் பிள்ளையார் கோயிலருகே இருக்கும் அரச மரத்தடியில் பார்த்ததாக தலையாரி சொன்னான். போய்ப் பார்த்தார்கள்.

அங்கே –

இரண்டு நாய்க்குட்டிகள் செல்லியிடம் பால் குடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த பிள்ளையார் கோயில் குருக்கள், “”வாங்கம்மா, இது உங்க ஆடுதானா? இந்தக் காலத்துல மனுஷாளுக்குக் கூட இப்படி கருணை இருக்குமோ என்னமோ. பாருங்க, தான் பெத்த குட்டிகளுக்குக் கொடுக்கிற மாதிரி பால் கொடுக்கிறதை. காலைல தாம்மா கரும்பு லாரில அடிபட்டு இதுகளோட தாயும் ஒரு குட்டியும் செத்துப் போச்சுது. இது ரெண்டும் தவிச்சிக் கிட்டிருந்தது. நான் வர்றப்போ, என் பின்னாலேயே சன்னதி வரைக்கும் வந்ததுங்க., சுவாமிக்கு பூஜை முடிச்சிட்டு எங்கேன்னு பார்க்கிறேன். இந்த ஆட்டுகிட்ட பால் குடிச்சிட்டு இருக்கு ரெண்டும்! காலைலேயும் வந்தது இப்பவும் வந்திருக்கு பாருங்க ”

அருகில் சென்று செல்லியைத் தடவிக் கொடுத்தாள் தாமரை. குட்டிகள் இரண்டும் தன் தாயிடம் குடிப்பது போல மிகச் சுகமாக சிறிய வாயை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டு பால் குடிக்கும் அழகை ரசித்தாள்.

வயிறு நிரம்பியதும் குட்டிகள் தட்டுத் தடுமாறி தள்ளி வந்து, செல்லியை இப்போதுதான் வினோதமாய் பார்த்தன.

“”செல்லி, குட்டிக்குப் பால் கொடுத்திட்டியா… வா போகலாம்” என்று தாமரை கூப்பிட்டதும் அவளுடன் நடந்தது. குட்டிகள் இரண்டும் போவதா வேண்டாமா என செல்லி போவதையே பார்த்துக் கொண்டிருந்தன.

கண்ணப்பன் என்ன நினைத்தாரோ, இரண்டு குட்டிகளையும் இரண்டு கைகளில் பூப்போல் எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தார்.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *