செங்கரும்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 4,778 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் காளையை இருநூறு ரூபாய் கொடுத்து அவன் வாங்கியபோது, கிராமத்துப் பெரியவர்கள் அவன் ‘செட்டாக’க் குடித்தனம் செய்து, பணம் மிச்சம் பிடித்து, நல்ல காளை வாங்கினான் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். வேலை வெட்டியைக் கவனிக்காமல் இருக்கும் உழவர்களையும், கிராமத்துப் பெரியவர்கள், கண்டித்துப் புத்திமதி கூறும்போது, சின்னப்பனை தான் உதாரணம் காட்டிப் பேசுவார்கள், அவன் புத்திசாலி, கெட்டிக்காரன், வீண் ஜோலிக்குப் போகமாட்டான், சளைக்காமல் உழைக்கிறான், வீண் செலவு செய்யாமல் மிச்சம் பிடிக்கிறான். அதனாலேதான் அவன் இப்போது நல்ல காளை வைத்துக் கொண்டே இவ்வளவு நன்றாகப் பாடுபட்டவனிடம் இப்போது அருமையான ‘ஜோடி’ இருக்கிறது. இன்னும் நல்ல உழைப்பும், அதற்கான பயனும் கிடைக்கும் என்று கூறினர்.

சின்னப்பன், சாது, உழைப்பாளி, செலவாளி அல்ல, அவையாவும் உண்மை . அவன் வாங்கி வந்த காளையும் சிலாக்கியமானதுதான், இருநூறு ரூபாய் கொடுத்துத்தான் வாங்கினான்; அதுவும் உண்மைதான் ஆனால் பணம் மிச்சம் பிடித்து, அந்தக் காளையை அவன் வாங்கினதாகச் சொன்னார் களே, அதுமட்டும் முழு உண்மையல்ல – விவரம் அறியாமல், கிராமத்துக் கிழவர்கள் அப்படிச் சொல்லிக் கொண்டனர் – சின்னப்பன் அதை மறுக்கவில்லை, காரணம் அப்போதைக்கு அவனுக்கு அந்தவிதமான பேச்சு பரவுவதிலே ஒருவிதமான இலாபம் இருந்தது – அதற்குக் காரணம், சின்னப்பன் மகள் செங்கரும்பு.

செங்கரும்புக்குத் திருமண வயது-அதாவது கிராமத்துப் பெரியவர்கள் “ஏண்டா, சின்னப்பா! காடு கழனி வேலையையே கவனித்துக் கொண்டிருந்தால் போதுமா? வயசுக்கு வந்த பெண்ணு இருக்குதே, அதுக்குக் காலா காலத்திலே ஒரு கண்ணாலம் செய்ய வேண்டாமா, அதற்கான வேலையைக் கவனிக்காமல், பொழுதை ஓட்டுகிறாயே நல்லதா?” என்று சின்னப்பனை நச்சரிக்க ஆரம்பித்து வருஷம் இரண்டாகிவிட்டது. எவ்வளவு காலத்துக்கு, இதுக்குள்ளே என்ன? அதக்கென்ன பார்க்கலாம்! நானும்தான் யோசிக்கிறேன் என்று கூறிக்கொண்டிருப்பது. சின்னப்பன், தன் பெண் கலியாண விஷயமாகக் கவனம் செலுத்தினான்: அப்போதுதான் அவனுக்கு ஒரு ஜதை நல்ல காளையாவது இருந்தால்தானே, பார்க்கிறவர்களுக்கு ஒரு மதிப்பு இருக்கும் என்ற நினைப்பு வந்தது, அதனாலேயே அவன் மிச்சம் பிடித்து வைத்திருந்த 150 ரூபாயுடன் ஐம்பது ரூபாய் கடன் வாங்கி, அந்தக் காளையைக் கொண்டு வந்தான்.

“ரொம்ப அதிகாமச் சொல்றிங்க அண்ணே” என்று சின்னப்பன் சொன்னபோது, உன்னண்டை சொல்வதிலே என்ன சின்னப்பா குத்தம், இதை நான் இப்ப அறுவது ரூபா தள்ளிக் கொடுக்கறேன் – என் கஷ்ட காலத்தாலே கொடுக்கறேன் – நீ கொடுக்கற இரண்டு நூறும், சாமி சாட்சியா, கடன் கட்டத் தான், என் கையிலே சல்லிக் காசுகூட தங்கப் பொய்யல்ல, கிராமத்துக்காரருக்குக் கடன் கொடுத்து, கண்டிப்புடன் வட்டியும் அசலும் தீர்த்து வாங்குவதிலே அனுபவமிக்கவர் அருணாசலம் – அவரிடம்தான் சின்னப்பனும் கடன் வாங்கினான் – ஏற்பாடு செய்யும்படி யோசனை சொன்னவர் அருணாசலமேதான்!

சின்னப்பனிடம் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு, கடன் கொடுத்தார் அருணாசலம். அதை அவன் வாங்கி, தான் கொண்டு வந்திருந்த பணத்தோடு சேர்த்து நல்லண்ணனிடம் கொடுத்தான், அவனிடமிருந்து அருணாசலம் பணத்தை வாங்கிக்கொண்டு, தன் வீட்டுப் புறக்கடையிலே கொண்டுவந்து கட்டிவைக்கப்பட்டிருந்த கருப்பனை அவிழ்த்துக் கொண்டு போகும்படி, சின்னப்பனுக்கு அனுமதி அளித்தார்; அந்த அழகான காளையைக் கண்டவர்கள், சின்னப்பனுடைய ‘செட்டான’ குடித்தனத்தைப் புகழ்ந்தார்கள். பெண் பார்க்க வருகிறவர்களுடைய காதிலே ‘இந்த விஷயம்’ விழுவது நல்லது என்று சின்னப்பன் எண்ணிக் கொண்டான்.

‘கரும்பு காசு கொடுக்கட்டும், கலியாணத்தைப் பற்றி கவனிக்கலாம்: சின்னப்பன் மக ‘செக்கச் செவேலுனு’ இருக்கிறான்னு கேள்வி. ரொம்பத் துடியான கண்ணுன்னும் பேசிக்கொள்றாங்க, சின்னப்பன் வளமான சம்சாரியாம், போன மாதம்கூட இருநூறு கொடுத்து காளை வாங்கினானாம்; இரண்டு ஏக்கரா சொந்தமும், மூணு குத்தகையு மா இருக்கிறதாகச் சொல்கிறாங்க. ஒரு பிள்ளை; ஒரு பெண்ணு – பிள்ளை எங்கேயோ பட்டணத்து மில்லிலே ‘பாரா’க்காரானா இருக்கி நானாம் – மொத்தத்திலே நமக்கு ஏத்த சம்பந்தம்தான், ஆனா நமக்கும் நாலுகாசு வேணுமே, இந்தத் தடவை கரும்புப் பயிரு, கடவுள் புண்ணியத்திலே திருப்தியாத்தான் இருக்குது, பார்ப்பம், இதிலே நாலுகாசு கிடைச்சுதானா, சின்னப்பன் மகளையே நம்ம மாடசாமிக்குப் பார்க்கலாம்’ – என்று எண்ணிக் கொண்டபடிதான் ஒவ்வொரு நாளும், கத்திரி தன்னுடைய கரும்புத் தோட்டத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தான். அதுக்கென்ன, அப்படியே செய்யலாம் – அப்படியே செய்யலாம் என்று நல்வாக்கு கொடுப்பது போல, கரும்பு அசைந்தாடிக் கொண்டிருந்தது.

மொத்தமாக நானே எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி அருணாசலம், பயிர் வளரும்போதே கத்திரிக்குப் பணம் கொடுத்து வைத்திருந்தார்; விலையைச் சமயமறிந்து நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்பது அவர் எண்ணம். மகராசன், நம்மைக் கெடுப்பாரா – நம்பி முன்பணம் கொடுத்தவருக்கு, நாமத்தான் துரோகம் செய்ய முடியுமா என்று நியாயம் பேசினான் கத்திரி.

“சர்க்கரை உற்பத்தி, தேவைக்கு அதிகமாகி விட்டது. விலை வீழ்ச்சி அடைகிறது. ஆகையால், இந்தத் தடவை கரும்பு ‘மாகசூல்’ விவசாயிக்குத் தகுந்த ‘பலன்’ தராது என்று கருதப்படுகிறது”

தினசரியில் இந்தச் செய்தியையும், இதற்காக தரவான புள்ளி விவரத்தையும் படித்தார் அருணாசலம், உடனே, கத்திரியிடம் கரும்பு வாங்குவதில்லை, கொடுத்த முன் பணத்தை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்று தீர்மானித்தார். உண்மை திலைமை தெரிவதற்குள்ளே இதை முடித்துவிட வேண்டும் என்று துடித்தார். கத்திரிக்கு, கரும்புதான் கண்ணுக்குத் தெரிந்தது – விலை ஏறுவதால் இறங்குவதால் உண்டாகும் கசப்பு எப்படித் தெரியும் – அனுபவிக்காத முன்பு. அருணாசலத்துக்குச் சாதகமாக, தானாக ஒரு சம்பவம் நடைபெற்றது.

அந்தப் பகுதியில் புதிதாகத் துவக்கப்பட்ட சர்க்கரை ஆலையில், பெரிய புள்ளியாக இருந்தவர் கருப்பண்ணஞ் செட்டியார்; காங்கிரஸ் கட்சியிலே முக்யஸ்தர்; அந்த ஸ்தானத்தைப் பெற அவர் அதிக ஆண்டுகள் பணியாற்றவில்லை; ஆகவே, காங்கிரஸ் கமிட்டியிலே அவர் அதிகாரம் செலுத்துவதை உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு ஓராண்டு சிறை சென்று, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டு வந்தேமாதரம் என்று பட்டம் பெற்ற வரதப்பன், எதிர்த்தான், தனியாகப் பேசும்போது, வரதப்பனைத் தட்டிக் கொடுத்த காங்கிரஸ்காரர்களிலே பெரும் பாலானவர்கள் கமிட்டியில் உட்காரும் போது, கருப்பண்ணருக்குக் கை தூக்குவது கண்டு, காரணம் தெரியாமல் கலங்கினான் வரதப்பன். காரணம் செட்டியாருடைய கணக்கேட்டில் பளிச் சென்று தெரிந்தது!

ஏமாற்றமும் திகைப்பு மடைந்த வந்தே மாதரம், கருப்பண்ணனை எதிர்க்கத் தொடங்கி, கரும்பாலையைக் கண்டித்துப் பேசும் நிலைக்கு வளர்ந்து, பிறகு கிராமம் கிராமமாகச் சென்று, கொழுக்க வைக்காதீர்கள் – நீங்களே வெல்லம் காச்சினால், ஆலைக்காரன் கொடுப்பதைவிட அதிக இலாபம் கிடைக்கும் என்று ‘பிரசாராம்’ பலமாகச் செய்தான். அடிதடியுடன் கூட்டம் நடைபெறும்.

இதையே, அருணாசலம் சாக்காக்கிக் கொண்டார்.

வந்தேமாதரம் நடத்திய கூட்டத்திலே, ஒருநாள், கத்திரி தலைமை வகித்தது. இதற்குச் சாதகமாகி விட்டது. கூப்பிட்டனுப்பி கோபமாகக் கேள்விகள் கேட்டார்.

“பெரிய லீடர் ஆய்விட்டீரே ஐயா! உம்மிடம் எனக்கு ஏன் தொடர்பு….”

“நான் லீடராவது மண்ணாவது…அந்த வந்தே மாதரம் நல்ல புள்ளையாண்டானுங்கோ… கூட்டம் போட்டா, சிறுசுகளும் பொடிசுகளும் கல்லை விட்டு எறியுது, நீ தலைமையா இருந்தா, ஒழுங்கா கூட்டம் நடக்கும்னு கேட்டுக்கிட்டதாலே, அதுக்கென்ன ஆகட்டும்னு பெஞ்சிமேலே உட்கார்ந்தனுங்க…வேறே ஒரு தப்பு தண்டாவும் கிடையாதுங்க…”

“அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது கத்திரி. நான் உன் கரும்பை வாங்கினா, அந்த வந்தேமாதரம் ‘கலாட்டா’ செய்வான்…எனக்கு ஏன் வீணான வம்பு…நான் கொடுத்த பணத்துக்கு, ஒரு சீட்டு எழுதி கொடுத்துவிட்டு, நீ மகராஜனா, அந்த வந்தேமாதரம் சொன்ன யோசனைப்படி வெல்லமே காச்சு, நிறைய இலாபம் கிடைக்கும்.”

எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை; கரும்புக்காக முன்பணமாகக் கொடுத்த தொகைக்குக் கடன் சீட்டு எழுதி வாங்கிய பிறகுதான், அருணாசலம் காபி குடித்தார்.

வந்தே மாதரம், விடவில்லை; கத்திரியை முற்றுகையிட்டான்; கரும்பு வெல்லமாயிற்று: கத்திரி கடன்காரனானான்; வந்தே மாதரம் தற்காலிகமாக வேறு ஜில்லா சென்று விட்டான்!

சின்னப்பன் மகளைத் தன் மகனுக்குப் பார்க்கும் திட்டம் அடுத்த கரும்புக்குப் பிறகுதான் என்று கத்திரி தீர்மானித்துவிட்டான். செங்கரும்புக்கு இந்த வருஷமும் கலியாணம் நடக்காது போலிருக்கு என்று கிராமத்யார் பேசிக் கொண்டனர்.

காளை, சின்னப்பனைச் சும்மா விடவில்லை; செலவு வைத்தபடி இருந்தது.

ஓராண்டுக்குப் பிறகு, காளையும் இளைத்து விட்டது. சின்னப்பனும் சோர்ந்து போனான், செங்கரும்பும் கவலை கொண்டாள்; அவள் அண்ணன் சென்னை மில்லிலே சச்சரவு செய்துவிட்டு ‘ஊரோடு’ போயிருப்பதுதான் உத்தமம் என்று கூறி விட்டு கிராமம் வந்து சேர்ந்தான்.

அருணாசலம், அசல் பிறகு கொடுக்கட்டும், வட்டியாவது தர வேண்டாமா, என்ன இந்த சின்னப்பனுக்கு வாக்குச் சுத்தமில்லையே என்று ஆள்விட்டுக் கேட்டார்; இந்த விவகாரம் பரவுவதற்குள் எப்படியாவது கடனைக் கட்டிவிட வேண்டும். இல்லையானால், செங்கரும்பு திருமணத்துக்கு யாராவது ஏற்பாடு செய்ய வருகிறபோது சங்கடம் உண்டாகும் என்று எண்ணிக் கவலைப்பட்டான் சின்னப்பன். பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு, காளையை விற்றுவிட்டு – கடனைக் கட்டிவிட்டு மிச்ச மிருக்கும் பணத்துக்கு, ஏதாவது ஒரு ‘கிழமோ கிட்டோ’ கிடைத்தால் அதை வாங்குவது என்று தீர்மானித்தான். சந்தைக்கும், காளையை ஒட்டிக் கொண்டு போனான் – சகுனம் பார்த்தான் பிறகுதான்!

சந்தையிலே அன்று விசேஷமான கூட்டம்; சர்க்கார் சந்தையைச் சினிமாப் படம் எடுத்துக் கொண்டிருந்ததால்.

கந்தல் துணிக்காரர்களை ஒரு மூலைக்குத் துரத்தினார்கள் போலீசார்: ‘வாட்டசாட்டாமான’ ஆடவர்களையும், கட்டு குலையாத பெண்களையும், முன்பக்கம் நடமாடச் சொல்லி, படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சின்னப்பன், சிறிது நேரம் இதை வேடிக்கை பார்த்துவிட்டு, ஒரு மரத்தடியில் காளையைக் கட்டி வைத்து, தீனி போட்டுவிட்டு, ‘கிராக்கி’ வரட்டும் என்று காத்துக் கொண்டிருந்தான். பலபேர் வந்து பார்த்தார்கள், பாரி மாடு! இதுக்குத் தீனிபோட்டு கட்டடிவராது என்றெல்லாம் கூறிவிட்டு, வேறு நொண்டி நோஞ்சலை, இருபது முப்பதுக்கு வாங்கிக் கொண்டு சென்றார்கள். 60 ரூபாய்க்கு மேல் ஒருவரும் கேட்க வில்லை, சின்னப்பனுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது; அருணாசலத்துக்கு மட்டும் அவன் அசலும் வட்டியுமாக எண்பது தரவேண்டும், அதைக் கொடு ஏதாவதொரு ‘சப்பை’ யைப் பிடித்துக் கொண்டு போகலாம் என்று எண்ணி, சந்தைக்கு வந்தான். அங்கே அறுபதுக்கு மேல் ஆள் வராதது கண்டு அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது; அந்திப் பொழுது மாயிற்று; வீடு திரும்பிவந்து, தொழுவத்தில் காளையைக் கட்டும் போது, சின்னப்பனுக்கு கோபமே வந்துவிட்டது. உள்ளே, உத்தண்டன் இருக்கக் கண்டான்; உறவினன்; ஊர்நாடு அறிந்தவன்; மாமன் முறை சின்னப்பனுக்கு.

“மாமனா! எப்ப? வந்து எவ்வளவு காலமாச்சி…”

“எதுக்கும் வேளை வரவேணும்மே. சரி, செங்கரும்புக்கு ஏதாவது இடம் பார்த்தாயா?”

“நல்லா இருக்கு மாமா, நீ கேட்கிற கேள்வி. நான்தானா இடம் பார்க்க வேண்டியவன்? நீ, பார்த்துச் சொன்னா சரிதான்…”

“சாமர்த்தியமாப் பேசறியே….சரி…நானும் ஒரு இடம் பார்த்துட்டு அதைச் சொல்லத்தான் வந்தேன்…ஈச்சம்பாடியிலே என்னோட பெரிய மாமன் வகையிலே ஒரு பையன் இருக்கிறான் – மாந்தோப்பும் பூந்தோட்டமும் பயிர் செய்யறான், கெட்ட நடவடிக்கை எதுவும் கிடையாது…எல்லா வகையிலும் உனக்கு ஏத்தவன்தான்…கஞ்சன்தான் உன்னைப் போலவே…என்ன சொல்றே,..”

“நான் என்ன சொல்ல இருக்குதாம். அவளைக் கேட்டாயா?”

“யாரை? செங்கரும்பையா?”

“அவ ஆத்தாளை…”

“அவ என்னா சொல்றா? சினிமாவிலே பார்க்கறா னேல்லோ அதபோலே, புள்ள வந்து பொண்ணை பார்க்கட்டு மேன்னு சொல்றா…”

“இவளை நான் பாத்துத்தான் கலியாணம் கட்டிக் கிட்டானாமா…?”

“நானும் சம்மதம்னு சொல்லிப் போட்டேன் அடுத்த திங்கக்கிழமை வரலாம்னு யோசனை…உன்னோட அபிப்பிராயம் என்ன?”

“அடுத்த திங்களுக்கு வேணாம், மாமா, அதுக்கு அடுத்த திங்களுக்கு வந்தா நல்லா இருக்கும். அன்னக்கி நம்ம கிராமத்திலே கன்னி கோயில் திருவிழா…அதையும் பார்த்தமாதிரியா இருக்கும்…”

“அதுவும் சரிதான்… கன்னி கோவிலை, நீதானே பார்த்துக் கொள்றே…”

“செச்சே! சாமி காரியத்தை அப்படிச் சொல்லாதே.”

சின்னப்பன் மனம் மிகத் தீவிரமாக வேலை செய்தது. செங்கரும்பைப் பார்க்க வருகிறபோது, கன்னி கோவில் திருவிழாவைச் சற்று தடபுடலாக நடத்தி வைக்க வேண்டும். கிராமத்திலே தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து, தனக்கு மருமகனாக வரப்போகிறவன், மலைத்துப்போக வேண்டும் என்று எண்ணினான். எதற்கும் அந்தப் பாழாப்போன காளை விலை போக வேண்டும்; விலையைக் கொஞ்சம் தள்ளிக் கொடுத்தாவது அடுத்த வாரச் சந்தையிலே விற்றுவிட வேண்டும் என்று தீர்மானித்தான்.

“முடிவாச் சொல்லிப் போடறேன்…உன்னைப் பாத்தா நல்ல புள்ளையாண்டானா தோணுது…தெரியுதா…நான் அருமையா வளத்து வந்த காளை இது…ஏகப்பட்ட விலை கொடுத்து வாங்கினேன்… ஒரே விலை…பேரம் கீரம் வேணாம், நூத்தி ஐம்பது…”

“ஆத்தாடி! ஆனைக்குட்டி விலையல்ல சொல்றீங்க. இப்ப மாடு விலை எவ்வளவோ விழுந்து போச்சு நீங்க போன வருஷத்து நினைப்பிலே பேசறிங்க – எண்பது ரூபா, சம்மதம்னா சொல்லுங்க, இல்லையானா அதோ பாருங்க, அந்தாலே இருக்கே செவிலி, அது அறுவத்தஞ்சி ‘ரெடியா’ இருக்குது…”

“அடே, இருவத்தஞ்சிக்குக் கூடத்தான் எருது இருக்குது – எல்லாம் எருதுதானா”

“ஏனுங்க, மடியிலே இருக்கறது பூராவும் கொடுத்துடச் சொல்றீங்க…நியாயமுங்களா…சந்தைக்கு வந்து போறவனாச்சே, ஏதாச்சும் பழம் பலகாரமாவது வாங்க வேணுமுங்களா…இந்தாங்க 95…”

“கொடாகண்டனா இருக்கறயே…சரி…கொடு, கொடு…ஆமா, எந்த ஊரு…?”

“சொந்த ஊரு சொர்ணபுரிங்க…”

காளை கைமாறி விட்டது. கடன் கட்ட, சின்னப்பன் கிளம்பினான் அருணாசலத்தின் கடைக்கு கடனைக் கொடுத்துவிட்டு, மிச்சமிருந்த பத்து ரூபாயுடன் வீடு திரும்பினான்.

கிராமத்துப் பெரியவர்கள் “காளை செலவு அதிகம் கொடுக்குதுன்னு, சின்னப்பன், நல்ல விலைக்கு விற்று விட்டான்…” என்று பேசிக் கொண்டனர்.

கன்னி கோயில் திருவிழாவுக்கு ‘பெண்’ பார்க்க வருவதாகச் சொன்னபடி ஈச்சம்பாடிக்காரர் வரவில்லை. புதிதாக ‘உழவு’ மாடு வாங்கிவிட்டான்…அதனாலே வேலைத் தொந்தரவு – நீ ஒரு நடை வா, நாமே போய், பையனைப் பார்த்துவிட்டு வருவோம் என்று சொன்னார், மாமன்.

ஈச்சம்பாடியார் வீட்டுக் கூடத்தில் சம்பந்தியாகப் போகும் கிழவனைக் கண்டு, சின்னப்பன் பேசிக் கொண்டிருந்தான். மாமன் உடனிருந்து உபசாரம் பேசிக் கொண்டிருந்தான்.

“ஏதோ, ஈசுவரன் கிருபையாலே, நிலம் கொஞ்சம் இருக்குது – மாடு கண்ணு இருக்குது…நாலு நாளைக்கு முன்னாலேகூட, இரு நூறு ரூபா விலை கொடுத்து ஒரு தரமான காளை வாங்கினோம்..”

“நம்ம சின்னப்பனும் நல்ல சமுசாரிதான்… ஒரே மக…”

“கடன் கிடன்…?”

“காலணா கிடையாதுங்க? அனியாய வட்டி அருணா சலத்திடம் கொஞ்சம் கடன் இருந்தது. ஒரு சின்ன சொல்லு சொன்னான்னு, கோபத்திலே, போனவாரம், தங்கமான காளையை முன்னூறு ரூபாய்க்கு வித்துப்போட்டு, அவனோட முப்பது ரூபா கடனை முகத்திலே வீசி ஏறிந்துவிட்டு, மிச்சத்தை பொண்ணோட கல்யாணத்திலே சீர் செய்ய வைத்துக் கொண்டான்…”

தா, தா! பிடி, பிடி! விடாதே…என்று கூச்சல் கேட்டு, சின்னப்பன் வெளியே வந்து பார்த்தான்…காளையைத் துரத்திக் கொண்டு வந்தான் ஒருவன். காளை, சின்னப்பனைக் கண்டதும் துள்ளிக் கொண்டு கிட்டே வந்து நின்றது.

சின்னப்பன் சந்தையிலே விற்ற காளைதான் அது.

பின்னோடு வந்து நின்றான் சச்சம்பாடி மாப்பிள்ளை.

“இவன்தான்” என்றார் ஈச்சம்பாடியார், மகளைக் காட்டி.

“இதுதான் என் காளை” என்றான் சின்னப்பன். காளையைக் காட்டி.

“மூணு நூறுன்னு சொன்னயேப்பா…” என்று சிரித்தார் கிழவர்,

“இருநூறு கொடுத்ததாக நீங்க சொல்றபோது, நான் ஒரு நூறு கூட்டிச் சொன்னா என்னவாம்…” என்றான் சின்னப்பன்.

எல்லோரும் நிலைமையை உணர்ந்து சிரித்தனர்.

“காளையைப்பத்தி நாம பேசிக் கொண்டது பொய் ஆனா, என் மக, செங்கரும்பு விஷயமா நான் சொன்னது அத்தனையும் நிஜமுங்க…நீங்க கண்ணாலே பார்த்தாலே தெரியும்…” என்றான் சின்னப்பன்.

“அதேபோலத்தான், என் மக விஷயமாக நான் சொன்னது, காளை விஷயமாச் சொன்னதுபோல அல்ல; அவ்வளவும் நெஜம்” என்றான் சின்னப்பன்.

“நீங்கச் சொல்லவே தேவையில்லையே…சந்தையிலேயே நான் பார்த்துவிட்டேன்…அடே அப்பா! விடாகண்டனாச்சே” என்றான் சின்னப்பன்.

“செங்கரும்புக்கு ஏற்றவன், சகல விதத்திலும் நம்ம சிங்காரம்” என்றார் மாமன்.

திருமணம் நிச்சயமாகிவிட்டது.

கத்திரி காதுக்கு இந்த விஷயத்தை எட்ட வைத்தவர் அருணாசலந்தான் – அவர் இதனால் விபரீதம் ஏதும் நடைபெறும் என்று எதிர்பார்த்துச் சொன்னவரல்ல.

கத்திரிக்குக் கோபம் கோபமாக வந்தது; நமக்குக் கரும்பிலே நஷ்டம் வந்துவிட்டது தெரிந்துதான் செங்கரும்புக்கு சின்னப்பன் வேறு இடம் பார்த்து விட்டான் என்று எண்ணினான். இவ்வளவுக்கும், சின்னப்பன், செங்கரும்பைத் தருவதாக வாக்களிக்கவுமில்லை.

கத்திரியின் கோபம், சின்னப்பன் மீது மட்டுமல்ல சிங்காரத்தின் மீதும் பாய்ந்தது – அவனுடைய காளையின் மீதும் பாய்ந்தது.

“திமிர் பிடிச்சு அலையறான் சிங்காரம்! காளை போலக் கொழுத்துக் கிடக்கிறோமே என்கிற திமிர்; பார்க்கிறேன் ஒரு கை” என்று கருவிக் கொண்டிருந்தான்.

கழனிப் பக்கமும், களத்து மேட்டிலும், தன் சம்பந்தமாக இப்படியொரு விரோதம் வளருவது செங்கரும்புக்கு எப்படித் தெரியும் – அந்தக் கட்டழகி, களை எடுப்பதும், பூ பறிப்பதும், கோழிக் குஞ்சுகளைப் பாதுகாப்பதும், மரத்திலே மாங்காய் பறிப்பதும், ஆட்டுக் குட்டிகளோடு ஓடி ஆடுவதுமாக இருந்து வந்தாள்.

“சிங்காரம் இலேசுப்பட்டவனல்ல புள்ளே! நீ சீவிச் சிங்காரிச்சுக்கிட்டு இருந்தா, அவன் பார்த்து இளித்துக் கிட்டுக் கிடக்கிறவனல்ல; வேலை, தரமாச் செய்ய வேணும், ஆமாம், வேலையிலே ரொம்பக் கறாரானவன்.” என்று சின்னப்பன் சொல்லுவான்.

தன் மகன், அக்கரையோடு பாடுபட்டு, நாலு போர் போல, முன்னுக்கு வருகிற போக்கிலே இல்லை என்று, கத்திரி அடிக்கடி கண்டித்து வரவே, கத்திரி மகனுக்கும் சிங்காரத்தின் மீது கோபம் பிறந்தது.

உனக்குப் பார்த்த குட்டியை சிங்கார மல்ல கட்டிக்கப் போறானாம் என்று அந்தக் கிராமத்து வாலிபர்கள் கேட்டுக் கேட்டு அவனுக்கு மேலும் கோபமூட்டினர். அவன், இந்தக் கோபத்தால் அறிவிழந்து, பொறுமையிழந்து, கண்டவர்களுடன் வம்புக்கு நின்றான்.

கத்திரியின் கோபம் வெள்ளம் போலப் பொங்கிற்று.

சிங்காரத்தின் காளையின் காலில் ஒரு அரிவாள் வெட்டு விழுந்தது – படட்டும் பாவிப் பய மகன், என்று களிப்புடன் கூறிக் கொண்டான் கத்திரி. அவனுக்குச் சிங்காரத்திடம் கோபம் இருப்பது அறிந்தவர்கள் “அண்ணேன்! போட்டதையே போட் டாயே, துண்டா விழக் காணோமே, காலு, கூடி வந்துடும்னு டாக்டரு சொல்றாராமே” என்று கேட்டனர். “அட போங்கடா, போக்கிரிப் பசங்களா; நான்தான் அந்தக் காளையோட காலை வெட்டினேன்னு கண்டிங்களா?” என்று கத்திரி கேட்பான் – ஆனால் கோபித்துக் கொள்வதில்லை. உண்மையில் காளையின் காலில் அரிவாள் கொண்டு தாக்கியது கத்திரி அல்ல – அப்படி கிராமத்துக்காரர் எண்ணிக் கொண்டதும் பேசிக் கொண்டதும், அவனுக்கு ஏதோ வீரப்பிரதாபமாகத் தெரிந்ததும் மகிழ்ந்தான்.

காளையில் துவங்கி, கத்திரியுடைய கழுத்துக்குச் சென்றது அரிவாள்: நல்லவேளையாக, கழுத்தில் வெட்டு விழாமல் தோள் பட்டையில் விழுந்தது – சிங்காரம் மூன்றாண்டுகள் ‘உள்ளே’ தள்ளப்பட்டான்.

அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான், செங்கரும்பு சிங்காரத்தைப் பார்த்தாள் – இருவர் உள்ளமும் ஒன்று பட்டது. தன் பொருட்டுத்தான் இவ்வளவு விபரீதமும் நேரிட்டது என்று ஈச்சங்கரும்பு மனச் சஞ்சலமடைந்ததுடன், இனி சிங்காரத்தைத்தான் கலியாணம் செய்து கொள்ளமுடியும், வேறு ஒருவனுக்கு நான் மனைவியாகப் போவதில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டாள்.

ஜெயிலுக்குப் போய் வந்தவனுக்குப் பெண் கொடுக்க சின்னப்பனுக்கு விருப்பமில்லை; எனினும், மகளுடைய பிடிவாதத்தைப் போக்கவும் முடியவில்லை.

“பைத்யக்காரப் புள்ளெ” என்று கூறுவான்.

“சிங்காரத்தோட நல்ல குணத்தைப் பத்தி நீயேதான் பன்னிச் சொல்லி, அவ மனசைக் கெடுத்துவிட்டே” என்று அவன் மனைவி குறைபட்டுக் கொண்டாள். ஜெயிலுக்குள் இருந்த சிங்காரம். செங்கரும்பு தன்னிடம் உள்ளன்பு கொண்டிருப்பது கேட்டு உள்ளம் பூரித்து இருந்தான். சிறையிலே இருந்தவர்களில் தன்னிடம் நெருங்கிப் பழகியவர்களிடம், வெளியே போனதும், தனக்குக் கலியாணம் – பெண் நிச்சயமாகிவிட்டது என்று சந்தோஷமாகச் சொல்லுவான்.

மூன்றாண்டுகள் உருண்டோடின! விடுதலை கிடைத்தது. சிங்காரத்துக்கு; செங்கரும்பின் நினைவு தாலாட்ட அவன் ஏறிச் சென்ற இரயிலிலேயே உறங்கிப் போனான்; சுவை தரும் கனவுகள்! வைக்கோற்போருக்குப் பக்கத்திலே அவள் நின்று கொண்டிருக்கிறாள், வயலோரத்திலிருந்தே அதை அவன் பார்க்கிறான், தா, புள்ளே! செங்கரும்பு! ஆடு வருதே வயலு பக்கம், ஒட்டி விடக்கூடாதா? என்று கேட்கிறான், அவளுடைய குறும்புப் புன்னகை அவனுக்கு இன்பமளிக்கிறது. இதோ கஞ்சி கொண்டு வருகிறாள், அதைத்தான் எவ்வளவு கனிவுடன் அவன் கையில் தருகிறாள்! இப்படிப்பட்ட பலப் பல கனவுகள்,

இரயில் நின்றது – ஒரே அல்லோலகல்லோலம்.

வெள்ளம் – உடைப்பு – இரயில் பாதை பிளந்து விட்டதாம் – இரயில் போகாதாம்.

இரவெல்லாம், ஏக்கத்துடன் இரயிலில் காலந்தள்ளினான் – பகல் வந்தது – பயங்கரமான செய்திகள் கூறினர்.

கடல் பொங்கிற்றாம் – பேய்க்காற்று அடித்ததாம் – உடைப்பு எடுத்து ஊர் பாழாகிவிட்டதாம் – இலட்ச இலட்சமாக மாண்டு போனார்களாம் – இப்படி எல்லாம் சேதி.

‘”தோப்புத்துறை’யிலே கூட வெள்ளமுங்களா?” என்று சிங்காரம் கேட்டான்.

“தோப்புத்துறைதான் இருந்த இடமே தெரியாமே முழுகிப் போச்சாமே” என்றான் ஒருவன்.

ஐயயோ! என்று அலறினான் சிங்காரம்.

தோப்புத் துறையில்தான் அந்தத் தோகைமயிலாள் இருக்கிறாள் – என்ன கதியோ!

வெள்ளம் வருவதற்கான குறிகளைக் கண்டறிந்த ஒரு சிலர், சின்னப்பனிடம் வந்து சொன்னார்கள்.

இந்தப் பேய்க்காத்து சும்மாவிடாது, சின்னப்பா! எனக்கென்னமோ மனசு திக்கு திக்குன்னுது, கிளம்பி எங்காச்சும் இப்பவே போறது நல்லதுன்னு தோணுது. நீ என்ன சொல்கிறே? என்று கிராமத்துப் பெரியவர் கேட்டார். சின்னப்பன், முன்பு அடித்த புயலைக் கண்டவன்- அதனாலே, “பெரியப்பா! பயந்து சாகாதிங்க…எல்லாம் பாக்கு கடிக்கிற நேரம்தான் வீசும் இந்தப் புயலு – பார்த்துக்கிடே இருங்க, வெளுத்துப் போகப் போவுது, இன்னும் கொஞ்ச நேரத்திலேயே” என்று கூறினான்.

அவன் கிராமத்தை விட்டுப் போகாததற்குக் காரணம், தைரியம் மட்டுமல்ல, ஏதோ ஓர் விசேஷத்துக்காக கத்திரி அன்று அங்கு வந்திருந்தான். சின்னப்பனுக்குக் கத்திரியைக் கண்டதும் ஒரே ஆத்திரம். நமக்கு இவ்வளவு கெடுதியைச் செய்தவனுடைய கையையோ காலையோ ஒடித்து புத்தி புகட்ட வேண்டுமென்று ஆத்திரம் பிறந்தது. அதற்குச் சமயம் கிடைக்கட்டும் என்று காத்துக் கொண்டிருந்தான்.

ஊரை அழித்து, உயிரைக் குடித்தாலன்றி என் பசி அடங்காது என்று கொக்கரித்தது போய்க் காற்று நேரிட்டு இருக்கும் பெரிய விபத்தை முன் கூட்டியே அறிந்து இயற்கை கோவென அழுவது போலப் பெருமழை பெய்து கொண்டிருந்தது. விநாடிக்கு விநாடி, வேகம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடலிலிருந்து கிளம்பிய கோரக் கூச்சல் காதைத் துளைத்தது. ஆபத்துக்களையும் இடர்ப்பாடுகளையும் அனுபவித்து அனுபவித்து உரம் ஏறியிருந்த உள்ளம் கொண்டவர்கள் கிராமத்துக்காரர்கள் என்றாலும், திகில் அவர்களிடம் இம்முறை அதிகமாகப் புகுந்து விட்டது.

கும்மிருட்டு எங்கும்! குடிசைகள் பிய்த்தெறியப்பட்டன! பெருமரங்கள் பேய்க் காற்றினை எதிர்த்து நின்று பார்த்து முடியாததால், கீழே முறிந்து விழ, உன்னை இத்துடன் விடப் போவதில்லை என்று கூறுவதுபோல, பெருங்காற்று, மரங்களைத் தூக்கி எறிந்தன. இங்கும் அங்கும் எங்கும் கூக்குரல், கதறல், ஐயோ! அம்மா! வெள்ளம் புகுந்து விட்டது, எங்கும் அழிவின் சீற்றம், மக்கள் வெள்ளத்தில் சிக்கிவிட்டனர் – அப்பா!! அம்மா! தாத்தா! அக்கா! அலமேலு! ஆண்டியப்பா! ஐய்யோ , தெய்வமே… என்று அலறல்கள் கிளம்பின. தோப்புத் துறை வெள்ளக்காடாகி விட்டது.

சின்னப்பன் குடும்பம் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. கால் நடைகளை முதலிலே எதாவது மோட்டாங் காட்டுக்கு ஓட்டிச் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான் சின்னப்பன் – வெள்ளம் அவன் குடிசை இருந்த தெருக்கோடியில் வருவதாகக் கூறிக் கொண்டே பலர் ஓடினார்கள் – ஓடியா! செங்கரும்பு! என்று கூவியபடி சின்னப்பன் வெளியே ஓடினான் – செங்கரும்பும் ஒடினாள். முழங்காலளவு, இடுப்பளவு என்று ‘தண்ணீர்’ விநாடிக்கு விநாடி ஏறிக் கொண்டே இருந்தது; குழந்தைகள் மூழ்கிவிட்டன; வயோதிகர்கள் நீந்த முடியாமல் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர்; செங்கரும்பு தன்னால் கூடுமானவரையில் சமாளித்துப் பார்த்தாகிவிட்டது, அப்பா என்று கூறிச் சாய்ந்தாள் – சின்னப்பன், தன் மகளை வாரி எடுத்துக் கொண்டு, இழுத்துக் கொண்டே நீந்தினான் – திக்குத் தெரியாத நிலை சின்னப்பனுக்கும் வலிவு தீர்ந்துவிட்டது – செங்கரும்புக்கு மூச்சுப் பேச்சில்லை.

வெள்ளத்திலே சிக்கிய கத்திரியும், வெகு பாடுபட்டான். துவண்டு கிடக்கும் செங்கரும்பும், கடைசி கட்டத்துக்கு வேகமாகச் சென்று கொண்டிருக்கும் சின்னப்பனும் கத்திரியின் கண்களில் பட்டவுடன் யாரு? சின்னப்பனா? என்று கூவிக் கொண்டே, தன் பலம் கொண்டமட்டும் நீந்திச் சென்றான் அவர்களிடம் – இதோ இந்தாப்பா செங்கரும்பு இனி உன் மக…என்று கூறியபடி, சின்னப்பன், செங்கரும்பை, கத்திரி கையில் ஒப்படைத்துவிட்டு, பிணமானான்! பெருவெள்ளம் வேறு பலரைப் பிணமாக்க விரைந்து கொண்டிருந்தது.

எப்படி நீந்தினானோ, எங்கிருந்து அந்த வலிவும் துணிவும் பிறந்ததோ தெரியவில்லை, கத்திரி, கடைசியில் செங்கரும்பைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.

“அப்பா போயிட்டாரா? ஐயய்யோ, அப்பா!” என்று கதறினாள் செங்கரும்பு, கத்திரி சமாதானம் கூறவில்லை. “என் மகன் என்ன ஆனானோ…!” என்று கலக்கம் கொண்டான்.

“அம்மாவைத் தப்பவைக்க முடியாமலே போய்விட்டது”

இப்படிப் பலருடைய கதறல்.

வெள்ளக் காடாகாமலிருந்த வேறிடம் தேடி, தள்ளாடி நடந்தனர், செங்கரும்பும் கத்திரியும், வழியில் வேறோர் பக்கமிருந்து, கத்திரியின் கிராமத்து மக்கள் ‘குய்யோ முறையோ’ என்று கூவிக் கொண்டு, வந்தனர் – அந்தக் கிராமம் அடியோடு அழிந்துவிட்டது என்றனர்.

“மகளை மட்டும்தான் காப்பற்ற முடிந்தது, பாவம்…” யாரோ ஒருவர் கூறினார், கத்திரியையும் செங்கரும்பையும் பார்த்துவிட்டு,

மூன்று நாட்களும், வேதனையுடன் திருத்துறைப் பூண்டியில் காலந்தள்ளினான் சிங்காரம்; வெள்ளம் வழி விட்டிருக்கிறது என்று கேள்விப் பட்டதும் ஒடோடிச் சென்றான் தோப்புத் துறைப்பக்கம்; வழியிலே இருந்த மேட்டில் செங்கரும்பு இருக்கக் கண்டான், உருமாறிப் போன நிலையில்…

“செங்கரும்பு…என் வயத்திலே பால் வார்த்தயே…”

“அத்தான்…வந்துட்டிங்களா…” .

“அவரு போயிட்டாரு…என்னை நெடுந்தொலைவு வெள்ளத்திலேயே சுமந்துகிட்டு நீந்தினாரு…கடைசியிலே…அவர் போயிட்டாரு…நானும் போயிருக்க வேண்டியவதான்…கடைசி நேரத்திலே, இவருதான் காப்பாத்தினாரு…”

திரும்பிப் பார்த்தான், அவர் காலில் விழுந்து கும்பிட – கத்திரி! என்ன செய்வதென்றே தெரியவில்லை, சிங்காரத்துக்கு.

“நான்தாண்டாப்பா சிங்காரம், நானேதான்…இந்த செங்கரும்பு என் மருமக ஆகவேணும்னு கெடுதிசெய்து, உன்னை மூணு வருஷம் ஜெயிலுக்கு அனுப்பின அதே பாவிதான்…ஆனா, சிங்காரம், முன்னே உனக்கு நான் செய்த கெடுதிக்கெல்லாம் பரிகாரம் தேடிட்டேண்டாப்பா, செங்கரும்பை வெள்ளம் கொண்டு போகாமப்படி செய்து உன்னண்டை. ஒப்பு வித்துவிட்டேன். அந்த வெள்ளம்தான், எனக்கு இருந்த கெட்ட நினைப்பு, கேடுகெட்ட புத்தி எல்லாவற்றையும் அடித்துக் கிட்டுப் போயிட்டுது…மக்களெல்லாம் பட்ட அவதியை இந்தக் கண்ணாலே பார்த்தேன். என் மனசு படாத பாடுபட்டுது…இந்தப் பொண்ணு, உயிருக்குத் துடிச்சிகிட்டு இருக்கிறதைப் பார்த்ததும் என் மனசு கேட்கலே…இன்னமும் கேடு செய்கிற புத்தி இருக்கக் கூடாது என்கிற நல்ல எண்ணம் உண்டாச்சி…நானும் நல்லவனாயிட்டேன்…சின்னப்பனைத்தான் காப்பாத்த முடியாமலே போயிட்டுது…இந்த வெள்ளம், எங்க கிராமத்தை அடியோடு அழிச்சுப்பூட்டுது, என் மகன், மாடு கண்ணு எல்லாம் போயிட்டுதாம்…ஊரார் சொன்னாங்க…செங்கரும்பை என் மருமகளாக்கிக் கொள்ளவேணும் என்கிற ஒரே ஆசையாலேதான் நான் உனக்குக் கெடுதி செய்தேன்…இப்ப, என் மகனே போயிட்டான்…”

“அழாதீங்க…அழாதீங்க…இவ்வளவு பெரிய அழிவு நேரிட்டபோது, இத்தனை பெரிய உபகாரம் செய்ய முடிஞ்ச தேன்னு பெருமைப்படுங்க…செங்கரும்பு உங்க மருமகளாகத் தானே ஆகவேணும்…உங்க மகனைத்தான் வெள்ளம் விழுங்கி விட்டதே…என்னை உங்க மகனாக ஏத்துக் கொள்ளுங்க…செங்கரும்பு, உங்க மருமக ஆயிடுறா…நீங்கதான் அவ மாமனாரு…”

சிங்காரத்தைக் கட்டித் தழுவிக் கொண்டான் கத்திரி.

வானம் பொழிய வேண்டிய அழிவைப் பொழிந்தாகி விட்டது. இதோ சூரிய வெளிச்சம் என்று சுட்டிக் காட்டினான் சிங்காரம், புன்னகை புரிந்தபடி.

– 05.02.1956, திராவிடநாடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *