சூரியகாந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,749 
 
 

மதுரை மருத்துவக் கல்லுரி ஆண்டு விழா. நிகழ்ச்சி அரங்கம் பொங்கி வழிந்தது. இளமை-யின் துள்ளலோடு ஆண்களும், பெண்களும் இருந்தார்கள். முதன்மை ஆசிரியர் முதல் மதிப்பெண் எடுத்த நபரை அழைத்தார். அருந்ததி அப்பாவின் உள்ளங்கையில் பிரியமாய் தட்டிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து நகர, அரங்கமே கரவோசையில் அதிர்ந்தது. அருந்ததிக்குள் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கையில் என்னவோ முதல்முதல் நிலாவில் காலடி எடுத்து வைத்த மாதிரி பாதம் பதியக் கூசியது. மேடை சமீபிக்கவும் ஒரு நொடி நிதானித்தாள். பெரிதாய் மூச்சை உள்ளிழுத்து விட்டு, மடமடவென ஏறினாள்.

unmai - Mar 16-31 - 2010முதன்மை ஆசிரியர் தங்கப்பதக்கம் கோர்த்த மாலை அணிவித்தார். அருந்ததிக்கு அடிவயிறு ஜிவ்வென எவ்வ தண்டுவடம் சிலிர்த்தது. மேடை ஓரம் வந்தவள் தலை கவிழ்ந்திருந்த மைக்கின் கழுத்தை நிமிர்த்தினாள். தாள-முடியாத பரவசிப்பில் மூச்சிறைக்க, ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்ச்ச்சியா இருக்கேன்.. இந்த கணம் என் வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாதது.. இந்த கணத்துக்காக தன் வாழ்நாளெயே அர்ப்பணிச்ச என் அப்பாவுக்கு இந்த கணத்தெ சமர்ப்பிக்க விரும்பறேன். காமராஜ் கலங்கியிருந்த கண்களில் புன்னகை-யின் சிலிர்ப்பிருந்தது.

ஒன்னு மட்டும் சொல்லிக்க ஆசை.. கடெசி வரை மருத்துவ வசதியில்லாதெ ஒரு கிராமத்தெ தேர்ந்தெடுத்துப் பணி புரிய ஆவலா இருக்-கேன்றதெ இந்த எடத்துலெ மகிழ்ச்சியோட பதிவு பண்ணிக்கறேன்..

அரங்கம் கரகோசத்தால் பதிலளித்தது. அருந்ததி உணர்ச்சிவசப்பட்டவளாய் பார்-வையாளர் முதல் வரிசையில் பார்வை நகர்த்த, காமராஜ் கண்ணாடி உயர்த்திப் பிடித்து கண்களை ஒற்றிக் கொண்டிருந்தார்.

*

இருசக்கர வாகனம் நாற்பதில் சீராகச் சென்று கொண்டிருந்தது. பின்இருக்கையில் இருந்த காமராஜ் தோளை பக்கபலமாகப் பற்றியிருந்தார். விரல்கள் ஆதர்சத்துடன் அழுந்தின.

குரல் தழுதழுத்தது.

நிரூபிச்சுட்டெ..

என்னப்பா சின்னப்புள்ளெயாட்டம் என்று பக்கவாட்டில் செல்லமாய் அதட்டியபோது அவள் குரலும் அதே மாதிரி சிக்கிக் கொண்டிருந்தது.

காமராஜ் சிறிது நேரம் பதில் எதுவும் பேசவில்லை. எப்படி இத்தனை மகிழ்ச்சியை வார்த்தையில் விவரிப்பதென்கிற மலைப்பு. வாழ்நாளின் ஒட்டு மொத்த மகிழ்வையும் ஒரே நொடியில் அனுபவிப் பதாய் இதயம் உணர்ந்தது. மனது சிறகடித்ததில் தரை தொலைந்து போனது. அப்படியே மிதந்து கொண்டே கேட்டார்.

எந்த கிராமம்..

அம்மாபட்டி

*****

காமராஜ் உடனே பதில் சொல்லவில்லை. எதிர்காற்று விழிகளில் எறிந்த துசியை கண்ணாடி கழற்றி ஒற்றினார். அங்கெ என்னெ

அம்பது பேர் சமீபத்துலெ காலராவுல உயிர் இழந்திருக்காங்க.. அங்கெ ஒரு மருத்துவமனை கூட இல்லெ.. செய்தித்தாள்லெ பாத்தேன்..

தீர்மானம் பண்ணியாச்சா

ம்

துணிச்சல் தான்

புலனாய்வுப் பததிரிகை நிருபரோட பொண்ணாச்சே..

* அடுத்த வாரமே காமராஜ் அங்கே சகல ஏற்பாடுகளும் செய்திருந்தார். வீட்டோடு மருத்துவமனை.

ஒத்தாசைக்கு நம்மெ சமையல்காரப் பாட்டி அழெச்சிட்டுப் போயிரு

ம்

என்னெ?

நீங்க இல்லாமெ..

காமராஜ் தோளோடு அரவணைத்தபடி சொன்னார்.

இன்னும் ஒரு வருசம் தானெ. பணி ஓய்வு ஆனதும் ஒன் மருத்துவமனையிலயே ஒரு கம்பவுண்டர் வேலெ போட்டுக் குடு.. அப்பா எங்கெ போயிடப் போறேன். வாரவாரம் ஞாயித்துக் கெழமெயானா வந்து விழுந்துர மாட்டேன்..

ஏமாத்தக்கூடாது

என்ன செய்வியாம்

வராமப் போயிருவீங்களாப்பா

ஒன்னெ விட்டுட்டு எங்கடா போயிரப் போறேன்.. அவரின் புன்னகையில் கண்ணீர் துளிர்த்திருந்தது.

*

தண்டோரா சத்தம். பஞ்சாயத்து சார்பாய் புதிய மருத்துவர் வருகை குறித்த அறிவிப்பு முழங்கியது.

மருத்துவமனை துவங்கிய தினமே இருபது நபருக்கு மேல் வைத்தியம் பார்த்தாள். ஐந்து ரூபாய் கட்டணம்.

இரவு பாட்டி மணக்க மணக்க மணத்தக்காளிக் குழம்பு பண்ணியிருந்தார். அருந்ததிக்கு ருசிக்கவேயில்லை. வாசந்தியின் ஜனனம் நாவல் எடுத்து வைத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தாள். கண்களை மூடினால் மறுபடி மறுபடி மறுபடி அப்பா அப்பா அப்பா தான்.

எனக்காக இன்றுவரை மறுகல்யாணம் செய்து கொள்ள உடன்படாதவர். நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பா என்றால் உழைப்பு உழைப்பு தான் அவரின் தாரகமந்திரம். ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரம் போதாமல் அப்படித் தவிப்பீர்கள்.. நீங்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ சம்பாதித்-திருக்கலாம்.. இருந்தும் காசு சேர்க்காமல் சேமிப்புக் கணக்கில் பிறரின் அன்பை சம்பாதிக்கத் தானே ஆளாய்ப் பறந்தீர்கள். இருப்பதற்குப் பணம் தேவை. வாழ்வதற்கு மன நிறைவு தேவை என்று சொல்லித் தானே வளர்த்தீர்கள்.. எப்படியெல்லாம் என்னைப் படிக்க வைக்க நேர்வழியில் சிரமப்பட்டிருப்-பீர்கள்.. மீசையில்லாத ஆண் பிள்ளையாய் வளர்த்தீர்கள்.. பாரதியை, வள்ளுவரை, புத்தரை, பெரியாரை, ஜே.கிருஷ்ணமூர்த்தியை, ஜென்னியை, காந்தியை, தெரஸாவை, அப்துல்-கலாமை,இலக்கியத்தை, சுயசிந்தனையை எல்லாம் அறிமுகப்படுத்தி என் இணைபிரியாத சிநேகிதர்களாக்கித் தந்தீர்கள். உங்கள் உணர்வுகளின் ஒவ்வொரு துளியையும் உளப்பூர்வ-மாய் நேசிக்கிறேன்ப்பா.. ஆளுமை, சகிப்புத்தன்மை, நேசிப்பு, நட்பு, ஈர்ப்பு இப்படி எதிலும் என் மனதின் உச்சபட்ச அளவீடு நீங்கதாம்ப்பா…

*

ஊர்க்காவல் சத்தம். கைத்தடியின் தட்டல் ஓசை. சுவர்க்கடிகாரம் மூன்று முறை கூவியது. இன்னுமா துங்காம-லிருக்கிறேன். வராண்டாவில் பாட்டியின் குறட்டைச் சத்தம் தாள லயத்துடன் கேட்டது. *****

இரவுப் பூச்சிகளின் பின்னணி இசையில் சில் வண்டின் கானம் துக்கம் தழுவச் செய்து ஐந்து நிமிடமிருக்காது. கதவு தட்டும் சத்தம்.

யாரு

நாந் தேன்

நாந் தேன்னா

சுப்பு லச்சுமி

கதவைத் திறந்ததும் ஒரு நடுத்தர வயது மாது. கண்டாங்கிச் சேலை. துக்கி முடிந்திருந்த அடர்த்தியான கொண்டை. வலது நாசியில் பெரிய சிகப்புக்கல் மூக்குத்தி. கண்களில் பரிதவிப்பு. நாசி விடைக்க படபடவென்று பேசினாள். எம் பையன் ரொம்ப முடியாமெ கெடக்கறான் டாக்டரம்மா..

அழாமச் சொல்லுங்கம்மா.. என்னெ செய்யுது?

ஒரு வாரத்துக்கு முந்தி லேசா வவுத்துப் போக்கு இருந்தது. அல்வா வாங்கிக் குடுத்தேன்.

அல்வாவா

எந்தெ கை வைத்தியத்துக்கும் கட்டுப்படாமெ கை மீறிப் போயிருச்சி.. பேச்சி மூச்சில்லாமெ கெடக்கறான்… நீங்க தேன்..

வயசு

பதினஞ்சி இருக்கும்

மருந்துப் பெட்டி எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

மாரியாத்தா.. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒத்தெப் புள்ளெ வெச்சிருக்கேன்.. பிடுங்கிக்கிட்டுப் போயிறாதம்மா.. ஏ.. கருப்பா, முனியா எஞ்சீவனெ காப்பாத்து.. ஒன் சந்நிதி வந்து பொங்க வெக்கிறேன்..

*

அருந்ததி அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் உணர்வுகளில் மின்காந்த அலை. அந்த முகம் பார்த்ததும் ஈர்த்தது. பால் வடியும் வெகுளியான முகம். கண்கள் உலர்ந்து போய் செருகிக் கொண்டிருந்தது. மடமடவென சிகிச்சையில் இறங்கினாள்.

இது காலரா என்றவள், பயப்பட வேணாம்.. ஊசி போட்ருக்கேன்.. சரியாயிரும்..

நன்றியோடு ஏறிட்டவள், எல்லாம் அந்த கருப்பசாமி தயவு என்றாள்.

என் பேரு அதில்லெயே..

புன்னகைத்தபடி, சாமி.. ஒங்க ரூபத்துலெ பொழைக்க வச்சிருக்கு டாக்டரம்மா..

என்னெ ஒடனே கடவுளாக்கிடாதீங்க.. மனுசியா பாருங்க.. அது தான் எனக்குப் பிடிக்கும்..

என்று மருந்து எழுதிக் கொடுத்தாள்.

*

இங்கு வந்ததும் அருந்ததி முதல்முதலில் செய்தது ஊர் பஞ்சாயத்தை முடுக்க வேண்டிய விதத்தில் முடுக்கி, ஆற்று உரைக் கிணறு சுற்றிலும் தேங்கிக் கிடந்த கழிவு நீரை சிமிண்டுக் கால்வாய் கட்டி தேங்க விடாமல் பண்ணியது தான். விரைவிலேயே ஊர் தங்கள் அன்பின் ஈர்ப்பால் இழுத்துப் பிடித்துக் கொண்டது. அவர்களின் அறியாமை அருந்ததியின் பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்தது.

*

இன்று ஞாயிற்றுக் கிழமை. அப்பா இந்நேரம் வந்திருக்க வேண்டுமே.. ஏன்.. மதுரைக்கு கிளம்பி விடலாமா.. என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அப்பா வந்து விட்டார்.

தொலைந்து கொண்டிருந்த உற்சாகம் மீண்டும் அங்கே நிறையத் துவங்கியது. காமராஜ் கையை ஓடிச் சென்று பிடித்துக் கொண்டாள். மன்னிச்சுக்கடா.. கொஞ்சம் தாமதமாயிருச்சி..

போங்கப்பா..

இப்ப தான் வரேன்.. அதுக்குள்ளெ போன்னுறியே..

*****

அப்பா மார்பில் வாஞ்சையுடன் சாய்ந்து கொண்டாள். காமராஜ் ஆதர்சத்துடன் தோளில் தட்டிக் கொடுத்தார்.

என்னப்பா ரொம்ப சோர்வா இருக்கீங்க.. போய் முகம் கழுவிட்டு வாங்க.. ஒங்களுக்குப் பிடிச்செ அடை, அவியல் நானே செஞ்சிருக்கேன்.. அதுக்கு முன்னாலெ காபி தானெ

ம்

பாட்டியும், அருந்ததியும் சமையலறை சென்றார்கள்.

*

காமராஜ் முகம் கழுவி துவாலையில் ஒற்றிக் கொண்டே முன் அறைக்கு வந்தபோது, கதவு தட்ற சத்தம் கேட்டது. யாரது?

டாக்டரம்மாவெப் பாக்கனும்..

வாங்க.. கதவு தெறந்து தான் இருக்கு.. வந்தவளை பார்த்த மாத்திரம் உள்ளுர ஒரு நடுக்கம்.

இது.. சுப்புலட்சுமியா..? ம். அவளே தான்.

நீங்க தான் அப்பாங்களா.. என்றபடி இடுப்பிலிருந்த தாம்பாளத்தை இறக்கி வைத்தாள்.

என்ன?

பழம்

இவ்வளவா

எவ்வளவு குடுத்தாலும் தீராது.. ஒரு உசுரயில்லெ காப்பாத்தியிருக்காங்க.. எம் வம்சம் பொழெக்க வெச்ச காவல் தெய்வம் அவங்க.. என் வவுத்துலெ பொறக்காதெ மகெ.. ஒரு நொடி மௌனமாகப் பார்த்தார்.

இல்லெ.. அவெ உன் வயித்துலெ பொறந்த மகெ தான்.. என்றார் சன்னமான குரலில்.

நொடியில் மனது கனத்துக் கொண்டு வந்தது. அதிர்ச்சியோடு, நீங்க என்ன சொல்றீங்க..?

சொல்லக் கூடாதுனு தான் இருந்தேன்.. ஒன்னெ எதிர்பாராம பாத்ததும்.. சரி.. அந்த ஒரு பொய்யெ மட்டும் எதுக்காக மனசுலெ போட்டு வச்சிட்டிருக்கனும்னு தோணுச்சி.. சொல்லிட்டேன். ஆமா. இருபத்து ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நாமெ சந்திச்சிருக்கோம். நான் வேலெ செய்யிற பத்திரிகையிலெயிருந்து ஒரு நேரடி ஆய்வு செய்யறதுக்காக இங்கெ வந்திருந்தேன்.. ஞாபகம் இருக்கா..

*

ஊருக்கு ஒதுக்கமாய் இருந்த நல்ல தண்ணீர் கிணற்றிலிருந்து அந்த இளம்பெண் வந்து கொண்டிருந்தாள். காமராஜ் அந்தப் பெண்ணை மறிக்க, அவள் மிரண்டு போய்,

ஆரு.. அம்மெ குத்தறதுக்கு வந்தவுகளா என்றதும், இல்லெ..இல்லெ.. ஒரு விவரம் விசாரிச் சிட்டுப் போலான்னு வந்திருக்கேன்..

வேறெ வேலையில்லெ..

சொன்னா பணம் குடுப்பேன்..

என்னாது?

ஒன் பேரு?

சுப்புலச்சுமி

பொறக்கறெ கொழந்தை பெண் கொழந்தையா இருந்தா இங்கெ உமியோ, கள்ளிப் பாலோ குடுத்து அழிச்சிடுறாங்களாமே.. அப்பிடியா?

பின்னெ, வச்சிக்கிட்டு என்னெ செய்யச் சொல்றீங்க.. நாங்க பொழைக்கறதுக்கே எத்தினி கரணம் போட வேண்டியிருக்கு.. இதுலெ பொட்டப் புள்ளெ என்னத்துக்கு.. காலம் பூரா பாரந்தேன்..

அதே நேரம் அந்த அலறல் சத்தம் கேட்டது. பதறிக்கொண்டு அந்த இடம் நோக்கிச் செல்ல யத்தனித்த காமராஜை அவசரஅவசரமாய் அந்தப் பெண் தடுத்தாள்.

அங்கெ போகக்கூடாதுனு சொல்றதுக்கு நீ யாரு

அந்தக் கொழந்தையோட அம்மா

அம்மாவா! சுப்புலட்சுமி தலையில் அடித்து அழ ஆரம்பித்தாள். முந்தானை எடுத்து கண்கள் ஒற்றினாள்.

*****

நேத்து தான் புள்ளெயெப் பெத்த பச்செ ஒடம்புக்காரி நான்.. வேணாம்னு நெனெச்சுட்டோம்… ம். பெத்தெ மனசு கேக்கதா.. அதான் கொடத்தெ எடுத்துக்கிட்டு வந்துட்டேன்.. என்ற போது, மறுபடி அந்த அலறல் சத்தம். *

அனிச்சையாய் கால்கள் பரபரக்க, திசை தெறிக்க ஓடினான். குரல் பலமிழந்து போய் பின்னால் அவள் தொடர்ந்தாள். மொழுமொழுவென்றிருந்த அந்தப் பெண் சிசுவை இருவர் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்க, ஒருவன் அதற்குத் தயாராகிக் கொண்டிருக்க, நிறுத்துங்க என்று அதட்டி யதில், அவர்கள் அதிர்ந்துபோய் பார்க்க,ஓடி வந்த அவள், ஏந் தடுக்கறீங்க.. இது எங்கெ புள்ளெ.. என்றதும், ஒன் அம்மா இப்புடி நெனச்சிருந்தா நீ இப்புடி நின்னு பேசிக்கிட்டிருந்திருக்க மாட்டெ.. என்றான்.

காமராஜ் கண்கள் நிறைத்துக் கொண்டது.

சட்டென தீர்மானித்தவனாய்,சரி.. உண்மையிலேயே இந்தக் கொழந்தை பாரம்னு நெனச்சீங்கன்னா.. நானே எடுத்துக்கறேன்.. யோசனையாய் பார்த்தார்கள்.

அவன் நுறு ரூபாய் எடுத்து நீட்டினான்.

சம்மதித்தார்கள். ஆனா ஒரு விசயம்.. இனிமே இந்தப் புள்ளெக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லெ.. என்றாள்.

காமராஜ் தலையசைத்தான்.

அவன் கைகளில் குழந்தை வந்து விழுந்தது. பனி விளைந்த கண்களோடு இமைக்காமல் பார்த்தான். குழந்தை அவன் ஆள்காட்டி விரலை சிக்கெனப் பற்றிக்கொண்டு உதட்-டோரம் பொக்கையாய் மலர்ந்தது.

*

அப்போ..டாக்டரம்மா

வருத்தமில்லையே

எதுக்குய்யா கேக்கறீங்க

ஒன் பேச்செ மீறி இங்தப் பக்கம் அவெ வந்ததுக்கு..

அய்..யா

பழசெ ஞாபகப்படுத்தியிருந்தா மன்னிச்சிரு

அப்போ.. அய்யா.. ஒங்க சம்சாரம்..

கல்யாணமே பண்ணிக்கலெ

அதிர்ந்துபோய் பார்த்தாள்.

நாந்தான் பத்திரிகையெ எப்பவோ கல்யாணம் பண்ணிக்கிட்டனே.. அருந்ததியெப் பொறுத்தவரை நான் மனைவியெ இழந்தவன்.. கற்பனையிலெ ஒரு மனைவியெ உறவாக்கி , பறிகொடுத்து, இப்போ அருந்ததி சந்தோசப்படறதெப் பாத்து சந்தோசப்பட்டுக்-கிட்டு.. புன்னகைத்தான்.

சுப்புலட்சுமி வாயடைத்து நின்றாள். நாக்கு பேசவிடவில்லை. தலையை பக்கவாட்டில் மெல்ல அசைத்தாள். கொண்டு வந்த தாம்பூலத் தட்டை எடுத்து, யாரு கொணாந்ததுனு கேட்டா முக்கு வீடு சுப்புலச்சுமினு சொல்லுங்க ஒங்க மகெகிட்ட..என்றவள், சுருக்குப் பையிலிருந்து நுறு ரூபாய் தாளோடு ஒரு ரூபாய் நாணயம் எடுத்து பழத்தட்டின் மீது வைத்துத் தந்தாள்.

வாங்கியபடி காமராஜ் அப்படியே சோபாவில் வைத்துவிட்டு அமர்ந்தார். அருந்ததி காபி டபராவுடன் வந்தாள். பார்த்தாள். இன்னும் இன்னும் பார்த்தாள். குரல் தழைய அழைத்தாள்.

அப்..பா

காபி பெற்றுக்கொண்டே,என்னம்மா

என்னனு தெரியலப்பா.. ஒங்களெ கூப்பிட்டுக்கிட்டேயிருக்கனும் போலருக்குப்பா..

புன்னகைத்தார்.

காபி பிரமாதம் என்றவர், தாம்பூலத்தை நீட்டி, முக்கு வீட்லெ இருக்கற..

இவள் குறுக்கிட்டு,சுப்புலட்சுமி

ம் என்றபடி தந்தார்.

தரும்போது தட்டிலிருந்த நாணயம் உயிர் பெற்று பெண்ணின் வெடிச்சிரிப்பாய் துள்ளிக் குதித்து அவள் காலடி வந்து தொட்டது. எடுத்தாள். நாணயத்தின் மீது படிந்திருந்த அழுக்கில் சிதறிய துளி கண்ணீரைத் துடைத்து விட்டதில் ,கேர் ஃபார் ஃபீமேல் சைல்ட் என்று அதில் பொறித்திருந்த எழுத்துகள் உயிர் பெற்றெழுந்தது.

– மே 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *