எப்படியோ அம்மாகிட்டேந்து வாட்ச் கிஃப்டா வாங்கியாச்சு,கொஞ்சமாவது மார்க் கூட எடுத்திருக்கலாம்.இப்படி ஜஸ்ட் பாஸ் ஆனது தான் ஒரு மாதிரி இருக்கு.அம்மா ஒன்னும் சொல்லலை அது வரைக்கும் சந்தோஷம் .ஆனா சார் என்ன சொல்லுவாரோ ?அந்தமாமி வேற , படிக்கிற பையன்னு நினைச்சுக்கிட்டாங்க , அவுங்க கேட்டா என்ன பதில் சொல்றதுனு தெரியலை.ரெண்டு பேரும் ஒன்னா தான் படிச்சோம் ,ஆனா கவிதா மட்டும் ஃபர்ஸ்ட் கிளாஸ் ல பாஸ் பண்ணிடுச்சு.ஒரு வேளை அது நிஜமாவே படிக்கிறப் புள்ளையோ.நம்மல மாதிரியில்லையோ.
கவிதா கண்ணுல படாம எப்படியாச்சும் அவுங்க வீட்டத் தாண்டிடனும்,இல்லாட்டி மார்க் ஏன் குறைஞ்சுது,அது இதுனு கேட்டு கொடுமை பன்னுவா.சத்தம் இல்லாம தான் நடந்தேன் , இருந்தும் எப்படியோ என்னை பாத்துட்டா.
“பிரகாஷ்!நில்லு டா, ஹிந்தி சார் வீட்டுக்கு தானே போற ,5 நிமிஷம் இரு நானும் வரேன்”
“சரி சீக்கிரம் வா.”
“என்னடா புது வாட்ச்,சூப்பரா இருக்கே.”
நல்ல வேலை பாத்துட்டு , அதோட நிருத்திட்டா,ப்ராத்மிக் பாஸ் ஆனதுக்கு தான் வாங்கிக் குடுத்ததுன்னு தெரிஞ்சா ஓட்டி எடுத்திடுவா.அதனால நானும் வாட்ச் பத்தி எதுவும் பேசாம நடந்தேன்.
“கவி , சார் மார்க் சீட் வாங்க வரும் போது ஏதாச்சும் கிப்ட் குடுக்கனும்னு சொன்னாரே , ஏதாச்சும் வாங்கனுமா..?”
“சர்டிஃபிகேட் வாங்கும்போது நல்ல கிஃப்டா வாங்கி குடுப்போம்.என்ன வாங்கலாம்னு யோசிச்சு வைடா..எனக்கு ஏதாச்சும் தோனுச்சுனா சொல்றேன்.
“ம்ம்…”
“சரி நீ ஏன் மார்க் ரொம்ப கம்மியா எடுத்தே? நல்லா எழுதிருக்கேன்னு சொன்னீயே டா….என்ன ஆச்சு..”
“உன் கூட சேர்ந்து படிச்சேன்ல அதான்னு நினைக்கிறேன்.நானே சாரும் , மாமியும் கேட்டா என்ன சொல்றதுன்னு யோசிச்சிட்டிருக்கேன் , இதுல நீ வேற…”
“கோவப்படாதே…நான் எதுவும் கேட்கலப்பா..ஆனா நீ சார் வீட்ல ரொம்ப பாப்புலர்…சார் வீட்ல கொளு வெச்சப்போ உன் ஸ்கூல் ப்ரேயர்லாம் பாடி கலக்குன…கண்டிப்பா மாமி கேட்பாங்கஅப்ப என்ன சொல்லப்போற”
“அதான் ஏன் பாடுனேன்னு யோசிச்சுட்டிருக்கேன்..என்ன சொல்லறதுன்னு தெரியலை”.
“மத்தியமாலக் கண்டிப்பா நல்ல மார்க் எடுக்குறேன்னு சொல்லு டா”
“ம்ம்..வேற வழி..?”
சார் வீடு வந்துடுச்சு…..
‘சார்..!” நானும் , கவிதாவும் கோரசா கூப்பிட்டோம்…
மாமி தான் வந்தாங்க.எங்களைப் பாத்து…
“யாரு நீங்க!என்ன வேனும்?சார் திருச்சி வரைக்கும் போயிருக்காரு,வர நேரம்தான்.உட்காருங்கோ…என்ன ..? டியுஷன் சேர வந்தீங்களா..?”
மாமி இப்படிக் கேட்டதும் , எண்ணையில போட்ட கத்திரிக்காய் மாதிரி எங்க ரெண்டு பேரு மூஞ்சும் சுருங்கிப் போச்சு.
“இல்லை மாமி , மார்க் ஸீட் வாங்களாம்னு வந்தோம்..”
நாங்க சொன்னதை ஒழுங்கா கேட்டாங்களானு தெரியல…”சார் வர நேரம் தான்..அப்ப்டி உட்காருங்கோனு” மட்டும் சொல்லிட்டு எங்களை திண்ணையில உட்கார சொல்லிட்டு வீட்டுக்குள்ளபோயிட்டாங்க.
நாங்க டியுடஷல தினமும் உட்கார இடமும் அதுதான். மாமி எப்படி நம்ம முகத்தையல்லாம் மறந்தாங்க…கடந்த 6 மாசமா தினமும் சாயுங்காலம் இங்க தான் இருப்போம்.பரீட்ச்சை முடிஞ்சு 1.5 மாசம் தான் ஆகுது.அதுக்குள்ள எப்படி மறந்தாங்க.ரெண்டு பேரும் இதைத்தான் யோசிச்சோம்,தவிச்சோம்.பேசுனா கேட்கிற தூரத்திலத் தான் மாமி இருந்தாங்க.அதனால ஏதும் பேச முடியாம தவிச்சோம்.
சார் வரது வழக்கம் போல அந்த டிவிஎஸ் 50 சத்தத்துலேந்து தெரிஞ்சுது.வ்ண்டியை நிப்பாட்டிட்டு , எங்களப் பாத்து ..”என்ன மார்க் சீட் வாங்க வந்தீங்களானு கேட்டதும்.அப்பாடி இவராச்சும் ஞாபகம் வைச்சிருக்கிராரேனு ஒரு சந்தோசம்.உள்ளே போய் மார்க் சீட் எடுத்துட்டு வந்து உன் பேரு என்னானு கேட்டாரு…
“முகத்தை ஞாபகம் வைச்சுக்கிட்டதே பெரிசு. இதுல எங்கப் பெயரெல்லாம் ஞாபகம் வெச்சிப்வபீங்கன்னு எதிர் பாக்கலை” அவளோட மைன்ட் வாய்ஸ் எனக்குப் புரிஞ்சிது.
‘எஸ்.பிரகாஷ் ,டி.கவிதா” னு எங்க பெயரை சொன்னதும் ,
கையில் இருந்த 20-30 அட்டையில எங்களோடத தேடி எடுத்துட்டாரு.எங்களை குருகுருனு பார்த்தாரு.”மத்தியமால கண்டிப்பா நல்ல மார்க் வாங்குரேனு சொல்லலாம்னு வாயைத்திறந்தா…அதுக்குலல அவரு..
“எங்க ஏதும் கானும்.குரு தட்சனை தரனும்னு சொல்லிருக்கேன்ல…இன்னும் 2 வாரத்துலசர்டிஃபிகேட் வந்துடும்.தட்சனை குடுத்துட்டு ரெண்டையும் சேத்து வாங்கிட்டுப் போங்கோ.புரியுதா?”
அவரு இப்படி சொன்னதும் , என்ன சொல்றதுனு தெரியாம,”சரி நாங்க அடுத்த வாரம் வரோம்னு” சொல்லிட்டு கிளம்பினோம்.
“நான் அப்பவே சொன்னேன்ல.ஏதாச்சும் வாங்கிட்டு வந்திருக்கலாம்.இவ்வளவு தூரம் ந்டந்து வந்தது வீனாப் போச்சு”
“அவரு இப்படித் திருப்பி அனுப்புவார்னு எனக்கு என்ன தெரியும்.”
இருவரும் சண்டைப் பிடிக்க,கொஞ்ச நேரம் ஏதும் பேசாமல் நடந்தோம்…
“யாரு அது பிரகாஸா..?” அப்படினு ஒரு குரல் ..என்ன பாத்து கேட்டுச்சு…
“நல்லா இருக்கியா ராசா…உன் அண்ணன் எப்படியிருக்கான்…எத்துனாவது படிக்குற”…
என்னோட பால்வாடி ஆயம்மா தான் அவுங்க.தினமும் அவுங்க தான் பால்வாடிக்கு கூட்டிட்டு போயிட்டு , சாயிங்காலாம் வீட்டுலையும் விடுவாங்க.அவுங்க முகம் அந்த அழகிய சிரிப்போடஎனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.
நல்லா இருக்கேன்..7ம் வகுப்பு படிக்குறேன்..என்று அவுங்க கேட்டதுக்கலாம் பதில் சொல்லிட்டு .”ஆயம்மா நீங்க எப்படி இருகீங்க? னு கேட்டேன்.
“நல்லாயிருக்கேன் கண்ணு..நல்லா படிக்கனும்..இந்த ஆயம்மாவை மறந்துடாதே” னு சொல்லி ..என் முகத்த சுத்தி திருஷ்டி எடுத்துட்டு கிளம்புனாங்க…
அவுங்க அந்த தெருவை விட்டு போறவரைக்கும் நாங்க ரெண்டு பேரும் வெச்ச கண்ணு வாங்கமா அவுங்களையே பாத்துட்டிருந்தோம்.
இது நடந்து பல வருசம் ஓடிப் போச்சு .என்னை ஞாபகம் வெச்சிகிட்டு உரிமையா விசாரிப்பாங்கன்னு எதிர்பாத்து ஏமாந்து போன சாயம் வடியரத்துக்குள்ள , உன்னை விசாரிக்கிறதுக்கு நான் இருக்கேன் டா , நீ ஏன் கவலை படுரேன்னு சொன்ன மாதிரி இருந்தது அந்த நிகழ்வு.என் வாழ்வில்,காலம் தன் விரல்களை நீட்டி அழிக்க முடியமால் போன சுவடுகளில் இதுவும் ஒன்று.
இன்னும் கொஞ்ச நாள்ல என் குழந்தையை பால்வாடியில சேக்கனும்.இப்போலாம் அதுக்கு பேரு பால்வாடியான்னு எனக்கு தெரியல . ப்ரீ ஸ்கூல் , ப்ளே ஸ்கூல் , டே கேர் னு என்னனென்னமோ இருக்கு.எதுவாக இருந்தாலும் , அங்க கொண்டு போய் என் குழந்தையை சேக்கும் போது கண்டிப்பா என் ஆயம்மாவின் சாயல் யாரிடமாவது இருக்குதான்னு தேடத் தோனும்.