சுழல் விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 3,586 
 
 

ராமநாதன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

மனத்தில் நிம்மதியில்லாதிருக்கும் போது கயிறு அறுபட்ட மாடு போல் அது இஷ்டப்படி உலாவும் கடந்த கால நினைவுகளையும் எதிர்கால எண்ணங்களையும் வாரி போட்டுக் கொண்டு திண்டாடும். அந்த நிலையில் இடையிடையே இன்ப நினைவு வந்தாலும், கொந்தளிப்பு அதை அமுக்கிவிடும்.

வீட்டில் விளக்குக் கூட ஏற்றவில்லை. அவன் உட்கார்ந்திருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் தொலைவில் மங்கி மங்கி ஒளி பெற்றுச் சுழலும் உயர் நீதிமன்றத்து லைட் ஹவுஸ்’ தெரியும். ஏறக்குறைய அந்தச் சுழல் விளக்கைப் போலத்தான் அவன் உள்ளமும் இருந்தது.

அவள் பிறந்த வீட்டுக்குப் போய் இன்றைக்குப் பத்து நாள்களாகி விட்டன. வைராக்கியம் வைரம் போல் அவன் மனத்தில் உறுதியாக இருந்தது.

அப்படித்தான் அவள் என்ன கேட்டு விட்டாள்? ஐந்தாண்டு பழகிய அவளுக்கு – அவனுடைய சுக துக்கங்களில் சமமாகப் பங்கு கொண்டு விட்ட அவளுக்கு – இதுகூடச் சொல்ல உரிமையில்லையா?

‘இல்லை’ என்ற முரட்டுத்தனமான எண்ணம்தான் அவன் மனம் பெரும் போராட்டத்தை எழுப்பி, அவளையும் பிறந்த வீட்டுக்குப் போகச் செய்தது.

ராமநாதன் இப்பொழுது சாதாரண கம்பெனி ஒன்றில் அறுபது ரூபாய் ‘அலவன்ஸ்’ உட்பட வள்ளிசாக வாங்கிக் கொண்டு வேலையில் இருந்தான். அவன் அதற்கு முன்பு மிலிட்டரி இலாகா ஒன்றில் மாதம் ரூபாய் இருநூறுக்குக் குறையாமல் வாங்கிக் கொண்டிருந்தான். அவனது அழகுக்கும், சம்பளத்துக்குமாகப் பார்த்தே அன்னபூரணியை அவள் பெற்றோர் அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். அதுவரை இரண்டு சகோதரர்களுடனும் தாயாருடனும் இருந்த அவன், கல்யாணமான மூன்றாவது மாதமே தனிக்குடித்தனம் போகும்படி நேரிட்டது. அவனாக வேண்டுமென்று – புது ஜோரில் – தனிக்குடித்தனம் போகவில்லையானாலும், ஆபீஸ் போய் வர மிகவும் சுலபமாக இருக்குமே என்று பல்லாவரத்தை விட்டு மயிலாப்பூர் வந்து சேர்ந்தான்.

அன்னபூரணிக்கு அடக்க முடியாத சந்தோஷம். இரண்டு ஓரகத்திகளுடனும் மாமியாருடனும் இனிமேல் குடித்தனம் நடத்த வேண்டிய தில்லையல்லவா?

ஆனால், இவ்வளவு நாள் ஒன்றாக இருந்துச் சம்பளத்தையெல்லாம் ஒன்றாகக் கொடுத்து. மொத்தமாகச் செலவு செய்த அந்தக் குடும்பத்துக்கு இப்பொழுது ஒருவன் பிரிந்து போனதால் செலவுக்குச் சற்று இழுப்புதான். இருந்தாலும் ராமநாதன். ‘என்ன, சொத்தையா பிரித்துக் கொண்டு போய்விட்டேன்? என்னுடைய சௌகரியத்துக்காகத் தானே போனேன்? மாதம் முப்பது ரூபாய் வேண்டுமானாலும் உனக்குக் கொடுத்து விடுகிறேன் அம்மா! அதை அப்படியே பாங்கியில் போட்டு வா!” என்று கூறியதும், அவன் தாயாருக்கு ஒரே மகிழ்ச்சி.

ராமநாதன் – அன்னபூரணி வாழ்க்கை இன்பக் கடலில் மிதந்து கொண்டிருந்தது. கண்ணம்மாவும் பிறந்தாள். அவள் பிறந்த ராசியோ என்னவோ . யுத்தம் முடிந்தது. மறு வருஷம் யுத்த இலாகாவுடன் சம்பந்தப்பட்ட சிறு சிறு தொழிற்சாலைகளை மூடினார்கள். அதில் வேலை செய்து வந்தவர்கள் மூன்று மாதச் சம்பளத்துடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள்.

வானக் கடலில் இன்ப விமானத்தில் மிதந்து கொண்டிருந்த ராமநாதனுடைய விமானம், நெடிதுயர்ந்த மலையில் மோதியது போலாகியது. சொல்ல முடியாத வேதனை அவன் இதயத்தை அமுக்கியது. வேலை போன விஷயத்தை அவன் வெளியில் சொல்லவேயில்லை. மூன்று மாதச் சம்பளம் கையிலிருந்தது. முன்னரே சேர்த்து வைத்திருந்த பணமும் கொஞ்சமிருந்தது. தாயாரிடமும் ரூபாய் ஐநூறாவது இருக்கும்… அதையும் வாங்கிக் கொண்டால்?

ஒருநாள் ராமநாதன் அன்னபூரணியுடன் பல்லாவரத்துக்குக் கிளம்பிச் சென்றான். அவளுக்கும் கணவருக்கும் வேலை போன விஷயம் தெரியாது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தன் பிள்ளை , மருமகளுடன் வந்ததைக் கண்டு சந்தோஷமடைந்தாள் தாயார். என்றாலும் தன் பிள்ளையைத் தனிக் குடித்தனம் வைத்துச் சம்பளம் இருநூறு ரூபாயில் போக மீதயை ‘ஹதச்’ செலவு செய்பவள் அன்னபூரணி என்ற எண்ணம் தோன்றியவுடன் அவள் பெயரில் அவளுக்கு ஒருவிதக் கசப்பு ஏற்பட்டது.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு , ராமநாதன் அம்மாவைத் தனியே அழைத்து, “பாங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்தை என்னிடம் கொடு!” என்றான்.

இதைக் கேட்டதும் அவள் தாயாருக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. தன்னுடைய மருமகளின் மீது முன்னரே இருந்த ஆக்ரோஷம் இன்னும் அதிகமாகியது. “நன்னாயிருக்கேடா… நீ கேட்கிறது! எங்கேயாவது ரூபாய் அப்படியே பாங்கிலே இருக்குமாடா? உனக்கு எதுக்குடா பணம்? தாம்தூம்’ என்று செலவு செய்யறியோ? உனக்கு ஒரு தங்கையிருக்கா… அவளைக் கல்யாணம் செய்து கொடுத்திருக்கு. ஆடி, ஆறா மாசம் இதுக்கெல்லாம் பணம் வேண்டாமா? நான் எங்கே போவேன்? சம்பந்தி வீட்டிலே வெள்ளிக் கூஜாவும், பன்னீர்ச் செம்பும், பட்டு வேஷ்டியும் வேணுமென்றார்கள். என்ன செய்வது? பொண்ணு இங்கேயே இருக்க முடியுமா? எல்லாச் சம்பந்தியும் என்னைப் போலவே நல்லவர்களாக இருந்து விடுவார்களா? உன் மனைவியை அதைக் கொண்டா, இதைக் கொண்டா என்று நான் கேட்காமலிருந்தது போல் அவர்களும் சும்மாயிருப்பார்களா? அந்தப் பணத்திலேயிருந்து எடுத்துத்தான் எல்லாம் செய்தேன்!” என்று அம்மா பொரிந்து தள்ளி விட்டாள்.

ராமநாதன் பல்லைக் கடித்துக் கொண்டான்.

கணவரும், மாமியாரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அன்னபூரணி ஒட்டுக் கேட்டாள். ‘உன் அகமுடையாளை அதைக் கொண்டா . இதைக் கொண்டா என்று நான் கேட்டேனா?’ என்று அவள் சொல்லும்போது இவளுக்குச் ‘சொரேர்’ என்றது. ‘ஐயோ ! நான் ஒன்றும் கொண்டு வரவில்லையாமே? எவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டாள்! என்று நினைப்பதற்குள், கணவர்தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கேட்டதும், அவள் செலவாகிவிட்டது என்று கூறியதும் அவளை ஆத்திரம் அடையச் செய்தது. தன்னிடம் கூடத் தெரிவிக்காமல் அவளிடம் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்ற கோபம் வேறு அத்துடன் சேர்ந்து கொண்டது.

நல்லவேளையாக ராமநாதன் உடனே வீட்டுக்குப் புறப்பட்டான். கணவரை என்னவெல்லாமோ கேட்க வேண்டும் என்று துடித்தாள் அன்னபூரணி.

ராமநாதனோ ஆத்திரம் தாண்டவமாடும் முகத்துடன் சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட்டான்.

சேர்த்து வைத்த பணமெல்லாம் செலவாவதற்கும். ராமநாதனுக்கு ஒரு கம்பெனியில் குமாஸ்தா வேலை கிடைப்பதற்கும் சரியாக இருந்தது. வீட்டில் செலவுகள் குறைக்கப்பட்டன. இதனால் எடுத்தாற் கெல்லாம் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

அன்னபூரணிக்கு இது கொஞ்சம் சிரமமாயிருந்தாலும் ரொம்பவும் சாமர்த்தியமாக நடந்து கொண்டாள்.

இதன் நடுவில் அவள் மாமியார் ஒருநாள் வந்திருந்தாள். அன்றுதான் சாமர்த்தியமாக நடந்து கொண்டாள்.

ராமநாதனின் தாயார் பேச்சுவாக்கில், தாங்கள் கஷ்டப்படுவதால் ராமநாதன் குடும்பத்தோடு குடும்பமாக வந்துவிட்டால் எவ்வளவோ நல்லதென்று கூறினாள்.

பதிலுக்குத் தாங்களும் கஷ்டப்படுவதையும், ஒருவேளை காபி நிறுத்தப்பட்டதையும், டிபன் கிடையவே கிடையாதென்பதையும், ஒரு சினிமா – டிராமா கூடப் போவதில்லை என்பதையும் படபடவென்று கொட்டித் தீர்த்தாள் அன்னபூரணி.

அன்று இரவு ராமநாதன் வழக்கம் போல் ஆபீஸிலிருந்து வந்தான். வந்தவுடனே களையிழந்த வீட்டையும், முகத்தைத் தூக்கிக் கொண்டு நிற்கும் மனைவியையும் காண அவனுக்குக் கோபம் ஏற்பட்டது. அலுத்துப் போன உள்ளத்துக்கு ஆத்திரம் வருவது இயற்கைதானே?

“அம்மா வந்திருந்தார்; சண்டை போட்டார். போய்விட்டார்!” என்றாள் அன்னபூரணி. அவனிடமிருந்து பதில் வருவதற்குள், “நீங்கள் கொடுத்திருந்த ஐநூறு ரூபாய் போதாதென்று குடும்பத்தையும் ஒன்றாக்க வேண்டும்!” என்றாள்.

ராமநாதன் மௌனமாக இருந்தான்.

“என்னிடம் கூடச் சொல்லாமல் பணத்தை அம்மாவிடம் சேர்த்து வைத்திருந்தீர்கள். அதை எடுத்து அவர் தம் பெண்ணுக்குக் கொடுத்து விட்டார். கடைசியில் எனக்குக் கெட்டவள், குடும்பத்தைக் கலைத்தவள் என்று பெயர் வந்து விட்டது” என்றாள்.

பொறுமையிழந்த ராமநாதன், “போதுமே, உன்னுடைய அங்கலாய்ப்பு!” என்றான்.

“ஆமாம்… நான்தான் அங்கலாய்க்கிறேன்! ஏன்னா, நான் சீர், செனத்தி கொண்டு வராதவள். எனக்கும் ஓர் அண்ணன் இருந்து, அவன் மனைவி கொண்டு வந்து கொடுத்தால், எங்கம்மாவும் தான் தூக்கிக் கொடுத்திருப்பாள்!” என்றாள் அன்னபூரணி.

ராமநாதனின் கோபம் உச்சஸ்தாயியை அடைந்தது.

‘பளார்’ என்று ஓர் அறை அன்னபூரணியின் கன்னத்தில் விழுந்தது.

“நீ யார்? அப்படித்தான் கொடுப்பாள், அம்மா!” என்றான் அவன்.

அவ்வளவுதான். அன்று இரவு முழுவதும் விம்மலும் அழுகையும் தான். காலையிலும் அழுதழுது முகம் சிவந்து விட்டது.

“இப்படி மூதேவி போல் முகத்தைத் தூக்கிக் கொண்டிருப்பதை விடப் பிறந்த வீட்டுக்குத்தான் தொலைந்து போயேன்!” என்று கத்தினான் ராமநாதன்.

“பேஷாய்ப் போகிறேன் !” என்றாள் அன்னபூரணி.

இந்த வார்த்தை ராமநாதனை அடங்கா ஆத்திரம் அடையச் செய்தது.

“சரி, இன்று சாயங்காலமே கொண்டு போய் உன்னை விட்டு விடுகிறேன்” என்று அவன் சொல்லிவிட்டான்.

அப்படியே கொண்டு போய் விடவும் செய்தான்.

ஒரு மாதம் உருண்டோடிச் சென்றது. அன்னபூரணிக்குப் பிறந்த வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. மற்றொன்று அவள் உள்ளத்தை அப்படியே மாற்றி விட்டது. வாஸ்தவத்திலேயே தன் அண்ணன்தான் தனக்கு எல்லாச் செலவுகளையும் செய்திருக்கிறான் என்பதை அறிந்த போது, தான் ஆத்திரம் கொண்டது தவறு என்றே அவளுக்குப் பட்டது. உடனே தன் கணவனுக்கு அவள் ஒரு கடிதம் எழுதினாள்.

அவளிடமிருந்து கடிதம் வந்தது முதல் ராமநாதனின் மனம் கலங்கிற்று. கோபத்தில் அவளை ஊருக்கு அனுப்பியது தவறு என்பதை அவனும் உணர்ந்தான். அதே சமயத்தில் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த சுழல் விளக்கு பளிச் பளிச்’ என்று ஒளி வீசுவதும் மறைவதுமாக விளையாடிக் கொண்டிருந்தது.

“ராமநாதா!” என்று கூப்பிட்டுக் கொண்டே யாரோ மாடிப் படியில் ஏறி வந்தார்கள். “என்னடா இது! அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு இப்படி இருட்டில் உட்கார்ந்திருக்கிறாயே! செலவுக்குப் பணம் போதவில்லை என்றால் என்னைக் கேட்கக்கூடாதா? இன்றுதான் அம்மா எனக்கு எல்லா விஷயத்தையும் சொன்னாள். குடும்பம் என்றால் இருளும் ஒளியுமாகத்தான் இருக்கும். அதை யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது. பார்க்கப் போனால், எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம் என்ன தெரியுமோ? பணம்தான். பணம் இருந்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டிக் கொண்டு போய்விடலாம். ஒருவர் மேல் ஒருவர் எரிந்து விழ வேண்டிய அவசியமே இருக்காது. இந்தா, நூறு ரூபாய்! ஏதாவது கடனிருந்தால் அடைத்து விடு!” என்றார் அவனுடைய அண்ணன்.

குடும்பம் என்றால் இருளும் ஒளியுமாகத்தான் இருக்கும்’ என்று அண்ண ன் கூறியது ராமநாதனின் காதில் விழுந்தது. அவன் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான்.

அடுத்த நிமிஷம் கையிலிருந்த பத்து, பத்து ரூபாய் நோட்டுகள் அவன் கவனத்தைக் கவர்ந்தன. அண்ணாவுக்கு மட்டும் இதைக் கொடுக்க வேண்டும் என்று கடமையா என்ன? அவர் வாழ்க்கையைப் புரிந்து கொண்டவர்; அதனால் சமயத்தில் தானே உணர்ந்து கொடுத்தார்!” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.

அவ்வளவுதான். அவன் மேஜை மீதிருந்து ஒரு காகிதத்தை எடுத்து உடனே மாமனாருக்குக் கடிதம் எழுதினான். எழுதி முடித்ததும் ஏதோ இருள் விலகியது போன்ற ஓர் உணர்ச்சி அவன் உள்ளத்தில் தோன்றியது.

நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்து விட்டு ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.

சுழல் விளக்கு அவன் வாழ்க்கையைப் போல் சுழன்று கொண்டு இருந்தது.

– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *