கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2024
பார்வையிட்டோர்: 1,076 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கானம் பெருகிக்கொண்டே வந்து அவனைக் கட்ட ஆரம்பித்தது. 

குப்பை மேடுகளிலும் குன்றுகளிலும் குஹைகளிலும் சுற்றிக்கொண்டிருந்த சிந்தனைகள் ஒரு முகப்படத் துவங்கின. 

நெருப்பு உருகி ஒழுகுவதுபோல் சுருதியோடிழைந்த குரல் உள்வழிந்து நிரம்பி மற்ற ஓசைகளின் உணர்வை அப்புறப் படுத்தியதும், நிதானமாய், படிப்படியாய், வேகமாய் அகாரங்கள் மேலே கொக்கிகளை மாட்டி, குழந்தையைக் குளத்தில் முழுகக் கையைப் பிடித்து இழுப்பதுபோல், அவை அனைத்தும் அத்தனைக் கைகளாய் அவனைப்பற்றி தோட்டத்திலிருந்து வீட்டுள் இழுத்தன. 

தன்னைத் தனக்கு ஞாபகமூட்டிக்கொள்ள, நெற்றிப் பொட்டைத் தேய்த்துக்கொண்டு நின்றான். இழுத்துப் பிடித்த கம்பியால் நினைவு ஓருகணம் நிலைத்து நின்றது. பெருமூச்செறிந்தான்; உள்ளே சென்றான். 

வாசற்படியில் சற்றுத் தயங்கினான். அவ்வறையிலேயே வெளிச்சம் மட்டும்தான். 

எப்போதும் அங்கு ஒரு சிறு இருட்டு தேங்கியேயிருந்தது. அவ்விடந்தான் அவளுக்கு இஷ்டம். 

தம்பூராவைத் தழுவிய அவள் முகம் அவன் பக்கம் திரும்பியது. உள்ளே வந்து அவள் அருகில் உட்கார்ந்தான்.  அவளுடைய விரல்கள், தந்திகளின் மேல் தாவிக் குதிப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, அந்நாதம் அவன் மனத்தைத் தன்னுடன் பிணைத்துக்கொண்டது. 

அவள் கண்கள் திடீரென நிறைந்து கண்ணீர் கன்னங் களில் வழிந்தோடிற்று. அவன் அதைப்பற்றி ஒன்றும் செய்ய வில்லை. அவளும் துடைத்துக் கொள்ளவில்லை. அதுவே அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ? பக்தியின் பரவசமா? ஆனால் அவள் பாட்டைக் கேட்கையில் அவனுக்கு உருக்கம் ஏற்படவில்லை. ஏதோ சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாததொரு சங்கடந்தான்; இன்னதுதான் பாடுகிறாள் என அறியக்கூட முடியவில்லை. அவள் எழுப்பிய ஓசையின் புதுமையைத்தான் நுகர முடிந்தது. 

இடது கையால் மெதுவாய் அவன் முகத்தை அவள் தொட்டாள். விரல்கள் நெற்றியின் சரிவிலிருந்து ஆரம்பித்து) புருவங்களை விளம்பி, மூக்குத் தண்டின் வழி கீழிறங்கி, உதடுகளை எழுதி, கன்னங்களைத் தடவி நெளிந்தன. 

அவள் விரல் நுனிகளின் வழி நீலப்பொறிகள் பறந்து அவனை எரித்தன. 

புதிதாய் ஓர் எழுத்தை எழுதக் கற்றுக்கொண்ட குழந்தைபோல், அவள் முகம் மலர்ந்தது. கண்கள் மகிழ்ச்சி யில் அகல விரிந்தன. 

அவனுக்கு மூச்சுத் திணறிற்று. அருவருப்பில் உடல் குலுங்கிற்று. கழுத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் அவளுடைய கையைச் சற்றுக் கடுமையாகவே இழுத்துப் பிடித்துத் தடுத்தான். 

அவள் விடாது பயிலும் சுருதியும், அறையின் மங்கிய வெளிச்சமும் குரல் வளையை அமுக்கின. 

“இதென்ன, புது விளையாட்டு?” 

அவள் ஒன்றும் பதில் பேசவில்லை; புன்னகை புரிந்தாள். அவள் விரல்கள் சுட்டன. 

“நீ இப்போது பாடினதென்ன?” தம்பூராவின் ஓசை அறையை நிறைத்தது. 

நிதானமாய்ப் பதிலை, அளந்துவிடுவதுபோல்,  “உன்னை” என்றாள். 

“புதிர் போடாமல் பளிச்சினு விட்டுப் பேசேன்!” 

“நிஜமாய்த்தான்; உன்னைத்தான்.” 

அவள் பதில் அவனுக்குப் பிடிக்கவில்லை.

“அப்படின்னா, எப்படி?” 

இயலாத பதிலுக்கு அடையாளமாய் அவள் கையை விரித்தாள். உதடுகள் சிறு சிரிப்பில் பிதுங்கின. 

“எப்படிச் சொல்ல? என்னவோ பாடறேன். எதுன்னு இன்னும் சரியாய்ப் பிடிபடல்லே. திடம் பண்ணிக்கத்தான் உன்னைத் தொட்டுத் தெரிஞ்சுக்க…” பேசிக் கொண்டிருக்கையிலேயே பேச்சு மூச்சாய் அடங் கிப் போயிற்று. பேசிக்கொண்டே அவனை அணைத் தாள். அவன் வெறுப்புடன் தன்னை விடுவித்துக் கொண்டான். 

”எதில்?……” 

கேள்வி முடியவில்லை? அவள் ‘க்றீச்’சென்று அலறி அவன்மேல் விழுந்தாள். தம்பூரா அவன் மேல்சாய்ந்தது. அவனைப் பிராண்டிக்கொண்டு மடிமேல் விழுந்து ஏதோ குதித்தோடிற்று. அதற்கே சொந்தமான சுவரோரம் போய்ச் சேர்ந்ததும் ‘கீச் கீச்…” சென கீச்சிட்டது. 

அந்த அலங்கோலத்திலிருந்து தெளிகையில் இருவருக்கும் சிரிப்பு ஒருங்கே வந்தது. 

தன்மேல் சரிந்திருந்த தம்பூரை அவளிடம் கொடுத்தான். 

“ஏது மறுபடியும் உபத்திரவம் ஆரம்பித்துவிட்டது போலிருக்கே!” 

ஏனோ தெரியவில்லை. வீட்டில் எலிகள் சதா குடைந்தபடிதான். அவர்களுக்கு நினைவு தெரிந்தது முதல் அவை அடியோடு ஒழிந்த ஞாபகமேயில்லை. ஓரு பத்து நாள் சப்தமிருக்காது; மறுபடியும் ரகளைதான். பொறி வைத்துப் பார்த்தாயிற்று; பூனை வளர்த்துப் பார்த்தாயிற்று; எலிப் பாஷாணம் ஜன்னலில் எப்பவும் டப்பாவில் இருந்தபடியிருக்கும். வருஷத்திற்கு இரு முறை வீட்டைச் சுண்ணாம்படித்து சந்துபொந்தெல்லாம் அடைத்தாகும், ஆனால் எப்படியோ மறுபடியும் வளை வைத்தாய்விடும், 

“இந்த இடத்தைவிட்டால், இந்த வீட்டில் எனக்கு வேறிடம் இல்லையா?” 

“எனக்கு இங்கேதான் பாடவறது?” 

“இப்போ என்னைப் பாடறதாகச் சொன்னையே அதுமாதிரியா?” 

அவள் முகத்தில் அடிக்கடி விளையாடும் முறுவல்மேல் அவனுக்கு எரிச்சலாய் வந்தது, அவள் பதில் பேசாது தம்பூராக் கட்டையைத் தன் தோள்மேல் சௌகரியம் பண்ணிக் கொண்டாள். 

“நீ இன்னும் சொல்லவில்லையே, எப்படி என்று?” 

அவன் விரல்கள் தந்திகளின்மேல் தாவிக் குதித்தன. அவன் கேள்விக்கு விடையிறுப்பதுபோல் சுருதி மோதியது. 

நச்சரிப்புடன் அவன் வெளியே சென்றான். 

2

“என்ன பண்றேள்?” 

‘உன்னை’, ‘உங்களை’ இரண்டும் அவளுக்கு இஷ்டம் போல்! அவைகளின் வித்தியாசமும் சமயங்களும் அவளுக்கு இல்லை. 

அவன், குனிந்த தலை நிமிர்ந்துவிட்டு, மறுபடியும் புட்டிகளைக் கிளறுவதில் முனைந்தான். 

“எல்லாம் உன் அப்பா பிதுரார்ஜிதம் தான்.”

“அப்படீன்னா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள். 

“உங்கப்பாவின் மருந்துப் பெட்டியில் எலிப் பாஷாணம் தேடிக் கொண்டிருக்கிறேன்.” 

“அப்-ப்-பா!” என்று உடம்பைச் சிலிர்த்துக்கொண்டாள்.”பாவம்!” 

“‘எது?” 

“எலிகள்தான்!” 

”இரக்கம் என்று ஒன்று இருக்கிறதே, அது ரொம்பப் பொல்லாது. நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடுவரையைக்கூட அது அழித்துவிடுகிறது. சமயமும் இடமும் தெரிந்து உபயோகப்படுத்தும் இரக்கம் தான் இரக்கம், பாக்கியெல்லாம் போலி உணர்ச்சி தான்,” 

அவன் பேச்சை அவள் கவனிக்கவில்லை. 

”இதுவாயிருக்குமா?” அவளாகவே பெட்டிக்குள் கையைவிட்டு ஒரு புட்டியை எடுத்தாள் 

சட்டென அவள் கையிலிருந்து அதைப் பிடுங்கினான். 

“சரி, சரி; வேறே வினையே வேண்டாம்! இரண்டு சொட்டு போதும், ஆளைக் குளோஸ்’ பண்ண!”

“யாரை?”அவளுக்கு முழுக்கப் புரியவில்லை. 

“என்னைத்தான்னு வெச்சுக்கோயேன்!” அதை எடுத்த இடத்தில் மறுபடியும் வைத்தான், 

அவள் ‘கிளுக்’ கென்று சிரித்துவிட்டாள். 

”ஓஹோ? இது தமாஷாக்கும்! சிரிக்கணுமா?” 

”அதான் சிரித்துவிட்டாயே!” 

மறுபடியும் சிரித்துக்கொண்டே அவன் முழங்கையைச் செல்லமாய்த் தொட்டாள். 

“என்னை அடிக்கடி தொட்டுக் கொள்ளாமல் உன்னால் இருக்கமுடியாதோ? நான் என்ன ஊறுகாயா?” 

அவள் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கினாள் ‘இதென்ன’ பொம்மனாட்டிக்கு மேலே லஜ்ஜைப் படறேளே! இல்லாட்டா என்னை வெக்கம் கெட்டவள் என்கிறேளா?” 

“அப்படியி…ல்…லே” என்று இழுத்தான். 

“பின்னே எப்படியாம்?” 

“ஆம். பின் எப்படி?” 

ஓர் இலை ஆடவில்லை என்றால் ஆடவில்லை. படுக் கையில் புரண்டு புரண்டு விரிப்பு முதல் ஆவி கக்கிற்று. அப்புறம் தாங்க முடியவில்லை. மொட்டை மாடிக்கு வந்து உலவ ஆரம்பித்தான். 

மேகங்கள் மதில்களாய் எழும்பி வானத்தை அடைத்து, நிலவை மறைத்து, காற்றையே சிறையிட்டு விட்டன. புழுக்கத்தில் மூச்சு திணறிற்று. தோட்டத் தில் தூரத்து மரங்களின் இலைகள், பதுங்கிய மிருகங் களின் உரோமம் போல் சிலிர்த்துக்கொண்டு அசைவற்று நின்றன. 

அவள் இன்னமும் சாதகம் பண்ணிக்கொண்டிருந் தாள். எப்படிப் பண்ணுகிறாள், பாட்டே தன் பிராண னின் மூச்சுப்போல்! அம்மாதிரியான சாதகத்தைக் கேட்கையிலோ, பார்க்கையிலோ, மனத்தில் அச்சம்தான் தட்டுகிறது. பாட்டுக்கூட பிடிக்கவில்லை. பாட்டென்றால் அவனுக்கும் உயிர் என்றிருந்த நாளும் உண்டு. சுமாரா யும் பாடுவான்; அவனையும் பாட்டில் விட்டிருந்தால் உருப்பட்டிருப்பானோ? 

ஆனால் இப்பொழுது யோசித்துப் பார்க்கையில் மாமா அவனை வேணுமென்றே உருப்பட வைக்கவில்லை. என்று தோன்றிற்று. வீட்டோடிருந்து கொண்டு தன் பெண்ணுக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கவே தனக்குள் அவனை நியமனம் பண்ணிக்கொண்டு விட்டார் என்றுதான் பட்டது. மாமா பலே கைக்காரர். 

ஆனால் அவனுக்கும் வேறு வழியில்லை. ஒன்றும் தெரியவும் தெரியாது. சிறு வயதிலேயே தகப்பனில்லை. தாய் குழந்தையைக் கையிலேந்திக்கொண்டு அண்ணனை அண்டிவிட்டாள், பின்னர் ஒருநாள் அவளும் அவல் கணவன் போன வழி போய்விட்டாள். 

ஆகையால், அந்த நாள் முதல்கொண்டு தன்னை எடுத்து வளர்த்து ஆளாக்கிய மாமன், தன் அந்திப் படுக்கையில், அண்டக்கொடுத்த தலையணைகளுக்கிடை யில் சாய்ந்து கொண்டு, தன் பெண்ணை அவன் கையில் பிடித்துக்கொடுத்து, மேல் மூச்சு வாங்க, “எனக்கு அப் புறம் நீதாண்டா இவளுக்கு கதி. இவளுக்கு நீயும் துணையில்லாட்டா இவள் கதி நிர்க்கதி’ என்று சொல்லுகையில் மாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா, என்ன? 

மாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா, என்ன?

மாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா எனன?

மாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா என்ன? 

அவள் கீழிருந்து அடுக்கும் அகாரங்கள் எழுப்பிய சுருள், படிக்கட்டின் வழி கீழிறங்கி. மன அடிவாரத் தில் புதைந்து கிடக்கும் இருள் கிடங்குகளில் வழி தப்பி அலைகையில், எதிரொலிகள் தாம் எழும்பி அவனை வளைத்தன. 

முடியுமா என்ன? 

ஒரு நாள் கேள்வியா. இரண்டு நாள் கேள்வியா இது? 

முடியுமா என்ன? 

அன்று இவள் எப்படி இருந்தாளோ அப்படியே இப்பொழுதும் அவன் முன் எழுகிறாள், வெட்கம் இன்ன வென்று அறியாதவள், உள்ளுவகை முகத்தில் திணறத் தலையைக் கவிழ்த்துக் கொண்டு அவள் தகப்பனார் அவன் கையில் சேர்த்து வைத்த கையால் அவனை இறுகப் பற்றிக்கொண்டு நிற்கிறாள். அரக்குப் புடைவை உடுத்துக் கொண்டிருக்கிறாள். 

‘அட, நம்ம சாருக் குட்டியா இப்படி ஆகியிருக்கிறாள்?’ 

பசும் புற்றரையில் பனித்துளிகள் புல் நுனிகளில் நின்றன. மேல் நீலத்தில் பொன் வில் முளைத்திருந்தது, ஜல ஜரிகை புல் மேட்டிலும் தாழ்விலும் ஏறி இறங்கிக் கொசுவி மிளிர்ந்தது. இந்தச் சாரு, சாருக் குட்டியாயிருக்கையில் இவளை முதுகில் புளி மூட்டை தூக்கிக் கொண்டு லொங்கு லொங்கென அவள் குலுங்க, தான் குலுங்க, அவள் சிரிக்க, நான் சிரிக்க இந்த மேட்டிலும் இதன் சரிவுகளிலும் எத்தனை தடவை ஓடியிருக்கிறேன்!’ 

“டேய்! டேய்! போறும்! போறும்! எனக்குச் சிரிக்க முடியல்லே! வயத்தை வலிக்கிறதே! போது – மே!”

”ஊஹூம்!” 

அந்தச் சாருவா இது? 

ஸ்ருதி தாரையின் மழைச் சாரலில் புற்றரைகள் கரைந்து வழிந்து அழிந்தன. பச்சைச் சாறு வெள்ளம் கணுக்காலள வுக்குக் கிளு கிளுத்துக்கொண்டு ஓடிற்று. 

ஓசை மழையின் மங்கிய இருள் சுற்றிப் படர்ந்தது. இருளிலிருந்து வெள்ளித் திரிகள் பிரிந்து அவன் மேல் நெய்து கொள்ளத் தொடங்கின. தும்பியின் இறக்கையின் நயத்துடன் சன்னமான சல்லாக்கள் அவனைச் சுற்றிலும் மேலும் மோதி அலைந்து மிதந்தன. பல வர்ணப் பட்டுத் திரைகள் அவனெதிரே பிரிந்து அகன்று, அவன் உள் வந்ததும் பின்னால் சும்பீரமான உயரங்களினின்று, கள்ளிச் சொட்டின் கனத்துடன். மடி மடியாய்த் துவண்டு விழுந்து கூடிக் கொண்டன.பாதங்களினடியில் பூமி சிறு சிறு பீங்கான் சக்கிரங்களின் மேல் மேடை போல், மெதுவாய். சாவகாசமாய்ச் சோம்பலுடன் திரும்பிற்று. விசித்திரங்கள் நெய்த வெண்பட்டுத் துணிதைத்த படிக்கட்டுகள் எதிரே எழும்பின. அவன் ஏற ஏற, அவை வானத்தின் உச்சியிலேயே முடிந்த மண்டபத்துள் சிவப்புச் சால்வை போர்த்தமேடை மேல் அவள் உட்கார்ந்து கொண்டு சுருதி மீட்டிக் கொண்டிருந் தாள். ஊசிமத்தாப்பிலிருந்து உதிர்ந்த நக்ஷத்திரங்கள் போல் அவள் கண்கள் ஜ்வலித்தன. புன்னகையிலிருந்து தலைய விழ்ந்த இதழ்கள் விழுந்து கொண்டிருந்தன. அவளுக்குப் பின்னால், விடி நேரத்தின் செவ்வானம் நாகப்படம்போல் விரிந்து எழும்பியது. 

சாருவா? அப்படி அவளைக் கண்டதன் உள்ள எழுச்சியில் தொண்டையை அடைத்தது. 

“சா-ரூ!” 

அவளை அழைத்ததுதான் தாமதம். மண்டபம் இடிந்தது; செவ்வானம் வெடித்து நீலரத்தம் கோணக்கோடு களில் கிளைபிரிந்து கொண்டு வழிந்தது, அலறக்கூட நேரமில்லை. மண்டபத்தின் கோபுரம் தன் மேல் இறங்குவதை உணர்ந்தான். வான் வரை வளைந்து வளைந்து ஓடிய படிக்கட்டுகள் சீட்டுக்கட்டாலாயன போல், அடியோடு தகர்ந்து வீழ்ந்தன. திடீரென மையிருள் அவனைச் சுற்றிலும் பிரம்மாண்டமான மதில்களாய் எழும்பி நெருக்கின, அவனின்று வீறலாய் எழுந்த அவன் குரலே, தனி உருப்பெற்று வேற்றுமையுடன் உறுமியது. “ஜோ’ வென்று இன்னொரு இரைச்சல். அதன் அர்த்தம் விளங்க வில்லை. தூரத்திலிருந்து கிட்டக் கிட்ட நெருங்கிக் கொண்டே வந்தது. தூரத்திலிருந்து கூடிக் கொண்டே வரும் நெருக்கத்தின் பயங்கரம் தாங்கவே முடியவில்லை. எதிரில் கண்டவையெல்லாம், வீடு, குடிசை, செடி, கொடிய மரங்கள் எல்லாவற்றையும் வேருடன் அழித்துக் கொண்டு சவங்கள் மிதக்க, அவனை நோக்கி, கக்கலும் கரைசலும் வண்டலும் மண்ணுமாய்க் கோபக் கண்ணின் சிவப்புடன், புரண்டு வந்து கொண்டிருக்கும் புது வெள்ளத்தின்- 

“ஜோ-ஓ! ஓ!”


“டாண்! டாண்!!” கூடத்துக் கடியாரத்து மணியோசை யுடன் நினைவு அலறிப் புடைத்துக் கொண்டு திரும்பிற்று. 

தான் இன்னும் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டி ருப்பதைக் கண்டான். 

இதுவரை கண்டதெல்லாம் பின் என்ன; கனவில்லையா? இவ்வளவு தோற்றங்களும் விழித்துக் கொண்டிருக்கையிலேயே நேர்ந்திருக்கின்றனவா? புரியவில்லை. மணி இரண்டு என்பது ஒன்றுதான் புரிந்தது. அவள் இன்னமும் பாடிக்கொண்டிருந் தாள். புரியாததொரு சீற்றம் அவனுள் எழுந்தது.திடு திடுவெனக் கீழேயிறங்கிச் சென்றான். மாடியின் அடிவாரத்தின் திருப்பத்தில் மாட்டியிருக்கும் மாமன் படத்திலிருந்து விசனம் நிறைந்த அவர் பார்வை அவனைக் குற்றம் சாட்டிற்று. 

ஒருக்களித்திருந்த கதவைத் தடாலென்று திறந்து கொண்டு உள்ளே வந்தான். 

“ஏன் இன்னம் நேரமாகவில்லையா?” என்றான் எரிச்சலுடன். 

அவளுடைய கற்பனையின் ஓட்டத்தில் அவள் குறுக்கிட்டமையால்: அவளுக்கு முகம் சுளித்தது. பெரு மூச்செறிந்துகொண்டு, தம்பூராவை மடி மேல் கிடத்தினாள். 

“எனக்கு எல்லா நேரமும் ஒண்ணுதானே!” என்று முணு முணுத்துக் கொண்டாள். 

“இருந்தாலும் நாங்கள் மனுஷ ஜன்மந்தானே!”

“அப்படியானால் நான் பேயா?” என்று சிரித்தாள். அவள் நீட்டிய கைக்கு எட்டாமல்,  அவன் அவளை மெளனமாய்க் கவனித்துக் கொண்டிருந்தான். விழிகளில் அவள் மைதீட்டியிருந்தாள். அவனுக்கு ஏனோ அது அருவருப்பாயிருந்தது. 

திடீரென்று, “சாரு!” என்றான். 

‘ஊம்?’ என்றாள். குழந்தையைத் தடவுவது போல் தம்பூராவை அன்புடன் தடவிக் கொண்டு. 

”உன்னிடம் ஒண்ணு சொல்லணும்” 

“நானும் ஒண்ணு சொல்லணும்னு இருந்தேன்.நீங்க சொல்லுங்கோ”. 

“என்னது?” ஒரு வேளை அவன் சொல்ல வந்ததை அவள் அறிந்து கொண்டு விட்டாளோ! 

“ஒண்ணுமி -ல்-லே-ஏ-” என்று இழுத்தாள், அந்தப் பொல்லாச் சிரிப்பு அவளுக்கு மறுபடியும் வந்து விட்டது. சட்டென சிரிப்பை அடக்கிக் கொண்டு, மனத்தைத் திடம் பண்ணிக்கொண்டவளாய் ‘உங்களை நான் பாக்கறேன்னா நீங்கள் நம்புவேளா?” என்றாள். 

நெஞ்சு வேரோடு பிடுங்கிக் கொண்டு மறுபடியும் தன் குழியில் தடாலென விழுந்தது, கண்முன் பொறிகள் ஊஞ்சலாடின். 

“சாரு!”

அவன் கேளாத கேள்விகள் அவனுள் எழு முன்னரே அத்தனைக்கும் ஒரே பதிலாய், ”ஆனால்.நீங்க நினைக்கற மாதிரியில்லே” என்றாள். 

“ஓ!” ஏமாற்றத்தின் அசதி அவன் மேல் படர்ந்தது. 

“ஆனால் நான் எப்படி பார்க்கறேன்னு உங்களுக்கு எப்படிச் சொல்றது? புரியாததைப் புரிஞ்சதை வெச்சிண்டு சொல்லலாம். காணாததைக் கண்டதை வெச்சிண்டு சொல்லலாம். ஆனால் நீங்கள் காண்றதை நான் காணல்லே. ஆனால் நான் இப்போ காண்றதை நீங்கள் காணறத்துக் கில்லை. அப்போ நான் எப்படிச் சொல்றது?” காரிய சிரமத்தாலேயே அவளுக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது. கலகலப்பற்ற தோல்விச் சிரிப்பு, 

“இருந்தாலும் சொல்லாமலிருக்க முடியல்லே. நான் சொல்லித்தான் ஆகணும். சொல்றேன்-” என்று மறுபடியும் ஆரம்பித்தாள். திடீரெனப் பேரிரைச்சலுடன் அவள் விரல்களடியினின்று சுருதி கிளம்பிப் பொழிந்தது. அதன் ‘திடீர்’ அவனைத் தூக்கி வாரிப்போட்டது. 

”நான் பாடறேன்னு வைச்சுக்கோங்கோ. பாடறேனா? பாடிண்டேயிருக்கேன். பாடப் பாட என் குரல் சுருதியோடே இழைஞ்சு இழைஞ்சு அப்பறம் அது சுருதி யிலேயே கலந்தூட்றது. எனக்கு, அப்பறம் என் குரல் கூட கேக்கல்லே. அது அதுலே மறைஞ்சூடறது, நேரம் இடம் எல்லாமே மறைஞ்சு, இந்தச் சுருதி ஒண்ணுதான் நிக்கறது. அதுவே ஒரு ராஜபாட்டை மாதிரி போறது, போயிண்டே யிருக்கு. போகப் போகக் குறுகிக் குறுகி ஊசிக் காதளவுக்குக் குறுகி, அப்பறம் அந்தக் காதுக்குள்ளே நான் புகுந்துடறேன். நான் அதுள்ளே நுழைஞ்சப்பறம் நான் கூட இல்லை. இந்தக் சுருதிதான்-இது ஒண்ணுதான் தனியே நிக்கறது – இது ஒண்ணு தான்-” 

அவன் தம்பூரின் மீட்டலையே உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவளறியாமலே அவள் விரல்கள் மீட்டிக் கொண்டிருந்தன. அவள் வார்த்தைகளே அம் மீட்டிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. தம்பூரின் குடம் கர்ப்ப ஸ்திரீயின் வயிறு போல் உயிரோடு வீங்கியிருந்தது. 

கூடத்துக் கடியாரத்தில் வினாடிகள் சொட்டிக் கொண் டிருந்தன, 

‘அப்பொழுது நான் விழித்தெழுகிறேன்’ என்றாள் திடீரென்று. அவன் வார்த்தைகளில் ஒரு புது இலக்கணம். குரல் தனி கம்பீரத்தைத் திடீரென அடைந்தது. கருவிழிகள் வெள்ளை விழிகளில் சுழன்றன. 

“என் விழிப்பு எவ்வாறு எப்பொழுது நேருகிறது என்றெல்லாம் நான் அறியேன். உலகத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் ஒருங்கே தொட்டுக் கொண்டு எழும் இவ் விழிப்பின் விதத்தையும் வேளையையும் எப்படி என்னால் விளக்க முடியும்? அதில் நான் கூடயில்லையே! உணர்வைத் தவிர வேறெதுமிலை. இந்த விழிப்பில் விழிப்புக்கும் முந்தின உணர்வுதான். இந்த உணர்வுதான் என் விழிப்பு. இந்த உணர்வில், இந்த விழிப்பில், விழிப்பாகிய உணர்வில், உங்களை நான் பார்க்கிறேன். 

“அதாவது உடம்பிலாது, சதையிலாமல், உருவே யிலாமல்!- இரட்டை நாயனத்தில் எதிர் சுரம் அடுக்கும் மறு நாயனம் போல், அவன் வார்த்தைகளே வசியங் கண்டனவாய், அவையும் அவளுடைய சுருதியினின்றே வந்தன போல் ஒலித்தன. 

“ஆமாம்! ஆமா ஆமா ஆமாம்!” அவளுக்குத் தொண்டையை அடைத்தது. அவன் கையைத் தன்னிரு கைகளாலும் பற்றித் தன் மார்பில் வைத்துக் கொண்டாள். “இது என்னென்று எனக்குச் சொல்லுங்களேன்! சொல்லுவேளா?” 

அவனுக்கு உடல் உரோமங்கள் அனைத்தும் அத்தனை இரும்புக் கம்பிகளாய் விறைத்திருந்தன. வேர்வை நெற்றியிலிருந்து உதட்டில் வழிந்து உப்புக் கரித்தது. அவள் உணர்ச்சியின் வேகம் அவன் உடலில் ‘விர்’ ரென்றது. 

“நான் படித்தவன் இல்லை” என்றான். 

”அப்போ நான் படிச்சவளா? எனக்கு மாத்திரம் என்ன தெரியும்?” 

“இருந்தாலும் ஒன்று சொல்லுவேன்.” 

“என்ன…? என்ன?” 

“இந்த உலகத்திற்கும் அதற்கு அப்பாலும் ஆங்காங்கே எல்லைகளுண்டு. அவைகளுக்கப்பால் பார்க்கவும் முடியாது, தாண்டவும் முடியாது. ஒரு வேளை பார்க்கவும் கூடாது. தாண்டவும் கூடாது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.” 

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு நேர்ந்தது இப்படித்தான் நேரும்னு நான் கண்டேனா? அல்லது நேரவே தான் போறதுன்னு கண்டேனா? ஆனால் எனக்கு நேர்வது நேருகிறப்போ எனக்கும்தான் பயமாயிருக்கு” முனகிக் கொண்டு அவன் மேல் சாய முயன்றாள். ஆனால் அவன் தடுத்துக் கொண்டான். இன்னும் மண்டையில் மயிர் வேர்களின் குறு குறுப்பு அடங்கவில்லை. 

“இன்னும் ஒன்று தெரிகிறது” என்றான். 

“என்ன?” 

“உன்னிடம் நான் என்ன சொல்ல வந்தேனோ அதுவே இப்பத்தான் எனக்கு நன்றாகப் புரிகிறது.” 

“ஆமாமா மறந்துட்டேனே, நீங்கள் என்ன சொல்ல வந்தேள்?” 

“நான் உன்னைவிட்டுப் போய்விடப் போகிறேன். அதைத் தான் சொல்ல வந்தேன்” என்றான். 

மூல சுருதிக்கும் முதல் சுருதி மெளன சுருதி உண்டோ?

அவ்விடம் திடீரென அப்படித்தான் ஆகிவிட்டது. 

மைச் சொட்டென அவன் மண்டையுள் ஈயின் “ஙொய்” யுடன் ஒரு சத்தம் கிளம்பிற்று, வலுத்துக்கொண்டே வந்து ஏரோப்ளேனின் பேரிரைச்சலுடன் மண்டையுள் வட்டமிட ஆரம்பித்து விட்டது. 

அவளுக்கு – 

தந்திகளைச் சீண்டிக் கொண்டிருந்த விரல்கள் நின்று விட்டன. கூட்டை விட்டுத் தப்பி விட்ட குருவியைச் சிறகின் நுனியைப் பிடித்து இருத்திக் கொள்வது போல் இன்னொரு கையின் விரல்கள், மார்பண்டைப்போய் அங்குத் தங்க இடம் தெரியாமல் தவித்தன. அந்த ஊமையடித் தவிப்பு பார்க்கச் சகிக்கவில்லை. 

”ஒண்ணும் புரியல்லையே!” என்று முனகினாள். 

“நான் உன்னை விட்டுப் போயிடப் போறேன்” என்றான் மறுபடியும். வார்த்தைகளின் அர்த்தம் இதய இரத்தத்தை வடித்துக் கொண்டுதான் புறப்படுகிறது; ஆயினும், அவ்வர்த்தத்தின் உருவாய் வார்த்தைகளுக்கு மாத்திரம் எப்படி இத்தனைக் கொடூரம்? ன் தவிர்க்க முடியாத இந்த உரு? 

அவள் தன் நினைவில்லாது மருள் வந்தவள் போல் தான் பேசினாள். 

“எனக்கே காரணம் தெரியல்லே, இரண்டு நாளா ஏதோ ஒரு திகில். ஸ்நானம் பண்ணும்போது, இரண்டு வேளையும் மஞ்சள்கொம்பு கைவழுக்கி ஜலதாரைக்குள் போயிடுத்து, ஆமாம்) ரெண்டு வேளையும்.’ 

“ஏனாம்?” 

“ஏன் என்று கேட்டால் எனக்குந்தான் தெரியவில்லை. தெரிந்தால் எனக்கே ஓகு சமாதானம் தானே!” 

“நான் ஏதாவது தவறு பண்ணிட்டேனா?” பச்சைக் குழந்தைபோல் அவளால் தான் அதுபோல் கேட்க முடியும். அவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை நெஞ்சு தழுதழுத்தது, 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சாரூ. தப்பெல்லாம் என்னுடையதுதான்.'” 

“நீங்கள்தான் என்னை விட்டுப் பிரியும்படி அப்படி என்ன பண்ணிப்பிட்டேன்?” 

”நீ ஒண்ணும் செய்யவில்லை; வேளை வந்து விட்டது. அவ்வளவுதான். இப்போ நான் இது தவிர வேறென்ன சொல்ல முடியும்? எனக்குத் தெரிந்தால்தானே! தெரி யாமலே, உன்னை விட்டுப் போகத் துணிந்துவிட்டேனே. இந்தத் தப்பே போதாதா?” 

“இதென்ன விளையாட்டு? புரியாத விளையாட்டு, அடி வயத்தைக் கலக்கற விளையாட்டு!” 

“விளையாட்டில்லை. நிஜமாத்தான் எனக்குச் செலவு கொடு”. 

“ஏன்? ஏன்? ஏன்?” 

மாறி மாறி அந்தக் கேள்வி அவள் வாயில் தவித்தது. 

மறுமடியும் ஆரம்பித்த இடத்துக்குத் தானே வரோம்!” – அவனுக்கு அசதியாயிருந்தது. 

“இத்தனை நாளாயில்லாமல்- ” 

இத்தனை நாள் என்று நினைத்துக் கொண்டிருந் தோம். ஆனால் எத்தனை நாளென்று இப்போத்தானே புரியறது. 

“எனக்குப் புரியவில்லையே, நீங்கள் சொல்றது.” 

“வேதனையே இதுதான். எதுதான் புரிகிறது? புரியவில்லை என்று எதைத்தான் செய்யாமல் இருக்க முடிகிறது? சாரூ நீயே வேறு உலகம் ; நானும் வேறு உலகம்; இனி -” 

“எனக்கு புரிஞ்சு போச்சு இப்போ-”  பாய் மேல் கையை அறைந்து கொண்டு ஆவேசத்துடன் கத்தினாள். அவள் முகம் கறுத்துவிட்டது. 

“எனக்கு கண்ணவிஞ்சு போச்சுன்னு என்னென் ள வோ’என்னை யறியாமலே என் கண்ணெதிரிலேயே நடந்துண்டிருக்கா? எந்த முண்டை உங்களை மயக்கி யிருக்கா? உம்கள் மண்டையிலே உண்டையை வெச்சுத் தேச்சிருக்கா? சொல்லிடுங்கோ, உண்மையைச் சொல் லிடுங்கோ. ஓஹோ? இவ்வளவு தூரத்துக்கு முத்திடுத்தா?” 

இப்படிப்பட்ட வார்த்தைகள்கூட அவள் வாயி விருந்து வரக்கூடும் என்று அவன் நினைக்கவில்லை. இப் படியும் அவள் நினைக்கக் கூடும் என்று அவன் நினைக்க வில்லை. அந்த ஆச்சரியத்திலேயே அவன் பேச்சிழந்து விட்டான். அந்தச் சொற்ப நேரத்துக்குள். அவனில் கடைந்த எண்ணச் சூழலில் குப்பையும் கூளமும் போல், ஒன்றுக் கொன்று சம்பந்தமற்ற ஞாபகங்கள் எழுந்து மிதந்து ஓவ்வொன்றாய் மறுபடியும் அழங்கிப் போயின, 

முதலில் வீட்டு வேலைக்காரியின் உருவம் எழுகிறது. வென்னீருள்ளில் துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் அவசரமாய் அங்கு நுழைய ஒரு சமயம் நேர்ந்து விட்டது. முழங்காலுக்கு மேல் புடைவைக் கொடுக்கை யிடுக்கிக் கொண்டு.  துவைக்கும் துண்டு கையிலிருந்து சாட்டை போல் தொங்க நிற்கிறாள். முகத்தில் வேர்வை பிழிகையில் மேலுதட்டில் அரும்பு கட்டியிருப்பது நன்றாய்த் தெரிகிறது. அந் நிலையில் அவளைக் கண்டதும் மூலமூர்க்கத்தின் சுடர் குபீரென்று அவனுள் எழும்புகையில் கண்ணில் மேலிமைக்குள் மின்னல் ‘பளீ’ரிட்டு மறைந்தது. அவளும் அவனைப் பார்த்துவிட்டாள். அவள் கண்கள் மெதுவாய்த் தாழ்ந்தன. சிரிப்பு உதட்டின் ஒரு ஓரத்தில் ஆரம்பித்து, வர்ணத்தால் இழுத்த கோடுபோல் மறு நுனியில் போய் முடிந்தது. அவள் வென்னீருள்ளை விட்டு உடனே வந்து விட்டான். அந்த நிமிஷத்தைச் சமாளிக்க வெகு நேரம் சென்றது. 

அடுத்தாற்போல் சமையற்காரப் பாட்டியின் பெண் – எப்பொழுதாவது தன் தாய்க்கு ஒத்தாசையாய் வருவாள். அவளுக்கு இன்னமும் கலியாணமாகவில்லை. வறுமையின் சோகமும் சிந்தனையும் ஒருங்கே அவள் முகத் திலும், ஒல்லி உடலிலும், ஒடி நடையிலும், செய்கைகளிலும் பூத்து அவளைச் சொல்ல முடியாத நளினமான அழகிலிட்டி ருந்தன. அவனைப் பார்க்குந்தோறும் ஏனோ அவனுக்கு இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கும் செடியின் ஞாபகம் வரும். வாய்பேசாள். சிரியாள். அரிவாள்மணையில் கறிகாய் நறுக்குகையில் கட்டை விரலையும் சீவிக் கொண்டுவிட்டு வெட்டிலிருந்து துளிர்க்கும். ரத்தத்தை வலியால் அல்ல சிந்தனையில் சுளித்த புருவங்களுடன் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். ஆனால் அவன் என்ன செய்ய முடியும்? 

பிறகு வீட்டுக்கு வரும் வாடிக்கைத் தயிர்க்காரி. தலை மேல் கூடையுடன், அம்மா கொடுத்த வெற்றிலையை அங்கேயே போட்டுக் கொண்டு சுண்ணாம்பை வாயில் சுண்டி யெறிந்து விட்டுத் தூணில் விரலைத் துடைத்துக் கொண்டு. சப்பாத்திப்பூ போன்ற செவ்வாயைத் திறந்து சிரித்துக் கொண்டு நிற்கிறாள், 

அப்புறம் ஓரிரவு நேரங்கழித்து எங்கிருந்தோ வீட்டுக்குத் திரும்புகையில், யாரோ ஒருத்தி வெள்ளை ரவிக்கையும் வெள்ளைப் புடைவையும் கொண்டையில் கொத்துப் பூவும் அணிந்துகொண்டு, தெருவில் ராந்தல் கம்பத்தின் மேல் சாய்ந்த வண்ணம் “ஏன்னா அய்யரே, ரொம்ப வேகமாப் போறே?” என்று கேட்டாள். அவன் லஜ்ஜையும் பயமு மடைந்து ஓட்டமாய் நடந்தான். ஆனால் அவளுடைய சிரிப்பின் ஒலி அவனை வெகுநாள் துரத்திக் கொண் டிருந்தது, 

ஆதாரமும் தொடர்புமற்று மனத்தில் நாளடைவில் ஆங்காங்கு தங்கிப் போன அழுக்குகள்தாம். ஆயினும் அத்த னையும் இப்பொழுது எப்படியோ புத்துயிர்களும், அர்த்தங் சளும் தாங்கிக் கொண்டு எழுந்தன. ஆம். இவர்களில் எவளேனும் ஏன் இருக்கக் கூடாது? அவளுடன்- 

‘ஏன் வாயடைச்சுப் போச்சு? புருஷாளே இப்படித் தானா?” அவள் போட்ட கத்தலில் அவனுக்கு மண்டை திகு திகுவென எரிந்தது. 

“நீ நினைக்கிறபடி இல்லை. சாரூ! நான் உனக்குத் துரோகம் பண்ணவில்லை. இல்லை சத்தியமாய்ப் பண்ணவில்லை!” 

”பின்னே என் என்னை விட்டுப் போகணும்?” 

“மறுபடியும் அதே சுங்கஞ்சாவடிக்குத்தான் வருகிறோம்!” 

அவளுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. 

“போங்கோ இங்கே விட்டு” சீறி விழுந்தாள், ”அனாவசியமா மனசு நிம்மதியைக் கலைச்சுண்டு…’ 

“இல்லை சாரு நான் சொல்வதை-” 

“போங்கோன்னா, போங்கோ!” அவள் வெறி பிடித்துக் கத்தினாள். அவன் விசனத்துடன் எழுந்தான். 

“நான் பாடணும். எனக்கு மனசு சரியாயில்லே.” 

அவள் இப்பொழுது குன்றிப் போயிருந்த நிலையில் உடலே திடீரெனச் சிறுத்துவிட்டது போலிருந்தாள். 

தம்பூரிலிருந்து விடுபட்ட சுருதி பாம்பு போல் சீறிக் கொண்டே வந்து அவனைத் துரத்திற்று, மாடிக்கு வந்து நின்றான், வானைத் தக்கையாயடைத்துக் கொண்டிருந்த மேகங்கள் பாறை பாறையாய் உடைந்து, அவைகளிடையில் நிலவு தெளிவாய்த் தொங்கிக் கொண்டிருந்தது. 

தன்னறைக்குப் போய்க் கட்டிலின் மேல் தடாலென விழுந்தாள். கட்டிலின் ‘ஸ்பிரிங்கு’கள் கிறீச்சிட்டன. 

கண்கள் மூடிக் கொண்டன. ஆனால் தூக்கம் வர வில்லை. 

இமைகளுக்கிடையில் விழிகள் விதைகளாய் விழித்துக் கொண்டிருந்தன. 

இத்தனை நாட்களாய் அவனை அமுக்கிக் கொண்டிருந்த எதனினின்றோ விடுபட்டு, இறக்கை முளைத்த குதிரைமேல் வேகமாய் எங்கோ போய்க் கொண்டிருந்தான், வானில் உடைந்து கிடந்த மேகப் பாறைகள் மீது குளம்புகள் தாளம் போட்டுக்கொண்டு தாண்டி தாவிச் செல்கையில், அவற்றின் லாடங்களிலிருந்து நீலப் பொறிகள் பறந்தன. 

காவையில் கிளம்பி விடவேண்டும். சூட்டோடு சூடாய் ஒத்திப் போட்டால் ஆறிப் போனதுதான். கையோடு மூட்டை முடிச்சு ஒண்ணும் வேண்டாம். மாற்று வேஷ்டி அத்தியாவசியமான சில்லறை. இவை போதும் பிழைப்புக்கு அப்புறம் ஏதாவது பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு நினைத்தவிடம் நினைத்த சமயம் போல் கண்ட இடத்தில் கிடைத்ததைச் சாப்பிட்டு விட்டு. அப்படியே தெருக் குழா யிலோ கிணற்றடியிலோ குளத்திலோ கையை அலம்பிவிட்டு ஜலத்தை அள்ளிக் குடித்துவிட்டு, மடியில் கையைத் துடைத் துக் கொண்டு. மரத்தடியிலோ சத்திரத்துத் திண்ணையிலோ கட்டையை நீட்டிவிட்டு, அண்ணாந்து பார்த்துக் கொண்டு, நக்ஷத்திரங்களை எண்ணுவதைப் பற்றி எண்ணுகிறேன். குஷியாகத்தானிருக்கிறது! இப்படியும்தான் அநுபவித்துப் பார்ப்போமே! தாக்ஷண்யத்திற்கு இத்தனை நாள் அடிமைப், பட்ட பிறகு, இம்மாதிரியும் வாழத்தான் ஆசையாயிருக்கிறது. 

‘நினைத்தவிடம் நினைத்த சமயம்-‘ 

“பல்லவி எடுப்பு, திஸ்ரத்ரிபுடத்தாளப் பிரமாணம், முக்கால் மாத்திரையில் எடுப்பு.”

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர் ஒரு சாண். அதற்குள் அதற்கு எத்தனை ஒட்டு தையல், கிழிசல்! மறு படியும் மாட்டிக் கிழித்தல் இதெல்லாமே ஏன் எனக்கு? ஹாய்யா…!” 

இருட்டில் மூர்க்கமாய் அவன் மேல் இரு கைகள் விழுந்து மார்போடு மார்பழுந்த இறுகத் தழுவின. அவன் முகத்தைத் தஹித்த மூச்சில் தலை சுற்றிற்று. 

“என்னை விட்டுடாதேங்கோ-! விட்டுடாதே- ! நான் அனாதை–!” 

“சாரு!” எழுந்திருக்க முயன்றான். முடியவில்லை. அவள் கனம் அழுத்திற்று. 

“நான் சொல்றத்தை முழுக்க வாங்கிக்கோங்கோ. உங்களுக்கு யார் மேல் ஆசையோ, அவளைக் கொண்டு வந்து ஆத்தோடு வைச்சுக்கோங்கோ. எனக்குத் தங்கையா யிருந்துட்டுப் போகிறாள். எனக்குத் தங்கையில்லை.” 

“சாரு; அப்படியெல்லாம் இல்லேடி!” 

“இல்லை, பரவாயில்லைன்னுதான் நான் சொல்றேனே. எங்கே உங்கள் கையைக் காண்பிங்கோ. நான் கையடிச்சுச் சொல்றேன். வந்தவளைச் சீன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன். ‘ஏன் இப்படி பண்ணலே’ன்னு ஒரு வார்த்தை அதிர்ந்து கேட்கமாட்டேன். ஆனா நீங்க மாத்திரம் என்னை விட்டுட்டுப் போயிடாதேங்கோ. நீங்கள் எனக்கு வேணும் நீங்கள்தான் என் தைரியம்_” அவள் மூச்சின் இறைப்பில் அறை அதிர்ந்தது. 

“சாரு!”

அவன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு “ஹோ’ வென்று அலறினாள். 

கழுத்தில் கத்தி விழுந்துவிட்ட மிருகம்தான் அப்படித் தன் கடைசிக் கத்தலில் அலறும். அவனுக்கே சஹிக்க வில்லை. 

அவளை இழுத்து மார் மேல் சாத்திக் கொண்டான். கூந்தல் அவிழ்ந்து துவண்டு சரிந்து அவன் தோள் மேல் விழுந்தது. அவள் கண்ணீரைத் துடைக்க முயன்றான். அவள் அப்பொழுது ஒரு பெரிய குழந்தையாய்த்தானிருந்தாள். 

”என்னடி சாரூ! நான் செத்துப் போயிட்ட மாதிரி அழறே?” 

“நீங்கள் செத்துப் போக…ல்லென்…. ன்னு சொல்லுங்- உங்- கோ – ஓ ஓ ஓ!” 

மார்பே வெடித்து விடும் போல் அவள் அப்படி விக்கிக் கொண்டிருக்கும் போதே. அவன் புறங்கை மேல் அவள் கண்கள் எரி நீர் கக்கிக்கொண்டிருக்கும்போதே, ஏற்கனவே திடமாகிக் கொண்டிருந்த தீர்மானம் இன்னமும் கல்லாய் இறுகுவதை உணர்ந்தான். இனி அவன் அதைக் கலைக்கவும் முடியாது. எடுக்கவும் முடியாது. உடைக்கவும் முடியாது. அது அவன் சக்தியை மீறியாகிவிட்டது.மன அவனே அது உருட்டும் பாய்ச்சிகையாயிற்று! 

இப்படித்தான் ஒவ்வொன்றிற்கும் ஒரு கட்டம் வந்து விடுகிறது. செய்வதற்கு இஷ்டமில்லை. ஆனால் செய்து கொண்டிருக்கிறோம். செய்ய இஷ்டமுண்டு. ஆனால் செய்ய முடியவில்லை. இந்நிலைக்குக் காரணம் தெரிவ தில்லை. அதன் அந்தக் கட்டத்தில் அதற்குக் காரணமு மில்லை. காரணத்தையொட்டிய காரியமுமில்லை, உலகில் நாம் எல்லோருமே, தூக்கத்தில் நடப்பவர்தாமா? 

விடுதலையென்பதே கிடையாதா? ஒரு கூண்டிலிருந்து இன்னொரு கூண்டுக்கு மாறுவதுதான் உண்டா? 

“இல்லேடி சாரூ! நான் சொன்னதை மறந்துடு” என்று சொல்லத்தான் வாய் திறந்தது; ஆனால் அதனின்று வந்த வார்த்தைகளோ? 

“இல்லை, நான் போகத்தான் போகிறேன். நீ என்னைத் தடுத்துப் பிரயோஜனமில்லை-” என்றுதான் கிளம்பின. அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. அவனே அவன் தீர்மானத்தின் பாய்ச்சிகை ஆயாயிற்று. 

அவள் உடல் ஒரு குலுங்கு குலுங்கிற்று. அலர்ந்த இதழ் போலும் அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து அவள் நழுவினாள். அவள் மார்பில் 

அவன் வார்த்தைகள் ஈட்டியைச் சொருகி விட்டதை உணர்ந்தான். 

”கூகே?” எங்கோ ஒரு பறவை அலறிற்று, 

“இருட்டில் தன்னந்தனியாய் தன்னுள் பாய்ந்து விட்ட ஈட்டியைத் தானே பிடுங்க முயன்று தவித்துக் கொண்டிருந் தாள். அவனுக்கு அது நன்றாய்த் தெரிந்தது. 

-“கூ-கே கே!கூ கே!-‘ 

“இந்தக் கொலைக்கு நான் சாக்ஷி கூகே!” 

அவள் எழ முயன்றாள். அவசர அவசரமாய் எழுந்து விளக்கைப் போட்டான். அவளுக்கு ஏதோ அதனால் ஒத்தாசைமாதிரி. ஆனால் அவள் முகத்தை அவன் பார்க்க அது உதவியாயிருந்தது. அவள் அவளுள் இறந்து விட்டாள். மார்பில் சொற்கள் பாய்ந்த இடத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, கதவையடைவதற்குள் உடல் தள்ளாடிற்று. குழந்தைக்குச் செய்வதுபோல், அவள் மேலாக்கைச்சரிப்படுத்தி விட்டான். உண்மையாகவே ஒரு பெரிய குழந்தைதான். 

“எப்போ?” 

“நாளைக் காலை. சாரூ, மன்னிச்சுடு. நாள் மறுபடி வரு-சூ!” துள்ளிக் குதித்தான். காலைப் பிராண்டிக் 

கொண்டு விழுந்தடித்து ஏதோ ஓடிற்று. அவள் அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை. 

அவள் வாசலைத் தாண்டியதும் காற்றில் கதவு நகர்ந்து தானே அவள் மேல் மூடியது. 

அதற்குப்பின் அவனுக்கு நேர்ந்தது தூக்கமா அல்லது மூர்ச்சையா என்று தெரியவில்லை. கட்டிலில் திரும்பத் திரும்பப் புரண்டதுதான் நினைவிருந்தது. 

“நாளைக் காலைப் போய் விடவேண்டும். போய்விடு வேன். பிய்த்துக்கொண்டு விடவேண்டும். இந்த ரகனை இனி என்றும் உண்டு. போவேன் வருவேன், இல்லை: போயே போகிறேன். 

“தூ ஊ-ஊ-ர-தூ-ர-” 

கண் மறுபடி திறக்கையில் பொழுது நன்றாய் விடிந் திருக்கிறது: கீழிருந்து மேலே சுழன்று கொண்டே வரும் சுருதி நாதம்தான் அவனை எழுப்பிற்று. அவள் குரல் இன்னம் சுருதியைத் தொடரவில்லை. வெறும் சுருதி நாதம்தான். 

தன்னை உதறிக்கொண்டு எழுந்தான். பல்லை விளக்கி விட்டு உடனே ஸ்னானமும் பண்ணினாள். குழாயிலிருந்து ஜலம் காலை வேகத்துடன் கனமாய்க் கொட்டுகையில் உடலில் சோர்வு தெளிந்தது. வென்னீருள்ளிலிருந்து பார்க்கையில் தோட்டத்துப் பச்சையும் ஆகாயத்தின் முழு நீலமும் கண்களுக்கு இதமாயிருந்தன. அவனுக்கே புரியாத ஓர் உற்சாகமும் பரவசமும் தம் சுழற்சியில் பிடித்துக் கொண்டன. ஜலத்துளிகள் மார்புடைப்பிலும் தோள் புடைப்பிலும் முத்துக்களாய் நின்றன. 

மெட்டு ஒன்றை முனகிக்கொண்டே உடுத்திக் கொண்டான். சமையலறைக்குச் சென்றான். சமையல்காரப் பாட்டி உருத்திராக்ஷ மாலையை உருட்டி ஜபம் பண்ணிக் கொண்டிருந்தாள். 

“என் காப்பி ஆறிப்போயிடுத்தா? பரவாயில்லை கொடுங்கோ'”

“இப்போத்தான் சாருகிட்ட கொண்டு போய் வெச்சேன், அவளும் குடிக்கல்லே–” 

“ஓ” ‘சரிசரி’ எப்படியும் அவளிடம் விடை பெற்றுக் கொள்ள வேண்டாமா?”

சாருவின் அறையை நோக்கிச் செல்கையிலேயே, தம்பூரின் மீட்டல் அலை நுரை போல் பொங்கி வழிந்தது, 

‘சாருவும் ஸ்னானம் பண்ணிவிட்டாள். முடியாது உலர வீட்டிருந்த கூந்தலில் அற்புதமான அழகுடன் ஒரு பூவை சொருகிக் கொண்டிருந்தாள், முகத்தில் பற்றியிருந்த மஞ்சள் பளீரென்றது. சிவப்பு சால்வை போர்த்த பீடத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு சுருதியை மீட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் கூஜாச் சொம்பு. 

அவன் வந்ததை அவள் அறிந்து கொண்டதால், கூஜாவை அவன் பக்கம் நகர்த்தினாள். இப்பொழுது ஏனோ அவனுக்கு அவள்மேல் தனிப்பரிவு எழுந்தது. ஒரு வேளை தான் விட்டு விட்டுப் போய்விடப் போவதாலோ என்னவோ ; சாரு இப்பொழுது அழகாய்த் தானிருந்தாள். அவன் வெறுக்கும் புன்னகை இப்பொழுது அவளுக்கு ரொம்பவும் ஒவ்வியிருந்தது. 

ஆனால் காப்பி மாத்திரம் கொஞ்சம் ஆறிப்போய் விட்டது. அவனே கொஞ்சம் நெருப்புக்கோழி. ஆனாலும் பரவாயில்லை. இந்தச் சமயத்தில் இதைப் பற்றி என்ன தர்க்கம். 

”கொஞ்சம் சர்க்கரை? மட்டா கசக்கிறதே!” என்று சொல்லிக்கொண்டே காலி டம்ளரைக் கீழே வைத்தான். குரலைத் திடப்படுத்திக் கொண்டான்.சரி நான் போய் வருகிறேன்!-.” 

சிவப்புச் சால்வைக்கடியில் பீடத்தின் கீழ் ‘கீச் கீச்’ சென்றது. 

அலள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் புன்னகை விரிந்தது. உடைந்த குழாய்ப்போல் திடீரென சுருதி அவள் மேல் பொழிந்தது. அப்பொழுது தான் அவன் அதைக் கண்டான், அவள் பின்னால் ஒரு சின்ன சீசா, மண்டை யோட்டின் பொம்மைச் சீட்டு ஒட்டிய சீசா. 

அதை உணர்ந்ததும் உணர்விழந்தான்.

– தயா (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *