கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 1,940 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் குதூகலிப்பு இன்னமும் ஓயவில்லை. குழாயடி யில் கூடும் பெண்களின் பேச்சுக்களிலும் அடிபட்டது.

“குடைக்காரரின்ட மகனுக்கு வேலை கிடைக்கப் போகுதோ”

“மகளுக்குத்தான் கல்யாணப் பேச்சுகள் ஏதும்” ஒரு வருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். அயலவரின் பலதரப் பட்ட கருத்துக்கள் அவர்களின் செவிகளுக்கு எட்டியதா? பலர் பலவிதமாகத்தான் பேசுவார்கள் என்று அவர்களும் அசட்டையாக இருந்துவிட்டார்களோ?

குடைக்கார முஹம்மது சுறு சுறுப்பாகத்தான் வேலை களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

பெனிதுடுமுல்லை றோட்டில் அரபு பாடசாலை மண்ட பத்தின் பின்னால் சூழ்ந்துள்ள முஸ்லிம் குடும்பங்களின் குடிசை வீடுகளில், குடைக்கார முஹம்மதின் மகன் சலீம் நல்ல அதிஷ்டக்காரன் என்றெல்லாம் வியந்து கொண்டிருந் தார்கள்.

முஹம்மதின் வீட்டில் இனி ஒரு நாளைக்கு மூன்றுதரம் அடுப்பு எரியும்.

முஹமதை ‘குடைக்காரர்’ என்று சொன்னால் தான் வட்டாரத்தில் எல்லாருக்கும் தெரியும். குடை திருத்தம் செய்வதே அவரின் சீவிய ஓட்டத் தொழில். ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிவரையும் வேலை செய்துவிட்டுக் கண்ணயர்வார்.

அன்றிரவு நெடுநேரத்திற்குப் பின்பும் உறக்கம் வரா மல் தவித்துக் கொண்டிருந்தார். ஞாபக சக்தியை மிகவும் கடிந்து கொண்டவராய் எழுந்து சென்று சிமினி வழியாக புகையைக் கக்கிக் கொண்டிருந்த விளக்கின் பிரகாசத்தைக் குறைத்தார். அப்படியும் சிமினியின் ஒரு பக்கத்தில் புகை அப்பிக் கொண்டிருந்தது. அந்தக் களிப்பு இன்னும் அவர் மனதில் குமிழிட்டுக் கொண்டிருந்தது. தன்னை அறியாம லேயே முணு முணுத்துக் கொண்டார்.

“கஷ்டப்பட்டுப் படிச்சதனாலே பரீட்சையிலே பாஸ் கிடைச்சது. சும்மாயிருந்தா முடியுமோ” எந்தக் காரியமானாலும் நம்ம முயற்சி இல்லாம எதுவும் அசையாது.

அவ்வேளை இதைக் கேட்க யாரும் விழித்துக் கொண் டிருக்கவில்லை.

நித்திரைக்குப் பின் எழுந்தபோது வானம் வெளிறிக் கொண்டிருந்தது. அவரே மற்றவர்களை எழுப்ப வேண்டி யிருந்தது. நாளாந்தக் கடமைகளுள் அதுவும் ஒன்றாகி விட்டது. வழக்கம்போல ஒரு ‘கப்’ பிளேன் டீயுடன் பொழுதைச் சுறு சுறுப்பாக ஒளியேற்றினார்.

“சலீம், இண்டைக்குத்தானே அவர் வாரது என்று எழுதியிருந்தார்’ தன் மகனைக் கேட்டார். அவன் தலை யசைத்தான். அவர் ‘கோட்’ பையிலிருந்த அந்த அஞ்ச லட்டையை எடுத்து மீண்டும் படித்தார்.

“சலீமின் விசயத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம். அது விசயமாகவே நாளை பகல் 12 – 15 க்கு அங்கு வரும் ‘டீசலில்’ வருகிறேன் ஸ்டேசனில் சந்திக்கவும். மற்றவை நேரில்…”

உள்ளம் பூரித்தது, அவருக்கு உலகத்தில் இரண்டு கவ லைகள். ஒன்றை இறக்கி வைத்தால் தான் மற்றது நீங்க வழிபிறக்கும். ஆனால் இரண்டுமே தன்னைவிட்டு வெகு தூரம் சென்று விட்டதாக எண்ணி ஒரு கணம் மகிழ்ந்தார். கவலையின் அரிப்பு இல்லாத போதுதான் மனிதன் எவ்வ ளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

வானத்தை அண்ணாந்து பார்த்தார். விசும்பெல்லாம் பார்வையைச் செலுத்தி, எட்டு மணியாயிற்று என்பதை ஊகித்துக் கொண்டார். ‘இன்று நேரம் மெல்லப் போவதாக’ எண்ணிக் கொண்டார்.

வீடுகளில் சில்லறை வேலைகள் தேடிப் போகிறவர்களும் புறப்படுகிறார்கள். பெட்டிக் கடை பெரிய முதலாளிகள், கூலிகள், நாட்டாண்மைக்காரர்கள் இப்படி ஒரு சின்னஞ் சிறு பஞ்சையுலகமே தங்கள், தங்கள் காரியங்களில் கண் ணாய், வழக்கமான நேரத்தில் தான் கலைந்து சென்றது. இவர்களுக்காக செங்கதிர் நாவல் நகரெங்கும் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான்.

சே….. டீசல் வண்டி வர இன்னும் நான்கு மணித்தி யாலங்களும் பதினைந்து நிமிடங்களும் உண்டு.

கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமையை இழந்து கொண்டிருந்தார் முஹம்மது.

சலீம் குடைகளையெல்லாம் சுருட்டிக் கட்டினான் செப்பனிடும் சிறு ஆயுதங்களை ஒரு துணிப்பையில் போட்டுக் கொண்டதும் இருவரும் கிளம்பினார்கள்.

வாப்பாவும் மகனும் பொறப்பட்டாப்போல, எதிரே வந்த அடுத்த வீட்டுக்காரி ஆய்ஷா ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, பதிலை எதிர்பார்க்காமலே சென்றாள். அவர்களும் முறுவலை மட்டும் மலரவிட்டு நடந்தார்கள்.

தலையை மூடிக்கொண்டிருந்த வெள்ளைத் தொப்பியை சரிசெய்து கொண்டார். அது அவர் மகுடம். மகுடத்தைச் சுற்றி எழிலான பூ வேலைப்பாடு. அவை அருமை மகள் மர்ஜினாவின் கைவண்ணம்.

சரியாக – 10 க்குப் பட்டறையை அடைந்ததும், சலீம் வீட்டுக்குத் திரும்பினான்.

பட்டறை அம்பகமுவா வீதியில், நாகூரா ஒட்டலை ஒட்டினாற்போல இருக்கும் தரையும் சுவரும் ஓட்டைக் கூரையும்தான்.

போனதும் கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டினார். வேலை நெருப்பாக ஆரம்பமாகியது.

நகரில் அவரது தொழிலுக்கு எப்போதும் ஒரு தனி மௌசு. மூலைக்கு மூலையாய் எறியப்படும் பழைய குடை களெல்லாம் புதிய உருவமும், புது வாழ்வும் பெற்றுக் கொள்ளும் அவர் கையினால் : வருகிறவர்களெல்லாம் அவரு டன் பேரம் பேசுகிறார்கள்.

“இந்த ஊருக்கே இது சனியன் புடிச்ச மழை” என்று சலித்துக் கொள்வார்கள்.

“இன்னக்கி கடையிலே ஒரு புதிய குடைய வாங்குவ தாக இருந்தா, சும்மாவா? முப்பத்துரெண்டு ரூபா வேணுமே?” ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள்.

வாடிக்கைகாரர்கள் வந்தார்கள் போனார்கள்,

பழக்கப்பட்ட கைகள் வேலையில் லயித்திருந்தன. மனம் மட்டும் அலைமோதிக் கொண்டிருந்தது.

நாகூர் ஓட்டலின் வானொலிப்பெட்டி பத்து மணியை அறிவித்தது.

ஒட்டல் சிப்பந்தியான ஜமாலி ஒரு ‘கப்’ ஸ்ட்ரோங் டீயை நீட்டினான். இவர் ஒரு சிகரெட்டுக்கும் சேர்த்து சில்லறையைப் பொறுக்கிக் கொடுத்தார். மூன்று நிமிட புகை இன்பத்தில், அந்த அஞ்சலட்டையை ஐந்தாவது முறையாகப் படித்து மகிழ்ந்தார்.

சற்று நேரத்தில், முகமெல்லாம் நம்பிக்கையின் ஒளி படர சலீம் வந்து நின்றான், வெற்றிப்பாதையில் நடக்கப் போகிற சந்தோஷமா அது! அவன் நல்ல அதிஷ்டசாலி என்று அயல் குடிசைக்காரர்கள் ஓயாமல் சொல்கிறார்கள்.

“என்ன…?”

“நான் ஸ்டேசனுக்குப் போகட்டுமா?”

“இல்லே….நீ போய் சாப்பாடு ரெடி பண்ணு”

அவனை அனுப்பினால் மரியாதை இல்லை என்று எண்ணி இருக்கலாம்.

மீண்டும் வேலையில் லயித்தவராய் நேற்று கரீம் ‘கார்ட்’ கொடுத்துவிட்டுப் போன குடையில் ஒட்டுப் போட ஆரம் பித்தார்.

“பாவம், அவர் பென்சன்காரர். புதுக்குடை வாங்க எங்கே போவார்” என்று நினைத்தபோது அவரே அங்கு வந்துவிட்டார்.

“வாங்க ஓங்க வேலையெத்தான் செஞ்சிகிட்டு இருக்கிறேன், அப்படியே ஒரு ‘ரவுன்’ போய் வாங்களேன்”

அவர் போனபின் மனம் குடும்பச் சூழலில் ஒன்றிவிட்டது.

சலீம் – இனி ஒரு தொழில் செய்ய வேண்டும்.

மகள் – மர்ஜினாதான் எட்டாம் வகுப்போடு நின்று விட்டாள்.

மனைவி – ஹலீமா – அவளுடைய மகத்தான உழைப் பும் சேர்த்து திறமையான குடும்ப நிர்வாகத்தால் தானே, பசியில்லாமல் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவரைப் பொறுத்தவரையில் சுமாரான வருமானந்தான். பலர் நனையாமலும் காயாமலும் போகிறார்களே என்ற பூரிப்பால் அவர் வள்ளல்.

பொழுது சாயும்போது தனது எட்டு மணிநேர வேலையை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பினால், எல் லாம் அடுத்த நாள் காலையில் தான்.

அவசர அவசரமாக எழுந்தார். ‘ஜமாலி கொஞ்சம் பட்டறையைப் பார்த்துக்கோ மகனே” இரைந்தவாறு வெளிக்கிளம்பி விரைந்தார். மழை மெல்லிசாகத் தூறிக் கொண்டிருந்தது. பலருக்குக் குடை திருத்தித் தருபவர் தனக்கென ஒரு ஓட்டைக் குடையேனும் இல்லாமல் …

அவரை அரித்துக் கொண்டிருந்த கவலைகளில், ஒன்று மகனின் தொழில் மற்றது மகளின் திருமணம். இரண்டும் அவர் வாழ்வு ஊசலாடிக் கொண்டிருக்கும் போதே நடந் துவிட்டால் மகிழ்ச்சி ஏற்படும். என்ன இருந்தாலும் ரஹிம் பெரிய மனிதன் தான். தன் சின்னஞ்சிறு குடும்பத் தின் மீதுதான் எவ்வளவு அக்கறை. என்ன பெருந்தன்மை.

அவரோ அட்டன் வட்டார தேயிலைத் தோட்டமொன் றில் ஒரு பெரிய டீமேக்கர். அவரையும் இவரையும் இணைத் தது எது? இந்தக் குடை செப்பனிடும் தொழில் ஒன்று தானே!

அந்த நட்பு இறுக முன்பே ஜனாப் ரஹீமுக்கு, சொய் சாக்கலையில் அரை ஏக்கர் நிலமும் வீடும் வாங்க ஒத்து ழைத்தாரே குடைக்காரர்.

அப்பொழுதுதான் முதல் முதலாக அவர் குடைக்கார ரின் வீட்டுக்குக் காலடியெடுத்து வைத்தார்.

ரஹீமுக்குத் தான் வேலை செய்யும் எஸ்ட்டேட்டில் தொழிலாளர்களின் ‘லயங்கள்’ ஞாபகத் திரையில் காட்சி யளித்தன. தனது பதினைந்து வருட தொழிலனுபவத்தில் ஒரு நாள் கூட, ஒரு லயனை மிதித்தது கிடையாது. அந் தச் சந்திப்புக்குப் பின் அவர்களது குடும்பத்தைப் பற்றி இவர்களும், இவர்களைப் பற்றி அவர்களும் அறிந்து கொண்டார்கள்.

சலீமின் தொழில் முயற்சியைத் தன்னிடம் விடுமாறு சொன்னபோது தான் ஹலீமாவும், மகனுக்கு வேலை எடுத் துக் கொடுத்தால் அது பெரிய உதவியாக இருக்கும் என்று சொன்னாள்.

அதற்குப்பின் ர ஹீ ம் குடிசைக்கு வந்ததே இல்லை. ஆனால் கடைத் தெருவில் சந்திக்க நேர்ந்தது. அப்போ தெல்லாம் குடைக்காரரின் மனதில் அவர் அளித்த அந்த வாக்குறுதி மெல்ல எட்டிப் பார்க்கும். மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்குவார். ஆனால் ரஹீம் வேறு விசயங்களுக்காகச் சந்திப்பார்.

ஆனால் இன்று –

புகைவண்டி நிலையம் 12 மணியைக் குத்திக் காட்டிய போது,

அவர் இவருடையகவலைக்கு மருந்தாக வருகிறார்.

குறிப்பிட்ட நேரத்தில் வண்டி வந்தது. திமுதிமுத்த கூட்டத்தில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்து விட்டது.

இந்தச் சந்திப்புகள் தாம் உலகில் எத்தனை எத்த னையோ சாதித்து விடுகின்றன. பார்க்கப் போனால் அவர் ஒரு எஸ்டேட் அதிகாரி. இவர் குடைக்காரர். மற்றவர்கள் சொல்வது போல், ‘ஏணிவைத்தாலும் எட்டாத உறவு’.

அன்றெல்லாம் அவர்கள் குடிசையிலும் கடைத் தெரு விலும் அப்படி என்னதான் கதைத்துக் கொண்டார்களோ! சுற்றுப் புறத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

“கஷ்டப்பட்டுப் படித்தவர் ரஹீமை சந்தித்தால் வேலை கிடைக்கும்.

ஒரு வருட காலமாக அவரது தேயிலைத் தொழிற்சாலை யில் தொழில் பழகிக் கொண்டிருந்த ஒருவர் போய்விட் டார். அந்த இடத்துக்கு ஒருவர் தேவையாம்.

நூற்றுக் கணக்காகக் குவியும் விண்ணப்பங்களை தோட் டத் துரை தலைமைக் குமாஸ்தாவிடம் ஒப்படைத்துவிட்டு, டீமேக்கருடன் கலந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு கூறி இருந்ததை மட்டும் மறைத்து விட்டார்.

அந்தத் தொழில் நிரந்தரமானதல்ல. பழகி முன்னுக் குப் போகக் கிடைக்கும் அரிய வாய்ப்பு. ஒரு வருடத்திற்கு மட்டும் சிறு சம்பளம். வேறு எந்தவித உரிமையும் இல்லை என்றெல்லாம் விளக்கினார். அதற்கென்றே வந்து அத்தனை மணிநேரம் சுற்றி வளைத்துப் பேசியதெல்லாம் அவை தானோ!

பலர் அவரைப் பிரத்தியேகமாய்ச் சந்தித்து தொல்லை கொடுக்கிறார்களாம்.

அப்படியானால், சலீம் அந்த அரிய வாய்ப்பைத் தவற விடக் கூடாது. அவன் முந்திக் கொள்ள வேண்டும் என் பதுதானே அதன் கருத்து.

அதற்காக அவன் என்ன செய்ய வேண்டும்?

அவர் சொல்லிச் சென்ற அரிய யோசனையின்படி சலீம் தன் சொந்தக் கையெழுத்தில் விண்ணப்பத்தை எழுதி விட்டான்.

இரண்டு நாட்களாகக் குடைக்காரரும் அங்கேயும் இங் கேயும் ஓடித்திரிந்தார். அதிகம் பங்கெடுத்த ஹலீமாவுக்கு உற்சாகம் ஓயவில்லை. அதிகாலையில் நாகூரா ஓட்டலுக்கு அப்பம் சுட்டனுப்பும் தெம்பு பிறந்தது சற்று நேரத்திற் கெல்லாம்.

“சலீம், இதை பிரயாணச் செலவுக்கு வைச்சிக்கோ! பெற்றவர்கள் மகிழ்ந்து தான் போனார்கள், அவன் உடனே அந்த விண்ணப்பத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அட்டனுக்குப் போனதும், சுரங்கப்பாதை வழியாகத் தான் ரஹீமின் தோட்டத்துக்குப் போக வேண்டும். மெழுகுவர்த்தியையும், தீப்பெட்டியையும் வாங்கிக்கொண்டு போயிருந்தான். சலீமைப் பொறுத்தவரையில் அவனுக்கே உரிய நடையில் எங்கிருந்தோ எதையோ உணர்ந்து கொண் டதைப் போல் ஒரு புதுத் தெம்பும் இருந்தது. அதுவே அவன் பாதைக்குப் பெருந்துணையா?

சுரங்கப்பாதை – நீண்ட இருட்டுக் குகை விரிந்து வழி விடுகிறது. அவனுக்கு அது புதிய பாதையா? இருள் அக லாத அவன் பாதையில், கால ஓட்டம் துரத்தியபோது அதன் வேகத்தைச் சகிக்காது ஓடிய காலமும் இருந்தது தான். விழுந்து பட்ட காயங்கள் அவனுக்குப் பக்குவமாக நடை பயிற்றுவித்திருக்கின்றன.

மெழுகுவர்த்தியை உருவி எடுத்து ஒளியேற்றும் பிரயத் தனத்தில் படுதோல்வி. தீக்குச்சிகள் தீய்ந்தன. நடை யெண்ணி நடந்தான், மெழுகுவர்த்தி ஆடி அசைந்து எரி யும்போது, அதன் நிழல் சுரங்கத்தின் மேல் வளைவிலும் பக்கச் சுவர்களிலும் பட்டுத் தெறிக்கும்போது சுரங்கமே தலை கீழாகத் தெரிவது போல் ஓர் உணர்ச்சி சுரங்கத்தை அமுக்கும் குன்றுகளிலிருந்து சிந்தும் புனல் சுரங்கக் கண் களிலிருந்து துளும்பித் தெறித்த கட்டைகள் ஒவ்வொன் றும் ஊறி பாதசாரிகளின் பாதச் சூட்டுக்காக சில்லிட்டுக் கிடக்கின்றன. நடையெண்ணி நடந்தாலும் ஒவ்வொரு

அடியும் வழுக்கும். ஒரு நடைப் போராட்டம்.

“காலியான இடத்துக்கு ஆள் எடுத்தாயிற்று” என்று அங்கு கிடைத்த முடிவு ஆச்சரியமான தல்ல. ஜனாப் ரஹீம் அவர்களுக்கு ஒருவர் ஏற்கனவே ஐநூறு ரூபா விலைபேசி அந்த அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் எனும் உண்மையை தன் குடிசைக்குச் சொல்ல வேண்டாமோ?

சுற்றுப்புறமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மகத்தான முடிவைத் தெரிந்து கொள்ளும் வரை அந்தக் குதூகலிப்பு அங்கு ஓயாதுதான். அவனது அந்த அதிஷ்டத் தில் அவர்களுக்கும் பங்கு இல்லையா?

சலீம் சுரங்கப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறான்.

– மல்லிகை – ஜூன் 1970.

– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *