(இதற்கு முந்தைய ‘ஸம்ஸ்கிருதத் தனிப்பாடல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
சபரிநாதன் தன்னையே மிகவும் நொந்து கொண்டார். இப்படியா ஒரு கூறுகெட்ட கோட்டிக்காரியிடம் போய் உளறித் தொலைவேன் என்று தன்னையே ஏசிக்கொண்டார். இனி அவருக்கு ரொம்ப வேண்டியவர்கள் என்று யாராவது மாற்றி மாற்றி வந்து தயங்கித் தயங்கியாவது இரண்டாம் கல்யாணம் என்று நாங்கள் கேள்விப்பட்டது நிஜம்தானா என்று சபரிநாதனைக் கேட்கத்தான் செய்வார்கள்.
அவர்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வது? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதா? இல்லை, ஆமாம் கல்யாணம் பண்ணிக் கொள்வதாக இருக்கிறேன் என்பதா?
சபரிநாதன் எரிச்சலோடு தலையை உலுப்பிக்கொண்டார். இந்நேரம் கோமதி சித்தி வைத்த வேட்டுக்கள் வெளியூருக்கெல்லாம் போய்க்கூட வெடித்து வைத்திருக்கும். [போதாததற்கு முத்தையா வேறு படியேறி வந்து சிவக்குமாரின் காதில் படும்படியாகவே வேட்டு வெடித்துவிட்டுப் போயிருக்கிறார். அந்த முத்தையாவுடன், சிவக்குமாரை வேறு வீடுவரை அனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் கூறுகெட்ட காரியம் என்பது! முத்தையா சிவக்குமாரிடம் என்ன மாதிரியான அதிர்வேட்டுக்களை வைத்து தள்ளிக் கொண்டிருக்கிறாரோ..? மற்றவர்களைக்கூட சபரிநாதன் அவருடைய பாணியில் எளிதாக எதிர்நோக்கி விடுவார். ஆனால் அவரிடம் கைநீட்டி சம்பளம் வாங்குகிற சாதாரண ஒரு சமையல்காரனை முத்தையாவின் வேட்டு விஷயத்தில் எப்படி எதிர் நோக்குவார்?
நினைத்தபோதே அவருடைய முதலாளித்துவ அகங்காரம் ஒரு குலுங்கு குலுங்கியது! இதுவரை சிவக்குமாரிடம் அவருக்கு பிரச்சினை வந்தது இல்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு சிவக்குமாரோடு அவர் இழைந்து கொண்டதில்லை… முதலாளி என்ற ஹோதாவில் கொஞ்சம் விறைப்பாகத்தான் நடந்து கொள்வார்!
சில நெருக்கமான நேரங்களில் சிவக்குமார் அவருடைய மனைவியின் நோய்கள் பற்றியும், மகன்கள் படிப்பு வராமல் பாலக்காடு மெஸ்ஸில் வேலை செய்கிற அவலம் பற்றியும் சொல்லும்போது சபரிநாதன் காதுகொடுத்து கேட்டுக் கொண்டிருப்பார். அவ்வளவுதான்.
ஆனால் அதே சிவக்குமார் பல வருஷங்கள் முன்னால் தான் சொந்த ஹோட்டல் நடத்திக்கொண்டு வசதியாக வாழ்ந்த நாட்களைப் பற்றி பேச ஆரம்பித்தால், சபரிநாதன் “தின்னவேலி வரை போயிட்டு வாரேன், ஜோலியிருக்கு’ என்று சொல்லிக்கொண்டு எழுந்து விடுவார். நிஜமாகவே ஜோலி இருப்பதாகக் காட்டிக்கொள்ள வெறுமே பதினைந்தாம் நம்பர் டவுண்பஸ் ஏறி ஒரு ‘ட்ரிப்’ திருநெல்வேலிக்கு போய் வீம்புக்காக இருட்டுக்கடை அல்வா வாங்கி வருவார். அப்பேர்ப்பட்ட சுயநல ஆசாமி சபரிநாதன்!
சிவக்குமாரிடம் அவரின் சமையல் எத்தனைதான் சுவையாக இருந்தாலும் அதைப் பாராட்டி ஒரு சொல் சொல்லிவிட மாட்டார். அப்படிச் சொன்னால் அடுத்த மாதமே சம்பளத்தைக் கூட்டித்தரச் சொல்லிக் கேட்பான் என்பது அவருடைய அபிப்பிராயம். இது மட்டுமல்ல, ஊர்க்காரர்களிடம், “சமையலா சமைக்கான் அவன், நமக்கு நாதியில்லை. பெருமாள் என்னை இந்த வயசுல இவன் சாப்பாட்டை சாப்பிட வெச்சிட்டான், என்னத்த செய்ய?” என்று சிவக்குமாரின் சமையலைப் பற்றி ஆவலாதி சொல்லி மூக்கால் அழுவார்!
இதனால் சாப்பாட்டு விஷயத்தில் திம்மராஜபுரம்காரர்களுக்கு சபரிநாதன் மேல் ஏகப்பட்ட பரிதாபம். “நெசந்தாவே அண்ணாச்சி சொல்லுறதும், அவுஹளோட வயசுக்கும் அந்தஸ்துக்கும் இப்படியொரு செத்த சமையல்காரன் பண்ணிப் போடற அரைவேக்காட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடணும்னு தலையிலேயா எழுதியிருக்கு?” என்று ஏகப்பட்ட பேர் கடுப்புடன் ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக் கொண்டாலும், அதற்கு சிலரின் ஆணித்தரமான அதிரடிப் பதில், “அண்ணாச்சி தலைலதான் எழுதியிருக்கே!”
இந்தப் பதில் சில நேரங்களில் சபரிநாதனின் காதுகளுக்கும் வந்தது உண்டு. அவரும் அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டதுண்டு. ஆனால் திடீரென்று இப்போது அது ஞாபகத்திற்கு வர, சபரிநாதனுக்கு மஹா கோபம் வந்துவிட்டது. தலையில் எழுதியதை அழிக்கிறதுக்கு எவ்வளவு நேரம்லே ஆகும்? என்று கடுப்புடன் முனகிக் கொண்டார்.
முத்தையாவைக் கொண்டுவிடப் போன சிவக்குமார் இன்னமும் திரும்பி வந்த பாட்டைக் காணோம். அதிகமாகப் போனால் பத்து நிமிடங்களில் போய் வந்து விடலாம். அனால் அவன் போய் இருபது நிமிடங்களாகி விட்டன. முப்பது நிமிடங்களுக்குப் பிறகு சிவக்குமார் திரும்பி வந்தார். சபரிநாதன் பார்வையை உத்திரத்தை நோக்கி உயர்த்திக் கொண்டார். சிவக்குமார் அவரிடம் வந்து சிறிது தயங்கி நின்றார்.
“அடுத்த வாரம் ஊருக்கு போயிட்டு வரலாம்னு பாக்கேன்.”
“எந்த ஊருக்கு?”
“பாலக்காட்டுக்குத்தான்…”
“நீ போயிட்டு வந்து மூணு மாசம் ஆயிட்டா?”
மூன்று நாட்கள் விடுமுறையில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிவக்குமார் தன் ஊருக்கு போய்வரலாம். இது அவர்களுக்கிடையில் எழுதப்படாத ஒரு ஒப்பந்தம். சபரிநாதன் எப்பவும் இந்த ஒப்பந்தத்தை மீறுவதற்குத்தான் பிரியப்படுவார்…
“மூணு மாசத்துக்கு மேலேயே ஆயிப்போச்சி.”
“ரெண்டு மாசந்தான் ஆகுதுன்னு எனக்கு நெனப்பு. அதான் எந்த ஊருக்குன்னு கேட்டேன்.”
“முக்கியமான ஜோலி ஒண்ணு கோயமுத்தூர்ல இருக்கு. அதனால ஒருநாள் கூடுதலா லீவு வேணும்.”
“ஏன் எப்பவும் போல மூணு நாள் லீவு பத்தாதா?”
சிவக்குமார் பதில் பேசாமல் நின்றார்.
“அதென்ன முத்தையாவைக் கொண்டுபோய் விட்டுட்டு வர ஒனக்கு அரை மணி நேரம்?”
“சும்மாதான் பேசிட்டு இருந்தார்.”
“சும்மாதான் என்ன பேசினார்ன்னு கேக்கேன்.”
சிவக்குமார் பதில் சொல்லவில்லை.
“அவர்கிட்ட ரொம்ப பேச்சு வச்சிக்காத, புரியுதா?”
“……………………..”
“சரி, ஊருக்கு எப்பப் போகணும்?”
“வர வெள்ளிக் கிழமை வெள்ளென போகணும்.”
சபரிநாதன் ஒரு சிமிட்டா பொடியை எடுத்து மூக்கில் வைத்து தேய்த்துக் கொண்டார். சிவக்குமாருடன் பேச்சு வார்த்தையை அவர் முடித்துக் கொண்டார் என்பதற்கும்; வெள்ளிக்கிழமை சிவக்குமார் ஊருக்குப் போகலாம் என்பதற்கும் அடையாளம் இது!
சிவக்குமார் சமையல் அறையை நோக்கி நகர்ந்து விட்டார். அவர் போவதையே சபரிநாதன் பார்த்துக் கொண்டிருந்தார். ‘முத்தையா கிழம் என்னவெல்லாம் கதை கட்டி அனுப்பியதோ… பாப்பம்; வேற நல்ல சமையல்காரன் கெடச்சா இந்த சிவக்குமாரை வீட்டுக்கு துரத்தி விட்டுடலாம்…
படுக்கையை போடலாமா என்று நினைத்தார்.
‘கல்லும் கணை கடலும் வைகுந்த வானாடும் புல்லென் றோழிந்தன கொல் ஏபாவம் – வெல்ல நெடியான் நிறங்கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் துள்ளத் தகும்…’ படுக்கும்போது நல்ல மனநிலையில் இருந்தால் நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்தை சப்தமாகச் சொல்லிவிட்டு கட்டையை படுக்கையில் சாய்ப்பார். இன்று அந்தப் பாசுரத்தை சொல்வாரா? சந்தேகம்தான்!
அப்போது அவருடைய மொபைல் சிணுங்கியது. உற்றுப் பார்த்தார். ஏதோ தெரியாத புதிய இலக்கம். எடுத்தார்.
“சபரிநாதன் ஐயாங்களா?”
“ஆமாம். நீங்க யாரு பேசறது?”
“ஐயா நா பாலக்காட்டிலிருந்து பேசறேங்க. சிவக்குமார் சம்சாரம் ரொம்ப சீரியஸா இருக்காங்க… அவர்கிட்ட சொல்லி அவரை உடனே ஊருக்கு அனுப்புங்க ஐயா…”
“சரி. உடனே அனுப்புறேன்.”
மொபைலை அணைத்தார்.
சிவக்குமாருக்கு தனக்கென மொபைல் கிடையாது. ஊரிலிருந்து போன் வந்தால், சபரிநாதனை அழைத்து அவரிடம் விஷயத்தை மட்டும் சொல்லிவிடுவார்கள்.
சிவக்குமாரை உடனே கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார்.
“இனிமேல் பஸ் கிடையாது. நாளைக்கு வெள்ளென கிளம்பறேன்.”
“சரி. பயமில்லைன்னு தெரிஞ்சதும் உடனே கெளம்பி வந்திரு.”
அப்போதும் அவருடைய சுயநலக் குணம்தான் வெளிப்பட்டது.