கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 7,552 
 
 

“நெனச்ச காரியம் நடக்கலே ராணி” என்று சலித்தபடி உள்ளே நுழைந்தக் கணவரை வருத்தத்துடன் பார்த்தாள் காவிரி.

“பாத்துங்க.. தலை இடிச்சுக்கும்.. கவனிங்க” என்று நிலைப்படிக்கு விரைந்து சென்று, கைத்தாங்கலாக அவரை உள்ளே அழைத்து வந்தாள். “ரெண்டு நிமிசம் உக்காருங்க..” என்று அவரை வீட்டின் ஒரே நாற்காலியில் உட்கார வைத்தாள். சுவரோரமாக இருந்த நைந்தத் திண்டுத் தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி எடுத்து வந்தாள். கணவரின் கால்களை உயர்த்தி, “.. ஒரு நல்ல செருப்பு வாங்கிக்கங்கனா கேக்குறீங்களா? வெறுங்காலோட இப்படி வெயில்ல நடக்காதீங்கனு சொன்னா கேக்கணும்..” என்றாள்.

“நீ நல்லாருக்கணும் ராணி” என்று சாய்ந்து வசதியாக உட்கார்ந்து கொண்டவரின் தலைமுடியை லேசாகக் கோதி விட்டாள். சுவரலமாரியில் இருந்த அம்ருதாஞ்சன் புட்டியைத் திறந்து ஓட்டிக்கொண்டிருந்த களிம்பை விரலால் சுரண்டி எடுத்து அவர் நெற்றியில் இடம் வலமாகத் தடவினாள். முந்தானையைக் கயிறு போல திரித்து தலையைச் சுற்றி இறுக்கிப் பிடித்தாள்.

“ம்ம்ம்.. ரொம்ப இதமா இருக்கு ராணி.. உன் கைல இதோ இந்த நேரத்துல இப்படியே போயிடலாமானு தோணுது ராணி” என்றவரின் கண்களில் உருண்ட கண்ணீர்த் துளிகளைக் குனிந்து உதட்டால் முத்தமிட்டுத் துடைத்தாள். “போறதும் வாறதும் நம்ம கைலயா இருக்கு” என்று அவர் நெற்றியில் இன்னொரு முத்தமிட்டாள். முந்தானைச் சுற்றை விலக்கினாள். “டீ போட்டுக் கொண்டாறேன்.. கொஞ்ச நேரம் கண்ணை மூடுங்க” என்றபடி சமையலறைக்குள் சென்றாள்.

வால் பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பிலேற்றினாள். கேஸ் சிலின்டரைத் திறக்கத் திருகிய விரல்கள் வலித்தன. எலும்புச் சேதம் என்ற டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகள் எதையும் வாங்கவில்லை. இருக்கும் வரை இருப்போம் என்ற எண்ணத்துடன் மாத்திரைச் சீட்டை எறிந்து விட்டாள். மெள்ள நகர்ந்து அலுமினிய டப்பாவில் இருந்த டீப்பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள்.

ஆறு மாதங்களுக்கு முன் நேர்ந்த விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடந்த மகளுக்குச் சாப்பாடு எடுத்துப் போக வேண்டும். கால் கிலோ அரிசி இருந்தது. நூறு கிராம் பருப்பு கூட இல்லை. பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்ததாகக் கிடைத்த இரண்டு கத்தரிக்காயும் ஒரு தக்காளியும் இருந்தது. ஒரே ஒரு பச்சை மிளகாய் அழுகத் தொடங்கியிருந்தது. சொட்டுக்களைச் சேகரிக்க, நல்லெண்ணைப் புட்டியைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்தாள். ‘அடுத்த மாசப் பென்சன் பணம் வர இன்னும் பத்து நாள் ஆகுமே? அது வரை இழுத்துப் பிடிக்கணுமே?!’ என்று நினைத்தாள். கத்தரிக்காயும் தக்காளியும் கலந்து பிரியாணி போல செய்யத் தீர்மானித்து, இருந்த அரிசியை குக்கர் பாத்திரத்தில் கொட்டினாள். தண்ணீர் சேர்த்துக் களைந்தாள்.

கொதிக்கத் தொடங்கியிருந்தத் தண்ணீரில் இரண்டு கரண்டி டீத்தூளைச் சேர்த்தாள். கணவனுக்காகப் பதுக்கி வைத்திருந்த ஏலக்காய்ப் பேக்கெட்டிலிருந்து ஒரே ஒரு ஏலத்துகளை எடுத்துச் சேர்த்தாள். டீயும் ஏலக்காயும் சேர்ந்து கொதிக்கத் தொடங்கி வெளியான நறுமணத்தில் ஒரு கணம் லயித்தாள். ‘இன்னும் கொதிக்கட்டும்’ என்றபடி அடுப்பைத் தணித்தாள். திரும்பிப் பார்த்துக் கணவனை நோட்டமிட்டாள். “இதா.. ரெண்டு நிமிசம்.. டீ கொண்டாறேன்..”.

மகளின் நிலை பற்றிக் கேட்க வேண்டும். ‘அவள் ஆஸ்பத்திரிக்கும் பிற செலவுகளுக்கும் பணம் வேண்டும். கடன் வாங்கி வருகிறேன்’ என்று ஒரு வாரமாக அங்கேயும் இங்கேயும் சுற்றினாரே தவிர, யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. பென்சன் பணம் வீட்டுச் செலவுக்கே கட்டிவராத நிலையில் மகளின் ஆஸ்பத்திரி செலவுகளுக்கு எங்கே போவது? படிப்பு முடிந்து வேலைக்கு போக வேண்டிய பெண் இப்படி குலையுயிராய்க் கிடப்பதை எண்ணிக் கலங்கினாள். இனி இவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? ‘ஓட்டுக் கேட்க வந்த போளூர் முத்தரசன் இப்போ அமைச்சராமே? என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்யுறதாச் சொன்னாரே?’

டீப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து விலக்கி, குக்கரை ஏற்றினாள். டீயை வடிகட்டி இரண்டு டமளர்களில் இறக்கினாள். கணவருக்கு அதிகமாக ஊற்றினாள். கணவரை அமைச்சரிடம் உதவி கேட்கச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தாள்.

டீயுடன் கணவரிடம் வந்தாள். “என்னாங்க.. டீ சாப்பிடுங்க.. கண்ணை மூடிப் படுங்கனு சொன்னா நல்லாத் தூங்கிட்டீங்களா? எந்திரிங்க..”.

கணவர் கண்மூடியிருந்தார்.

மருத்துவமனையில் தீர்மானத்தோடு பேசினார்கள். பாக்கிப் பணம் கட்டாவிட்டால் பெண்ணுக்கு மருத்துவம் தொடர இயலாது என்றார்கள். டாக்டரம்மாவைத் தனியாகச் சந்தித்து நிலமையைச் சொன்னாள். “அம்மா.. ரெண்டு மாசம் அவகாசம் கொடுங்கம்மா.. என் புருசன் செத்துப் போயி ஒரு மாசம் கூட ஆவலை.. அவரோட பென்சன் பணம் மொத்தமா வாங்கமுடியும்னு சொல்றாங்க.. அதை அப்படியே கொணாந்து உங்க கிட்டே கொடுத்துடறேன்..”

“பென்சன் பணம் எவ்வளவு வரும்னு சொல்றாங்க?”

“மொத்தமா வாங்கினா ஒரு லட்சம் வரும்னு சொன்னாங்க”

“என்னம்மா இது..! இந்தக் காலத்துல ஒரு லட்சம் மூத்திரத் துணிக்குக் கூடப் பத்தாதே? உங்க ஆஸ்பத்திரி பில் இப்பவே எழுபதாயிரமாச்சே?”

“டாக்டரம்மா.. மனசு வைங்கம்மா.. இந்த நிலமையில இந்தப் பெண்ணை நான் எப்படி வச்சுக் காப்பாத்த முடியும்? காயம் ஆறவே இன்னும் ரெண்டு மாசம் ஆவுங்கறீங்க.. அப்பால அது எழுந்து நடமாட எத்தினி நாளாகுமோ?”

“உங்க பொண்ணு குணமாகி நடமாட ஆறு மாசமாவது ஆகுங்க.. அதுவும் தொடர்ந்து மருத்துவ வசதி கிடைச்சா..”

“அம்மா.. உங்களை தெய்வமாக் கும்பிடறேம்மா.. எதுனா வழி பண்ணுங்கம்மா”

“மன்னிச்சுருங்க காவேரிம்மா.. நான் வெறும் டாக்டர். பணத்துக்கு வேலை பாக்குற தொழிலாளி. எனக்கு சம்பளம் கொடுக்குறது ஆஸ்பத்திரி. அவங்க பணம் வசூல் செஞ்சாத்தானே என்னை மாதிரி ஆளுங்க உங்களை மாதிரி ஆளுங்களுக்கு மருந்து கொடுக்க முடியும்? நேரத்தை வீணாக்காதீங்கம்மா.. ஆஸ்பத்திரி பாக்கியை எப்படித் தீக்கப் போறீங்க?.”

“தெரியிலம்மா.. பென்சன் பணம் வந்தா..”

“அது பத்தாதே? வீடு இருக்குல்லே உங்களுக்கு? அதை வித்துடுங்களேன்?”

“எங்க வீட்டுக்காரரோட தாத்தா கட்டின வீடும்மா.. ஏற்கனவே பசங்களுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டாரு.. அதுங்களும் வித்துக் காசாக்கி எங்கியோ அன்னியமாப் போயிட்டாங்க.. இருக்குறது ஒரு ரூம் ஓட்டுவீடு.. அந்த நாள்ல மாட்டுத் தொழுவமா இருந்துச்சாம்.. இவருதான் மராமத்து செஞ்சு…”

“எவ்வளவு தேறும்?”

“தெரியலம்மா.. யாரு வாங்குவாங்க? ஒரு தடவை பத்தாயிரத்துக்கு கேட்டாங்க..”

“முயற்சி செஞ்சு பாருங்க.. பத்தாயிரம்னா பத்தாயிரம்..”

“பென்சன் பணம் வரமட்டும் எம்பொண்ணை இங்கே வச்சிருக்கச் சொல்லுங்கம்மா.. தயவுசெஞ்சு..”

“அது மட்டும் என்னால முடியாது காவேரிம்மா”.

“நில்லும்மா.. யம்மா..” என்று யாரோ கூவிக்கொண்டிருக்கையிலே விடுவிடுவென்று உள்ளே நுழைந்தாள் காவிரி. அமைச்சர் முத்தரசன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். குரல் கேட்டுத் திரும்பினார். “யாருமா நீ?.. பாலு.. யாரிவங்க..?” என்றார்.

காவிரி அமைச்சர் காலில் விழுந்தாள். “அய்யா.. நீதான் காப்பாத்தணும்”.

“எந்திரிங்கம்மா..” என்றார் அமைச்சர். “என்ன விஷயம்? இப்படி திடுப்புனு உள்ளே வந்து கால்ல விழுந்தா என்ன அர்த்தம்? தொகுதி மக்களுக்குனு வாசல்ல ஒரு ஆபீஸ் வச்சிருக்கேனே? அங்கே புகார் கொடுங்க.. போங்க”

“இல்லய்யா.. எங்க வீட்டுக்கு ஓட்டு கேக்க வந்தப்போ என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்யுறதா சொன்னீங்களே.. அதான் வந்தேன்.. உதவி வேணுமய்யா..”

“யாரம்மா நீ? எந்திரிம்மா.. பாலு.. ஏ பாலு.. எங்கே ஒழிஞ்சான்.. ஒக்காலோழி பாலு.. எந்திரிம்மா..”

அதற்குள் பாலு ஓடிவந்து, “மன்னிச்சுருங்க.. அம்மா ஷாப்பிங் செண்டர் போவணும்னாங்க.. வண்டி ஏற்பாடு செஞ்சு ஓடியாறதுக்குள்ள இந்தம்மா…” என்றார். காவிரியிடம் “யாரும்மா நீ? என்ன வேணும்? ஆபீசுக்குள்ளாற உக்காருங்க.. உங்களுக்கு என்ன தேவைனு சொல்லுங்க” என்றார்.

காவிரி எழவில்லை. “ஐயா.. எம் பொண்ணு ஆஸ்பத்திரிலே கெடக்குய்யா..”

அமைச்சர் கொதித்தார். “சாவுகிராக்கி.. பாலு.. இந்தம்மாவை இழுத்துட்டுப் போ.. இல்லே உன்னை செருப்பால அடிப்பேன்.. யாருனா ப்ரெஸ் ஆளுங்க பாத்துறப் போறாங்க.. சீக்கிரம்.. யம்மா.. எழுந்து போம்மா. அஞ்சோ பத்தோ கொடுக்கச் சொல்றேன்” என்று வேட்டியை இழுத்துக் கொண்டு மாடியறைக்குத் தாவினார் அமைச்சர்.

பாலு அமைதியாக, “நீங்க வாங்கம்மா.. விவரமா என் கிட்டே சொல்லுங்க.. இப்படி திடுப்புனு உள்ளே ஓடியாந்தா எல்லாருக்கும் பிரச்சினை” என்று காவிரியை எழுப்பி, ஆபீசுக்கு அழைத்துச் சென்றார். ஒரு பாட்டில் குளிர்ந்த பிஸ்லெரி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். “சொல்லுங்கம்மா.. இப்ப எங்க இருக்காங்க உங்க பொண்ணு?”

“ஐயா.. எம்பொண்ணுக்கு பத்தொன்பது வயசு.. படிப்பு முடிச்சு கால் சென்டர் வேலைக்குப் போன மொத நாள் ராத்திரி யாரோ நாலு தடிப்பசங்க துரத்தினாங்கனு பயந்து ஓடி, எதிர்ல வந்த லாரில மோதி விழுந்திருச்சுய்யா.. லாரி அவ இடுப்புல ஏறி…” அழுதாள். “எம்பொண்ணோட வாழ்க்கையே நாசமாயிடுச்சு.. எழுந்து நடக்க ஆறு மாசமாவுங்கறாங்க.. ஆஸ்பத்திரி பில் லட்ச ரூவா கிட்டே ஆயிருச்சு.. பணம் கட்டலின்னா மருந்து கிடையாதுனு சொல்லிட்டாங்க.. வீட்டுக்குக் கூட்டியாந்து வைத்தியம் பாக்க வசதியில்லையா.. புருசனும் போன மாசம் இறந்துட்டாரு.. பென்சன் பணம்…” காவிரியால் பேச முடியவில்லை. அழுகையும் துக்கமும் அடைத்தது. சற்று நிதானித்தாள். “அமைச்சரய்யா எங்க வீட்டுக்கு ஓட்டுக் கேக்க வந்தாரு.. அப்போ எங்க நிலமையைக் கேட்டு.. நீங்க கூட இருந்தீங்களா தெரியாது.. எங்களுக்கு எந்த உதவி வேணுமுன்னாலும் செய்யுறதா தெருவுல மைக் போட்டு பேசினாரு.. எங்க வீட்டுக்கு வந்து என் கையால ஒரு கப் டீ குடிச்சுட்டுப் போனாரு.. அவசியம் உதவி செய்யுறதா..”

பாலு மறித்தார். “அம்மா.. அதெல்லாம் தேர்தல் நேரத்துல எல்லா வேட்பாளருங்களும் சொல்லுறது தான். அதுக்காக தொகுதி மக்கள் அத்தனை பேரும் இப்படி லட்ச ரூவா பிரச்சினையோட வந்தா அவரு எங்கே போவாரு சொல்லுங்க? துண்டு போடக்கூட காசில்லாம ஓட வேண்டியது தான்.. உங்க நிலமை புரியுது.. என்னால் முடிஞ்சதை செய்யுறேன்.. இப்போ நீங்க போயிட்டு வாங்க.. டேய் கிரி.. இங்க வா.. இந்தம்மாவை கார்ல அவங்க வீட்டுல ட்ராப் செஞ்சுட்டுத் திரும்ப வா..” என்றார். “போய் வாங்கம்மா”.

“அப்படிச் சொல்லாதீங்க.. ஐயா..”

“தொந்தரவு செய்யாதீங்க.. இதா.. மேடம் ஷாப்பிங் கெளம்பிட்டிருக்காங்க.. நான் கூடப் போய்..” என்பதற்குள் “பாலு.. பாலு” என்ற குரல் கேட்டுத் திரும்பினார். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் திருமதி முத்தரசன். “யாரிந்தம்மா?”

“போய் வாங்கம்மா.. இப்போ எனக்கு வேலையிருக்கு..” என்று காவிரியைத் தள்ளாதக் குறையாக வெளியேற்றினார் பாலு.

வீடு திரும்பியக் காவிரிக்கு அழுகை வரவில்லை. ஒரு தீர்மானத்தோடு செயல்பட்டாள். பக்கத்து வீட்டுத் தோட்டத்திலிருந்து அரளி விதைகளையும் எறுக்கம்பூவையும் எடுத்துவந்தாள். அரைத்து விழுதாக்கி சமைத்து வைத்திருந்த அரிசியில் சேர்த்தாள். வரும் வழியில் கடையில் வாங்கி வந்த கால் கிலோ வெல்லத்தூளையும் நூறு கிராம் நெய்யையும் சேர்த்தாள். கிண்டியெடுத்து ஒரு டிபன் பெட்டியில் அடைத்தாள்.

ஆஸ்பத்திரியில் மகளின் முகத்தை வருடினாள். “கண்ணு.. உனக்குப் பிடிச்ச வெல்லக்கூழ் செஞ்சு கொண்டாந்தேன்..”. பேச முடியாத மகள் தலையாட்டினாள்.

“வாயத் தொறடா கண்ணு.. அம்மா கையால ஊட்டினா வெல்லக்கூழ் இன்னும் தித்திக்கும் பாரு..” என்றாள். வாய் திறந்து காத்திருந்த மகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக்கூழ் ஊட்டினாள். சாப்பிட்ட மகள் அயர்ந்து கண் மூடும் வரை காத்திருந்தாள். போர்வையை முகம் வரை இழுத்துப் போர்த்தினாள். முகத்தை வருடினாள். “தூங்குடா கண்ணு.. வீட்டுக்குப் போனதும் இன்னிக்கு நானும் வெல்லக்கூழ் சாப்பிடப் போறேன்” என்றாள் மெதுவாக. எங்கிருந்தோ அழுகை வெள்ளமாய் வந்தது.

வீடு வந்தக் காவிரி, கணவரின் நாற்காலியில் சாய்ந்து ஓய்ந்தாள். ஒரு மணிக்கு மேல் அமைதியாகச் சாய்ந்திருந்தாள். மெள்ள எழுந்து சமையலறைக்குச் சென்று மிச்சமிருந்த வெல்லக்கூழை எடுத்து வந்தாள். ஒரு பிடி உருட்டி விழுங்கினாள். கணவரை நினைத்தாள். இன்னொரு பிடி உருட்டி விழுங்கினாள். மகளை நினைத்தாள்.

அடுத்த பிடி உருட்டும் பொழுது வாசல் கதவைத் தள்ளிக் கொண்டு நுழைந்தார் பாலு. அவரைத் தொடர்ந்து அமைச்சரும் அவர் மனைவியும். “காவிரிம்மா.. நாங்க ரொம்ப நேரமா வந்து போயிட்டிருக்கோம்.. ஆளைக்காணோமேனு பாத்தோம்.. எங்கே போயிருந்தீங்க?” என்றார் பாலு.

“அம்மா.. காலைல நீங்க வந்தப்போ சரியாப் பேசாம போனதுக்கு மன்னிச்சுருங்க.. அது அரசியல்.. அப்படித்தான் இருக்கும்.. அதுக்குப் பின்னால நானும் மனுசன் தாங்க.. எனக்கும் உங்களை மாதிரியே கொழந்தை குட்டிங்க..” என்றார் அமைச்சர்.

“ரெண்டு பெண்ணுங்க” என்றார் திருமதி.

“உங்க பிரச்சினையைப் பத்தி பாலு சொன்னாரு. மைக் போட்டு பேசினது உங்களுக்கு மட்டுந்தான் நினைவிருக்கும்னு நெனச்சுட்டீங்களா? எனக்கும் நினைவிருக்கம்மா.. என்னா.. அரசியல் சுழற்சிலே மாட்டிக்கிட்டேன்.. ஒண்ணும் கவலைப்படாதீங்க.. பாலு எல்லாம் சாரிச்சு உங்க ஆஸ்பத்திரி கணக்கை நாளைக்கே தீர்த்த்துடுவாரு.. உங்க மகள் குணமாகி வரமட்டும் ஆஸ்பத்திரி செலவை நாங்க பாத்துக்குறோம்.. உங்க வீட்டுச் செலவுக்கு உதவித்தொகையா மாதா மாதம் பணம் ஏற்பாடு செஞ்சுடறேன்..”

“உங்க பொண்ணை நான் அடிக்கடி வந்து கவனிச்சுக்குறேன்” என்றார் திருமதி.

“இப்ப சந்தோசம் தானே காவிரிம்மா?” என்றார் பாலு. “காவிரிம்மா..”.

– 2012/06/03

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *