கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 1,981 
 
 

வருடம் : 2023

நூ காவாலயா….காவாலயா…என மகள்கள் பாடிக்கொண்டும்,அம்மாவிடம் (என்மனைவி) தமன்னாவை போல் ஆடிக்காட்டியும் குதுகலித்துக் கொண்டிருந்தனர். விஜய் ரசிகைகளான இவர்கள் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு வரை “நான்…ரெடி தான் வரவா.,அண்ணன் நா இறங்கி வரவா”.என பாடி, ஆடி கொண்டிருந்தவர்களை, இதுவரை பார்த்திடாத, புது மாதிரியான(?) உடை உடுத்தியும், ஆடியும், பெரியவர் முதல் சிறியவர் வரை தன் பக்கம் ஈர்த்து கொண்டிருந்த தமன்னா. என் மகள்களை தாண்டி, உலகெங்கும் பல யுவன், யுவதிகளையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பல ரீல்ஸ்கள் மூலம் தெரிந்துக்கொள்ள முடிந்தது.

நான் தீவிர கமல் வெறியன் என்பதால், அது ரஜினி படத்தின் பாடல் என்பதாலும், அந்த பாட்டின் மீது பெரிதாக லயிப்பு ஏதும் எனக்கு ஏற்படவில்லை. என் கவனமெல்லாம் தொழில் மேல் அதிக அளவு இருந்தாலும், சமயங்களில் மொபைல் போனில் முகநூல் பார்த்து பொழுதை கழிப்பதுண்டு.,அவ்வகையில் ஒருநாள் முகநூல் பக்கங்களை விரல்களால் தள்ளி பார்வையிட்ட போது. என் நட்பு வட்டத்தில் யாரோ ஒருவர் பின்தொடர்ந்த ஒரு பக்கத்தில் “கண்யாகுமாரி கனபடடா தாரி, கய்யாலமாரி படதாவே ஜாரி, பாதாளம் கனிபெட்டேலா, ஆகாஷம் பனிபெட்டேலா”- என தெலுங்கு பாடல் ஒன்றை SPB சரணும், பாடகி ஒருத்தியும், மேடை கச்சேரியின் ஒளிப்பதிவில் பாடிக்கொண்டிருந்தனர்.

அர்த்தம் புரியவில்லை என்றாலும், கேட்க இனிமையாக இருந்தது. கூடவே இது… சுனிதா அதிகாரப்பூர்வ பக்கம் “Sunita upadrasta official” என்றிருந்ததை கவனித்தேன். ‘சுனிதா’ என்றதும் சற்று திடுக்கிடவும், ஏதோ இனம் புரியாத மகிழ்வும், ஆரவாரமும் மனதில் தோன்றவே, பக்கத்தை க்ளிக் செய்து தொடர்ந்தேன், பல வீடியோவில் இதே பெண்மணி தான் பல பாடல்களை பாடியுள்ளார். ஆகவே இந்த பெண்மணி தான் சுனிதா என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டேன். உடனே இந்த sunita official பக்கத்தை பின்தொடர ஆரம்பித்தேன். பாடல்கள் கேட்க அல்ல, ‘சுனிதா’என்னும் பெயருக்காக மட்டுமே. அன்றிலிருந்து முகநூலில் வேறு எந்த வீடியோக்களையும் பார்ப்பதில்லை.


சமையல் கலைஞர்களுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்யும் தொழிலில் எப்போதும் போல் நான் பிஸியாக இருந்துக் கொண்டிருந்தேன்.

நண்பர்களின் ஆலோசனையின் பேரில் புதிதாக ஒரு அசைவ ஹோட்டல் திறக்க திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்கான ஆயத்த பணிகள் ஒருபக்கம் போய்கொண்டிருக்க, கிடைக்கும் நேரத்தில் முகநூலில் ‘சுனிதா’வின் பாடல்களை கேட்க மறப்பதில்லை. எத்தனை பாடல்கள் கேட்டாலும். முதன்முறையில் நான் பார்த்து கேட்ட

“கண்யாகுமாரி கனபடடாதாரி” பாடலை மட்டும் அடிக்கடி கேட்க தோன்றுகிறது. இந்த பாடலை பற்றி (மட்டும்) என் மனைவியிடம் சொல்ல.

ஆமா…நாம தெலுங்கு பேசுற பேமிலி பாரு…தெலுங்கு பாட்டு மட்டும் தான் கேட்பீங்க -என நக்கலடித்து தொடர்ந்தாள். நானும் கொஞ்ச நாளா பார்த்திட்டு தான் வரேன்.நீங்க இந்த பாட்டை தான் பார்த்து,கேட்டுக்கிட்டே இருக்கீங்க.அப்படி என்ன தான் புரிஞ்சுது,நல்லாயிருக்கு ?என்றவளிடம் எப்படி சொல்வேன்.,இது பாட்டுக்காக அல்ல, ‘சுனிதா’என்னும் பெயருக்காக என்று.இருந்தும் அவளிடம்

புரிந்தால் என்ன புரியலைன்னா என்ன?

பாட்டு கேட்குறதுக்கு நல்லா இருக்கு, அதோடு இசையும் நல்லாயிருக்கு அதான். நல்லதை ரசிக்கனும்,ஆராயக்கூடாது. …ம்…இப்போ சொல்லு, “நூ…காவாலயா….காவலயா”ன்னா என்ன அர்த்தம், பீட்ஸ் படத்துல வர

“மலம பித்தா, பித்தாதே”-ன்னு ஓரு பாட்டு ஹிட் ஆச்சே இதுக்கெல்லாம் அர்த்தம் சொல்லு என்றதும் முறைப்புடன் சமையல் அறை நோக்கி நகர்ந்தாள்.

எனக்கும் நிறுவனத்திலிருந்து தொலைபேசி வந்ததால் கிளம்பிட்டேன்.


என்ன தான் குடும்பம்,தொழில்ன்னு பிஸியாக இருந்தாலும்,கொஞ்ச நாட்களாகவே. ‘சுனிதா’ன்னு பேரை பார்த்ததிலிருந்து,மைண்டுல டிஸ்டர்பு (Disturb) இருக்க தான் செய்யுது ஏன்னா…சுமார் முப்பது வருஷமாக இந்த பேரை கேட்கவும் இல்லை, அந்த பேர் இருக்குற பெண்ணை பார்க்கவும் இல்லை.

இரவு. 9:30 மணி

நிறுவனத்திலிருந்து வீடு திரும்பி,குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு அருந்திய பின் மனைவி குழந்தைகளுடன் பேசி,மகிழ்வித்து,

ஸ்கூல் போகனும், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேணும் …நேரமாச்சு படுங்கள்.,என படுக்க வைத்ததும்,

உறங்கி விட்டனர். மனைவியும் வேலை அலுப்பில், படுத்ததும் உறங்கி விட்டாள்.

உறக்கம் வராமல் disturb ஆக இருந்த இந்த நேரத்தில். முகநூலில் சுனிதா-ன்னு தட்டச்சு செய்து பார்த்தேன். ஆயிரம் சுனிதா தெரிகிறார்கள். நான் ஆவலோடு தேடும் அந்த சுனிதா மட்டும் தென்படவில்லை.

அப்படி இப்படி என மணி பதினொன்றரை ஆகிவிட்டது.கண்கள் இருக ……(!)

வருடம் : 1980 களில்

வீட்டின் அருகாமை என்பதாலும்,நல்ல பள்ளி என்பதாலும் என்னை ஆண்கள் மற்றும் பெண்கள் பயிலும் இருபாலர் மேல்நிலை பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டிருந்தனர்.


ஏழாம் வகுப்பு வரை மாணவர்களையும், மாணவிகளையும் ஒன்றாக பெஞ்சில் அமரவைத்துவிட்டு,எட்டாம்

வகுப்பிலிருந்து,மாணவர்களை ஒரு பக்கமாகவும்,மாணவிகளை மற்றொரு பக்கம் அமர வைத்தனர். அதுவரை எந்த மாணவ,மாணவிகளுக்கும் மனதளவு

கூட தவறான கண்ணோட்டமோ, சிந்தனையோ, பால்ஈர்ப்போ ஏற்படவுமில்லை, ஏனெனில் …விபரம் தெரியாத சிறு வயது என்பது கூட காரணமாக இருக்கலாம். வருடங்கள் இரண்டு கடந்தும் போனது

வருடம் : 1990

ஆண்டு விடுமுறைக்கு பின். இவ்வருடம் பத்தாம் வகுப்பு.,எனது வகுப்பறைக்கு புதிதாக ஒரு பெண் மாணவியாக சேர்ந்தாள்.நன்கு அடர்த்தியான நீள்முடி, பெரியதும் இல்லாமல்,சிறியதுமில்லாத ஒளிவீசும் கண்கள், கச்சிதமான மூக்கு, வெள்ளை உருவம். ஒல்லியான தேகம், நடிகை நதியா முக சாயலில் இருந்தாள்.

அவளிடம்…வேணி டீச்சர் விசாரித்தார்.

உன் பேரு என்னம்மா ?

“சுனிதா”

அப்பா, அம்மா என்ன பண்றாங்க ?

அப்பா ரயில்வே பணியாளர்.

அம்மா இல்லத்தரசி. மேம்

போன வருஷம் எங்கே படிச்ச ?

இவ்வளவு வருஷம் சி.பி.எஸ்.இ பள்ளியில் படிச்சேன். டென்த்(பத்தாவது)-ல, நல்ல ஸ்கோர் பண்ணனுங்கிறதால அப்பா இங்கே சேர்த்து விட்டார் என்றவளை பார்த்துக்கொண்டே இருந்தேன். அவள் டீச்சரிடம் சொன்ன தகவல்கள் எதுவும் என் காதில் விழவே இல்லை.

குட்….இந்த வகுப்புல, எல்லாருமே நல்லா படிக்கிறவங்க தான். முக்கியமா ஐந்து பேர் ரொம்ப நல்லாவே படிப்பாங்க. அதுல பிரவீன் என்னும் என் பெயரையும், சக நண்பன் ஜெபஸ்டீன் ஐசாக், பார்வதி, புவனா, ரேகா பெயரையும் குறிப்பிட்டு மாநில அளவில இல்லாட்டியும் பள்ளியிலாவது யார் முதல் அதிக மதிப்பெண் வாங்கறீகன்னு பார்க்கலாம். என பாடம் எடுக்க தொடங்கினார். நான் போர்டையும், சுனிதாவையும் மாறி,மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் அருகே இவள் அமர்ந்திருந்ததால், நான் அடிக்கடி பார்ப்பதை பார்த்துவிட்டு, என்னை கண்டு புன்னகைத்தாள். எனக்கு மின்சாரம் பாயந்த அதிர்ச்சியும், ஆனந்தமும், அடிக்கடி வந்து போனது.

இத்தனை ஆண்டுகள் பல பெண் பிள்ளைகளுடன், சேர்ந்து அமர்ந்து படித்தும் வராத ஒருவித ஈர்ப்பு எனது உள்ளம் எனும் காந்தம் “சுனிதா”வை மிக சுலபமாக கவ்விக்கொண்டது. பள்ளியில்

பயிலும் ஒட்டுமொத்த மாணவியர்களில் சுனிதா மட்டுமே தேவதையாக தெரிந்தாள்.இவள் என் வகுப்பில் இருக்கிறாள் என்னும்போது எனக்கும், அவளுக்கும் ஏதோ பந்தம் இருப்பது போல் என்னவள் என்கிற கர்வமே வந்தது.


ஒருநாள்…மெல்ல பேச தொடங்கினாள்.

‘பிரவீன்’ என்றதும். எனக்கு தொண்டை உலர்ந்து விட்டது. விக்கித்துவிட்டது. புன்னகை பூ மட்டும் உதிர்த்தவள் இன்று பெயரை சொல்லி பூமாலை அணிவிக்கிறாளே என்பதால் ஆனந்தம்.

பாட சம்மந்தமாக,சில சந்தேகம் கேட்டாள்.பதில் தந்தேன். இது தொடர்ந்தது,சில சமயம் நானும் கேட்பேன் அவளும் விளக்குவாள். க்ரூப் ஸ்டெடீஸ்.செய்தோம். எங்கள் நட்பு இறுகி,இறுகி,காதலாய் மாறியது.

வகுப்பு தோழர்களுக்கும், தோழிகளுக்கும்,விஷயம் தெரிந்தும், பள்ளி தலைமைக்கும், எங்கள் இருவரது வீட்டினர்க்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். லஞ்ச் பீரியடிலும், மாலை பள்ளி விட்டதும், வானில் பறக்கும் ஜோடி பறவைகளாக,

சாலைகளிலும், சாட்(chat) கடைகளிலும்,விடுமுறையில் தியேட்டர்களிலும்,சுற்றி திரிந்தோம். இருந்தாலும் படிப்பில் எவ்வித குறைப்பாடின்றி

பொது தேர்வில் ‘சுனிதா’ பள்ளியில் முதல் மாணவியாகவும்,நான் இரண்டாம் மாணவராகவும் தேர்ச்சி பெற்று, வேணி டீச்சர் சொன்னதை நிறைவேற்றினோம்.

பதினோராம் வகுப்பில், வேறு வேறு பாடபிரிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சேர்ந்தாலும்.எங்கள் காதல் தொடரவே செய்தது. இம்முறை கோயில், தியேட்டர், பார்க், பீச் ஹோட்டல், என கூடுதல் இடங்களில் பகுதியாக பொழுதை கழித்துக்கொண்டிருக்க,

ஒருமுறை சமோசா சாப்பிட ஆசைப்பட்டவளை அழைத்துகொண்டு பிரபல கடையில் வாங்கி சாப்பிட கொடுத்துவிட்டு,நான் சென்னா ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தேன். ஊசி போன வாடை வந்ததால், கோபம் கொப்பளிக்க சண்டை போட்டேன். என்னய்யா கெட்டு போனதெல்லாம் கொடுக்குறீங்க, சாப்பிட்டு உடம்புக்கு எதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்றது.? என்றதும் காசை திருப்பி கொடுத்து, இனிமேல் இங்கே வராதே என கடிந்து கொண்டானே தவிர, அவன் ஊசி போனதை தந்ததற்காக எந்த வித அனுசரனையான பதிலோ, மன்னிப்போ தெரிவிக்கவில்லை. நாங்களும் இனிமேல் இங்கே ஏன் வரப்போறோம்ன்னு சொல்லி அந்த இடத்தை விட்டு நகர, இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த வழிபோக்கர் ஒருவர். தம்பி…இவனுங்க முதல் நாள் இரவு மிச்சம் ஆவதையெல்லாம் மறுநாள் பண்டத்தோட கலந்திடுவானுங்க போலிருக்கு. எனக்கும் இதே கடையில இதே அனுபவமும், நிலைமையும் ஏற்பட்டிருக்கு. இவனுங்க எல்லோரையும் சும்மா விடக்கூடாது. இவனுங்கெல்லாம் முறையான புட்(food) லைசென்சு எடுத்து இருக்காங்களான்னு தெரியல. என்றபடியே கடந்து சென்றார்.


நாட்கள் பல கடந்து, இரண்டாம் ஆண்டில் பன்னிரெண்டாம் பொதுதேர்வு எழுதி, சுனிதா விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டாள். எனக்கு சொந்த ஊர் என்பது சென்னையே !அதனால் நான் எங்கேயும் செல்லவில்லை.

ஒரு திங்கட்கிழமை காலை 10:00மணி.

ரிசல்ட்க்காக தினதந்தியின் ஸ்பெஷல் எடிசனை வாங்க பள்ளி அருகே இருக்கும் பெட்டி கடையில் இருந்த மாணவ,மாணவிகளில் நானும் ஒருவன். அப்போதும் ‘சுனிதா’ வை காணவில்லை.பேப்பரில் சுனிதாவின் எண் இருந்தது.எனது எண் காணவில்லை. காரணம் நான் முதல் முறையாக தோற்றுவிட்டேன். தேர்வு எழுதும் போதே தோற்றுவிடுவேன் என உள்மனது சொல்லியிருந்தது. ஏனெனில் உள்ளமெல்லாம் ‘சுனிதா’வே நிரம்பி இருந்ததால். இப்போது கூட பரிட்சையில் தோல்வி கண்டதால் வருத்தப்படவில்லை.இவளை காணவில்லையே,எப்படி, எப்போது பார்ப்பது என நினைப்பும், எண்ணமும் தான் மேலோங்கி இருந்தது.


வருடம் : 1993

நான் தோல்வியுற்ற பாடத்தை மறு தேர்வு எழுதி, பாஸாகி,ஒரு ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து மூன்று ஆண்டுகளில் B.com முடித்தேன். வேறு வேலைக்கு எதுவும் போக வேண்டாம்.என் நிறுவனத்தை நீயே பார்த்துக்கோன்னு அப்பா என்னிடம் ஒப்படைத்துவிட்டார்.

உயிருக்குயிராய் காதலித்த காதலி, காணாது போனதால், கொஞ்ச நாள் கலங்கி இருந்தேன். காலம் மாறுதலால், காதலியும்,காதலும் மறந்து போனது.

தொழிலை கவனிக்க தொடங்கி, ஐந்து ஆண்டுகளில் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் முடித்தேன். திருமணமே வேண்டாம் என்றிருந்த எனக்கு பெற்றோர் நச்சரித்து,வற்புறுத்தியும், சம்மதம் கொடுத்ததால் பெண் பார்க்க தொடங்கி சரிவர எந்த பெண்ணும் அமையாமல் எனது முப்பதாவது வயதில் தான் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.


காலை மணி 7:30

என்னங்க….எழுந்திரிங்க, மணி 7.30 ஆகபோகுது.இன்னும் என்ன தூக்கம். என மனைவி எழுப்பினாள்.எழுந்ததும்

என்ன இன்னிக்கு… இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருந்தீங்க என்றவளிடம்.

நீங்க எல்லோரும் நைட் சீக்கிரம் தூங்கிட்டீங்க …எனக்கு என்னம்மோ தூக்கமே வரலைன்னு, செல் பார்த்திட்டே இருந்திட்டு,தூங்க லேட்டாயிடுச்சு.என்றேன்.

என்னமோ… கொஞ்ச நாளா,போக்கே சரியில்ல செல் பார்க்குறது கூடிபோச்சு.

குறைச்சுக்குங்க என்று உபதேசம் செய்தாள் தர்மபத்தினி.

மனைவி சொல்வது சரிதானோ? முப்பது வருட இடைவெளிக்கு பிறகு, ‘சுனிதா’ன்னு பேரை எதுக்கு பார்க்கனும்,இப்படி மனசை அலைய விடனும்.?என எனக்குள்ளே கேள்விக்கேட்டு குளிக்க சென்றேன்.

வந்ததும்,தயார் நிலையில் இருந்த காலை உணவருந்தி விட்டு, கிளம்பி,பிள்ளைகளை பள்ளியில் கொண்டு விட்டு நேராக எனது நிறுவனத்துக்கு சென்று விட்டேன்.நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹோட்டல் திறக்க எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (fssai)சர்டிபிகேட் வாங்க வேண்டுமென நியாபகப்படுத்த.

ஆமா..ல்ல… கவர்ன்மெண்ட் ஆபிஸ்ல எல்லாம் பத்தரை மணிக்கு தான் வருவாங்க. நாம பதினோரு மணிக்கு கிளம்பலாம். வந்துட்ரீயா? என்றேன்.

இல்லப்பா…எனக்கு கொஞ்சம் வேறு வேலை இருக்கு,நான் வரலை,நீயே பார்த்திட்டு வந்திடு -என்றான்.

சர்டிபிகேட் எப்படி வாங்குவது,யாரை போய் பார்ப்பது என புரியாமலே,

“உணவுப்பாதுக்காப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் இந்தியா” என்னும் அலுவலகத்தை எப்படியோ கண்டுப்பிடித்து, சில படிக்கெட்டுகள் ஏறி சென்றடைந்தேன். கூட்டம் பெரிதாக இல்லை.நிறைய டேபிள் போடப்பட்டு கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள்.,அதில் ஒருவரிடம் சென்று விசாரித்தேன்.,

சில விபரங்களை சொன்னார்.கேட்டு திரும்புகையில் சட்டென கவனித்தேன். மரகதவில் பாதி கண்ணாடி பதிக்கப்பட்டு உள்ளிருப்பவர் முகம் தெரியும் படியான ஒரு அறை.

அதில் ஒரு பெண்மணி இருந்தார் அதிகாரி போலும்.எங்கேயோ பார்த்த முகம் மாதிரி தெரிகிறது.கதவுக்கருகே சின்னதாக பெயர்பலகை.

“சுனிதா பாசுப்பிரமண்யம். B.tech food technology” என்றிருந்ததை பார்த்ததும் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியானேன். சுனிதாவா…இல்லை சுவேதா வா சந்தேகம் வந்து, கண்களை கசக்கி பார்த்து,எழுத்தை ஒவ்வொன்றாக படித்து பார்க்க “சுனிதா” என்றே இருந்தது. எங்கேயோ பார்த்தது போல் இருப்பதால். என் காதலியாக தான் இருக்குமோ? போய் பேசலாமா, ஆடவிட்ட ஊஞ்சலாய் மனம் அங்கும், இங்குமாக சென்று வந்தது. சரி போய் தான் பேசுவோமே தெரிஞ்சுப்போமே என கதவருகே சென்றதும். அங்கிருந்த அலுவலக அட்டெண்டர் ஒடி வந்து,

சார்…சார்…என்ன வேணும் ?

மேடத்தை பார்க்கணும் என்றேன்.

மேடத்தையா…? எதுக்கு

ஒரு விஷயமா பார்க்கணும் .அதான் …

என்ன விஷயமா?எந்த விஷயமாக இருந்தாலும் அதோ…அங்கே ஐந்தாவதா ஒருத்தார் உட்கார்ந்திருக்காரே,அவரை போய் பாருங்க. அவரே எல்லாத்தையும் சொல்லுவார். என்றவரிடம்

இல்லை…பர்சனலா மேடத்தை தெரியும் அதனால தான் என்றேன்.

அப்படியெல்லாம் பெர்சனலாக பார்க்கமுடியாது என தேளாக மாறி கொட்டிக்கொண்டிருந்தான். அந்த நேரம் அறையிலிருந்து அழைப்பு மணி வர பதறி உள்ளே சென்றவன்.

நொடிபொழுதில் திரும்பி, என்னை உள்ளே அனுமதித்தான்.(கண்ணாடி வழியாக கவனித்திருப்பாள் போலும்)

கதவை தட்டி,

வரலாமா மேடம்…என நேராக ‘பார்த்தேன்’.

எஸ் ப்ளீஸ்…உட்காருங்க என என்னை ஏறிட்டு பார்த்தாள்.

‘அமர்ந்தேன்’

அடையாளம் கண்டு, சில நொடிகள் கண்கள் மட்டுமே பேசி கொண்டன.

“சுனிதா”என உரிமையாக கூப்பிட தயங்கியே. எப்படி இருக்கீங்க? என்றேன்.

பதிலுக்கு அவள்…என்ன? எப்படி இருக்கீங்க ன்னு,மரியாதையெல்லாம். சுனிதா எப்படி இருக்கேன்னு கேளு. ஆமா நீ எப்படி இருக்கே? -என்றதும்,

என் கண்களிலிருந்து கலங்க ஆயத்தமானது.

ஏய்….பிரவீன்.என்ன இதெல்லாம்? என்றதும். காதலித்த போது இப்படி என் பெயரை செல்லமாக அழைத்தது மின்னல் போல் வந்து போனது.

திரும்பவும் அழைப்பு மணியை அழுத்தி அட்டெண்டரிடம் இரண்டு காபியை எடுத்து வரச்சொல்லி. இன்னும் அரை மணி நேரம் யாரையும் விட வேண்டாம் என கட்டளையிட்டாள். காபி வருவதற்குள், பழங்கதையை பரிமாறிக்கொண்டோம் அவளுடைய கண்களிலிருந்து உண்மையாக கண்ணீர் வழிய, மேஜையிலிருந்த டிஸ்யு பேப்பரால் கண்களையும், மூக்கையும் துடைத்துக்கொண்டாள். நாம காதலித்த காலத்தில் இப்போ இருப்பது போல் செல்போன் வசதி இருந்திருந்தால், நாம… பிரிய வாய்ப்பு இருந்திருக்காது. என்ன செய்வது? எல்லாம் நம்ம விதி என சொல்ல, காபியும் வந்தது. அருந்திக்கொண்டே பேச்சை தொடர்ந்தோம். மேல் படிப்பு, கல்யாணம் பற்றிய தகவல் பகிர்ந்தாள். கணவர் தூரத்து உறவினராம், மற்றும் வங்கி அதிகாரியாம். இரண்டு மகனாம், ஒருவன் அமெரிக்காவில் பணியிலும்,சின்னவன் ஆஸ்திரேலியாவில் படிக்கிறானாம். என்னை பற்றி விசாரித்தாள். திருமண நடந்த வருடத்தையும், மனைவி பற்றியும் இரண்டு மகள்களில் பெரியவள் இவ்வருடம் பதினோராம் வகுப்பும், இளையவள் ஒன்பதாம் வகுப்பு படிப்பதையும் தெரிவித்தேன்.

எதற்காக இங்கே வந்தேன் என்ற விவரத்தையும் சொன்னோன். ஊசிபோன சென்னாவுக்காக நாம அந்த கடைக்காரரிடம் சண்டை போட்டதை நினைக்கூர்ந்து. அது மாதிரி வேறு யாராவது உன்கிட்டே சண்டைக்கு வந்திடக்கூடாதுன்னு பயத்துல எடுக்குறீயா.-என கிண்டலாக சொல்லி சிரித்து விட்டு. சரி…சரி….சீக்கிரம் சர்டிபிகேட் தர ஏற்பாடு செய்யுறேன்னு வாழ்த்துகளை சொல்லிவிட்டு. என் கணவரோடு உன் ஹோட்டலுக்கு வரட்டுமா ?-கேட்டாள்.

பதிலுக்கு நான்…சோதனை அதிகாரியாக வராதே., சாப்பிட கஸ்டமரா வா. என்று (சிரித்தோம்)விடைபெற்று திரும்பி பார்த்தேன். பெயர் பலகையை …”சுனிதா” என் பழைய காதலியாக இல்லாமல் பாலசுப்பிரமணியம் என்பவரின் மனைவியாகவும், கவுவரமிக்க அரசு அதிகாரியாக தெரிந்தாள்.


சில நாட்களுக்கு பின்.

வெற்றிக்கரமாக ஹோட்டல் திறக்கப்பட்டு, எனது அறையின் சுவற்றில் fsssai சர்டிபிகேட்டின் கீழ் பகுதியில் “சுனிதா பாலசுப்பிரமணியம்” என்னும் கையொப்பமோடு காட்சிப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.

இந்த நேரம் எனது செல்போன் எடுத்து, முகநூலில் “சுனிதா உபத்ரஸ்டா”பக்கத்தை unfollow செய்து முடித்தேன்.

– 25-9-23, திண்ணை – தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை.

Print Friendly, PDF & Email

1 thought on “சுனிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *