சீ! இவரையா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 5,889 
 

“வனஜா,லக்ஷ்மிக்கு தலையில் அடிப்பட்டு இருக்காம்,நான் போய் பார்த்து விட்டு வரேன்” என்று சொல்லி விட்டு செல் போனை பேச்சைத் துண்டித்து விட்டு வனஜாவின் பதிலுக்குக் கூட காத்து இராமல் தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பறந்தான் சேகர்.

வனஜாவுக்கு இது பிடிக்கவே இல்லை!.

‘கல்யாணம் பண்ணி ‘குத்துக் கல்லு’ மாதிரி நான் ஒருத்தி இருக்கும் போது என்ன வேண்டிக் கிடக்கு இவருக்கு இந்த பெண்கள் சகவாசம்’ என்று ஸ்கூட்டரில் கிளம்பிப் போன கணவனை தன் மனதில் திட்டினாள் வனஜா.

அடுத்த வாரமே சேகர் ”வனஜ்! ராதாவுக்கு ரொம்ப பயந்த சுபாவம்.அவ கூட ஒரு  ‘இன்டர் வியூக்கு’ போய் கொஞ்சம் துணையா இருந்துட்டு, அப்புறமா ஆபீஸ் போறேன்.நான் கூட இருந்தா அவளுக்கு கொஞ்சம் தைரியம் வரும்” என்று சொல்லி விட்டு ஸ்கூட்டரில் பறந்தான் சேகர்.

வனஜா முகத்தில் ஏள்ளும் கொள்ளும் வெடித்தது.

‘சேகர் ரொம்ப நல்ல பையன்.ஒரு கெட்ட பழக்கமும் இவன் கிட்டே இல்லே’ன்னு நம்ம அத்தே சொன்னதால் தானே நாம் இவருக்கு நம் தலையை நீட்டினோம்.இப்போ ஏமாந்து போய்  விட்டோமே? என்று எண்ணி வருத்தப் பட்டாள் வனஜா.

இரண்டு மாசம் ஓடி விட்டது.

சேகர் அடிக்கடி ‘ராதாவுக்கு ஒன்னு’,‘லக்ஷ்மிக்கு ஒன்னு’,’இல்லை இன்னொரு பெண்ணுக்கு ஏதாவது….’என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே போய்க் கொண்டு இருந்தான்.

வனஜாவுக்கு இது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை!.

ஒரு நாள் சேகர் வீட்டில் ஜாலியாக இருந்த போது சேகரைப் பார்த்து  “இதோ பாருங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. மணைவின்னு நான் ஒருத்தி இந்த வீட்லே இருக்கேங்க. வேண்டாங்க… மற்ற பொண்ணுங்க சகவாசம்” என்று சொல்லி அவனைத் திருத்த முயற்சி பண்ணினாள்.

ஆனால் அவனோ சிரித்துக்கொண்டு சும்மா இருந்தான்.வனஜாவுக்கு கோவம் கோவமாக வந்தது.

அவள் மறுபடியும்  “வேணாங்க, இந்த பொண்ணுங்க சகவாசம்.நான் சொன்னா நீங்க கேட்டே ஆகணுங்க” என்றாள் கண்டிப்பாக!.

சேகர் இதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் சும்மா சிரித்துக் கொண்டு இருந்தான்.

‘மணி பத்தாகியும் சேகர் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே’?என்று  கவலைப் பட்டுக் கொண்டு வாசலிலேயே காத்துக் கொண்டு  இருந்தாள் வனஜா.

ராத்திரி ரொம்பவே தாமதமாக வந்தான் சேகர்,தன் ஸ்கூட்டரில் வராமல் ஒரு பெரிய ‘இன்னொவா’ காரில் வந்து இறங்கினான்.

சேகரைப் பார்த்த வனஜாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.அவனை கைத் தாங்கலாக பிடித்துக் கொண்டு வந்து இருந்தான் அவன் நண்பன் ஒருவன்.

மூன்று இள வயசு பெண்கள் காரை விட்டு கீழே இறங்கிக் கொண்டு “எக்சலண்ட் சேகர், எக்சலண்ட்” என்று சொல்லி தங்கள் கைகளைத் தட்டிக் கொண்டு இருந்தார்கள்.

இதைப் பார்த்த வனஜாவுக்கு ரத்தம் கொதித்தது.

‘இவர் ஏற்கெனவே  கண்ட பெண்களுடன் பேசி, பழகி கிட்டு வர்றார்.இப்போ ‘குடி’.  காரில் மூனு சிறுக்கிகள் வேறே’.அவள் கோவம் உச்சக் கட்டத்தை எட்டியது.

“வர்றேன் சேகர்” என்று சொல்லி விட்டு அந்த நண்பன் திரும்பிய போது, அந்த மூனு சிறுக் கிகளும் சேகருக்கு ‘பை, பை’ என்று கையை பலமாக ஆட்டி விட்டு காரில் ஏறிக் கொண்டார்கள்.

வனஜாவைப் பார்த்ததும் சேகர் தன்னை சரிப் படுத்திக் கொண்டு சரியாக நடக்க முயற்சி பண்ணினான்.

சேகர் வீட்டுக்குள் வருவதற்கு முன்னால் வனஜா வேகமாக ‘பெட் ரூமுக்கு’ப் போய் தன் சூட் கேஸை எடுத்து வைத்துக் கொண்டு தன் துணி மணிகள்,நகைகள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

சேகர் தன் கை கால்களைக் கழுவிக் கொண்டு வந்து ‘டைனிங்க டேபிளில்’ உட்கார்ந்துக் கொண்டு சினிமா பாட்டு ஒன்றை முணு முணுத்துக் கொண்டு இருந்தான்

‘பெட் ரூமுக்கு’ப் போன வனஜா வரவில்லையே என்று நினைத்து “வனஜ்,வா சாப்பிடலாம்.. சாரி,இன்னைக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சி.என்னை மன்னிச்சிடு வனஜ்” என்று செல்லமாகக் கொஞ்சினான்.

“அந்த சிறுக்கிகளை வந்து உங்களுக்கு சாப்பாடு போடச் சொல்லுங்க.குடி,இளம் பெண்கள் சகவாசம் எல்லாம் உங்களுக்கு இருக்குதுன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சு இருந்தா நான் உங்களை கல்யாணமே பண்ணிக் கிட்டு இருக்க மாட்டேன்.நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன்” என்று வனஜா சொல்லிக் கொண்டு இருக்கும் போது வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.

சேகர் போய் கதவைத் திறந்தான். சேகர் கூட காரில் வந்தவர்கள் எல்லோரும் வாசலில் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

“சேகர்,உன் செல் போனை காரிலேயே மறந்துட்டு வச்சுட்டே!. இந்தா” என்று சொல்லி விட்டு செல் போனைக் கொடுத்தாள் ஒருத்தி.

“ரொம்ப தாங்க்ஸ்டா ராதா.நான் உன்னைக் கேக்க மறந்துட்டேன்.நீ ‘இன்டர்வியூக்கு’ போன கம்பனியில் இருந்து இன்னுமாடா ஒரு ‘ரிப்பலையும்’ வரலை” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது ஒரு வனஜா சூட் கேஸூடன் நிற்பதைப் பார்த்து விட்டு ராதாகிருஷ்ணனுடன் கூட வந்த ஒரு பெண்மணி வனஜாவைப் பார்த்து “இந்த ராத்திரி வேளையிலே ‘மிஸஸ்’ சேகர்,எங்கே கிளம்பி இருக்காங்க” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.வனஜா அவளைப் பார்த்தாள்.அவள் கழுத்தில் தாலிக் கயிறு தொங்கிக் கொண்டு இருந்தது.

அப்படிக் கேட்டவளை ஒருத்தன் அவள் தோள் மேலே கையை வைத்துக் கொண்டு “அது ஒன்னும் இல்லே ராஜி.சேகர் ஒரு ‘குடிக்காரன்’ மாதிரி காரில் இருந்து தள்ளாடி, தள்ளாடி, நடந்து வருவதை ‘மிஸஸ்’ சேகர் பார்த்து இருப்பா.அவளுக்கு  கோவம் வந்து சேகரை விட்டுட்டு, அவங்க அம்மா வீட்டுக்குக் கிளம்பிப் போறாப் போல இருக்கு.இதுக்குத் தான் நான் சேகர் கிட்டே ‘நாம போடப் போற நாடக ‘ரிஹர்ஸல்கள்’ எல்லாம் நம்ம ஆபீஸ் தியேட்டர்லே மட்டும் இருக்கட்டும்’ன்னு பல தடவை சொன்னேன்.சேகர் கேக்கலே.காரில் இருந்து இறங்கும் போதும்,வீட்டுக்குள் போகும் போதும் நடிச்சுப் பாத்து இருக்கான்.இப்போ மேடத்துக்கு கிட்டே ‘வச’மா மாட்டிக் கிட்டான்.நாம மட்டும் இவன் செல் போனை  திருப்பிக் குடுக்க இங்கே வராம இருந்தா சேகர் வனஜா கிட்டே மண்டி இட்டுக் கொண்டு கெஞ்சிக் கிட்டு இருப்பான்” என்று  சொல்லி ‘கல’ ‘கல’ என்று சிரிக்கும் போது  ”ரொம்ப கரெக்ட்டா சொன்னேடா லக்ஷ்மிகாந்தா” என்றாள் அவர்களுடன் நின்றுக் கொண்டு இருந்த ஒரு வயது முதிர்ந்த பெண்மணி.

வனஜா முகத்தில் ஒரு கிலோ எண்ணை வழிந்துக் கொண்டு இருந்தது. ’சூட் கேஸ்’…. கை நழுவியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *