கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2023
பார்வையிட்டோர்: 2,425 
 
 

எஞ்சினியர் செந்தில்நாதன் பொறுமை இழந்துபோனவராக –

‘ஒரு ரெண்டு நிமிஷம் பிந்திப் போனதாலை, அடுத்த பஸ் வரும்வரைக்கும் இந்தப் பனிக் குளிருக்குள்ளை காத்து நிற்கவேண்டியதாய்ப் போச்சு…..’ என்று தனக்குத் தானே சொல்லி அலுத்துக்கொண்ட போது –

பஸ் தரிப்பிடத்தைத் தாண்டி ஒரு பத்துப் பதினைந்து மீற்றர் தூரத்தில், லெக்ஸஸ் எஸ்யூவி வாகனம் ஒன்று மெதுவாக ஊர்ந்துசென்று நிற்கிறது. சாரதி தனது பக்கக் கண்ணாடியைக் கீழே இறக்கித் தலையை வெளியே நீட்டி, அவரைப் பார்த்து உரத்துச் சொல்கிறான் –

‘எஞ்சினியர்…! தூரப் போறியளே? வாருங்கோ…சப்வேயிலை இறக்கி விடுறன்’

இடது கையால் ப்பிறீஃப் கேசைத் தூக்கிக்கொண்டு, செல்லவண்டி குலுங்க, அரக்கப் பரக்க ஓடிவருகிறார் எஞ்சினியர் செந்தில்நாதன். கிட்ட வந்த பிறகுதான் அந்த எஸ்யூவீக்காரனை ஆரென்று அடையாளம் கண்டுகொள்கிறார்.

‘ஓ…தம்பியே…சரி…சரி… தாங்ஸ் தம்பி…. என்னை ஒருக்கால் விக்ரோறியாப் பார்க் சந்தியிலை இறக்கிவிட்டால் போதும்.’

பதிலுக்குக் காத்திராமல், வாகனத்தின் முன்புறமாகச் சுற்றி ஓடிவந்து, வலப்புறத்தே பஸஞ்சர் சீற்றில் ஏறி அமர்ந்துகொள்கிறார்.

கையுறைகளையும், தலை காது கன்னம் மூடி அணிந்திருந்த தொப்பியையும் கழற்றிவிட்டுத் தன்னை ஆசுவாசப் படுத்துகிறார். கவிழ்த்து வைத்த புத்தம்புது மண்சட்டி போலத் தலை மினுங்குகிறது!

‘ரிரிசி பஸ் இந்த ரோட்டிலை அரை மணித்தியாலத்துக்கு ஒண்டுதான் வரும்.’ சொல்லிக்கொண்டே அந்த வாலிபன் அவதானமாக வாகனத்தை முன்னோக்கி நகர்த்துகிறான்.

சூரியனை மறைத்து மூடிக்கட்டிய வானம், பனிப் பூக்களை இலேசாகத் தூவிக்கொண்டிருக்கிறது.

‘எங்கேனும் தூரப் போறியளோ, தம்பி?’

‘இல்லையில்லை, விக்ரோறியாப் பார்க் தாண்டித்தான் போறன். சந்தியிலை உங்களை இறக்கிவிடலாம்…’

‘தம்பிக்கு…ஏதும் அவசர அலுவலோ தெரியேல்லை…’

‘அப்பிடி ஒண்டும் அவசரமில்லை…’ எனப் பதில் கூறியவன், சற்றுத் தாமதித்து, ஏதோ நினைத்தவனாக மீண்டும் தொடர்கிறான் –

‘என்ரை மூத்த மகள் யூனிவேர்சிற்றி முடிச்சுப்போட்டு, வேலைசெய்யத் துவங்கியிருக்கிறாள். வேலைக்குப் போய்வரத் தனக்குத் தாயின்ரை அக்கியூரா எஸ்யூவீதான் வேணுமெண்டு அடம்பிடிக்கிறாள். அதை அவளுக்குக் குடுத்திட்டு, தாய்க்குச் சின்னதாக ஒரு ப்பிஎம்டபிளியூ பார்க்கலாமெண்டு, டீலரிட்டைப் போய்க்கொண்டிருக்கிறன்.’

‘நான் போட்ட பிச்சையிலை, என்ரை யூனிற்றிலை லேபரராக வேலைசெய்த சீனித்தம்பியின்ரை மகன். இங்கை ஒரு கிளீனிங் புரொடக்ஸ் கொம்பனியிலை முதல் வேலை செய்தவனாம். இப்ப, சொந்தமாக ஒரு கிளீனிங் கொம்பனி வைச்சிருந்து, நல்லா உழைக்கிறானாம்’

மனசுக்குள் அசைபோட்டுக்கொண்ட எஞ்சினியர் செந்தில்நாதன் சொல்கிறார் –

‘ஊரிலை நடக்கிற சண்டையாலை உங்களுக்கு அங்கை படிக்கக் கிடைக்காத வாய்ப்பு, வசதி கனடாவிலை பிள்ளையளுக்குக் கிடைச்சிருக்கு!’

‘படிப்பென்ன படிப்பு, எஞ்சினியர்? ஊரிலை பெரிசாப் படிச்சவை இஞ்சை வந்து, என்னத்தைக் கிழிச்சுப்போட்டினம்?’

எஞ்சினியர் செந்தில்நாதனின் முகத்தில் எழுதி ஒட்டியிருந்த சிரிப்பு, அனல் காற்றுப் பட்ட பனிப் புகார் போல, அழிந்து போகிறது! ஏற்ற இறக்கங்களுடன் முன்னோக்கி ஓடிக்கொண்டிருந்த வீதியை, இறுகிய முகத்தோடு வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். வீதி வழியே விரிந்து நீண்டு செல்லும், அழகிய வெண் பனிப் பட்டுக் கம்பளத்தில் வாகனங்கள் கோடு வரைந்து செல்லும் கோலத்தை அவரால் இரசிக்க முடியவில்லை.

சில மணித்துளிகள் பேச்சு மூச்சின்றிக் கரைந்து போகின்றன!

அவரது முகத்தைப் பார்க்காமல், வீதியில் கண்களை ஓட விட்டபடியே அவன் கேட்கின்றான் –

‘இப்பவும் அதே செக்கியூரிட்டி வேலைதான் செய்யிறியளோ, எஞ்சினியர்?’

பதில் கூறுவதைத் தவிர்த்து, பின்னோக்கி நகர்ந்துசெல்லும் உயர்ந்த கட்டடங்களையும் கோபுரங்களையும் கண்ணாடி யன்னலூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் செந்தில்நாதன். முகம் இலேசாக வியர்க்கத் துவங்குகிறது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக்கிறார். கெண்டைக் கால்களுக்கிடையில் வைத்திருந்த ப்பிறீஃப் கேசை எடுத்து மடியில் வைத்துக்கொள்கிறார்.

‘முன்னாலை வாற ஹோல்ற்றிலை நிப்பாட்டுங்கோ…’

‘விக்ரோறியாப் பார்க்குக்கு இன்னும் ஒரு கிலோ மீற்றர் போக வேணுமே’

‘அது தெரியும். காரை அதிலை நிப்பாட்டும்!’

‘ஏன், நான் சொன்னது ஏதும் பிழையோ?’

‘நீர் சொன்னது சரிதான். இப்ப நான் சொல்லுறதைச் செய்யும். காரை நிப்பாட்டும், ஐசே…!’

எஞ்சினியர் செந்தில்நாதன் இலங்கையில் 29 வருடம் சிவில் எஞ்சினியராகக் கடமையாற்றியவர். கடைசிக் காலத்தில், அனுராதபுரம் மாவட்டத்தில் அவர்தான் சீஃப் எஞ்சினியர். அவருக்குக் கீழே ஆறு ஜூனிய எஞ்சினியேர்ஸ், ஏராளம் ஃப்பீல்டு வேர்க் ரெக்னீஷியன்ஸ், சுப்பெர்வைசேர்ஸ், கொன்றக்ரேர்ஸ், லேபரேர்ஸ் என்று பெரிய பரிவாரத்தையே கட்டியாண்டவர்.

கண்ணியமானவர். கடமை தவறாதவர். பணியில் அவருக்கு இருந்த தேர்ச்சி, அனுபவம், அர்ப்பணிப்பு என்பன அமைச்சரவை வரைக்கும் அவருக்கு நன்மதிப்பைத் தேடிக் கொடுத்திருந்தன. தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் என்ற பேதமேதுமின்றி, மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்தவர்.

எஞ்சினியேர்ஸ் குவார்ட்டேர்ஸில் சகல சௌகரியங்களும் அடங்கிய ஒரு பிரம்மாண்டமான பங்களா, உத்தியோகப் போக்குவரத்துக் கடமைகளுக்கென்று ஒரு மிற்சுபிஷி ஜீப், குடும்பப் பாவனைக்கென்று ஒரு ரொயோட்டா கார், மகளைப் பாடசாலைக்கு ஏற்றி இறக்க ஒரு ட்ரைவர், பங்களாவைக் கூட்டித் துடைப்பதற்கும் சாமான் சக்கட்டுகளைச் சந்தையில் போய் வங்கி வருவதற்கும் ஒரு வேலைக்காரன், ஒரு சமையல்காரி என அமர்க்களமாக வாழ்ந்தவர்.

மான், மரை, முயல், ஆடு, மாடு, கோழி என்று விதம் விதமான இறைச்சி வகைகளும், அரிசி, பால், பழம், மரக்கறி, கிழங்கு என்று எல்லாவகை உணவுகளும், பேர்பெற்ற வெளிநாட்டு – உள்நாட்டு மதுபானங்களும் அவரது பங்களாவில் எப்பவும் தாராளமாகக் குவிந்து கிடக்கும். வாரத்தில் ஒரு தடவையாவது சக அலுவலர்களுடனோ, அரசியல்வாதிகளுடனோ அல்லது உள்ளூர்ப் பிரமுகர்களுடனோ அங்கு தவறாமல் இரவு விருந்து நடக்கும்.

இந்தவித ஆடம்பரங்களுடன் அவர் வாழ்ந்து வருகையில், போர் மேகம் மீண்டும் சூல்கொண்டு சுழன்றடிக்க ஆரம்பித்தது. கூடவே, போதாத காலமும் அப்போதுதான் அவருக்கு முகம்காட்ட முடிவெடுத்தது.

அந்நாட்களில், பெருந்தெருக்கள் திணைக்களதுக்குரிய ஒரு புரொஜெக்ற் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஜூனியர் எஞ்சினியர் அமரசேகரவுக்கும் அவருக்கும் இடையே கருத்துப் பரிமாறல், கடும் வாக்குவாதமாக முற்றியதால் அன்றைய கூட்டம் அமளிதுமளியுடன் முடிவடைந்தது.

அறையை விட்டு வெளியேறும்போது, அமரசேகர ஆத்திரத்தோடு சொல்லிக்கொண்டு சென்ற அந்த வார்த்தைதான், எஞ்சினியர் செந்தில்நாதனின் வாழ்க்கையைத் திசை திருப்பியது!

‘பறதெமள!’

‘இனிமேலும் மரியாதை கெட்டு இந்த நாட்டில் நான் வாழக்கூடாது’ என்ற அவரது முடிவுக்குத் தீ மூட்டிய வசவுமொழி, அது!

ஏஜென்சி ஒன்றின் உதவியுடன் பல வெளிநாட்டு வாய்ப்புகள் குறித்துத் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டார்.

‘ஸ்கில்டு வேர்க்கேர்ஸ்’ எனும் வகையின் கீழ், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற துறைசார் பதவியாளர்களுக்குக் கனடா செங்கம்பளம் விரித்துக் காத்திருப்பதாகவும், தத்தமது நாடுகளில் அனுபவித்ததைவிடப் பன்மடங்கு செல்வச் செழிப்பைக் கனடாவில் அனுபவிக்கலாமெனவும் செய்திகள் அவரது செவிவழி ஓதப்பட்டன.

வெளிநாடு பற்றி மனதில் வரையப்பட்ட கற்பனைப் படிமங்களுடன் மனைவியையும் மகளையும் கூட்டியள்ளிக்கொண்டு எஞ்சினியர் செந்தில்நாதன் கனடா எனும் பனிவயற் காட்டினுள் பாதம் பதித்தார்.

எஞ்சினியர் செந்தில்நாதன் வேலையிடத்தை வந்தடைகிறார். ஏற்கனவே செக்கியூரிட்டி மேசையில் அமர்ந்திருந்த வில்லியத்துக்குக் ‘க்குட் மோர்ணிங்’ சொல்கிறார். அது காதில் விழுந்ததாக அவன் காட்டிக்கொள்ளவில்லை. அவர் எட்டு நிமிடம் பிந்தி வந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை!

செக்கியூரிட்டிக் கொம்பனிக்குத் தொலைபேசி எடுத்துத் தனது வருகையைப் பதிவு செய்கிறார். ப்பிறீஃப் கேசைத் தூக்கிக்கொண்டு விடுவிடென்று கழிப்பறை நோக்கி ஓடுகிறார்.

அணிந்துவந்த கோர்ட், ரை, ஷேர்ட், காற்சட்டை யாவற்றையும் கழற்றி ப்பிறீஃப் கேசுக்குள் வைத்துவிட்டு, அதனுள் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த செக்கியூரிட்டி யூனிஃபோர்மை உடலில் மாட்டிக்கொள்கிறார்.

மீண்டும் மேசைக்கு ஓடிவந்து, தனது றிப்போர்ட் ஷீற்றில் வருகையைப் பதிவுசெய்கிறார். விண்வெளிப் பயணிகளின் மேலாடை போலப் பொதி பொதியாய்த் தடித்துப் பொருமி நிற்கும் வின்ரர் ஜக்கெற், தலை காது கன்னம் மூடவல்ல தொப்பி, கையுறை என்பன சகிதம், நீண்ட பட்டியுடன் தொங்கும் சிறிய சில்லுப் போன்ற ‘பஞ்ச் குளொக்கை’ எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, கட்டடத்தைச் சுற்றி, ‘பற்றோல்’ எனக் கௌரவமாக அழைக்கப்படும் காவல் நடைக்குப் புறப்படுகிறார்.

பிரம்மாண்டமான இந்த வெயர்ஹெளஸ் கட்டடத்தை இரண்டு மணித்தியாலத்துக்கு ஒருமுறை சுற்றிவந்து, முக்கிய கதவுகள் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருக்கின்றனவா? என்பதை உறுதிசெய்து, அருகில் தொங்கும் சாவிகளால் தோளில் தூக்கிச் செல்லும் மணிக்கூட்டில் நேரத்தைப் ‘பஞ்ச்’ பண்ண வேண்டும். மீண்டும் மேசைக்குப் போய்ச்சேர ஆகக் குறைந்தது அரை மணித்தியாலம் எடுக்கும். எலும்பு மச்சைவரை குளிர் இறங்கி, உயிர் குடிக்கும் இந்தக் கூதலுக்குள், இது மகா கொடுமையான கட்டாயக் கடமை!

இந்த வேலைத் தலத்தில் வில்லியம்தான் சீனியர். ஒரு வெள்ளையன் என்பது மட்டுமே அவனுக்கிருக்கும் மேலதிக தகமை. கடினமான கடமைகளை இவரிடம் சுமத்திவிட்டு, அவன் மேசைமேல் சப்பாத்துக் கால்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, அருமை பெருமையாகச் சில சமயம் பேப்பர் பார்பான்;| பலசமயம் ஆபாசப் புத்தகங்கள், சஞ்சிகைகள் படிப்பான்.

எஞ்சினியர் செந்தில்நாதனோ, என்னதான் உடல் வியர்த்து விறுவிறுத்துக் களைத்தாலும், கால்கை சோர்ந்து தளர்ந்தாலும் கடமை மட்டும் தவற மாட்டார்.

வேலைக்கு வந்த முதல் நாளன்று, ‘உன்னுடைய பேரென்ன?’ என்று வில்லியம் கேட்டான்.

‘எஞ்சினியர் செந்தில்நாதன்’ என்று பாவம், அவசரப்பட்டுப் பதில் சொல்லிவிட்டார்!

கொடுப்புக்குள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் ‘உன்னுடைய ஊரில் நீ என்னவாக இருந்திருந்தால்தான் எனக்கென்ன?…… உன்னை எப்படிக் கூப்பிடலாம் என்று மட்டும் சொல்லேன்’ என்று அவன் கேட்டான்.

‘செந்தில்நாதன்’ எனச் சொல்லப்பட்ட பெயரைப் பலமுறை முயற்சித்துப் பார்த்தான். ‘ஆர்னல்டு ஸ்வார்ட்ஸ்னேகர்,’ ‘டொனல்டு மஸன்கௌஸ்கி’ போன்ற பெயர்களைக்கூட அட்ஷர லட்ஷணம் தவறாமல், அச்சொட்டாக உச்சரிக்கும் இவன் போன்ற வெள்ளையர்களது நாக்கு, ஒரு சாதாரண தமிழ்ப் பெயருக்கு மட்டும் சரியாகச் சுழல மறுத்துச் சிக்குப்படுவது புதினந்தான்!

கடைசியில் செந்தில்நாதனை ‘நாத்தன்’ எனச் சிரமப்பட்டுச் சுருக்கி, கடைசியில் ‘நேத்தன்’ எனச் சுலபமாகச் சொல்லப் பழகிக் கொண்டான்.

அதே தினம்தான், ‘செந்திலின் சொந்த நாடு எது?’ என வில்லியம் வினவினான்.

‘அந்நாளைய சிலோன் – இந்நாளைய சிறீலங்கா’ என்று பதிலிறுக்கப்பட்டபோது, ‘ஓ… அது ஒரு ஆபிரிக்க நாடா?’ எனத் திருப்பிக் கேட்ட அறிவுக் கொழுந்தான இந்த வில்லியம், செந்தில்நாதனை ஒரு அற்ப புழுவாகத் தன்னிலும் மதிப்பதில்லை!

மதிய உணவு வேளை வந்ததும், ஒரு கொக்கோக் கோலாப் போத்தலைத் திறந்து வாயில் வைத்துச் சூப்பிச் சூப்பி, ஹாம்பேர்கரைக் கடித்துத் தின்கிறான். கண்ணும் மனமும் மட்டும் வழமைபோல மேசையில் விரித்து வைத்திருந்த இன்பலாகிரி இதழில் மூழ்கியிருக்கின்றன.

உடலையும் மனசையும் இம்சைப்படுத்தும் இந்தக் கொடுங் குளிரையும் பொருட்படுத்தாமல், இரண்டாவது பற்றோலை முடித்துக்கொண்டு பசியோடு வந்துசேர்ந்த செந்தில்நாதன், தனது அறிக்கைப் பத்திரத்தில் ‘நுஎநசலவாiபெ ளை ழம’ என எழுதிவிட்டுக் கழிப்பறைக்குப் போய்க் கையைக் கழுவிக்கொள்கிறார்.

திரும்பி வந்து, மேசையின் ஒரு முனையருகே கதிரையை இழுத்து வைத்து அதில் அமர்கிறார். மேசைக்குக் கீழிருந்த ப்பிறீஃப் கேசை எடுத்துத் திறந்து, வீட்டில் மனைவி கொடுத்தனுப்பிய பிளாஸ்ரிக் சாப்பாட்டுப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார்.

உள்ளியும், வெங்காயமும் இன்னபிற வாசனைப் பொருட்களும் ஒன்றுசேர வரட்டிக் காய்ச்சியெடுத்த மீன்குழம்பும், கத்தரிக்காய்ப் பிரட்டலும், பருப்பும், சோறும் அன்றைய மத்தியானச் சாப்பாடு!

எஞ்சினியர் செந்தில்நாதன் ஆவலோடு அள்ளிச் சாப்பிடத் தயாராகிறார்.

‘இந்த நாற்றமடிக்கின்ற சாப்பாட்டை – அதுவும் கையாலை அள்ளியள்ளி – எனக்கு முன்னால் வைத்துச் சாப்பிடாதே என்று எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருப்பேன். ஏன் கேட்கிறாயில்லை?’

புழுத்து நாறும் பிணத்தைப் பார்த்தவன் போல, முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு கத்துகிறான், வில்லியம்.

‘பொரிச்ச கோழி இறைச்சியைத் தொட்ட விரலை, நீ நக்கிச் சூப்புறாய். நான் கையாலை சாப்பிடுகிறதை மட்டும் உன்னாலை சகிக்கேலாமல் கிடக்குது! சோறுகறி எங்கட கலாசாரச் சாப்பாடு.’

எஞ்சினியர் செந்தில்நாதனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது!

‘கலாசாரச் சாப்பாட்டை உன்னுடைய நாட்டில் வைத்துச் சாப்பிடு. உன்னுடைய வீட்டில் வைத்துச் சாப்பிடு. இங்கே கொண்டு வராதே. நீ உடுத்தியிருக்கும் யூனிஃபோர்ம் கூடப் பீயாக நாறுகிறது …’

அவர் ஒரு வாய்ச் சோற்றை அள்ளி, வாயருகே கொண்டுபோகும்போது, வில்லியம் அருவருப்போடு தன் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு தனக்குள் கறுவுகிறான் –

‘ஊத்தைப் பாக்கி…!’

யானை ஒன்று செந்தில்நாதனின் நெஞ்சில் ஏறி மிதிக்கிறது!

‘பாக்கி’ கடந்துபோன நூற்றாண்டில் கனடா வந்துகுவிந்த பாகிஸ்தானியர் மீது வெள்ளயர்கள் விட்டெறியப்பட்ட வசைமொழி! இப்போது இதுதான் எல்லாத் தெற்காசியர்ளையும் கேவலப்படுத்தவென அவர்கள் பயன்படுத்தும் பொதுமொழி!

இந்த இழிவுமொழி ஏற்படுத்திய வலியை எஞ்சினியர் செந்தில்நாதனால் சகித்துக்கொள்ள முடியவில்லை!

சாப்பாட்டுப் பெட்டியை மூடி வைத்துவிட்டு, கை அலம்புவதற்காகக் கழிப்பறை நோக்கி எழுந்து நடக்கிறார்.

நேரம் மாலை ஐந்தரை இருக்கும்.

மாசிப் பனி மூசிமூசிப் பொழிந்து கொட்டுகிறது. முழங்கால் உயரத்தில் குவிந்த ஸ்னோவுக்குள் கால்கள் புதைகின்றன. கண்கள் கசிய, மூக்கிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக கொட்டுகிறது. மூடிக் கட்டிய காதோரங்களில் குளிர், ஊசி கொண்டு குத்தித் துளைக்கிறது. சுவாசம் முட்டி மூச்சிரைக்கிறது. பஸ் தரிப்பிடத்திலிருந்து தட்டுத் தடுமாறி நடந்து, அந்த அடுக்ககத்தை வந்தடைகிறார் எஞ்சினியர் செந்தில்நாதன்.

ஆறாம் மாடியில் தாம் வாழ்ந்துவரும் வீட்டுக் கதவுக்கு முன்பாக வந்து நின்று, வின்ரர் ஜக்கற்றுக்கு மேல் வீழ்ந்து பரவிக்கிடந்த ஸ்னோ துகள்களைக் கையால் தட்டி வீழ்த்துகிறார். முகத்தைக் கைகுட்டையால் ஒருமுறை துடைத்துக் கொள்கிறார். உள்ளாடைகளைத் தொட்டுப் பார்த்து, கழுத்துப் பட்டியைச் சரிசெய்துவிட்டு, மெதுவாகக் கதவைத் தட்டுகிறார்.

உட்புறமாகக் கதவைத் திறந்த மனைவி செல்வி, அவரை வரவேற்கிறாள்.

செல்ல மகள் லக்ஷ்மி ஓடிவந்து அப்பாவைக் கட்டி அணைக்கிறாள்.

‘லக்ஷிக் குட்டி…’ என்று முகம் மலர அள்ளி அணைத்து முத்தமிடுகிறார்.

கையிலிருந்த ப்பிறீஃப் கேசைக் கதிரை அருகே வைத்துவிட்டு, ஒருசில நிமிடங்கள் மகளோடு ஆற அமர உட்கார்ந்திருந்து பாடசாலை, வகுப்பு, வீட்டு வேலை, சிநேகிதிகள் பற்றியெல்லாம் அளவளாவுகிறார். அது முடிய, அவளைப் போயிருந்து படிக்குமாறு கூறிவிட்டு, எழுந்து போய் உடுப்பு மாற்றிக்கொண்டு படுக்கையில் வீழ்கிறார்.

பசிக்களையும் அசதியும் மேலிடவே, ஐந்து நிமிடம் கண் சோர்ந்துவிடுகிறார்.

மீண்டும் அவர் கண் விழித்தபோது, அருகில் செல்வி கண்ணிமைக்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவரது விழிகளோ தூர உள்ள சுவரில் இலக்கின்றிச் சஞ்சரிக்கின்றன. கணவரின் கையைப் பற்றியபடி செல்வி மெதுவாகக் கேட்கிறாள் –

‘ஏன் வாடிப்போயிருக்கிறியள்? கொண்டுபோன சாப்பாடும் பெட்டிக்குள்ளை அப்பிடியே கிடக்கு….’

‘மனசு சரியில்லை…’

‘நீங்கள் ஏதோ மறைக்கிறியள். என்ன நடந்தது?…சொல்லுங்கோவன்!’

‘புதுசா என்ன நடக்க இருக்கு?’

ஒருக்களித்துப் புரண்டு, தன் மனைவியின் மடியில் தலை வைத்துப் படுக்கிறார். வாஞ்சையோடு தலையைத் தடவிக்கொண்டிருக்கும் மனைவியிடம் கவலைகளைச் சொல்லி, அவளையும் கண் கலங்க வைக்க வேண்டுமா…?

அடி மேல் அடியாக வந்து வீழும் அவமானங்களால், கால்களுக்கடியில் அகப்பட்டு நசியும் கரப்பான் பூச்சியாய் அவரது மனம் சிதைந்து துடிக்கிறது. ‘நம்பி எமாந்து போனாய்’ என்று அவரைக் குற்றஞ் சாட்டுகிறது.

வானளாவிய கற்பனைகளோடு கனடா வந்தவர். வந்து சேர்ந்த பிறகுதான் உண்மை விளங்கியது. தளராத நம்பிக்கையோடு சுமந்துவந்த ஆசைகளும் கனவுகளும் அவலமாய்ப் போன விபரம் புரிந்தது.

அவரது வயதில் கனடாவில் ஒரு எஞ்சினியராகவோ, ஒரு எஞ்சினியரிங் ரெக்னோலொஜிஸ்ற் அல்லது ரெக்னீஷியனாகவோ, அவற்றை விடக் கீழ்நிலைப் பணியாளராகவோ தன்னிலும், வேலை தேடி எடுப்பதில் உள்ள சவால்கள் தெரிய வந்தன. எடுத்த முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தன.

வயது, ஆங்கிலமொழி உச்சரிப்பு, பொறியியல் துறையில் கனடிய முன்னனுபவம், லைசென்ஸ் கட்டுப்பாடு இன்னோரன்ன தடைகள் பலவும் ஒன்று திரண்டு, அவரது கனடியக் கனவுகளைத் தவிடுபொடியாக்கின.

கடைசியில் ஒரு காவல் பணிதான் குடும்பத்தின் வயிற்றைக் கழுவக் கைகொடுத்தது!

அளவிறந்த செல்வச் செழிப்புடன் வாழ்ந்த குடும்பம், இங்கு வந்து அதல பாதாளத்தில் வீழ்ந்திவிட்ட துயரத்தை, வேறு வழியேதுமின்றி அவரும் மனைவியும் எப்படியோ சகித்துக்கொடள்கின்றனர்.

பத்து வயதுக் குழந்தையால் அது முடியுமா?

இளவரசி போல வளர்ந்த செல்லக் குழந்தையின் பிஞ்சு மனசு இந்த வீழ்ச்சியை எப்படித் தங்கிக்கொள்ளும்? அவளுக்குள் உருவாகக்கூடிய உளவியல் கெடுதிகளிலிருந்து அவளைக் காப்பாற்றிக் கொள்வதற்கென்று இன்னும் எவ்வளவு காலம் நாடகமாட முடியும்?

கட்டட நிர்மாணக் கொம்பனி அலுவலகம் ஒன்றில் டிஸைன் எஞ்சினியராகப் பணியாற்றி வருவதாகப் பொய் சொல்லிச் சொல்லி, இன்னும் எத்தனை நாட்கள் அந்தப் பிஞ்சுமனத்தை எமாற்ற முடியும்?

கவலைகள் மனசைக் கல்லாக அழுத்த, முடிவின்றி எதிரொலிக்கும் வெறுமையுடன் மனைவியின் மடியில் அப்படியே கண்ணயர்ந்து போகிறார்!

அதிகாலை வெளிச்சத்தில் வீடு மீண்டும் பரபரத்துக் கொண்டிருக்கிறது.

காலைச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, புத்தகங்கள் கொப்பிகளை முதுகுப் பையினுள் அடுக்கியபடி, லக்ஷ்மி பாடசாலைக்குப் புறப்படத் தயாராகிறாள். செந்தில்நாதன் வேலைக்கு வெளிகிட்டுக்கொண்டிருக்கிறார்.

சமையலறையில் வேலையாயிருந்த செல்வியைக் கூப்பிட்டுச் சொல்கிறார் –

‘ரெண்டு பாண் துண்டை எடுத்துக் கொஞ்சம் ஜாம் – ப்பட்டர் பூசித் தந்தால் போதும். இனிமேல் சோறுகறி வேண்டாம்’

‘ஸ்கூல் பஸ் வந்திட்டுதம்மா! ப்பாய் அம்மா… ப்பாய் அப்பா…!’

லக்ஷ்மி கதவைத் திறந்து மூடும் சத்தம் கேட்கிறது.

‘ப்பாய் குஞ்சு’ இருவரது குரல்களும் ஏககாலத்தில் ஒலிக்கின்றன.

மீண்டும் ஒருமுறை கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது…!

‘அப்பா, உங்கட உடுப்பு என்னுடைய ப்பெட்டிலை கிடக்குது. எடுங்கப்பா…ப்பாய்!’

பதிலை எதிர்பார்க்காமலே கதவை அடித்து மூடிவிட்டு, மின்னுயர்த்தியை நோக்கி ஓடுகிறாள், லக்ஷ்மி!

வியப்புடன் இருவரும் அவளது சிறிய அறைக்குள் செல்கிறார்கள்.

கட்டிலில் மடித்தபடி கிடக்கும் உடுப்பைத் தூக்கிப் பார்க்கிறார்கள்.

நன்கு தூசி துடைத்து, அழுத்தமாக அயர்ன் பண்ணி, மென்மையான நறுமணம் கொண்ட பெர்ஃப்பியூம் அடித்து, அழகாக மடித்து வைக்கப்பட்டிருக்கிறது –

செக்கியூரிட்டி செந்தில்நாதனின் சீருடை!

– ‘திருவுடையாள்’ – வடமராட்சி, தென்- மேற்குப் பிரதேசச் செயலக ஆண்டு மலர், 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *