கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 5,084 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-52

அத்தியாயம்-41

சீதா பாத்ரூமிலிருந்து சுவற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து கொண்டே கட்டிலை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அதற்குள் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டிவிட்டது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. “அம்மா” என்றபடி கைகளால் கண்களை மூடிக் கொண்டாள். கால்கள் வெட வெடவென்று நடுங்கியதால் நிற்க முடியாமல் உட்கார்ந்து கொண்டாள். சொல்ல முடியாத அசதி. எழுந்தால் உயிரே போய்விடும் போல் இருந்தது. எப்பொழுதுதான் தான் பழையபடி ஆவாளோ? ஊஹும். முடியவே முடியாது. அந்தப் பிடிவாதம், துடுக்குத்தனம் இனி அவளிடம் பெயரளவிற்குக் கூட இருக்கவே இருக்காது.

அதற்குள் சீதாவின் தோளில் யாருடைய கையோ படிந்தது. சீதா கண்களைத் திறந்துப் பார்த்தாள். எதிரே வித்யாபதி நின்று கொண்டிருந்தான். “தலையைச் சுற்றுகிறதா?”

ஆமாம் என்று தலையசைத்தாள். அவன் சீதா எழுந்து நிற்பதற்கு உதவி செய்தான். தோளைப் பிடித்து அழைத்து வந்து கட்டில் மீது உட்கார வைத்தான்.

சீதா சோர்ந்து போனவளாக மூச்சிரைக்க உட்கார்ந்தாள். வித்யாபதி போய் டம்ளரில் க்ளூகோஸ் கலந்து எடுத்து வந்தான்.

“இந்தா இதைக்குடி. குடித்தால் கொஞ்சம் தெம்பு வரும்.”

சீதா கண்களைத் திறந்து பார்த்தாள். டம்ளர் சீதாவின் கண்ணெதிரில் இருந்தது. சீதாவின் கண்கள் டம்ளரைப் பார்க்கவில்லை. டம்ளரைப் பிடித்துக் கொண்டிருந்த வித்யாபதியின் விரல்களையே பரிசீலித்துக் கொண்டிருந்தன.

“குடி” என்று அவன் சொன்ன தோரணையில் என்ன மகிமை இருந்ததோ தெரியாது. சீதாவுக்கு அழுகை வந்துவிட்டது. உதட்டை இறுக்கிக் கொண்டு துக்கத்தை அடக்கி “வேண்டாம்” என்று டம்ளரைக் கையால் தள்ளிவிட்டாள்.

“குடி. குடித்தால் கொஞ்சம் தெம்பு வரும்.”

சீதா முறைத்தபடி பார்த்தாள். பற்களைக் கடித்துக் கொண்டே சொன்னாள். “தெம்பு வந்து இப்போ நான் என்ன செய்யணும்? இப்படிக் கட்டிலோடு படுத்துக் கிடந்தால் நிம்மதியாக இருக்கும்.”

“சீதா!”

சீதாவின் கண்களில் கிர்ரென்று நீர் சுழன்றது. “உயிர் போயிருக்கணும். போயிருந்தால் ரொம்ப நிம்மதியாக இருந்திருக்கும். குறைந்தபட்சம் கையோ காலோ முறிந்திருக்கணும். அப்பொழுது ஊனமுற்றவளை யார் கவனிக்கப் போகிறார்கள் என்றாவது சமாதானம் ஏற்பட்டிருக்கும். நான் எத்தனையோ பாவம் செய்திருக்கிறேன். அதனால்தான் அந்த அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்கவில்லை. இல்லாவிட்டால் இந்த அநியாயம் எங்கேயாவது நடக்குமா? சின்ன அடிபட்டதற்கே உயிர் போனவர்கள் எத்தனை பேர் இல்லை? இவ்வளவு அடிபட்டும் நான் இப்படி குத்துக்கல்லாய் இருக்கிறேனே? எவ்வளவு துரதிர்ஷ்டம் இது? நான் இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதான் கடவுள் என்னைக் காப்பாற்றி இருக்கிறார்.”

“ஏன் இப்படிப் பேசுகிறாய்?” வேதனையை அடக்கிக் கொண்ட குரலில் சொன்னான்.

சீதா சரேலென்று தலையை உயர்த்தினாள். ஈரமாக இருந்த அந்த விழிகள் ரோஷத்தால் மின்னிக் கொண்டிருந்தன. “உங்களை நான் ஒன்றும் சொல்லவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டத்திற்கு என்னையே குறை சொல்லிக் கொள்கிறேன். போங்கள். எனக்கு நன்றாக தேவலையாகிவிட்டது. நீங்க ஆபீசுக்குப் போங்கள்.”

அவன் எதுவும் பேசவில்லை. சீதாவின் தலையைப் பிடித்துக் கொண்டு வலது கையால் வலுக்கட்டாயமாக க்ளூகோஸ் தண்ணியைக் குடிக்க வைக்க முயன்றான். சீதா விடுவித்துக் கொள்ள தவித்தாள். பற்களைக் கடித்துக் கொண்டு “எனக்கு வேண்டாம். நான் குடிக்க மாட்டேன். வலுக்கட்டாயமாக என்னை குடிக்க வைக்க உங்களால் முடியாது.’ டம்ளரை வேகமாக தள்ளிவிட்டாள்.

டம்ளர் போய் தொலைவில் விழுந்து சுக்கு நூறாக உடைந்தது. அறையில் ஒரு நிமிடம் பயங்கரமான நிசப்தம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தார்கள். சீதாவின் கண்களில் ரோஷமும், தன்மானமும் பளபளத்துக் கொண்டிருந்தன.

“போங்கள். இங்கிருந்து போய் விடுங்கள்.”

‘”சீதா!”

“ப்ளீஸ் போய் விடுங்கள். உங்களிடம்தான் சொல்கிறேன். என் எதிரில் நின்று என்னை சித்திரவதை செய்ய வேண்டாம். நான்கு நாட்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நல்லவரைப் போல் நீங்க போட்டிருக்கும் இந்த வேஷம் எனக்குத் தாங்க முடியாத அருவெறுப்பைத் தருகிறது. நீங்க ஏன் இப்படி நடிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். நான் பட்ட வேதனைக்கு முன்னால் இந்த காயங்களின் வேதனை ஒன்றுமே இல்லை. எல்லாம் உங்க விருப்பம் போலவே நடக்கும். போதுமா? நீங்க அதற்காக நல்ல மனிதர் போல் வேஷம் போட்டுக் கொண்டு என் கண் முன்னாடி நிற்க தேவையில்லை. இத்தனை நாளும் நான் உங்களை ஏன் மதித்து வந்தேன் தெரியுமா? நீங்க என்னிடமிருந்து எதையும் மறைக்கவில்லை. என் மீது இருக்கும் வெறுப்பை கடுகளவு கூட மறைத்து வைக்கவில்லை உங்கள் மனதில்.”

“சீதா!”

“என்னை அப்படி பெயர் சொல்லி அழைக்காதீங்க. எனக்கு வேண்டியவர்களும், நெருக்கமானவர்களும்தான் அப்படி அழைப்பார்கள். நான் எப்படிப் போனால் உங்களுக்கு என்ன?” சீதா தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். “யார் இருக்காங்க எனக்கு? நான் யாருக்கு வேண்டும்? யாருக்குமே தேவையில்லை.”

வித்யாபதி மெதுவாக அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்துவிட்டான். அறையிலிருந்து சீதாவின் அழுகை இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. அந்த அழுகை அவன் இதயத்தைக் கத்தியால் கிழிப்பது போல் இருந்தது. அருகில் சென்று சீதாவை தேற்ற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் தன்னுடைய ஸ்பரிசம் பட்டாலே சுருங்கிக் கொண்டு விடும் போது என்னதான் செய்வது?

அவனுக்கு இந்த ஒரு வார காலத்தில் அழகான கனவிலிருந்து ஒரேயடியாக தரையில் வந்து விழுந்தாற்போல் இருந்தது. இவ்வளவு நாளாக அவன் சீதாவை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இந்திராவுடன் மனதளவில் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

சீதாவின் விபத்து அவனுக்கு ஒரு புது விஷயத்தை உணர்த்தியது. சீதாவை அவன் அளவுக்கு மீறி துன்புறுத்திக் கொண்டிருந்தான். இது தன்னுடைய குற்றமில்லையா? “என்னுடைய தவறு என்ன?” என்று சீதா அழுதுகொண்டே புலம்பியதைக் கேட்ட போது அவன் திகைத்துப் போய்விட்டான். உண்மைதான். இதில் சீதாவின் தவறுதான் என்ன? அவன் மனதில் இருபத்தி நான்கு மணி நேரமும் இதே கேள்வி குடைற்து கொண்டிருந்தது. அவன் இவ்வளவு காலமாக எவ்வளவு சுயநலமாக யோசித்து வந்திருக்கிறான்? தன்னுடைய சுகத்தை மட்டும்தான் பார்த்துக் கொண்டான். இன்னொரு நபரைத் துன்பத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருப்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கவில்லை. மை காட்! இந்தக் காரியத்தைச் செய்தது அவன்தானா? அவனுக்குக் குழப்பமாக இருந்தது. மனம் சுகத்தை விரும்பியது. இந்திராவிடம் நெருக்கமாக இருப்பது தவறு இல்லை என்று தூண்டிவிட்டது. ஆனால் மனச்சாட்சி அவனை உலுக்கி எடுத்தது. ஒரு அப்பாவிக்கு அநியாயம் செய்வதைக் காட்டிலும் மோசமான குற்றம் வேறு இல்லை என்றது. உன் படிப்பும், பண்பாடும் இதுதானா என்று கேள்வி கேட்டது.

வராண்டாவில் நின்றிருந்த வித்யாபதியிடம் சுபத்ரா வந்தாள். அவள் கையில் பாலில் கார்ன் ப்ளேக்ஸ் போட்ட கிண்ணம் இருந்தது. மகனைப் பார்த்ததும் சொன்னாள். “வித்யா! சீதா எதையுமே சாப்பிட மறுக்கிறாள். நான் போனதுமே “அங்கே வைத்து விடுங்கள்” என்பாள். ஆனால் சாப்பிட மாட்டாள். அப்படியே இருக்கும். சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினால் இது எனக்குப் பிடிக்காது. சாப்பிட முடியாது என்பாள்.” கிண்ணத்தை விதயாபதியின் கையில் வைத்தாள். “நீ போய் கொடுத்துப் பார். உன் பேச்சை தட்டமாட்டாள். ஒருக்கால் மறுத்தாலும் நயமாகவோ பயமாகவோ எடுத்துச் சொல்ல வேண்டியவன் நீ” என்றாள். அதற்குள் சின்ன மகள் கூப்பிட்டதால் உள்ளே போய்விட்டாள். வித்யாபதி ஒரு நிமிடம் தன் கையில் தாய் வைத்து விட்டுப்பொன கிண்ணத்தை பார்த்தான். பிறகு திட சங்கல்பத்துடன் சீதா இருந்த அறைக்குள் போனான். காலடிச் சத்தம் கேட்ட பிறகும் சீதா தலையைத் திருப்பிப் பார்க்கவில்லை. சூனியத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“சீதா!” அவன் கூப்பிட்டான்.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

“கார்ன் ப்ளேக்ஸ் கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடு.”

“எனக்குப் பசிக்கவில்லை.”

“சாப்பிட ஆரம்பித்தால் பசி தானாகவே வந்து விடும்.”

சீதா பதில் பேசவில்லை.

அவன் வந்து கட்டில் விளிம்பில் உட்கார்ந்து கொண்டான். சீதா மறுபக்கம் நகர்ந்துகொண்டாள். அவன் ஸ்பூனில் எடுத்தான்.

“எனக்கு பசியில்லை என்று சொன்னேனே?”

“நீ பொய் சொல்கிறாய் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இதோ பார். யார் மீதாவது கோபம் வந்தால் அவர்கள் மீதுதான் தீர்த்துக் கொள்ளணும். ஒருத்தர் மேல் கோபம் இன்னொருத்தரிடம் காட்டக் கூடாது. அது ரொம்ப அநியாயம்.”

“இப்போ நான் யார் மீது கோபத்தைக் காட்டினேன்?”

“என்மீது உனக்கு வந்த கோபத்தை உன் மீதே காட்டிக் கொள்கிறாய். தவறு செய்தது நான் என்றால் உன்னை நீ தண்டித்துக் கொள்கிறாய்.”

சீதா சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“இதோ பார். மனிதன் என்ற பிறகு தவறு செய்து சகஜம். நானும் அதற்கு அப்பாற்பட்டவன் ஒன்றும் இல்லை. சாதாரண மனிதன். வந்து சாப்பிடு ப்ளீஸ்.”

அதற்குள் சுபத்ராவும் அங்கே வந்தாள். “சாப்பிடும்மா சீதா! என் கண்ணில்லையா.”

“சாப்பிடுவாள். சாப்பிடவில்லை என்றால் இந்த வீட்டில் இனி யாருமே பச்சைத் தண்ணியைக் கூட தொடப் போவதில்லை” என்றான் வித்யாபதி.

“ஐயோ! என்ன இது?”

“அது அப்படித்தான்.”

சீதா சாப்பிட்டாள். அவளாகவே வாங்கி சாப்பிடப் போனபோது வித்யாபதி தடுத்துவிட்டு தானே ஊட்டிவிட்டான்.

“எனக்குக் குறைந்து விட்டது. இனி நீங்க ஆபீசுக்குப் போங்கள்.”

“உனக்குக் குறைந்து விட்டது என்று நீ சொல்லத் தேவையில்லை. நானே தெரிந்து கொண்டதும் போவேன். போதுமா? ஆபீசுக்குப் போகாவிட்டால்தான் என்ன? போன்தான் இருக்கிறதே? போனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தால் உலகமே நம்மிடம் வந்துவிடும்.”

“நீங்க வெளியில் போய் ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது.”

“என்னைப் பற்றி யோசிப்பதை விட்டுவிடு. உன்னைப் பற்றி யோசி.” மருந்துகளை கொண்டு வந்து கொடுத்தான். சீதா போட்டுக் கொண்டாள்.

அன்று மதியம் சீதாவுக்கு வித்யாபதி பத்தியச் சாப்பாட்டை தானே சாப்பிட வைத்தான். குழந்தைகள் எல்லோரும் அருகில் உட்கார்ந்து கொண்டார்கள். சீதா, வித்யாபதி கேரம் போர்ட் விளையாடினார்கள். வித்யாபதி தோற்றுப் போன போது குழந்தைகள் கைத்தட்டிச் சிரித்தார்கள். குழந்தைகள் பள்ளியில் போட்ட டிராமாவை நடித்துக் காட்டினார்கள். சீதா, வித்யாபதி, சுபத்ரா மூவரும் பார்த்தார்கள். சீதா கலகலவென்று சிரித்தாள். சிரித்துக் கொண்டிருந்த சீதாவை வித்யாபதி பார்த்துக் கொண்டிருந்தான்.

மாலையாகிவிட்டது, வித்யாபதி சீதாவுக்கு மருந்து கொடுத்தான். “இங்கே உட்கார்ந்திருந்தால் போரடிக்கிறதா? வராண்டாவுக்கு அழைத்துப் போகட்டுமா?” என்றான்.

சீதா தலையை அசைத்தாள். வேலைக்காரன் நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டான். சீதாவை வித்யாபதி கையைப் பிடித்து அழைத்து வந்து நாற்காலியில் உட்கார வைத்தான். ரேடியோவைப் போட்டான். எதிரே புல்தரையில் குழந்தைகள் ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவில் “அண்ணீ” என்று குரல் கொடுத்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். டீ வந்தது. வித்யாபதி வற்புறுத்தி சீதாவை ஹார்லிக்ஸ் குடிக்க வைத்தான். அவன் அறையிலிருந்து சால்வையைக் கொண்டு வந்து சீதாவின் தோளைச் சுற்றிலும் போர்த்தினான். சீதா நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்களில் வியப்பும், ஈரமும் பளபளத்தன.

“அசட்டுப்பெண்” என்று நினைக்கத் தோன்றியது அவனுக்கு. சீதா அதுபோல் உயிரோட்டத்துடன் உட்கார்ந்திருப்பதை கண்குளிர பார்க்க வேண்டும் என்று தோன்றியது. திரும்பத் திரும்ப அந்த விபத்தைப் பற்றிய நினைப்பே வந்து கொண்டிருந்தது. சீதா உயிர் பிழைத்தது சீதாவின் அதிர்ஷ்டம் இல்லை. தன்னுடையது. வாழ்நாள் முழுவதும் அவன் அனுபவிக்க வேண்டியிருந்த நரகவேதனையிலிருந்து மயிரிழையில் தப்பித்தான்.

அதற்குள் ஆபீசிலிருந்த போன் வந்தது. அவன் போய் பேசத் தொடங்கினான். சுழல் நாற்காலியில் உட்கார்ந்தபடி அப்படியும் இப்படியும் அசைந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தவன் தொலைவில் தென்பட்டுக் கொண்டிருந்த சீதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் போனில் பேசிவிட்டு. கடிதங்களை டிக்டேட் செய்து விட்டு வெளியே வந்த போது இருட்டிக் கொண்டிருந்தது. குழந்தைகள் தொலைவில் உட்கார்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். தாய் சமையல் அறையில் இருந்தாள். சீதா நாற்காலியில் பின்னால் தலையைச் சாய்த்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் ரேடியோ மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது.

வித்யாபதி ரேடியோவை அணைத்துவிட்டு. சீதாவில் கழுத்திற்குக் கீழேயும், முழங்காலுக்குக் கீழேயும் கைகளைப் போட்டுத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான்.

மருந்தின் மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சீதா கண்களைத் திறந்தாள். திறந்த வேகத்திலேயே அவை பாரமாக மூடிக் கொண்டன. தலையை அவன் மார்பில் சாய்த்துக் கொண்டாள்.

வித்யாபதி சீதாவை தூக்கிக் கொண்டு வந்து கட்டில்மீது படுக்க வைத்தான். போர்வையை போர்த்திவிட்டான். விடிவிளக்கைப் போட்டான்.

எட்டு மணிக்கு வலுக்கட்டாயமாக எழுப்பி பாலை குடிக்கச் செய்து, மருந்துகளைக் கொடுத்து படுக்க வைத்தான். சீதா ஆழ்ந்த உறக்கத்தில் சோர்ந்து போனாற்போல் படுத்திருந்தாள். வித்யாபதி பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்தபடி கால்களை ஸ்டுலில் நீட்டிக் கொண்டான். அவன் மனம் இன்னும் கலக்கத்தில் இருந்தது.

நள்ளிரவு வேளையில் சீதா அழுது கொண்டே எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

“சீதா! சீதா!” அவன் கையில் தட்டினான். சீதா கண்களைத் திறந்துப் பார்த்தாள். “நீங்க இங்கேதான் இருக்கீங்களா? என்னை விட்டுவிட்டுப் போய்வீட்டீர்களாம். கனவு வந்தது” என்றாள் பேதையைப் போல் பார்த்துக் கொண்டே. அவன் எழுந்து வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டு சீதாவை அருகில் இழுத்துக் கொண்டான்.

சீதா அவனை சந்தேகமாக பார்த்தாள்.

“உன்னை விட்டுவிட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். சரிதானே. படுத்துக் கொள். தூங்கு” என்றான். சீதா இன்னும் அவநம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் சீதாவை மேலும் அருகில் இழுத்துக் கொண்டு அவள் தலையை தோளில் சாய்த்துக் கொண்டான்.

“இது… இது உண்மைதானா?”

“எது?”

“நான் உங்களுக்கு நெருக்கமாக இருப்பது.”

“உண்மைதான். தூங்கு” என்றான் அவன்.

சீதா கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டாள். வித்யாபதிக்கும் உறக்கம் வந்துவிட்டது. பின்னால் தலையணையில் சாய்ந்து கொண்டான். மறுநிமிடம் ஆழ்ந்த உறக்கம் அவனைத் தழுவிக் கொண்டது.

நடுவில் எப்பொழுதோ அவனுக்கு விழிப்பு வந்தது. நெஞ்சின்மீது கனமாக இருந்தது. சீதா அவன் மார்பில் சாய்ந்தபடி படுத்திருந்தாள். அவன் திடுக்கிட்டவன் போல் பார்த்தான். மெதுவாக சீதாவை நகர்த்தி தலையணை மேல் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.

வராண்டாவுக்கு வந்தவனுக்கு சில்லென்று காற்று முகத்தில் வந்து தாக்கியது. வானத்தில் பிறைச் சந்திரன் தென்பட்டான். அதைப் பார்த்ததுமே இந்திராவின் நினைவு வந்தது. அவன் மனதில் வலி ஏற்பட்டது. மெல்லியக் கயிற்றால் கழுத்தை நெறிக்கும் போது ஏற்படும் வலியைப் போன்றது.

வித்யாபதியின் மனம் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது. அவன் மௌனமாக யாருக்கும் தெரியாமல் அந்த வேதனையை சகித்துக் கொண்டிருந்தான். இந்த மனம் இன்னும் எவ்வளவு வேதனையை அனுபவிக்க வேண்டுமோ? தான் இவ்வளவு நாளாக போன் பண்ணவில்லை என்று இந்திரா எவ்வளவு வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாளோ? மாலையில் பிரசாத் போன் செய்தான். இந்திராவும் அவனும் சேர்ந்து முதல்நாள் மாலை சினிமாவுக்குப் போனார்களாம். இந்திராவுக்கு வருத்தமாக இருக்கும். அது தனக்குத் தெரியும். தானும் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறான். அது இந்திராவுக்குத் தெரியுமா என்று அவனுக்குத் தோன்றியது.

அத்தியாயம்-42

இந்திரா கால்வாய் கரையில் நடந்து கொண்ருந்தாள். அக்கரையில் வித்யாபதி தென்பட்டுக் கொண்டிருந்தான். இந்திரா கால்வாயில் இறங்கி அவனை நோக்கிப் போக வேண்டும் என்று பார்க்கிறாள். வித்யாபதி வேண்டாம் என்று சொல்கிறான். “ஆழமாக இருக்கு. வரவேண்டாம்” என்று கத்துகிறான். இந்திரா கால்வாயில் இறங்கும் முயற்சியை விட்டுவிட்டு மறுபடியும் கரையை ஒட்டியே நடக்கிறாள். அவ்வாறு முன் நோக்கிப் போனால் கால்வாயின் அகலம் குறைந்து விடும் என்றும் ஆழம் இருக்காது என்றும், வித்யாபதியை அடைவது சுலபம் என்றும் இந்திராவுக்குத் தோன்றியது. ஆனால் இந்திரா எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. போகப் போக அந்தக் கால்வாய் இன்னும் அகலமாகிக் கொண்டே வந்தது.

கரையை ஒட்டி தண்ணீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. மறுகரையில் மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் வித்யாபதி கண்ணுக்குத் தென்படவில்லை. இந்திராவுக்கு பயமாக இருந்தது. தனிமையாகவும் இருந்தது, ஐயோ .. அவள்தான் எவ்வளவு முட்டாள்தனமான காரியம் பண்ணிவிட்டாள்? முந்தைய இடத்திலேயே துணிந்து கால்வாயைத் தாண்டியிருந்தால் வித்யாபதியிடம் போய் சேர்ந்திருக்கலாமே? அவள் கோழைத்தனமே அவளை அவனிடமிருந்து பிரித்துவிட்டது. இடைவெளியை கூட்டியது.

இந்திராவுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. ஒருபக்கம் வித்யாபதியும் கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் வீட்டை விட்டு தனியாக வந்துவிட்டாள். தொலைவில் ஏதோ வீடு இருப்பது தென்பட்டது. அங்கே வீட்டின் முன்னால் கயிற்றுக் கொடியில் துணிகளை உலர்த்தியிருந்தார்கள். இந்திரா அந்த வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். தான் வழிதவறி வந்து விட்டதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களின் உதவியோடு திரும்பவும் தன் வீட்டுக்குப் போய் சேர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். மணலில் அடியெடுத்து வைப்பது ரொம்ப சிரமமாக இருந்தது.

இந்திராவுக்கு அழுகை வந்தது. அது அவள் தன்னந்தனியாக இருந்ததற்காக அல்ல. வித்யாபதி தன்னை இப்படி விட்டுவிட்டுப் போய் விட்டானே? அவனுக்குத் தான் தேவையில்லையா? தன்மீது இருந்த விருப்பம் குறைந்து போய் விட்டதா? தனக்கு என்னவானாலும் அவன் பொருட்படுத்த மாட்டானா? இந்திரா அழுதுகொண்டே துணிகள் உலர்த்தியிருந்த வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். சீ.. சீ… நான் ஒன்றும் சின்னப் பெண் இல்லை. அழக்கூடாது என்று மனதைத் திடப்படுத்திக் கொள்ள முயன்றபோது மேலும் அழுகை வந்தது.

”இந்தூ! இந்தூ! என்ன இது? ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” பவானி தட்டி எழுப்பினாள். இந்திரா திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தாள்.

“கெட்ட கனவு ஏதாவது வந்ததா? எழுந்துகொள். போய் முகம் அலம்பி, வாயைக் கொப்புளித்துவிட்டு வந்து படுத்துக்கொள்” என்றாள்.

இந்திரா எழுந்து கொண்டு அக்கா சொன்னபடி செய்துவிட்டு வந்து படுத்தாள். ஆனால் தூக்கம் வரவில்லை. நேரத்தைப் பார்த்தால் மணி நாலடித்து விட்டிருந்தது. பவானி மறுபடியும் தூங்கிவிட்டாள். இந்திரா கட்டிலில் எழுந்து உட்கார்ந்தாள். அந்த கனவு இன்னும் நடப்பது போலவே இருந்தது. அவள் இதயம் பாரமாகிவிட்டது.

“வித்யா! தனிமையில் நான் எவ்வளவு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேனோ உனக்குத் தெரியுமா? நீ எங்கே போய்விட்டாய்? நான் ஒருத்தி இந்த உலகத்தில் இருப்பது உனக்கு நினைவே இல்லையா? ஒருவேளை போன் செய்யவில்லை என்றாலும், உன்னைப் பார்க்க முடியவில்லை என்றாலும் நான் எவ்வளவு துடிதுடித்துப் போய் விடுவேன் என்று உனக்குத் தெரியாதா? தெரிந்தும் இப்படி மௌனமாக ஏன் இருந்துவிட்டாய்?”

இந்திராவின் கண்களில் கிர்ரென்று நீர் சுழன்றது. எவ்வளவு நாட்கள் இந்த வேதனை? இந்திராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த வீட்டை எவ்வளவு ஆசையோடு வாங்கியிருப்பாள்? எவ்வளவு கனவு கண்டிருப்பாள்? இப்பொழுது நடப்பது என்ன? இந்திராவுக்கு அந்த வீட்டை விட்டு ஓடிப்போய் விட வேண்டும் போல் இருந்தது.

இந்த வீட்டில் தானும் வித்யாபதியும் சேர்ந்து இருக்கப் போகிறோம் என்று நினைத்திருந்தாள். இப்பொழுது இந்த வீட்டைப் பார்த்தால் மூல விக்கிரகம் இல்லாத கொவிலைப் போல் இருந்தது. இந்திராவுக்கு இந்த வீட்டை விட்டு, இந்த ஊரைவிட்டு எங்கேயாவது தொலைவிற்கு ஓடிப் போய் விடவேண்டும் என்று தோன்றியது. தான் வேண்டும் என்றால் வித்யாபதி தன்னைத் தேடிக் கொண்டு வருவான். அப்படி வரவில்லை என்றால் தான் தேவையில்லை என்று அர்த்தம்.

அன்று மதியம் விசாகப்பட்டிணத்திலிருந்து சித்தப்பா எழுதிய கடிதம் வந்திருந்தது. அங்கே ஷிப்யார்டில் நல்ல வேலை காலியாக இருக்கிறதாம்.

“எனக்கும் உன் சித்திக்கும் வயதாகிவிட்டது. குழந்தைகள் இல்லாத எங்களுக்கு யாராவது வந்து எங்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. உன் சித்திக்குத்தான் உன்மீது பிரியம் என்று உனக்குத் தெரியுமே? அதனால்தான் உன்னை இங்கே வரச்சொல்லி எழுதுகிறேன்.

இந்த வேலை உனக்குக் கட்டாயம் கிடைக்கும். பாங்க் வேலையை விட மேலானது இது. சீக்கிரத்தில் பிரமோஷன் கிடைக்கும். உனக்கு அவ்வளவு தூரம் நம்பிக்கை இல்லையென்றால் நாலைந்து மாதங்கள் லீவ் போட்டு விட்டு வா.

இங்கே உனக்குச் சூழ்நிலை பிடித்திருந்தால் சேர்ந்து கொள்ளலாம். உன் சித்தி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாள். நீ வந்தாயானால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உன் கடிதத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நீ மறுக்க மாட்டாய் என்று ஆசையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.”

இந்திர தலையணைக்கு அடியில் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்து மறுபடியும் படித்தாள். பிறகு ஆழ்ந்த யோசனையில் மூழ்கிவிட்டாள்.

அத்தியாயம்-43

மறுநாள் இந்திரா ஆபீசுக்குப் போகவில்லை.

“என்ன இந்தூ? ஆபீசக்கு நேரமாகிவிட்டது. இன்னும் குளிக்கப் போகாமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறாயே?” என்றாள் பவானி.

“ஆபீசுக்குப் போகப் போவதில்லை அக்கா.”

“போகவில்லையா? ஏன்?”

“உடம்பு சரியாக இல்லை.” முணுமுணுப்பது போல் சொன்னாள். “டாக்டரிடம் போகிறாயா?”

“தேவையில்லை.”

பவானி மேற்கொண்டு பேசவில்லை. வாதாடவும் இல்லை. இந்திரா வீட்டில் இருந்தால் பவானிக்கு நிச்சிந்தையாக இருக்கும். வீட்டை இந்திராவின் பொறுப்பில் விட்டுவிட்டு கடைத்தெருவுக்கும், சிநேகிதிகளின் வீட்டிற்கும் போய் வரலாம். வெளிவேலைகள் நிம்மதியாக முடித்துக் கொள்ளலாம். பத்தரைக்கெல்லாம் பவானி தயாராகி “காமேஸ்வரிக்கு உடம்பு சரியாக இல்லையாம். போய் விசாரித்துவிட்டு வருகிறேன்” என்று போய்விட்டாள்.

இந்திரா எழுந்து உட்கார்ந்தாள். குளிக்கப் போகவும் மனம் வரவில்லை. வீட்டில் அப்படி தனியாக உட்கார்ந்து இருப்பது இந்திராவுக்குப் பயமாக இருந்தது. இனி வாழ்நாள் முழுவதும் இப்படியேதான் இருக்குமோ? தான் என்ன செய்தாள்? வித்யாபதியுடன் நெருக்கமாக இருப்பதற்காக சிநேகிதிகளை எல்லாம் விட்டுவிட்டாள். உறவினர்கள் வீட்டுக்குப் போவதையும் நிறுத்திக் கொண்டாள். இப்பொழுது அவனே இல்லை. இந்தத் தனிமையை எப்படி போக்கிக் கொள்வது என்று தெரியவில்லை. இந்திராவுக்கு வாழ்க்கையே விரக்தியாய் தோன்றியது. ரொம்ப அனுபவம் கண்டுவிட்டது போலவும், வயது கூடிவிட்டது போலவும் இருந்தது. கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் கனவு காணத் தொடங்கிவிடுவாளே? இப்பொழுது அந்த ஆர்வமெல்லாம் எங்கே போய்விட்டது?

இதுவரையில் ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாததுபோல் வாழ்க்கை வேகமாக போய்க் கொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வித்யாபதியுடன் சேர்ந்து கழித்துக் கொண்டிருந்தாள். அவன் எதிரில் இருந்தால் அவனுடன், அவன் இல்லாதபோது அவனைப் பற்றி எண்ணங்களுடன் நேரம் போவதே தெரியாமல் இருந்தது. அவன் வருவதாகச் சொன்னால் எந்தப் புடவையைக் கட்டிக் கொள்வது? சாப்பிடுவதற்கு என்ன தருவது? அவனுடன் எந்த இடத்திற்குப் போவது? இப்படி பல விதமான யோசனைகள். அவன் வந்து விட்டுப் போன பிறகு அவன் பேச்சு, செயல்கள், குறும்புகள், அந்த நினைவுகள். மறுபடியும் அவன் வரும் வரையில் அந்த நினைவுகளே போதுமானதாக இருக்கும். காலம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இத்தனை நாளும் ஆர்வத்துடன், உற்சாகத்துடன் தன்னை மகிழவைத்துக் கொண்டிருந்த காலமானது இப்பொழுது எரிச்சலை தந்து கொண்டிருக்கிறது. உயிரை எடுக்கிறது. இதெல்லாம் காலத்தின் கோளாறா? அல்லது குறை தன் மனதில் இருக்கிறதா? இந்திரா மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தாள்.

வித்யாபதி ஏன் வரவில்லை? போன்கூட பண்ணவில்லையே ஏன்? அவன் மௌனத்தின் காரணம் என்னவென்று இந்திராவுக்குப் புரியவில்லை. அவன் சீதாவை விட்டு கொஞ்சம் கூட நகராமல் பக்கத்திலேயே இருப்பது இந்திராவுக்கு வியப்பாக இருந்தது. அந்த வியப்பிலிருந்து எரிச்சலும். எரிச்சலிலிருந்து கொபமும் ஏற்பட்டன. இல்லை இல்லை. அவன் சுபாவம் தனக்கு நன்றாகவே தெரியும். அவனுக்கு யாரையும் வருத்தப்படுத்தும் சுபாவம் கிடையாது. ஏதோ சொல்ல முடியாத காரணம் இருந்திருக்கும். போகட்டும், அந்தக் காரணமாவது தெரிந்தால் நன்றாக இருக்கும். தனக்கு நிம்மதி கிடைக்கும்.

அதற்குள் காலடிச் சத்தம் கேட்டது. இந்திரா நிமிர்ந்து பார்ப்பற்குள் பிரசாத் உள்ளே வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் கவலை தென்பட்டது. வரும் போதே கேட்டுவிட்டான்.

“என்ன? உங்களுக்கு உடம்பு சரியாக இல்லையாமே?”

“யார் சொன்னார்கள்?”

“உங்க அக்கா. பஸ்ஸ்டாண்டில் பார்த்தேன். என்னவாச்சு?”

“ஒன்றும் ஆகவில்லை.”

“உங்களைப் பார்த்தால் ஏதோ ஆகிவிட்டாற் போலவே இருக்கு. உங்கள் கவலை என்னவென்று சொல்லாமல் மறைக்கிறீங்க.”

“நான் எதையும் மறைக்கவில்லை.”

“டபாய்க்காதீங்க. நாம் உலகத்தை எல்லாம் ஏமாற்றிவிடலாம். ஆனால் நண்பர்களை ஏமாற்ற முடியாது. உண்மையைச் சொல்லுங்கள். என்னதான் நடந்தது? யாராவது ஏதாவது சொன்னார்களா?”

“ஊஹும்.”

“பின்னே ஏன் இப்படி இருக்கீங்க?”

“எப்படி இருக்கிறேன்?”

“எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன்.”

இந்திரா சிரித்துவிட்டாள்.

“அப்பாடா. சிரித்துவிட்டீர்கள். அப்படி என்றால் விஷயம் நான் ஊகித்தக் கொண்டாற்போல் சீரியஸ் இல்லை என்று அர்த்தம்” என்று வந்து உட்கார்ந்து கொண்டான்.

“நீங்க ஆபீசக்குப் போகவில்லையா?” என்றாள் இந்திரா.

“எங்கே? புறபட்டுக் கொண்டிருந்த போது இந்தச் செய்தி தெரிந்தது. அந்த பஸ்ஸுக்கு பதில் இந்த பஸ்ஸில் ஏறிவிட்டேன். நேற்று இரவு நீங்க நன்றாக தூங்கினீங்களா இல்லையா?”

“ஊஹும்.”

“அட! நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். உண்மையைச் சொல்லணும் என்றால் ரொம்ப நாட்களுக்குப் பிறகு நிச்சிந்தையாக, நிம்மதியாக தூங்கினேன்.”

”என்ன விவேஷம்?”

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. நேற்று உங்களுடன் பேசியபிறகு என் மனதிலிருந்த பாரம் நீங்கிவிட்டாற்போல் இருந்தது.”

இந்திரா பதில் பேசவில்லை.

“ஹலோ இந்தூ! நீ வீட்டில்தான் இருக்கிறாயா? உங்க ஆபீசுக்குப் போய்விட்டு வந்தேன் தாயே” என்று சொல்லிக் கொண்டே ரத்னா உள்ளே வந்தாள்.

“வா… வா… ரொம்ப நாட்களுக்குப் பிறகு தரிசனம் தருகிறாய்” என்றாள் இந்திர. ரத்னா வந்த உட்கார்ந்து கொண்டே பிரசாதை கேள்விக் குறியுடன் பார்த்தாள். இந்திரா பிரசாதை ரத்னாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

ரத்னாவின் நடையுடை பாவனையில் மாற்றம் தெரிந்தது. விலை உயர்ந்த புடவையை அணிந்திருந்தாள். கழுத்திலும் காதிலும் நகைகள் இருந்தன. பேக்கிலிருந்து திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்தாள்.

“வியாழக்கிழமை பதினாறாம் தேதி கல்யாணம்.” வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னாள்.

“நிஜமாகவா? எவ்வளவு நல்ல செய்தி. திருடி! என்னிடம் இதுவரை மூச்சுகூட விடவில்லையே” என்றாள் இந்திரா.

“சாரி இந்தூ! எதிர்பாராமல் நிச்சயமாகிவிட்டது. யாருக்குமே தெரியாது. உண்மையைச் சொல்லணும் என்றால் எனக்குக் கூட நம்பிக்கை இல்லை. நடக்குமோ நடக்காதோ தெரியாது.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“இந்தத் திருமணத்தில் எங்க வீட்டாருக்கு விருப்பமில்லை.”

“அடடா. அப்படியா?”

“கல்யாண வேலைகளை, பத்திரிகை கோடுப்பது முதல் எல்லாம் நானே செய்து கொண்டிருக்கிறேன்.”

‘என்ன இது? என்னிடம் சொன்னால் நான் செய்திருக்க மாட்டேனா?”

“நீ கல்யாணத்திற்கு வந்தால் போதும். அதுவே பாக்கியம் என்று நினைத்துக் கொள்வேன்.” ரத்னா பத்திரிகையை இந்திராவுக்குக் கொடுத்துவிட்டு பிரசாதுக்கும் கொடுத்தாள்.

”கட்டாயம் வர வேண்டும்” என்றாள்.

“இந்திரா வருவதாக இருந்தால் நானும் வருகிறேன்” என்றான் அவன். பத்திரிகையை எடுத்து மணமகனின் பெயரைப் பார்த்த இந்திரா திடுக்கிட்டாள். “பாலகிருஷ்ணன் என்றால்?” ரத்னாவை சந்தேகத்துடன் பார்த்தாள்.

“அவரேதான் இந்தூ! எங்க ஹவுஸ் ஓனர்.”

“என்ன ரத்னா இது?” கலவரத்துடன் கேட்டாள்.

“அவருக்கு என் வயதை ஒற்ற குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதுதானே உன் தயக்கம்? அதனால் என்ன? என்னால் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். எங்க வீட்டிலும் இதனால்தான் இஷ்டமில்லை. நான் அவர் மகளைப் போல் இருப்பேன் என்றும், வேண்டாம் என்றும் ரகளை செய்தார்கள். பண்ணிக்கொள்பவள் நான். நானே ஒப்புக்கொண்ட பிறகு உங்களுக்கு என்ன ஆட்சேபணை என்றேன். எங்க இருவருக்கும் ஒரு வருஷமாக அறிமுகம் இருக்கிறது. கல்யாணம் பண்ணிக் கொள்வது நல்லது என்று நினைத்தோம். அவருடைய மகள், மகன்களுக்கும் இதில் விருப்பம் இல்லை. அவர்கள் வீட்டிலும் தகராறுதான்.”

இந்திரா பதில் பேசவில்லை. ரத்னா மேலும் சொன்னாள். “அதான் சொன்னேனே, ஒரு வருஷமாக எனக்கு அவரைத் தெரியும். விட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை எங்களுக்கு. அவர் இரக்கத்தின் காரணமாக வற்புறுத்தவில்லை. எனக்கு அவரிடம் மதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில்தான் அவருடைய மனைவி இறந்து போய்விட்டாள். அவளுக்கு உடல்நலம் சரியாக இல்லாத போது நான் நிறைய உதவி செய்திருக்கிறேன். அந்த சமயத்தில்தான் எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகம் ஏற்பட்டது. அவரைக் கல்யாணம் செய்து கொண்டால் என் வாழ்க்கை நிம்மதியாகக் கழிந்துவிடும். இந்தூ! என்னைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே? இதுவரையில் ஸ்திரமான வேலை எதுவும் இல்லை. அண்ணன்களுக்கு என்னிடம் அக்கறை இல்லை. நல்ல உடைகளுக்கும், நகைகளுக்கும் ஏங்கிக்கொண்டிருந்தேன். இவரைக் கல்யாணம் செய்து கொண்டால் அவை எனக்கு வேண்டிய அளவுக்குக் கிடைக்கும். அதனால்தான் பண்ணிக் கொள்கிறேன். இந்த காதல் கீதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கையில் பணம் ரொம்ப முக்கியம். காதல் இல்லாவிட்டாலும் வாழ்ந்து விட முடியும். ஆனால் பணம் இல்லாவிட்டால் வாழ முடியாது. வரதட்சணை கொடுக்க முடியாத, வேலையும் இல்லாத என்னை எந்த ஆண்மகன் பண்ணிக் கொள்வான்? இந்தக் கல்யாணச் செலவைக்கூட அவர்தான் செய்கிறார். எந்த கவலையும் இல்லாமல் நான் நிம்மதியாக இருக்கிறேன்” என்றாள்.

இந்திரா வாயடைத்துப் போய் உட்கார்ந்துவிட்டாள். ரத்னாவைப் பார்க்கும் போது புதுநபராக காட்சியளித்தாள். ரத்னா ஏற்கனவே இரண்டு மூன்று பையன்களுடன் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு வெளியில் வந்திருக்கிறாள். ஒருத்தன் கைவிட்டுவிட்டுப் போனான். இன்னொருத்தன் வேறு பெண்ணை பண்ணிக் கொண்டு இந்த ஊரிலேயே இருந்தாலும் ரத்னாவை முன்பின் பார்க்காதது போல் நடந்து கொண்டான். ஒருக்கால் ரத்னாவுக்கு இந்த விவகாரங்களால் காதல் மீதே நம்பிக்கை போய் விட்டிருக்கும்.

“கல்யாணத்திற்குக் கட்டாயம் கட்டாயம் வரவேண்டும்.” வரவேண்டும்.” ரத்னா ரத்னா கிளம்பும்முன் சொன்னாள்.

இந்திரா தலையை அசைத்தாள.

“சாரி இந்தூ! உன் வீட்டுக் கிரகப்பிரவேசத்திற்கு வர முடியவில்லை. நான் ஊரில் இல்லை. வீடு நன்றாக இருக்கிறது. வித்யாபதி வருகிறானா?” என்று கேட்டாள் ரத்னா.

இந்திரா இல்லை என்பது போல் குறுக்காக தலையசைத்தாள்.

“இந்த ஆண்களே இப்படித்தான். கல்யாணம் ஆனதுமே அதற்கு முன்னால் இருந்த காதல் விவகாரங்களை எல்லாம் மறந்து விட்டாற்போல் நடந்து கொள்வார்கள். நாமும் அப்படிச் செய்ய முடிந்தால் சுகமாக இருப்போம். ஆனால் இந்தப் பெண்மனம் இருக்கிறதே. அது லேசில் எதையும் மறக்காது. வித்யாபதி சீதாவுடன் நன்றாகத்தான் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறான்.”

இந்திராவின் முகம் சிவந்துவிட்டது. தலையைத் திருப்பிப் பார்த்தாள். பிரசாத் ஏற்கனவே அங்கிருந்து எழுந்து போய் தொலைவில் இருந்த புத்தக அலமாரியை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். ரத்னாவுக்கு அந்த அறையில் இன்னொரு நபர் இருந்த விஷயம் அப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது.

“ஐயாம் சாரி” என்றவள் “கண்டிப்பாக வரணும்” என்று மேலும் எச்சரித்துவிட்டு போனாள்.

இந்திரா பிரசாத் பக்கம் பார்த்தாள். இவனுக்கு வித்யாபதியைப் பற்றித் தெரியுமா?

பிரசாத் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அருகில் வந்தான். “உங்க சிநேகிதியைப் பார்த்தால் இரக்கமாக இருக்கிறது இந்திரா” என்றான்.

“ஏன்?”

“வாழ்க்கையில் காதலைவிட பணம்தான் முக்கியம் என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்கிறாள். அந்தப் பணம் கிடைத்த பிறகு காதலுக்கு முன்னால் அது எவ்வளவு துச்சமானது என்று புரியும்.”

இந்திரா கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னாள். “நீங்க சொன்னது உண்மைதான். ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தாதுன்னு நினைக்கிறென். காதலைப் பற்றித் தெரிந்தவர்களுக்குத்தான் அது புரியும்.”

“அதுவும் சரிதான்” என்றான் அவன்.

பவானி வந்தாள். பிரசாத் அன்று ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டான். இந்திராவை வலுக்கட்டாயமாக ரவீந்திர பாரதியில் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றான். இந்திரா மாட்டேன் என்ற போது பவானி சத்தம் போட்டாள். “கொஞ்சம் வெளியில் போய்விட்டு வந்தால் மனதிற்கு அமைதியாக இருக்கும்” என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

பிரசாதும், இந்திராவும் டாக்ஸியில் ரவீந்திர பாரதிக்கு வந்தார்கள். பிரசாத் இறங்கிக் கொண்டு இந்திராவுக்காகக் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். டாக்ஸியை விட்டு இறங்கிக் கொண்டிருந்த இந்திரா தொலைவில் படியேறிப் போய்க் கொண்டிருந்த நபரைப் பார்த்ததும் பேயறைந்தாற்போல் நின்றுவிட்டாள்.

வித்யாபதி போய்க் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் சீதா இருந்தாள். மஞ்சள் நிறத்தில் சிவப்பு பார்டருடன் ஷிபான் புடவையை உடுத்தியிருந்தாள். தோளைச் சுற்றிலும் சால்வை இருந்தது. அது நழுவிக் கொண்டிருந்த போது வித்யாபதி சரிசெய்து திரும்பவும் போர்த்திவிட்டான். சீதா படியேறிக் கொண்டிருந்த போது அவன் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு தாங்குவது போல் அழைத்துச் சென்றான். பிரசாத் டாக்ஸிக்காரனுக்கு பணம் கொடுத்துவிட்டு மீதி சில்லரையை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு இந்தப் பக்கம் திரும்பியபோது இந்திரா கண்களை கைகளால் பொத்தியபடி முன்னால் குனிந்து உட்கார்ந்திருந்தாள்.

“என்னவாச்சு?” பிரசாத் பதற்றத்துடன் கேட்டான்.

“தலை சுற்றுகிறது. என்னால் நடக்க முடியாது. நீங்க புரோக்கிராம் பார்த்துவிட்டு வாங்க. நான் போய் விடுகிறேன். டிரைவர்! என்னை வீட்டில் இறக்கிவிடு” என்றாள்.

“என்ன இது? நான் உங்களுக்காக வந்தேனே தவிர நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக இல்லை. உங்களுக்கு உடம்பு சரியாக இல்லை என்றால் போய்விடலாம். டிரைவர்! வீட்டுக்குப் போகவிடு.” பிரசாத் ஏறி உட்கார்ந்து கொண்டு கதவைச் சாத்தினான்.

டாக்ஸி கிளம்பியது. இந்திரா நெற்றிப்பொட்டை அழுத்திக் கொண்டு கண்களை மூடியபடி சீட்டில் சாய்ந்துகொண்டாள்.

பிரசாத் ஒரு வினாடி தயங்கினான். பிறகு துணிந்து இந்திராவின் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். இந்திராவின் உடல் தளிர் இலை போல் நடுங்கிக் கொண்டிருப்பதை கவனித்தான். என்னவாகிவிட்டது அவளுக்கு?

அத்தியாயம்-44

இந்திரா ரத்னாவின் திருமணத்திற்கு போயிருந்தாள். பிரசாதும் வந்திருந்தான். ரத்னாவின் கழுத்தில் தாலியைக் கட்டிய பாலகிருஷ்ணனைப் பார்த்து வந்தவர்கள் எல்லோரும் உள்ளூர சிரித்துக் கொண்டார்கள். அவருக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கருமை நிறம். பானை வயிறு. ரத்னாவைத் தனியாக பார்க்கும் போது முதிர்ந்த மணமகளாக தென்பட்டாலும் அவருக்குப் பக்கத்தில் சிறியவளாகத் தோன்றினாள். சிலர் வெளிப்படையாகவே விமரிசனம் செய்தார்கள். “இது பணத்திற்காக செய்து கொண்ட கல்யாணம். கலிகாலம்! பெண்கள் ரொம்பத்தான் துணிந்து விட்டார்கள்” என்றார்கள் சிலர்.

ரத்னாவின் விருப்பம் மட்டும் நூற்றுக்கு நூறு சதவீதம் பலித்துவிட்டது. விலையுயர்ந்த ஜரிகைப் புடவை. உடல் முழுவதும் நகைகள். ரத்னாவின் கண்கள் காதல் திருமணம் நடந்தாற்போலவே மின்னிக் கொண்டிருந்தன. அடிக்கடி தன் புடவையை, நகைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். திருமணத்திற்கு அவருடைய பிள்ளைகளும் வந்திருந்தார்கள். மகள்கள் ரத்னாவைத் திட்டித் தீர்த்தார்கள். ஆகமொத்தம் அந்தத் திருமணம் கேலிக்கூத்துச் சடங்காக நடந்து முடிந்தது.

இந்திராவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ரத்னா இப்படி பைத்தியக்காரத்தனமாக நாலுபேர் எள்ளி நகையாடும்படி நடந்துகொண்டு விட்டாளே என்று நினைத்துக் கொண்டாள்.

பிரசாத் இந்திராவின் அபிப்பிராயத்தை மறுத்துச் சொன்னான். “இந்திரா! நீங்க ரொம்பவும் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கீங்க. ரத்னா தனக்கு வேண்டியதை அடைந்துவிட்டாள். உலகம் என்ன சொன்னாலும் பொருட்படுத்தவில்லை. அந்தத் துணிச்சல் இருப்பவர்களுக்கு வாழ்க்கை சந்தோஷமாகவே இருக்கும். எந்தத் துணிச்சலும் இல்லாத நம்மைப் போன்றவர்கள்தான் திரிசங்கு சுவர்க்கத்தில் ஊசலாடிக் கொண்டு இருப்போம்” என்றான்.

இந்திராவுக்கு அதுவும் சரிதான் என்று தோன்றியது.

“அந்தப் பெண்ணின் முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பாருங்கள். தான் விரும்பியதை அடைந்து விட்டோம் என்ற சந்தோஷம் அது. சிலருக்கு வாழ்க்கையில் காதல் வேண்டும் என்று தோன்றும். சிலருக்கு, பணம், இன்னும் சிலருக்கு அதிகாரம், சிலருக்கு நல்ல குணம்… இப்படி தங்களுக்கு வேண்டியவற்றுக்காக எல்லோரும் தவித்துக் கொண்டிருப்பார்கள். ஒருவரைப் ஒருவரைப் பார்த்து அடுத்தவர் விமரிசிக்க வேண்டியதில்லை.”

பிரசாத் விலாவாரியாகவும், இரக்கத்தோடும் மனிதர்களைப் பற்றி யோசிப்பான் என்று தோன்றியது. இப்படிப் பட்டவர்களுடன் எந்தப் பிரச்னையும் இருக்காது. இவர்கள் எப்போதும் எதிராளியைப் புரிந்து கொண்டு சமாதானமாகப் போக வேண்டும் என்று நினைப்பார்கள்.

இந்திராவும், பிரசாதும் வீட்டுக்கு வந்த போது தூரத்துச் சொந்தம் ஆன முத்துசாமி உட்கார்ந்திருந்தார். இந்திராவுடன் உள்ளே வந்த பிரசாதை எடைபோடுவது போல் கூர்ந்து பார்த்தார். “பவானி! இந்தப் பையன் யார்?” என்றார்.

“இந்திராவுடன் வேலை பார்க்கிறான். நம்மவர்கள்தான். தூரத்துச் சொந்தம்” என்றாள். பவானியின் சுபாவமே அப்படித்தான். உறவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மவர்கள் என்று உறவு கொண்டாடுவாள்.

“கல்யாணம் ஆகிவிட்டதா அவனுக்கு?”

“இல்லை.”

அவர் இந்திராவையும், பிரசாதையும் சந்தேகத்துடன் பார்த்தார். “இந்திரா கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லையா?” என்றார்.

“செய்துகொள்ளணும் என்று நினைத்துவிட்டால் மட்டும் போதுமா தாத்தா. அந்த வேளை வர வேண்டாமா?” என்றாள் பவானி காபியைக் கலந்து கொண்டே.

“மனம் இருந்தால் வேளை தானாகவே வந்துவிடும். அந்த வித்யாபதியைப் பண்ணிக்கொள்ளப் போகிறாள் என்றாய். அவனானால் பணக்கார வீட்டுப்பெண்ணை பண்ணிக் கொண்டு லட்சணமாக குடித்தனம் செய்து கொண்டிருக்கிறான். உன் தங்கைக்கும் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக எவனையாவது பார்த்து முடிக்க வேண்டாமா? வயது முதிர்ந்துவிட்டால் எந்த இரண்டாம் தாரமாகவோ..”

இந்திரா வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டே விடு விடென்று அவர் அருகில் சென்றாள். “தாத்தா! என்னுடைய கல்யாணத்தைப் பற்றி உங்களுக்கு எதுக்கு?” என்றாள்.

அவர் கொஞ்சமும் பயப்படவில்லை. “என்னம்மா இது? என் தம்பியின் பேத்தி நீ. உன்னைப் பற்றி நான் இல்லாவிட்டால் யார் விசாரிக்கப் போகிறார்கள்? அப்போ அந்த வித்யாபதியுடன் சுற்றிக் கொண்டு இருந்தாய். இப்போ இந்தப் பையனுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறாய் என்று எல்லோரும் பேசிக் கொள்கிறாளர்கள். என் வாழ்க்கை என்னுடையது என்றால் எப்படி? நம் குடும்பகௌரவம்னு ஒன்று இருக்கே? கல்யாணமே பண்ணிக் கொள்ளவே போவதில்லை என்றால் வீட்டோடு கிடந்து தொலை. நீ விட்டிலேயே இருந்து கொண்டு எப்படிப் போனாலும் யாருக்கும் அக்கறையில்லை. தெருவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது?”

“தாத்தா!” அதற்குள் பவானி அங்கே வந்துவிட்டாள். “அவளைப் பற்றி உங்களுக்கு எதுக்கு? சும்மா இருங்கள்.”

“முதலில் அவரை இந்த வீட்டை விட்டுப் போகச் சொல். இனி ஒரு நாளும் இந்த வீட்டு வாசற்படியை மிதிக்க வேண்டாம் என்று சொல்லிவிடு.” இந்திரா கத்தினாள்.

“இந்தாடி பெண்ணே! வார்த்தைகளை அளந்து பேசு. இது உன் வீடா? உங்க அக்கா வீடு.”

பவானி சங்கடத்துடன் பார்த்தாள். எல்லோரும் அது பவானியின் வீடுதான் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். பவானியும் அப்படித்தான் சொல்லிவந்தாள். பதற்றமடைந்த பவானி “இது யாருடைய வீடு என்று இப்போ வாதாட வேண்டாம். முதலில் நீங்கள் கிளம்புங்க தாத்தா” என்று அங்கவஸ்த்திரத்தை எடுத்துக் கொடுத்து வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து எழுப்பிவிட்டாள்.

“போகத்தான் போகிறேன். போகாமல் இங்கேயே இருந்து விட மாட்டேன். ஏதோ வேண்டப்பட்டவர்கள், நம்முடைய குழந்தைகள் என்றுதான் சொல்ல வந்தேன்” என்ற அவர் போய்விட்டார்.

“கண்டவர்களை எல்லாம் வீட்டில் சேர்க்கிறாய் நீ. யார் யாரோ வீட்டுக்கு வந்து வாய்க்கு வந்த படி பேசிக் கொண்டிருந்தால் வாயை மூடிக் கொண்டு இருக்கச் சொல்கிறாய்.” இந்திரா அக்காவிடம் எரிந்து விழுந்தாள்.

“ஏதோ பெரியவர். இருந்தாலும் உன்னால் என் வாயை மூட முடியுமே தவிர, உலகத்தின் வாயை மூடி விட முடியுமா? லட்சணமாக எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறாய். ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேங்கிறாய்? அந்த வித்யாபதி வந்து உன்னைத் தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடப் போகிறானா?”

“அக்கா! அவன் பேச்சை எடுக்க வேண்டாம் என்று உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்?” இந்திரா அங்கே நிற்க முடியாமல் சரேலென்று போய்க் கதவைச் சாத்திக் கொண்டாள்.

“சொன்னாய்” பவானியும் சேர்ந்து கத்தினாள். “உன் கூடப்பிறந்தவளாய் உன் கஷ்டசுகங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் என்னைவிட அவன்தான் உனக்கு அதிகம். அவன் இதுவரையில் உனக்காக அப்படி என்னதான் செய்துவிட்டான்?” பவானி பிரசாத் பக்கம் திரும்பினாள்.

“பிரசாத்! நீங்களே சொல்லுங்கள். அந்த வித்யாபதியை இவள் கல்யாணம் செய்து கொள்வதாக இருந்தாள். அவன் என்னவோ அந்தப் பணக்காரவீட்டுப் பெண் சீதாவைப் பண்ணிக் கொண்டான். இவளிடம் அவனுக்கு உண்மையிலேயே இஷ்டம் இருந்திருந்தால் அப்படி வேறு கல்யாணம் செய்து கொண்டிருப்பானா? அப்படியும் இவளுக்கு புத்தி வரவில்லை. தன்னுடைய ஜோலியைத் தான் பார்த்துக் கொண்டு போகமாட்டாள். இன்னும் அவனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறாள். நாலுபேர் சிரிக்கும்படியாக நடந்து கொள்வதோடு எங்களையும் சந்தி சிரிக்கும்படி செய்து விட்டாள். எங்கேயாவது போகணும் என்றாலே எனக்குப் பயமாக இருக்கிறது. நமக்கு வேண்டுமோனால் உலகம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் உலகத்திற்கு நம்முடைய சமாசாரம் தேவையாக இருக்கிறதே? அந்த வித்யாபதியை மறந்துவிட்டு வேறு கல்யாணம் பண்ணிக்கொள். உனக்கு என்ன குறைச்சல்? உன் வாழ்க்கையை ஏன் வீணடித்துக் கொள்கிறாய்? இதுதான் நான் சொல்லிக் கொண்டிருப்பது. நீங்களே நியாயம் சொல்லுங்கள்.”

பிரசாத் வாயடைத்துப் போனவனாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வித்யாபதி…. இந்திரா. மை காட்!” அவனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. அவனுக்கு இது வரையில் தெரியவே இல்லையே? அவன் கண் முன்னால் ஏதேதோ காட்சிகள் நிழலாடிக் கொண்டிருந்தன.

புத்திச்சாலித்தனம் நிறைந்த இந்திரா, அழகும், ஆரோக்கியமும் நிறைந்த இந்திரா, நல்ல வேலை, வீடு எல்லா வசதிகள் நிறைந்திருந்தும் எதுவும் இல்லாதது போல் தீனமாக காட்சியளிக்கும் இந்திரா. அவனுக்கு இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது. சீதாவிடம் வித்யாபதி விட்டேற்றியாய் இருப்பது, சீதாவின் கண்களில் தென்படம் அதிருப்தி. மை காட்! அவன் தலையைப் பிடித்தபடி சோபாவில் உட்கார்ந்துவிட்டான்.

”ஏதாவது சொன்னால் குற்றமாகிவிடும். கண்கள் இருந்தும் குருடியாக இருக்கச் சொன்னால் எப்படி? நான் வாயை மூடிக் கொண்டுதான் இருக்கிறேன். உலகத்தையும் இருக்கச் சொன்னால் சும்மாயிருக்குமா?’ சமையலறைக்குள் பாத்திரங்களை ஒழித்துக் கொண்டிருந்த பவானி சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

பிரசாத் ரொம்ப நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவன் தலையைத் திருப்பி சாத்தியிருந்த இந்திராவின் அறையின் பக்கம் பார்த்தான். ஒரு நிமிடம் போய் அந்த கதவுகளை உடைத்தெறிந்தாவது இந்திராவின் முன்னால் நின்று பெசி விட வேண்டும் என்று தோன்றியது. “முட்டாளே! நான் செய்த அதே தவறை நீயும் செய்து கொண்டிருக்கிறாய். பாடம் கற்றுக்கொள். என் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள். இந்த வாழ்க்கை நம்முடையது. யாருக்காகவும் இதை வீணடிக்கக் கூடாது. நீ பைத்தியக்காரத்தனமாக வேண்டாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு விலை மதிப்பற்றக் காலத்தை வீணடிக்காதே” என்று சொல்லத் தோன்றியது.

அந்த நிமிடத்தில் அவனுக்கு இந்திராவிடம் இரக்கமும், அதே சமயத்தில் கோபமும் ஏற்பட்டன. அவனுக்கு இந்திராவின் நிலைமை புரிந்துவிட்டது. அவள் பயங்கரமான தனிமை என்ற சமாதியில் ஆழ்ந்து விட்டிருக்கிறாள். அதிலிருந்து அவளை மீட்க வேண்டும். அப்படி மீட்க வேண்டும் என்றால் இந்திராவுக்கும் அவளுக்கு இடையே இருக்கும் நட்பு மட்டும் போதுமா? அதைவிட வெறு உணர்வு இல்லையா? முதலில் தன் மனதில் என்ன இருக்கிறதென்று தனக்குப் புரியவேண்டும்.

இந்திரா! வித்யாதி! கற்பனையிலும் நினைத்துப் பார்க்காத இந்த உண்மையைக் கண்டு அவனுக்கு தலையைச் சுற்றியது. இந்திராவை மேலும் நெருங்க வேண்டுமா? அல்லது அவளுடைய முகத்தைக்கூட திரும்பிப் பார்க்காமல் போய் விட வேண்டுமா? அவனுக்கு ரொம்ப பொறாமையாகவும் இருந்தது. இந்திரா வேறு ஒருத்தனை விரும்புகிறாள் என்ற உண்மையை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மூடியிருந்த அந்தக் அறைக் கதவுகளிலிருந்து அவளை வெளியே கொண்டு வரவேண்டும். அவனால் அங்கே நிற்க முடியவில்லை.

“இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எதுவும் சொல்ல முடியாது. எல்லாமே தங்கள் இஷ்டம்தான் என்பார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது. தடுக்கி விழுந்து அடிபட்டுக் கொண்டால் தவிர வாழ்க்கை என்னவென்று புரியாது.” காபி டம்ளருடன் ஹாலுக்கு வந்தாள் பவானி. பிரசாத் அங்கே இல்லை. இந்திராவின் அறைக் கதவுகள் சாத்தியிருந்தன. பவானிக்குத் தெரியும். இந்திரா குறைந்தபட்சம் ஒரு நாள் முழுக்க சாப்பிடமாட்டாள். தண்ணிகூட குடிக்க மாட்டாள். வித்யாபதியை யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அவளுக்குக் கோபம் வந்துவிடும்.

பவானி பெருமூச்சு விட்டபடி உள்ளே போய் விட்டாள்.

அத்தியாயம்-45

“அண்ணா! அண்ணா! பார்த்தாயா அண்ணி என்ன செய்தாள் என்று?” வித்யாபதியின் தங்கை ஓடிவந்தாள்.

பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த வித்யாபதி பதற்றத்துடன் நிமிர்ந்து “என்ன செய்தாள்?” என்றான்.

“முயல்களை விட்டு விட்டாள். கூண்டைத் திறந்து கிளியை விட்டு விட்டாள். பிராணிகள் வளிர்ப்பு சங்கம் இருக்கிறதாமே. நாய்களை அங்கே கொடுத்துவிட்டாள்.”

வித்யாபதி பேப்பரை மடித்துவிட்டு பக்கத்தில் வைத்தான். “சரி, நீ போய் படி” என்றான்.

தங்கை போகவில்லை. அண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டே தீனமாகச் சொன்னாள். “அது மட்டுமே இல்லை. என்னைக் கூப்பிட்டு என்ன சொன்னாள் தெரியுமா?”

“என்ன சொன்னாள்?”

“நான், சின்ன அண்ணா மற்றும் தங்கை எல்லோரும் ஹாஸ்டலில் இருந்து படிக்கணுமாம்.”

“ஏனாம்?”

“இந்த வேலைகளை எல்லாம் பண்ண தனக்குப் பொறுமை இல்லையாம். தனக்கு ஓய்வு வேண்டுமாம்.”

“ஆகட்டும். அப்படியே செய்து விடுவோம்.”

“அண்ணா! நான் ஹாஸ்டலுக்குப் போக மாட்டேன். நீ அண்ணியிடம் சொல்லேன்.”

“சொல்கிறேன்.”

“அண்ணியை நாங்கள் கொஞ்சம் கூட தொந்தரவு செய்ய மாட்டேம். எதுவும் வேண்டும் என்று கேட்க மாட்டோம். முதல் வகுப்பு கிடைக்கும்படி படிக்கிறோம். ஹாஸ்டலுக்குப் போக மாட்டோம் அண்ணா.”

“ஆகட்டும் என்று சொன்னேன் இல்லையா.” தங்கையை சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் அவனுக்கு உயிரே போய்விட்டது.

கொஞ்ச நேரம் கழித்து வித்யாபதி சீதாவின் அறைக்கு வந்தான். சீதா அங்கே மேஜை அருகில் உட்கார்ந்துகொண்டு கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள்.

“சீதா|’ அழைத்தான் அவன்.

சீதா அந்த அழைப்புக் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவனைப் பார்த்ததும் எழுதுவதை நிறுத்திவிட்டு பேனாவை பக்கத்தில் வைத்தாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்தவள் எழுந்து நின்றாள். வித்யாபதி உள்ளே வரவில்லை. வாசலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். சீதா அவனை உள்ளே வந்து உட்காரும்படி சொல்லவில்லை. அவன் கதவின்மீது கையை வைத்துக் கொண்டே சொன்னான்.

“முயல்களை விட்டு விட்டாயாம். நாய்களை பிராணிகள் வளர்ப்பு சங்கத்திற்கு அனுப்பி விட்டாயாம். ஏன்?”

சீதா பதில் சொல்லவில்லை. தலை குனிந்தபடி நின்றிருந்தாள்.

“நீ அவற்றின் மீது உயிரையே வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் பிராணிகளும் நீ போட்டால்தான் சாப்பிடும். எதற்காக அப்படிச் செய்தாய்? வாயில்லாத ஜீவன்கள், ஏன் இப்படி வேதனையைத் தருகிறாய்?”

சீதா விருட்டென்று தலையை உயர்த்தினாள். “வேதனையா! அவை எதுக்கு வேதனையை அனுபவிக்கப் போகின்றன? நிம்மதியாக, சுதந்திரமாக இருக்கப் போகின்றன. நான்தான் தெரியாத்தனமாக இத்தனை நாளும் அவற்றை என் பாசத்தால் கட்டிப் போட்டிருந்தேன். மனிதன் எதையும் சிறைப் படுத்தக் கூடாது. அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அந்த உண்மை எனக்கு இப்பொழுதுதான் தெரிந்தது.”

அவன் ஒரு நிமிடம் பேசவில்லை. சீதா மேலும் சொன்னாள். அந்தக் குரலில் ஒரு விதமான வைராக்கியம், பற்றற்றத்தன்மை இருந்தன. “ஒரு காலத்தில் என் மனம் முழுவதும் அன்பால் நிறம்பியிருந்தது. அப்பொழுது எனக்கு அப்பா இருந்தார். அப்பா தந்த அன்பு எனக்கு ரொம்ப தெம்பை கொடுத்தது. இந்த உலகத்தில் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்றும், எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றும். அப்பா போன பிறகு…” சீதா தலையை உதறிக் கொண்டாள். “என் மனநிலை மாறிவிட்டது. எனக்கு இப்பொழுது எதன்மீதும் ஆர்வம் இல்லை.” அவன் கேட்டுக் கொண்டிருந்தான். சீதா சற்றுப் பொறுத்துச் சொன்னாள். “குழந்தைகளையும் ஹாஸ்டலுக்குப் போகச் சொல்லிவிட்டேன். இங்கே இருக்கும் வரையில் அவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று புரியாது. தனித்தன்மை ஏற்படாது. ஒவ்வொன்றுக்கும் அண்ணிதான் இருக்கிறாளே என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் வயதில் சிறியவர்கள். இந்த பந்தங்கள் நன்றாகவே இருக்கும். நாளைக்கு வளர்ந்து பெரியவர்களாகி விடுவார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை ஏற்படும். அப்பொழுது அவர்கள் பிரிந்து போகாமல் இருக்க முடியாது. அந்த வெறுமையை எதைக் கொண்டு நிரப்புவது? அப்பொழுது இன்னும் தனியளாகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. ஏனோ தெரியவில்லை. இந்த வாழ்க்கை என்னை ரொம்பவும் பயமுறுத்துகிறது. அது அவர்களுக்குப் புரியாது. என்னால் விளக்கிச் சொல்லவும் முடியாது.”

அவன் சீதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சீதா திடீரென்று பல ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது போல் தோன்றினாள். என்னதான் யோசித்து வருகிறாள்? சீதாவின் மனதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த விபத்து நடந்த பிறகு சீதா ரொம்வும் மாறிப் போய்விட்டாள். வித்யாபதியிடம் சீதாவுக்கு விரக்தியும் இடைவெளியும் தெளிவாக தென்பட்டன.

‘என்னுடன் இன்னும் ஏதாவது வேலை இருக்கிறதா?” சீதா கேட்டாள்.

“ஒன்றும் இல்லை.” தெளிவற்ற குரலில் சொல்லிவிட்டு அவன் திரும்பிப் போய்விட்டான்.

அன்று முழுவதும் எந்த வேலை செய்த கொண்டிருந்தாலும் அவன் காதில் சீதாவின் வார்த்தைகளே எதிரொலித்துக் கொண்டிருந்தன. சீதாவுக்கு அவ்வளவு விரக்தி ஏற்படுவது நியாயம் இல்லை. சீதாவை வாழ்க்கை அநியாயமாக தண்டிப்பது போல் இருந்தது.

மாலையாகிவிட்டது. வித்யாபதி அறைக்குள் வந்து விளக்கைப் போடப் போன பொழுது காலில் ஏதோ மெத்தென்று பட்டுவிட்டு மாயமாயிற்று. அவன் திடுக்கிட்டு உடனே விளக்கைப் போட்டான். விளக்கு வெளிச்சத்தில் கண்கள் சிவப்பு கோலிக்குண்டுகளைப் போல் மின்ன, வெள்ளை நிறத்தில் முயல் தென்பட்டது. வித்யாபதியை நோக்கி பாய்ந்து வந்த முயல் உடனே கட்டிலுக்கு அடியில் போய் மறைந்து கொண்டது. அவன் கட்டிலுக்கடியில் குனிந்து பார்த்தான். அங்கே மேலும் மூன்று முயல்கள் தென்பட்டன. இதற்கு முன்னால் அது சீதாவின் அறை. இங்கே வருவதும், கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொள்வதும் முயல்களுக்கு வழக்கம்தான். அவை சீதாவின் அழைப்புக்காகக் காதுகளைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது போல் தோன்றியது. ஜன்னல் கம்பியின் மேல் கிளி பறந்து வந்து உட்கார்ந்து கொண்டது.

“சீதா… சீதா… உன் புருஷன் வந்துவிட்டான்” என்று கத்தியது.

வித்யாபதி கூண்டை எடுத்து வந்து ஜன்னலுக்கு பக்கத்தில் வைத்தான். கிளி சரேன்று அதற்குள் நுழைந்து ஊஞ்சல் கழியின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. தன்னுடைய இடம் அதுதான் என்பது போல் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தது. விதயாபதி மெதுவாக கூண்டின் கதவைத் தாழிட்டான். கட்டிலுக்கு அடியில் குனிந்து முயல்களைப் பிடித்து மரப்பெட்டியில் போட்டுவிட்டு பசும் புல்லையும் கேரட்டையும் போட்டான். பிராணி வளர்ப்பு சங்கத்திற்கு போன் செய்தான். நாய்கள் எதையும் சாப்பிட வில்லையாம். அவற்றை உடனே அனுப்பி வைக்கும்படி சொன்னான். அவற்றை அழைத்து வரச்சொல்லி வேலைக்காரான அனுப்பினான்.

சீதா காலையில் எழுந்ததும் வாராண்டாவில் அறைக்கு எதிரே கூண்டில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே “சீதா… சீதா.. புருஷன் வந்துவிட்டான். எழுந்திரு” என்றது.

முயல்கள் பசும்புல்லை தின்று கொண்டே திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தன. சீதாவைப் பார்த்ததும் தொலைவில் கட்டிப் போட்டிருந்த நாய்கள் செல்லம் கொஞ்சுவது போல் குய் குய் என்று கத்தத் தொடங்கின. “யார் கொண்டு வந்தாங்க இதுகளை?” சீதா சமையல்காரனை கூப்பிட்டு சத்தம் போட்டாள்.

“ராத்திரி ஐயா அழைத்துவரச் சொல்லிச் சொன்னாரும்மா” என்றான்.

“ரொம்ப பெரிய காரியம்தான் செய்திருக்கிறார்” என்றாள். அவள் முகத்தில் எரிச்சலும், கோபமும் வெளிப்படையாக தென்பட்டன. வித்யாபதி அங்கே வந்தான்.

“இதுங்களை எதற்காக அழைத்து வந்தீங்க?” என்றாள்.

“சீதா! இவை உன் மீது இருக்கும் பாசத்தால் பிரிந்து போக முடியாமல் தவிக்கின்றன. இத்தனை வருடங்களாக வளர்த்து வந்தவள், இன்று திடீரென்று இப்படி விட்டு விட்டால் எப்படி? அவற்றுக்கு வாயில்லை. இருந்தால் இது ரொம்ப அநியாயம் என்று ஓலமிட்டிருக்கும்.”

“அவற்றுக்கு வாயில்லை. ஆனால் எனக்கு நடந்து கொண்டிருக்கும் அநியாயத்தைப் பற்றி என்ன சொல்லப் போறீங்க? வாய் இருந்தாலும் என்னால் யாரையும் எதுவும் கேட்க முடியாது.” சீதா விருட்டென்று திரும்பி அங்கிருந்து பொய்விட்டாள். வித்யாபதி அப்படியே நின்று கொண்டிருந்தான்.

– தொடரும்…

– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.

– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *