சிவப்பு நாய்க்குட்டி..!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 2,373 
 
 

வீடு முழுவதும் கலகலப்பு, பட்டுப் புடவை, பளபளப்பு வேட்டிகள். முரமுரப்பு.

பழத்தட்டுகள். இனிப்பு வகைகள்.

ஒரே சமயத்தில் பல குரல்கள், குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்.

எல்லாவற்றையும் மீறி அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் சிணுங்கல்.

இன்றைக்கு என்ன விசேஷம்?

சொல்விளங்கும் பெருமாள், மங்கையர்க்கரசி தம்பதியரின் மூத்த புத்திரனுக்கு பெயர் சூட்டும் விழா.

பட்டுச்சட்டை, கழுத்தில் செயின், கன்னத்தில் திருஷ்டி பொட்டுவியர்வை கசகசப்பில் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை!

அதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்டதாய் தெரியவில்லை.

“அப்பா, குழந்தைய மடில வச்சிக்குங்க. அம்மா பக்கத்தில வந்து நில்லுங்க. எல்லோரும் கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா?”

புரோகிதர் அதட்டும் குரலில் சொன்னார்.

மந்திரங்கள் மாறி மாறி ஒலித்தன.

“குழந்த காதில மூணு தடவ பேரச்சொல்லுங்கோ!”

குழந்தை இப்போது அழுகையை நிறுத்தியிருந்தது..

“என்ன மங்கை, ‘செந்தமிழ்க்கினியன்’ தானே?”

திருமணத்திற்கப்புறம் அவள் அதிகம் உபயோகிக்கும் வார்த்தைதான்.

“ஆமாங்க”

குழந்தைக்கு என்ன புரிந்ததோ, களுக்கென்று சிரித்தது.

“எல்லாரும் சுத்தி வந்து ஆசீர்வாதம் பண்ணிஅட்சதையப் போடுங்கோஓதி இடறவங்க இடலாம்”

தட்சிணையை வாங்கிக் கொண்டு எழுந்தார் புரோகிதர்..

“டிபன் ரெடியா இருக்கு, எல்லாரும் சாப்பிடப் போகலாம்.!”

யாரோ ஒரு மாமா, மைக்கில்லாமலே வீடு முழுக்க எதிரொலிக்கும் குரலில் அறிவிப்பு செய்தார்.

சொல்விளங்கும் பெருமாள் ஆள் ஒரு மாதிரி. கொஞ்சம் இறுகிய முகம்வெட்டொன்று துண்டு இரண்டு என்ற ரீதியில் இருக்கும் பேச்சு..!

அப்பா, அம்மாவாயிருந்தாலும் சரி, மனைவியாய் இருந்தாலும் சரி, முசுடு என்று வைத்துக் கொள்ளலாம்!

தமிழ் மேல் வெறித்தனமான காதல்!

தமிழ்ப்பெயர் தேடி கடைசியில் மாட்டினவள் மங்கையர்க்கரசி.

திருச்சியில் பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறியாளன் தொட்டிலுக்கு வந்தப்புறம் ஒரு தடவைதான் வந்து பார்த்தான்

மூன்று மாதம் முடிந்ததுமே கிளம்ப தயாராயிருந்தாள்.

“இங்க வேலைக்கு ஆள் கிடைக்காது!”

“இப்போ எனக்கு வேல நிறைய இன்னும் ஒரு மாசம் போகட்டும்!”

“வெயில் கொளுத்துது,அடுத்த மாசம் புறப்படலாம்”

தள்ளித்தள்ளி ஆறுமாசமாகிவிட்டது

“நானு வரமுடியாது,அம்மாவ கூட்டிட்டு நீயே கெளம்பி வந்திடு.”

அப்பாவுக்கு புரிந்தது அம்மாவுக்கு மட்டும்தான் அழைப்பு

இதோ ஆறு மாதக்குழந்தையுடன் மங்கை சென்னையிலிருந்து புறப்பட்டு. தாம்பரம். செங்கல்பட்டு திண்டிவனம் விழுப்புரம்சீரங்கம்..வழியாக திருச்சி செல்லும் மலைக்கோட்டை விரைவுவண்டியில் அம்மாவின் துணையுடன் கிளம்பி விட்டாள்

“மங்கை, குழந்த பத்திரம். பிளாஸ்க்கில் வென்னீர், பால்பாட்டில், பிஸ்கெட் பேக்கட் எல்லாம் இருக்கான்னு ஒரு தடவ செக் பண்ணிடு! ஏதாவது வேணுமா, வண்டி புறப்பட இன்னும் பத்து நிமிஷமாகும்”

“அப்பா, ஏற்கனவே மணி பத்துக்கு மேல ஆகுது. நீங்க நேரத்தோட வீட்டுக்கு போங்க போனதும் அவர விட்டு போன் பண்ணச் சொல்றேன்”

“புஜ்ஜூ, தாத்தாவுக்கு பை சொல்லு!”

செந்தமிழ்க்கினியன், புஜ்ஜுவாகிவிட்டான்.

மங்கை மட்டும் ‘இனியா’ என்றுதான் கூப்பிடுவாள். எங்கேயாவது கோவித்துக்கொண்டு கணவன் திருப்பி அனுப்பிவிட்டால்?

தாத்தா போகவில்லை, பத்து நிமிடத்தில் திரும்பி வந்தார்.

“என்னப்பா, இன்னும் போகல?”

“புஜ்ஜூ கண்ணு இன்னும் தூங்கலியா, குட்டிப் பையா. இதப்பாரு!”

செந்தமிழ்க்கினியன் இன்னும் கொட்டக்கொட்ட முழித்துக் கொண்டிருந்தான்.

‘ப்ப்பா, த்த்தா’ என்று கண்ணாடி வழியாக தாத்தாவிடம் தாவினான்.

“அப்பா.தள்ளி நில்லுங்க. ரயில் புறப்படப்போகுது, எங்கியாவது விழுந்து வைக்கப் போறீங்க. வீட்டில கவனிக்கக் கூட ஆளில்லை!”

மங்கை சைகை காண்பித்தாள்.

“புஜ்ஜு, இதப்பாரு”

தாத்தா உள்ளே வந்தார்.

வெள்ளைப் பொமரேனியன் நாய்க்குட்டி. சாவி குடுத்ததும் குரைத்தது.

இனியன் குதிக்க ஆரம்பித்தான்.

‘தோத்தோ.தோத்தோ.’

“என்னப்பா இது.இனிமே இவன் தூங்கின மாதிரிதான்.ஏது இது?”

“ஒரு பையன் வித்துகிட்டு வந்தான்..நல்ல வேளை.. ரயில் கிளம்பல..குட்டித்தங்கம்..

இந்தா..தாத்தா வரட்டா.?

“சீக்கிரம் இறங்குங்கப்பா, திடீர்னு வண்டி நகந்திடப் போகுது!!”

மனமில்லாமல் நகர்ந்தார் தாத்தா.

விதி எத்தனையோ உருவத்தில் வருமென்று சொல்கிறார்கள்.

பொமரேனியன் நாய்க்குட்டி உருவத்தில் வந்து பார்த்திருக்கிறீர்களா..?

இனியன் நாய்க்குட்டியைக் கட்டிப் பிடித்து முத்தம் குடுத்தான்

“மங்கைஅதப் பிடுங்கி வைதூங்காது”

“குட்டிகுடும்மா நாளைக்கு விளையாடுவியாம்!”

குழந்தை பொம்மையை இன்னும் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொண்டது

“விடுங்கம்மா ..அவனே அலுத்துப் போய் தூங்கிடுவான்!

பிடுங்கிட்டா அழுகைய நிறுத்த முடியாது!”

எதிர் ஸீட்டில் இருந்த ஒரு வயதான பெண் இனியனுக்கு பரிந்து பேசினாள்

“சரிவிடும்மா.டி.டி. வந்திட்டு போகட்டும்..பெர்த்த போட்டுட்டு நான் குழந்தையோட கீழ படுத்துக்குவேன் அதுவரைக்கும் வச்சிட்டு விளையாடட்டும்.!”

பாட்டியும் பேரனின் பக்கம்.

எதிர் ஸீட்டு இளைஞன் குழந்தையை வாங்கி விளையாட்டு காண்பிக்க தூக்கிக் கொண்டு நடந்தான்.

தாம்பரம்!!

ஒரு நிமிடம் நிற்கவேண்டிய வண்டி ஏனோ பத்து நிமிடமாகியும் கிளம்பவில்லை..

அழும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இளைஞன் கதவோரம் நின்றான்.

ஒரு வழியாய் கிளம்பியது வண்டி.

‘அய்யோ..வண்டிய நிறுத்துங்க யாராவது செயின இழுங்க. சீக்கிரம்.’

ஒரே அலறல்.. மங்கைக்கு சப்தநாடியும் அடங்கி விட்டது.

“இனியாகண்ணம்மாஅலறி அடித்துக் கொண்டு கதவோரம் ஓடினாள்.

வண்டி கொஞ்ச தூரம் ஓடி பெரிய குலுக்கலுடன் நின்றது.

இனியனை இளைஞன் கையில் பார்த்ததும்தான் உயிர் வந்தது.

குழந்தை ஒரேடியாய் ‘தோத்தோதோத்தோஎன்று அலறியது

“அக்காஸாரி.. நாய்க்குட்டி கீழே விழுந்திரிச்சு.”

நாய்க்குட்டி தானே போகட்டும் விடு தம்பி””

இதுக்கா செயினப் பிடிச்சு நிறுத்தினாங்க!

மங்கைக்கு ஒன்றுமே புரியவில்லை

கம்பார்ட்மென்ட்டில் மங்கை, அவளுடைய அம்மா, எதிர் வீட்டு வயதான பெண்மணி மூன்று பேர் மட்டுமே இருந்தனர்!!

மற்றவர்கள் எதற்காக வண்டி நின்றது என்பதை தெரிந்து கொள்ள வெளியே பிளாட்பாரத்தில் …

“மங்கபாரு.. அழுதழுது குழந்த மொகம் செவந்தே போச்சு பாலக் குடுத்து தூங்க வை..”

இனியன் விசும்பிக் கொண்டிருந்தான்.

ஒரு வாய் பால் உள்ளே போனதும் அப்படியே தூங்கி விட்டான்.

“தூக்கம் வருதுகொண்டா பையன!”

அம்மாவும் பேரனும் கீழ் பெர்த்தில் படுத்து விட்டார்கள்.

ஒருவழியாக ஒவ்வொருவராய் உள்ளே வந்தார்கள். வண்டி நகரத் தொடங்கியது.

எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தது.

***

நடந்தது இதுதான்

வண்டி கிளம்பியதும் இனியனின் கையிலிருந்த பொம்மை கீழே விழுந்து விட்டது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பதினைந்து வயது பையன்!

பொம்மையை எடுக்க குனிந்தவன் இடுக்கில் விழுந்துவிட்டான்.. பத்து வினாடி ரயிலுடன் இழுத்து செல்லப்பட்டதும் வண்டி நின்றது.

ரத்த வெள்ளத்துடன் கிடந்த அவனைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

கையில் சிவப்பு பொமரேனியன் நாய்க்குட்டி அவன் உயிரோடு இருப்பானா. ?நாளைக்கு பேப்பரில் தான் தெரியும்!

மங்கை முகம் பேயறைந்தது மாதிரி ஆகிவிட்டது..

ஐய்யோஎன்னாலதானேஅப்பா.. எதுக்கு இப்படி பண்ணினீங்க

ஏண்டா..பொம்மையைப் போட்ட அந்தப் பையன் யார் பெத்த பிள்ளையோ..வண்டிய நிறுத்துங்க.. நான் எறங்கிப் போய் என்னன்னு பாக்கணும்.!”

மங்கை வாய் மூடாமல் பேசினாள் தலையில் அடித்துக் கொண்டாள்..

“அம்மாபேசாம படுங்க.. பையனுக்கு உயிர்
இருக்கிறதாத்தான் பேசிக்கிட்டாங்க ஒண்ணும் ஆகாது”

எல்லோரும் லைட்டை அணைச்சிட்டு படுங்கமணி ஒண்ணாகப்போகுது.!”

மங்கை கண்ணை மூடினால் ‘ வள் வள்’ என்று சிவப்பு நாய்க்குட்டி குரைத்தது.’

தோத்தோதோத்தோ என்று குழந்தையின் அழுகுரல்!

***

பெருமாளின் முகம் கடுகடுவென்றிருந்தது.

“மனுஷன் வேல வெட்டியில்லாம மூணு மணிக்கு எழுந்திரிச்சு ஸ்டேஷனுக்கு வந்தா வண்டி மூணு மணிநேரம் லேட்டாம்.”

“தம்பிஅது வந்து!!”

சொல்ல ஆரம்பித்த மங்கையின் அம்மாவை அடக்கினான்.

“இப்போ எந்த வியாக்கியானமும் வேண்டாம்..கொண்டாங்க பிள்ளைய”

காலை பத்திரிகைகள் அனைத்திலும் வண்டி லேட்டான காரணம் விலாவாரியாக எழுதப்பட்டிருந்தது.

நல்லவேளை.. பெயர்கள் விடுபட்டிருந்ததால் மங்கை தப்பித்தாள்.

அடுத்து வந்த சில நாட்கள் அடிபட்ட பையனின் சரித்திரத்தை அலசி ஆராய்ந்தது பத்திரிகைகள்.

***

பதினைந்து வயது பையன்.. பள்ளியில் பத்தாவது படிப்பவன், பள்ளியில் முதல் மாணவன்.

உறவினர் யாரையோ வழியனுப்ப வந்தவன், சொந்த ஊர் தாம்பரத்தையடுத்த சிதிலம்பாக்கம் பெயர் முரளி அம்மா மட்டும்தான் ஒரு காலை இழக்க வேண்டிய நிலை.

***

மங்கை பித்து பிடித்தவள் போல எதிலும் நாட்டமில்லாமல் எல்லோர் மேலும் எரிந்து விழுந்தாள்

“மங்கை இன்னும் எத்தன நாளைக்கு அதையே நெனச்சிட்டு இருக்கப் போற.. நானும் ஊருக்கு கிளம்பணும் அப்பா.. பாவம்..தனியா அல்லாடுறாரு!”

“அத்த..மங்கை ஏன் மூஞ்சிய தூக்கி வச்சிட்டு திரியுது எங்கிட்ட ஒழுங்கா பேசி எத்தன நாளாச்சு.?”

மாப்பிள்ளையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் அம்மா

அப்பாதான் வறுத்தெடுத்து விட்டார்

“அம்பிகா மங்கை கிட்ட பேசணும்!!”

“அவ பேசற மாதிரி இல்ல எங்கிட்ட சொல்லுங்க!”

“நம்ப புஜ்ஜுதானே அந்தக் குழந்த.. நான் வாங்கிக் குடுத்த நாய்க்குட்டியால வந்த வினைதானே இவ்வளவும்?”

“நீங்களும் ஆரம்பிக்காதீங்க, ஏதுக்கனவே மங்கைய சமாளிக்க முடியல!”

ஒரு மாதம் ஓடிவிட்டது.

“தம்பி.. நான் ஊருக்கு கிளம்பறேன்உங்க கிட்ட முக்கியமான சமாச்சாரம் ஒண்ணு சொல்லணும்.”

“என்ன அத்தை.?”

நடந்தது எல்லாம் ஒன்று விடாமல் சொல்லிவிட்டாள்

“நான் மங்கைய கவனமா பாத்துப்பேன்.. முன்னாடியே நீங்க சொல்லியிருக்கலாம்கவலப் படாம ஊருக்கு போங்க!”

சொன்னபடியே செய்தான்!

அவன்தான் மங்கைக்கு அந்த யோசனையும் சொன்னான்!

மங்ககைக்கு தன் கணவனின் தீர்மானத்தை எண்ணி ரொம்பவே பெருமையாயிருந்தது..
இவருக்குள்ளே இப்படி ஒரு மனிதநேயமா.?

***

“மங்கைஇனியாவெரி ஹாப்பி நியூஸ்பேப்பர பாரு!”

கொட்டை எழுத்துக்களில்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ‘செந்தமிழ்க்கினியன்’ தமிழ்நாடு மாநிலத்திலையே முதலாவது மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளான்.

அடுத்த ஒரு வாரமும் வீடு முழுவதும் நியூஸ் ரிப்போர்ட்டர்கள், காமிராக்கள், உறவினர்கள், நண்பர்கள், பூங்கொத்துகள்.

“என்னுடைய இந்த சாதனைக்கு முழுக்க முழுக்க எனது தந்தைதான் காரணம்”

“உடல் நலம் சரியில்லாத என்னுடைய அம்மாவையும் பார்த்துக் கொண்டு என்னுடைய படிப்புக்கு எந்த இடையூறும் வராமல் எனக்கு ஊக்கம் தந்த என் தந்தைக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்”

“மங்கை..இன்னுமா கிளம்பலஆறு மணிக்கு விழா ஆரம்பம்மணி அஞ்சாகப் போகுது..அர மணி முன்னாலயே இருக்கணும்னு போட்டிருக்கு!”

இன்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசளிக்கும் விழா. இனியன் மூன்று மணிக்கே போய்விட்டான்.

காரில் போகும் போது மங்கை கணவனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“உங்க கோபத்துக்கு பின்னாடி இவ்வளவு அன்பும் பரிவும் இருக்கும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலீங்க நான் ரொம்பவே கொடுத்து வச்சவ”

சரியாக ஆறுமணிக்கு விழா ஆரம்பித்து விட்டது கலெக்டர் நடுவில் அமர்ந்திருந்தார்.

ஒவ்வொரு மாணவனாய் மேடையேறி அவரது கையிலிருந்த பரிசை பெற்றபோது பெற்றோரின் கைதட்டல் அரங்கையே அதிரவைத்தது..

இனியன் கையில் கோப்பையைக் குடுத்த கலெக்டர் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து விட்டு அவனிடம் சில கேள்விகள் கேட்டபோது மங்கை கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது.

“இப்போது நமது முதன்மை விருந்தினர், மாவட்ட அதிகாரி. திரு.. முரளிகண்ணன் அவர்கள் சிறப்பு உரையாற்றுவார்”.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த கலெக்டரை மெல்ல தாங்கிப் பிடித்து மைக்கின் முன் நிற்க வைத்தார்கள்.

பலர் முகத்தில் அதிர்ச்சி, ஆச்சரியம்.

கூட்டத்தில் சிறிய சலசலப்பு.

“பரிசு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.’

கல்வி எனும் செல்வத்தை பெற்றதால் மட்டுமே நான் இன்றைக்கு ஒரு மாவட்ட அதிகாரியாய் உங்கள் முன் நிற்க முடிந்தது.

இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத என் வாழ்வில் நடந்த. இச்சம்பவம்.

நான் கடந்து வந்த பாதை ரோஜாப்பூக்களால் தூவியது இல்லை, கற்களும் முட்களும் நிரம்பியது.

கூலி வேலை செய்து என்னைப் படிக்க வைத்த தாயின் கனவுகளை நிறைவேற்ற நான் போராடிய காலத்தில் என் வாழ்க்கையில் நடந்த கோர சம்பவம் இன்று என் கண்முன்னால் ஒரு திரைப்படம் போல.

பதினைந்து வருடங்களுக்கு முன், தாம்பரம் ரயில் நிலையம்”

***

முரளி கிருஷ்ணன் பேசியது எதுவும் மங்கையின் காதில் விழவில்லை..அதே திரைப்படத்தை அவளும் பார்த்தாள்

“என்னுடைய மருத்துவச் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.. ஆனால் எனது சிதைந்து போன ஒரு காலை யாராலும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

இரண்டு வருடம் வீட்டிலிருந்தேன்.

என்னுடைய வாழ்வில் அப்போது ஒரு வசந்தம் வீசியது.

என் மேல் கருணை கொண்ட ஒரு நல்லிதயம் எனது படிப்புச்செலவு அனைத்தையும் ஏற்றுக் கொண்டது.

இன்றுவரை யாரென்று முகம் காட்டாத அந்த தெய்வத்திற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்.

எனது வீட்டின் வரவேற்பரையில் இருக்கும் அந்த ‘சிவப்பு நாய்க்குட்டி’ நான் கடந்து வந்த பாதையை எனக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் தூக்கி விட ஒருவர் இருந்தால் போதும் நீங்கள் அடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் வெற்றிக்கான படிகள் உங்கள் அனைவரின் கனவும் மெய்ப்பட வாழ்த்துக்கள்”

செந்தமிழ்க்கினியனிடம் இன்று சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது, கேட்ட கதையல்ல. நடந்த கதை.

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *