சிவகாமி, நானுன் சிதம்பரனே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 675 
 

எட்டு மணி தாண்டி அரை மணி நேரமாகியும் பரமகுருவை இன்னும் காணவில்லை. ‘5 ஸ்ரார்’ றெஸ்ரோறன்ரின் எதிர்ப் பக்க ஒற்றை வரிசை வாடிக்கையாளர் பார்க்கில் காரை நிறுத்திவிட்டு டெய்ஸி உள்ளே காத்திருந்தாள்.

அவருடனான ஒரு சந்திப்புக்கு அவளிடம் முன்னேற்பாடேதும் இருந்திருக்கவில்லை. திடீரென யோசித்து, திடீரென போட்ட திட்டம். அதுபோல் முன்பும் அவள் செய்திருக்கிறாள். அவள் காத்திருப்பதும், அவர் வந்து எதையெதையோ சொல்லி அல்லது திட்டி அல்லது கோபித்து கலைப்பதும் அவளுக்குப் புதியதில்லை.

உள்ளிருந்து வெளியே வந்துபோகும் வாடிக்கையாளர் சிலரின் கண்களில் ஓடிய சபலத்தையும், நையாண்டியையும் துச்சமென எதிர்கொள்ளும் விதத்தில் நிமிர்ந்து பார்த்தபடி டெய்ஸி அவர் வரவு பார்த்திருந்தாள்.

அந்தக் காட்சி ‘5 ஸ்ரார்’ தமிழ் வாடிக்கையாளருக்கு அதிசயமாய்த் தென்படக் காரணமில்லை. அடிக்கடி இல்லாவிட்டாலும் அது நடப்பதுதான். இரண்டு கிளாஸ் சிவப்பு வைனை விழுங்கிக்கொண்டுகூட அவள் அங்கே வந்திருக்கலாம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். பரமகுருவும் டெய்ஸியும் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவர்கள் இன்னுமே கணவன் மனைவியென்பதை அவர்கள் மறந்திருக்கவில்லை. ‘கிழட்டுக் கூத்து’வென நக்கலடித்து அப்பால் நகரும் ஒரு இளையோர் கூட்டமும் அங்கிருந்தது.

ஆத்துமம்… ஆத்துமம்… என ஊரில் அடிக்கடி சொல்லும் அவரது பாட்டியின் இன்னும் விட்டுவிலகாப் பழக்கத்தில், அவரும் சொல்லுவது கவனித்த றெஸ்ரோறன்ற் நண்பர்கள் அந்த ஆத்துமத்தை அவர் பெயரின் முன்பாதியின் மேலேற்றிவிட்டார்கள். அது மிக்க இயல்பாக இணைந்து பரமாத்மாவாய் நிலைத்துவிட்டது.

கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்திலேயே சொந்தவூரான பண்டத்தரிப்பிலிருந்து புலம்பெயர்ந்து வன்னிக்குள் அடங்கிவிடாமல் கொழும்பு சென்று கனடா வந்துசேர்ந்தவர் பரமாத்மா. கிடைத்த தொழிற்சாலை வேலையிலேயே கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கிறார். கனடா வந்து வேலை ஸ்திரம்பெற்ற நிலையில் சில நெருங்கிய நண்பர்களினதும் அங்கிருந்த ஒரேயொரு உறவிரான பெரியப்பா முறையுள்ள மாரிமுத்துவினதும் முயற்சியில் பண்டத்தரிப்பைச் சேர்ந்த ஒரு கிறிதத்தவக் குடும்பத்துப் பெண்ணான டெய்ஸியுடன் ‘பேச்சு’ நடந்தது. மதுரை ஜோதிடரொருவர் நிறை பொருத்தம் சொன்னார். பரமாத்மாவுக்கும் அந்த ஈர்க்குச்சிபோல் மெலிந்து, முள்ளங்கிபோல் வெளுத்து, நுங்குப் பாக்குகள்போல் முலைகொண்டிருந்த டெய்ஸியில் பெரிய பிரியம் விழுந்துபோயிற்று. தலையில் சொட்டை விழத் தொடங்கியிருந்த தன்னை டெய்ஸி விரும்புவாளா என்றிருந்த ஏக்கம் அவளின் சம்மதிப்போடு தணிந்துபோக, நிலைமையில் தடங்கலெதுவும் விழுவதன் முன்னம் ஊரிலுள்ள பாட்டியின் சம்மதிப்புக்கு அவன் அவசரமாகக் கடிதமெழுதினான்.

அவர்கள் கிறித்தவர்கள் என்பதற்காக ஐம்பது சதவிகிதமும், அற்புதத்தின் சொந்தமென்பதால் ஐம்பது வீதமுமாய் பாட்டி தன் முழு மறுப்பைத் தெரிவித்து பதிலெழுதினாள். ஏற்கனவே அவர்களுக்குள்ளிருந்த தொடர்பாடல் அந்த விஷயத்தில் எதிர்வினையாற்றவா பயன்படவேண்டுமென எண்ணி பரமாத்மா வருந்தினான். ஆனால் மாரிமுத்து பெரியப்பாவின் மகன் தாசன்தான் விடாப்பிடியாக நின்று, கல்யாணத்தின் பின் தன் உறவினர் சங்காத்தத்தை விட்டுவிட டெய்ஸி சம்மதிப்பதாய்க் கதை கட்டி அந்தக் கல்யாணத்தை ஒப்பேற்றி வைத்தான்.

ஒருவகையில் பாட்டியின் பயம் நிஜமாகும்படிக்கே பின்னால் எல்லாம் நடந்தன. அற்புதத்தின் உறவுகள் குடும்பத்தின் உள்நுழைந்து விரித்த முரட்டு வேர்களால் டெய்ஸியின் மன அத்திபாரமும் பிளவுகண்டது. அதற்கு நீண்டகாலம் ஆயிற்றென்றாலும் அச் சிதைவு தீர்க்கமாக விழுந்தது.

குழந்தை அற்ற நிலையிலும் பதின்மூன்றாண்டுகள் நிறைந்த அந்நியோன்யமாயிருந்த பரமகுரு – டெய்ஸியின் உறவுக்குள் முதலில் அது சச்சரவு என்னுமளவிற்குத்தான் தலைகாட்டியது. வீட்டுக்கு வீடு வாசற்படியென்று தமிழ்நாட்டிலே சொல்வதுபோல், குடும்பத்துக்குள் அவ்வப்போதான பிடுங்குப்பாடுகள் சச்சரவுகள் மிக்க இயல்பானவையாய் எடுக்கப்பட வேண்டியிருந்தும், அதைப் புரிந்துகொள்ளலினான அசமந்தம் நாளடைவில் படுக்கைகளை தனித்தனி போடுமளவு பாரதூரமாகியது. வாரிசு ஒன்றுக்கான நம்பிக்கையையும் இழந்திருந்த நிலையில் அதுவொன்றும் கவலைப்படவேண்டிய விஷயமல்லவென தொடர்ந்தும் டெய்ஸியின் உறவினர்கள், குறிப்பாக அவளது அற்புதம் மாமி, அவளுக்கு போதகம் செய்துகொண்டே இருந்தாள்.

டெய்ஸியினது உறவினர்களின் அபரிமிதமான தொகையிலும் வலிமையான சமூக நிலைமைகளிலும் தனியனாயும் பலஹீனனாயும் ஆகிப்போன பரமாத்மா எதுவும் செய்யமுடியாதவராயிருந்தார்.

முரண்டு பிடித்து குடும்பத்தை நரகமாக்கிய டெய்ஸி அவர்கள் உந்தியபடி கல்யாண முறிவுவரை போவதற்குத் தயாராகயிருக்கவில்லை.

‘அதிலயென்ன பிரச்சினை? நீ இன்னும் கூடுதலான சுதந்திரதோட திரியலாமெல்லே’ என்றாள் அற்புதம்.

ஏற்கனவே அவள் வழி சென்றதில் பிரமாண்டமாய் உருவெடுத்த சில அபவாதங்களை உன்னிய டெய்ஸி, ‘வேண்டாம், மாமி, இந்த விஷயத்தை நான் பார்த்துக்கொள்ளுறன், நீங்கள் ஒண்டும் சொல்லவேண்டாம்’ என்றுவிட்டாள். அவளது பதில் கேட்டு, கல்யாணத்தின் முன்னரே தாங்கள் மச்சான் – மச்சாள் முறையானவர்களென்பது தெரிந்தபோது, அந்தப் பந்தத்தை ஒரு வரமென தாம் குதூகலப்பட்டதை டெய்ஸி மறக்கவில்லையென எண்ணி பரமாத்மா பெரிதும் மகிழ்ந்தார். அதை நண்பர்களிடம் தெரிவித்தபோது, ‘பரமாத்மா – சீவாத்மா அத்துவிதமானது; சீவாத்மா பரமாத்மாவை இடையீடின்றி கடல் மலை ஆறு குளமெல்லாம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது, ஆயினும் என்றோ ஒருநாள்தான் பரமாத்மாவின்ர தரிசனத்தை சீவாத்மா அடைகிறது; மனோன்மணியம் நாடகத்தில் சிதம்பரனை இந்த நம்பிக்கையில்தான் சிவகாமியும் பின்தொடர்ந்துகொண்டிருப்பாள்’ என்று கூறி கடகடவெனச் சிரித்தார் ஊரிலே தமிழ் வாத்தியாராயிருந்த சட்டநாதன்.

மேலும் இரண்டு வருஷங்கள் அதே நிலபரத்தில் கழிந்தன.

டெய்ஸியின் சின்ன மாமி ஊரிலிருந்த பரமகுருவின் பாட்டி அன்னப்பிள்ளையை குடும்பப் பகை காரணமாய்ப் பழி வாங்குவதில் இனி டெய்ஸியை நம்பிப் பலனில்லையென முதலில் அவளது வீடு வருவதை நிறுத்தினாள். பின்னர் தன் அணுக்கர்களையும் செல்லவேண்டாமெனத் தடுத்தாள். ஆனால் ஷொப்பிங் மோலிலே புல்வெளித் தோட்டங்களிலே காணுகிறபோது வலியப் பேசி டெய்ஸி அவர்களுடன் உறவைப் பேணிக்கொண்டாள். சிறுதுரும்பும் பல் குத்த உதவுமென்ற பழமொழியை அவள் அன்றுவரை மறந்திருக்கவில்லை.

வலிய வந்துலாவிய டெய்ஸியிடம், தன் சின்ன வயதுக் காலத்திலே டெய்ஸிராணியென்று அழகாய்ப் பிடிவாதம் பிடிக்கும் ஒரு குழந்தை நட்சத்திரம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்ததை ஒரு குமட்டுச் சிரிப்போடு அப்போதுதான் அற்புதம் சொன்னாள்.

‘என்ர முழுப் பேரும் டெய்ஸிராணிதான், மாமி’ என்றாள் டெய்ஸி குதூகலத்துடன்.

‘தெரிஞ்சுதான் சொன்னன். உனக்கும் கொஞ்சம் பிடிவாதம் பிடிக்கத் தெரியவேணும், டெய்ஸி. எதிலயெண்டான்ன பிடிவாதம் பிடி. அது உனக்கு நல்ல வடிவாய் இருக்கும்.’

அந்த உபதேசத்தில்தான் ஒரு இரண்டாம் தடவையான யோசிப்புமின்றி டெய்ஸி ஒருநாள் தன் இறுதி முடிவை எடுத்தாள்.

அன்றைய துரதிர்ஷ்டமான வெள்ளி நாள் மாலையின் விவாதம் இவ்வண்ணம்தான் ஆரம்பித்தது:

‘சோதியக்காவின்ர மகள் பெரியபிள்ளை ஆகியிருக்கிறா, இந்த வெள்ளிக்கிழமை தண்ணி வாக்கினமெண்டு ஒரு கிழமையாய்ச் சொல்லிக்கொண்டிருக்கிறன். இண்டைக்கு வெள்ளண வரவேணுமெண்டு நேற்று படுக்கப் போகேக்கயும் சொல்லிவைச்சனான். அஞ்சு மணிக்கு போயிருக்கவேண்டிய கொண்டாட்டத்துக்கு. நீங்களெண்டா எட்டரை மணிக்கு வந்து நிக்கிறியள். என்ர சொல்லுக்கு ஒரு சத மதிப்பு உங்களிட்ட இல்லையெண்டா நானேன் இஞ்ச இருக்கவேணும்? பதில்சொல்லுங்கோ’ என வெடித்தாள் டெய்ஸி.

‘அப்பவே சொன்னனான், வெள்ளண வரத் தெண்டிக்கிறன், வராட்டி இஞ்சயிருந்து போற உங்கட ஆக்களோட கூடிக்கொண்டு போ, இல்லாட்டி ராக்ஸியைப் பிடிச்சுக்கொண்டு போ எண்டு.’

‘ஆரோடயும் கூடிக்கொண்டு போறதோ? நீங்கள் இஞ்ச என்னத்துக்கு இருக்கிறியள் பின்ன? ஆண்டவரே, கண் துறந்து நீராச்சும் என்ர நிலைமய ஒருக்காப் பாரும். சொந்த வீடில்லை… நல்லது கெட்டதுகளுக்குப் போட்டுக்கொண்டு போக ஒரு நகை நட்டில்லை… சங்கையாய் சபை சந்தி போக நல்ல சீலை சட்டை கிடையாது…. இஞ்ச இருக்கிற பொம்பிளயள் என்னவெல்லாத்தையும் அனுபவிக்குதுகள்! எனக்கு கார் வேண்டாம்… காம்பிங் வேண்டாம்… ரண்டு வருஸத்துக்கொருக்கா இந்தியாவுக்குப் போகவேண்டாம்… ஒரு செல் போனுக்கு வக்கில்லாமல் வீட்டுப் போனிலை பேசிக்கொண்டிருக்கிறதயும் விடுவம், சொந்தக்காறரின்ர நல்ல கெட்டதுகளுக்கு போய்வாற குடுப்பினையாச்சும் இருக்கவேணுமெல்லோ? இந்த அவலத்தை நான் ஆரிட்டைச் சொல்லியழுவன், ஆண்டவரே.’

‘அப்ப…. உந்தளவும் நீ எதிர்பார்த்திருக்கிறாய்; அதாலதான் உந்தளவு ஏமாற்றம் உனக்கு. அதுக்கு நானென்ன செய்யேலும்? கலியாணங் கட்டிறதுக்கு முந்தியே சொன்னனான், எனக்கு சீதணம் கீதணம் ஒண்டும்வேண்டாம், ஆனா என்னிட்ட வந்தாப் பிறகு பெரிய வசதியளை எதிர்பார்க்கக்குடாதெண்டு. நான் கனடா வாறதுக்கு தங்கட தோடு முதற்கொண்டு கழட்டித் தந்த சொந்தங்களிருக்கு; எதோ முடிஞ்சதை மாதம் மாதம் அனுப்பிக்கொண்டிருக்கிறன்; அப்புடி அனுப்புவனெண்டு சொல்லித்தான் உன்னைக் கலியாணம் செய்தனான். சொன்னனா இல்லையா?’

‘நான் இப்பவும் அதுக்கு மறுப்புச் சொல்லேல்லையே. ஆருக்கு … எவ்வளவு அனுப்புறியளெண்டு ஒரு வார்த்தை கேட்டதில்லையே. நாளுக்கு பதினாறு மணத்தியாலம் உழைச்சு, நானொரு சுகத்தைக் காணாட்டியும், ஆருக்கோ அது உதவியாயிருக்கெண்டு பேசாமல்தான இருக்கிறன். நீங்கள் இப்ப என்னென்னவோ பேசி விஷயத்தைப் புரட்டிறியள்.’

‘வேலை நேரத்துக்கும் இதுக்கும் ஏன் முடிச்சுப்போடுறாய்?’

‘தொடுப்பிருக்கு. எல்லாத்துக்குமே தொடுப்பிருக்கு. சொன்னாலுமென்ன, உங்களுக்கு விளங்கவே போகுது? என்னவோ செய்து துலையுங்கோ. பதினாறென்ன, பதினெட்டு மணி நேரமெண்டாலும் வேலை செய்யுங்கோ, இல்லாட்டி அங்கயே படுங்கோ, எனக்கொண்டுமில்லை. ஆனா சொந்தங்களின்ர நல்லது கெட்டதுகளுக்குப் போறதுக்காச்சும் கூட வரவேணும். எனக்குப் புரிசனில்லை எண்டமாதிரி நானெப்பிடி தனியாய் அங்கயெல்லாம் போகேலும்? அப்பிடியொரு கடமை இருக்கெண்டு ஏன் உங்களுக்குத் தெரியாமப் போச்சு? இப்ப, அதுதான் என்ர பிரச்சினை. உங்களுக்குத் தெரியாதெண்டில்லை, உண்மை என்னெண்டா, உவளுக்காண்டி என்ன செய்யிறதெண்ட இளப்பம். ஒண்டுமில்லாமல் வந்தவள்தான, சமைச்சு வைச்சுக்கொண்டு துணிமணியள தோய்ச்சுப் போட்டுக்கொண்டு நாய்மாதிரி காலுக்குள்ள கிடக்கட்டுமெண்ட ஏண்டாப்பு. சரி, எல்லா விருப்பத்தையும் விட்டிடுறன்; குடும்பச் சந்தோஷமாவது இருக்கவேணுமெல்லொ?’

அவளது சொல்லின் ஆழத்தில் கிடந்த வெறுமையின் கோரம் புரிந்து அவர் அவளை ஒருகணம் நிமிர்ந்து கூர்மையாகப் பார்த்தார். கொஞ்சம் வெட்கப்பட்டதுபோல் இருந்தது. வெட்கப்படவேண்டிய விஷயம் மறுகணம் மாற்றுருவெடுத்து தன்னை மறைத்தது. அவர் கோபப்பட்டார். அதேவேளை இன்னொன்றும் புரிதலாயிற்று. அவர் மறுத்தாலும் அவள் திரும்பத் திரும்ப அவரிடம் அதைக் கேட்கலாம்; அவரிடம்மட்டுமே அவள் கேட்கக்கூடியதான சாங்கியம்கொண்டது அது.

அவர் தணிந்து சொன்னார்: ‘இவ்வளவும் வளவளண்டு பேசிக்கொண்டிருந்த நேரத்துக்குள்ள வெளிக்கிட்டுப் போயிருந்தா சடங்கு நடக்கிற மண்டபத்துக்கு எப்பவோ போயிருப்பாய். மக்கோவன் பஸ் நேர அங்க போகுது. அரை மணிகூடச் செல்லாது.’

‘நிண்டு வளவளண்டு கதைக்கிறனோ? எங்க… என்ர மூஞ்சையைப் பாத்துச் சொல்லுங்கோ.’

‘ஒரு பேச்சுக்குச் சொன்னனப்பா.’

‘எனக்குச் சமாதானம் வேண்டாம். நாளுக்கு பன்ரண்டு மணிநேரம்…. கிழமைக்கு ஏழு நாள்…. வேலை செய்தா உங்கட சொந்தக்காறர் நல்லா இருப்பினம், நான் நல்லாய் இருக்கேலா. அதால… நீங்கள் உந்த வேலை நேரத்தைக் குறைக்கவேணும், நேரத்துக்கு வீட்டை வரவேணும், இல்லையெண்டா வேலையை மாத்தவேணும்.’

‘வேலையை மாத்திறதோ? நடக்கிற காரியமாய்ப் பறை. அது சரி, ஏழு நாள் வேலை செய்யிற கதையென்ன? ஞாயிறு வீட்டிலதான நிக்கிறன்.’

‘ஞாயிறெண்டா அந்தத் தீவான்ர றெஸரோறன்ரில போய்க் கிடந்திடுறியளே. பார் துறக்கிற நேரத்திலயிருந்து பூட்டிற நேரம்வரைக்கும் ஆர் வந்து ஒரு பியர் வாங்கித் தருவினமெண்டு நாலைஞ்சு ஆர்மீனியக்காரியள் அலைஞ்சுகொண்டு இருக்கிறாளவை, அவளவைக்கும் சேத்துத்தான உழைக்கிறியள்.’

‘உனக்கு விசர் பிடிச்சிட்டுது, இனி உன்னோட பேசேலா. நான் படுக்கப்பபோறன்… நாளைக்கு எனக்கு வேலை…’ என்றுவிட்டு பரமாத்மா தனது வழக்கமான முதலாவது பிளாக் லேபல் பெக்கை எடுத்துவிட்டு மாடியிலுள்ள தன் படுக்கையறைக்கு நடந்தார்.

‘நான் கேட்டதுகளுக்கு மறுமொழி சொல்லாமப்போனா…?’

அவர் பதிலை ஏற்கனவே சொல்லிவிட்டார்போல. அவரது மௌனம் அவளை எகிறவைத்தது. ‘என்ர மரியாத… என்ர தேவை… எதுவும் உனக்கு ஒரு மசிரில்லை. ரண்டு பெக் விஸ்கி… அதையும் கூடுதலாய்க் குடிக்கத் தெரியா… பிறகு, குளிப்பு… சாப்பாடு …. படுக்கை…! உன்னை என்னால இனி அண்டலிக்கேலா. வாற பழி பாவமெல்லாம் உன்ர தலையில, நான் என்ர வழியைக் பாக்கிறன்.’

குளித்துவிட்டு தொலைக்காட்சியின் சிபி24 சனலில் மறுநாளைய காலநிலையை, சுருக்கமாக ஓடிய முக்கிய செய்தித் துணுக்குகளை மேலோட்டமாகக் கண்டபடி தனது இரண்டாவது பெக் பிளாக் லேபலை முடித்துவிட்டு சாப்பிடத் தயாரானபோதுதான் பரமகுரு அவதானம் கொண்டார், சோபா மூலையில் இருக்கும் டெய்ஸியின் கான்ட் பாய்க் இல்லாதிருப்பதை.

0

காருக்குள்ளிருந்த டெய்ஸியும் தானில்லாத ஹோலுக்குள் இறங்கிய பரமகுரு என்ன மனநிலையில், எவ்வளவு அதிர்ச்சியில் இருந்திருப்பாரென நினைத்துப் பார்த்தாள். அன்று தான் அவசரப்பட்டுவிட்டதான எண்ணமேதும் அதுவரை அவளிடத்தில் எழுந்ததில்லை. ஒரு குழந்தையில்லாத நிலையிலும் அவள் அவரோடு வாழ்ந்த காலமே அதிகமென சொந்தங்கள் அவளை நம்பவைத்துக்கொண்டு இருந்தன. ஆனால் அப்போது அவரிடமிருந்த மேலான சீலங்களை அவள் எண்ணினாள். குறையென ஏதாவது அவரில் இருந்திருப்பின் அது மாடுபோல் முறிந்து முறிந்து நீண்ட நேரங்களை வேலைத்தலத்தில் செலவிடுகிறார் என்பதாகவே இருப்பதாய்த் தோன்றிற்று.

அது அவர் தானும் வாழாமல் அவளையும் இல்லற இன்பங்களை அடையவைக்காமல் இருந்தாரென்ற உள் முடிச்சுக்களைக் கொண்டிருந்தது. அதை அவள் உணர்ந்தளவு அவர் உணரவில்லையென்பதே பிரச்னை விழுந்த இடம். முதல் பிள்ளை பெண்ணாயிருந்தால் இத்தறுதியில் பெரியபிள்ளை ஆகியிருக்கவேண்டிய வயசு; இப்ப போய் என்ன இதெல்லாமென்கிறார் அவர். எதையும் அவர் உணர்ந்ததாய்த் தோன்றவில்லையே!

அவர் கனடா வந்து இருபத்திரண்டு வருஷங்கள், இரண்டாயிரம் டொலர் சேர்க்க முடிந்திருந்தால் ஒரு செகன்ட்-ஹான்ட் ரொயோட்டா அல்லது ஹொண்டா கார் தாராளமாக வாங்கியிருக்கலாம். ஆனால் இருபத்திரண்டு குளிர் காலங்களையும், இருபத்திரண்டு இலையுதிர் காலங்களையும், இருபத்திரண்டு கோடை காலங்களையும் தன் தலையில் தாங்கியபடி அவர் பஸ்ஸிலும் ரெயிலிலும்தான் வேலைக்குப் போய்வருகிறார்.

அவர் தலையிடி காய்ச்சலென அலுப்புப்பட்டிருக்கிறார், ஆனால் ஒருநாள்பட்டு படுக்கையிலே கிடந்தறியார். டாக்டரிடம்கூட அவர் சென்றதில்லை. மிஞ்சினால் ஒரு நேர அல்லது இரண்டு நேர ரைலனோல் குளிசைதான். ஏதாவது முக்கிய காரியம் கருதிக்கூட அரை நாள் லீவும் எடுத்ததில்லையென்பது அவரது குறையாக ஆகாது. ஏனெனில் வேலை தவிர எந்த முக்கியமான வேலையும் அவருக்கு இருந்ததில்லை.

அது என்ன அப்பிடியொரு கண்டு கேட்டறியாத வேலையென அகட விகடமாய் அற்புதம் கேட்டதை அப்படியே காவி வந்து டெய்ஸியும் அவரிடம் ஒருநாள் புறுபுறுத்தாள். அதற்கு மிக்க பொறுமையோடு பதில் சொன்னார் அவர்: ‘அந்த மெஷினை மனேச்சர் என்னை நம்பிக் குடுத்திருக்கிறான். புதிசா வந்த நாளிலயிருந்தே நான்தான் அதைப் பராமரிச்சு வாறன். காலமை நானே அதை ஸ்ரார்ட் பண்ணி புரடக்‌ஷனைத் துவக்கினா, பின்னேரம் அதை நிப்பாட்டிறதும் நான்தான். பிறகு அதைக் கழட்டிக் கிளீன்பண்ணி பூட்டி, அடுத்த நாளைக்கு ஓட றெடியாய் வைக்கவேணும். மிஷின் ஒராளின்ர கைப் பாவிப்பில இருக்கவேணுமாம். ஒருநாள்பட்டு அந்த மிஷின் பிழைப்பட்டு இண்டுவரைக்கும் நிண்டதில்லை. அது வேலைநேரத்தை மிச்சம் பிடிக்க… மற்றீரியலை அது மிச்சம்பிடிக்கவெண்டு எல்லாம் ஒரு சங்கிலியிலபோல அதில சிக்கிக் கிடக்கு. உடம்புக்கு ஏலாமக்கிடக்கெண்டு நானே நினைச்சாலும் அரை நாள் லீவெடுக்கேலா. கொம்பனியும் தராது; நானும் எடுக்கமாட்டன்.’

இன்னுமொன்றையும் அவரின் வார்த்தைகளில் அவள் அப்போது ஞாபகமானாள்: ‘இஞ்ச அறுவத்தஞ்சு வயசில எல்லாருக்கும் மூத்தாள் பென்சன் கிடைக்கும். அதுக்கு எனக்கு இன்னும் கொஞ்ச வருஷம் கிடக்கு. அதுவரை ஓடத்தான் வேணும். அந்த அம்மாளாச்சி புண்ணியத்தில ஓடுவன்.’

அவரே ஒரு ஓய்வுக்காக ஆதங்கப்பட்டதை வெளிவெளியாய்த் தெரிவித்த வார்த்தைகள் அவை. வேலையை, தன்னை மூடி மறைக்கும் ஒரு திரையாக அவர் பாவித்துக்கொள்கிறாரோ என்ற ஐயம் அதன்மேல் அவளை நிஷ்டூரம் பண்ணவில்லை.

கல்யாணமாகி பதின்மூன்று வருஷங்களில் ஒரு குழந்தைகூட இல்லையென்பது எவ்வளவு பெரிய துக்கமாகவும் ஒரு பெண்ணுக்கு இருக்கட்டும், கீழ்த் திசையில் அதை மரபு சார்ந்த விஷயமாக ஆணே பெரிதுபடுத்துவான். அது குறித்து ஒரு வார்த்தையில்கூட அந்த மனிஷன் தன் துயர் காட்டியதில்லையே. அவள் யோசித்திருக்கலாம். நாளில் ஆறு மணி நேரத்தைமட்டும் வீட்டில் தூங்கிக் கழிப்பவனுக்கு பெண்டாட்டி எதற்கெனவே அவளால் எண்ண முடிந்தது. அதுவே ஒரு கோபமெனில், அந்தக் கோபத்துக்கு மூலமானவொன்று நிச்சயமாக அவளுள் இருக்கிறது. அதற்கு அவரே காரணமென அவள் எண்ணுவாளானால், அந்தமாதிரி ஒரு கோபம் அவளில் எகிறி வெடிப்பதை எதனாலும் தடுக்க முடியாதுதான்.

அதை அவரது நட்புகள், அவள் தன் உறவினரின் சொல்கேட்டு ஆடுவதாகக் கண்டன. அவர் விரும்பாத உறவுகளை அவள் வலிந்து வளைத்துக்கொண்டிருப்பதாகவும் அவர்களது குறை. ஆனால் அவளளவில் எல்லாக் குறைகளின் மூலமும் ஒரே புள்ளியிலிருந்து கிளர்வதாகவே இருந்தது. ஆனால் அதை அவள் மெல்லவோ விழுங்கவோ முடியாதிருந்தாள்.

அதை மீறியும் சிந்திக்க, சிந்தித்த வழியில் ஆக்ரோஷமாய்ச் செயற்பட அவளுக்கு ஒரு தருணம் வருகிறது. அப்போது அந்தமாதிரித்தான் காரை எடுத்துக்கொண்டு அவர் ஞாயிறுகளின் வாடிக்கக்காரராக இருக்கும் அந்த றெஸ்ரோறன்ருக்கு அவள் வந்துவிடுகிறாள்.

0

தற்செயலாய்த் திரும்புகையில் டெய்ஸி கண்டாள் பரமகுரு விரைவாக றெஸ்ரோறன்ற்நோக்கி வந்துகொண்டிருப்பது. அவரும் அவளது காரைக் கண்டார். டெய்ஸிதான் உள்ளே அமர்ந்திருந்தாளென்பதையும் அவர் துலக்கமாய்த் தெரிந்தார். அது அவருக்கு ஆச்சரியமாகயில்லை. அது உச்சியிலிருந்து நிலம் பார்க்கும் காட்சியாய் தினம் தினம் அவளுக்குத் தரிசனமாகிற சூழல். அதோ எதிர்க்கவுள்ள மூன்று உயர் கட்டிடங்களில் முன்னாலுள்ள கட்டிடத்தின் இருபதாம் எண் கொண்டோவைத்தான் ஒரு முது தம்பதியரொடு அவள் பகிர்ந்துகொண்டிருக்கிறாள்.

எனினும் நிச்சயமாக தனியாக வந்திருக்கமாட்டாள். அவள் சூடு பட்டவள். ‘சூடு கண்ட பூனை அடுப்படிக்குப் போகா’தென அவளூரில் ஒரு முதுமொழி இருக்கிறது. அது யாருடனாவது கூடித்தான் வரவைத்திருக்கும். தாசனண்ணா தவிர வேறு யாராகவும் அது இருக்கமுடியாது. அவரே அவளை அங்கு வரத்தூண்டிய மனிதராகவும் இருக்கலாம். கிறித்துமஸ் பிறக்கவிருந்த அக் காலம் மனமுடைந்து விலகியிருக்கும் தம்பதியினரிடத்தில் அற்புதம் விளைக்கிறதென எவரும்தான் நம்புகிறார்கள்.

அவ்வாறான முயற்சிகளை உயிர்த்த ஞாயிறு, புதுவருஷம், கனடா தினம் ஆகிய விழாக்காலங்களில் அவள் மட்டும்தான் எடுத்துக்கொண்டிருந்தாள் என்பதையும் அவர் ஞாபகமானார்.

‘கூட வந்து ஒண்டாய் வாழுறதுக்குக் கேக்கிறதவிட, டைவேர்ஸ் கேள் தாறன். உனக்கு என்னைவிட பத்து வயது குறையத்தான? டைவர்ஸ் உனக்கு எதுக்காச்சும் தேவைப்படும்’ என்று கடைசியாகச் சந்திக்க வந்த உயிர்த்த ஞாயிறு கொண்டாட்ட நாளின் இரவில் தான் சொல்லியிருந்ததை அப்போதும் அவர் மறக்கவில்லை. அதற்கு அவள் ஒருமாதிரி இதழைச் சுளித்ததையும் எண்ணினார்.

உள்ளே சென்று ஒரு பிளாக் லேபல் பெக்கை அவசரமாய் உறிஞ்சிவிட்டு வந்து முன்பக்கம் ஓரமாய் ஒதுங்கிநின்று சிகரெட் எடுத்து புகைக்க ஆரம்பித்தார்.

அன்பைக் காட்டுவதிலும், தன்னைக் கோபிக்கவோ வெறுக்கவோ நேரும் சமயங்களிலும் அவள் வெகு தீவிரமாய் இருந்திருந்தாளென்ற உண்மையை அப்போது பரமகுரு எண்ணினார். வரும்போது அவர் எதிர்கொண்ட அந்தப் பார்வைகூட தன்னை உருக்கிப் போடும் வலு கொண்டிருந்ததை எண்ண அவர் தவறவில்லை. அது ஒருநாள் அற்புதம் மாமிக்கு முகத்திலறைந்தாற்போல் டெய்ஸி பதில்சொன்ன கணத்தில் தோன்றியிருந்த உணர்ச்சியின் இன்னும் அறுபடாக் கண்ணியே என்பதை அவரால் உணரமுடிந்தது.

அப்போது அதிரவைக்கும்படியான ஒரு கேள்வி தனக்குள் ஒலிப்பதை அவர் கேட்டார்: ‘அவள் தவறிழைத்தவள்தான். அதை அவளே ஒப்புக்கொள்வாள். அவள்மீது குற்றம் சுமத்தும் நீ தவறுவிடவில்லை?‘

அவ்வாறான கேள்வியொன்று அவ்வப்பொழுது அந்த எட்டாண்டுக் காலத்துள் அவருள் கிளர்ந்திருக்கிறதுதான். அதுவொன்றும் பதிலை அறிவதற்கான உத்வேகம் கொண்டிருப்பதில்லை. அது சிந்திப்பேயற்ற மனிதனாய் அவரை தன் இயல்பில் இயங்கச் செய்துகொண்டிருக்க விட்டுவிடுகிறது. ஆனால் அப்போது அந்தக் கேள்வியின் பதில் அவருக்கத் தேவையாகயிருந்தது. நிதானமாக என்ஜினை பகுதி பகுதியாகக் கழற்றி வைப்பதுபோல, தன் நடத்தையின் பாகங்களைக் கழற்றிவைத்து, தன் வாழ்வின் பாதிப்பை அவர் அடையாளம் காணமுனைந்தார்.

அவர் எண்ணியிருந்ததுபோல் அது அவ்வளவு சிரமமான காரியமாக அப்போது தோன்றவில்லை. அதில் சிரமமாகத் தெரிந்த கூறுகள் தெளியத் தெளிய அவரே அதிசயித்துப் போகுமளவான உண்மை வெளிப்பட்டது.

பரமகுருவுக்கு காலை ஏழிலிருந்து மாலை ஏழு மணிவரையான பன்னிரண்டு மணிநேர வேலை தொழிற்சாலையில். பெரும்பாலும் தனியாக, சிலசமயம் ஒரு உதவியாளுடன், வேலை செய்யவேண்டியிருக்கும். வகை வகையான பிளாஸ்ரிக் பொருள் உற்பத்தியில் மிக நுண்மையாக நிறம், தன்மை, அளவுகள் கவனிக்கப்படவேண்டிய சில மரத் தளபாடங்களின் முடிப்புத் தேவைகளுக்கான பொருட்கள் அந்த மெஷினிலே தயாரிக்கப்படுகின்றன. அதை மேலுமுயர்ந்த தரமான தயாரிப்பிலும், அனுபவ நுட்பங்கள் மூலம் சேதாரங்களைக் குறைத்து விலைப் போட்டியில் மாற்றுக் கொம்பனிகளுடன் சமராடவுமான திறனை பரமாத்மாவின் தொழில் நேர்த்தி அவர்களுக்குக் கொடுக்கிறது.

3000 பேர்வரை வேலை செய்யும் அந்த பெரிய ‘குளோபல் வுட்’ தொழிற்சாலையில், 70 பேர் வேலை செய்யும் பிளாஸ்ரிக் வேலைப் பகுதியில் சுப்பர்வைசர் உட்பட 20 பேருக்கு மேலானவர்கள் இலங்கைத் தமிழர். அவர்களெல்லாம் 83 ஆடிக் கலவரத்துடன் இலங்கையிலிருந்து கனடா ஓடிவந்து அங்கே வேலை எடுத்துக்கொண்டவர்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அங்கு வந்துசேர்ந்திருந்தாலும், பரமாத்மா விரைவிலேயே பிளாஸ்ரிக் மெஷினில் பொறுப்பாக வேலைசெய்யுமளவு அந்த வேலைபற்றிய அறிவினைக் கற்றுக்கொண்டான். அவன் சொன்னால் கேட்டு நடக்கிற பிள்ளைபோல அது நடந்துகொண்டது. அது மனேஜர், புரடக்‌ஷன் மனேஜர் என பல கம்பெனியின் உயர்மட்ட அதிகாரிகளைச் சென்றடைந்துவிட்டது. உரிய சம்பளமும் உரிய அதிகாரங்களுமில்லாவிட்டாலும், துணை சுப்பர்வைசர்போன்ற ஓரிடத்தோடு அமைதிப்பட்டு அவர் அதில் பேரானந்தம் கொண்டிருந்தார்.

ஆயினும் அந்த மகிழ்வில் அதற்கான வாசல் திறந்துவைத்த பாட்டியின் காப்பு, மாமியின் கழுத்துச் சங்கிலி, சின்னம்மாவின் நாற்பது ஐம்பது வருஷங்களாய் பாதுகாத்து வைத்திருந்த தாலியும் கொடியும், பிற உறவினரின் மோதிரம் தோடு மூக்குத்திகளென கருணையில் கிடைத்த உதவிகளை அவர் மறந்துவிடவில்லை. அவர் அந்த வேலையில் சேர்ந்தபோது அவருக்கு மணிக்கு எழரை டொலர் ஊதியம். அந்த சம்பளத்திலிருந்துதான் டொலர் டொலராகச் சேமித்து தன் கடமை நிறைவேற்றத்துக்குப் பாடுபட்டார் பரமகுரு. உலக பொருளாதார நெருக்கடியொன்று புதுயுகத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டு ஆடர்கள் குறைவென பல பேருக்கு வேலைநேரங்கள் குறைக்கப்பட்டபோது பரமாத்மா பதறிப்போனார். ஆனால் அவருக்கு அவ்வண்ணமேதும் நடந்துவிடவில்லை. நாட்கள் சிலவாகவும்கூட சிலருக்கு வேலையற்றுப்போன சமயத்தில் அவர் மேலதிக வேலையே செய்துகொண்டிருந்தார்.

அந்த மெஷின்மேலாக தனக்கிருந்த விசேஷித்த அனுபவம்தான், தன் வேலை நேரத்தைக் குறைப்பதிலிருந்து கொம்பனியைத் தடுத்தது என்பதை மிகுந்த சூட்சுமமாக பரமகுரு அறிந்துகொண்டதிலிருந்து கொம்பனியின் அந்த அபிப்பிராயம் மாறிவிடாதபடிக்கான திட்டமொன்றை அவர் தனக்குள் தீட்டிக்கொண்டார்.

சுதர்ஸன் அவருக்கு நான்கு வருஷங்களுக்குப் பின்னால் அந்தக் கம்பெனியில் இணைந்துகொண்ட இளைஞன். வயதும் இருபத்தைந்துதான் இருக்கும். தெள்ளுத் தெறிக்கிற வயதென்கிறார்களே, அந்த வயது. க.பொ.த. சாதாரண தரம்வரை படித்திருந்ததில் விஞ்ஞானம் கலை ஆதியாம் அறிவுகளில் நவீன கல்வி முறை உருவாக்கிவிட்ட வார்ப்பு. அவனுக்கு கல்யாணமும் ஆகியிருக்கவில்லை. இரவு வேலை, பகல் வேலையென எந்த வேலை நேரப் பகுப்பிலும் நின்றுழைக்கக்கூடிய வசதி. அவருடன் வேலை செய்வதற்காக அவன் அனுப்பப்படுகிற தருணங்களில், அதை எந்தளவு சுளுவாக அவர் மடைமாற்றிவிடத் தொடங்கினார்! அவசியமானபோதுகளில் தற்காலிக வேலைசெய்யும் ஒரு சீனப் பெண்ணே போதுமானதென பல தடவைகளிலும் அவர் வற்புறுத்தினார். அதற்கான காரணமாய் ஒரு ரகசியக் கண் சிமிட்டலைச் செய்யும்போது தன் முகத்தில் வழியும் அசிங்கத்தை பின்னால் நினைத்தபோது அவரே விரும்பியிருக்கமாட்டார்.

தன் உள்ளுள்ளாய்ப் புதையுண்டிருந்த நிஜம் அவருக்கில்லாவிட்டாலும் அவரது அந்தராத்மாவுக்குத் தெரிந்தேயிருந்தது. அந்த உண்மையின் புதைகுழி மீட்பை அப்போது அவர் செய்துமுடித்தார்.

சின்ன வயதிலே தாய் தந்தையை அரசியல் பூகம்பத்திலே கொழும்பில் பலிகொடுத்த பரமகுருவை, இரண்டு பரப்பு தோட்டக் காணியை ஆதனமாய்க் கொண்டிருந்த தாய் வழிப் பாட்டியினால் மட்டுமே க.பொ.த. சாதாரண தரம்வரை படிக்க வைத்திருக்க முடியுமா? நெருங்கிய சொந்தங்கள் அனைத்துமே விருப்பார்வத்துடன் அவனது வசதிகளைக் கவனித்தன. 83 ஜுலை இனக் கலவரம் தமிழ் இளைஞர்களின் மனநிலையையே புரட்டிப் போட்டபோது, படிப்பு…. ஒரு நல்ல வேலை… என்று பாட்டி புகுத்திய கனவிலிருந்த பரமகுரு, அதன் சிறிதளவு பாதிப்புமின்றி மிளகாய்க் கன்றுக்கு நீரிறைக்க பாட்டியோடு வைகறை நான்கு மணிக்கு துயிலுணர்ந்து பட்டையோடு போய் தோட்டக் கிணற்றின் துலாக்கொடி பிடித்துக்கொண்டிருந்தான். எல்லா அரசியல் களேபரங்களையும் அறிந்துகொண்டு, தாமரையிலைத் தண்ணீராய் அவற்றுடன் ஒட்டுறவு கொள்ளாதிருந்த பரமகுருவுக்கு பாட்டிதான் வாழ்வியலின் ஞானகுரு. நன்றி மறப்பது நன்றன்று என்ற முதுவாசகம் அவன் அறிந்தது அவள் வாயிலிருந்துதான். கடனை திருப்பிக் கொடுத்துவிடலாம்; நன்றியை திருப்பிக்ககொடுக்கவே முடியாது; அது ஆயுள் பரியந்த பாரமென்ற பாட்டியின் ஞானபோதம் அவனுக்குள் புகுந்துகொண்டது. தாய்வழிப் பாட்டி மட்டுமன்றி, தந்தை வழிப் பாட்டி பாட்டன்மாரும், சிற்றப்பனும், மாமாவும், மாமிமார்களும் மட்டுமன்றி தூரத்துச் சொந்தங்களுமே அவனது உலகமாயிருந்தன.

பரீட்சையில் சித்தியடைந்த பின் வேலைக்காகக் காத்திருந்து களைத்துப்போன பரமகுருவை வலிந்திழுத்துப் போய் போராட்டத்துக்குள் இணைக்க நினைத்தது ஓரியக்கம். அந்தக் கடமை அவனுக்குண்டெனினும் அதைவிட வாழ்வில் முக்கியமாகிப்போன இன்னொரு கனவுக்கு அவன் தன்னை ஏற்கனவே அர்ப்பணித்துவிட்டிருந்தான். இயக்கத்தில் இணைப்பதற்கான இழுவிசையிலிருந்தும், இயக்க இளைஞனாய் இனங்காணக்கூடிய ராணுவத்தின் பயங்கரத்திலிருந்தும் தப்பிக்க பாட்டி அவனுக்கு ஒரு திசையைக் காட்டினாள்.

ஆனால் அதன் நம்பகத்தன்மை பரமகுருவை பின்னின்று இழுத்தது. அந்தத் திசைவழி சென்றோரில் பலர் லண்டன் ஹீதுறு விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள்; சிலர் டெல்லி விமான நிலையத்திலிருந்து; இன்னும் சிலர் சென்னையில் உறைந்திருக்க, மீதியானோர் கொழும்பில் விலாசமின்றி அலைந்துகொண்டிருந்தார்கள். சிலர் காணாமல் போனார்கள். அது மட்டுமல்ல, அந்த வழிப் பயணத்துக்கான லட்சங்களை அவனால் கனவுகூட கண்டுவிடமுடியாது.

ஆனால் காணலாம் என்று சொல்லின அவனது சொந்தங்கள். சங்கிலி, காப்பு, தாலி, மோதிரமென்று மட்டுமின்றி தோடு, மூக்குமின்னியையும் அவர்கள் கழற்றிக்கொடுத்தார்கள். ‘அங்க போன பிறகு முடிஞ்சா திரும்பி வந்த இந்தப் பெடியளில ஒண்டு ரண்டை கூப்பிடப் பார். ஏலாட்டி அதுகளுக்கும் சேர்த்து எங்களுக்கு ஒரு நேரச் சோத்துக்கு எதாச்சும் அனுப்பு, அது போதும்’ என்றார்கள்.

சொந்தங்களின் கடைசி மஞ்சாடித் தங்காபரணங்களுடனும், ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவரின் முகவரியுடனும் 1988ஆம் ஆண்டு பண்டத்தரிப்பிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டான் பரமகுரு.

அந்தப் பரமகுருதான் கனடா வந்து வேலைக்குச் சேர்ந்து பரமாத்மாவாகி ஆறு மாதங்களுக்குள்ளாக தன் ஊருக்கு முதல் பணம் அனுப்பினான். அது கிடைத்து பாட்டிமட்டுமில்லை, ஊரே ஆனந்தக் கண்ணீரில் பதிலெழுதிற்று. மறந்துவிட முடியுமா அந்தச் சொந்தங்களை பரமகுருவால்?

அவர்கள் கனவுகளைத் தன் கனவாய்க் கொண்டுவிட்ட பரமகுருவுக்கு அதனால் நிறைய உழைக்கவேண்டியிருந்தது. அதனால்தான் அந்த உறவுகளின் பயணத்தில் ஏமாறிய இரு இளைஞர்களை தகுந்த முகவர் மூலமாக கனடா எடுப்பிக்கவும் முடிந்திருந்தான். அவன் கனவு மேலும் மேலும் விரிந்துகொண்டிருந்தது. அதனால் அந்த வசதியான வேலையை சிக்கெனப்பற்றிக்கொண்டான்.

அந்த மெஷினில் தானறிந்த நுட்பத்தை எவர் அறிவதிலிருந்தும் தடுப்பது வேலையின் உறுதிப்பாட்டிற்கான உபாயமாயிற்று அவருக்கு. அந்த மெஷின் இயங்கத் தொடங்கி நிறுத்தப்படும் வரையான பன்னிரண்டு மணி நேரமும், அவசியமெனின் அதற்கப்பாலும், தானே நின்று அந்த வேலையைச் செய்துமுடித்தார். ‘வேர்க்காகோலிக்’ என்று ஆங்கிலத்திலே ஒரு வார்த்தையுண்டு. மதுக்குடியை நிறுத்தமுடியாத ‘அற்ககோலிக்’போல, வேலை செய்வதை நிறுத்தமுடியாதவர்களை அவ்வாறு அழைப்பார்கள். பரமகுருவையும் றெஸ்ரோறன்ரில் யாரோ ஒரு கூட்டாளி அவ்வாறுதான் ஒருநாள் அழைத்தான். காதில் விழுந்திருந்தும் பரமாத்மா எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு அப்பால் நடந்தார்.

பரமாத்மா வேலையில் செலவழித்த அவ்வளவு நேரங்களும் தனியே அவரதை மட்டுமில்லை, அவரது வாழ்வோடு இணைந்திருந்த டெய்ஸியினதையும் பாதித்தது; அழித்தது. அது அங்கே ஓருண்மையாக நின்றிருந்த நிலையில், தன்னிலை குறித்து டெய்ஸியோ, அவள்நிலை குறித்து அவளது சொந்தங்களோ அவரைக் கேள்வி கேட்பதற்கான நியாயம் வலுவாகவிருக்கிறது.

ஆயினும் அது அதீத சூடடைந்து தீ எச்சரிக்கை விடுத்த புள்ளியாக பழைய குடும்பப் பகையென்பது அமைந்துவிட்டது.

காலம் என்றும் விசை கூடுவதுமோ குறைவதுமோ இல்லை. கோள்கள் அதனை என்றும் செய்வதில்லை. அது கணிதத்தின் உறுதியில் கட்டப்பட்டிருக்கிறது வினாவெழுப்பமுடியாத எஃகுறுதியுடன். ஆனால் மனிதர்களின் இயக்கம் குறைந்தும் கூடியும் கொண்டிருக்கிறது. அது காலத்தின் கதியாக ரூபம் கொள்கிறது. டெய்ஸி இல்லாத கடந்த எட்டு ஆண்டுகளில் அந்த மெய்யியலுண்மையை பரமகுரு பலமுறை உணர்ந்திருக்கிறார். அவள் இல்லாததாலும், அவரது தொடர்பாடலுக்கான வேறு ஆதாரங்கள் இல்லையென்பது ஒருபுறமிருக்க, அவள்மீதான அந்த அபவாதத்தை எதுவுமில்லையென நிராகரிப்பதற்கான காதல் தன்னிடம் இருப்பதை நிரூபிப்பதன் அவசியமும் அவருக்கு இருந்தது. ஆனால் வேலை அவரது எல்லா பிரக்ஞைகளையும் உள்ளிழுத்துக்கொண்டது.

ஆக, அவர் பாதிக்கப்பட்டதெல்லாமே அந்த மனநிலையினால்தான். அதை உணராததுபோலவே, டெய்ஸியின் தேவைகளையும் அவர் கண்டுகொள்ளவில்லை.

அப்போது அவருக்குள் ஒரு வெளிச்சம் தெரிவதாகயிருந்தது. அது சாதாரணமாக ஓர் ஆண் காண்பதற்கு இயலாததும் விரும்பாததுமான இடமாகவே எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால் அவள் சிக்குப்பட்ட ஒரு நூல் பந்தில் ஒரு முனையைப் பற்றிக்கொண்டவள்போல காணப்பட்டாள். அதைக்கொண்டு அந்தச் சிக்கலை அவிழ்த்துவிடலாமென்ற நம்பிக்கையோடும் இருப்பதாகத் தெரிந்தது. அதனால்தான் பரமாத்மாவின் பெரியப்பா மகனைத் துணைக்கழைத்துக்கொண்டு அவருடனான ஒருவகைச் சந்து பேசலுக்கு இரண்டொரு தடவைகள் முயன்றிருந்தாள்.

அவரது பதில்தான் இணக்கத்தின் இம்மியளவு அசைவும் அற்றதாய் இருந்துவிட்டது. அதனால்தான், ‘எல்லா கஷ்ரங்களையும் தாங்கிற உனக்காண்டி நான் பரிதாபப்படுறன், டெய்ஸி, ஆனா, நான் முந்தின மாதிரியான ஒரு வாழ்க்கையை திரும்பவும் வந்து வாழ்ந்திடேலா’ என்ற பதில் கேட்டு அவள் வெடித்துச் சிதறி அழுதுகொண்டிருந்தபோதும், ஒரு கலக்கமுமின்றி தனது பிளாக் லேபல் இரண்டாவது பெக்கிற்காக அவரால் அப்பால் விலகிப்போக முடிந்திருந்தது.

அவர் குறிப்பிட்ட முந்திய வாழ்க்கை அவளது சொந்தங்கள் சூழ்ந்த வாழ்க்கையைத்தான். அவர்கள் அவரளவில் ஆகாதவர்கள்! ஏனெனில் அவர்கள் பாட்டிக்கு ஆகாதவர்களாயிருந்தார்கள். அவருக்கும் தின்மை செய்தவர்களேயானார்கள்.

போன வருஷம் நத்தார்க் கொண்டாட்டத்துக்கான லீவு நாளொன்றில் வித்தியாசமாக ஒன்று சொன்னார்: ‘வாழுறதுக்கெண்டு கன காலம் இனி மிச்சமில்லை, டெய்ஸி. இவ்வளவு காலத்தையும் எவ்வளவோ கஸ்ர நஸ்ரங்களோட வாழ்ந்து முடிச்சிட்டம். மிச்சக் காலத்தையும் ஒருமாதிரி வாழ்ந்து முடிக்கவேண்டியதுதான். அதுக்கிடையில ஒண்டாய் வாழ்ந்திடுவமெண்டு அவசரப்பட்டு ஓட என்ன இருக்கு?’

இப்போது காரில் வந்து அந்த இரவின் குளிர் இறுகத் துவங்கும் நேரத்தில் அவருக்காகக் காத்துக்கொண்டு எவ்வளவு நேரமாகவோ நின்றிருக்கிறாளே டெய்ஸி, பரமாத்மா அவளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? ‘சிவகாமி…. நானே உன் சிதம்பரன்’ என மாறுவேஷத்திலிருந்த சிதம்பரம்போல் சிவகாமியின் தணியாக் காதல் கண்டு தன் வேஷம் கலைத்தெழுவாரா?

0

அவர் காரைநோக்கிச் சென்றார்.

டெய்ஸி கார்க் கண்ணாடியை கீழிறக்கினாள்.

அவர் அவளை, பின் சீட்டில் தாறுமாறாகக் கிடந்த தமிழ்ப் பத்திரிகைகளை, தாறுமாறாய் முடிந்தும் குறையாகவும் முழுதானதுமாய்க் கிடந்த தண்ணீர்ப் போத்தல்களை துளாவிய பார்வையில் கவனித்தார். பின் திரும்பி, ‘நீ இப்பவும் வேலைக்குப் போறாய் போல?’ என்றார்.

‘போகாமல்? ஆரிருக்கினம் எனக் உழைச்சுப் போட?’

‘உந்தமாதிரிப் பேசவேண்டாம், டெய்ஸி. ஆரோ இருக்கினமெண்டுதான அண்டைக்கு நீ வீட்டைவிட்டு வெளிக்கிட்டனீ?’ தன் நிதானமிழந்து சட்டென கோபப்பட்டார் அவர்.

‘என்னால உழைச்சுச் சீவிக்க ஏலுமெண்டுதான் வெளிக்கிட்டனான். அந்தப்படி இண்டைவரைக்கும் வாழத்தான் செய்யிறன். ஆனா அது பிழையெண்டு எவ்வளவு தரம் மண்டாடியிட்டன்? ஒண்டையும் எண்ணாமல் கதைச்சா…?’

‘டெய்ஸி…!’ அவர் மெல்லச் சிரித்தார். ‘ஒருவேளை…. நீ அவசரத்தில செய்த ஒரு காரியமெண்டு அதை நான் எடுத்திருந்தா, என்ன சொல்லியிருப்பனோ தெரியா. ஆனா உன்ர சின்ன மாமீன்ர தூண்டுதல்ல நீ அந்த அவமானத்தை என்னில விழுத்தியிருக்கிறாய். அதை என்னால இண்டைக்கும் தாங்கேலாம இருக்கு. நினைக்கிற நேரமெல்லாம் கொதிச்சுப் போயிடுறன்.’

‘என்ர சின்ன மாமி… என்ர சின்ன மாமியெண்டு சொல்லுறியளே, கலியாணத்துக்கு முந்தியே நானும் நீங்களும் சொந்தமெண்டா, அவவும் உங்களுக்குச் சொந்தமாய்த்தான இருந்திருக்கிறா?’

‘அப்பிடித்தான். ஆனா அது முந்தின ஒருகாலத்துக் கதை. வெள்ளைக்காறன் வந்த சமயத்தில எங்கட சமூகத்திலயிருந்து ஒரு பகுதி ஆக்கள் வேதத்துக்கு மாறிச்சின. ஒரு குடும்பத்திலயே ஒராள் சைவாளாயும் ஒராள் வேதக்காறாளாயும் இருந்திது. எங்கட சொந்தத்துக்குள்ள அப்பிடி வந்ததுக்கும் அதுதான் காரணம்.’

‘நானும் அறிஞ்சிருக்கிறன். மகாதேவனெண்டவர் மதம் மாறி போதகராய் வந்ததோடதான் இந்தமாதிரி வரத் துவங்கிச்சுதெண்டு எங்கட பப்பாவும் சொல்லியிருக்கிறார். அப்பிடியிருக்க… இப்ப என்னவோ வேதக்காறர் எதிரியளெண்டமாதிரிக் கதைக்கிறியள்.’

‘சைவம் – வேதமெண்டதில பிரச்சினை வரேல்லை ; ஒரு சைவாள் ஆனந்தமயிலெண்ட என்ர பாட்டிக்கும், ஒரு வேதக்காற ஆள் அற்புதராணியெண்ட உன்ர சின்ன மாமிக்குமிடையில வந்த கொளுவல்தான் இதின்ர மூலம்.’

‘இப்ப எதுக்கு அந்தக் கதை? மாமி இப்ப உயிரோடயும் இல்லை. அவவின்ர செத்த வீட்டுக்கு ஊராளெண்டு நெச்சுக்கூட நீங்கள் வரேல்லை.’

மொன்றியலிலிருக்கும் பெரியப்பா மாரிமுத்து போன் செய்து, ‘உரு’வேறியிருந்த நிலையில், பரமாத்மா செத்தவீட்டுக்குப் போகாததையிட்டு காட்டமாய்த் திட்டியதும், தாசண்ணர் ஒரு பின்னேரம் முழுக்க தன்னை வைது தீர்த்ததும் அப்போது அவருக்கு அதிர்ச்சியுடன் ஞாபகமாயிற்று. தெளிந்துகொண்டு பேச முயல, டெய்ஸி இடைமறித்துக் கேட்டாள்: ‘அங்க றெஸ்ரோறன்ற் வாசல்ல சிகரெட் பத்திக்கொண்டு நிண்டு இஞ்சை பாத்து பாத்து தங்களுக்குள்ள பேசிச் சிரிக்கினமே, அவை உங்கட சிநேகிதங்களோ?’

அவர் அவளது குரலிலிருந்த கேந்தியை உணர்ந்தார். ‘இஞ்சன கண்ட பழக்கம்தான். வேற பழக்கத்துக்கு என்னிட்ட பணமுமில்லை; வயசுமில்லை’ என்றார் ஒருவகை அலுப்போடு.

‘வயசுக்கென்ன குறை…. இப்பவும் பாக்க…. ஓ… போன மாசத்தோட உங்களுக்கு அறுபத்தஞ்சு பிறந்திட்டுதெல்லே! பென்சனுக்கு எழுதியாச்சோ?’

‘எழுதேல்லை. வேலையும் விடுறதாயில்லை. என்ர கடமையள் இன்னும் முழுசா முடியேல்லையெண்டு நெக்கிறன்.’

‘அதெல்லாஞ்சரி… என்னிலயிருக்கிற கடமையள்லதான் அக்கறையில்லைபோல?’

‘நீ இஞ்ச கனடாவில இருக்கிறாய்; உனக்கென்ன பிரச்சினை வந்திடப்போகுது? அப்பிடி எதாவது வந்தாலும் கனடா உன்னைப் பாத்துக்கொள்ளும்.’

‘பரமாத்மாவெண்டு அவனாரோ வாய்க்கு வந்தவிதமாய்ச் சொன்னதோட நான் பரமாத்மாதான், மற்ற எல்லா மனிசரும் ஜீவாத்மாக்களெண்டு நெச்சுக்கொண்டு, அவையின்ர நன்மைதீமையளைப் பாக்கிறதே வாழ்க்கையாய் ஆக்கியிட்டியள்.’

‘நீ இதில தேவையில்லாத விஷயமெல்லாம் கதைச்சுக்கொண்டு நிக்கிறாய். உன்ர சொந்தங்களோட என்னால….’

‘அதைத்தான் சின்ன மாமி செத்ததோட நான் விட்டுத் துலைச்சிட்டனே!’

‘பிரிஞ்சிருந்த எட்டு வருஷத்தில ஆயிரம் தரம் உன்னை நான் நினைச்சிருப்பன். இப்ப பென்சனெடுக்கிற நேரத்தில வந்து… வா, நானும் நீயும் ஒண்டாயிருப்பமெண்டு நிக்கிறாய்… நாங்கள்…. காலம் ஓய்ஞ்சுபோயிருக்கிற ஆக்கள், டெய்ஸி…’

‘அதை என்னண்டு நீங்கள் சொல்லேலும்? எனக்கு அம்பத்திரண்டுதான ஆகுது…. பென்சனெடுக்க இன்னும் எவ்வளவோ காலமிருக்கு.’

அப்போது உள்ளேயிருந்த தாசண்ணன் வந்து வாசலில் நின்றபடி றெஸ்ரோறன்ற் பூட்டுகிற நேரமாவதை சத்தம்போட்டுத் தெரிவித்தார்.

டெய்ஸி அவதிப்பட்டாள். அவர் கிளம்பு முன்னம் ஒரு தெளிவானதும் நம்பிக்கையானதுமான பதிலை அன்றைக்காவது சொல்லவேண்டுமே!

அவரும் அவளது அந்த அவதியையே பார்ப்பதுபோல் தீட்சண்யமாய் அவளை ஊடறுத்தார்.

பின், ‘இரு, இப்ப வந்திடுறன்’ என்றுவிட்டு வேகமாய் உள்ளே நடந்தார்.

அவள்மேல் இரட்டை மழை பொழிந்தது. ஒன்று, அவர் இரு வாறனென்றுவிட்டு போயிருக்கிறார்; மற்றது, அப்போது அவர் உள்ளே போனது, கூடுதலான ஒரு பிளாக் லேபல் பெக்கிற்கா.

சிவகாமியின் காதலில் சிதம்பரனின் வேஷம் கலைந்துபோனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *