நிருஜா டென்னிஸ் விளையாடிவிட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தபோது நிமால் யாருக்காகவோ வாசலில் காத்திருந்தான். அவனைக் கடந்து போகும்போது அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு ‘பாய்!’ சொன்னாள். அவனும் ‘பாய்’ என்றான்.
அவள் தனது காரை எடுத்துக் கொண்டு வரும்போதும் அவன் அங்கேயே நின்றான். அவன் அவளது டென்னிஸ் மிக்ஸ்டபிள் பாட்னர்.
இளமை அவனிடம் நிறைய இருந்தது. புதிதாக வந்த அவளது ஆட்டத்தின் திறமையைக் கண்டு அவனாகவே வந்து தன்னோடு சேர்ந்து போட்டிகளில் ஆடமுடியுமா என்று கேட்டான். கடந்த சில ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டில் கொடிகட்டிப் பறப்பவன் நேரேவந்து கேட்டபோது அவள் மெய்மறந்து போனாள்.
ஆனந்த அதிர்ச்சியில் ‘ஆம்’ என்று சொல்லக்கூட முடியாமல் தலையை மட்டும் ஆட்டினாள். இந்த இரண்டு வாரங்களாக அவனோடு சேர்ந்து தான் டென்னிஸ் பயிற்சி செய்கின்றாள்.
அவன் விலையுயர்ந்த நாகரீகமான உடைஅணிவதும் பென்ஸ் காரில் வருவதும் அவளை அவனிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக நினைத்தாள். நிமாலோடு சோடியாக விளையாடுவது தனக்குக்கிடைத்த பெரும் அதிஷ்டம் என்று நம்பினாள்.
சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்ததால் அவளுக்குள் இப்படி ஒரு ஈகோ எப்பொழுதும் இருக்கும். அவளை அப்படி நினைக்க வைத்தது அவளது பொருளாதார நிலை.
பிறந்தமண்ணில் பாடசாலை டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் பல பெற்றவள். திருமணமாகி இங்கே வந்த போது பல கனவுகளையும் சுமந்து வந்தாள்.
கணவனின் இரவுவேலையும், அதன்பின் பகுதிநேரவேலையும், அதுமுடிய பகலில்; தூக்கமும் அவளைக் குடும்ப வாழ்க்கையில் விரக்தியடைய வைத்தது. எனவேதான் அந்த விரக்தியை விரட்ட பழையபடி டென்னிஸ் ஆடத் தொடங்கினாள். காரை அவனுக்கு அருகே நிறுத்தி,
‘உங்களுக்கு லிப்ற் தரவா நிமால்?’ என்று கேட்டாள். அவன் ஒரு நிமிடம் தயங்கினான்.
அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்டு,
‘கம் ஐ வில் றொப்யூ’ என்று சொல்லி கதவைத் திறந்து விட்டாள்.
‘இவ்யூ டோன் மைன்ட்’ என்று நிமால் கேட்டுவிட்டு முன்சீற்ரில் அமர்ந்து தனது வீட்டிற்கு போவதற்கு வழிகாட்டினான். தனது காரை நண்பன் எடுத்துச் சென்று விட்டதாகச் சொன்னான்.
இறங்கிப் போகும்போது ‘உள்ளே வந்துவிட்டுப் போங்களேன்’ என்று அவள் இருந்த பக்கம் வந்து ஆர்வத்தோடு கேட்டான். அவன் உள்ளே தன்னை அழைப்பான் என்பதை எதிர்பார்க்காத அவள்,
‘இல்லை வேறு ஒருநாளைக்கு வருகிறேன்’ என்றாள்.
‘சரி உங்க இஷ்டம்! உங்க பொன்னானபாதம் பட எங்க வீடு கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான்’ அவன் முகம் சுருங்கியது. அவளுக்கோ என்னபதில் சொல்வது என்று தெரியாமல் அவனது வேண்டுகோளை மறுக்கவும் முடியாமல் சங்கடப்பட்டவள்,
‘சரி வர்றேன்!’ என்று அரைமனதோடு தலையை ஆட்டிவிட்டு காரைவிட்டு இறங்கி அவனோடு உள்ளே போனாள்.
‘வீட்டிலே யார் இருக்கிறாங்க?’ என்று கேட்டுக் கொண்டே உள்ளே காலடி எடுத்து வைத்தாள்.
‘மனைவி பிள்ளைகள்’ என்றவன் ‘உட்காருங்க’ என்று செற்றியைக் காட்டினான். செல்வச்செழிப்பு வீட்டிலே தெரிந்தது.
‘எங்கே யாரையும் காணோம்’
‘அவங்க பாடசாலை விடுமுறையாகையால் மியாமிக்குப் போயிருக்கிறாங்க’ என்று சொல்லிவிட்டு, ‘வட் டூயூ லைக்ருகாவ்’ என்று கேட்டான்.
‘இல்லை ஒன்றும் வேண்டாம்’
‘நோ நோ ஏதாவது சாப்பிடுங்க, கோக் ஓ யூஸ்’ என்று வற்புறுத்தினான்.
‘எனித்திங்’
‘எனித்திங்’ அவன் விழிகளை உயர்த்தி ஒருமாதிரியாய்ப் பார்த்தான்.
அவள் வெட்கப்பட்டு தன்னைச் சமாளித்துக் கொண்டு ‘கோக்’ என்றாள். ஐஸ் துண்டுகள் மிதக்க கோக் கொடுத்தான். அவள் அதை அருந்திக் கொண்டே ‘எத்தனை குழந்தைங்க’ என்றாள்.
‘ஒரு பையன் ஒரு பெண்! நாமிருவர் நமக்கிருவர்! இருங்க ஆல்பம் பாருங்களேன்’ என்று ஆல்பத்தை எடுத்தான்.
‘நிறுத்தீட்டிங்களா?’ சட்டென்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.
‘எனக்கு விருப்பம்தான், ஆனால் மனைவி சொல்லிட்டா இதுவே போதுமென்று!’
உயரே இருந்த ஆல்பத்தை எட்டி எடுக்கும்போது அவனது கண்ணுக்குள் தூசி விழுந்தது. செற்றியில் உட்கார்ந்து கண்ணைக் கசக்கினான்.
‘என்ன? என்னாச்சு உங்களுக்கு?’ என்று கேட்டபடி அருகே வந்தாள் பதட்டத்தோடு.
‘கண்னுக்குள் ஏதோ விழுந்து விட்டது’ என்றான்.
‘இருங்க’ என்று சொல்லி இயல்பாக அவனருகே குனிந்து கண்இமைகளைத் திறந்து கண்ணுக்குள் ஊதிவிட்டாள்.
‘இப்போ சரியா?’ என்றாள்.
அவன் ‘இல்லை’ என்று தலையாட்டினான்.
மீண்டும் கண்ணுக்குள் ஊதிவிட்டு ‘கண்ணைத் திறவுங்க’ என்றாள்.
அவன் திறந்து பார்த்து விட்டு ‘ஐயாம் ஓகே’ என்றான். அவளது ஸ்பரிசம் பட்ட இடமெல்லாம் அவனுக்குள் நெருப்பாய்ச் சுட்டன. ஆனால் அவளது சூட்டுக் காற்று கண்ணுக்கு இதமாயிருந்தது.
ஆல்பம் பார்த்த அவளுக்கு ஏனோ ஒருவித பொறாமை அவனது மனைவிமேல் வந்தது. யாரோ ஒரு பெண்ணுக்கு இவ்வளவு அதிஷ்டமா? மியாமியை அவளால் நினைத்தும் பார்க்கமுடியாது, அவளது கனவு உலகமாக அது இருந்தது. மியாமி வேண்டாம் இப்படி ஒரு வீடாவது? கற்பனை எங்கோ எல்லாம் பறந்து முடிவில் ஏக்கப் பெருமூச்சாய் வெளிவந்தது.
‘என்னிடம் சில டென்னிஸ் டெமோ வீடியோ கசெட் இருக்கு, போட்டுக் காட்டிறேன் பார்க்கிறீங்களா?’
‘பார்க்க ஆசைதான் ஆனால் நேரம் போயிடிச்சு, வேறு ஒரு நாளைக்கு வந்து பார்க்கிறேனே!’ அவள் விடைபெற்றபோது நிமால் அருகே வந்தான்.
‘யூ லுக் சுவீற்’ என்றவனது வார்த்தைகளில் மெய்மறந்து நின்றவளின் கன்னத்தில் சட்டென்று முத்தமொன்று கொடுத்து ‘பாய்’ சொன்னான்.
இதை எதிர்பாராத அவள் மிரண்டுபோய் மருட்சியுடன் அவனை மௌனமாய்ப் பார்த்தாள். விடைபெறும் போது முத்தம் கொடுத்துப் பிரிவதில் ஒன்றும் தப்பில்லை என்பது மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் அவர்களது கலாச்சாரத்தைமட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம் என்றெல்லாம் கணவனோடு அவள் வாதாடுவதுண்டு.
ஆனால் இப்போது அவளே அப்படி ஒரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட போது ஒரு அன்னியனின் முத்தத்தால் அவளது நெஞ்சுக்குள் இனம்கண்டு கொள்ளமுடியாத பீதி பிடித்துக் கொண்டது. அந்த முத்தம் ஒரு சாதாரண முத்தமில்லை வித்தியாசமானது என்பது அவளுக்குப் புரிந்தது.
திடீரென பயமும் கவலையும் அவளை வாட்டத் தெடங்கின. என்ன இது? என்னுடைய பலவீனத்தை இவன் தனக்குச் சாதகமாய்ப் பயன் படுத்துகிறானோ? அதற்கு மேல் அங்கே நிற்க விருப்பமில்லாது அவசரமாய் வெளியேறினாள்.
தொடர்மாடிக் கட்டிடத்திற்கு வந்து காரை நிறுத்திவிட்டு உள்ளே போனாள்.
எலிவேற்றருக்குக் காத்திருந்து ஆறாவது மாடிக்குப் போய்க் கதவைத்திறந்து உள்ளே போனாள். கணவன் அடித்துப் போட்டது போலக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. ஏழுவயது மகள் மேசையில் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அருகே போய்த் தலையைத் தடவிவிட்டாள்.
‘சாப்பிட்டியா, செல்லம்?
‘ஆமா, அப்பா போட்டுக் கொடுத்தார்’
‘என்ன எழுதிறாய்?’
‘புறஜெக்ற், ரீச்சர் ஸ்பைடரைப் பற்றிப் படம்கீறி எழுதிக் கொண்டு வரச்சொன்னா.’
‘எப்ப கொடுக்கணும்’
‘அடுத்தகிழமை’
பாத்திரங்கள் கழுவிவைத்தாள். இரவுவேலைக்கு போவதற்கு கணவன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அவனுக்குச் சாப்பாடு பரிமாறி வேலைக்குக் கொண்டு போவதற்குக் கோப்பியும் போட்டு கொடுத்தாள்.
அந்த ஒற்றைப் படுக்கையறை மாடிவீட்டில் தினமும் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிதான். ஆனாலும் இன்று ஏனோ அவளுக்கு ‘இது என்ன வாழ்க்கை’ என்ற எண்ணம் மனதில் எழுந்தது.
இது எல்லாம் ஒரு அடிமைத்தனமான செய்கை போல இருந்தது. பணம் கொடுத்து மாப்பிள்ளை எடுத்து அவர்களுக்கு அடிமைத்தொழிலும் செய்யும் பெண்களின் அவலம் பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வாசித்தது ஞாபகம் வந்தது. இவனைத் திருமணம் செய்ததில் என்ன சுகத்தைக் கண்டேன் என்ற எண்ணம் கொஞ்சநாட்களாக அவள் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது.
உளரீதியாக மட்டுமல்ல, உடல்ரீதியாகவும் அவளை அவன் இதுவரை திருப்திப் படுத்தியதில்லை. திருமணமான புதிதில் ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் என்ற கணக்கில் தான் வாழ்க்கையே ஆரம்பித்தது. குழந்தை பிறந்தபின் அந்த சுகம்கூட அவளுக்குக் கிடைக்கவில்லை. அதன்பின் அவள் முழுமையாக எந்தவொரு இன்பத்தையும் கணவனிடம் இருந்து அனுபவிக்கவில்லை. சில நாட்களின் முன் வெட்கத்தை மறந்து கணவனிடம் பட்டும்படாமலும் வாய்விட்டுக் கூடச் சொல்லிப் பார்த்தாள்.
‘சும்மா இருந்து திண்டுபோட்டு உடம்பு திமிர் எடுக்குதோ? நண்டு கொழுத்தால் வளையில் இருக்காதாம்!’ ஒரே வார்த்தையில் அவன் அவளது வாயை மூடிவிட்டான்.
பக்கத்து அப்பாட்மென்ற் ஆன்ரி கவுன்சிலிங்குக்குப் போவதுண்டு. ‘உன்பிரச்சனை என்னவென்று எனக்குப் புரியுது. பயப்படாமல் என்கிட்ட சொல்லலாம்’ என்பது போல அவரது பார்வை நம்பிக்கை ஊட்ட ஒரு நாள் தனது நிலைமையை எடுத்துச் சொல்லி ஆலோசனை கேட்டாள்,
‘என்னைப் பொறத்தவரை கணவனுக்கு ஏற்ற மனைவியாய் அனுசரித்துப் போவதுதான் ஒரு குடும்பப் பெண்ணுக்கு நல்லது. நான் அதைத்தான் செய்கிறேன்! அதைத்தான் செய்வேன்! ஆனால் இந்த நாட்டிலே பெண்களுக்கு எல்லாச் சுதந்திரமும் இருக்கிறது. அந்த நாட்டிலே அன்று எங்களுக்கு இல்லாத சுதந்திரம் இன்று இந்த நாட்டிலே உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே உன்னுடைய விருப்பத்தை யாரும் தடுக்க முடியாது. உன் இஷ்டத்திற்கு நீ எதுவும் செய்யலாம். அதைத் தடுத்து நிறுத்த உன் கணவனுக்குக் கூட உரிமையில்லை!’
‘இந்த நாட்டில் நீ எதுவும் செய்யலாம்’ என்று ஆன்ரி சொன்னது அவளுக்குள் ஒருவித உற்சாக ஊற்றை ஏற்படுத்தியது.
அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் சங்கடப்பட்டாள். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை இவனால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? கண்களில் ஈரம் படர்ந்தது.
இப்போதெல்லாம் அடிக்கடி அவர்களுக்குள் சின்னச் சின்ன விடயத்திற் கெல்லாம் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருசிலர் உறவு என்று சொல்லிக் கொண்டு எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
‘என்னை எதுக்குக் கலியாணம் செய்தீங்க?’
‘என்ன இது நீயும் விரும்பித்தானே கழுத்தை நீட்டினாய்’
‘இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று தெரிந்திருந்தால் நிச்சயமாய் சம்மதித்திருக்க மாட்டேன். எனக்கு எல்லாமே அலுத்துப் போச்சு’
‘எப்படி ஒரு வாழ்க்கை? இப்ப உனக்கு என்ன குறை?’
‘செல்வாக்காய் இருப்பது போல நடிச்சு நீங்க என்னை ஏமாத்திட்டீங்க. யாருக்கு வேணும் இப்படி ஒரு பிச்சைக்கார வாழ்க்கை?’
‘ஏன் உனக்கு என்னைப் பிடிக்கலையா?’
‘பிடிக்கிறத்திற்கு என்ன இருக்கு? வீடிருக்கா, காசிருக்கா? எதைப்பிடிக்கணும்? இந்தத் தூங்குமூஞ்சியையா?’
‘ஓ.. கட்டினால் என்னைத்தான் கட்டுவன் என்று அமெரிக்கக் கனவோட ஒற்றைக்காலில் நின்ற உனக்கு இப்ப நான் பிச்சைக்காரனாய் தெரியிறன், அப்படித்தானே..?’
காலையில் எழுந்திருக்க மனம் வரவில்லை. மனசு வெந்து உடம்பு லேசாச்சுட்டது. நேற்றைய நினைவு மனசுக்குள் அரித்தது.
‘என்ன துணிச்சல் அவனுக்கு? முத்தம் கொடுக்க எப்படி அவனுக்கு தைரியம் வந்தது? எல்லையை மீறி அவனுக்கு இடம் கொடுத்து விட்டேனோ? இனிமேல் வேண்டாம் இந்தத் தொடர்பு. நான் நல்ல மனைவியாய் இருக்க வேண்டும்!’ மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அன்று டென்னிஸ் பயிற்சிக்கு அவள் போகவில்லை. மகளுக்கு ஸ்பைடர் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
‘Most female spiders spin webs, they do not stick to their own web. They make very clever traps.’
தொலைபேசி அலறியது. எடுத்து ‘ஹலோ’ என்றாள்.
யாரை வெட்டிவிட நினைத்தாளோ அவனே மறுபக்கத்தில்!
‘நிமால்!’
‘சொறி இன்றைக்கு என்னாலே பயிற்சிக்கு வரமுடியாது’
‘ஏன்?’
என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லியாக வேண்டுமே!
‘வந்து….. கார் பழுதாய்ப் போய்ச்சு!’ தட்டுத் தடுமாறிச் சொன்னாள்.
‘பரவாயில்லை நான் வந்து கூட்டிக் கொண்டு போகிறேன்.’
‘இல்லை வேண்டாம்!’
‘ரெடியாய் இருங்கோ, அரைமணித்தியாலத்தில் அங்கே நிற்பேன்’
‘வேண்டாம்!’ அவசரமாய் மறுக்க முற்பட்டபோது தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.
இவன் என்ன என்னை வெருட்டுறான்? கலவரத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தாள். கணவன் தூங்கிக் கொண்டிருந்தான். கோபம் கோபமாய் வந்தது. இவன் யார் என்னைக் கட்டாயப்படுத்த? கொஞ்சம் இடம் கொடுத்தால் ‘அட்வான்டேச்’ எடுக்கிறான்.
‘அவன் முத்தம் கொடுத்தபோது நான் மௌனமாய் இருந்தது தப்போ? என்னைப்பற்றி இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? வரட்டும்! இன்றைக்கு அவனுக்கு நல்லாய்க் குடுக்கவேணும்!’
மின்விசிறியை வேகமாகப் போட்டுவிட்டு கட்டிலில் விழுந்தாள். அவன் என்னதான் சொன்னாலும் நான் இனிமேல் டென்னிஸ் விளையாடப் போகப்போவதில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தைத் தணித்தாள்.
திடீரென அவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. அவன் மேலே தேடி இங்கே வந்து விடுவானோ என்ற பயத்தில் பரபரப்புடன் அவளே கீழே இறங்கிச் சென்றாள். அவன் பென்ஸ் காரை அருகே கொண்டு வந்து நிறுத்தி கதவைத்திறந்து விட்டான்.
‘இல்லை! நான் வரவில்லை! நீங்கள் போங்கோ!’
‘ஏன்?’
‘ஏனோ நான் வரவில்லை!’
‘சனிக்கிழமை முக்கியமான மாட்ச் இருக்கு! பயிற்சி எடுக்காமல் எப்படி வெல்றது?’
அவன் குரலை உயர்த்திக் கண்டிப்போடு சொன்னான். அவள் அதற்குக் கட்டுண்டது போல, மனமில்லாமல் முன்ஆசனத்தில் ஏறி அமர்ந்தாள். அவன் ஒன்றும் பேசாமல் பயிற்சி முகாமை நோக்கிக் காரைச் செலுத்தினான்.
அவள் திடீரென்று அவனைப் பார்த்து,
‘உங்க மனைவி வந்திட்டாங்களா?’ என்றாள்.
‘இல்லை!’
‘இன்றைக்குக் கட்டாயம் பயிற்சி எடுக்கணுமா?’
‘ஏன் உங்களுக்கு வசதியில்லையா? ஆர் யூ நாட்….. பீலிங் வெல்?’
அவனைப் பார்த்து தலையாட்டினாள். ஆம் என்கிறாளா இல்லையா என்பது அவனுக்குப் புரியவில்லை.
‘ஐயாம் சொறி, பரவாயில்லை! அப்போ நாளைக்கு நாங்க பயிற்சி எடுக்கலாம்! நான் உங்க வீட்டிலேயே விட்டுவிடுறேன்.’
நிமால் காரைத் திருப்பினான்.
‘இல்லை வேண்டாம்! உங்க வீட்டிற்கே போகலாம்!’ என்றாள் நிதானமாக.
என்னதான் காரணம் சொன்னாலும், கட்டிய மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிடுகின்றது. சமூகத்திற்கு அருமையான எடுத்துக்காட்டு, முக்கியமாகப் புலம் பெயர்ந்து கலாச்சாரச் சீரழிவிற்குள் அகப்பட்டவர்களுக்கு ஒரு படிப்பினையான சம்பவம். இது போன்ற கதைகளைத் தந்ததால்தான் இன்று எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் சர்வதேசப் புகழ் மிக்க ஒரு எழுத்தாளராகியிருக்கின்றார்.
திருமிகு குரு அரவிந்தன் அவர்களின்
‘சிலந்தி’ சிறுகதை படித்தபோது Jonathan swift ன் of Battle of The Books எனும் நவீனத்தில் வரும் Spider and Bee episode நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
சிலந்தி தன் எச்சிலால் வலை விரித்து, அதில் வந்து விழுவதை விழுங்கும் கீழ்த்தரமான செயல்பாடுகளை நினைவிற்கு கொண்டு வந்தது.
போலி கௌரவங்களும் புகழ்களும் பெயர்களும் முதன்மையாகி விடும்போது தன்னை அறியாமலே சிலர் சிலந்திகளின் வலையில் விழுந்து விடுகிறார்கள் என்பதை மிக நாசூக்காக சொல்லி இருக்கிறார் கதை ஆசிரியர்.
முக்கிய கதாபாத்திரமான அந்த பெண்ணின் மனத்தடு மாற்றங்களை மிகத் துல்லியமாக கணித்திருக்கும் எழுத்தாளரின் திறமை பிரமிக்க வைக்கிறது.
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்.
ஜூனியர் தேஜ்