சின்ன சின்ன ஆசை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 3,492 
 

வீட்டில் தனித்து அமர்ந்திருந்த அமலாவிற்கு மனம் கஷ்டமாக இருந்தது.

கணவனுடன் சேர்ந்து காலாற நடந்து கடை கன்னிகளுக்குக் கூட போக முடியவில்லையே ! – என்கிற வருத்தம் மனதை வாட்டியது.

வழக்கம் போல்…காலையில் அவன் நாற்காலியில் உட்கார்ந்து தினசரி படித்துக்கொண்டிருந்த போது கூட அழைத்தாள்.

“என்னங்க..!”

“என்ன..? “- ஏறிட்டான்.

“நாளைக்கு எனக்குப் பிறந்த நாள்..!”

‘அப்படியா…?!!’என்று துள்ளிக் குதிக்க வேண்டியவன்….

“அதுக்கென்ன…? “என்று சர்வசாதாரணமாகக் கேட்டு மீண்டும் தினசரிக்குள் புகுந்தான்.

“சேலை வாங்கணும்…” மெதுவாக சொன்னாள்.

“தாராளமா போய் வா…”

“நீங்களும் கூட வரனும்..”

“நான் எதுக்கு..??… அமலா..! எனக்கு அலுவலகத்துல ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் அதுக்குக் கண்டிப்பா போயே ஆகணும்…” சொன்னான்.

இவள் முகம் தொங்கியது.

அதைக் கவனித்த விவேக்….

“தொந்தரவு பண்ணாதடா. என் கண்ணு இல்ல. ராமுவை அழைச்சிக்கிட்டுப் போடா..” எழுந்து செல்லமாக சொல்லி கன்னத்தைக் கிள்ளிவிட்டு சுறுசுறுப்பானான்.

அரை மணி நேரத்தில் புயலாகக் கிளம்பி அலுவலகம் சென்றான்.

அமலா துவண்டு அமர்ந்தாள்.

இன்றைக்கென்றில்லை. என்றைக்கும் இவள் உதவி ஒத்தாசைக்கு ……

ராமு..! ராமு..!! ராமு..!!!

மளிகை கடைக்குச் செல்ல ராமு. காய்கறி வாங்க ராமு. ரேசன் கடைக்குப் போக ராமு. மின் கட்டணம், தண்ணீர் வரி .. எல்லாத்துக்கும் ராமு. இவள் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாலும் துணைக்கு ராமு. சுமைகள் தூக்கி வர ராமு.!!

என்னதான்…. பணம், ஆள், அம்புகள், கார் இருந்தும் ஒருநாளாவது கணவனுடன் ஆசையாக வேலையே போய் வர முடியவில்லை என்றால்… என்ன வாழ்க்கை..?! – இவளுக்கு வேதனையாக இருந்தது.

சில நேரங்களில்…..’எதுக்குமான இந்த ராமுவை விரட்டி அடித்து விட்டாலென்ன..?’- தோன்றும்.

பாவம் அவன். மீசை முளைத்த வேலைக்காரியின் மகன்.

அம்மா..! அம்மா..! என்றழைத்து எல்லா வேலைகளையும் செய்கிறான். கூப்பிட்டக் குரலுக்கெல்லாம் ஓடி வருகிறான்.

விவேக் பாவம். பெரிய போலீஸ் அதிகாரி. நேரம் காலம் இல்லாத வேலை.

சரி. பொறுப்பான பதவிகளில் இருபவர்களுக்கு மனைவி, மக்களைக் கவனிக்க நேரமில்லையா..? நெட்டி வாங்கி , உடலை கசக்கிப் பிழியும் தொழில். இவர்கள் கவனிக்காவிட்டால் ஊரின் நிலையே மாறிப்போகும். சரி… சரி..ஆயிரமிருக்கட்டும்! அதில் மனைவி மக்களை மகிழ்ச்சிப் படுத்துவதும் ஒரு கடமை அல்லவா..?

கணவனானவன் எந்த நேரமும் மனைவியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. அது சரியுமில்லை. ஆனாலும் அவர்கள் ஆசைக்காகவாவது கொஞ்சம் வெளியே சென்று வரலாமில்லையா..?

“என்னம்மா ! மச்சினிச்சி திருமணத்துக்குக் கூட வராம மாப்பிள்ளைக்கு அப்படி வேலை..? “கேட்பதைத் தவிர்க்கலாம்.

“போகும் வழியில் பூ வாங்கி வைத்துக்கொள் ! “என்று சொல்வதைத் தவிர்த்து…. வாங்கி வந்து கொடுத்து மகிழ்ச்சிப் படுத்தலாம்.

தானே.. கூடப் பூவை வாங்கி சூட்டிக்கொள்வதில் உள்ள சுகம் .மகிழ்ச்சி… கணவனின் கையால் வரும் ஒரு முழம் பூவிற்கு ஈடாகாது.

இப்படி மனைவி மக்களின் சின்னச் சின்ன அசைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேலை ஒரு தடையாய் இருப்பது பெரிய சாபக்கேடு. !

அமலாவிற்குத் தெரிந்து எத்தனையோ பெரிய அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அவர்கள்…”கடைக்குப் போகலாம் ! “என்று மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். அவர்களுக்கும் மாற்றம், மகிழ்ச்சி.

அவர்களே ஆன்மா, அடைக்கலம் என்று இருக்கும் மனைவிகளுக்கும் உள்ளுக்குள் சுகம், உற்சாகம் , திருப்தி .

‘இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். !’- அமலாவின் மனம் ஆயாசப்பட்டது.

“அம்மா ! மாப்பிள்ளைக்கு அரசாங்கத்துல பெரிய உத்தியோகம். கார், பங்களா, கூப்பிட்டக் குரலுக்கு ஆள்ன்னு ஏக வசதி, கெடுபிடி. ! ” என்று அப்பா சொன்னபோது அகமகிழ்ந்து தலை ஆட்டியது தவறு.

“அப்பா ! மனைவியின் ஆசாபாசங்கள் மதிக்கத் தெரிந்தவரா.? “என்று கேட்கத் தெரியாமல், தோன்றாமல் தங்கக் கூண்டிற்குள் சிறை வந்து விட்டோம்.

வெளியில் எங்கும் கணவன் அழைத்துச் செல்ல முடியாத நிலை. காற்று வாங்க கடற்கரைக்குச் செல்வதாய் இருந்தாலும்… ராமு துணை. !

அவனோடு கை கோர்த்து காலாற நடக்க முடியுமா..? துணைக்கு நிற்பான், நிழலாய்த் தொடர்வான். மற்றப்படி கணவன் போலாகுமா..?

‘இது சரி வராது. இனி இப்படி இருந்தால் மனநோயாளி ஆகி வைத்தியம் பார்க்க நேரிடும். !’- தோன்ற… அமலா பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தாள்.

இரவு விவேக் வீடு திரும்போது… மணி…11. 20.

“என்ன அமலா இன்னும் விழிச்சிக்கிருக்கே..? ” கேட்டு அருகில் வந்தான்.

பேசப் படிக்கவில்லை.

“என்ன கோபம்..?”

தோளைத் தொட்டான்.

“…………………….”

“சரி வா. நாளைக்கே கடைக்குப் போய் புடவை எடுத்து வந்து பிறந்த நாள் கொண்டாடுறோம் ! ” சொன்னான்.

“நம்பிக்கை இல்லே. நாளைக்கு த் திடீர்ன்னு வேலை வரும். போயிடுவீங்க..”

“அதுக்கு என்ன பண்ண சொல்றே..?”

“தாம்பத்தியத்துக்கு மட்டும்தான் நீங்க. மத்ததுக்கெல்லாம் ராமு ராமு.! எனக்கு சரி படலைங்க. தாம்பத்தியம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு வாழ்வில் நிறைவை, மகிழ்ச்சியை ஏற்படுத்திடாது. என்னதான் வேலை, நெருக்கடி இருந்தாலும்… கணவன் இறங்கி வந்து மனைவி மக்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேத்தி உற்சாகத்தைக் கொடுக்கணும். அதுதான் கண்ணுக்கு அழகாய் இருக்கும். வாழ்வும் நிறைவாய் இருக்கும். இந்த அன்பு, ஆசை கிடைக்காமத்தான் நிறைய பெண்கள் கிடைக்கும் இடங்களில் கள்ள சுகம் தேடுறாங்க. இன்னும் சில பேர் இந்த வாழ்க்கையே வேணாம்ன்னு தாலியைக் கழற்றி வைத்துவிட்டுப் போறாங்க. விவாகரத்துப் போறாங்க. தயவு செய்து எங்களைப் புரிஞ்சிக்கோங்க..” சொல்லி கணவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.

அது விவேக்கைச் சுட்டது.

“மன்னிச்சுக்கோ. அப்படியே நடக்கிறேன் !” சொல்லி அவள் தலையை ஆதரவாக வருடினான்.

அமலாவிற்கு கணவனின் நெஞ்சும், வார்த்தைகளும் சுகமாய் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *