சின்னப் பொண்ணு சின்னப் பையன் சிரிச்சி கட்டுன தாலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,215 
 
 

ஒரு வாரமோ பத்து நாளோ சரியா தெரியில, அவ வெளிய வராளாம்!

அவளுக்குக் கடைசி பய பொறந்து ஆறு மாசமோ என்னமோ, இவள…. அதான் என் வீட்டுக்காரி இருக்காளே, அவள பாராங்குல வெட்டிப்புட்டு போயிட்டா….!

நல்ல நேரம் யாருதுன்னு தெரியல… இவளுக்கு வெறும் காயத்தோட போனதுனால…. அவளுக்கு வீடு பூந்து பாராங்குல வெட்டுன குத்தம்னு சொல்லி எட்டு வருசம் ஜெய்லு தண்டன.

அப்பவே பெரிய பயலுக்கு பனெண்டு வயசு. இப்ப யுனிஸிட்டில படிக்கிறான். அவனுக்கு அடுத்து பொம்பள புள்ள, ஃபோம் சிக்ஸ் படிக்குது. போன வாரத்துல அவங்க மாமன் வீடு, தட்டோட வந்துட்டாங்க நிச்சியம் பண்ணிட்டுப் போவ.

அவங்கப்பாதான் கண்டிசனா சொல்லிப்புடுச்சி ஜெயிலுக்குப் போனவளோட கூடப் பொறந்தவன் எல்லாம் எங்களுக்கு கொண்டான் கொடுத்தானா ஆவ முடியாதுன்னு.

எகிறிப் பாஞ்சிப்புட்டான் அவ அண்ணன்காரன். பையன்தான் “தங்கச்சி படிக்குது… இப்ப என்னா அவசரம்?”ன்னு சொல்லி, அவனுகள அனுப்பி வச்சது.

அந்த நேரத்திலதான், போற போக்குல அவன் தங்கச்சிக்காரி விடுதலையாகி வர்ற சேதிய சொல்லிப்புட்டு போனான் அவ அண்ணன்காரன். அதுவும் எப்படி…?

“பத்து நாளையில பொண்ணப் பெத்தவ வெளியில வர்றா; பெத்தவ வந்து சபையில நிக்கும் போது, எவ வந்து முடியாது கெடயாதுன்னு பேசறான்னு பார்த்துப்புடறேன்னு..” ஏக பேச்சாப் பேசிப்புட்டு போயிட்டான்.

அடுத்த நொடி, கெழவிக்கி சாமி வந்து எறங்கிடுச்சி! வாய் வலிக்க வலிக்க கத்துது.

“எவ வந்தாலும் இவதான்டா பேசுவா! என் வீட்டு வாசப்படியில அவ வந்து கால வக்கிறதா? கண்ணால பார்த்துப்புட்டும் சும்மா இருப்பனா நானு? வெட்டிப்புடுவேன் வெட்டி”ன்னு ஒரே கூப்பாடு.

வந்து எறங்குன சாமிய மல ஏத்த ரெண்டு நாளாச்சு.

என்னதான் பண்றது? வயசு காலம்னா எல்லாத்துக்குமே ஒரு கோவம் வந்து எகிறிடுது… ஆம்பள பொம்பள வித்தியாசம் பாக்குதா என்னா அந்த கோவம்? இருந்தாலும், பொம்பளயா பொறந்தவளுக்கு ஒரு நிதானம் வேணாமா..?

கைப்புள்ள அழுவுறத கவனிக்கல… பக்கத்து வீட்டுக்காரியாச்சேன்னு நெனைக்கல… அவ புருசன்காரன் வந்து ” என்னா ஏது” ன்னு கேட்டா, நெலம இன்னும் மோசமா போவுமேனு யோசிக்கல…

கையில இருந்த புள்ளைய தூக்கி வீசாத கொறயா போட்டுப்புட்டு , வெளிய ஓடுனவ; அடுத்த நிமுசம் இவள கண்ணு மண்ணு தெரியாம வெட்டறா!

அதுக்கப்புறம் என்னென்னமோ ஆயிப்போச்சி. அவள போலீஸ்காரன் வந்து புடுச்சிக்கிட்டுப் போனதும், இவள ஆஸ்பத்திரிக்கி தூக்கிட்டுப் போனதும், போலீஸ்காரன் கொட கொடன்னு இந்தப் பக்கத்து ஆளுகள விசாரண பண்றோம்னு கொடஞ்சதும், என்னமோ நேத்து நடந்த மாதிரி இருக்கு.

ஓவர்டைம் செஞ்சிட்டு, அர்த்த ராத்திரியில வீட்டுக்கு வந்த இவ புருசன்காரனும் அக்கம் பக்கம் சொல்லி நடந்த கதைய கேட்டவன்தான், அன்னய ராத்திரியே கௌம்பிட்டான், இருந்த எடத்த விட்டு.

அவனும் ஒரு பாராங்க எடுத்துக்கிட்டு அலைஞ்சிருந்தா என்னா கதியாயிருக்குமோ தெரியல, நெலம!

நான்தான், ஆஸ்பத்திரியில கெடந்தவ ஒடம்பு நல்லாயி வந்ததும், நடு வீட்டு தாலின்னுவாங்கள, அது மாதிரி ஒரு கயித்த கட்டி என்னோட சேத்துக்கிட்டேன்.

என் அம்மா, நாலு நாளு பொழுதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு இருந்திச்சு அப்புறம் என்னாத் தோணுச்சோ… சகஜமாயிடுச்சி.

ஆனா, அதுக்கப்புறம்தான் எனக்கு சோதன காலம் ஆரம்பிச்சது…

இவளோட நெரந்தரமா பொழங்க ஆரம்பிச்ச பெறகுதான் இவ வாசன தெரிய வந்துச்சு எனக்கு.

சீக்காளி ஒடம்புக்கு என்ன வாசன இருக்கும்? அதுவும், எப்ப வேணும்னாலும் இழுபறி போராட்டம் நடத்தற ஆஸ்துமான்னா….?!

இது என்னடா, என்ன புடிச்ச கஸ்டகாலம்னு அப்பத்தான் ஒரு வெசனம் வந்தது மனசுல. அதோடதான் இவளோட பொழங்கறத நிறுத்திக்கிட்டு, வேற பக்கமா புத்தி திருப்பினது எனக்கு!

இந்த ‘என்னப் பாரு, ஒன்னப் பாரு…’ இழுபறியில, நாளு ஓடுன ஓட்டம் தெரியல.

எப்பவோ வரப் போறான்னு இருந்தவ, தோ… எட்டிப் பாக்குற நாளுக்குள்ள வந்து நிக்கப் போறாளாம்!

இவள வெட்டிப்புட்டு உள்ளுக்குப் போன இத்தன வருசத்துல, இங்ஙன இருந்து அவள ஒரு நாதி கூட எட்டிப் பாக்கல.

பால்குடி மாறாத பச்சப் புள்ளன்னு கடைசி பயல மூணு வயசு வரைக்கும் அவக் கூடவே வச்சிக்கிறதுக்கு உட்டாங்கன்னும், அதுக்கப்புறம் அவ பொறந்த வீட்டு சனத்துல ஏதோ ஒன்னு அவன கொண்டு போயி வச்சிக்கிடுச்சின்னு காத்து வாக்குல கேள்விப்பட்டதுதான்.

புத்தியுள்ள பூன பரமண்டலம் போச்சுதாம், நெத்திலி மீன வாயில கவ்விக்கிட்டு! அந்தக் கதயாத்தான் ஆயிப் போச்சு, அவ கத.

புருசனோட போக்குவரத்து என்னன்னு தெரிஞ்சவ, கட்டிப் போடற வெதமா கட்டிப் போடாம, அடுத்த வீட்டுக்காரியப் போயி வெட்டுவாளா?

மூணாவது வீட்டுக்காரனோட அம்மா கெழவி, அடிக்கடி ஒரு வார்த்த சொல்லிக்கிட்டு அலையும், “சின்னப் பொண்ணு, சின்னப் பையன் சிரிச்சி கட்டுன தாலி; சிக்கில்லாம அவுத்து தந்தா சென்னப் பட்டணம் பாதி..”ன்னு!

சொல்லிட்டு “கெக்கே..” ன்னு ஒரு சிரிப்பு ஒன்னு சிரிக்கும்!

அப்படித்தான், சிரிப்பா சிரிச்சிப் போச்சி இவளுக பொழப்பு.

சின்னப் பொண்ணா சின்னப் பையனா கல்யாணம் பண்ணிக்கிட்ட புதுசுல பேசற பேச்செல்லாம் ஓடுற தண்ணிக்கித்தான் சமானம் போல. அதான், “எனக்கு நீதான் ஒனக்கு நாந்தா”ன்னு பேச்செல்லாம் நாப்பது வயசுக்கு மேல பறந்து போயிடுதே.

இல்லாம போனாவா, அர ஆம்பள வயசுல புள்ளைய வச்சிக்கிட்டு, எந்த நேரத்துலையும் பெரிய மனுசி ஆயிடுவாங்கற நெலயில உள்ள பொண்ணையும் வச்சிக்கிட்டு, அடுத்த வீட்டுக்கு புதுசா குடி வந்தவ நெறத்தக் கண்டு, புத்தி தடுமாறிப் போவும்.

அது சரி! சென்மத்துல ஊறனது, செருப்பால அடிச்சா போவுமா?

ஆனா, கெழவி வேற சொன்னுச்சி… கன்னி ராசி ஆம்பளைங்க அப்படித்தானாம்…!

ஆனாலும் கூட்டிக் கழிச்சிப் பாக்கும் போது, ஒன்னுக்கு ரெண்டா கட்டியும், கம்மனாட்டித்தான்னு சொல்லுது கணக்கு!

யோசனையிலயே பத்து நாளுங்கறது ரெண்டு வாரமா முடிஞ்சிப் போனது தெரியாம இருக்க, இவதான் என்னக் கேட்டா.

“என்னமோ, அது வரப்போவுதுன்னு பேசிக்கிட்டாங்க…ஒன்னத்தையும் காணோம்…?”

“தெரியல… ஒரு வேள, அவுங்க அண்ணன் தம்பி அடக்கி வச்சிருப்பாணுங்க… போவ வேணாம்னுட்டு..”

“அது வாழ்ந்த வூட்டுக்கு வர்றதுக்கு, ஏன் அவனுக வேணாம்னுட்டு சொல்லப் போறானுவ..?

“ம்..? ஆத்துக்குப் போவானேன்…. செருப்ப கழட்டுவானேன்னுதான்..”

அவ இந்தப்பக்கம் வந்தா, நானும் இங்கனத்தான் இருப்பேன்னு சொல்லி வம்பு பண்ண ஆரம்பிச்சா, ஒத்த ஆம்பள எத்தன பேர வச்சி சமாளிப்பான்?

மனசுல என்னென்னமோ படம் ஓட, இவ என் வாயக் கிண்டுறா….

“புரியலயே…”

எனக்கு “பக்” குன்னு புரிபட்டு போச்சு இவ கவல! “மறுபடியும் ஏதும் பண்ணிப்புடுவான்னு பயப்படறியா? அதெல்லாம் ஏதும் பண்ண மாட்டா!”

லேசா சிரிப்பு வந்துடுச்சு எனக்கு.

“இல்லல்ல… என் கவல அது இல்ல..”

“அப்புறம்…?”

கண்ண இடுக்கி, இவ மூஞ்சியவே பாக்கறேன், நானு என்னமோ, ரொம்ப யோசன பண்றது மாதிரி இருந்தாலும் என் மனசுக்கு என்னமோ, அது பொய்யிங்கிற மாதிரி தோணுது. சட்டுன்னு ஒரு எரிச்சல் எகிறிப் பாஞ்சி வருது.

“ஒன்னுந் தெரியாத பாப்பாவாட்டம், ரொம்பத்தான் யோசன பண்ணாத. என்னா ஏதுன்னு வாயத் தொறந்து சொல்லு.”

“ஆங்! நானும் எல்லாந் தெரிஞ்சவந்தான். அதான் யோசன பண்ணிக்கிட்டு இருக்கேன். எழவுக்கு வந்தவளெல்லாம் தாலி அறுப்பாளான்னு..”

“ந்தா… என்னா… பைத்தியம் ஏதும் புடுச்சிக்கிச்சா ஒனக்கு…?”

“இன்னுமில்ல…! தெளிவாத்தான கேக்கறேன் ஒங்கள; நான் ஒங்களோட தொடர்பா இருக்கேன்னு தெரிஞ்சப்ப, அது என்ன வெட்டுனுச்சி… சரி! இப்பவும் ஒங்க போக்குவரத்து தெரிஞ்சி, அதுதான் வந்து வெட்டுமா? அப்புறம் நான் என்னத்துக்கு இருக்கேன்?!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *