சின்ட்ரெல்லாவின் முத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 5,029 
 
 

“அப்பா.. நான் கோழிக்கு பேர் வைக்கவா?”

“கோழிக்குப் பேரா.. !!சண்டைக்கோழிக்கு வைப்பாங்க… ஆனா சாப்படற கோழிக்கு கூடவா வைப்பாங்க!”

“என்னது சாப்படற கோழியா!?”

“ம்.. அது ஒன்னும் இல்ல.. நீ எதோ பேர் வைக்கணும்னு சொன்னியே.. வச்சுக்க”

“ம்.. சரிப்பா”, என்று சொல்லிவிட்டு “சின்ட்ரெல்லா” “சின்ட்ரெல்லா” என கத்தியபடியே ஓடினான் விக்கி என்ற விக்னேஷ்.

அடுத்த சில நாட்களில் குலதெய்வம் கோவிலுக்கு விக்கியின் முழுக்குடும்பமும் புறப்பட்டது.

சின்ட்ரெல்லாவை நன்றாக குளிப்பாட்டி, மாலையிட்டு, பொட்டு வைத்து கூடவே அழைந்துச் சென்றனர். தன் கூடவே அதனை வைத்துக்கொண்டான் விக்கி.

‘ஆகா.. நம்ம சின்ட்ரெல்லா பொட்டு, மாலைனு ரொம்ப அழகா இருக்காளே’ என மனதிற்குள் சந்தோசப்பட்டான் விக்கி.

கோவில் வாசலில் பூசாரி படு ஆவேசமாய் கையில் அரிவாளுடன் சாமி முன் நின்று கொண்டிருந்தார்.

விக்கியின் அப்பாவின் முறை வந்தது.

“விக்கி.. சின்ட்ரெல்லாவ இங்க தூக்கிட்டு வா”

“நீங்க சாமி கும்மிடத்தானே போறீங்க. போய் கும்பிட்டு வாங்க..நான் சின்ட்ரெல்லாவ பத்தரமா பாத்துக்கறேன்”

“டே.. விளையாடாத.. சீக்கிரமா அதக்கொண்டா”, என்று கத்திய அப்பாவை பயமாய் பார்த்தான் விக்கி.

“என்னப்பா இப்படியெல்லாம் கத்தறீங்க? எதுக்குப்பா சின்ட்ரெல்லா?”

“டே.. நமக்கு நல்லது நடந்தா ஒரு கோழிய பழியிடறதா வேண்டிக்கிட்டோம்.. அதான்..”

“ஓ.. நமக்கு நல்லது நடந்தா.. இன்னொருத்தருக்கு கெட்டது பண்ணலாமாப்பா.. இது என்ன நியாயம்? உயிர்கள கொல்றது தவறுனு காந்திஜி சொன்னாருனு நீங்க தானே ஒரு ஆசிரியரா எங்களுக்குச் சொல்லி கொடுத்தீங்க.. இப்ப நீங்களே இப்படி பண்ணலாமாப்பா!?”, எனக் கண்ணில் கண்ணீர் பொங்க நின்ற விக்கிக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் தவித்தார் விக்கியின் அப்பா.

சின்ட்ரெல்லாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. தூரத்தில் பூசாரியின் தட்டிலிருந்து பறந்து சென்று விழுந்த ஐநூறு ரூபாய் நோட்டிலிருந்த காந்திஜியின் முகத்தை கொத்த ஆரம்பித்தது.

அதனை சின்ட்ரெல்லா காந்திஜிக்கு கொடுக்கும் முத்தமாகவே நினைத்துக்கொண்டான் விக்கி.

– “அருணையில் பூத்த மலர்கள்” என்ற “தமிழக எழுத்தாளர்கள் குழு” வெளியிட்ட தொகுப்பில் இடம்பெற்ற கதை, டிசம்பர் 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *