கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2023
பார்வையிட்டோர்: 614 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாருமதி தலையில் அடித்து அழுது கொண்டாள். தன் வாழ்க்கை தன்னாலேயே இப்படி போகும் என்று அவள் நினைக்கவில்லை. உண்மையில் அவள் இப்படி அலறி அழுவதற்கான காரணம் தன் வாழ்க்கை தடம் மாறிப்போனதா? அல்லது அதோ அங்கே பைத்தியம் தெளிந்தும் தலைவிரி கோலமாய் நின்று தனக்குத்தானே ஏதோ சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறாளே தங்கை புவனா, அவளைப் பார்த்தா? 

எப்படியோ தன் பிடிவாதத்தால் தான் எல்லாமே நடந்தது என்று எண்ணம் வரும்போதெல்லாம் உடம்பெல்லாம் கொதிக்கும் எண்ணெய் கொட்டியது போல உணர்வாள். 

தாயிருந்தும் தனியாக வளர்ந்தவர்கள் தாம் இருவரும். தந்தையின் மறைவுக்குப் பின் சாரு தாயாயிருந்து தங்கையைப் பார்த்தாள். அப்போது மிஞ்சிப் போனால் அவளுக்கு இருபத்து மூன்று வயது கூட இருக்காது. படிப்பையும் வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்து ஒருவாறு சமாளித்து வந்தாள். 

அவளும் பெண் தானே? வாழ்க்கையைப்பற்றி அவளுக்கும் கனவுகள் இருக்கவே செய்தது. தனது தகுதிக்கேற்ற ஒருவன் கிடைக்கும் வரை காத்திருந்தாள். எல்லோரும் வீடு ரொக்கமாகப் பணம் கேட்டு பெண் பார்த்தார்களே தவிர அவளது உள்ளத்தை பார்க்க யாரும் இருக்கவில்லை. 

ஆம்! வந்தான் நரேன். அவளது கனவு கற்பனை எல்லாவற்றிற்கும் உயிரூட்டுவது போலவே அவனிருந்தான். சாருவின் மனசை போட்டு பிழிந்து அவளது சந்தோஷங்களை உறிஞ்சிக் கொண்டிருந்தான். உறக்கம் வராத இரவுகளை புதிதாக தந்து கொண்டிருந்தான். ஆனால் தப்பியும் அவள் தன் உணர்வுகளை அவனுக்கு காட்டிக் கொள்ளவில்லை. 

அவனுக்குள்ளும் ஷீலா என்றொருத்தி நான்கு வருடங்களாக வாழ்ந்துகொண்டிருந்தாள். அந்த ஷீலாவை அவனால் இன்னமும் மறக்க முடியவில்லை. அவனையே தன் மூச்சு என்றவள் அவன் வாசமே தன் வாழ்க்கை என்றவள் காலத்தின் கட்டாயங்களுக்கு கட்டுப்பட்டு இன்னொருவனை மணமுடித்துக்கொண்டு போனாள். சில ஆண்களைப் போல் அல்லாமல் அவளது வாழ்வு சிறப்பாய் அமைய இறைவனை வேண்டினான் அவன். மறக்க வேண்டும் என்று நினைத்தவைகள் யாவும் ஏனோ மீண்டும் மீண்டும் வந்து அவனை தொல்லைப்படுத்தின. அவற்றையெல்லாம் துரத்தியடிக்க முடியாமல் திணறிய அவன் குடி, சிகரட் போன்ற பழக்கங்கள் இல்லாததால் தன் மனசில் புயலடித்தவைகளுக்கு எழுத்துருவம் கொடுக்கத் தொடங்கினான். கவிதை எழுதத்தொடங்கினான். 

அந்த கவிதை சாருவையும் நரேனையும் நண்பர்களாக்கின. தன்னையும் மீறி, தன் கட்டுப்பாடு இழப்பதை அவளாலும் தடை செய்து கொள்ள முடியவில்லை. ஆகவே உள்ளுக்குள் வைத்திருந்த ஆசைகள் பார்வைகளாய் வெளிப்பட்டன. சூடு கண்ட ஆணல்லவா? புரிந்தாலும் அவன் சும்மாயிருந்தான். 

எத்தனை முறை அவன் விலகிப் போனாலும் சாருவின் மனது அவனையே விரும்பியது. எப்போதாவது அவனுடன் தொலைபேசியில் உரையாடியவளுக்கு எப்போதுமே அவனுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது. இறுதியில் காதல் தீ பற்றிக்கொண்டது. 

‘நரேன் என்ன ஏமாத்திட மாட்டிங்களே?” 

அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் அவள் மறக்காமல் கேட்கும் கேள்வி இது. ஏற்கனவே ஷீலாவின் மூலம் ஏமாற்றத்தின் வலி கண்டிருந்தவன் தன்னால் அந்த வலி யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தான். இப்படியிருக்க சாபம் போல வந்து வாய்த்தான் சாருமதியின் நண்பன் சுதன். 

சுதனின் சிரிப்புகளுக்கிடையே ஊர்ந்து திரியும் பொய்மையை சாரு விளங்காததுபற்றி நரேனுக்கு பெரும் ஆச்சரியம். அட்டைக்கு மெத்தை எப்போதுமே பிடிப்பதில்லையே? அப்படியிருக்க இப்படிப்பட்ட ஒருவன் சாருவின் பார்வைக்கு கூட தகுதியில்லாதபோது அவனை எப்படி இவளால் நண்பனாக ஏற்க முடியும் என எண்ணி குழம்பியிருக்கிறான். 

சுதனின் நடவடிக்கை பற்றி நரேன் கூறுகையில், தன் ஐந்து வருட நட்பு என்று கதையை ஓரங்கட்டி விடுவாள். மிஞ்சி ஏதாவது பேசினால் சுதனின் நட்புக்கு பிறகுதான் உன் காதல் என்பாள். அன்புக்கும் காதலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் புரியாதபடிக்கு நரேன் வேண்டப்படாதவன் ஆகிவிட்டான். 

‘நட்பு படலை வரைக்கும்’ என்ற முதுமொழி மாறி, வீடு வரைக்கும் சாரு சுதனை அனுமதித்திருந்தாள். நரேன் கூட இதுவரை அவள் வீட்டுக்குப் போனதில்லை. இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு ஒரு ஆண் செல்வது சமூகத்தில் தமக்கிருக்கும் மரியாதையை குறைக்கும் என்பது படிப்பறிவுள்ள அவனுக்கு விளங்கியது. சில இரவுகளில் கோல் பண்ணுகையில் சுதனும் இருப்பதாக சாரு கூறுவாள். இரவு பத்தரை மணி வரை சுதன் என்ன செய்கிறான் என்று நரேனால் கேட்க முடியவில்லை. 

சந்தேகம் சந்தோஷத்தை தின்றுவிடும் என்பதால் சும்மாயிருந்தான். காலம் யாருக்காகவும் காத்திருக்காதே. காதலில் விழுந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் நரேனின் தொலைபேசிக்கு மிரட்டல் அழைப்புகள் வரத் தொடங்கிற்று. சாருவை விட்டு விலகும்படி அந்த மிரட்டல் அமைந்திருந்தது. தான் காதலிப்பவளைப் பற்றி ஒருவன் இப்படி கூறினால் எந்த ஆணுக்குத்தான் கோபம் வராது? என்றாலும் நரேன் பொறுத்தான். ஏனெனில் திக்கித்திணறி பேசும் இவன் சுதன் தான் என்பது புரிய நரேனுக்கு வெகுகாலம் செல்லவில்லை. 

ஒரு நாள் அலுவலகம்விட்டு வந்து கொண்டிருந்த நரேன் அந்தக் காட்சியைக் கண்டு இரத்தம் உறைந்து போனான். சாருவின் தங்கை புவனா சுதனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக திரும்பியவர்கள் இவனைக் கண்டு திக்குமுக்காடிப் போனார்கள். சுதனின் இந்த நாடகம் சாருவுக்குத் தெரியவில்லை. அவளைப் பொறுத்தளவில் தங்கையும் நண்பனும் தங்கங்கள். 

நரேன் அப்போதைக்கு எதுவும் பேசாதது மாத்திரமன்றி இது பற்றி சாருவிடமும் சொல்லவில்லை. சாருவிடம் சொல்லாமல் விடுவதுதான் பிற்காலத்தில் தனக்கு எமனாய் அமையும் என்று எண்ணவில்லை. வாழ்க்கை துணைவனாக வரப் போகும் நரேனை விட வழித்துணையாய் வரும் சுதன் பெரிதாக தோன்றினானா சாருவுக்கு? நரேன் புவனா மேல் மையல் கொண்டவன் என்பது போல் மாயையை தோற்றுவித்தான் சுதன். எதுவுமே தெரியாமல் தன்னையே சுதனிடம் இழக்குமளவுக்கு புவனா சுதனை காதலித்துத் தீர்த்தாள். 

விதி விளையாடிற்று. ஒரு நாள் பாதையோரத்தில் நஞ்சருந்தி மயங்கி விழுந்து கிடந்த புவனாவை நரேன் தூக்கி வரவும், எதிர்பாரா விதமாக அவ்வழியால் சாரு வரவும் சரியாயிருந்தது. சாருவிடம் சுதன் கூறியிருந்த பொய் அக்கணத்தில் வேதவாக்காய் மாறியது. புவனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள். அவளது கர்ப்பத்துக்கு காரணம் நான்தான் என சாருவின் முன்னலேயே ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நரேன் இருந்தான். காதலில் விரிசல் விழ, நரேனும் சாருவும் சந்தோஷித்த காலம் எல்லாம் கண் முன்வந்து ஏளனமாய் சிரித்தன. 

மாதங்கள் இரண்டு கடந்த நிலையில் தங்கை குணமானாள். கண் விழித்தவுடனேயே நரேனைக் கேட்டாள். சாருவுக்கு கோபம் தலைக்கேற பச்சையாகவே திட்டினாள். நரேனை துரோகி என்றாள். நயவஞ்சகன் என்றாள். விஷயமறிந்து துடிதுடித்தாள் புவனா. 

உண்மையில் தன் கர்ப்பத்துக்கு காரணம் நரேனல்ல. அந்த ராஸ்கல் சுதன் என்றும், எல்லாம் முடிந்த பின் தன்னிடமே சாருவை காதலிப்பதாய் கூறி அவன் தம்மை ஏமாற்றிவிட்டதையும் கூறினாள். புவனா மூலம் இவற்றைக் கேட்ட போது சாருவுக்கு உறைத்தது. ஒரு முறையேனும் சுதன் வைத்தியசாலை வந்து பார்க்காததும் ஞாபகம் வந்து தொலைத்தது. 

எல்லாம் முடிந்து போயிற்று. கள்ளுக்கும் பாலுக்குமிடையே உள்ள வித்தியாசம் நன்றாகவே புரிந்தது சாருவுக்கு. இனி எத்தனைக்கும் நரேன் தனக்கில்லை என்று எண்ணியபோது நெஞ்சுக்குள் கடுமையாய் வலித்தது. சுவாசிக்க மறந்து தகிக்கும் அவளால் அப்போதைக்கு ஆழ்ந்த பெருமூச்சொன்றை மட்டுமே வெளியிட முடியுமாயிருந்தது!!!

– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *