சிதைந்த கூடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2021
பார்வையிட்டோர்: 3,364 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிந்தாமணி பொய்யாகி விட்டாள்!

நேற்றுவரை எல்லா நிஜங்களுக்கும் நிஜமாக இருந்து, இன்று எல்லாப் பொய்களுக்கும் பொய்யாகிப் போனவள் ஊர்க் கோயில் மூன்றடிக் குழியிலே உறங்குகிறாள். என் நெஞ்சில் மண்ணை அள்ளிப்போட்ட அந்தச் சண்டாளியை நானும் வஞ்சம் தீர்த்துக்கொண்டேன் மூன்று பிடி மண்ணை அந்தக் கழுதையின் நெஞ்சில் வாரி இறைத்தேன். ஆனால் அது மண்ணா ? இல்லை. என் கண்களிலிருந்து திரண்ட வெம்பனித்திரள். வெயிலில் வெடித்து விடுகிற வெறும் பனித்துளி கூட அல்ல அது. என் நெஞ்சைக் கிழித்துப் புறப்பட்ட உதிரப் பெருக்கு!

“கொடுத்து வைத்தது மண்ணோடு போய்விட்டது. மனம் கலங்கி ஆவது என்ன ? வாருங்கள் போகலாம்!” என்று உயிரோடு உறைத்துவிட்ட என் கைகளைப் பிடித் திழுத்தார் மேலவீட்டுப் பரமசிவம் பிள்ளை. அவர் குரலில் ஈரம் இல்லை; ஓர் உயிர் மலர் எந்த லட்சியத்துக்காக மலர்ந்ததோ , அந்த லட்சியம் நிறைவேறுவதற்கு முன்னமேயே

அது கருகி உதிர்ந்து விட்டதே என்ற அனுதாபம் இல்லை. வெறும் உபசரணைப் பேச்சுக்களால் பிறரின் துக்கத்தில் கலந்து கொள்கிற எத்தனையோ சம்பிரதாய மனிதர்களில் அவரும் ஒருவர்.

என்னைச் சூழ்ந்திருந்த அத்தனை பேரும் மலட்டு மனம் உள்ளவர்கள். போகப் பறந்தார்கள். ஐயோ , என் குழந் தையின் பஞ்சு உடலிலே மண்ணை வெட்டிப் போடுகிறானே வெட்டியான்! பொறுப்பாளா என் செல்வம்? பெற்றவன் அருகிருக்க, பிறந்த மகள் மண்ணோடு புதைகிறாளே! அதோ அவள் கால்கள் மறைகின்றன. நான் ஆசையோடு முந்தா நாள் பட்டுக்கயிறு பூட்டிய அந்த இடுப்பிலே மண் விழுந்து விட்டது. என் இதயமான அந்த நெஞ்சில் இரக்க மின்றி மண்ணை வெட்டிப் போடுகிறானே வெட்டியான்!

“அடே, கொலைகாரா ! என் குழந்தை ரொம்பச்சாதுடா ஏண்டா அவளைப் புதைக்கிறாய் ? ஐயோ, என் மகளைக் குழியிலிருந்து எடுத்து என்னிடம் கொடுத்துவிடு – கொடுக்க மாட்டாயா? உன்னையே அந்தக் குழியில் வைத்துப் புதைக் கிறேன் பார்!”

வெட்டியானை நோக்கி ஓடிய என்னைப் பிடித்து இழுத் துக்கொண்டு போயிற்று அனுதாபம் காட்ட வந்த அரக்கர் கூட்டம்.

நேற்று அவளை உயிரோடு சுமந்தேன்; சற்று நேரத் துக்கு முன்பு அவளைப் பிணமாக்கிச் சுமந்தேன். இப்பொழுது என்னையே பிணமாக்கிச் சுமந்து கொண்டு போகிறேன்.

இந்தப் பிணத்தைக் குளத்தில் கொண்டுபோய்த் தள்ளினார்கள். மூழ்கி எழுந்தவுடன் விழுந்து பிடுங்கும் வேதனைக்கு இரையாக உயிர்ப்படைந்தேன்.

நீரில் அலை அடுக்குகளில் இரண்டு கொடிக்கால்களின் சலங்கை கலகலத்தது.

“அப்பா!”

உருவம் இல்லை. வெறும் குரல்! அலை பேசுமா? இல்லை, இல்லை! அந்தக் குரலைப் புரிந்துகொள்ள எனக்கு உருவம் வேண்டாம். என்னில் ஒரு கிளையான என் அருமைச் சிந்தா மணிதான் என்னை அழைக்கிறாள்.

ஒரு வாரத்துக்கு முன்பு இப்படித்தான் நான் இந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தேன். பிடிவாதமாக வம்படி செய்த சிந்தாமணியைப் படித்துறையில் உட்கார வைத்திருந்தேன். தினசரி நான் குளத்துக்கு வரும்போ தெல்லாம் முரண்டுபண்ணி என்னுடன் புறப்பட்டுவிடுவது அவளுடைய இரண்டாவது வயதில் ஏற்பட்ட ஒரு பழக்கம்.

அப்பொழுதும் ‘அப்பா’ என்றுதான் அவள் கூப்பிட் டாள், இதே குரலில் ஒலித்த ஆர்வத்துடன்.

திரும்பிப் பார்த்தேன். சிந்தாமணி நீரில் இறங்கி வந்துகொண்டிருந்தாள். “அப்பா! அந்த அலையிலே ஒண்ணைப் பிடிச்சு எனக்கு வெளயாடக் குடுக்கிறியா?” அலைகளில் கையைத் துழாவிக்கொண்டே கழுத்தளவு நீருக்கு வந்து விட்டாள்.

நான் பாய்ந்தோடி அவள் கன்னத்தில் இரண்டு கொடுத்து உச்சிப் படிக்கட்டில் கொண்டுபோய் வைத்து, ”சாக இருந்தாயே, பிணமே!” என்று பற்களைக் கடித்தேன்.

அவள் அழுது கதற வேண்டுமே! சாதாரண மனித உணர்வுகளில் என்னைப் போன்றவர்கள் சிக்கித் தடுமாற, உணர்வுகளைக் கடந்து நிற்கும் ஒரு சுபாவம் இந்த நான்கு வயதுப் பிஞ்சுக்கு எப்படி வந்தது? என்னுடைய கோபம் எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை நிரூபிப்பவள் போலச் சிரித்தாள். “உனக்கு வேணுங்கிற பணத்தை ஆபீஸிலே போய்க் கொண்டுக்கிட்டு வர்றியே, அதைப்போலே எனக்கு வேணும்கிற அலையை நான் கொண்டுக்கிட்டு வரணும்னு ஆசைப்பட்டது தப்பா? அப்போ, நீயும் ஆபீஸுக்குப் போய்ச் சாகும் பிணம்தானா?”

அவள் வயதுக்கேற்ற கேள்வியா அது? என் அறிவுக்குப் புலப்படாத கேள்வியும் கூடத்தான் அது! ஒவ்

வொருவரும் செத்ததற்குப் பிறகு சாவதில்லை. வாழும் போதே சாகிறார்கள்; சாகும் போதே வாழ்கிறார்கள். இது புதிர் போலத் தோன்றினாலும் விளங்கிக் கொள்ளக்கூடிய வேத னைக்குரிய ஓர் உண்மைதான். ஒவ்வொருவருக்கும் சாவுக் காகக் கணிக்கப்பட்ட காலத்தில் சென்று மறையும் ஒவ் வொரு விநாடியிலும் செத்து, வரவிருக்கிற ஒவ்வொரு விநா டியிலும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். நம்முடைய வாழ்நாளைக் குறுக்கிக்கொண்டு வரும் சாவுக் காலத்தை வாழ்க்கை என்று நம்பி ஏமாறுகிறோம்.

இதைக் கூறிவிட்டாளே என் கண்மணி!

அவளை உச்சி மோந்து உள்ளம் குளிர வேண்டியவன், அப்பொழுது கண்டிப்புள்ள ஒரு தந்தையாகத்தான் நடந்து கொண்டேன். அவளைக் கொண்டாடினால் குளிர் விட்டுப் போய் மீண்டும் தண்ணீரில் இறங்கிவிட்டால்?

“பேசாதே!” என்று அதட்டி விட்டு மீண்டும் என் குளியலைத் தொடங்கினேன்.

“அப்போ என்னைப் பேசாதேன்னு வாயிலே அடிச் சாய், இப்போதாவது பேசலாமா?” என் குழந்தை அண்டாத ஆழத்தில் இறங்கி, என்னை நெருங்கிக் கேட்கிறாள்.

இப்பொழுது நான் அறை கொடுப்பதற்கு அவள் கன்னம் இல்லை. என் ஊமை உள்ளத்தின் உருப்படியான கருவியாக இருந்த வாய்கூட அடைத்து விட்டது.

“அப்பா! ‘அலை’ என்கிற பொய்யைப் பிடிக்க ஆசைப் பட்ட என்னை அன்னிக்கு அறைஞ்சியே, நீ மட்டும் எப்படி இருக்கியாம்? உனக்கும் எத்தனை ஆசை? ஆபீஸிலே உத்தியோகம் உயரணும், அம்மாவுக்கு அம்பாரமா நகை போடணும், பெரிய மாடி வீடு கட்டணும் என்கிற ஆசைகளிலே நீ அகப்பட்டுத் தவிக்கிறியே, இதுக்கு விடுதலை வேணாம்? இப்போப் பாரேன். நானும் இல்லை; ஆசையும் இல்லை; ஆழமும் இல்லை ; அலையும் இல்லை…..”

“சிந்தாமணி……!” நீரைக் கலக்கியது என் அலறல்.

சீறிப் புரண்டன் அலைகள் . சுழி சுழியாய், நீளம் நீளமாய், திட்டுத் திட்டாய், நுரை நுரையாய்ப் பிரிந்து விரிந்து, சரிந்து, மறைந்து விட்டாளா சிந்தாமணி?

“சிந்தாமணி, சிந்தாமணி ….”

“ஆழமும் இல்லை; அலையும் இல்லை ……”

இரு கரங்களையும் நீரைப் பிளக்கும் கத்திகளாக்கி நீந்திச் சென்று கொண்டிருந்த என்னை, பரமசிவம் பிள்ளை இழுத்துக் கரை சேர்த்தார்.

“நாலும் படித்த நீங்களே துக்கத்தைத் தாளாவிட்டால் என்னைப் போன்றவர்களின் உபசாரம் எதற்காகும்? வாருங் கள், வீட்டுக்குப் போகலாம்” பரமசிவம் பிள்ளை கரையோடு என்னை விடவில்லை. என்னை என் வீட்டுக்கு நகர்த்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

பரமசிவம் பிள்ளை சொன்ன நான் படித்த நான்கும் மிக மிக அற்பமானவை. அறிவின் அகங்காரத்தைப் பூதமாகக் கிளப்பி விட்டிருந்த அவை, துக்கத்தின் அதிர்ந்த ஒவ் வொரு சிறு மூச்சிலும் ஒடுங்கிப் புகைகின்றன. சிந்தாமணி எதைப் படித்து அறிவு பெற்றாள்? இதய ரகசியத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவு என்னும் எருமையை எந்த ஒரு சக்தியின் மூலம் துள்ளிக் குதித்தோட வைத்தாள்?

எனக்குத் தெரியாது; சத்தியமாகவே தெரியாது.

இளங் காலைப் பனியின் கனவில் குளித்த மலரின் அற்பப் புன்னகையைப் போல் மறைந்தோடி விட்டாள் சிந்தாமணி. அற்பப் புன்னகை’ என்று பெரிய மனிதத் தனம் நாடகம் ஆடும் என் அறிவின் பொய்த் திரைக்குப் பின்னே ஓர் உண்மையான தோற்றம் நன்றாகத் தெரிகிறது. சிந்தாமணி சின்னஞ் சிறு வாழ்க்கையை நடத்தி, ‘காலம்’ என்னும் கவிஞனின் நிரந்தரக் கவிதையாக உலவிக்கொண் டிருக்கிறாள். நான், நான் … மங்கிய சிந்தனைகளில் மாய்ந் துருகும் ஓர் அனுதாபத்துக்குரிய மனித ஜந்து.

“நானும் இல்லை; ஆசையும் இல்லை ….” – சிந்தாமணி யின் குரல் தொலை தூரத்துச் சோக கீதமாக என் மனத்தை வளைத்துக் கொள்ளுகிறது.

“தம்பீ! காலைக் கழுவிக் கொள்ளுங்கள். “

நான் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். பரமசிவம் பிள்ளை செம்பை என்னிடம் நீட்டிக் கொண்டிருந் தார். அவர் உள்ளத்தோடு கலக்காவிட்டாலும், சம்பிர தாயங்களில் அழகாகக் கலந்து கொள்ளத் தெரிந்த எங்கள் தெருப் பிரமுகர் . அவருக்குப் பசியைவிடச் சம்பிரதாயம் முக்கியம். மற்றவர்களுக்குப் பிறர் துக்கத்தைவிடப் பசி முக்கியம். வெறும் வயிற்று வாழ்க்கை வாழும் அந்தக் கூட்டம் என்னைக் குளத்தில் விட்டு விட்டுப் பிரிந்து விட்டது.

மயானத்துக்குப் போய் வந்தவர்கள், காலைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்ற சம்பிரதாயத்தைப் பரவசிவம் பிள்ளையைப் போன்ற யாரோ ஒருவர்தான் கொண்டு வந்திருக்க வேண்டும். மனத்திலிருந்த துக்கத்தைக் கழுவக் காலில் தண்ணீர் ஊற்றிக் கொண்டால் போதுமா?

நான் கட்டையாக நின்றேன். பரமசிவம் பிள்ளையே என்னுடைய காலில் தண்ணீரை ஊற்றி விட்டார்.

“வாருங்கள், உள்ளே போகலாம்.”

அவர் ‘உள்ளே’ என்று சொன்ன என் வீட்டுக்குள் நேற்றுவரை எனக்கென்று எத்தனையோ அபிலாஷைகளும், இளங்கதிரில் மின்னும் பனி முத்தைக் கையில் எடுக்க விரும் பிய பைத்தியக்காரக் குணங்களும் இருந்ததுண்டு. இப் பொழுது அங்கே என் சிந்தாமணி இல்லை. பாசத்தைத் தழுவிப் படர்ந்த பைத்தியக்காரத்தனமும் இல்லை. எனக்கு உள்ளே என்ன வேலை?

வேலையைக் கருதியே தொடங்கும் வாழ்க்கையின் பிரயாணம் என் காலடியில் அயர்ந்து தூங்கி விட்டதா?

பரமசிவம் பிள்ளையின் அழகான சம்பிரதாயத்தில் இன்னும் பாக்கி யிருக்கிறது! என் கைகளைப் பிடித்து அவர் உள்ளே தள்ளிக்கொண்டு போனார்.

இன்று காலை வரை ஓர் உயிர்விளக்கு எரிந்துகொண் டிருந்த கூடத்தில் ஓர் அகல்விளக்கு மினுக்கிக் கொண்டிருந்தது. என் செல்வம் அந்தச் சாணம் மெழுகப் பட்ட இடத்தில் தான் தன் மலர்மொட்டு விழிகளை மூடினாள்.

ஒரு வாரம் பத்து நாட்கள் என்றா படுக்கையில் விழுந்து கிடந்தாள் அவள்? ஓடி விளையாடிக்கொண்டிருந்தவள் நேற்று மாலை நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்தாள். திணறித் திணறி மூச்சு விட்டாள். பழிவாங்கத் துடித்த சிருஷ்டியின் இரக்கமற்ற சூன்ய இருளில் அவள் இரு கனவு விழிகளும் பதுங்கிக் களைத்தன.

என் மனைவி, தன் தாய்மைக் கொடியில் விளைந்த செழுங்கனியின் மேல் விழுந்து புரண்டாள். பத்து வருஷங் கள் தபசிருந்து பெற்ற கனல், பாசத்தில் பற்றி எரிந்த போது நாங்கள் அழுது கதறுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

தெருவிலே கூடிப் போலி அநுதாபத்துடன் மக்கள் எங்களைச் சுற்றி வேடிக்கை பார்த்த போது, பரமசிவம் பிள்ளை டாக்டருடன் நுழைந்தார்.

சிந்தாமணியின் நாடியும், இருதயமும் துடித்த துடிப் பில் டாக்டரின் உதடுகள் பிதுங்கிக் கொண்டன. ஏதோ மருந்து கொடுத்தார். ”நாளைக்குச் சாயங்காலம் போனால் தான் என்னால் எதுவும் சொல்ல முடியும் ” என்று கூறி விட்டு அவர் நடையைக் கட்டினார்.

“நான் சொல்கிறேன்!” என்று பக்கத்து வீட்டு வள்ளி மயிலுப் பாட்டி முன்னுக்கு வந்தாள். “இது நாய்க்கணை. இந்தக் கணை முற்றிவிட்டால் மண்டையோடு தான் போகும்” என்றாள்.

“ஏய், கிழவி! உனக்கு இங்கிதம் தெரிய வேண்டாம்? இந்த வேளையில் யார் உன்னை ஜோஸியத்துக்கு அழைத்தார்கள்?” என்று பரமசிவம் பிள்ளை பாட்டியைக் கடிந்து கொண்டார்.

எங்கள் மனத்தில் ஏற்கனவே நெருப்பு விழுந்து விட்ட போது, இந்தப் பரமசிவம் பிள்ளை ஏன் தற்காலிக ஏமாற்று வித்தையைச் செய்து காட்டுகிறார்?

என் மனைவி சௌந்தரம் அழுது அழுது மயங்கி விட்டாள். நான் புலம்பிப் புலம்பி உலர்ந்து விட்டேன். சிந்தாமணி எங்களைச் கொல்வதற்கே வந்த ராட்சஸியைப் போலக் கட்டையாகிக் கொண்டிருந்தாள். அவளுடைய கோலத்தில் ஒரு புதிய பொருளை , இது வரையில் எப்போதுமே அருகிருந்து – பார்க்காத ஒன்றை, இன்று திடீரென்று நான் பார்க்கிறேன். ஆம்! மரணத்தின் இருள் படிந்த உருவம்தான்!

விடிந்த பொழுது, எங்கள் வாழ்க்கையின் நலனை எரித்த பொழுது, வள்ளிமயிலுப் பாட்டியின் இங்கிதமற்ற சோதிடம் பலித்து விட்டது.

சிந்தாமணியின் அவஸ்தைகள் ஓய்ந்து விட்டன. வாழ்க்கையை ஏமாற்றிவிட்ட ஒரு வெற்றிப் பெருமிதம் அவள் துடிக்காத இதழ்களில் கூடி நிற்கிறது.

எங்கள் இதயங்களை ஒரு குருக்ஷேத்திரமாக்கி விட்டு, அமர வாழ்வில் சாந்தியைப் பருகச் சென்ற அந்த நன்றி கெட்ட கழுதை எங்களுக்காக அலட்சியத்துடன் போட்டு விட்டுப் போன பரிசு : வெறும் கூடு; உயிர்ப் பறவை சின்னாபின்னப்படுத்தி விட்டுப்போன சிதைந்த கூடு.

“தம்பி! விளக்கைக் கும்பிடுங்கள். உயிர் என்னும் விளக்கின் ஸ்தூல வடிவமான இந்த அகலை வணங்கினால், அந்த உயிரின் ஆத்மா சாந்தியடையும்!” பரமசிவம் பிள்ளை என் இரு கரங்களையும் சேர்த்துக் குவித்து வைத்தார்.

காரணத்தின் சரியான உண்மையைப் பிரதிபலிக்காத சம்பிரதாயம் ! எந்த ஓர் ஆத்மா அமைதியுறவில்லையோ, அந்த ஆத்மாவின் கதறலினால் மற்றோர் ஆத்மா சாந்தி பெறுமா?

“தம்பீ ….!”

என் வெம்பாளை விழிகள் மெதுவாகப் பரமசிவம் பிள்ளையை நோக்கி ஊர்ந்தன.

“உங்களுடைய மகத்தான இழப்புக்கு ஆறுதல் கூற எதுவுமே இல்லை. ஆனால் நாம் விரும்பியோ, விரும்பா மலோ நம்முடைய கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு தானாக வேண்டும். வேறு என்ன சொல்ல இருக்கிறது? துக்கத்துக்கு வந்தவர்கள் விடைபெற்றுப் பிரியக் கூடாது என்று சொல் வார்கள்.” ஆனால், விடைபெறாமல் விடைபெற்றுக்கொண்டு நடந்தார் பரமசிவம் பிள்ளை.

விளக்கின் சன்ன ஒளியில் என் கண்கள் அசையாமல், அசைவின் எல்லா வழிகளும் அடைபட்டுப் போய்க் கலந்தன். சிந்தாமணி உள்ளத்தின் இருள் துடைக்கும் ஒளியாக இல்லை. தீட்டிய வாளைப்போல் என் நெஞ்சை நோக்கிப் பாய்கின்றாள்.

ஐயோ ! இனி என்னால் அந்த விளக்கைப் பார்க்க முடி யாது. அந்தப் பயங்கர வாளால் குத்துப்பட முடியாது.

என் மனமே இரு கால்களாக நான் பறக்கப் படுக்கை அறையை நோக்கி ஓடினேன். வெற்றுக் கட்டிலில் விழுந் தேன் . இடியின் குமுறலும், மழையின் பொழிவும் இந்தச் சாரமற்ற உலகத்தின் சூன்ய தரிசனமும் பரமசிவம் பிள்ளை கூறிப் போன பேச்சில் எதிரொலித்தன. ‘நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்முடைய கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு தானாக வேண்டும்.’

ஏன், ஏற்றுக் கொள்ள வேண்டிய உள்ளத்தையே இல்லாமல் செய்துவிட்டால்? ஆசைக்காக சபிக்கப்பட்ட துயரங்களைத் தேடிக்கொள்ளும் அறிவையே ஒழித்து விட்டால்?

‘நானும் இல்லை; ஆசையும் இல்லை….’ சிந்தாமணி என் துயர் மந்தை மனத்திலிருந்து வேய்ங்குழல் வாசிக்கிறாள். இரைக்கு அலைந்த என் எண்ண ஆடுகள் அந்த நாத வெள்ளத்தில் மயங்குகின்றன. மரணக் கிண்ணத்தில் நிரப் பப்பட்டிருக்கும் தேன் ரஸம் என் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது.

சிந்தாமணியைப் போல் மரணமும் இன்பம் ஊட்டக் கூடியதா?

இப்பொழுது புயல் ஓய்ந்த கடலைப் போல் என் மனம் அமைதி பெற்றது. அங்கே வேதனை இல்லை ; வேக்காடும் இல்லை. பாசம் இல்லை; பந்தமும் இல்லை. மரணத்தின் வல்லமை பெரிது; ஆளுகை பெரிது.

‘மயானத்தை அடுத்து மரணக் கிணறு ஒன்று இருக் கிறது. வாழ்க்கையில் சோர்ந்து போனவர்களை அனுதாபத் துடன் தன் மடியில் சாய்த்துக்கொள்ளும் தாயைப் போன்றது அது. அதன் இரக்கம் தோய்ந்த மடியில் ‘மரணம்’ என்கிற இன்பத்தை நுகரலாம்.’

எழுந்தேன். மனம் வடிந்தவுடன் கைகால்கள் எல் லாமே இலேசாகி விட்டன. ஐந்தே நிமிஷ நடைதான் வேண்டும், அந்தக் கிணற்றுக்குப் போக. எனக்கு இறை வன் கட்டளை போட்ட காலத்தை இன்னும் ஐந்தே நிமிஷங் களில் நான் ஏமாற்றி விடுவேன்!

சிந்தாமணிக்குத் தானா ஏமாற்றத் தெரியும்? எனக்கும் தெரியும்! வெடிக்காத மெல்லிய சிரிப்பில் என் உதடுகள் இலேசாக நீங்கிக்கொண்டன.

நடந்தேன். ஹாலின் மூலையிலே ஏன் அந்தப் பயங்கரக் கூச்சல்கள்!

நின்றேன். திரும்பிப் பார்த்தேன்.

எங்கள் குடும்பத்தோடு கொள்ளைப் பிரியத்துடன் தொடர்பு கொண்டிருந்த சிட்டுக்குருவிகளல்லவா அவை?

அந்த நேரத்திலும் அவற்றின் கதையைப் பற்றி ஒரு முறை நினைத்துப் பார்க்கத் தோன்றியது எனக்கு.

சீதை என்று நாங்கள் செல்லமாக அழைத்த அந்தப் பெண் சிட்டுக்குருவி எங்கள் வீட்டுப் பெண். அப்பொழுது சீதை, அம்மாவை இழந்த அனாதைக் குழந்தை; சௌந்தரம் அதன் வளர்ப்புத் தாயானாள். கூடு கட்டிக் கொடுத்தாள். ஊசி வாய்க்கேற்ற மென்மையான ஆகாரத்தை ஊட்டினாள்.

ஆறே மாதங்களில் சீதை பருவத்துக்கு வந்துவிட்டாள். அவளுக்கு இப்பொழுது சௌந்தரம் சோறு ஊட்ட வேண்டியதில்லை. சீதை எங்கோ பறந்து போவாள், திரும்புவாள். பருவக் குறும்புகள் செய்வாள். சௌந்தரத்துக்குத் தன் வளர்ப்புப் பெண்ணின் வளர்ச்சிகளில் ஏகப்பட்ட மகிழ்ச்சி.

திடீரென்று ஒரு நாள் சீதையுடன் ஒரு புதிய அழகன் வந்து சேர்ந்தான். இருவரும் கூடிக் கொம்மாளமிட்டார்கள். இணைபிரியாமல் திரிந்தார்கள்; பறந்தார்கள்; உண்டார்கள்; உறங்கினார்கள். சீதையின் காதலன் தான் அவன் என்பதை எனக்குப் புரிய வைத்தவள் சௌந்தரமே! எங்கள் வீட்டு மாப்பிள்ளைக்கு ராமன் என்று பெயரிட்டாள் அவள்.

சில மாதங்களில் சீதை கருவுற்றாள். அப்பொழுது அவளை ராமன் வெளியே கூட்டிச்செல்வதில்லை. அவனும் ரொம்பத் தூரம் போவதில்லை. பக்கத்திலேயே இரை தேடி அலகில் இடுக்கிக் கொண்டு கூட்டுக்கு வருவான். மனைவிக்குக் கொடுப்பான். மீண்டும் பறப்பான். நாள் முழுவதும் அவனுக்கு இதே வேலைதான்!

ஒரு மாதத்துக்கு முன்பு நான் படுக்கை விட்டு எழுந்த போது, “உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கிறான்” என்ற செய்தியைச் சொன்னாள் சௌந்தரம்.

“சீதை பிரசவித்து விட்டாளா?”

“ஆமாம்! பயல் ரொம்ப அழகாக இருக்கிறான். வந்து பாருங்களேன்!”

கூட்டை நோக்கி ஓடினேன். ஒரு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு கூட்டினுள் எட்டிப் பார்த்தேன். சீதையின் இறகு விரிப்பில் என் பேரன் கண் வளர்ந்து கொண்டிருந்தான். என் பெண்ணின் அழகை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்திருக்கின்றான்!

அந்தப் பொடியனுக்கு ‘லவன்’ என்று நாமம் சூட்டி னோம். அன்று எங்கள் வீட்டில் தடபுடலான பாயஸ விருந்து.

இப்பொழுது கூக்குரலிடும்படியாக என்ன வந்து விட்டது அந்தத் தம்பதிகளுள்? எல்லாவற்றையும் கடந்து போகிறவனுக்கு அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் போக மனம் வரவில்லை.

அவற்றை நெருங்கினேன். லவன் ஏன் அப்படி அசை யாமல் கிடக்கிறான் : அவனைச் சுற்றிச் சுற்றி வந்து அலறு கிறாளே சீதை, ஏன்? இரண்டு ஏன்களுக்குப் பிறகு ஒரு பதில் கிடைத்தது.

லவன் இறந்துவிட்டான்! துக்கம் தாளாத சீதை அவ னைச் சுற்றிச் சுற்றிப் புலம்புகிறாள். ராமன் சீதை செய்த அதே காரியத்தைச் செய்யவில்லை. அவன் சீதையின் கழுத் தில் கோதிக் கொடுக்கிறான். சீதையினுடைய மகன் அவனுடைய மகனும் தானே? பிறகு ஏன் அவன் அலறிப் புலம்பவில்லை? ராமன் பாசத்தில் கரைந்துவிடும் ஒரு மெழுகு உருண்டை. தன்னுடைய எல்லாத் துக்கத்திலும் மேலான துக்கத்தை அடைந்திருக்கிற அவன், இப்பொழுது ஏன் கொஞ்சம் கூடக் கரையாமல் சீதையைச் சுற்றி வருகிறான்?

புரிகிறது! துக்கத்தில் கரைந்தே விட்ட சீதையைச் சமாதானப்படுத்துவதற்காக ராமன் கல்லாகிவிட்டான். தன் கண்ணீரை வெளியே விடாமல் உள்ளத்துக்குள்ளேயே பாய்ச்சிக்கொண்டு தன் துணைவியின் கண்ணீரைத் துடைத் துக்கொண்டிருக்கிறான்!

நான் என்ன செய்தேன்? என் கண்ணீரைப் பெரிதாக நினைத்தேன். எனக்கு நேர்ந்த துக்கத்தை நீளம் நீளமாய்த் திரித்துக்கொண்டேன். அந்தக் கஷ்டத்திலிருந்து விடுதலை பெற உயிரை விடவும் தயாராகி விட்ட சுயநலக்காரனாக இருந்தேன்.

சௌந்தரத்தை இதுவரையில் நான் நினைத்துப் பார்க் கவே இல்லையே! ‘அம்மி மிதித்து, அருந்ததியைக் காட்டி, உன்னைக் கைவிடமாட்டேன்’ என்று சத்தியம் செய்தேனே அப்பொழுது? இப்பொழுது சத்தியத்தையே கொல்லும் சண்டாளனாகி விட்டேன்! மூடத்தனமான தற்கொலையைச் செய்து கொள்ளத் தூண்டிய என் காய் மனமும், நான் என்னும் புதிரை அவிழ்த்த பொய் மயக்கத்தின் அகம்பாவச் செருக்கும் சேர்ந்து சிந்தாமணியின் பரிசுத்தமான ஆவிக் குக் களங்கம் சூட்டவல்லவா இருந்தன?

சீதை அலறிக்கொண்டிருந்தாள். ராமன் அவளை ஆறுதல் படுத்த அவளோடு ஒட்டிக்கிடந்தான். அன்பு என்னும் லாபத்தை அவளிடம் வர்ஷித்துக் கொண்டிருக்கிறான்.

நான் அடைந்த நஷ்டத்துக்குச் சிந்தாமணியை விழுங்கிக்கொண்ட தும் அல்லாமல் சௌந்தரத்தையும் அல்லவா விழுங்கவிருந்தேன்?

ஒரு சிட்டுக் குருவிக்கு இருக்கும் அறிவுகூட எனக்கு இல்லாமல் போய்விட்டதே? அதற்குத்தான் எத்தனை விவேகம் இருந்தது? ஒரு மகா புருஷனின் பெயரைச் சூட்டியதன் விசேஷமோ அது?

“மரணக் கிணறே போ!”

என் சௌந்தரம் எங்கே? தன் தாய்மையில் இடி விழுந்து துடிக்கும் என் துணைவி எங்கே? ஆறாகப் பெருகும் அவள் கண்கள் எங்கே? துடைக்க ஆளில்லாமல் நீர்த்திரை படர்ந்துவிட்ட அவள் முகம் எங்கே?

ஆயிரம் கேள்விகள் என் கால்களை ஊக்கின.

என் கண்ணீரையும், அறியாமையையும் அறிவின் நிறைவையும் ஒரேயோர் அலறலில் புரிந்துவிட்ட ஓர் அதிசயக் கனவின் பொருளில் முழக்கினேன் :

“சௌந்தரம்…!”

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *