சிங்களத்து சின்னக்குயிலே!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 4,557 
 
 

ஆண்தேனீ (ட்ரொன்) ஒன்று, சென்னையில் அந்த மிகப்பெரிய 50 மாடி கட்டிடத்தை ஒரு வட்டமிட்டு உயர உயரப் பறந்து….. பின் மொட்டைமாடியை அடைந்து….. அங்கிருந்த ஒரு என்ஜினீயர் அருகே தரையை தொட்டு நின்றது…

ஆண்தேனீ யில் பதிவாகியிருந்த படத்தை பார்த்த பால்ராஜ் (ஒரு ஜப்பானிய பன்னாட்டு கம்பெனியில், இந்தியாவின் மூத்த பொறியாளர் & டைரக்டர்) கூடியிருந்த தன் சகாக்களை பார்த்து புன்னகையுடன், “வெல் டன், கீப் இட் அப்!!…இன்னும் ஆறு மாசத்தில ப்ராஜெக்ட் முடிஞ்சுரும்னு நினைக்கிறேன்” என்றவாறு அனைவரிடமும் கைகுலுக்கினார்.

பால்ராஜ் லிப்ட் வழியாக கீழே இறங்குகையில் கைத்தொலைபேசி ஒலித்தது.

“சார், விநாயக் பேசறேன் …. மும்பைல குமார் சாருக்கு ஆக்சிடெண்ட் ஆகி ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்க….”

“வாட்??…ஓ மை காட்!……எப்படி?”

“ரோட்ல கார் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு….ஒரு லாரி மோதிருச்சாம்”

“சரி, எந்த ஆஸ்பிடல்?…நான் நேர்ல போய் பார்கிறேன்”

“அப்போலோ ஹாஸ்பிடல் சார்…..சார், ஃ ப்ளைட் புக் பண்ணிடட்டுமா?”

“எஸ்….. உடனே அடுத்த ஃ ப்ளைட் என்ன இருக்கோ பண்ணிடுங்க”

பேசிவாறே கீழே இருந்த குட்டி அலுவலகத்தில் நுழைந்து…. ப்ரொஜெக்டர் உபயோகித்து…. ஆண்தேனீ யில் பதிவானதை போட்டுப் பார்த்தார்…..அதில் இருந்த ஒரு காட்சி அவரை திகைக்க வைக்க…. அதை அப்படியே திரையில் தெரியும்படி நிற்க வைத்து என்ஜினீயர் குருவை கூவி அழைத்தார்.

குரு திரையில் தெரிந்ததை பார்த்து தலைகுனிய….”எமெர்ஜென்சி பெல் அடிங்க…..அஞ்சு நிமிஷத்துல எல்லா ஆளுங்களும் ஆபிஸ் முன்னே நிக்கணும்…” என்று பால்ராஜ் கத்தினார்……அவர் இது போல் கத்துவது வழக்கம் இல்லை தான்…

ஐந்து நிமிடத்தில் வேலை பார்க்கும் அனைவரும் வந்துவிட…”குரு, அதுல யார் தற்கொலை பண்ணிக்க போற மாதிரி 40 ஆவது மாடியில நின்னுகிட்டு இருக்கறது?” என்று கூட்டத்தை பார்த்து கேட்டார்…..

குரு விரலை நோக்கி காட்ட, அந்த வட நாட்டுக்காரன் முன்னே வந்தான்…..

அவனை இழுத்து சென்று…. உள்ளே திரையில் நின்ற காட்சியை பார்க்க வைத்தார் பால்ராஜ்…..பின்பு வெளியே இழுத்து வந்து, “நீயே சொல்லு எல்லார்க்கும்…… சாகணுமா? வாழணுமா?” என்று கத்திக் கேட்டார்.

எல்லோரையும் பாதுகாப்புடன் வேலை செய்யும்படியும் இல்லையேல் வேலையில் இருந்து நீக்கிவிடும்படி ஆகிவிடும் என்று எல்லோரையும் எச்சரித்துவிட்டு பேச்சை முடித்தார்.

அதன் பின் பால்ராஜ் மும்பை சென்று குமாரை பார்க்கிறார்…

குமார் மும்பை கிளை அலுவலகத்தின் மேனேஜர்…அவர் நலனில் அக்கறை காட்டி பரிவன்புடன் சிறிது நேரம் பேசினார் பால்ராஜ்..

“சார், நான் நாளைக்கு இலங்கை போக முடியாது….அங்கே நாம கட்டின காலேஜ்ல கேம்பஸ் இண்டெர்வியூல 5 பேரை செலக்ட் பண்ணனும்னு நீங்க சொன்னபடி ஏற்பாடு செஞ்சிருக்கோம்…….”

எப்பொழுது இலங்கை அல்லது கொழும்பு என்ற வார்த்தை கேட்டாலும் பால்ராஜ் மூட் அவுட் ஆகி விடுவார்……கண நேரத்தில் கொழும்புவில் கடைசி சில மாதங்களில் நடந்த சம்பவங்கள் எல்லாம் கண் முன் பிரதிபலிக்கும்…..சுதாரித்துக்கொண்டு “பரவாயில்லை, நான் போகிறேன்” என்றார்

அதன் பின், குமார் டிக்கெட் பெயர் மாற்றம் செய்து ….இதோ பால்ராஜ் விமானத்தில்……. வாழ்க்கையில்…..நான்காவது முறையாக கொழும்பு செல்ல அமர்ந்துள்ளார்…..குளிர்-கைத்துண்டு ஒன்றை விமான சேவகி கொடுக்க,, அதை முகத்தில் தடவி அதன் இதமான சுகத்தை உணர்ந்த போது….மீண்டும் அந்த பிளாஷ்-பாக் ஆரம்பித்தது….

***

இந்தியாவில் பால்ராஜ் பெற்றோருக்கு 9 பிள்ளைகள்…இவர் தான் மூத்த மகன் ….சிறு வயதில் மிகவும் கூச்ச சுபாவம்….வீட்டில் எந்த பெண்கள் வந்தாலும் ஓடிஒளிந்துகொள்ளும் அளவுக்கு அந்த கூச்ச சுபாவம் இருந்தது.

இப்படி இருக்க…பதின்ம வயது வந்ததும் அதன் தாக்கத்தால் பள்ளியில், மற்றும் வெளியே எங்கு எந்த பெண்ணை பார்த்தாலும் ஒரு ஈர்ப்பு ஏற்பட, அந்த பெண்களின் அழகை கண்டு ரசிக்க….அதில் ஏதாவது ஒரு பெண் திரும்பிப் பார்த்தால் போதும்….உடலில் ஒரு ஆனந்த மின்சாரம் பாயும்……அந்த பெண் தன்னை விரும்புகிறாள் என்று மனம் பேதலித்து போகும்…

இப்படியாக நான்கு பெண்களிடம் ஒரு தலை காதல் வயப்பட்டு ஏமாந்து….ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முற்பட்ட போது…. அப்பாவின் உருக்கமான அறிவுரைகளால்…பள்ளி வாழ்க்கை முடியும் போது….பதின்ம வயது முடிவில்…இனி எந்த பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்கக் கூடாது என்றும்….எட்டு உடன்பிறப்புகளின் நல்வாழ்வுக்காக பாடுபட வேண்டும் என்று முடிவு செய்து வாழலானார்.

அன்றிலிருந்து கல்லூரி வாழ்க்கை முடிந்து….. ஜப்பானிய பன்னாட்டு கம்பெனியில் பணியில் சேர்ந்து……., மூன்றாவது வருடத்தில் அவரின் திறமையை பார்த்து……. இலங்கைக்கு அனுப்பப்பட்ட போது வரை எந்த பெண்ணையும் ஏறிட்டு பார்க்கவில்லை….அந்த சுமதியை….சாட்சாட்ச்த் மகாலக்ஷ்மி போல் காட்சியளித்த அந்த தேவதை பெண்ணை பார்க்கும் வரை….

பால்ராஜின் ஜப்பானிய பன்னாட்டு கம்பெனி, சுமதி பணி செய்யும் இலங்கை கட்டிட நிறுவனத்தோடு கூட்டு முறையில் (ஜாய்ண்ட்-வென்சர்) ஒரு பெரிய ப்ராஜெக்ட் கட்டிக்கொண்டிருந்தது…..

பணியில் இருக்கும் சமயம், ஒரே அலுவலகத்தில் இருந்தபடியால், சுமதி அடிக்கடி பால்ராஜை வந்து பார்த்து சந்தேகம் கேட்க…., அவளின் காந்தப் பார்வை……அருகில் நின்ற போது ஏதோ ஒரு உஷ்ணம்…. பால்ராஜை பதின்ம வயதில் அனுபவித்த சுகங்கள் போல் தாக்கத்தை உண்டாக்கியது.

பிறகு சில தினங்களில் இருவரும் ஒரே அலுவலக கேபினுக்குள், அருகருகே அமர்ந்து பழக நேரிட்டது. பால்ராஜின் சாந்தமான தோற்றம்…….. சுமதியையும் ஈர்த்தது.

ஒரு நான்கு மாதங்கள் இருவரும் மிக நெருக்கமாக பழகினார்கள்… அலுவலகத்தில் மற்ற சகாக்களுடன் சேர்ந்து கண்டி, நுவரெலியா போன்ற உல்லாச சுற்றுலா இடங்களுக்கு சென்ற போதெல்லாம் தனிமையை ஏற்படுத்திக்கொண்டு தொட்டு துழாவி முத்தமிட்டு…..

பால்ராஜ் தன் பெற்றோர்களிடம் பேசி சுமதியை மணக்க சம்மதம் பெற்றப்பின்…

“சுமதி, உன் சம்மதம் தான் இப்போ வேணும்… என்னை கல்யாணம் செய்து கொள்வாயா?” என்று உருக்கமாக கேட்டார்.

சுமதியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை….”வீட்ல கேட்டு சொல்கிறேன்” என்றாள்.

பால்ராஜ் பலமுறை கேட்டும் சில வாரங்கள் கடந்து போனதுதான் மிச்சம்….

“என்னால் இன்னும் பொறுக்க முடியல சுமதி….அடிக்கடி வேலைல தப்பு வேற செய்ய ஆரம்பிச்சுட்டேன் ….பித்து பிடுச்சிடும் போல இருக்கு….நாளைக்கு பீச்சுக்கு வா…வந்து உன் முடிவை சொல்லிடு…. ஆம்……இல்லை ….எந்த முடிவானலும் பரவாயில்லை”

மறுநாள் பேசிக்கொண்டபடி பீச்சில் பால்ராஜ் சுமதிக்காக காத்திருந்தார் …….

“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி….” என்று பாடும் அளவுக்கு காத்திருந்தார்…..மூன்று மணி நேரம் போனபின், கோபம் கொண்டார் (அந்த காலகட்டத்தில் கைத்தொலைபேசி கிடையாது)

மறுநாள்…அதற்கும் மறுநாள்…இரண்டு நாட்கள் சுமதி ஆபிஸ் வரவில்லை!!

மூன்றாவது நாள் வந்தவளிடம் கேட்டபோது…..”நான் உன்னிடம் வெறும் நட்பாகத்தான் பழகினேன்……என்னை மன்னித்து மறந்துவிடு” என்று அழாத குறையாக சொல்லிவிட்டு ஓடிவிட்டாள் …ஒரு மணி நேரம் கழித்து தலை வலிக்கிறது என்று கூறி ஆபிஸ்விட்டு வெளியேறினாள்….

பால்ராஜ் மனதில் யேசுவிடம் மண்டியிட்டு அழ ஆரம்பித்தார்….மதிய சாப்பாட்டிற்குபின், வேலையில் தப்புத்தப்பாக செய்ய…..அவரும் தலை வலிக்கிறது என்று கூறி ஆபிஸ்விட்டு வெளியேறினார்….

வெளியே வந்தவரின் கண்களுக்கு நடந்து சென்ற பாதையெல்லாம் புத்தபிக்குகள்… பல மொட்டையடித்த யாசிகள் தெரியத் தெரிய…..பின் ஒரு சலூன் முன் நின்ற போது…… .உள்ளுக்குள் ஏதேதோ தோன்ற …….சலூனுக்குள் நுழைந்து மொட்டை அடித்துக் கொண்டார்!!

தலையில் இருந்து முடி கீழே விழ விழ….கண்கள் குளமாக….’இனி என் வாழ்வில் எந்த பொருளுக்கும்….. எதற்கும் ஆசைப்படப் போவதில்லை’ என்று சபதம் எடுத்துக் கொண்டார்.

மறுநாள் பால்ராஜ் மொட்டை அடித்துக்கொண்ட நிலையில் ஆபிசில் நுழைய…….. சுமதி முன்வந்து நிற்க…. அவளுக்கு அவர் மேல் பாசமும் காதலும் பொங்கி எழுந்தது…… அலுவலகத்தில் மாலை யாரும் இல்லாத நேரத்தில் அவரை ஒரு அறைக்குள் இழுத்துச்சென்று முத்த மழை பொழிந்து…….ஒரு 10 நிமிடத்தில்…. ஒரு யுக வாழ்க்கையை பால்ராஜுக்கு கொடுக்க…. அவரும் அழுதவாறே அந்த சுகங்களை அனுபவித்தார்.

“என்னை மன்னித்து மறந்துவிடு….. நீ வேற நாடு நான் வேற நாடு….நீ வேற மதம் நான் வேற மதம் ….என்னை நம்பி என் பெரிய குடும்பம் இருக்கு……ப்ளீஸ் என்னை மன்னிச்சு மறந்து போயிடு…”

பிறகு திடீரென்று மூன்றே நாளில் தன்னை சென்னைக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்ட போது “வாழ்க்கை ஒரு விடுகதைதான்” என்று பால்ராஜ் மனம் குழம்பியது.

சென்னைக்கு திரும்பி வந்தபின் தான்………, சில தினங்கள் கழித்து தெரிந்தது…சுமதியின் கம்பெனி முதலாளி அவளை மணக்க முடிவெடுத்திருந்ததால் தான் தன்னை தூக்கியிருக்கிறார்கள் என்று.

‘அப்படியானால்…. அப்படியானால்…நம் காதல் உண்மையானதுதான்… உண்மையானதுதான்…..பாவம் சுமதி என்ன செய்வாள்?….’ இது புரிந்தபின், சுமதியுடன் மானசீகமாக வாழ தோன்றியது அவருக்கு…

அந்த ஒரு நாள் கண்ட சுகம்….அதிலேயே லயிச்சு வாழ்ந்து விட்டுப் போய்விடலாம்….செத்துவிடலாம் என்று வாழலானார்…

அதன்பின் சுமதி பற்றி மேலும் ஏதும் தெரிந்துகொள்ள முற்படவில்லை…… முடியவும் இல்லை.

இரண்டு வருடங்கள் கழிந்த பின், இரு சகோதரிகளுக்கு திருமணம் ஆனபின், பெற்றோர்களின் உருக்கமான வேண்டுதலுக்கு மரியாதை கொடுக்க……, ஊரார் உற்றார் வீண்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க…. பெற்றோர் பார்த்த ஒருத்தியை மணந்து கொண்டார்….

புதுமணப்பெண் ஏற்கனவே தேகசுகம் நிறைய அறிந்திருந்தவளாக இருக்க…. முதலிரவில் என்னென்னவோ நடக்கும் என்கிற ஏக்கத்தில் வந்தவளுக்கு….. ஏமாற்றமே மிஞ்சியது……

பால்ராஜால் அவளிடம் உடலுறுவு கொள்ள முடியவில்லை!!…அவளாகவே ஏதேதோ அவர்மேல் பாய்ந்து செய்ய எத்தனித்த போது, அழுகை பீறிட்டு வர, கைகளால் மண்டையில் அடித்துக்கொண்டு குலுங்கக்குலுங்க அழுதார்…..மணப்பெண்ணிடம் தன் காதல் கதையை கூறிவிட்டார்….

இப்படி இருந்தும் புதியவள் அவர் மனதை மாற்றும் எண்ணத்தில் மீண்டும் மீண்டும் அவரை தேகசுகத்தால் ஈர்க்கப்பார்த்தாள்…..நாட்கள் ஓடின….எதுவம் வேலைக்கு ஆவாது என்று சில மாதங்கள் கழித்து உணர்ந்தவள், பிறகு அவர் மேல் தன் சீற்றத்தை பேச்சு வார்த்தைகளால் காட்ட ஆரம்பித்தாள்.

வீண் சண்டை சச்சரவு அதிகரிக்க… விவாக ரத்து வாங்க முடிவெடுத்து….இவளும் 2 வருடத்தில் போய்விட்டாள்!!!

***

விமானத்தில் கண்களைமூடி பிளாஷ்-பாக்ல் மூழ்கி இருந்தவர், கண்கள் ஈரமானதை உணர்ந்து……, யாரும் பாரா வண்ணம் துடைத்துகொண்டு சுதாரித்துக்கொண்டார்.

விமானம் கொழும்பு நகரில் தரையிறங்கியது.

அன்றைய மதிய வேளைக்குபின் கேம்பஸ் இண்டெர்வியூக்காக அந்த கல்லூரியை அடைந்தார்.

ஐந்தாவதாக நுழைந்த இந்துமதியைக்கண்டு உடல் பனிபோல் உருக….. எழுந்து நின்றார்…..இவள்…. அவள்…..அந்த சுமதி தானா?? என்று ஒரு கணம் தலை சுற்றியது!!

அவளை பார்க்க இத்தனை நாள் துடித்தது வீண்போகவில்லையோ?

இவளும் சாட்சாட்ச்த் மகாலக்ஷ்மி போலவே இருக்கிறாளே!!

புன்னகையுடன் மேசை அருகே வந்து நின்ற இந்துமதியை கண் இமைக்காமல் பார்த்தவர், தன் கண் ஈரமாவது கூட உணராமல் அவளையே பார்த்தார்…. ஓடி சென்று அவளை கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் போல் மனம் தடுமாறியது.

இந்துமதி கைகூப்பி வணக்கம் சொன்னபின்தான் சுதாரித்துக்கொண்டு சுயநிலைக்கு வந்தார்….புன்னகையுடன் அவரும் கைகூப்பி அமரச்சொன்னார்.

“என்ன சார் ஆச்சு?…. ஏன் ஒருமாதிரி கண்கலங்கினீங்க?”…இந்துமதி அவரின் நிலைமையை அறிய முற்பட்டாள்.

“ஒன்னுமில்லை…..ஒன்னுமில்லை…..உண்மையா…வெளிப்படையா…… சொல்லணுமுன்னா ……..உலகத்துல ஏழுபேர் ஒரேமாதிரி இருப்பாங்கன்னு சொல்வாங்களே…கேள்விப்பட்டிருக்கியா?…. எனக்கு என்னமோ….நீயும் அது மாதிரி ஒருத்தர் போல்…..ஒரு இருபது வருடம் முன்னாடி நான் இங்கே கொழும்புவில் சந்திச்ச ஒருத்தரை போலவே இருக்கிறாய்…..”

தலை அசைத்தவாறே கேட்ட இந்துமதி…..ஏதோ ஒரு காதல் என்பதை புரிந்துகொண்டு…ஆனால் அதுபற்றி இப்பொழுது பேசக்கூடாது என்பதை அறிந்தவளாக தன் ஃபைலை அவரிடம் நீட்டினாள்.

அதை வாங்கி ஓரம் வைத்தவர், “சொல்…….உன்னைப்பற்றி சொல்” என்று அவளை உற்று நோக்கி கேட்டார்.

தன் படிப்பு பற்றித்தான் கேட்கிறார் என்று நினைத்து…..மளமளவென்று ஏகப்பட்ட கையசைவுடன் சொல்லித் தள்ளினாள் இந்துமதி….அவளையே பார்த்த பால்ராஜ் மேலும் வசியமானார்….முகத்தில் தோன்றிய தன் புன்னகையை மேலும் விரிவடையச் செய்தது அவளின் பேச்சு.

“அவ்வளவு தான் சார்” என்று பேச்சை முடித்தாள் இந்துமதி.

“சரி…..இப்போ உன் சொந்த வாழ்க்கைப்பற்றி …உன் பெற்றோர்கள்பற்றி சொல்…..”

“அதல்லாம் அப்பளிகேஷன்ல இருக்கு சார்…”

பால்ராஜ் இப்பொழுது அவள் தந்த ஃபைலை பார்த்து… ஒரு ஒரு பக்கமாக பார்த்து…எங்கே அவள் அம்மாவின் பெயர் என்று தேடியது….அதை அறிய பொறுமையில்லாமல் “சரி……உன் அம்மாவின் பேர் என்ன?…உன் அப்பா பேர் என்ன?” என்று கேட்டார்

“அம்மா சுமைதாங்கி சார்….” சொல்லிவிட்டு வெடுக்கென்று சிரித்தவள் தன் வாயை உடனே பொத்திக்கொண்டாள்

“என்னது??”… ஃபைலிலிருந்து பார்வையை அவள் பக்கம் திருப்பினார் பால்ராஜ்.

நொடிக்குள் இந்துமதியின் கண்கள் கலங்கி…. சிறிதாக தேம்பி…. முகத்தை மூடிக்கொண்டாள்.

பின் சுதாரித்துக்கொண்டவள்….”சாரி சார்….சுமைதாங்கியில்லை…சுமதி….ஆனா சுமைதாங்கி சுமைதாங்கின்னு என் பாட்டி அடிக்கடி சொல்வாங்க……நானும் யார் கேட்டாலும் மொதல்ல இப்படித்தான் சொல்லிடுவேன்” என்று கூறினாள்.

“என் பாட்டி அடிக்கடி சொல்வாங்க…என் அம்மா வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம்…. 3 தம்பிகளும் 4 தங்கைகளும் நல்லா படிச்சு முன்னேறணும்னு ரெண்டுமூனு வேலை செய்வார்களாம்…..ஆனா சார்….என் அம்மா என் கண்முன்னாடியே துடிதுடிச்சு செத்ததை…..” அவள் தொண்டை அடைத்துக்கொண்டுவிட பேச்சு வரவில்லை……அழுகையை சிரமப்பட்டு அடக்க நினைத்து தோற்றாள் இந்துமதி….

இதைக்கேட்ட பால்ராஜ் உடல் நடுங்க ஆரம்பித்தது….உச்சி வேதனையால் மேசையை ஓங்கி அடித்து நொறுக்க வேண்டும் போல் வெறி பிடித்தது….இந்துமதிக்கு கண்கள் துடைத்துக்கொள்ள திசு காகிதம் நீட்டிவிட்டு “கொஞ்சம் இரு…..நான் திரும்பி வருகிறேன்………” என்று கூறிவிட்டு கழிவறை பக்கம் நோக்கி நடந்தார்.

கழிவறைக்குள் நுழைந்து ஒரு சில நிமிடம் அடக்கமாக, ஒலி எழுப்பாமல் அழுது முடித்தார்……..பின்பு தன் மேசைக்கு திரும்பினார்.

“சாரி….எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு…….. சாரி…… சாரி…….என்ன ஆச்சு உன் அம்மாவுக்கு?……. உன் அப்பா யார்?”

“சிறு வயதிலேயே அம்மாவை ஒரு கோரமான உள்நாட்டு போர் துப்பாக்கி சூட்டு நிகழ்வில் கண் முன்னே துடிதுடித்து இறந்ததை பார்த்து இருக்கிறேன்……அம்மா இருந்த கொஞ்சநஞ்ச காலத்திலும் சந்தோஷமாக வாழவில்லை….ஏதோ காரணத்தால் அப்பா அடிக்கடி சண்டையிட்டு சித்ரவதைப்பட்டதை பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். …..அதுக்கு காரணம் என் அப்பா தான்…….. நான் என் அப்பாவை வெறுக்கிறேன்……என் அப்பாவை ரொம்பவும் வெறுக்கிறேன்…..” என்றவள் கைகள் ஒன்றையொன்று முறுக்கி…… ஆத்திரத்தை வெளிப்படுத்தினாள்.

பால்ராஜ் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார்…….

“என் அப்பா….அம்மா வேலை செய்தப்போ அவங்க பாஸ்ஸாம்…… முதலாளி…. பெயர் சுகுமார்….பணத்திமிரு பிடிச்சவர்…அம்மா வேற யாரையோ லவ் பண்றது தெரிஞ்சும் கட்டாயப்படுத்தி அம்மாவை கல்யாணம் பண்ணிகிட்டாராம்..”

“ஆனா அவங்க ரெண்டுபேரும் ஒண்ணா வாழ்ந்து இருக்காங்க…நீ அவங்களோட பொண்ணு” பால்ராஜ் அவள் கோபத்தை அடக்க முயன்றார்.

“என் பாட்டி தான் சொன்னாங்க….. அம்மா கல்யாணம் பண்ணி ஒரு வாரம்…. 10 நாள் தான் சந்தோஷமா வாழ்ந்தாங்கனு…..”

பால்ராஜுக்கு புரிந்தது…..தான் எப்படி கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம் நடத்தாமல், விவாக ரத்து ஆகும் அளவுக்கு நடந்துகொண்டோமோ….., அதே போல் சுமதியும் நடந்துகொண்டிருந்திப்பாள் …அதான் அவள் திருமண வாழ்விலும் சண்டை சச்சரவுகள் எல்லாம்…

சுமதியின் கணவர்….சுகுமார் என்பதை இந்துமதி ஃபைல் படித்து ஊர்ஜிதம் செய்து கொண்டார்……அந்த சமயம் கொழும்புவில் சில மாதங்கள் சுகுமாரை பலமுறை வேலை நிமித்தம் கண்டு பழகி பேசியதுண்டு…..ஆனால் தன்னை வேலையிலிருந்து தூக்கும் அளவுக்கு நரி வேஷம் போட்டதை ஜீரணிக்க முடியவில்லை அப்போது……. இப்போது, சுமதியை அவர் கொடுமை படுத்தியது சுகுமாரின் பழி வெறி போல் தோன்றியது பால்ராஜுக்கு

“உன் அப்பா எங்கே?”

“அவர் துபாய்…. அபுதாபி ..எங்கவேனா இருப்பாராம் ….கரெக்ட்டா சொன்னது இல்லை … எப்பவாவது இங்கே வருவார்….ஆனா என் அம்மா பக்கம் ரிலேட்டிவ் யாரையும் பார்க்க மாட்டார்…….என்னையும் தான்….நான் அவரை பார்த்து பேசினது எப்போன்னு எனக்கே ஞாபகம் இல்ல”

சில நொடி மௌனம் இருவரின் எண்ண ஓட்டங்களை சீர்படுத்தியது…

“சரி……உன் வாழ்க்கை இனிதே மாற வாழ்த்துக்கள்…உன்னை நான் வேலையில் அமர்த்த முடிவு செய்துவிட்டேன்…யு ஆர் அப்பாய்ண்டெட்!!” என்று புன்முகத்துடன் கூறி எழுந்து கைகுலுக்கினார் பால்ராஜ்

பூரிப்புடன் எழுந்து கைகுலுக்கிய இந்துமதி “எங்க சார் என் போஸ்டிங்……எப்போ சேரணும்? ” என்று கேட்டாள்.

“சென்னையிலே …எனக்கு அசிஸ்டெண்டாக……நான் கொடுக்கும் வேலைகளை செய்து என்னிடமே சமர்ப்பிக்க வேண்டும்…….ஒரு வாரத்தில் சேரலாம்…..ஒகே தானே?” என்றார்.

இந்துமதி துள்ளலுடன் ஓப்புக்கொண்டாள்

***

ஏற்பாடு செய்தபடியே இந்துமதி ஒரு வாரத்தில் சென்னை வந்து பணியில் சேர்ந்தாள்.

பால்ராஜ் அவளுக்கு வேலை கொடுக்கவேண்டுமோ இல்லையோ…..ஆனால் அவள் தன் பக்கத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். அவ்வப்பொழுது அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்…அவள் திரும்பிப்பார்த்தால் புன்னகைப்பார்…சில சமயம் மூட் அவுட் ஆகி சோகத்தில் மூழ்கிவிடுவார்.

“சார்…நீங்க என்னை ஏன் அடிக்கடி அப்படி பார்க்கிறீங்க?….எனக்கு கஷ்டமா இருக்கு….” என்று ஒரு நாள் இந்துமதி….. கம்பெனியின் மாதாந்திர பார்ட்டியில் துணிந்து கேட்டாள்………பால்ராஜ் சற்று குடித்துவிட்டு போதையில் இருப்பார்……, இப்போது கேட்டால் உளறிவிடுவார்…… என்று நம்பினாள்.

ஆனால் அவரோ ஒன்றும் பேசவில்லை…கொஞ்சம் கண் கலங்கியது மட்டும் கவனித்தாள்.

சாப்பிட்டு முடித்து அனைவரும் கிளம்புகையில், சில வினாடிகள் அவள் பால்ராஜிடம் தனிமையில் நடக்க……திடீரென்று அவர் அவள் கையை பிடித்து “நான் உன்னை ஒரேயொருமுறை அணைக்க அனுமதிப்பாயா?…….. ஒரேயொருமுறை??…” என்று கேட்டு அழுதுவிட்டார்…..

கேட்டவர் அவளின் பதில்வருமுன்…… அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்…அவள் தலையை வருடிவிட்டு…” ஐ அம் சாரி…..ஐ அம் சாரி…என்னை மன்னிச்சுடு” என்று கூறிவிட்டு அவளை மறுபடியும் ஏறிட்டுப்பார்க்காமல் போய்விட்டார்.

இந்துமதி……..இதுநாள் வரை பாட்டி சொல்லை தட்டாதவளாக…..எந்த ஆண்மகனிடமும் நெருங்கிப்பழகாமல் இருந்தபடியால்…. இது காலம் வரை அப்படியே இருந்தபடியால்……ஒரு அப்பாவின் அணைப்பு எப்படி இருக்கும் என்பதையும் இது காலம் வரை அறிந்திராததால்……..பால்ராஜின் அரவணைப்பு விநோதமாகவும்….கொஞ்சம் பிடித்தும் போனது…” வாட் எ மேன்….. வாட் எ மேன்…….பாவம் மனுஷர்!!” என்றவளாக நடையை கட்டினாள்.

மறுநாள் பால்ராஜ் ஆபிஸ் வரவில்லை…..அதற்கு மறுநாளும் அவர் வரவில்லை…விசாரித்ததற்கு “அவருக்கு உடம்பு சரியில்லைl….. காலைல போன் செய்து மத்தியானம் வந்துவிடுவேன்கிறார்…….அப்புறம் மத்தியானம் போன் செய்து, நாளைக்கு வந்துவிடுவேன்கிறார்… அவர் பாவம்…..தனியாகவேற இருக்கிறார்…எப்படி சமாளிக்கிறாரோ?!” என்றாள் ஆபிஸ் மேனேஜர்.

அந்த மேனேஜரிடமே சொல்லி அவருக்கு போன் செய்யச்சொன்னாள் இந்துமதி.

பால்ராஜ் பேசினதும் ” எப்படி இருக்கீங்க சார்? …ஏன்……. என்ன ஆச்சு?……. அன்னிக்கு டின்னர்ல சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்கலையா?” என்று வினவினாள் இந்துமதி.

“ஒண்ணுமில்லை….ஏதேதோ பழைய ஞாபகம்…… உன்னை பார்த்ததிலிருந்து என்னை ஒருமாதிரி வாட்டுது….. நான் பார்த்துக்கொள்கிறேன்……சமாளிச்சுக்கிறேன்…….நீ ஒன்னும் கவலைப்படாதே” என்று கூறி போனை வைத்துவிட்டார்.

மறுநாள் வேலைக்கு வந்தவர் அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்…. “நான் உன்னை….. நம்ம பெங்களூரு கிளைக்கு மாத்தறேன்…ஒகே தானே?”

“சார்….சார்…பெங்களூரு!!???……..நிறைய சினிமால பார்த்து இருக்கேன்……. கேள்விப்பட்டும் இருக்கேன்….. நான் அந்த இடத்துக்கு போகணும்னு நிறைய கனவு கண்டிருக்கிறேன் சார்….நிஜமாத்தான் சொல்றீங்களா??”

“ஆமா…. நிஜமாத்தான் சொல்றேன்…உன் வருங்காலம் பற்றித்தான்…நல்லா யோசிச்சுதான் முடிவு செய்தேன்” என்றார் பால்ராஜ்

அவர் ஏன் அப்படி முடிவெடுத்தார் என்று இந்துமதியால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது ……..ஏதோ ஒருவகை பாச உணர்வால் அவர் தவிக்கிறார் என்று தோன்றியது……. அதே வேளை இவரின் நடத்தை தன்னை ஏதாவது செய்துவிடுமோ என்றும் அஞ்சினாள்…..”எப்போ சார் போகணும்?” என்று மட்டும் கேட்டாள்.

“நாளைக்கே போயிடு…….ஜஸ்ட் டேக் கேர்” என்று கூறியபோது அவர் குரல் கரகரத்ததை உணர்ந்தாள்…

கேபின் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்து, யாரும் கவனிக்காத வண்ணம்…… அவரை நெருங்கி அரவணைத்து…நெற்றியிலும் முத்தமிட்டாள் இந்துமதி…”இது என் முதலும் முடிவுமான…..பாச முத்தம்”…….

இதை சற்றும் எதிர்பார்க்காத பால்ராஜும் அவளை மறுபடியும் அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டார்….” இது என் கடைசி முத்தம்” தோள்குலுங்க அழுகையும் பீறிட்டது… ஆனால் யாரும் பார்த்துவிடப்போகிறார்கள் என்று கட்டுப்படுத்திக்கொண்டார்.

***

பெங்களூரு பயணிக்கையில் ஒருவகை சோகம் அவளை தாக்கியது…ஆனால் சரியாகிவிடும் என்று நம்பினாள்.

பெங்களூரு கிளையில் சேர்ந்ததும் பால்ராஜுக்கு போன் மூலம் தொடர்புகொண்டு பேசினாள்….அவர் தொண்டை கரகரத்தது…..அதிகம் பேசாமல் போனை வைத்தார்.

வாழ்க்கை இனிதாக…. புதுப்புது நண்பர்கள்…சுற்றிப்பார்க்க இடங்கள்…..என்று நாட்கள் பல ஓடின……வாரம் ஓரிரு முறை பால்ராஜுக்கு போன் செய்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி….அதற்கு காரணமான அவருக்கு நன்றிக்கடன் பட்டுவிட்டதாக கூறினாள்…பால்ராஜ் பேசும் போதெல்லாம் அவர் தொண்டை கரகரத்தது……..அதிகம் பேசாமல் போனை வைத்து விடுவார்.

வாரம் தவறாமல் இலங்கையில் உள்ள பாட்டிக்கு போன் செய்து பேசினாள் (தாத்தா இப்போதில்லை…சமீபத்தில் காலமாகிவிட்டார்). ஒரு முறை பாட்டியும் பால்ராஜின் தொலைபேசி எண் கேட்டுக்கொண்டு அவரிடம் பேசி நன்றியை தெரிவித்துக்கொண்டு ஒருமுறை இலங்கையில் உள்ள வீட்டிற்கு அழைப்பு விடுத்தாள்….

இந்த அழைப்பு பால்ராஜை குதூகலப்படுத்தியது…சுமதியின் உறவினர் யாரையும் பார்த்ததில்லை…..அவள் வாழ்ந்த வீட்டையும் பார்த்ததில்லை….

மறுவாரமே, இந்துமதியோடு இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.

பாட்டியின் வரவேற்பு தடபுடலாக இருந்தது கண்டு பால்ராஜ் மலைத்துவிட்டார்… வீட்டு ஹாலில் சுமதியின் புகைப்படம் சுவற்றில் மாட்டி இருந்தது பார்த்து…… ஈரக்கண்களுடன் மலைத்துப்போய் பார்த்தார்…. அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கும் போதும், உணவு பரிமாறும் போதும் பாட்டி தன்னை ஏனோ உற்று நோக்குவதை பால்ராஜ் உணர்ந்தார்…”ஏன் அம்மா அப்படி பார்க்கறீங்க?” என்று இரண்டாவது நாள் காலை உணவு பரிமாறும் போது கேட்டுவிட்டார்.

சாப்பிட்டு முடிந்ததும் பாட்டி அவரை ஒரு அறைக்குள் இட்டுச்சென்று ஒரு பழைய பெட்டிக்குள் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியே எடுத்து பால்ராஜிடம் நீட்டினார்…

“இது என் மூத்த பொண்ணு சுமதி” என்று குரூப் போட்டோவில் ஒரு ஓரத்தில் நின்றபடி தெரிந்தவளை சுட்டிக்காட்டினார் ….

அதை வாங்கி பார்த்த பால்ராஜின் கை லேசாக நடுங்கியது…கண்கள் குளமாவதை சிரமப்பட்டு அடக்கினார்…..

“இது யார் தெரியுதா?” என்ற பாட்டி அதில் நின்றபடி இருந்த ஒரு வாலிபரை சுட்டிக்காட்டி கேட்டார்…… பால்ராஜின் கை இப்போது கொஞ்சம் வெளிப்படையாகவே நடுங்கியது…….அதையும் கட்டுப்படுத்த தீவிரமாக முயன்றார்…அதில் இருப்பது வாலிப பால்ராஜ் தான்!!

அந்த போட்டோ ஒரு முறை கண்டி சென்றிருந்த சமயம் யாரோ எடுத்த போட்டோ….. ஆனால் அதை அவர் வாங்கிக்கொள்ள வேண்டுமென நினைக்கவில்லை அப்போது.

“ஓ!…..அப்படியா?…….இது தான் உங்க மூத்த பொண்ணு சுமைதாங்கியா?” என்று புன்முறுவல் ஒன்றை விடாப்பிடியாக வரவழைத்து பாட்டியை பார்த்து கேட்டார்….. பேச்சை திசை திருப்பினார்….

“சுமைதாங்கியா?….ஓ…இந்துமதி உங்ககிட்டயும் அப்படி சொல்லிட்டாளா?” என்று சிரித்து…….அப்படியே அழவும் செய்தார்…அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து தேம்பினார் பாட்டி…”பாவம்ப்பா அந்த பொண்ணு சுமதி….அந்த சின்ன வயசுல எவ்ளோ கஷ்டம் அவளுக்கு?…….”

பாட்டியின் கைகளை பற்றிய பால்ராஜ் “உங்க மற்ற புள்ளைங்க எல்லாம் எங்கே?” என்று பேச்சை மேலும் திசை திருப்ப முயற்சித்தார்…போட்டோவில் உள்ளது தான் தான் என்பதை கூறி குட்டையை கிளற வேண்டாமே என்று நினைத்தவராக.

“அவங்கள்ல நாலு பேர் இலங்கைலதான் இருக்காங்க……ஒரு பையன் இரண்டு பொண்ணு கொழும்புல…ஒரு பையன் நிகோம்போவுல……மீதி மூணு பேர்ல ஒரு பையன் கேனடாவுல…இன்னும் ரெண்டு பொண்ணுங்க…. மலேசியாவுல.”

இந்த உரையாடலின் போது இந்துமதி உள்ளே வந்து……..,

“பாட்டி…… இவர் கண்டி….. நுவரெலியா…… சுத்திப்பாக்கணுமாம்…கார் வந்திடுச்சு….நாங்க கிளம்பறோம்” என்றாள்.

முதலில் கொழும்புவில்….அன்று பீச்சில் மூன்று மணிநேரம் சுமதிக்காக காத்திருந்த இடத்தை தேடி……. அங்கு பத்து நிமிடங்கள் கண்கள் மூடி அமர்ந்த போது…..கண்ணீர் தாரைதாரையாக வழிவதை இந்துமதி கவனிக்காதவண்ணம் துடைத்துக்கொண்டார்……ஆனால் இந்துமதி கவனித்ததை அவர் அறியவில்லை.

அதன்பின் இருவரும் காரில் பயணித்து கண்டி மற்றும் நுவரெலியா மலைப்பகுதியை சுற்றிப்பார்த்தனர்……

பால்ராஜ் சுமதியுடன் சுற்றிய அதே இடங்களாகப்பார்த்து இந்துமதியை அழைத்து சென்றார்……ஓரிரு இடங்களில் நின்று பழையதை நினைத்த போது……, இந்துமதியின் கையை பற்றிக்கொண்டார்.

“என்ன ஆச்சு சார்?…ஏன் உங்க கை நடுங்குது?” என்று வினவினாள்.

அவளை எதிரே புல்தரையில் அமரச்சொல்லி….. அவரும் அமர்ந்து……”ஞாபகம் வருதே…..ஞாபகம் வருதே” என்ற பாடலை கிண்டலாக பாட ஆரம்பித்து…பின் தேம்பினார்.

ஏற்கனவே ஓரளவுக்கு அவரின் வாழ்க்கையை யூகித்து இருந்தவளுக்கு….சரியான விடை அவர் வாயால்இது நாள் வரை வராததால், இப்போது துணிந்து கேட்டாள்……

”அப்போ 20 வருஷம் முன்னாடி நீங்க சிங்களத்து சின்னக்குயில் ஒருத்தியை லவ் பண்ணினீங்களா?…அவங்க கொஞ்சம் என்னைப் போல இருந்தாங்களா?”

“யெஸ்….. மை டியர் …. யெஸ்!!….. ஆனா இந்த ஆண்டவனோட விளையாட்டு தான் புரியல!!….நான் ஏன் உன்னை பார்க்கணும்னு புரியல… என்ன ஒரு விசித்திரமான வாழ்க்கை இது!!….என்னே நம் கடவுளின் லீலைகள்!!”

பின் அப்படியே புல்தரையில் கைகால்களை விரித்து படுத்து…….” ஓ லார்ட்…ப்ளீஸ் ஆன்செர் மை பிரேயர்!!’ என்று சிவாஜிகணேசன் ஒரு பழைய சினிமாவில் பாடிய பாடல் வரியை பாடினார்….. சிரித்தபடி எழுந்தார்……..”வா …போகலாம் வா”

அன்றைய இரவு நுவரெலியா ஹோட்டல் ஒன்றில் தங்கி (தனித்தனி ரூம் தான்) மறுநாள் மேலும் சில இடங்களை சுற்றிப்பார்த்து கொழும்பு திரும்பி……பின் நடுஇரவுப்பொழுதில் சென்னை விமானத்தில் பயணித்தனர்.

“நீ சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடு….. இது என் பணிவன்பான வேண்டுகோள்” விமானம் சென்னை தரையை தொட்டபோது பால்ராஜ் இந்துமதியின் கையைப்பற்றி அன்புவேண்டுகோள் விடுத்தார்.

“உங்க நல்லாசியுடன் நடக்கட்டும் சார்….என் பாட்டியும் ஆசைப்படறாங்க”

” தட் இஸ் கிரேட்!…… நான் ஒன்னு சொல்றேன் கேளு…நடக்குமா இல்லையா எல்லாம் எனக்கு தெரியாது…. ஏன்னா,,,,, திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றனன்னு சொல்வாங்களே….” என்று இழுத்தார்

“என்ன சார்…… சொல்லுங்க”

“டெல்லில என் தம்பிப் பையன் ஒருத்தன் இருக்கான்… நீ அவனை சந்திச்சி …….பேசி…… பழகி……..பிடுச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க முடிவு செய்…….”

***

பெங்களூரில் மேலும் ஒரு மாதம் வேலை செய்து முடித்த சமயம்…. ஒரு நாள் பால்ராஜ் இந்துமதிக்கு போன் செய்தார்…இன்னொரு இன்ப அதிர்ச்சியை சொன்னார்….

“பலராம்…….அதுதான் என் தம்பிப் பையனோட பேர்….உன்னை சந்திக்க ஓத்துக்கிட்டான்…. அதோடு இன்னொரு குட் நியூஸ் …….உன் வேலை நிரந்தரம் ஆகிவிட்டது …..உன்னை டெல்லிக்கு மாற்றம் செய்கிறோம் …அங்கே தான் பலராம் வேறொரு கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருக்கிறான்”

இதைக்கேட்ட இந்துமதிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை….வேலை நிரந்தரமாகிவிட்டது……தெரிந்த இடத்தில், அனேகமாக….. நல்ல மாப்பிள்ளையும் கிடைக்கப் போகிறது!!??…” தேங்க்ஸ் எ லாட் சார்……ரொம்ப…. ரொம்ப…. நன்றி!!”

“நான் உனக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன் …..ஆனா நீ இரண்டு மாசம் கழிச்சு தான் போக முடியும்……அங்கே ஏற்கனவே அந்த சீட்ல வேலைபார்க்கிறவர் காலி செய்து அந்த சீட் உனக்கு ரெடி செய்ய வேண்டியிருக்கு…..உன்னை பலராம் வந்து பிக்கப் பண்ணுவான்….உனக்கு வேண்டிய எல்லா உதவியும் அவன் செய்வான்….. உனக்கு அவனை மிகவும் பிடிக்கும்னு நம்பறேன்”

“ஒகே சார்”

“ஆ….இன்னொரு விஷயம்…..நான் நம்ம ஜப்பான் ஹெட் ஆபிஸ்க்கு கொஞ்ச மாசம் போக வேண்டியிருக்கு. அங்கே புதுசா சேர்ந்த ஒரு சின்ன குரூப்புக்கு ட்ரைனிங் கொடுக்கணும்…அந்த சமயம் அடிக்கடி அங்கேயிருந்து வெளியூருக்கும் போக வேண்டியிருக்கும்……, அவங்களுக்கு பல ப்ரொஜெக்ட்ல ட்ரைனிங் கொடுக்க…..எனக்கு ஈமெயில் மூலமா காண்டாக்ட் பண்ணு……ஏதாவது அவசியம்மனா மட்டும்”

“சரிங்க சார்”

***

ஏற்பாடு செய்யப்பட்ட நாளில் இந்துமதி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டாள்… வெகுநாளாக நீண்ட ரயில் பயணம் போக ஆசை என்பதால்…… விமானத்தில் போகாமல்…….. ரயிலில் ஒன்றரை நாள் பயணம் மேற்கொண்டாள்.

பால்ராஜ் ஒரு மாதத்திற்கு முன் ஈமெயில் மூலமாக தொடர்பு கொண்டார். அவர் பலராமுக்கு பேஸ்புக்-இல் முதலில் தொடர்பு கொண்டு அறிமுகம் செய்து கொள்ளும்படி கூறியிருந்ததால், பலராமும் ஒரு வாரத்திற்கு முன் பேஸ்புக்-இல் தொடர்பு கொண்டான்… ஆள் பார்க்க சினிமா நடிகர் போல் படு கிளாமராக இருந்தான்…

’அவனை நேரில் சந்தித்தால் எப்படியிருக்கப் போகிறதோ?!!’ என்று கொஞ்சம் பதட்டமாக இருந்தது இந்துமதிக்கு……

எதிர்பார்த்தது போல் நேரில்….. டெல்லி ரயில் நிலையத்தில் சந்தித்த சமயம்……… இந்துமதிக்கு, இதயத்துடிப்பு நின்றுவிடும் போல் இருந்தது ….

“ஹை!!…” என்று கையசைத்தவாறே நெருங்கி வந்தவனின் பூனைக்கண்கள் தான் அவளை செமையாக தாக்கியது…..படு ட்ரிம்மாக ஹேர் ஸ்டைல்…….மீசையும் தாடியும் இல்லாமல் வழவழப்பான முகம்…..புன்னகைத்தபோது கன்னங்களில் குழி…….யம்மா!!

“ஹை!!” என்று கூறி, அவன் கைகுலுக்க நீட்டிய கையைப்பற்றி கைகுலுக்கிய போது…… உண்மையில் ஒரு ஷாக் உடல் முழுக்க பரவுவதை வாழ்க்கையில் முதன்முதலில் அனுபவித்தாள் இந்துமதி.

“பெரியப்பா (பால்ராஜ்) சொன்னப்போ நம்பலை!….”என்றான் அவன்.

“என்னது?” என்று கேட்டாள்

“யுவர் டிவைன் லுக்….மகாலக்ஷ்மி போல் இருப்பீங்கன்னு சொன்னார்….” என்றவன் கைகூப்பி அவளை கடவுளை வணங்குவது போல் வணங்கி தலை சாய்த்து நிமிர்ந்தான்…..அவளுக்கு மீண்டும் ஒரு ஷாக் உடல் முழுக்க பரவ ….கொஞ்சம் வெட்கம்……அதுகூட முதன்முதலாக……. கண்டதும் காதலான கதையாக ஆரம்பித்தது அவர்கள் சந்திப்பு.

மறுநாள் இந்துமதி வேலையில் சேர்ந்தாள்.

தினமும் பலராம் அவளை தன் காரில் காலையில் இட்டுச்சென்று……பின் அவன் தன் அலுவலகம் சென்று……..பின் மாலையில் அவளை கூட்டி வருவது வழக்கமானது.

இருவரும் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரே அபார்ட்மெண்டில் தங்கினார்கள்.

ஒரு நாள், இந்துமதியின் வேண்டுகோளுக்கிணங்க அவனுடைய ஆபிசுக்கு அவளை அழைத்துச்சென்று சகாக்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்….

இருவரும் பலமுறை வெளியில் சாப்பிடும்போது மனம்விட்டு பேசி மகிழ்ந்தார்கள். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்ட பின் ஒரு நாள் அவன் ” வில் யு மேரி மீ?!” என்று அவள் வெகு ஆர்வமாக எதிர்பார்த்த வார்த்தைகளை உதிர்த்தான்.

“யெஸ்!….” என்று அவள் கூறியதுதான் தாமதம்….அவளை வாரி அணைத்து முத்தமழை பொழிந்து தள்ளினான்….கொஞ்சம் கண்கலங்கியும் போனான்…..அவளும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி கண்கலங்கினாள்.

இந்துமதி முதலில் பாட்டிக்கு போன் செய்து நிதானமாக பேசி…. பால்ராஜ் எப்படி இவள் திருமண விஷயத்திலும் உதவியுள்ளார் என்பதை எடுத்துக்கூறி… பலராமுடன் ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பி……..

“பாட்டி உங்க சம்மதமும் ஆசிர்வாதமும் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள்.

பாட்டி ஏனோ தயங்குவது போல் முதலில் தோன்றினாலும், பிறகு ஒப்புக்கொண்டார்.

“எப்போ கொழும்பு வருவீங்க?….கல்யாணத்தை இங்கே வெச்சுக்கலாமே?” என்று புது மாப்பிள்ளையை கேட்டார் பாட்டி.

“கண்டிப்பா பாட்டி… வருவோம்… உங்க விருப்பப்படியே கல்யாணம் பண்ணி வையுங்கள்”

அதன்பின் திருமணத்திற்கான திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள் இருவரும்.

பாட்டி ஒரு நாள் இந்துமதிக்கு போன் செய்து “நீங்க முதலில் திருப்பதியில் கல்யாணம் பண்ணிக்குங்க” என்றார்.

“ரொம்ப நல்ல ஐடியா சொன்னீங்க பாட்டி……அங்கே ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் கூட இருக்கு……அப்படியே செய்யுறோம்” என்றான் பலராம்.

பால்ராஜுக்கு இந்துமதி ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு “நீங்க வரலைன்னா இந்த கல்யாணம் வேண்டாம் சார்….கண்டிப்பா வரணும்!” என்று தெரிவித்ததற்கு அவர் ஒப்புதல் தெரிவித்தார்.

பலராம் தன் பெற்றோர்களை அழைத்தால் பிரச்சினை ஏற்படும் என்று கூறி திருமணம் முடிந்த பின் தெரிவித்து ரிசப்ஷன் வைத்துக்கொள்ளலாம் என்றான்.

“ஏன்?…என்ன பிரச்சினை ஏற்படும்?: வினவினாள் இந்துமதி.

“அப்பா அம்மா ரெண்டு பேரும் ரொம்ப பிடிவாதக்காரங்க…அப்பா நான் கிருஸ்து பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்பார் ….அம்மா ஹிந்து பெண் தான் மருமகளாக வரணும்பாங்க….அதனால தான் சொல்றேன்,,,வேற வழி இல்லை” என்று விளக்கம் கொடுத்தான் பலராம்.

“அவங்களும் காதல் திருமணம் தானே பண்ணிகிட்டாங்க…….அதனாலே நாம கல்யாணம் பண்ணப்புறம் போய் நின்னா ஒன்னும் சொல்ல முடியாது”.

இந்துமதி புரிந்துகொண்டவளாக தலையசைத்தாள்.

பலராம் செய்து கொண்டிருந்த ஒரு ப்ராஜெக்ட் முடியவேண்டும் என்பதா லும்…… ரிசப்ஷன்னுக்கு முன் கொழும்பு சென்று அங்கு பாட்டி சொல்படி ஹிந்து முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு செய்தார்கள்…..ஆனால் அதற்கான தேதி அருகாமையில் கிடைக்காமல் இரண்டு மாதங்கள் கழித்து கிடைத்தது…….வேறு வழி இல்லை என்பதால் பரவாயில்லை என்றிருந்தார்கள் அனைவரும்.

பிறகு பாட்டி அறிவித்த நல்ல நாளில் திருப்பதியில் சில ஆஸ்திரேலிய சகாக்கள் மற்றும் இந்திய சகாக்க ளின் முன்னிலையில் திருமணம் இனிதே நடந்தது.

வருகிறேன் என்று சொன்ன பால்ராஜ் கடைசியில் வரஇயலாமைக்கு மன்னிப்பு கேட்டு கண்டிப்பாக ரிசப்ஷன்னுக்கு வருவதாக ஈமெயில் செய்து இருந்தார். அதைப்பார்த்த இந்துமதியால் அழத்தான் முடிந்தது.

திருமணம் முடிந்து டெல்லி திரும்பினார்கள்……முதலிரவு….

கட்டிலில் வெகுநேரம் அருகருகே படுத்துக்கொண்டு விரல்களால் முகத்தையும் கழுத்தையும் நெருடிக்கொண்டிருந்தார்கள் இருவரும்.

“உன்னை இப்படியே பார்த்துக்கிட்டே…உன் அணைப்பிலே செத்துடணும்னு தோணுது!…..” என்றவனை அணைத்துக்கொண்டு முத்தமழை பொழிந்தாள் இந்துமதி… அவனும் அவளை முத்தமிட்டு அணைத்துக்கொண்டான்.

இருவரும் அப்படியே சில நிமிடங்கள் இருக்க….கொஞ்ச நேரம் கழித்து தன் கழுத்தருகே முகம் புதைத்து இருந்தவன் மெல்ல விசும்புவது போல் அறிந்தவள்…”ஏன்… என்ன ஆச்சு?” என்று பதட்டமாக எழுந்து அவன் முகத்தை இரு கைகளால் தாங்கிக் கேட்டாள்.

அவன் குலுங்கிக்குலுங்கி அழ…..அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

பலராம் கைகளை முறித்து… முகத்தை இப்படியும் அப்படியுமாக வேகமாக ஆட்டினான்…பின் அவளை அணைத்துக்கொண்டு தலையணையில் சாய்த்து அவள் முகத்தருகே தன் முகத்தை புதைத்துக்கொண்டான்.

“என் பெரியப்பாவை தான் நினைச்சுக்கிட்டேன் திடீர்னு….அவர் தான் என்னை படிக்கவெச்சு…….நல்ல உத்தியோகத்தில சேர்த்து…..இப்போ உன்னையும் எனக்கு மனைவியா அமைச்சுக் கொடுத்திருக்கிறார்….ஆனா நம்ம கல்யாணத்துக்கு வரலை…”

“அட இதுக்குத்தானா?….நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன்….உங்கள மாதிரி நானும் பலமுறை இப்படி நினைச்சு அழுதிருக்கிறேன்” என்றவள் அவன் தலையை கோதிவிட்டாள்.

“இப்படியே கோதிவிட்டுக்கிட்டே இரு….” என்றவன் சில வினாடிகளில் தூங்கிப்போனான்……..அவளும் இரண்டு நாள் சோர்வினால் தூக்கம் கண்ணை இழுக்க…….தூங்கினாள்.

மறுநாளிலிருந்து இருவரும் வேலைக்கு செல்ல…….வேலைப்பளு மற்றும் டெல்லியில் சாலைபயணச்சோர்வு காரணமாகவோ என்னமோ….தினமும் இப்படி முத்தமிட்டு…….அணைத்துக்கொண்டு தான் தூங்கி…… இரண்டு வாரம் கழித்தனர்.

அதன் பின் பொது விடுமுறை இரண்டு நாட்கள் + சனி ஞாயிறு இரண்டு நாட்கள்….. 4 நாட்கள் விடுமுறை இருந்தபடியால் காஷ்மீருக்கு தேன்நிலா செல்ல முடிவு செய்து விமானத்தில் சென்றார்கள்.

***

காஷ்மீர்…….ஸ்ரீநகரில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். 4 நாட்களில் 3 நாட்கள் நிறைய சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். அதில் பாரா-கிளைடிங்……காற்றாடி போல் பறப்பது…….. மறக்க முடியாததாக இருந்தது……முதலில் இந்துமதி பயந்தாள்…. ஆனால் பலராம் தான் ஏற்கனேவே 4 முறை பறந்து தனியாக பறக்க சாண்றிதழ் வாங்கியிருந்தாக கூறி, அங்குள்ளவர்களிடம் பேசி மண்றாடி….. அவளை தன்னுடன் அமரச் செய்து……. இருவரும் தனியாக பறந்து பனிமலைகளின் கண் கொள்ளாக்காட்சியை கண்டு பூரித்துப் போயினர்.

இரவு நேரங்களில் தனிமையில்…குளிரில் இறுக்கி அணைத்துக்கொண்டு படுத்தனர்…..ஒரு சமயம் இந்துமதி மேலாடையை சற்று விலக்கி….. அவனை தன் மேனியருகே இழுக்க எத்தணித்த போது………

“வேண்டாம் இந்து……நாம இன்னும் கொஞ்ச நாள்…. இன்னும் ஒரு இரண்டு வருஷம் வரைக்கும் கண்ட்ரோல் பண்ணுவோம்……..இல்லைன்னா….. குழந்தை வந்துடிச்சின்னா இப்படி…… இவ்வளவு சுதந்திரமா இருக்க முடியாது…..”

“ஓ….நீங்களும் அப்படித்தானா?” என்று கேட்டாள் இந்துமதி

“எப்படித்தான்?…என்ன சொல்றே?”

“அதான்…..நிறையபேர் ரெண்டு மூனு வருஷம் வரைக்கும் குழந்தை வேணாம்னு சொல்லி….. இப்படி கண்ட்ரோல் பண்ணி வாழறது தான்…”

இருவரும் பிறகு அணைத்துக்கொண்டு…….முத்தமிட்டுக் கொண்டு படுத்தனர்.

***

நான்காவது நாள் காலை பதினொரு மணிக்கு விமானம் பிடித்து டெல்லி செல்ல…… டாக்ஸி ஒன்றில் ஹோட்டலிலிருந்து பயணித்த போது……. சற்றும் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது…….

ஸ்ரீநகர் கடந்து விமான நிலைய சாலையில் சென்றதும்……., ஒரு போலீஸ் டாக்ஸியை நிற்க வைத்து சோதனை செய்து கொண்டிருக்கும் போதே……. அவரை எங்கிருந்தோ வந்த ஒரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டான்…….போலீஸ் டாக்ஸி முன் சறிய……..டாக்ஸி முன் வந்து காட்சியளித்தான் அந்த தீவிரவாதி…….

டாக்ஸி ஓட்டுநர் என்ன நினத்தாரோ தெரியவில்லை…….வண்டியை முழு வேகத்தில் கிளப்பி போலீஸ் உடலையும், தீவிரவாதி உடலையும் மோதித்தள்ளி ஓட்டினார்……..ஆனால் அதற்குள் பின்னிருந்து இன்னொரு தீவிரவாதி டாக்ஸியை நோக்கிச்சுட…… ஓட்டுநர் மேல் குண்டு பாய்ந்து…….டாக்ஸி ஒரு மரத்தில் மோதி நின்றது….

பதட்டத்தில் நடுங்க ஆரம்பித்த இருவரும் டாக்ஸியைவிட்டு இறங்கி ஓடி அருகிலிருந்த சந்துக்குள் நுழையை….மேலும் பல துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது….கொஞ்சம் ஓடி திரும்பிப் பார்க்கையில் ஒரு போலீஸ் காட்சியளித்து…’ஓடு ஓடு’ என்பது போல் கையசைத்தார்…….

இந்துமதி பதட்டத்தில் அழவும் செய்ய……இவனும் அழுதவாறே அவள் கை ஒன்றைப் பற்றிக்கொண்டு சந்தின் வழியே ஓடினான்….. சந்து முடிந்து மெயின் ரோடு வந்ததும் இன்னொரு டாக்ஸி தெரிய அதில் ஏறி கெஞ்சிக்கூத்தாடி…… விமான நிலையத்தில் விட்டுவிடும்படி…… கைகூப்பி வேண்டிக்கொண்டு……. ஓட்டுநர் கையில் ஈராயிரம் ரூபாய் நோட் ஒன்றை எடுத்து திணித்தான்…….அந்த ஓட்டுனரும் இவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு….. வேகமாக ஒட்டி…… ஒரு வழியாக விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.

அந்த பதட்டமான நிலைமையிலும் பலராம் கைப்பையை தோளின் குறுக்கே மாட்டி இருந்ததால்…அதில் முக்கியமானவைகள் இருந்தது பெரிய திருப்தி……விறுவிறுவென்று ஓடி கேட் போலீசிடம் டிக்கெட் காண்பித்து உள்ளெ சென்றதும் இருவரும் கட்டி அணைத்து அழுது தீர்த்தனர்……

“ஒரு செகண்ட்…..எங்கே நீயும் உன் அம்மா மாதிரி இந்த துப்பாக்கி சூட்டில் மாட்டி என் கண் முன்னே சாகப்போறியோன்னு……..துடிச்சுப்போய்ட்டேன் தெரியுமா?!” என்றான்.

“எனக்கும் தான்….நீ செத்துடுவியோன்னு பயந்தேன்……செத்தா ரெண்டுபேரும் செத்துடனும்ன்னு கூட வேண்டிகிட்டேன்….” இந்துமதி மேலும் இறுக்கி அணைத்துக்கொண்டு தாங்கமாட்டாமல் அழுதாள்.

பலரும் அவர்களை வேடிக்கை பார்ப்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை……

பின் டிக்கெட் கவுண்டர்இல், போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு……..

ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சுடன் விமானத்தில் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர்……… துணிமணிப் பெட்டி ஒன்று தான் தவறவிட்டிருந்தனர்.

***

டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று அவர்கள் சிறிதும் நினைக்கவில்லை…..

விமானம் விட்டிறங்கி…. சோதனை முடிந்து….. வெளியே டாக்ஸி பிடிக்க காத்திருக்கையில்……

அவர்களை ஆச்சர்யமாகவும்….சந்தேகேத்தோடும் பார்ப்பதுபோல் இடுப்பில் கைவைத்தவாறு….., கோட் சூட் அணிந்த 50 வயதுமிக்க ஒருவர் அவர்கள் முன் வந்து நின்றார்.

பலராம் அவர் யாரென்று யூகிக்க முயன்ற போது….”அப்பா??!!” என்று மிரட்சியுடன் அவரையும் பலராமையும் பார்த்து சொன்னாள் இந்துமதி.

“ஓ பரவாயில்லியே!…ஞாபகம் வைத்திருக்கியே!!” என்றார் அவர்.

“நீங்கள் தான் எங்களை வேண்டாமென்று தூக்கியெறிந்துவிட்டு போனீர்கள்……. நாங்கள் ஒன்றும் மறக்கவில்லை…”

“அதுசரி…..யார் இவன்?”

“என் கணவர்…பலராம்…. வி ஆர் ஜஸ்ட் மேரீட்”

“ஓ அப்படியா?….நான் பால்ராஜுன்னு நினைச்சுட்டேன்” என்றபோது பலராம் அதிர்ச்சியுடன் இந்துமதியை பார்த்தான்.

“இவர்………..பால்ராஜ் சாரோட தம்பிப் பையன்….அதாவது பால்ராஜ் சார் இவருக்கு பெரியப்பா……அதனாலே ஒரே ஜீன்ஸ்…..கொஞ்சம் அப்படி அவரைப் போலவே தெரியறார்…” என்றாள் இந்துமதி.

கொஞ்சம் நெருங்கி பலராமை ஏறஇறங்க பார்த்து….முகத்தருகே வந்து….” அதே…. டிட்டோ…..முகபாவம்…..என்ன….. கொஞ்சம் ஹேர் ஸ்டைல் வேறமாதிரி இருக்கு….அதே குழிவிழும் கன்னங்கள்….ஆனா ஒரு மச்சம் இல்லை…. இங்கே இந்த குழிக்கு கீழே…….ஒரு மச்சம் இல்லை” என்று பலராமை வட்டமிட்டு பேசியவர் திடீரென்று ” யு….. ப்ளடி…… ஸ்கவ்ண்ட்ரல்…..என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியேடா….” என்றவாறு பலராம் கன்னத்தில் அறைந்துவிட்டார்.

இதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத பலராம், அவர் தன்னை அறைந்தபின் பொறுக்கமாட்டாமல் அவரை தள்ளினான்……

இதை பார்த்த போலீஸ் ஒருவர் ஓடி வர……. இருவரும் கொஞ்சம் பின்வாங்கினர்

“யாரும்மா இவர்?….உன் அப்பாவா?…எங்கே இருந்தார் இத்தனை நாளா?…இப்போ ஏன் இப்படி அநாகரீகமா நடந்துக்கறார்?” என்று இந்துமதியை ஏசினான் பலராம்.

“அவர் கிடக்கிறார் விட்டுத்தள்ளு ங்க…… வாங்க…….போகலாம்…” என்று இந்துமதி பலராம் கையை பிடித்து நகர்ந்தாள்.

“ஏய் இந்து…..கொஞ்சம் என்னை பார்…….உன் அம்மா வாழ்க்கை பாழான மாதிரி உன்னுதும் ஆகப் போகுது” என்று கத்தினார்….. சுகுமார் என்கிற அவள் அப்பா.

இந்துமதி நின்றாள்…”யார் யார் வாழ்க்கையை பாழாக்கினாங்க?……. ஏமாத்தினாங்க??…… பால்ராஜ் சார் இப்போ ஜப்பான்ல இருக்கார்……..இவர் அவரில்லை…….உங்க காண்டாக்ட்ஸ் கொடுங்க….. பால்ராஜ் சாரே உங்களை வந்து பார்த்து விளக்கம் கொடுக்கச்சொல்றேன்” என்றவாறு தந்தையை நெருங்கி கோபத்துடன் பார்த்தாள்.

சுகுமாரும் அவரின் விசிட்டிங் கார்ட் ஒன்றை நீட்டிவிட்டு நடையை கட்டினார்.

***

டாக்ஸி பிடித்து இருவரும் வீடு வந்து சேரும் வரை பேசவில்லை….இந்துமதி தேம்பிக்கொண்டே இருந்தாள்……..பலராம் அவள் தோள்களை தட்டிக் கொடுத்தவாறு இருந்தான்.

வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக இந்துமதி பால்ராஜ் சாருக்கு ஈமெயில் மூலமாக நடந்ததை கூறி தனுக்கும் தன் அப்பாவுக்கும் சரியான விளக்கம் அளிக்கும்படி தாழ்மையுடன் வேண்டினாள்…….

“பலராம், அன்னிக்கு கொழும்புவில், பால்ராஜ் சாரும் நானும் சென்னை திரும்பறப்போ……..பாட்டி என்னிடம் ஒரு பழைய போட்டோ காண்பிச்சாங்க…’ஏய் இந்து….நான் நேத்தே கேட்டேன் அவர்கிட்ட…..அவர் சொல்லல…இது அவர்தானான்னு கேளு’ன்னு இந்த போட்டோ காண்பிச்சாங்க…….” என்றவாறு ஒரு பெட்டிக்குள் இருந்து பாட்டி தந்த அந்த பழைய போட்டோவை பலராமிடம் நீட்டினாள்.

அதை வாங்கிப் பார்த்த பலராம் “எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு…..இது அவர்தான்” என்று இந்துமதியின் பெரிய சந்தேகத்தை இப்போது தீர்த்து வைத்தான்.

“….என் சந்தேகமெல்லாம் ஊர்ஜிதமாயிடுச்சு….. ஸோ….. என் அம்மாவை காதலித்தவர் உன் பெரியப்பா தான்……எனக்கு பலமுறை அப்படி தோணிச்சு…..என்னிக்காவது ஒரு நாள் அவரே சொல்லுவார்னு இந்த போட்டோவையும் அவர்கிட்ட திரும்பவும் காட்டி பேசலை…..இப்போ என் ஈமெயி லுக்கு பதில் வரட்டும் பார்க்கலாம்…” என்று மண்டையை பிடித்தவாறு சோபாவில் சாய்ந்தாள்.

“நானும் ஈமெயில் அனுப்பறேன்…..அப்போதான் நம்ம நிலைமை புரிஞ்சுகிட்டு ஓடி வருவார்…..யாருக்காவது ஏதாவது பிரச்சினைன்னா அதை முதல்ல அவர் தான் இனிஷியேடிவ் எடுத்து தீர்த்து வைப்பார்….. லெட் அஸ் வெயிட் அண்ட் சி” என்றபடி பால்ராஜ் பெரியப்பாவுக்கு ஈமெயில் அனுப்பிவிட்டு…. அவள் அருகே வந்து அமர்ந்தான் பலராம்.

ஜீன்ஸ் படத்தை ஞாபகப்படுத்திக்கொண்டு…. பேசியவாறே இரவு உணவு முடிந்தபின் படுக்கையில் சாய்ந்தனர்.

பலராமுக்கு முத்தமழை பொழிந்தவள், அவன் இரு கன்னத்தையும் திருப்பி திருப்பி பார்த்தாள்…..அவள் என்ன தேடுகிறாள் என்று யூகித்த பலராம் எழுந்து அமர்ந்து……

“நான் அவரில்லைன்னு நீயே சொல்லிட்டு….இப்போ என் கன்னத்துல அந்த மச்சம் இருக்கான்னு தானே பார்க்கிறே?” என்றவாறு அவளை ஊடுருவிப் பார்த்தான்.

” சாரி….வெரி சாரி….ஆனா இது என்ன சின்னக்காயம் போல இருக்கு?” அவன் பார்வையை தவிர்த்து இன்னொரு சந்தேகத்தை கேட்டாள்.

குதூகலமாக எழுந்து அமர்ந்த பலராம் “…வாழ வந்த இடத்தில்கூட மறக்கவில்லை முருகா!…அந்த வடிவேலன் துணையில்லாமல் பிறக்கவில்லை முருகா!!….

இது ‘வருவான் வடிவேலன்’ சினிமால ஒரு பாட்டு…..எனக்கு தான் ரெண்டு மதமாச்சே!….என்னவோ தெரியல இந்த படம் பார்த்தப்போ…முக்கியமா இந்த பாட்டு ஸீன் பார்த்தப்போ…. நானும் வாயில ஒரு….… ஒரு அடி நீள அலகு குத்திக்கிட்டு….. என் அப்பா அம்மா…பெரியப்பா எல்லாரும் சந்தோஷமா …..ஒத்துமையா இருக்க வேண்டிக்கணும்னு நினைச்சேன்….பண்ணிக்கிட்டேன்” என்றான்.

இதைக்கேட்ட இந்துமதியின் கண்களில் கண்ணீர் ததும்பியது…வீணாக தன் சந்தோஷ வாழ்க்கையை கெடுக்க வேண்டுமென்றே பேசிக்குழப்பிய தந்தை மேல் அளவில்லா வெறுப்பும் கோபமும் மூண்டது…..இனி அவர் சகவாசம் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டாள்.

***

மறுநாள் இருவரும் வேலைக்கு சென்று வந்தபின்……

“நாளைக்கு நான் ராஜஸ்தான் போக வேண்டியிருக்கு….அங்கே ஜெய்ப்பூர்ல ஒரு மீட்டிங்…..துபாய்ல இருந்து சில காண்ட்ராக்டர்ஸ் வந்து இருக்காங்க….ஒரு புது ப்ராஜெக்ட் விஷயமா பேசி முடிவெடுக்கணும்” என்றான் பலராம்.

“நானும் வரவா?” என்று கெஞ்சினாள் இந்துமதி.

“நானும் நினைச்சேன்….ஆனா இது ஜஸ்ட் ஒரு நாள் தான்….திரும்பவும் எக்ஸ்ட்ரா லீவு போட வேண்டாம்னு பார்க்கிறேன்”

“அப்போ சரி”

“விடிகாலைல போயிட்டு மிட்னயிட்டுக்குள்ள வந்துடுவேன்…”அவளை தன் நெஞ்சின் மேல் சாய்த்து தலையில் முத்தமிட்டவாறு……இருவரும் அப்படியே தூங்கினர்.

***

மறுநாள் பலராம் விடியற்காலை எழுந்து சென்றுவிட்டான்.

இந்துமதி டாக்ஸி பிடித்து தன் அலுவலகத்திற்கு சென்றாள்.

மதிய வேலைக்குப்பின் சுமார் மூன்று மணியளவில் அவனிடமிருந்து ஒரு போன் வந்தது…..அதில் அவன் பதட்டமாக பேசினான்…….

“இந்து…..இந்து…இங்கே ஒரு ஜைஜான்டிக் சேண்ட் ஸ்டார்ம்ல (மாபெரும் பாலைவன மணல் புயல்) மாட்டிக்கிட்டேன்….”…..இந்துமதிக்கு தெளிவாக புயல் சத்தம் படு கோரமாக கேட்டது.

“இந்து…இந்து…இந்து….எனக்கு பயமா இருக்கு இந்து…..” என்று கேட்டதும் அவள் எழுந்து நின்று “ஐயோ …” என்று கதறினாள்….ஆபிசில் அனைவரும் பதறியடித்துக்கொண்டு அவள் அருகே வந்து என்ன ஆச்சு என்று வினவினர்….

“மை ஹஸ்பண்ட் இஸ் காட் இன் எ பிக் சேண்ட் ஸ்டார்ம் …..” என்று புலம்பினாள்.

“இந்து….போனை வெச்சுடாதே…என் கண் ரெண்டுலேயும் மண்ணு …. என்னால பார்க்க முடியல ….குருடனான மாதிரி இருக்கு …சுத்தியும் ஒன்னும் தெரியல….ரொம்பவும் இருட்டா இருக்கு ….என் கண்ணும் எரியுது….என்னால ஒன்னும் பார்க்க முடியல…..இந்து…இந்து…இந்த புயல் என்னை தூக்கிட்டுப்போய்…….” அத்துடன் போன் துண்டித்தது….

இந்துமதி மயங்கி அப்படியே சாய்ந்தாள்…..

அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்…..

இந்துமதி பலராமுக்கு போன் டயல் செய்தாள்…

ரிங் ஆனது…ஆனால் அவன் எடுக்கவில்லை…..

இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் விடாமல் பித்து பிடித்தது போல் டயல் செய்தாள்…

ரிங் ஆனது…ஆனால் அவன் எடுக்கவில்லை….

கடைசியாக…..போன் ஆப் ஆகிவிட்டது போல்…….பேட்டரி தீர்ந்துவிட்டது போல்…. எந்த சத்தமும் கேட்கவில்லை……..

ஐயோ…ஐயோ… என்று தரையில் புரண்டு அழுதாள் இந்துமதி…..

***

அன்றைய இரவு ராஜஸ்தானில் ஆரம்பித்த அந்த கொடூரமான பாலைவனத்து மண்புயல்…டெல்லியையும் வந்து தாக்கியது …இரண்டு நாட்கள் வரை கொஞ்சம் மட்டுப்பட்டு நீடித்த பிறகு அது ஓய்ந்தது.

ஆனால் இந்துமதியின் அழுகை ஓயவில்லை…சோகமே உருவாக மாறிவிட்டாள்.

போலீஸ் வந்து பலராமின் விவரங்களை சேகரித்துக்கொண்டு போனவர்கள் தான்…ஒரு வாரமாகியும், அவன்… அல்லது அவன் உடல் எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை….

பிறகு ஒரு நாள் அவன் அணிந்திருந்த கோட் + சூட் + டை + 2 தொலைபேசி (ஒன்று கம்பெனி இன்னொன்று பர்சனல்) + பர்ஸ் கிடைத்தது என்று தகவல் வர இந்துமதியை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றனர் போலீசார்.

மேலும் இரண்டு வாரம் வரை தேடியும் பிரயோஜனம் இல்லாததால் ….போலீசும் இந்த கேஸை க்ளோஸ் செய்ய முடிவு செய்து விட்டனர்.

இந்துமதியின் பாட்டி இந்தியா வர பாஸ்போர்ட் இல்லாததால் தினமும் கொஞ்ச நேரம் போனில் பேசி ஆறுதல் கூறினார்….அவளை இலங்கைக்கு திரும்பி வந்துவிடும்படி கெஞ்சினார்….ஆனால் இந்துமதி பலராமின் உடலை பார்க்காமல் வர மறுத்துவிட்டாள் …

பிறகு ஒரு நாள் பால்ராஜிடமிருந்து ஈமெயில் ஏதாவது வந்துள்ளதா என்று செக் செய்தாள்……. இத்தனை நாள் துக்கத்தால் மறந்து போயிருந்தாள்……

பால்ராஜ், பலராம் காணாமல் போன மறு நாளே இரண்டு ஈமெயில் தனக்கும் பலராம் ஈமெயில்க்கும் அனுப்பி இருந்தார்…ஆங்கிலத்தில் அவை…….

(முதல் ஈமெயில் சுகுமாருக்கு அனுப்பியதை இவர்கள் இருவருக்கும் நகலாக அனுப்பப்பட்டது)

“மிஸ்டர் சுகுமார்….வணக்கம். 22 வருடங்கள் கழித்து நாம் இப்படி தொடர்பு கொள்வோம் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை…..22 வருடங்கள் கழித்து நான் இந்துமதியை சந்திப்பேன் என்றும் எதிர்பார்க்கவில்லை….அவளுக்கு இது நாள் வரை நான்தான் அவள் அம்மாவின் காதலன் என்பது தெரியாது…..எனக்கும் சுமதி இறந்துவிட்டது பற்றிய தகவல் இந்துமதியை பார்த்த பின் தான் தெரியும்…..பாவம் அவள்….ஏன் பழையதை கிளறி குழப்பம் ஏற்படுத்தவேண்டும் என்று தான் நான் இந்துமதியிடம் எல்லாவற்றையும் சொல்லவில்லை…..ஆனால் நீங்களோ…இன்னும் பழிவாங்கும் வெறியில் திரிகிறீர்கள்…..காட்டுமிராண்டித் தனமாக ஒரு பொது இடத்தில் என் தம்பிப் பையன் பலராமை அடித்துள்ளீர்கள். தயவு கூர்ந்து அவர்களையாவது நிம்மதியாக வாழவிடுங்கள் என்பது தான் என் அன்பான வேண்டுகோள்.”

(இரண்டாவது ஈமெயில் இந்துமதிக்கும் பலராமுக்கும் அனுப்பப்பட்டது)

இந்துமதி & பலராம், என் ஆசிர்வாதங்கள். சுகுமார் உங்களிடம் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்டது மிகவும் வருத்தமளிக்கிறது….என்னையும் மன்னித்துவிடுங்கள், என் பழைய கதையை சொல்லாமல் போனதற்கு…..எல்லாம் காலத்தின் விதிப்படி நடக்கும் என்பது இது ஓர் நல்ல எடுத்துக்காட்டாக மட்டும் பாருங்கள்….உங்கள் வாழ்கைகையை இனிதே தொடர என் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு எப்போதும் உண்டு…

பின் குறிப்பு: நான் இனி என் பிறப்பின் அர்த்தம் புரிந்துகொள்ள அந்த தேவனிடம் மண்றாடி கேட்டு தேடப் போகிறேன்….வேலையையும் ராஜினாமா செய்துவிட்டேன் என்பதை அறியவும்…..காலம் கனிந்து வழி வகுத்தால் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்…அதுவரை ஈமெயில் மூலமாக ஏதாவது முக்கிய தகவல் இருந்தால் மட்டும் தொடர்பு கொள்ளவும்.”

இரண்டு ஈமெயில்களையும் படித்த இந்துமதி பதறிப்போனாள்…’ஐயோ அன்றே இவைகளை படித்திருந்தால் பால்ராஜ் சாருக்கு பலராம் காணாமல் போன விஷயத்தை சொல்லியிருக்கலாமே’ என்று……..இப்போது அவருக்கு பதில் ஈமெயில் அனுப்பி தன்னை சீக்கிரம் வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

பால்ராஜ் சார்…….அவர் எங்கே என்ன செய்கிறாரோ?….. புரியவில்லை இந்துமதிக்கு….

இப்போது போலீஸே கை விரித்துவிட்டு விட்டதால் வேறு வழி இன்றி இலங்கைக்கு திரும்பினாள்.

(இந்த மூன்று வார காலமாக இந்துமதி தனிமையில்….உற்றார் உறவினர் நண்பர்கள் யாரும் இல்லாமல் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது)

***

இலங்கைக்கு திரும்பியவள்…. இனி என்ன செய்வது என்று நாள்தோறும் குழம்பியவண்ணம் இருந்தாள்……

பாட்டியிடம் பால்ராஜ் பற்றி கேட்டாள் ஒரு நாள்…..

“நான் அவரை பார்ததில்லைம்மா …அந்த போட்டோ ஒன்னு தான் உன் அம்மா என் கைல கடைசியா கொடுத்து, நடந்ததை சொல்லி, ஏன் சுகுமார் அவளை கொடுமை படுத்தினான்னு தெளிவுபடுத்தி….” பாட்டி தேம்ப ஆரம்பித்து பின் குலுங்கி குலுங்கி அழுதார் …..

“ஏன் இப்படி உங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலும்…. இந்த சின்ன வயசுல இப்படி நடக்கணும்னு புரியல…..என்ன சாமியை வேண்டிக்கிட்டு என்ன பயன்?!……. ஈஸ்வரா…..” என்று புலம்பி எழுந்து போனார்

டெல்லியில் அப்பா சுகுமாரை பார்த்ததை….அன்று அவர் நடந்து கொண்டவிதத்தை பாட்டியிடம் இப்போது மீண்டும் தெரிவிக்க நேர்ந்தது……

“யாருக்கு என்ன கெட்ட நேரமோ?…யார் என்ன பாவம் செஞ்சாங்களோ??… ஒன்னும் புரியலடி…சரி ஒரு வார்த்தை அப்பாவுக்கு உனக்கு நடந்ததை சொல்லிவிடு….என்னதான் இருந்தாலும் உன் அப்பா தானே?…….நல்லது சொல்லலைன்னாலும்…இந்த மாதிரி விஷயத்தை சொல்லித்தான் ஆகணும்” பாட்டி வற்புறுத்த, அன்று அவர் தந்த விசிட்டிங் கார்ட் எடுத்து அவருக்கு ஈமெயில் மூலம் தெரிவித்தாள்……. போன் செய்து பேச மனமில்லாமல்.

***

ஒரு மாதம் கழித்து……

இந்துமதியின் பாட்டி சற்றும் எதிர்பார்க்கவில்லை…….பால்ராஜ் திடுதிப்பென்று வந்து கதவு தட்டியதும் இன்ப அதிர்ச்சியில் தள்ளாடினர்…..

பால்ராஜ் அவர் காலில் விழுந்து “என்னை மன்னிச்சிடுங்கம்மா” என்று நா தழுதழுக்க பேசினார்

“வாங்க…. உள்ளே வாங்க….. நீங்க ஒரு தப்பும் செய்யலியே….”…என்றவாறு பால்ராஜ் கைகளை பற்றிக்கொண்டு கேட்டார் பாட்டி.

பாட்டி காட்டிய சோபாவில் அமர்ந்தார்

“அப்புறம்……, இந்துமதி இன்னைக்கு காலைல தான் நிகோம்போவுக்கு போயிருக்கா…… அந்த சுகுமார் இங்க வந்திருக்கிறார்……இவ அனுப்பிய ஈமெயில் பார்த்து ஏதோ ஆறுதல் சொல்ல நினைச்சாரோ என்னமோ…….நானும் கடைசியா ஒரு முறை போயிட்டு பார்த்து பேசிட்டு சீக்கிரம் திரும்பிடுன்னு சொல்லி அனுப்பிச்சேன்…. என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டார்.

“என்ன ஈமெயில்?” என்று கேட்ட பால்ராஜுக்கு பாட்டி விளக்கம் கூறி தெளிவு படுத்தினார்… “நீங்க தான் இனி அவளை உங்க பொண்ணா நினைச்சு பார்த்துக்கணும்…பாவம் அந்த பலராம்…பாவம் இந்த இந்து….. ரொம்ப மனசு உடைஞ்சுபோயிருக்கா…”

“காபி ஒகே…..இந்துமதிகிட்ட போன் இருக்கா?”

“ஓ இருக்கே….இந்தாங்க நம்பர்….நான் போய் காபி போட்டு எடுத்து வருகிறேன்”

பாட்டி தந்த நம்பருக்கு போன் செய்தார் பால்ராஜ்…….உடனே எடுத்த இந்துமதியிடம்….. “இந்துமா….. இந்துமா….” என்று குரல் கரகரக்க ஆரம்பித்தார்…….

“சார்…நீங்களா….எங்கேருந்து பேசறீங்க?” அவள் குரலிலும் ஒரு நடுக்கம் இருப்பதை உணர்ந்தார் பால்ராஜ்.

“இங்க தாம்மா…பாட்டி வீட்டில்….அந்த சுகுமாரை நீ ஏன் போய் பார்த்தே?…என்ன சொன்…..” பால்ராஜ் முடிக்கும் முன்னே இந்துமதி அழுவது கேட்டது…..

“அப்பா….அப்பா….”என்று கதற ஆரம்பித்தாள்

பால்ராஜ் ஸ்தம்பித்து பனிபோல் உருக ஆரம்பித்தார்….

கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது…..

காபியுடன் திரும்பிய பாட்டி அவரை பார்த்து குழம்பினார்…..”என்ன ஆச்சு மாப்பிள்ளை?”

மாப்பிள்ளையா?!….அப்பாவா?!….

***

(இந்துமதி சுகுமாரை பார்த்த போது நடந்தது…..)

“வா இந்து…..உட்கார்… ஐ அம் வெரி சாரி…… ஐ அம் வெரி சாரி…..பலராமுக்கு இப்படி ஆயிடுச்சே பாவம்!…..பால்ராஜ் ஈமெயிலும் பார்த்தேன் …. ஐ அம் வெரி சாரி…. ”

சுகுமார் தன்னிடம் இப்படி பவ்யமாக பேசிப் பார்க்காத இந்துமதி, சோபாவில் அமர்ந்தாள்.

“ஏதாவது முதல்ல குடிக்கிறியா?” என்றவர் தன் வேலைக்காரனிடம் ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வரச்சொன்னார்.

அவர் பார்வையை தவிர்த்தவள், ஆரஞ்சு ஜூஸ் குடித்து முடித்தபின் “ஒகே அப்பா…நான் கிளம்பறேன்” என்று எழுந்தாள்.

அவள் அருகே வந்து அவள் தோளில் கை வைத்தவாறே அவளை அமரச்சொன்ன சுகுமார்…”இரு இந்துமதி…..நான் இன்னும் நிறைய பேச வேண்டியிருக்கு…நான் உன்னை கூப்பிட்டதுக்கு உன் கிட்ட ஒரு பெரிய உண்மையை சொல்லத்தான் …எத்தனை நாளுக்குத்தான் நான் எனக்குள்ளே வெச்சிக்கிட்டு இருக்கிறது?…”

இந்துமதி மிரட்சியுடன் அப்பாவை பார்த்தாள்.

“என்ன சொல்லுங்க….”

சுகுமார் இப்போது குறுக்கும் நெடுக்கும் நடக்க… கைகளை முறித்துக்கொண்டு….

“யு நோ…..யு நோ….ஐ அம் நாட் யுவர் டாட்……நான் உன் அப்பாயில்லை” என்றவர் சோபாவில் சாய்ந்து கண்களை மூடினார்…..

இந்துமதி இடிந்து போய்அவரை ஏறிட்டாள்

கண்களை மூடியவர் …… பிளாஷ்-பாக்ஆக….. நடந்ததை கூறினார்……

சுகுமார் இலங்கையில் ஒரு பெரிய கட்டிடத்துறை கம்பெனியின் முதலாளி……சுமதி பணியில் சேர்ந்த நாள் முதற்கொண்டு அவள் மேல் இருந்த ஈர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, அவளை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த தருணத்தில் தான் பால்ராஜ் வந்தார்….சுமதியும் பால்ராஜும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்ததும் இந்துமதியின் குடும்பத்தாரை சந்தித்து சுமதியை மணக்க விரும்புவதாகவும்…. அவள் வீணாக வேற்று நாட்டு வேற்று மதத்தவனை காதலித்து வாழ்க்கையை சீரழிக்கொள்ளப் போகிறாள் என்பதை எடுத்துச்சொல்லி….. பாட்டியின் சம்மதம் பெற்றதும்….. மறு வேலையாக பால்ராஜ் கம்பெனி முதலாளிக்கு போன் செய்து அவனை உடனே சென்னைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் இல்லையென்றால் செய்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் அடிபட்டு பிரச்சினை பல ஏற்படும் என்று மிரட்டலாக பேசி……ஒரு வழியாக பால்ராஜை திருப்பி அனுப்பி வைத்தார்….

பிறகு ஒரே வாரத்தில் பாட்டி சொன்ன நல்ல முகூர்த்த நாளில் அவசர அவசரமாக திருமணம் நடந்தது.

ஆனால் முதலிரவில் சுமதி, வேண்டாவெறுப்புடன் தான் புதுக்கணவனிடம் படுத்தாள்……. தான் பால்ராஜிடம் படுத்து உடலுறவு கொண்டதை போட்டுடைத்தாள்.

ஸ்தம்பித்துப்போன சுகுமார் தற்கொலை செய்துகொள்ளலாமா…இல்லை இவளை கழுத்து நெறித்து கொன்றுவிடலாமா என்று இரவு முழுக்க தூங்காமல் பித்து பிடித்தவர் போல் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறே இரவை கழித்தார்….சுமதி நிம்மதியாக தூங்கிவிட்டதை பார்த்துப் பார்த்து பொறாமை கொண்டார்…..வந்த கோபத்தில்… விடியற்காலையில் அவளை காலால் எட்டி உதைத்து எழுப்பினார் …அவள் கதறி அழுது வெளியே ஓடி பாட்டியிடம் தஞ்சம் புகுந்தாள்…..

அவர்கள் அருகே வந்த சுகுமார் “இவ என்ன காரியம் பண்ணியிருக்கான்னு தெரியுமா உங்களக்கு?” என்று அவளை முறைத்தவாறே பாட்டியிடம் கேட்க……..பாட்டி முழித்து சுமதியை பார்த்தார். சுமதி வாய் திறக்காமல் அழுது கொண்டே இருந்தாள்..

மறுபடியும் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறே….. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவர்,…. விஷயத்தை சொன்னால் எல்லார் மானமும் கப்பலேறிவிடும் என்பதால்…இவளை கொஞ்சம்கொஞ்சமாக…. சித்திரவதை செய்து…. அவளாக சாகும்படி செய்ய வேண்டியது தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு வெளியேறினார்……

பல கொடுமைகள் செய்தும் சுமதி எல்லாவற்றையும் தன் குடும்பத்திற்காக….. சகோதர சகோதரிகள் நலனுக்காக பொறுத்துக்கொண்டு….பின் இந்துமதியை ஈன்றெடுத்தாள்…

அதன் பின் ஆறு மாதங்கள் மேலும் கொடுமை படுத்திய பின் இந்துமதியை அவள் பாட்டி வீட்டிலேயே இருக்கும்படி கூறி அனுப்பிவிட்டார்….. சனியன்கள்…….சுமதி வந்து….பின் இந்துமதி வந்து….. தன் கம்பெனி இழுத்து மூடும் அளவிற்கு ஆகிவிட்டதை நினைத்து நினைத்து…….ஊரைவிட்டும் ஓடிப்போனார்

***

வீடு திரும்பிய இந்துமதி சுகுமாரை பார்த்து தான்அறிந்துகொண்ட விஷயங்களை கூறினாள்.

பால்ராஜும் பாட்டியும் அவள் சொன்னதை கேட்டு முடித்தனர்.

“இந்து….எனக்கு நீ சுகுமாருக்கு பிறந்தவளில்லைன்னு எனக்கு முன்னமேயே தெரியும்….சந்தர்ப்ப சூழ்நிலை வரும்போது சொல்லிக்கலாம்னு இருந்துதிட்டேன் “…. பாட்டி இப்போது பேசினார்…..

அப்போது சுமதி அந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிரியும் தருணத்தில் ஆஸ்பத்திரியில் கிடந்தாள்….இந்துமதி அழுதவாறே…. அம்மாவின் கையை பற்றிக்கொண்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்…..பாட்டி சிறிது நேரத்தில் பதறியடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார்…..

இந்துமதியை கொஞ்சநேரம் வெளியே அனுப்பும்படி சொன்ன சுமதி…. பின் பாட்டியிடம், அவள் பால்ராஜுக்கும் தனக்கும் பிறந்தவள் என்கிற உண்மையை போட்டுடைத்தாள்.

“இந்த உண்மையை நீங்க எப்போ அவள்கிட்ட சொல்லுவீங்களோ……. இல்ல சொல்லாம இருப்பீங்களோ….அது நீங்களே முடிவு செய்ங்கம்மா” என்றவள் இறுதி மூச்சு நின்றது.

பாட்டி சொன்னதை கேட்ட இந்துமதி ஓடி வந்து, பாட்டியை அணைத்துக் கொண்டு சிறிது நேரம் அழுதாள்.

***

“அப்பா நீங்க இந்த ரெண்டுமாசம் எங்கே இருந்தீங்க?…ஏன் முன்னமாதிரி இல்லாம சோகமா தெரியறீங்க?”…பால்ராஜின் கண்கள் குழிவிழுந்து தாடி ட்ரிம் செய்யப்படாமல்……கம்பெனி டைரக்டர் போல் முன்பு இருந்ததை,…. இப்போது பார்க்க முடியவில்லை.

“நீ பெங்களூரு போனதிலிருந்து மனசு சரியில்லம்மா….வேலைல நிறைய தப்பு செய்ய ஆரம்பிச்சுட்டேன்….ஜப்பான்ல இருந்தப்போ இன்னும் நிறைய தப்பு வேலைல…அங்க இருந்த பாஸ் கொஞ்சம் திட்டிட்டார்…….அதுக்கப்புறம் வேலை செய்யப் பிடிக்கலை…..ராஜினாமா பண்ணிட்டேன்….ஆனா பாஸ் அடிக்கடி ஈமெயில் மூலமா என்னை திரும்பி வந்து சேர சொல்றார்…… அதான் யோசிச்சேன்….உன்னை நான் லீகலா தத்து எடுத்து ரெண்டுபேரும் வேலைக்கு சேர உன்னை கூட்டிப்போக வந்தேன்”

அதன்பின் இந்துமதியை பால்ராஜ் தத்து எடுக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

“சரி, நாளைக்கு சென்னை திரும்புவோம்…. தயார் பண்ணிக்கோ இந்து”

“அப்பா……பாவம் பாட்டி…அவங்களையும் கூட்டிட்டு போக ஏற்பாடு செய்யுங்க” இந்துமதி பால்ராஜிடம் கெஞ்சினாள்.

“அவங்களுக்கு முதல்ல பாஸ்போர்ட் வேணும்…..” கொஞ்சம் யோசித்தபின் “இங்கே கொழும்புலே ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு கிடைச்சிருக்கு….அதனாலதான் என்னை திரும்பி சேர சொல்லி கட்டாயப் படுத்தறாங்க….நான் என்ன யோசிக்கிறேன்னா….. டெல்லில நீ உன் வேலைகளை முடிச்சு ப்ராப்பர் ஹாண்ட் ஓவர் பண்ணிடு….நானும் என்ன பண்ணணுமோ பண்ணிட்டு…அதுக்கப்புறம் நாம கொழும்பு திரும்பி இங்கே உன் பாட்டியோடயே வாழலாம்…..”

இதைக்கேட்ட இந்துமதி அப்பா பால்ராஜை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

அன்றிரவு இந்துமதி சென்னைக்கு செல்ல தயார் செய்யும் போது…..அவளுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்ததை உணர்ந்தாள்……..

அது ஒரு பழைய ஹிந்து நியூஸ் பேப்பர்…..பலராம் காணாமல் போன அந்த தேதிக்கு மறுநாள் தேதி நியூஸ் பேப்பர் அது….அதில் ஒரு மந்திரியின் பேட்டி சம்பந்தமான விஷயம்….அதோடு ஒரு புகைப்படம்……பேட்டி ஒரு விமானத்தில் நடந்ததால், அந்த விமானத்தில்….ராஜஸ்தான் ஜெய்ப்பூரிலிருந்து சென்னைக்கு சென்ற அந்த விமானத்தில்…. பேட்டி எடுத்தவர் பதிவு செய்த போட்டோ தான் அது……. அதில் அந்த மந்திரியின் முகத்திற்குப் பின்னால் ஒரு உருவம்….

‘அது என்ன பலராம் போலத் தெரிகிறதே??!!’

இன்னும் சில பொருட்கள் இந்துமதி ஜெய்ப்பூர் + டெல்லியிலிருந்து கொண்டு வந்தவைகளை…….இத்தனை நாளாக அவைகளை தன் சோகத்தால் பார்க்காதவள்…….இப்போது பார்க்க நேரிட….மேன்மேலும் அதிர்ச்சிகள்…..

பலராம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறானா??!!

***

சென்னை சேர்ந்ததும் பால்ராஜ் இந்துமதியை வேறொரு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி அங்கு ப்ராப்பர் ஹாண்ட் ஓவர் செய்துவிட்டு கூடிய சீக்கிரம் சென்னைக்கு வந்துவிடும்படி சொல்லி அனுப்பினார்.

“ரெண்டு நாளில் முடிச்சிட்டு வந்துடறேன்” என்று கூறி டாட்டா காண்பித்து புறப்பட்டாள்.

டெல்லி அடைந்ததும் ஈமெயில் பார்க்க நேரிட்டபோது பலராமின் கம்பனியிலிருந்து, அவனின் ஒரு மாத சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும்……. இவளின் பேங்க் விவரம் கேட்டு ஆபிஸ் மேனேஜர் ஈமெயில்…….

இதையடுத்து இந்துமதியின் கம்பனியிலிருந்து டெல்லி ஆபிஸ் மேனேஜர் ஈமெயில்…..போலீஸ் கடைசியாக ஒரு முறை விசாரித்து இறப்பு சான்றிதழ் கொடுக்க வேண்டியிருப்பதால் போலீசை தொடர்புகொள்ளுமாறு கூறி அந்த போலீஸ் ஆபிசர் பெயரும் நம்பரும் அந்த ஈமெயில்……

இரண்டு ஆபிஸ் மேனேஜர் & அந்த போலீஸ் ஆபிசர் போன் நம்பரில் தொடர்பு கொண்டு பேசினாள்…அதிர்ச்சிகள் மேலோங்கின….பின்பு பலராமின் பேங்க் மனஜேர்க்கு போன் செய்து பேச….அதிர்ச்சிகள் இன்னும் உச்சகட்டத்தை அடைய……..இந்நிலையில் டெல்லியில் ப்ராப்பர் ஹாண்ட் ஓவர் முடிந்துவிட…… சென்னை விமானத்தில் பயணித்து…… சென்னை சென்றடைந்தாள்.

***

சென்னை விமான நிலையம் வந்து பால்ராஜ் அவளை பிக்கப் செய்து கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். வழியில் காரில் பால்ராஜ் பேசிய எதற்கும் அவள் மௌனம் சாதித்தது பால்ராஜுக்கு குழப்பமாக இருந்தது.

“என்ன ஆச்சு உனக்கு?” என்று வீடு வந்து சோபாவில் சாய்ந்ததும் கேட்டார் பால்ராஜ்.

இந்துமதி கொஞ்சம் அழுதுவிட்டு பின் கண்களை துடைத்தவாறே….”அப்பா…. பலராம் உயிரோடு தான் இருக்கான்…..இருக்கார்” என்று குண்டொன்றை போட்டாள்.

இதைக்கேட்ட பால்ராஜ் திகிலடைந்து எழுந்து அவள் அருகே வந்தார்…. “என்னம்மா சொல்றே நீ?…” அவர் உடலும் கைகளும் நடுங்க….அப்படியே அவள் முன் தரையில் அமர்ந்து….”என்னம்மா சொல்றே நீ?…” என்று மறுபடியும் கேட்டார்.

இந்துமதி “கொஞ்சம் இருங்கள்” என்று கூறி தனது பெட்டியில் இருந்து ஏதேதோ வெளியே எடுத்தாள். முதலில் அந்த ஹிந்து நியூஸ் பேப்பரை அவரிடம் நீட்டினாள்.

“என்கிட்ட மண்புயலில் மாட்டிக்கொண்டது போல் பேசி…….அப்புறம் எப்படி அன்னிக்கு சாயங்காலம் ஜெய்ப்பூர் விமானம் பிடித்து சென்னைக்கு போனான்?…”

பேப்பரை வாங்கிய கைகள்….. அதில் இந்துமதி வட்டமிட்டு காண்பித்த உருவத்தை பார்த்த போது…… பால்ராஜ் கைகள் மேலும் நடுங்குவதை இந்துமதி கவனித்தாள்.

“கொஞ்சம் தண்ணீர் குடிங்கப்பா” என்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்தினாள் இந்துமதி.

பால்ராஜின் கண்கள் கலங்குவதையும் கவனித்தாள் இந்துமதி….

“பலராம் கம்பெனி ஆபிஸ் மேனேஜர் கிட்ட பேசவேண்டியிருந்தது….அவர் சம்பளம் எனக்கு கொடுத்து கணக்கை மூட வேண்டி…..அவன் ஒரு ஜூனியர் ஆர்க்கிடெக்ட் என்று தான் நீங்களும் அவனும் சொன்னீங்க….ஆனா….. ஹி இஸ் எ சவுத் ஆசியா ரீஜினல் டெபுடி டைரக்டர் ….மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம்!!”

பால்ராஜ் அவளையே கண்கொட்டாமல் பார்த்தார்.

“ஏன் இவ்வளுவு பெரிய பொய்?…….அவ்வளவு சம்பளம் வாங்கி எங்கே அனுப்பறான்?… நிறைய பேர் சின்ன போஸ்ட்ல இருந்துகிட்டு பெரிய போஸ்ட்ல இருக்கிற மாதிரி தான் பந்தா காமிப்பாங்க…..ஆனா இவன்???…. ஏன் இப்படி வேஷம் போட்டான்?…….எங்கே போய் ஒளிஞ்சுக்கிட்டு இப்போ என்னை சித்திரவதை பண்ணுகிறான்?”…….இப்போது அவள் மூச்சு வாங்கி ஆத்திரமடைவதை கவனித்து, பால்ராஜ் அவளுக்கு தண்ணீர் கொடுத்து குடிக்கச் செய்தார்…..

தண்ணீர் குடித்தவள்….. திடீரென்று அழத்தொடங்கினாள்……

“இது மட்டும் இல்லேப்பா……இந்த…. எங்கள் கல்யாண சான்றிதழ் பாருங்க ….. இதோ ….. அவரோட இறப்பு சான்றிதழ் பாருங்க …… இதோ அவரோட ஆதார்-கார்ட் (பெயர் அடையாள அட்டை) பாருங்க ……. இதோ அவரோட பான்-கார்ட் (நிரந்தர கண்ணுக்கு எண்) பாருங்க …. எல்லாத்தையும் பாருங்க………எல்லாத்துலயும் அவனோட பிறந்த தேதி பாருங்க…… அவனுக்கு உண்மையிலே 47 வயசாப்பா??…. ஏன்ப்பா இப்படி என்னை ஏமாத்தியிருக்கான்? …….ஏன்?….. ஏன் இப்படி வேஷம் போட்டான்?…….எங்கே போய் ஒளிஞ்சுக்கிட்டு இப்போ என்னை சித்திரவதை பண்ணுகிறான்?”….

அவள் அழுகையை கட்டுப்படுத்த முடியாது என்று உணர்ந்த பால்ராஜ் அவளை அணைத்து ஆசுவாசப்படுத்த முயன்ற போது…… அவள் அவரை தள்ளினாள்…….

கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தவள், பெட்டிக்குள் இருந்து இன்னொரு பேப்பரை எடுத்து அவரிடம் நீட்டினாள்……..

அதில் வலது பாதி பால்ராஜ் போட்டோவும்…. இடது பாதியில் பலராம் போட்டோவும் அருகருகே இருந்தது…..அதை வாங்கியவர் அவளை ஏறிட்டு பார்க்காமல் மறுபடியும் சோபாவில் சாய்ந்தார்…… விட்டத்தை பார்த்து கண்களை மூடினார்….. “ஏசுவே!….” என்றவரின் கண்கள் கலங்கின…..

“ஜீன்ஸ்?????….நம்பறேன்….ஜீன்ஸ் தான்….நம்பறேன்….எல்லாத்தையும் நம்பினதுக்கு….உங்களை நம்பினதுக்கு….பலராமை நம்பினதுக்கு….உங்க ரெண்டுபேரோட அரவணைப்பும் முத்தங்களும் புனிதமானதுன்னு நம்பினதுக்கு…….நான் தான் என்னை செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்….”……….இப்படி பேசியவள் உண்மையிலேயே ஓடி சென்று தன் செருப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு மண்டையில் அடித்துக் கொண்டாள்.

பதறிக்கொண்டு ஓடி வந்து தடுத்த பால்ராஜை மறுபடியும் தள்ளினாள் “இதுக்கு என் அம்மாபோலவே அன்னிக்கு ஸ்ரீநகர்ல செத்துத் தொலைச்சிருக்கலாமே… ஆண்டவா……..என்னையும் எடுத்துக்கோ…” செருப்பை போட்டுவிட்டு இப்போது பால்கனி நோக்கி ஓடினாள் இந்துமதி…… தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தவளாக……

“ஐயோ!….. இவ தற்கொலை பண்ணிக்க துணிஞ்சிட்டாலே ….சுமதி……”என்று பால்ராஜ் அரற்றினார்………இந்துமதி பின்னாடியே ஓடி அவளை தடுக்க நினைத்தபோது…….. அவளே நின்று அவரை திரும்பிப் பார்த்தாள்.

“ஓ….சுமதி……என் அம்மாவை இன்னும் கூட நினைச்சிகிட்டுதான் இருக்கீங்களா?” கிண்டலாக பேசியவள் பால்ராஜ் அருகே வந்தாள்….

“உண்மையிலே நீங்க யாரு?…பலராமா??” அவர் கண்களை ஊடுருவி பார்த்தாள் இந்துமதி……அந்த பூனைக்கண்கள் இல்லையே?

“நான் அவனில்லை” பால்ராஜ் சொன்னார்

“அப்படியா?….அப்போ நான் யார் உங்களுக்கு?….சுமதியா??…” இன்னும் அவர் கண்களை ஊடுருவி பார்த்தாள் இந்துமதி

“நீ அவளில்லைம்மா…..” பால்ராஜ் அவள் ஊடுருவலை சமாளிக்க முடியாமல் தலை குனிந்து சொன்னார்.

“அப்போ எதுக்காக இந்த வேஷமெல்லாம்?” இந்துமதி பயங்கரமாக கத்திக்கொண்டே ஹாலுக்கு வந்தாள்.

பின்தொடர்ந்து வந்த பால்ராஜ் திடீரென்று அவள் கால்களில் விழுந்து….. இரு கால்களையும் பற்றிக்கொண்டு கதற ஆரம்பித்தார்….

“எல்லாம் அந்த ஒரு நாள் கண்ட சுகம்……. உன் அம்மா எனக்கு தந்த காதல் பரிசு….. அதிலேயே லயிச்சு 22 வருஷம் வாழ்ந்து………. உன்னை பார்த்ததும் சபலப்பட்டுட்டேன்……. நீ எனக்கு பிறந்தவள் என்கிற உண்மை எனக்கு அன்னிக்கு ஜெய்ப்பூர்ல தான் தெரியும் … அதுவரைக்கும் எனக்கு உண்மையிலே தெரியாதும்மா…. அந்த சுகுமாருக்கு பிறந்தவள் தானேன்னு……. 22 வருஷம் கனவு வாழ்க்கையில் சுமதியோடு சுகமாக…… அந்த ஒரு நாள் சுகத்தையே நினைச்சு நினைச்சு இருந்த எனக்கு…. உன்னை பார்த்தப்புறம் உன் கூடவே இருக்க ஆசைப்பட்டேன்………பலராம் வேஷம் போட திட்டமிட்டேன்” அவர் குலுங்கிக்குலுங்கி அழுது….. தலையில் அடித்துக்கொண்டார்.

“ஜெய்ப்பூர்ல தான் தெரிஞ்சுக்கிட்டிங்களா??….அப்போ அதுவரைக்கும் தெரியாதா??……. நான் உங்களுக்கு பிறந்தவள்னு? …ஜெய்ப்பூர்ல யார் சொன்னாங்க?” இந்துமதியின் குழப்பங்கள் இன்னும் மேலோங்கியது….

“சுகுமார்…..ஆமாம் சுகுமார் தான்…..அன்னிக்கு டெல்லி ஏர்போர்ட்ல நாம அவரை முதல்ல சந்திச்சோம்…அப்போ அவர் என் கம்பெனி விஷயமாத்தான் துபாய்ல இருந்து வந்திருக்கார்னு தெரியாது….அப்புறம் ஜெய்ப்பூர்ல பார்த்ததும் தான் சொன்னார் என் கம்பெனி காண்ட்ராக்ட் விஷயமாக வந்ததை……”

“ஓ…… வாட் எ சர்ப்ரைஸ்!!……சி த வேர்ல்ட் இஸ் ஸோ ஸ்மால்!!…..உலகம் இவ்வளவு சின்னதா??!!” என்றவாறே சுகுமார் பலராமை நெருங்கினார்.

“நீ உண்மையிலே பலராம்னு நம்பச்சொல்றியா?…நானும் நம்பணுமா?” சுகுமார் நக்கலாக பேசி பலராமை மீண்டும் வட்டமடித்து பார்த்தார்.

“ஆமாம்…நம்பித்தான் ஆகணும்….இந்துவும் நானும் என் பெரியப்பா பால்ராஜுக்கு ஈமெயில் அனுப்பிவிட்டோம்….அவர் ஜப்பான்ல பிசியாக இருக்கிறார்….கூடிய சீக்கிரம் அவர் உங்களுக்கு பதிலளிப்பார்”

“ஒகே….அப்படியே இருக்கட்டும்…..அவர்கிட்டே இருந்து பதில் வந்ததும் நம்பறேன்….ஆனா உனக்கு எப்படி இவ்ளோ சின்ன வயசுல இவ்ளோ பெரிய போஸ்ட்?”

“அது….அது…என் திறமை”

“உன் திறமை!!……உன் திறமை??…..வெளிநாடு போகும்போதெல்லாம் நல்லா நடிச்சு…… சுமதி……அப்புறம்….. இப்போ….. இந்த….. இந்துமதி மாதிரியான அப்பாவி பொண்ணுங்களை ஏமாத்துறது தான் உன் திறமை??? ……இல்லியா… மை டியர்……. மிஸ்டர்……. பால்ராஜ்??”

பலராம் கோபத்தை அடக்கிக் கொண்டு ” ஜஸ்ட் வெயிட் ஃபார் த ஈமெயில் ஆஃப் மிஸ்டர்.பால்ராஜ் …..நான் அவரில்லை….. புரிஞ்சுக்கோங்க……” என்று கூறி, வந்த வேலையை கவனிக்க போனான்.

மதியம் கம்பெனி பஃபட் லஞ்ச்…..(பல்சுவை விருந்து)….. முடிந்த பின் சுகுமார் மறுபடியும் பலராமிடம் வந்தார்.

“எனக்கு என்னமோ உன்னை அவ்ளோ சீக்கிரமா நம்பணும்னு தோணலை… அதனால ரொம்ப நாளா எனக்கும் என் பொண்டாட்டி சுமதிக்கும் தெரிஞ்ச ஒரு ரகசியத்தை இப்போ நான் சொல்றேன்…..நீ அவரில்லைன்னா அவர்கிட்டேயும்…. அதான் உன்…….பெரியப்பாகிட்டேயும் சொல்லு….”

“நான் தான் அவரில்லைன்னு திரும்பத் திரும்ப சொல்றேனே?…….”

“சரி…..அப்படியே இருக்கட்டும்…..போய் சொல்லு….. உன் பெரியப்பாகிட்டே…. இந்துமதி அவரோட பொண்ணுன்னு …..அவ எனக்கு பிறந்தவ இல்லைன்னு சொல்லு……..இந்துமதிக்கிட்டேயும் போய் சொல்லு…..ஏன்னா அவளுக்கும் இது தெரியாது…..அவ அம்மா ஒரு வேசின்னு தெரிஞ்சுக்கட்டும்…..பச்சையா சொல்லு….சுமதி ஒரு தே****யான்னு” கையை இப்படியும் அப்படியும் அசிங்கமாக அசைத்து கத்திப்பேசியவாறே நடந்துபோன சுகுமாரை ஒன்றும் செய்யத் தோன்றவில்லை…..பலராம் என்கிற பால்ராஜுக்கு……..

‘இந்துமதி தன் மகளா?’…என்கிற அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

‘என் மகளை நானே திருமணம் செய்துகொண்டேனா?’ என்பது பேரிடியாக…..அதோ தூரத்தில் ஆரம்பித்துள்ள அந்த மாபெரும் மண்புயலின் இடிகளைப்போல் தோன்றியது…..

அப்போதுதான் பால்ராஜுக்கு பொறிதட்டியதுபோல் ஒரு யோசனை தோன்ற……. அந்த மாபெரும் மண் புயலை நோக்கி நடையை கட்டினார்….. கம்பெனி போன் எடுத்து யுடியூப் (Youtube) வழியாக ஒரு புயல் சத்தம் கேட்கும் படியாக வைத்துக்கொண்டு……பின் தன் சொந்த தொலைபேசி மூலம் இந்துமதியை அழைத்து…… தான் புயலில் மாட்டிக்கொண்டது போல் நாடகமாடினார்.

பிறகு தான் அணிந்திருந்த கோட் + சூட் + டை + 2 போன் + பர்ஸ் இவைகளை புயல் வரும் பாதையை நோக்கி தூக்கிப்போட்டு விட்டு…….. சுமார் நூறு கிலோமீட்டர் தூரம் இருந்த ஜெய்ப்பூர் நகருக்கு ஒரு டாக்ஸி பிடித்து சென்று சென்னைக்கு விமான டிக்கெட் எடுத்து பயணித்தார்….. இத்துடன் பலராம் கதையை முடித்துவிடலாம் என்கிற நினைப்போடு…..

நடத்திய நாடகத்தை தெளிவு படுத்திய பால்ராஜ் “நான் உன்னை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த மாதிரியான திருட்டு எண்ணங்கள் எல்லாம் எனக்கு வந்திருக்காது………… 22 வருஷம் எப்படி சுமதி நினைப்பில்லேயே……கனவு உலகில் வாழ்ந்தேனோ, அப்படியே வாழ்ந்துட்டு……..செத்திருப்பேன்.

என்னை புரிஞ்சுக்கோம்மா…. என்னை விட்டுப் போயிடாதே தாயி……..

நான் இனி அவனில்லைம்மா……..எனக்கு…..நீயும் அவளில்லைம்மா…..”

காலில் விழுந்து மன்றாடி… தலையில் அடித்துக்கொண்டு புலம்பினார் பால்ராஜ்.

“நீயே யோசிச்சு பாரும்மா…நான் என்னைக்காவது…….ஒரு முறையாவது ஆபாசமா நடந்துக்கிட்டேனா?…கட்டில்ல ஒரு புருஷன் பண்ணுவதை நான் பண்ணினேனா?……..நீ ஆசைப்பட்டப்போ கூட நான் அதை தடுக்கலையா?….நீ என்கூடவே இருக்கணும்னு தான் இதையெல்லாம் செஞ்சேன்…..”

தந்தை பாசம் இதுநாள் வரை அறிந்திராத இந்துமதி……..பலராமாக வேடம்போட்டு சுமார் 2 மாத காலம் தன்னுடன் கணவனாக வாழ்ந்த பால்ராஜை….. கடைசியில் தந்தையாக பாவித்து….…. அழுகையோடு ஏற்றுக்கொள்கிறாள்……

***

பின்குறிப்பு:

இந்துமதியை பெங்களூரு அனுப்பிய தினம் முதல், பலராம் வேஷம் போட என்னென்ன திட்டம் பால்ராஜ் தீட்டினார் என்பதை இந்துமதி கேட்க கேட்க ஒவ்வொன்றாக தெளிவுபடுத்தினார்………

பலராம் வேலை உண்மையாக இருக்க..…அது தானகேவே அமைந்தது… ……உண்மையில் அந்த ஆஸ்திரேலிய கம்பெனி வேலை பால்ராஜுக்கு யதேச்சையாக / அதிர்ஷ்டவசமாக கிடைத்தபின் தான் திட்டமே உருவானது….. அந்த ஆஸ்திரேலிய கம்பெனி முதலாளியிடம், தான் பெயர் மாற்றம் & உருவ மாற்றம் செய்துகொள்வதை வேலைக்கு சேரும் முன்பே சொல்லிவிடுகிறார் (வயதில் குறைந்த… வேற்று மத இந்துமதியை மணக்கப்போவதால்)……. ஆஸ்திரேலிய கம்பெனி முதலாளி இந்தியாவில் இல்லை என்பது அவருக்கு உதவியாக இருந்தது…

பலராம் வேஷம் சந்தேகமின்றி நிலைத்ததும் பால்ராஜ் கேரக்டர்ஐ பின்னர் சாகடிக்க திட்டம் போடலாம் என்றிருந்தார்……

ஆனால்எப்போதும் நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்றை செய்யும் (Man proposes…God Disposes) என்பதாக இவை நடந்தது.

பால்ராஜின் ‘பலராம்’ வேஷத்திற்காக அவர் செய்தது…

  1. பலராம் உண்மையில் பால்ராஜின் தம்பி மகன் பெயர் தான்…ஆனால் அவன் ஐந்து வருடங்களுக்கு முன்பே ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்து…. அவள் மதத்திற்கு மாறி அவளை நிக்கா செய்துகொண்டு…. அதனால் பெற்றோர்களை பகைத்துக்கொண்டு போய்……, பின் கத்தார் நாட்டில் செட்டில் ஆகிவிட்டான்.
  2. பால்ராஜ் தன் நீண்ட தலைமுடி தாடி மீசை இவைகளை துறந்து…. பலராமாக ட்ரிம் முடிவெட்டு செய்துகொண்டார். பூனைக்கண்கள் காண்டாக்ட் லென்ஸ் தான்!!…… பிறகு தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்து நிரந்தர பூனைக்கண் (Iris implant surgery) வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தார்.
  3. ஆதார்-கார்ட் & பான்-கார்ட் இவைகளை பணம் கொடுத்து திருட்டுத்தனமாக வாங்கினார்.
  4. பேஸ்புக் மற்றும் ஈமெயில் பலராம் பெயரில் தயார் செய்துகொண்டார்.
  5. பால்ராஜுக்கு கன்னத்தில் லேசான குழிகள் விழும்….வலது பக்கம் அப்படி விழும் குழிக்கு சற்று கீழே ஒரு மச்சம் இருந்தது…(சுமதி பால்ராஜிடம் மயங்கி காதல் வயப்பட இது ஒரு காரணம்!!)…..குழிகள் விழுவதை அடர்த்தியான தாடி வளர்ப்பால் தெரிவதில்லை (அதை மறைக்கத் தான் தாடி வளர்த்தார் என்பது உண்மை….இனி யாரும் தன்னிடம் காதல் வசப்படக்கூடாது என்று!!)…மச்சத்தை மறைக்க….. வெட்டிநீக்குதல் (Excision) முறையை டாக்டர் பரிந்துரைக்க……அதன்படி செய்து மச்சத்தை அகற்றினார்.
  6. இந்துமதியை பலராம் (பால்ராஜ்) தன் டெல்லி அலுவலக சகாக்களை அலுவலகத்தில் அறிமுகம் செய்ய அழைத்து சென்ற போது, தன் இருப்பிடத்தை காட்டாமல்……யாரிடமும் அதிகம் பேசாமல் இருக்கும்படி வேகவேகமாக காட்டி முடித்துக்கொண்டார்.
  7. திருமணத்திற்கு ஆஸ்திரேலிய சகாக்களை வலுக்கட்டாயமாக திருப்பதி வரச்சொல்லி இந்துமதியை திருப்திபடுத்தி எந்த சந்தேகமும் வராமல் பார்த்துக்கொண்டார்.
  8. கைவசம் எப்போதும் இரண்டு பேர்களின் ஆதார்-கார்ட் & பான்-கார்ட் மிகப் பத்திரமாக இந்துமதியின் பார்வையில் படாதவாறு வைத்திருப்பார்…… ஜெய்ப்பூர் – சென்னை விமானம் பிடிக்கும்போது பால்ராஜ் பேர் ஆதார்-கார்ட் உபயோகித்தார் .
  9. குரலை வைத்து இந்துமதி சந்தேகப்படாமல் இருக்க, அவள் பெங்களூரு சென்ற சமயத்திலிருந்து அவ்வப்பொழுது குரலில் கரகரப்பை வரவழைத்து பேசினார்.
Print Friendly, PDF & Email

1 thought on “சிங்களத்து சின்னக்குயிலே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *