சாவித்ரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2021
பார்வையிட்டோர்: 4,003 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணையில் சேர்ந்தாற்போல் பத்து நிமிஷம் :சாவித்ரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேரத்திற்கு ஒரு முறை மாடிக்கும் கீழுக்குமாய் நடமாடிக்கொண் டிருந்தாள். கல்யாணத்தில் ஆயிரம் ஜோலி இருக்கையில், இந்தச் சாஸ்திரிகளுக்கு என்ன வேலை? சமையல்காரன் சாம்பாரை என்ன பண்ணிண்டிருக்கானோ தெரியவில்லை. (அண்டா ஈயம் போதாதென்று அவளுக்கு நினைப்பு) அப்புறம் அப்பளாத்தை இட்டு வைத்தால் ஆச்சா? பொரித்துப் போடவேண்டாமா? பந்தியில் எல்லாவற்றை யும் பரிமாறி விட்டு, அப்பளாத்தை எடு என்கிற வேளைக்கு அப்பளாத்தைத் தேடினால் என்ன பண்ணுகிறது? எல்லாவற்றையும் பண்ணிவிட்டுக் கடைசி யில் மூக்கை அறுக்கிறாப்போல் ஏதாவது நடந்துவிட்டால் என்ன பண்ணுகிறது? பிள்ளையாரே, கடைசி வரைக்கும் விக்கினம் வராமல் நீதான் காப்பாத்தவேணும். உனக்கு ஏழு சூறைத் தேங்காய் உடைக்கிறேன்.

மாட்டுப்பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள். எல்லாம் ஆசையாத்தான் செய்கிறார்கள். ஆனால் எதுக்குப் பிரயோசனம்? கொசுவம் வைத்து இன்னும் ஒரு வேளை சமயமானால் சரியாகக் கட்டிக் கொள்ளத் தெரியவில்லை. புஸு புஸுவென்று ஏதோ கனகாரியமாக இருக்கிறது போல வளைய வருகிறார்களே தவிர, கைக்காரியத்தை மறந்துவிட்டு வந்தவர்களோடே பேசிச் சிரித்துக் கொண்டிருக்கத்தான் லாயக்கு.

இதோ கூடத்தில் பேராண்டி தொண்டையைக் கிழிச்சுண்டு கத்தறது காதைப் பொளிகிறது. அவனுக்குப் பசிவேளை வந்துவிட்டது. ஆனால் சிவகாமுவுக்கு மாத்திரம் ஏன் தெரியமாட்டேன் என்கிறது? ரெண்டு கண்ணுக்கு நாலு கண்ணாகக் கண்ணாடி வேறே போட்டுண்டிருக்கிறாளே!

“சிவகாமூ! ஏ சிவகாமூ- ஊ..!”

“இதோ பாருங்கோ, முகூர்த்த வேளை நெருங்கி விட்டது. நீங்கள் இது மாதிரியெல்லாம் எழுந்திருந்து எழுந்திருந்து நடுவில் போய்க்கொண்டிருக்கக்கூடாது” என்றார் சாஸ்திரிகள்.

“சரிதாங்காணும். நீங்கள் இட்டிலி காபி சாப்பிட்டேகளா?”

“பார் சாவித்திரி மாமிக்கு உடம்பு படகுபோல் இருந்தாலும் பந்துபோலத்தான் ஓடி விளையாடுகிறாள்!”

“என்ன இருந்தாலும் கல்யாணப் பெண் இல்லையா?”

“சிவகாமூ! ஏ சிவகாமூ – ஊ – ஊ!”

“பார்த்தீர்களா? பார்க்காவிட்டால் எல்லாரும் பார்த்துக்கொள்ளுங்கள். காது வரைக்கும் வாய் கிழியற கல்யாணப் பெண்ணை இந்தக் கல்யாணத்தில் தான் நீங்கள் எல்லாரும் பார்க்கலாம்.”

கொல்லென்று சுற்றும் ஒரு சிரிப்பு விஷ்ணுசக்கரம் போல் சுழன்று எழுந்தது.

“சுந்தாதானே இப்போ பேசினது?”

“இதோ இருக்கிறேன், மாமி.”

“சுந்தாதான் இப்படிப் பேசுவாளென்று எனக்குத் தெரியுமே. என்னடி சௌக்கியமா? பழைய குறும்பெல்லாம் இன்னும் போகவில்லையா?”

“தேகத்தோடே பிறந்தது எங்கே மாமி போகும்? எங்கே ஓடறேள், அவசரமா? நில்லுங்கள், நமஸ்காரம் பண்ணுகிறேன்.”

“கிழக்கைப் பார்த்துப் பண்ணு. மகாராஜியாக இரு. தோளோடு தாலி தொங்கத் தொங்கக் கட்டிண்டு, பதினாறும் பெற்று -“

“பெற்றால் ஆச்சா மாமி!” சுந்தா பெருமூச்செறிந் தாள்; “தக்க வேண்டாமா?” அவளுக்கு அடுத்தடுத்துக் குறைப் பிரசவத்திலேயே நான்கு தவறிவிட்டன.

“என்னடீ!” சாவித்ரி கர்ஜித்தாள்; “எல்லாம் தக்கும். தக்கும். முளைத்து இன்னும் மூணு இலை விடவில்லை. அதுக்குள்ளே இவ்வளவு அலுப்பா?”

அதற்குள் யாரோ அவசரமாய்த் தோளைக் சுரண்டினாள். “மாமி மாமி, மாமா உங்களையே பார்க்கிறார்.”

மறுபடியும் ஒரே சிரிப்பு. சாவித்ரி திரும்பிப் பார்த்தாள். அவள் கணவர் அவளைப் பார்க்கவில்லை. சங்கீத வித்வான் கச்சேரியில் ஸ்ருதியைக் கணிப்பதுபோல் கழுத்தைத் திருப்பிக் கொண்டு யாருடனோ பேசிக்கொண் டிருந்தார். சாவித்ரி ப்ரமித்து நின்றாள்.

அந்த வேளைக்கென்றே யாருக்குமே தேஜஸ் வந்து விடுமோ? அவர் அப்படி ஜ்வலித்தார். பரந்த நெற்றியில் சந்தனத்தைக் கீறலாய்த் தரித்து, வெண்பட்டு அங்கவஸ்திரத்தை யோக வேஷ்டியாகப் போட்டுக் கொண்டு தொடைமேல் மிடுக்காய் வைத்த வலக் கையில் கங்கணமும் இரண்டாவது விரலில் பவித்ரத்தடியில் மோதிரத்தில் பதித்த பச்சைக்கல் பளிச் … பளிச்.

“மாமி எங்களையும் கொஞ்சம் பார்க்கலாம். மாமா பழைய மாமாதான்!” சாவித்திரியின் விழியோரங்களில் குளுமை பெருக்கெடுத்தது. பழைய மாமாதான். ஆனால் பழைய மாமாவும் இல்லை. அதுவும், கடந்த நாலைந்து வருடங்களாய் அவரை அவள் அநேகமாய்க் கட்டிலிலோ நாற்காலியில் சாய்ந்தபடிதான் கண்டிருக்கிறாள். சுக்கங் காயாய் வற்றிப்போன அந்தத் தேகத்தில் இதோ இப்பொழுது இந்தச் சமயத்திற்கென்று ஒரு புதுச் சக்தியை ஆவாகனம் பண்ணிக்கொண்டு முறுக்கேறிய சாட்டை போல் அவர் மணையில் அளித்த காட்சி, சாவித்ரிக்குக் கண்கொள்ளவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்னால் பெரிய டாக்டர் சொன்னது இப்போத்தான் சொன்னமாதிரி இத்தனை சந்தடியிலும் நினைவில் ஒலிக்கிறது.

“பாட்டி. உங்கள் பிள்ளைகள் இங்கிருந்தால் உங்கள் கிட்டே சொல்லமாட்டேன். அவர்கள் கிட்டே சொல்லுவேன். அவர்கள் இங்கில்லை. அதனாலே உங்கள் கிட்டே சொல்லவேணும்.”

ஒரு கை அவளையும் அறியாமல் அடிவயிற்றை அமுக்கிக் கொண்டது.

“என்னடாப்பா பயமுறுத்தறே?”

“நீங்கள் அவரை நம்பாதேயுங்கள். எப்போது என்ன ஏதென்று சொல்ல முடியாது. அவர் உடம்புக்கு வந்திருக் கிறது அப்படி. நீங்கள் அவரை நம்பாதீர்கள். உங்கள் தாலியை இரும்பாலே அடித்துப் போட்டிருக்கிறது. அதனாலேதான் இதுவரைக்குமாவது தள்ளிக்கொண்டு வருகிறது. அதனாலே அதை நீங்கள் நம்புங்கள்.” அப்படி அவன் சொல்லி மூன்று வருஷங்களாச்சு. இதோ இன்று இன்னொரு தாலி கட்டிக்கொள்ளப் போகிறாள்.

அதைப்பற்றிப் பெருமிதமா? இல்லை. எதையோ சாதித்து விட்டோமென்று மேட்டிமையா? இல்லை, இல்லை . ஒரு பரவசந்தான் புரிகிறது, நீண்ட நடை வழியிலே சுமைதாங்கியைக் கண்டாற்போல்.

“கண்டேளோடி இந்த அதிசயத்தை? மாமி மாமாவைப் பார்க்கிற பார்வையிலே பால் ஏடு மாதிரி அல்லவா தோய்ந்து விட்டாள்!”

“சரிதான் போங்கோடீ!” சாவித்ரி சீறி விழுந்தாள்.

“வந்துவிட்டதடீ மாமிக்குக் கோவம் ! வராது வராது என்றீர்களே!” கை கொட்டல். “கெக்கே!” கொக்கரிப்பு. கேளிக்கை வாய்க்கு வாய் குறும்புப் பேச்சும், குதூகலச் சிரிப்பும் பந்தாடிக்கொண்டே கல்யாணக் கும்பலில் பரவின.

சாவித்ரியின் முகத்தில் கண்ணோரத்துச் சுருக்கங் களிலும் நெற்றிக் கோடுகளிலும் கன்னச் சதைக் கதுப்பு களிலும் சப்தமற்ற சிரிப்பு வந்தது.

சிறிசுகள் இப்படித்தான் இருக்கும். இதுக்களுக்குச் சமயம், போது, சின்னவர் பெரியவர் வித்தியாசம் கிடையாது. அருமை பெருமை இல்லை. இவர்களுக்குச் சிரிச்சுண்டே இருக்கணும். சிரிக்க எது அகப்பட்டாலும் போதும். இன்னும் பத்து வருஷங்களாகட்டும். அப்போதும் இவர்கள் இப்படியேதான் இருப்பார்கள். இந்தக் காலத்துச் சிறிசுகள் அல்லவா? இவர்களோடே நம்மால் போட்டி போட முடியுமா?

“அம்மா!” என்றான் பஞ்சாமி; “சாஸ்திரிகள் கூப்பிடுகிறார்.”

“இதோ போறேன்.”

“அம்மா, உன்னோடு ஒன்று சொல்ல வேணும். ஆனால் சொல்லாமலும் இருக்க முடியுமென்று முடிய வில்லை.”

“அம்மா!” பஞ்சாமிக்கு முகம் தக்காளியாய்த் தவித்தது.

“அம்மா, என்ன சொல்ல வந்தேனென்றால் எங்கள் அப்பா அம்மா கல்யாணத்தை நாங்கள் பார்க்கும்படியாக நேரும் இந்தப் பாக்கியத்தை எப்படி உன்னிடம் தெரிவித்துக் கொள்வது?”

பஞ்சாமி வார்த்தைகளுக்குப் படும் அவஸ்தையைப் பார்க்கச் சாவித்ரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பஞ்சாமியின் சுபாவமும் அப்படித்தான். அவனுக்குத் தலையைச் சுற்றித் தான் மூக்கைத் தொட வரும். குழந்தைகள் எல்லாம் என்னவோ ஆசையாகத்தான் இந்த ஸஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கும் இது ஒரு பெருமைதானே! வயிற்றுப் பிழைப்புக் காரணமாய் எங்கெங்கோ சிதறிவிடுகிறார்கள். அவரவர்களுக்குத் தம் தம் குடும்பம், குழந்தை குட்டி, கவலைகள். அதில் ஊரில் ஒதுங்கியிருக்கும் இந்தக் கிழங்களைப் பற்றியே எப்போதும் நினைப்பு இருக்குமா? அவர்களை நாமும் ரொம்ப கசக்கவும் வழியில்லை. ஏதோ இந்த சமயமாவது –

அவர் என்னவோ, இதைப் பெரிதாய்க் கொண்டாட வேண்டாமென்று தான் சொல்லிவிட்டார் . “என்ன வேண்டிக் கிடக்கிறது? இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னவோ இருக்கிறவரைக்கும் இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போகிற இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டால் அதுவே போதும். நமக்கு இருக்கும் வாய்ப்புக்கு அதற்குமேல் என்ன?’ என்று அவர் எண்ணம்.

ஆனால் அவள் மனம் அப்படிக் கேட்குமா? ஏதோ இந்தச் சாந்தி பண்ணினால் பீடை தொலையாதா? ஆனால் இதைப்பற்றி அவரோடு தர்க்கம் பண்ணவும் முடியாது. ஒரு விஷயத்தைப் பற்றி மறு பேச்செடுத்தாலே அவர் முதல் பேச்சை மனத்தில் ஆணியாய் அறைந்து கொண்டு விடுவார். அவ்வளவு சந்தேகி. சுபாவத்திலே வீம்பு படைத்த மனுஷர். அதிலும் தடுத்துப் பேசினால் உடம்பு அதிர்ந்துவிடுமோ என்று பயந்து பயந்து தணிஞ்சுபோய், போக்குப்படி விட்டுவிட்டு, அதன் பலனாய், காரணம், காரியம், நியாயம் எல்லாமே அற்றுப்போய் வெறும் பிடிவாதம் மாத்திரம் ஊறிப்போச்சு. அதனாலே இதைப்பற்றி அவரோட பேசப்போய் முன் கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால் அதையெல்லாம் தாங்குற வயசோ தெம்போ அவளுக்கு இல்லை.

ஆகையினாலே ஒரு நாள் மத்தியான்னம், அவர் மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில், பக்கத்தாத்துப் பிள்ளையைக் கூப்பிட்டு, ஒரு முக்காலணாக் கடிதாகை அவனிடம் கொடுத்துப் பஞ்சாமிக்கு எழுதச் சொன்னாள்.

“நான் சொன்னதாக அப்பாவிடம் சொல்லாதே. உங்கள் அப்பாவுக்குத் தெரியாமல் நான் செய்யும் காரியம் இது ஒன்று தான்,” அதைச் சொல்லுகையிலேயே அவளுக்கு அழுகை வந்துவிட்டது. நாணுப்பயல் சமர்த்து. பாட்டி யைக் கவனிக்காதது போல், வாசற்புறம் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆனால் எனக்காக இல்லை. அவருக்காகத்தான். இந்தத் தள்ளாமையில், நாங்கள் உங்களில் யாரோடாவது தான் இருக்கணும். அதென்னவோ எங்களுக்கும் கொடுத்து வைக்கவில்லை. உங்களுக்கும் கொடுத்து வைக்கவில்லை. அவர் உடம்புக்கு வேண்டிய நிம்மதியும் காற்றோட்டமும் பட்டணத்து சந்தடியில் நாங்கள் எங்கே காணமுடியும்? எனக்கு அமிழ்ந்து ஸ்நானம் பண்ண அகண்ட காவேரிக்கும், காலையிலும் மாலையிலும் தரிசனம் பண்ண அகிலாண்டேசுவரிக்கும் நான் எங்கே போவேன்? அதனாலே, நாங்கள் இருக்கும் இடமே எங்களுக்கு சுகம் என்றாலும், இந்தச் சமயத்தில் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து இருக்கையிலேயே –

“இல்லை. ஒருவேளை நீயாவே, நான் இதை உன்னிடம் பிரஸ்தாபப்படுத்துவதற்கு முன்னாலேயே, எடுத்துச் செய்வதாக இருக்கலாம். ஆனால் என் அவசரம் எனக்குத் தாங்கவில்லை. அதனாலேயே நீயும் உன் தம்பிமாரும் கலந்து ஆலோசனை பண்ணி, இந்த வைதிகக் காரியத்தை எப்படி நடத்தணுமோ , எப்படி அப்பாவை இதற்கு இணங்கப் பண்ணணுமோ அப்படிச் செய்யுங்கோ.”

எழுதினவுடனேயே பஞ்சமி உற்சாகமடைந்துவிட் டான். ஆனால் அப்த பூர்த்தியைப் பட்டணத்தில் தான் நடத்த வேண்டு மென்று பிள்ளைகள் ஒரே பிடியாய்ப் பிடித்தார்கள். ஏனெனில், பட்டணத்தில் தான் ஒரு நிமிஷ எச்சரிக்கையில் உப்பிலிருந்து கர்ப்பூரம் வரை எல்லாச் சாமானும் வீட்டு வாசற்படியண்டை கிட்டும். பட்டணத் தில் தான் நண்பர்கள் நிறைய வரமுடியும். பட்டணத்தில் தான் வேண்டியவர் , வேண்டாதவர் எல்லோருமே இருக்கிறார்கள்.

“அவர்களுக்கு என்னடி குறைச்சல்? யானை மாதிரி ஜாம் ஜாமென்று தாங்குகிறதற்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்று வயிறு குளிர்ந்து வாயார வாழ்த்துபவர்களைக் கேட்கப் பெருமையாக இருக்கிறது. உதட்டு நுனியில் அப்படிச் சொல்லிக்கொண்டு, வாழச் சகிக்காதவர்கள் உள்ளூறப்படும் வயிற்றெரிச்சலை உணரு வதில் அதைவிட இன்பம் இருக்கிறது. அதற்காகவாவது, இந்த சமயத்தை விமரிசையாகக் கெண்டாட மூன்று பேர் களும் முஸ்தீப்பானார்கள். அவளுக்கே தன் பிள்ளை களைப்பற்றி இப்படித் தோன்றுகிறது நன்றாக இல்லை யானாலும், அவள் பிள்ளைகளை அவளைவிட வேறு யார் நன்றாக அறியமுடியும்? மூணும் மூணு தினுசு ; மூணும் முரடு. ஒண்ணுக்கொண்ணு ஒத்துக்கொள்ளாது. அதுவும் கல்யாணம் ஆனதுமே ஒவ்வொருத்தனும் மூலைக் கொண்ணா பிய்ச்சுண்டதை நினைச்சால இப்போக்கூடச் சிரிப்பு வருகிறது. இதற்குப் பானை பிடிக்க வந்தவள் மேலே பழியைப் போடுகிறதா? இல்லாவிட்டால் பிள்ளை களுக்கு ஏற்கனவே இருக்கும் சவரணை அவளுக்கு தெரியாதா?

திடீரென அவளைச் சுற்றி ஒரே கரகோஷமும் ரேழி யிலிருந்து கெட்டிமேளமும் எழவே விழித்துக் கொண் டாள். அவள் மேல் புஷ்பமாரியும் மங்கல அட்சத்தையும் பெய்து கொண்டிருந்தன.

“பானகம்! பானகம்! வாங்கிக் கொண்டீர்களா? இந்தாருங்கோ, இந்தாருங்கோ, இன்னொரு தடவை இந்தாருங்கோ!”

“ஆனந்தம் ஆனந்த மாயனே!”

கழுத்துச் சங்கிலியில் மாட்டிக்கொண்ட புஷ்ப சரத்தைச் சாவித்ரி பிடித்து இழுத்தாள். அந்த வேகத்தில் கொண்டை அவிழ்ந்தது.

“இதென்ன, சாவித்ரி மாமி பின்னிக் கொள்ள வில்லையா என்ன? மாமாவுக்கும் குடுமியில்லை. எப்படியடீ முடிச்சுப் போடுகிறது?”

ஒவ்வொரு கல்யாணத்திலும் இதே வேடிக்கைதான், இதே வார்த்தைகள் தாம். ஆனால் அலுக்கிறது மாத்திரம் இல்லை. ஏனோ தெரியவில்லை.

“என்ன இது? மேல் வேஷ்டியை நெய்த் தொன்னை யிலே தோச்சுண்டிருக்கேளே! அடடா! பட்டு, புத்தம். புதிசு!” என்று சாவித்ரி தன் கணவரைக் கடித்தாள்.

“இதென்ன மானங்கெட்டிருக்கேள் மாமி! தாலி கட்டி மூணு நிமிஷமாகவில்லை. அதற்குள்ளே மாமாவோடே உங்களுக்கு என்ன பேக்சு? பெரியவர்கள் நீங்கள் எல்லாமே. இப்படி வழி காட்டினால் சிறிசுகள் நாங்கள் எப்படி இருப்போம்?”

இது சுந்தாதான். அவள் கிளப்பிவிட்ட சிரிப்பு, கூடம் முழுவதும் குன்றிமணிகளை இறைத்தாற்போல் கிளுகிளுக்கிறது.

கல்யாணக்கூடத்தில் ஆளுயரத்திற்கு மாட்டியிருக்கும். கண்ணாடியில் தற்செயலாய் சாவித்ரியின் கண் விழுந்தது.

தன்னைப் பார்க்க அவளுக்கே சகிக்கவில்லை. தகடுமாதிரி குங்குமம், வேர்வையில் ஓரத்தில் அழிந்து மூக்கின் மேல் வழிந்து ஓடியிருந்தது. தலைமயிரெல்லாம் ஒரே பரட்டை. அதில் பூவிதழ்களும் அட்சதையும் ஒட்டிக்கொண்டிருந்தன. புதுப்புடவை உடம்பில் மூலைக்கு மூலை அசிங்கமாய்ப் புஸு புஸுவெனப் பிதுங்கிக்கொண்டு ஏற்கனவே உள்ள பருமனை மிகைப்படுத்திக் காட்டிற்று. தன்னையும் அறியாமல் ஒரு வெட்கம் அவளைப் பிடுங்கிற்று. தலை கவிழ்ந்தாள்.

“ஐயோடீ! எல்லோரும் மாமியைப் பாருங்கள்! மாமிக்கு வெட்கம் வந்துவிட்டதடீ!”

“எடு எடு முகூர்த்தத் தேங்காயை, பஞ்சாமி! ஒருத்தரையும் விட்டுவிடாதேங்கோ சின்னவர்கள் பெரியவர்கள் வித்தியாசம் பார்க்க வேண்டாம். இங்கே வந்தவர் யாரா இருந்தாலும் சரி, வெறுங்கையோடும் வெறும் வயிற்றோடும் போகக்கூடாது. ஆமாம், சொல்லி விட்டேன்!”

யார் இந்த சவால் அடிக்கிறது? ஓஹோ , சிவராஜனா?

“நன்னாச் சொல்லு, சிவராஜா! காசுபணம் இன்னிக்கு வரும்; நாளைக்குப் போகும். இந்த சமயம் வருமாடா? நீங்கள் எல்லோரும் சௌக்கியமாய் இருந்து இத்தோடு போகாமல் உங்கள் அப்பா அம்மா இரண்டு பேருக்கும் சதாபிஷேகம் பண்ணவேணும். இதைத்தான் இப்போ நான் தெய்வத்தை வேண்டிக்கறேன்!”

அதுக்கும் மீனுப்பாட்டி, நீங்கள் வந்து அவர் களையும் எங்களையும் ஆசீர்வாதம் பண்ணவேணும்.”

ஒரே சிரிப்பு. ஏனெனில் மீனுப்பாட்டிக்கு இப்போ, வர ஐப்பசிக்கு வயசு எழுபத்தெட்டு பூர்த்தியாகிறது.

“அதென்னடா அப்படிச் சொல்லீட்டே? உங்கள் கையாலே சதாபிஷேகம் பண்ணிக்க அவளுக்கு கொடுத்து வெச்சிருந்தால், அந்த முகூர்த்தத்தைப் பார்க்க எனக்கு மாத்திரம் கொடுப்பனை இருக்காதா என்ன?”

“பாட்டி, எல்லாம் உங்கள் ஆசீர்வாதம். முன்னால் அவர்களுக்குச் சதாபிஷேகம் பண்ண எங்களுக்குக் கொடுத்து வைக்க வேணுமே, அதைச் சொல்லுங்கள்.”

இப்போது இவ்வளவு பதவிசாய்ப் பேசும் சிவராஜன், ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னால் அவளிடம் சொன்ன வார்த்தைகள் திடீரென நினைவின் பின்னணியிலிருந்து அசரீரி மாதிரி எழுந்ததும் சாவித்ரி தன்னை அறியாமல் களுக்கெனச் சிரித்துவிட்டாள்.

“என்னம்மா சிரிக்கிறாய்?” என்றான் சிவராஜன், சற்றுத் திகைப்புடன்.

“ஒண்ணும் இல்லை, சீவாச்சு! என்னவோ நினைப்பு வந்தது.”

அப்போது சிவராஜனுக்குக் கல்யாணமான புதிது. இளந்தம்பதிகளைப் புதுக் குடித்தனம் வைக்க அவள் கிராமத்திலிருந்து பெங்களூருக்குப் போயிருந்தாள் அங்கு ஒரு பத்து நாள் தங்கும்படி நேர்ந்தது. புது நாட்டுப் பெண்ணை நம்மகத்துக் காரியத்துக்குப் பழக்கி வைக்க வேண்டாமா?

அந்த சமயம் ஒரு நாள் நாட்டுப் பெண் தோசைக்கு அரைத்துவைத்த மாவை சரியாய் மூடவில்லை. மாவு அசிங்கமாய் வெளியில் பொங்கி வழிந்திருந்தது. அதற்கே முனகிக்கொண்டு சாவித்ரி மாவைக் கிளறுகையில், ஒரு செத்த பல்லி விறைத்த வாலுடன் நடு மாவிலிருந்து கிளம்பிற்று. சாவித்திரிக்கு அருவருப்பின் பயங்கரத்தில் உடம்பெல்லாம் புல்லரித்தது.

“ராஜம்!”

“ராஜம்!”

“இருங்கோ அம்மா!”

ராஜம் கண்ணாடிக்கு எதிரில் வெகு காரியமாக இருந்தாள். கொண்டைமேல் மல்லிகைச்சரம் வளைவாய்ப் பதியவில்லை. காதோரம் ஒரு மயிரை எஃகுச் சுருளாக்க

முயன்று கொண்டிருந்தாள். ராஜிக்கு மிகவும் நெஞ்சீரல். கண்ணாடியில் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சரிபண்ண முயன்று கொண்டிருந்தாள்.

“ராஜம், அலங்காரம் அப்புறம் பண்ணிக் கொள்ளலாம். உடனே வா , இங்கே!”

கனவு கடுமையாய்க் கலைந்த விழிகளுடன் ராஜி வந்தாள். அப்போதே , தாழ்வாரத்து வாசல் வழி சிவராஜன் சமையலறையில் நுழைவதற்கும் சரியாக இருந்தது. அம்மா முகத்தின் கடுகடுப்பையும் ராஜியின் முகத்திகைப்பையும் மாறி மாறிப் பார்க்கையில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . ”என்ன அம்மா ?”

அம்மாவையும் பிள்ளையையும் சேர்ந்தாற்போல் கண்டதும் ராஜியின் நெற்றியும் கன்னங்களும் கழுத்தும் சிவப்பு லாந்தரைத் தூக்கிப் பிடித்தாற்போல் குங்குமமாய்ச் சிவந்தன. ராஜத்தின் மேனி ஏற்கெனவே நல்ல சிவப்பு. வெறும் வெளிறிட்ட சிவப்பல்ல; அழகுச் சிவப்பு, பழுத்த நெற்கதிர்களின்மேல் படும் பொன் வெயிலின் தகதகக்கும் சிவப்பு.

“என்ன ராஜம்?”

சிறைப்பட்ட பறவையின் சிறகுகள் போல் ராஜத்தின் கண் இமைகள் படபடவென்று அடித்துக் கொண்டன. கனவு கலைந்த விழிகளிலிருந்து அந்தக் கனவே உருகிக் கனந்தாங்காது விழியோரங்களிலிருந்து வழிந்து அவள் கணவன் இதயத்துள் சொட்டி விழுந்து, விழுந்த இடங்களை தஹித்தன. சிவராஜனுக்கு உடல் பரபரத்தது.

“ராஜம் , மாடிக்கு வா!”

கவிழ்ந்த தலையுடன் ராஜம் அவளை மாடிக்குத் தொடர்ந்தாள். கொண்டையில் வில்லாய்ச் செருகிய மல்லிகையின் மணம் கம்மென்று சாவித்ரியின் மேல் மோதியது. சாவித்ரி அப்படியே திகைத்து நின்றாள். முற்றத்தில் மரத்தொட்டி ஜலத்தில், நன்றாய்ச் சிறகு களைக் கோதி, மூக்கை உள்ளே விட்டு அலசி ஆற அமர ஒரு காக்கை குளித்துக் கொண்டிருந்தது. அதை ஓட்ட வேணும் என்று உள் நினைவில் ஓர் எண்ணம் எழுந்து அவளைத் தூண்டிக்கொண்டிருந்ததே தவிர, அதைச் செயலாக்க உடல் மறுத்துவிட்டது. அதன்மேல் திடீரென ஓணான் கொடி படர்ந்தது; மேலே சிலந்திக்கூடு கட்டி, பூஞ்சைக்காளானும் பூத்து விட்டாற்போல் அவ்வளவு புராதன உணர்ச்சி படர ஆரம்பித்தது. முற்றத்தில் ஒரு மஞ்சள் பூனை , மஞ்சள் வெயிலில் வெகு சுகமாய்க் கால்களை நீட்டியபடி உறங்கிக்கொண்டிருந்தது.

மாடியிலிருந்து யாரோ கீழிறங்கி வரும் அரவம் கேட்டது. தன்னை அழுத்தும் சோர்வைப் பிரயத்தனத், துடன் உதறி விட்டு, சாவித்ரி அடுப்பண்டை போய் அதில் கொதித்துக் கொண்டிருக்கும் சாதத்தைக் கரண்டியில் எடுத்துப் பதம் பார்க்கலானாள் ஊரில் சாதத்தைக் கண்ணால் பார்த்தே பதம் சொல்லிவிட முடியும். ஆனால் இந்த அரிசியைக் கையால் நசுக்கிப் பார்த்தால் கூட ஆளை ஏமாற்றிவிடுகிறது!

“அம்மா!”

சாவித்திரி திரும்பிப் பார்த்தாள். சிவராஜன் வாசற் படியை அடைத்துக்கொண்டு நின்றான். அவள் பிள்ளை களுக்குள்ளேயே அவன் தான் வாளிப்பு. அதுவும் இப்போ மாதிரி ஜிப்பாவையும் போட்டுக்கொண்டு சுவர் மாதிரி வெளிச்சத்தையும் மறைத்துக்கொண்டு நின்றுவிட்டால் ஒதுங்குடா என்று யாராலும் சொல்லாமல் இருக்க முடியாது.

“அம்மா!”

முகத்தில் கேள்வியோடு அம்மா தலை நிமிர்ந்தாள்.

“அம்மா! இதோ பார். நாங்கள் சிறிசுகள். எங்களை நீ விட்டுத்தான் பிடிக்க வேண்டும். நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ எங்கள் நடத்தை உனக்கு ஒரு சமயம் பிடித்திருக்கலாம். ஒரு சமயம் பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் எங்களை நீ விட்டுத்தான் பிடிக்கவேண்டும். உன் வயசில் நீயும் எங்கள் வயசில் நாங்களும் – இரண்டும் ஒன்றாய்ப் போய்விடுமா? நீ சிலவற்றைக் காதில் போட்டுக் கொள்ளாமலும் கண்ணில் கண்டுகொள்ளாமலும் இருந்தால் தான் நல்லது. என்னவோ நான் சொல்கிறதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்.

கூடைமண்ணைச் சாய்ப்பது போல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு ‘விர்’ரென்று சிவராஜன் மாடிக்குப் போய் விட்டான். சாவித்திரி கல்லால் அடித்தாற்போல் நின்றாள். திகைப்பு அவளைத் திணற அடித்தது.

முற்றத்தில் மரத்தொட்டியின் விளிம்பில் ஒரு சிட்டுக் குருவி உட்காந்து வெகு உற்சாகமாக அரட்டையடித்துக் கொண்டிருந்தது. உறங்கிக் கொண்டிருந்த பூனை ‘சரேல்’ எனப் பாய்ந்தது. அது படுத்திருந்ததற்கும் பாய்ந்ததற்கு மிடையில் இடைவேளை இருந்ததாகவே தெரியவில்லை. அதன் மின்வெட்டில் பூமியில் பாதங்கள் படாமல் அது பறந்த மாதிரியே இருந்தது.

‘கிறீச்!-‘

தொட்டி விளிம்பிலிருந்து எழும்பிய வேகத்தில் குருவி யின் சிறகுகள் பூனையின் முகத்திலேயே மோதின. அந்த அதிர்ச்சியில் பூனைக்குக் கழுத்து உள்வாங்கிற்று. குருவி வெந்நீர் அறையின் சுவர்க் கட்டைமேல் உட்கார்ந்து. கொண்டு ‘வளவள’ வெனப் பூனையைத் திட்டிற்று. அசடும் திகைப்பும் முகத்தில் வழியும் பூனை தன் வேகமும்: பொலிவும் இழந்து நின்றது.

சற்று நேரம் அல்லது எத்தனை நேரமோ கழித்துச் சிவராஜன் கீழே இறங்கி வருகையில், அவனுக்குச் சமையல் அறையில் நேர்ந்த சம்பவமே மறந்துவிட்டது. உள் நாக்குத் தெரிய வாயைத் திறந்து சிரித்துக் கொண்டே கீழிறங்கி வந்தான். ராஜி ஏதோ அவ்வளவு வேடிக்கையாய்ப் பேசி யிருந்தாள். ஆகையால் அந்தச் சமயத்தில் கொடிப் புடவையை இழுத்து மடித்து அம்மா பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவனுக்குத் ‘திக்’ கென்றது.

“என்னம்மா?”

அம்மா அவனைப் பார்க்கவில்லை. தன் காரியத்தில் முனைந்தபடியே, “ஊருக்குப் போகப் போறேன், இன்னி ராத்திரி வண்டிக்கு” என்றாள்.

“ஏன் அம்மா?”

“இப்போத்தான் நினைப்பு வந்தது -” அம்மா பெட்டி மூடியை முழங்காலால் அழுத்தித் தாழ்ப்பாளை வெற்றியுடன் போட்டாள் : “மந்தையிலிருந்து வந்த மாட்டை தறியில் கட்ட மறந்துட்டேன். அது மல்லிகைச் செடியை என்ன பண்ணிருக்கோ!”

சிவராஜனுக்குத் திகைப்பு இன்னும் அதிகரித்தது.

“என்ன அம்மா, பத்து நாள் கழித்து இப்போது நினைப்பு வந்தால்?”

சாவித்திரி வாய்விட்டுச் சிரித்து விட்டாள். “அட அசடே , ஊருக்குப் போறதுக்கு அது ஒரு சாக்குடா . மாட்டை கட்டாமல் விடுவேனாடா? வா வா , கிளம்பு; என்னை ரெயிலேத்தி விட்டுவிடு. இன்னும் பதினஞ்சு நிமிஷம்தான் இருக்கு ஊஹும். சாப்பிட நேரமில்லை. போற வழியிலே இரண்டு வாழைப்பழத்தை உரிச்சுப் போட்டுண்டாப் போறது. விடிஞ்சால் காபிக்கு ‘டான்’னு ஊர்-“

என்ன தடுத்தும் அவள் கேட்கவில்லை. ரெயிலில் ஏறி உட்கார்ந்த பிறகு சிவராஜனுக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை . குரலில் கண்ணீர் மல்க, “நான் ஏதாவது பதட்டமாகப் பேசியிருந்தாலும் நீ பாராட்டாதே, அம்மா!” என்றான்.

“அட போடா அசடே! உன்னோடே எனக்கு என்னடா கோபம்?” உண்மையிலேயே அவளுக்கு அப்போது கோபம் இல்லை. நான் அப்பாவைத் தனியே விட்டுவிட்டு இங்கேயே உட்காந்துண்டிருக்க முடியுமா?”

ரெயில் நகர ஆரம்பித்துவிட்டது. “உடம்பை ஜாக்கிரதையாய் பார்த்துக்கொ. ராஜியை வெள்ளிக் கிழமை மறக்காமல் எண்ணெய் தேய்ச்சுக்கச் சொல்லு-“

இரு மருங்கிலும் சுழன்று ஓடும் வயற்புறங்களிலிருந்து காற்று சில்லென்று முகத்தின் மேல் மோதுகையில் உண்மை யிலேயே சாவித்ரிக்கு ஏதோ அடைப்பிலிருந்து விடுதலை யானாற் போலிருந்தது.

அப்போதிலிருந்தே பிள்ளைகளிடம் தங்கி வாழும் சபலத்தை, எண்ணத்தையே சாவித்ரி விடுத்தாள். ஒரு. அநுபவமே போதும், ஒவ்வொரு பிள்ளையிடமாகப் போய் ஒவ்வொரு பரீக்ஷையாய்ப் பட மனம் மறுத்துவிட்டது.

ஆனால், தெரிந்தோ தெரியாமலோ சிவராஜன் ஒரு விஷயத்தில் உண்மையைத்தான் சொன்னான். அவர்கள் சிறியவர்கள். அவர்களின் காலமும் வழிகளுமே வேறு. இந்தக் காலத்துடன் ஒத்துப்போய் அவர்களை ஓடிப் பிடிப்பது என்பது இயலாத காரியம். அதனால் வயசானவர்கள் நாம் மூச்சுத் திணறி மார்பு வெடிக்காமல் இருக்கவேணுமானால் பின் தங்கி விடுவதுதான் நல்லது. நாம் எப்படியும் பின் தங்கித்தான் விடுவோம். நமக்கு மிஞ்சுகிறது நம் தனிமைதான். நம் தனிமை மாத்திரம் அல்ல, நாம் எந்த வழி வந்தோமோ அந்த வழியினுடைய தனிமையேதான். நாம் எந்த வழி வந்தோமோ அந்த வழி வந்து நம்முடைய ஸகாப்தத்தின் முடிவை அடைந்து விட்டோம். அதை அடைந்த பின் அதை விட்டுத் தப்பியோட முடியுமா? அதுதான் நம்மை விடுமா? நம்முடைய நிலைக்கு அதை ஏற்பதுதான் நல்லது.

இதோ இன்னொரு பிள்ளையை ஊருக்கு வழி அனுப்பி விட்டு வாசற்படியில் நிற்கையில் இந்தத் தனிப்பட்ட தனிமையை திக்கற்ற தனிமையைச் சாவித்திரி நடுமுதுகு சில்லிடச் சட்டென உணர்ந்தாள். இனி எப்பவோ? மறுபடியும் பார்க்கற போதுதான். பார்த்தவரைக்கும் லாபம். செல்லப்பாவுக்கு ராணுவத்தில், அதுவும் விமான நிலையத்தில் வேலை. யார் போனாலும் போகாவிட்டா லும் அவன் கண்டிப்பாய்ப் போயே தீரவேண்டும். ஆகையால் அவன் போய்விட்டான்.

சிவராஜன் மத்தியான வண்டிக்கே கிளம்பிவிட்டான். நேரே உத்தியோகத்துக்குப் போவதாய்ச் சொன்னாலும் அவன் அங்கே போகவில்லை என்று அவளுக்குத் தெரியும். போகும் வழியில் மாமனார் வீட்டில் இறங்கி ஒரு வாரமாவது ‘டேரா’ போட்டுவிட்டுத்தான் போவான்.

சிவராஜனுக்கு இன்னும் சந்ததி உண்டாகவில்லை. கல்யாணமாகி ஐந்தாறு வருஷங்களுக்கு மேலாகிவிட்டன. ராஜி ஏதோ ஒரு தினுசில் அவன் உயிர் நாடியையே பற்றியிருந்தாள். இந்த ஐந்தாறு வருஷங்களுக்குள் சிவராஜனுக்கு முன் மயிரிலும் பக்கவாட்டிலும் அலை நுரை போல் அடையாய் நரை ஓடியிருந்தது. கால வடுக்கள் தனித்தனியாய்த் தம் தம் இடங்களை முகத்தில் செதுக்கிக் கொண்டிருந்தன. பெற்ற வயிறு என்றதனாலோ என்னவோ, சிவராஜனுக்கு வருடங்களின் மூப்பு ஏற ஏற ராஜந்தான் அவன் இளமையை வாங்கிக் கொண்டு ப்ரகாசிப்பது போல் சாவித்ரிக்குத் தோன்றிற்று. இப்போது கூடத்தான் வந்திருந்தாளே , ராஜம் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் தான் இருந்தாள். ஒரு பருமனோ, இளைப்போ, நிறக் குறைவோ , கூந்தலில் குட்டையோ ஊஹும்! அந்தச் சிவப்புத்தான் என்ன சிவப்போ! எச்சில் முழுங்கினால் அது நெஞ்சுக்குள் இறங்கறது தெரியும்.

இன்னும் இரண்டு நாள் குழந்தைகளோடு சேர்ந்து இருந்து பழைய நாட்கள் போல் தன் கையாலேயே அவர்களுக்குச் சமைத்துப் போட்டு அவர்கள், “பேஷ் பேஷ்! அம்மாதான் சாப்பிடாவிட்டாலும் வெங்காய சாம்பார் எவ்வளவு ஜோராய்ப் பண்ணுகிறாள்!” என்று நாக்கைக் கொட்டிக் கொண்டு தொண்டை வரையில் வாயுள் கையை விட்டுக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து மகிழவேண்டுமென்று தான் அவளுக்கு ஆசை. ஆனால் எது கேட்கிறது? திக்குக்கு ஒன்றாய் அது அது புறப்பட்டுக் கொண்டிருக்கிறதே! பெற்ற நாலும் நாலு –

திடீரென்று சாவித்ரிக்குக் கண்கள் இருண்டன. தலை ‘கிர்’ரிட்டது. வாசற்கதவின் கம்பிகளைப் பிடித்தபடி சரிந்தாற்போல் வாசல் படிக்கட்டின் மேல் உட்கார்ந்தாள். இருள் வளையங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாய்ப் புறப்பட்டு ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டு அவளை வளைத்துப் பின்னிக் கொண்டன. கருமேகங்கள் திடீரெனப் பந்து பந்தாய்க் கக்கிக் கொண்டு வந்து அவள் மேல் கவிந்தன.

“நொய்ங் – ங் … ங்ங்ங்”

குளவியின் ரீங்காரம் போல் எஃகுத் தந்தி நாதத்தினும் ஸன்னமான ஒரு சப்தம் அந்த இருள் பந்துகளிலிருந்து கிளம்பி மடமடவென வீங்கிச் சமுத்ரகோஷமாய்க் காதண்டை இரைந்தது. அந்தப் பேரிரைச்சலிலிருந்து இரு சப்தங்கள் மாத்திரம் பிரிந்து வந்து மோதின.

“ஜம்பூ! ஜம்பூ!”

“அம்மா! அம்மா!”

சாவித்ரி இரு செவிகளையும் பொத்திக் கண்ணை இறுக மூடிக்கொண்டாள். இமைத் திரையில் ஒரே ஜனப்ரளயம் பெருகிற்று. மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவம். மாட வீதித் திருப்பத்தில் நெரிந்த கூட்டத்தில் அவளும் ஜம்புவும் அகப்பட்டுக் கொண்டு விட்டனர். அலை மாதிரி இன்னொரு பெரும் ஜனத்திரள் அவர்கள் மேல் மோதிற்று. அவள் பிடியிலிருந்து குழந்தையின் கைப்பிடி பிய்த்துக் கொண்டு பிரிந்து போய்க்கொண்டே யிருக்கும் அவஸ்தையை அவள் அப்போது அநுபவித்துக் கொண்டிருந்தாள்.

“ஐயோ, என் குழந்தை!-“

“அம்மா! அம் -“

இன்னொரு ஜன அலை வெகு வேகமாய்ப் புரண்டு வந்து ஜம்புவை அடித்துக்கொண்டு போய்விட்டது. குழந்தை முகங்கூடக் காண முடியவில்லை. அதற்குள் பல்லாயிரம் தலைகள் இடைமடுத்து விட்டன.

“ஜம்பூ – ஊ – ஊ!”

திடீரென இமைத்திரையின் படம் சட்டென அறுந்து திரை பளிச்சிட்டது. ஜனசமுத்ரத்தின் கோஷம் சட்டென ஓய்ந்தது.

சாவித்ரி மெதுவாய்க் கண்களைத் திறந்தாள். முகத்தில் ஸ்நானமாய்க் கொட்டியிருந்த வேர்வையை முன்றானையால் துடைத்துக் கொண்டாள். வெகு தூரத்தி லிருந்து ஓடி வந்தாற்போல் மூச்சு இரைத்தது. பிரிந்து வந்து நெற்றிப்பொட்டில் காற்றாடும் இரண்டு மயிரைக் – காதோரம் அடக்கினாள்.

தெருவில் ஒருவரும் இல்லை. வாசல் லாந்தர் கம்பம் மாத்திரம் தன்னடக்கமான வெளிச்சத்தைத் தெருவில் தெளித்துக்கொண்டு, அவள் சுமார் முப்பத்தைந்து வருஷங் களுக்கு முன்னால் நேர்ந்த நனவை இப்பொழுது. கனவாய்க் கண்டு கொண்டிருப்பதற்கு மௌன சாக்ஷியாய் நின்று கொண்டிருந்தது.

பட்டணத்தையே சல்லடை போட்டுச் சலித்தாகி விட்டது. வீடுவீடாய்ப் படியேறிப் பார்த்தாகிவிட்டது. ஊரில் தேடாத போலீஸ் ஸ்டேஷன், குளம், சத்திரம், ஆஸ்பத்திரி பாக்கி இல்லை. பத்திரிகைகளில் விளம்பரம் செய்து ஆகிவிட்டது. மனித யத்தனத்தில் செய்வதில் பாக்கி ஒன்றும் இல்லை. அன்று அவன் மாதிரி எத்தனை பேருக்குக் குழந்தை கெட்டுப் போயிருக்கும்? அவர்களுக்கு எல்லாம் அகப்படவில்லையா? ஆனால் அவளுக்கு மாத்திரம் அவன் குழந்தையின் சுவடு கூடப் பிடிபட வில்லை.

அன்றைத் தினம் அவளை வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பதற்குள் நாலு ஆண்பிள்ளைகள் சேர்ந்து கட்டிப்பிடிக்க முடியவில்லை. தாய்மை தவிக்கையில் அதற்குத்தான் என்ன அசுர பலம் வந்து விடுகிறது! ஓர் அறையுள் தள்ளிக் கதவை வெளியில் பூட்டி விட்டார்கள்.

“ஜம்பூ! ஜம்பூ ! ஐயோ! என்னை வெளியே விட்டுடுங் களேன் ! ஜம்பூ! ஜம்பூ ! ஜம்பூ!”

அந்த ஒரே அலறல் தான்.

ஜன்னல் பக்கமாய் யாராவது எதையாவது நீட்டினால் தட்டோ தம்ளரோ யாரென்று பார்க்காது வீசி எறிவாள். சுவரிலும் ஜன்னல் கம்பிகளிலும் மண்டையை மோதிக் கொள்வாள். நெற்றி புடைத்துக் கொண்டு ரத்தம் கசிவது கூட அவள் அறிவாள். சமுத்திரம் பற்றிக்கொண்டு விட்ட பின் அதை அணைப்பது யார்? அதுவாக அணைந்தால் தான் உண்டு.

நாலு நாட்கள் சேர்ந்தாற்போல் அன்ன ஆகாரம் ஜலபானம் இல்லை. வெறி உடலைச் சூறையாடிவிட்டது. அலறி அலறித் தொண்டை கம்மிப்போய்க் குரல் உள்ளுக்கு இழுத்துக்கொண்டது. மூர்ச்சையானாள்.

நினைவு கூடுகையில் சுற்றி இருட்டியிருந்தது. யாரோ அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு குழந்தைக்குப் புகட்டுவது போல் வாயுள் ஏதோ ஆகாரத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். அந்த உப்பும் புளிப்பும் நாக்கைப் பிடிக்கையில், அந்த இதமான குளுமை திரிபோல் வயிற்றுள். இறங்குகையில் அது உயிர் கொடுக்கும் மோர் என்று உணர்ந்தாள். கண்ணை மலர்த்திப் பார்க்கையில் தன்னைத் தாங்கிக்கொண்டிருப்பவர் தன் கணவர் என்று கண்டாள். உடனே பழைய நெருப்புத் துடித்துப் பற்றிக் கொண்டு குதித்து எழுந்தது.

“ஜம்பூ! ஜம்பூ! நம்ப ஜம்பூ?”

அவர் உடல் வெடவெடவென உதறிற்று. அவள் பிடரியில் இரண்டு துளிகள் விழுந்தன. முழுகிப் போய்க் கொண்டிருப்பவள் பிடியில் அவரைக் கட்டிக்கொண்டாள்.

இனிமேல் ஜம்பூ இல்லை. அன்றைக்குத் தலைவாரிப் புதுச் சொக்காயும் ட்ராயரும் போட்டுக் குழந்தை ஆசைப்பட்டானே என்று கண்ணுக்கு மையிட்டுக் கையைப் பிடிச்சுண்டு எல்லோரோடும் உற்சவத்துக்குக் கிளம்பி னோமே, அன்றோடு ஜம்பு சரி. இனிமேல் ஜம்பு இல்லை.

இல்லை. அப்படிச் சொல்வதும் தப்பு ஜம்பு இருந்து கொண்டே இல்லை. இல்லாமலே இருந்து கொண்டிருக் கிறான். நிஜமாகவே குழந்தை எங்கேயாவது வளர்ந்து கொண்டிருக்கானோ. இல்லாவிட்டால்- இல்லா விட்டால்?-

நெஞ்சு நினைத்தாலும் அந்த நினைப்பின் வார்த்தைகள் நாக்கு நுனியில் உருவாகித் தங்குகிறபோது, இதோ வாய்க்குள்ளேயே நாக்குக் கூசித் துடிக்கிறது.

வயிற்றிலே ஜ்வாலை கொழுந்து விட்டுக்கொண்டு கிளம்புகிறது.

இருந்தால் என்ன? நட்டதெல்லாம் பயிராகிவிடறதா? எல்லாத் தாயாருமே தாம் பெற்ற குழந்தை கைக் கொள்ளியை வாங்கிக் கொள்கிறார்களா? அதைவிட அக்கிரமங்கூட இருக்கு. இதோ கிராமத்திலே சீதா மாமி இருந்தாள். ஒரே பிள்ளை. தூரதேசத்திலே பிள்ளைக்கு உத்தியோகமென்று அவனோடே போய் மூணாவது மாசம் ஒண்டியாக வெறுங்கையை வீசிக் கொண்டு வந்து விட்டாள். பிள்ளை செத்துத்தான் போய்விட்டான் என்றாலும் வேறே ஆண் பிள்ளைத் துணையில்லாமல் தானே மயானம் போய், தான் பெற்ற பிள்ளைக்குத் தானே தன் கையாலேயே கொள்ளியிடும்படி ஆகிவிட்டது. கொள்ளியென்ன கொள்ளி, பெற்ற வயிற்றுச் சதையை ஒரு கொத்துப் பிடுங்கிப் போட்டாலும் பற்றிக் கொள்ளும்.

ஆனால் அந்த மாதிரி சோகங்களிலிருந்து மீட்சியிருக் கிறதோ இல்லையோ, அவற்றிற்கு ஒரு தீர்மானம் உண்டு, போனவன் இனிமேல் திரும்பி வரமாட்டானென்று. இது மாதிரி என் ஜம்பு இருக்கிறானோ – இல்லையோ? இருக்கிறானோ? வருவானோ – மாட்டானோ? என்று வேகாமலே வெந்து கொண்டு சாகாமலே செத்துக் கொண்டு இருக்கிற கோரம் கிடையாது மரத்திலே பாய்ந்த கோடாலியை எடுக்காமலே மரம் மேலே வளர்ந்து மூடிவிட்ட மாதிரி, இதைக் கடைசியில் தன்னையும் சிதையில் அடுக்கும் வரைத் தாங்கித் தகித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

செத்துப்போய் யமதர்மராஜன் உயிரை இழுத்துக் கொண்டு போகிற போது, அவனை எப்படியும் ஒரு வரம் மறக்காமல் கேட்கணும்: “அப்பா, பெரிய மனசு பண்ணி என்னை ஒரு நிமிஷம் அம்பாள் சந்நிதானத்துக்கு அழைச் சுண்டு போ” என்று. அப்படி அவன் தன்னைக் கொண்டு போய் சந்நிதானத்தில் விட்டால் அம்பாளை அவசியம் ஒரு கேள்வி கேட்டாகணும்: “ஏண்டி அம்மா? ஆனைக் காவலில் அகிலாண்டேசுவரியாய் எழுந்தருளியிருக்கும் உலகத்தாயே! இந்தக் குழந்தை எனக்குப் பிறக்கிறதற்கு முன்னாலே இரண்டு தங்கவில்லையென்று உன் வயிற்றைக் குளிர்விக்க , கற்பாந்த காலமாய் உன் காலடியிலே ஊறிண்டுருக்கிற ஜலம் போதாதுன்னு , தினம் கிழக்குப் பூக்கிறதுக்கு முன்னாலே எழுந்திருந்து ஆத்திலிருந்து ரெண்டு மைல் அகண்ட காவிரிக்கு நடந்து ஸ்நானம் பண்ணிவிட்டு அப்படியே பற்றின மஞ்சளும் ஈரப்புடவையு மாய் ஒரு தவலை ஜலம் இடுப்பில் தாங்கி வந்து உனக்கு அபிஷேகத்துக்கு ஒரு மண்டலம் கொண்டு வந்து வெச்சேனே! இந்தக் குழந்தையை இப்படிப் பிடுங்கிக் கொள்ள வேணும்னுதான் அப்போ அப்படிக் கொடுத்தையா?”

பிறகு வெகு நாட்களுக்கு அவளைக் காலைக் கடன் களுக்குக் கூடத் தனியாய் விடாமல் அடைகாத்து வந்தார்கள். சில வார்த்தைகளின் சப்தங்கள் கூட அவளுக்கு ஆகாமல் இருந்த நாட்கள் உண்டு. ஜம்பு நாவல் பழத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு தரம் உயிராய் விரும்பி னாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு கண்ணால் காணக் கூடச் சகிக்க முடியவில்லை . ‘ஜம், ஜம்பம் ஜமாய்’ இம்மாதிரி வார்த்தைகள் பேச்சு வழியில் ப்ரயோகம் ஆகி விழும் ஒலிகள் கூட ஜம்புவின் பேரை நினைவூட்டி விடும். பசி, தாகம், பொழுது, அடையாளம் எதுவுமே உணர முடியாத நீண்ட சிந்தனையில் அவ்வொலிகள் ஆழ்த்தி விடும்.

ஆனால் ஜம்புகேசுவரத்தில் ஜம்புநாதனை விட்டு , அகிலாண்டேசுவரியை மாத்திரம் தனியாய்த் தரிசிக்க முடியுமா?

இப்போது கூடச் சில சமயங்களில் ஸந்நிதானத்தில் நிற்கையில் கண்ணெதிரில் துரிஞ்சில் பறந்தாற்போல், மனசுக்குள்ளே ஏதோ நிழல் தட்டி மறையும். அப்போது என்னவென்று புரியாவிட்டாலும் இந்த நிமிஷத்திலே தோன்றுகிறது ஜம்பு என்கிற எண்ணத்தின் இறக்கை தானோ அது?

எப்படி இருந்தால் என்ன? பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு விட்டாலும், அவள் கொடுத்தாள், அவள் எடுத்துக் கொள்கிறாள். புருஷனையாவது இதுவரையில் தன்னோடு விட்டு வைத்திருக்கிறாளே , அதற்காவது அவளைத் தினம் வணங்கியாக வேண்டாமா? தினம் அகண்டத்தில் நெய்த்திரி போடவேண்டாமா?

கஷ்டத்தைப் பெண்கள் ஒரு தினுசாய் அனுபவிக் கிறார்களென்றால், புருஷர்கள் அதைத் தாங்குகிறது இன்னொரு தினுசாய் இருக்கிறது. பெண்களை மனக் கஷ்டம் வெளிப்படையாய் எரித்தால், புருஷர்களை அது ஸ்புடம் போட்டுத் தின்கிறது. அன்றையிலிருந்தே அவர் உள்ளூற ஒடிந்துவிட்டாரென்று சொல்லலாம். நாள் ஆக ஆக, அவர் உடம்பு தேயத் தேயத்தான் அந்த உள் ஒடிப்புத் தெரிகிறது. இத்தனைக்கும் அவர் அந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறது கூட இல்லை. ஆனால் அதுதான் அவரைக் கவ்விக்கொண்டிருந்தது. அவர் உடம்பின் கோளாறே அதனால் தான்; அதுவேதான்.

தம் ஆண்மையை எந்தத் கஷ்டத்திற்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது. தாம் எதையுமே சட்டை செய்யக் கூடாது என்கிற வீறாப்புத்தான் இருந்ததே தவிர, தாங்குவதற்கு வேண்டிய பலம் இல்லை.

அதனால் அவருடைய சிறு சிறு கோபங்களும் சீண்டல் களும் பல சமயங்களில் பொறுக்க முடியாதனவாகவே இருக்கும். ஆனாலும் வெயிலோ குளிரோ, மழையோ இடியோ சேர்ந்து இருந்து இருவரும் இவ்வளவு தூரம் கூடவே வந்துவிட்டோம். கலி முற்ற முற்ற ஆயுசு நிலவரங்கள் இருக்கிற இருப்பைப் பார்த்தால் இதையே பெரிதாய்த்தான் நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம் குழந்தைகள் ஒற்றுமையோ வேற்றுமையோ அவர் அவர்கள் இருக்கிற இடத்தில் சுகமாயிருக்கிறார்கள்” என்கிற செய்தி கேட்டுக் கொண்டிருக்கும்போதே நாம் கண் மூடிவிட்டால் போதும்.

இனி என்ன பாக்கி? ‘எனக்கு நீங்கள்’, ‘உங்களுக்கு. நான்’ என்று இருவர் தாம் பாக்கி. இந்த இரண்டிலே யார் முந்தி, யார் பிந்தி என்கிறதுதான் பாக்கி.

உள்ளேயிருந்து பஞ்சாமியின் குரல் கூவிற்று . “அம்மா சாஸ்திரிகள் கூப்பிடுகிறார். ஒளபாசனத்துக்கு நேரமாகிவிட்டது.”

இந்தச் சமயத்தில் நல்லது பொல்லாதது எல்லா வற்றையுந்தான் சேர்த்து இந்த மனசு எண்ணுகிறது; ஆடிப்பெருக்கில் மட்டை, செத்தை, குப்பை கூளம் எல்லாம் அடித்துக்கொண்டு வருவதுபோல.

அவர் போய் விட்டாரென்றால் அப்போதும் அவளைச் சுற்றித்தான் எல்லோரும் அடித்து வீழ்வார்கள், “அடி பாவி! இதுவரை இருந்தாயே; போதாதா? மஞ்சளும் குங்குமமும் மணக்க நீ போகக்கூடாதா? கொடுத்து வைக்காத கொடும்பாவி, கொடும்பாவி!” என்று தூற்றுவார்கள். வாஸ்தவந்தான், அவள் முந்திக்கொண் டால் அவள்வரை மணந்தான். ஆனால் அப்புறம் அவர் கதி என்ன ஆகிறது?

அவள் மாமியார் உயிரோடு இருக்கையில் சில சமயங் களில் வேடிக்கையாய், குத்தலுக்குக் குத்தலாய்ச் சொல்வதுண்டு; அவர் கொஞ்சம் இலக்கணமாயும் பேசுவார் : “ஒரு பிள்ளையைப் பெற்றவளுக்கு உறியிலே சோறு. நாலு பிள்ளையைப் பெற்றவளுக்கு நடுத் தெருவிலே சோறு. அதனால் கோயில், குளம், கதாகாலக்ஷேபமென்று போய்விட்டு நான் தைரியமாய் நேரங்கழித்து வீடு திரும்பலாம், எப்படியும் கண்டிப்பாய் எனக்கு உறியிலே சோறு வைத்திருக்கும், நான் எடுத்துப் போட்டுக்கொண்டு தின்ன” என்பார்.

‘அது மாதிரி இவரைத் தவிக்க விட்டு விட்டு நான் மாத்திரம் மறைஞ்சுட்டால் இவரைக் கவனிக்கிற பொறுப்பு யாருடையது? பல் தேய்க்க வெந்நீர் எடுத்து வைக்கறதிலிருந்து ராத்திரி படுக்கிறதற்கு முன்னாலே மாத்திரையைக் கையிலே கொடுக்கிறவரை நானே தானே கவனிக்கிறேன்? மன்னன் இந்தத் துரும்பை எடுத்து அந்தப் பக்கம் வைக்க மாட்டாரே! சில சமயங்களில் குழந்தைக்குப் போடுகிறது போல், சாதத்தைப் பிசைந்து கையில் கூடப் போட்டிருக்கேனே!

‘இதிலேயிருந்து ஒண்ணு தெரியறது. மஞ்சள், குங்குமம், சரடு, பிறத்தியார் அபிப்ராயங்கள், சுகம், துக்கம், பிள்ளைப்பாசம், புருஷன் பெண்டாட்டி உறவு இந்த எல்லாத்தையும் மீறி விசுவாசமென்று ஒண்ணு இருக்கிறது. எல்லாரும் சத்தியம்னு கொண்டாடறாளே , அதுதானோ அது?

‘ஆனால் அது எதுவாயிருந்தால் என்ன? இனி நடக்கப் போகிறதை யார் கண்டது? யார் கையிலே இருக்கிறது?’

“அடே பஞ்சாமி, உன் அம்மாவைக் கையைப் பிடித்து இழுத்து வாடா! அவளே செவிடாகி விட்டாள். வயசாகி விட்டதோன்னா?” என்று அவள் கணவர் உள்ளே கர்ஜிப்பது கேட்டது.

பெருமூச்செறிந்தபடி சாவித்ரி உள்ளே சென்றாள்.

– பச்சைக்கனவு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *