சாருபாலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 2,546 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிலைக்கண்ணாடியின் முன் நின்று கொண்டிருந்தாள் சாருபாலா. அவளுக்கு நாற்பது வயசு முடிந்திருந்தும், கண்ணாடியில் . தெரிந்த உருவம் இன்னும் பத்து வருஷங்கள் குறைவாகவே மதிப்பிடும். படி இருந்தது. தன் இடது கையை மடக்கி இடுப்பிலே குத்திட்டும், வலது கரத்தைத் தொங்கவிட்டும் அவள் நின்ற மாதிரி, நாட்டியக் கலையில் அவளுக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்தியது. ஒரு கணம். தன்னையே அங்கம் அங்கமாய் ஆராய்ந்தாள். கீழே சாய்த்த பார்வை’ யைத் தனது மார்பகத்தின் மேல் செலுத்தினாள். ஒரு முறை கண்ணாடியில் ஒய்யாரமாய் நிற்கும் வடிவைக் கண்டு மன எழுச்சியில் லயித்தாள். தலையைக் குனிந்து தன்னையே இரண்டாம் தடவை கவனித்துக்கொண்டாள். ஓர் இழைகூட வெளுக்காத அவள் கேசம், தைலமிட்டுப் படிய வாரப்பட்டு, கோடிட்ட வகிட்டின் இருபக்கமும் கறுத்து மின்னியது. அதைப் பார்த்தால், எதனால் புது நாகரிகத்தில் திளைக்கும் பெண்கள் சிறிதும் அழகின்றி மயிரை வாராமல் பிரித்து விட்டுக்கொள்ளுகிறார்கள் என்றே வியக்க வேண்டி இருந்தது. மேலும், நூல் பிடித்தாற்போல வகிடு எடுப்பதன் முழுத் தத்துவமும் கலையுணர்ச்சி மலிந்தவர்களுக்கு ஓர் விருந்தாகவே விளக்கம் தரும்படியாகச் சாருபாலாவின் தலையின் வட்டம் பொருத்தமாய் அமைந்திருந்தது.

அப்படியே அவள் அதிக நேரம் காட்சி தர இயலாததற்குக் காரணம். அவள் இருந்த அறையினுள் யாரோ நுழைந்த காலடிச் சப்தமேதான். அரவம் கேட்டுத் திரும்பியவள், குழியிட்ட கன்னங்களுடன், “வாத்தியார் ஐயாவா? வாருங்கள். ஏது இவ்வேளைக்கு?” என்று, உள்ளே வந்த ஒரு கிழவரை மிக்க மரியாதையுடனே வரவேற்றாள்.

எல்லாம் காரியமாகத்தான். உன்னாலே ஆகவேண்டும்!” என்று நட்டுவனார் மாரியப்பபிள்ளை சொல்லியவாறே தமக்காக அளிக்கப்பட்ட ஆசனமொன்றில் உட்கார முன் வந்தார்.

மாரியப்ப பிள்ளைக்கு வயசு சுமார் எழுபது இருக்கும். அவர் நெற்றி யில் விபூதியை அப்பியிருந்ததால் புருவங்களின் நரையை நிர்ணயிக்க முடியவில்லை. தலை தும்பைப் பூவாய் வெளுத்திருந்தது; அது அவருக்குக் கண்யமான தோற்றத்தை அளித்திருந்தது. நெற்றி நடுவிலுள்ள பெரிய குங்குமப் பொட்டைப் பார்த்தால் கோவிலிலிருந்து நேரே திரும்பியவ ரென்று பட்டது.

ஆசனத்தில் அவர் அமருவதற்குள், ‘தாத்தா, தாத்தா’ என்று ஒரு கீச்சுக்குரல் அடுத்த அறையிலிருந்து கேட்டது. கிழவருடைய முகம் மலர்ந்தது. குரலைத் தொடர்ந்து, எட்டு வயசுக்குள் இருக்கும் ஒரு சிறுமி அவ்விடம் ஓடோடியும் வந்து, அவர் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு, “தாத்தா, நீ எப்போ வந்தே?” என்று கொஞ்சினாள்.

“என்னைக் கண்டால் எத்தனை குஷி பார்த்தாயா பரிமளாவுக்கு?” என்றார் மாரியப்பபிள்ளை, சாருபாலாவின் பக்கம் திரும்பி.

அதற்குள், “பரிமளா, போ அம்மா உள்ளே. பாடம் படி. வாத்தி யார் கொடுத்த கணக்கைப் போடு. அப்புறம் தாத்தாகிட்டே வரலாம்” – என்றாள் சாருபாலா. அவள் குரலில் சிறிது கடுகடுப்புத் தொனித்தது.

கிழவரின் வலக் கையைத் தன் சிறு கரங்களால் சேர்த்துப் பிடித் திருந்த பரிமளாவின் உள்ளம் தளர்ந்தது. தானாகவே பிடியும் தளர்ந்தது. வாட்டமடைந்த முகத்துடன் அவள், “தாத்தா, நான் சட்னு வந்தூடறேன். வரத்துக்குள்ளே நீ போகப்படாது. தெரியுமா?” என்று தீராத வருத்தத்துடன் அவரிடம் தனக்குள்ள சலுகையைக் காட்டினாள்.

அவளைக் கிழவர் அப்படியே கைகளால் வாரித் தூக்கிக்கொண்டார்; சிறிது சிரிப்புக் கலந்து பேசவும் பேசினார்: “நான் போகவில்லையடா, கண்ணா! கணக்கும் போடவேண்டாம், ஒன்றும் நீ செய்யவேண்டாம். இங்கேயே என்னோடு இரு” என்றார். உடனே சாருபாலாவைப் பார்த்து, “சாரு, என்னம்மா இத்தனை சின்னக் குழந்தைக்குச் சதா கணக்கும் பாடமும்? ஆட்டமும் பாட்டுமாக அதன் மனசைச் சந்தோஷமாக வைத்துக்கொள்கிறதா? இல்லை, இப்போதே மனசு ஒடிந்து போகிறதா? உன்னைச் சின்னப் பொழுதிலே யார் இப்படியெல்லாம் கசக்கினார்களாம்?” என்று மனங்கசந்து சொன்னார்.

சாருபாலா பெருமூச்செறிந்தாள். நட்டுவனாரிடம் தனக்குள்ள முழு உரிமையுடனும் சொன்னாள்: “என்ன இது? அதன் எதிரே ஏதுக்கு இதெல்லாம் சொல்றீங்க? ஏற்கனவே, சொன்னதைத் துளிக்கூட அது கேட்கிறதே இல்லை! நீங்க வேறே அதுக்கு எதிரே படிப்பு வேண்டா மென்று சொல்லிவிடுங்கள். அது வாத்தியாரை ஏமாற்றிக்கொண்டு திரிகிறது. இனிமேல் ஜாஸ்தி ஆகிவிடும் அதற்கு; அவ்வளவுதான். செல்லங் கொடுத்துக் கொடுத்துத்தான் கெட்டுவிட்டது” என்று பின்னும் கடுமை தொனிக்கும் குரலில் பேசினாள்.

இதனிடையில் பரிமளா மாரியப்ப பிள்ளையின் தோள் பக்கம் திரும்பி, அவர் குடுமியில் செருகியிருந்த மல்லிகைப்பூவை எடுத்துக் கொண்டே, “ஏன் தாத்தா, கோவிலுக்கா போனே?.என்னை அழைச்சிண்டு போறேன்னையோன்னோ? போ, நீ ஏமாத்தறே!” என்று துக்கத்துடன் சொல்லித் தன் தலையை அவர் தோளின் மேல் சாய்த்தாள்.

கிழவர் அவள் முதுகைத் தம் கையால் தடவிக் கொடுத்துக் கொண்டே சமாதானப்படுத்தினார். “நிச்சயமாக நாளைக்கு அழைத்துக் கொண்டு போகிறேன். ஆனால் சமர்த்தாக அம்மா சொன்னதைக் கேட்க – வேண்டும். கேட்கவில்லை; அழைத்துக்கொண்டே போகமாட்டேன்!” என்று பயமுறுத்திக்கொண்டே குழந்தையைக் கீழே இறக்கிவிட்டார்.

பரிமளா தன் வலக்கை ஆள்காட்டி விரலினால் அடுத்த விரலைச் சுற்றிச்சுற்றி வைக்கப் பாடுபட்டுக்கொண்டே, “ஏன் தாத்தா, இதானே கிளி?” என்று அவரிடம் தன் இரண்டு விரல்களையும் காட்டினாள்.

மாரியப்ப பிள்ளையின் கிழ முகத்தில் ஒளி படர்ந்தது. சிறுமியைத் தம் பக்கம் இழுத்துக்கொண்டே, “என்ன அழகு அம்மா, உன் பிஞ்சுக் கைக்குத்தான்! கிளி கொஞ்சுகிறது உன் விரலிலே! இதோ பார். உங்கள் அம்மா கிடக்கிறாள்! நான் உனக்கு நாட்டியம் சொல்லி வைக்கிறேன். நீ எல்லாம் செய்யலாம். பயப்படாதே! வருகிற விஜயதசமிக்குப் பாரேன், உனக்குப் பாடம் ஆரம்பித்துவிடுகிறேன்” என்றார் தனியான மன எழுச்சியுடன்.

சாருபாலா சட்டெனக் குறுக்கிட்டாள்: “ஐயோ, போதுமே என்னுடைய இந்த நாட்டியமும் கூத்தும்! அதற்கு ஒன்றும் இதெல்லாம் வேண்டியதில்லை. நன்றாகப் படித்துப் பாஸ் பண்ணி, எங்கேயாவது நல்ல இடத்திலே கல்யாணமாகிக் குடித்தனம் பண்ணட்டும். நீங்கள் விளையாட்டாகக்கூட இப்படிப் பேசாதீர்கள். என்னோடு இதெல்லாம் முடிந்துவிட வேண்டுமாக்கும்!” என்று திரும்பவும் அதிருப்தி நிறைந்த வார்த்தை களைச் சொல்லிவிட்டு, பரிமளாவை வேகமாக அடுத்த அறைக்குள் போகும்படி தன் கையாலேயே பிடித்தும் தள்ளினாள். பாவம்! குழந்தை கிளி முத்திரையைக் கிழவருக்கு மறுபடியும் காட்டிவிட்டு, தன் ஆசை விழியின் மூலம் அவருக்குச் செய்தி சொல்லிக்கொண்டே அப்புறம் சென்றாள்.

மாரியப்ப பிள்ளைக்கு உண்மையிலேயே வருத்தம் ஏற்பட்டது. பழுக்காய்த் தட்டில் வைத்திருந்த வெற்றிலை பாக்கைத் தம் சமீபம் தள்ளிக் கொண்டார். பாக்குவெட்டியினால் சீவல் சீவிக்கொண்டே, சாருபாலாவை ஒரு தடவை கூர்ந்து கவனித்தார். அவளும் நேரே அவரைப் பார்க்கத் தயங்கியவளாய் இமைகளைக் கீழே சாய்த்தாள்.

கிழவர், “உம், என்னம்மா சலித்துக்கொள்கிறாய்? நாட்டியமாடி என்னத்தையெல்லாம் இழந்துவிட்டாய்? புரியவில்லையே! தஞ்சாவூர் ஜில்லாவிலே மாரியப்பபிள்ளைக்கு ஒரு தனி மதிப்பு இருக்கிறதென்றால் அது யாராலே? உனக்கா தெரியாது? என்னவோ சும்மா அளக்கிறாய்! இந்தப் புதுச் சிநேகிதம் ஏற்பட்டதிலிருந்து தான் உன்னிடம் இத்தனையும் மாறுதல். நீ இப்படிக் கலையைப் பழிப்பாய் என்று சொப்பனத்திலே கூட நான் எண்ணவில்லை!” என்றார். நிஜமான ஏக்கம் அவர் தொண்டையில் வெளிப்பட்டது.

“இந்தாருங்கள், கும்பிடுகிறேன், நூறு தடவை. புதுச் சிநேகம், புதுச் சிநேகம் என்று குத்திக் குத்திக் காட்டாதீர்கள். அவர்கள் என்ன, பரிமளாவை நாட்டியமாட வேண்டாம் என்று சொல்கிறார்களா? நான் அல்லவா அன்றையிலிருந்தே சொல்லிக்கொண்டு கிடக்கிறேன்? அவர்கள் தலையிலே பழியை ஏற்றாதீர்கள். எனக்குத் தான் வரவர இந்தப் பரதேசிப் பயல்களுக்காக, பாடுபட்டுச் சம்பாதித்த அற்புதக் கலையை விநியோகம் பண்ண மனசு வரவில்லை! வெறுமனேயாவது அவர்களைச் சொல்லாதீர்கள். அவர்கள் தாம் எத்தனை மரியாதை காட்டுகிறார்கள் உங்களுக்கு?”

சாருபாலா உணர்ச்சி ததும்பப் பேசிவிட்டாள். மாரியப்பபிள்ளை எதனால் அவ்வளவு தூரம் அவள் சுந்தர மூப்பனாரிடம் பரிவு காட்டுகிறாள் என்பதை உணராமல் இருக்கவில்லை. தாம் சொன்ன வார்த்தைகளின் உட்பொருளை நன்றாகவே சாருபாலா வாங்கிக் கொண்டு பேசினாள் என்பதை அவருடைய சூட்சும புத்தியா அறியாது?

சிறிது காலமாய், சுந்தர மூப்பனாருடைய சிநேகம் சாருபாலாவுக்கு இருந்துவந்தது. அவ்விதப் புதிய சிநேகத்துக்கு மூலகாரணம் தாமே என்பதை அவர் அறிவார். சிக்கில் கோவிலில் டிரஸ்டி ஹோதாவில் ஒரு சமயம் மூப்பனார் சதிர்க்கச்சேரி ஏற்பாடு செய்ய மாரியப்பபிள்ளையை அணுகினார். சாருபாலாவின் நடனம் ஏற்பாடானதற்குப் பிள்ளை தாம் காரணம். பிரமாத நாட்டியம் அன்று நிகழ்ந்தது. மாரியப்பபிள்ளைக் கும் வேண்டிய சௌகரியங்களைச் செய்து வைத்தார் மூப்பனார். நாட்டியம் இரவு நடு நிசிவரையிலும் தொடர்ந்தது. ஒரு மணிக்கு முடிவு அடைந்தது. ஆனால் மூப்பனாருக்கு, எல்லாம் புதிய அனுபவமாய்த் தோன்றியது. சாருபாலாவின் மேல் வைத்த கண்களை எடுக்கவே இல்லை. பிற்பாடு சிறிது சிறிதாய் அவளிடம் பழக்கமும் வைத்துக்கொண்டார். அவளுடைய நடனக் கலையில் அவருக்கு எவ்வளவு வரையில் பிணைப்பு என்பதை நிர்ணயிக்க முடியவில்லை. சாருபாலாவின் இருதயத்தில் மூப்பனாருக்கு இடம் கிடைத்ததை மாரியப்பபிள்ளை முதலில் வெறுக்கவில்லை. ஆனால் சாருபாலாவின் மனசு வரவர நாட்டியத்தில் திளைக்காததைக் கண்டு அதற்குக் காரணம் மூப்பனாரின் பரிசயந்தான் என்று அறிந்து அவர் மனம் வெகுண்டது. சாருபாலாவும் நாட்டியக்காரியாய் வாழ்க். கையை நடத்துவதில் சிறிது அலுப்பு எய்தினாள். சமூகத்தில் கௌரவம் கிடைப்பதற்குத் தன் தொழில் தடை செய்வதாய் நம்பினாள். எப்படியும் தன் மகள் பரிமளாவைப் படிக்க வைத்து, தக்க இளைஞனுக்குக் கட்டிக் கொடுத்து, சீக்கிரமே வாழ்க்கையில் வேறு பாதையைப் பிடிக்கச் செய்வதே தனது முதற் கடமை என்றும் கருதினாள்.

சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை மாரியப்பபிள்ளை. வாயில் வெற்றிலையுடன் புகையிலையைப் போட்டு அடக்கிக்கொண் டிருந்தார். இடக் கையில் வைத்திருந்த புகையிலைத் தூளை வலக்கையின் விரல்களால் சேர்த்துப் பிசைந்து கொண் டிருந்தார். தம் உள்ளத்திலும் பழைய ஞாபகங்களை எண்ணிப் பிசைந்து கொண் டிருந்தார். சாருபாலா அவர் கண்டெடுத்த மாணிக்கம். பல ஆண்டுகளுக்கு முன் அவள் தாயுடன் குற்றாலத்தில் ஒரு நாள் சாயந்தரம் உக்தவே தீசுவரரின் ஆலயத்தில் அவளைச் சந்தித்தார். குழந்தையினிடம் சுபாவமான அபிநயக் கலைப் பண்புகள் நிறைந்திருப்பதை ஆராய்ந்தது அவருடைய சூட்சுமப் பார்வை. தாயிடம் வலியச் சென்று மகளுக்குத் தாம் நாட்டியமாடக் கற்றுத் தருவதாகக் கேட்டுக் கொண்டார். தாய் இருந்த தரித்திர நிலையில், யார் தன் குழந்தையை ஒரு ஜீவனத்துக்கு வழி காட்டுவ தாயினும் அதில் திருப்தி பெறவே அவள் மனம் இடம் தந்தது. தஞ்சை ஜில்லாவில் சின்ன மேளம், சதிர் என்றால் பிரபல இடங்களில் மாரியப்ப பிள்ளையும் சாருபாலாவும் சன்னத்தர்களானார்கள். மற்ற இடங்களிலும் பிள்ளைக்குக் கிராக்கி ஏற்பட்டபோதிலுங்கூட , சாருபாலாவின் நிருத்தத் திலும் அபிநயத்திலும் அவருக்கே தனியான மதிப்பு உண்டாயிற்று.

சாருபாலாவின் அங்க அசைவுகளில் உடலுணர்ச்சியை விலக்கி, நூதனக் கலை வடிவங்களையே அவர் கண்டார்.. அவளது கண்ணோட்டத் தில் ருசியான கலைச் செய்திகளை அனுபவித்தார். அவள் கண்கள் பேசின; உதடுகள் உபதேசித்தன; கண்ணில் தெரியாத மூர்த்தியொன்றை ஹஸ்த முத்திரைகள் அலங்கரித்தன. முத்திரைகளினால் எழும் பாஷை தவறின்றி’ அமைந்ததற்குப் பிள்ளை தாம் பொறுப்பாளி; என்றாலும், சாருபாலாவின் சொந்த மேதை தனிப்பாஷையொன்றைச் சாறாகப் பிழிந்து உள்ளங் களினூடே பாய்ச்சி, காவியமும் ஓவியமுமாய்ச் சிருஷ்டிகளை வழங்கிக் கொண்டே ஆடியதைப் பார்த்த யார்தாம், பிறர்கற்று வைப்பதன் விளை வல்ல அவை, தாமாகவே கலையுள்ளத்தில் உதயமாகி உருக் கொண்டு உவகையூட்டுவன என்பதை மறுப்பார்கள்?

பழைய ஞாபகங்களில் சுழன்றது அவருடைய மனம். எதையோ சொல்லுவதற்கு மனத்தைத் திடப்படுத்திக்கொண்டவர், வாயில் உள்ள தைத் துப்புவதற்காக வெளியே சென்று வந்து, வாயலம்பிவிட்டு, உட்கார்ந்து கொண்டு அவளை உற்றுப் பார்த்தார். மெதுவாய்ச் சொல்ல லானார்:

“சாரு, நீ கெட்டிக்காரி, இன்றைக்கா நேற்றைக்கா உன்னை . எனக்குத் தெரியும்? இருந்தாலும், நீ திடீரென்று தான் இந்த விதம் பேச ஆரம்பித்திருக்கிறாய். மூப்பனார் எதையோ நினைத்துக்கொண்டிருக் கிறார். எவ்வளவு கௌரவமாய் நடந்தாலும், கலையைப்பற்றி அவர் ஒன்றும் தெரியாதவர்.நீ அப்படி அல்லவே. இப்போதெல்லாம் எங்கேயாவது நாட்டியமாடக் கூப்பிட்டால் ‘ சூ’ கொட்டுகிறாய். ஏன் இப்படி ஆகிவிட்டது உனக்கு? ஏதோ தெய்வக் குற்றம் போலே தான் என் மனசிலே படுகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு அபூர்வமான யோக்கியதையை நடுவயசிலே விட்டுவிடவா மனசு வரும்? யார் சொன்னார்கள். இதைவிடப் பள்ளிப் படிப்பு உயர்வு என்று? எதைவிட்டாலும் இந்த உயர்ந்த கலையை விடவே கூடாது. நான் ஒப்பவே மாட்டேன். பரிமளாவுக்கு நிச்சயம் நானே ஆடி அபிநயம் செய்யச் சொல்லி வைக்கிறேன். என்ன சூடிகையாக இருக்கிறாள் அவள்! மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக் கொடுக்க வேண்டும்? நீ பார்த்தாயோ இல்லையோ, அது கிளி முத்திரை இட்டதை?” என்று என்றைக்கும் இல்லாத படபடப்புடன் பேசினார்.

சாருபாலா கையைக் காட்டி அவரை நிறுத்தினாள். “ஐயா, நான் சொல்ல வந்ததையும் வாங்கிக்கொண்டு பேசுங்கள். இந்த நாட்டியத்தை நீங்கள் தாம் சம்பிரதாய ரீதியில் சொல்லி வைக்கிறவர்கள். ஒருத்தரும் இதை இந்த நாளிலே கவனிக்க மாட்டார்கள். கையையும் காலையும் வெறுமனே நீட்டியும் ஆட்டியும் குதித்தால் போதும் என்கிறார்கள். அதுவும் சினிமாவிலே எந்தப் படத்தை எடுத்தாலும் நாட்டியம் என்ற பேரோடு ஒன்று புகுந்துவிட்டதே; பார்க்கச் சகிக்கவில்லையே. முகபாவம் ஹஸ்தசுத்தம் என்று யார் கேட்கிறார்கள்? ஏதோ தளுக்குக் குலுக்குப் பண்ணிக்கொண்டு மேடையிலே நடந்தால் போதும். நீங்கள் பழம் பசலிப் பேர்வழி. நம்புகிறீர்கள், பரத நாட்டியமே ஒசத்தி என்று. மண்ணாங்கட்டி என்றுதான் நான் நினைக்கிறேன்” என்று சீறினாள்.

மாரியப்ப பிள்ளை இடத்தை விட்டு எழுந்திருந்தார். “சரி, சாரு . இன்றைக்கு உன்னோடு வாய் கொடுக்க என்னால் முடியாது. வருகிறேன். ஆனால் ஒரு சின்ன விஷயம், மறந்து விட்டேனே! அதைச் சொல்லத் தான் முக்கியமாய் வந்தேன். பட்டணத்திலிருந்து எனக்கு சர் ராஜப்ப செட்டியார் கடிதாசு எழுதியிருக்கிறார். மேல்நாட்டுக் கலைஞர் கோஷ்டி ஒன்று பட்டணத்துக்கு வருகிறதாம். அப்போது அவர்களுக்கு நம் சம்பிரதாயச் சதிர் ஒன்று பார்க்க வேண்டுமாம். உன்னையே அதற்காக எதிர்பார்க்கிறார்கள். முடியுமா உன்னாலே, இந்தமாதிரி மனசு இருக்கும் போது? நீ சற்று மனசு வைத்தாயானால், வெளியூர்க்காரர்களுக்கு நம் உயர்வை நன்றாகக் காட்டலாம். இல்லாவிட்டால் என்னால் முடியாது என்று எழுதிவிடுகிறேன். என்ன, உன் உத்தேசம்?” என்று கேட்டார். அவர் குரல் குழைந்தது.

சாருபாலா வியப்புடன் அவரைப் பார்த்து, “என்னாங்க, நான் என்ன, நன்றி கெட்ட ஜன்மமா, மாட்டேன் என்பதற்கு? உங்கள் வார்த்தையை எப்போது தட்டியிருக்கிறேன்? இந்தக் குழந்தைக்கு நாட்டியம் வேண்டாமென்று சொல்ல வந்தேனே தவிர, நீங்கள் ஓர் இடத்துக்கு வரவேண்டும் என்று நினைத்ததற்கு அப்புறம், வேண்டாமென்று சொல்லுவேனா? வருகிறேன் என்று பதில் தெரிவித்துவிடுங்கள்” என்றாள்.

மாரியப்ப பிள்ளை சிரித்த முகத்துடன், “அப்போது இன்றைக்கே பதில் எழுதிவிடுகிறேன். ஒரு விஷயம்: சொன்னால் தடை செய்யக் கூடாது. இந்தக் குட்டி பரிமளாவையும் கூட்டிக்கொண்டு பட்டணம் போகவேண்டும்” என்றார் மெதுவாய், சாருபாலாவினிடமிருந்து என்ன பதில் வருமோ என்ற கவலையில்.

“அதற்கென்ன? அழைத்துக்கொண்டு போவோம். பார்க்கட்டும், பட்டணத்திலே பள்ளிக்குச் சின்னச் சின்னக் குழந்தைகளெல்லாம் போவதை. அதுவும் ஓர் அநுகூலந்தான். நல்ல படிப்பிலே ஆசை ஏற் பட முதலிலே மற்றவர்களையும் பார்க்கத்தானே வேண்டும்?” என்றாள் சாருபாலா உற்சாகத்துடன்.

“நேரே கண்ணாலே பார்க்கத்தானே வேண்டும்? நன்றாகப் பார்க்கட்டுமே” என்றார் மாரியப்ப பிள்ளை. அப்படிச் சொல்லுகையில் கடைசி வார்த்தைகளை அவர் அழுத்தியதை, சாருபாலா அப்போது அவ்வளவு கூர்மையாகக் கவனிக்கவில்லை.

சென்னையில் மேல் நாட்டுக் கலைஞர் கோஷ்டி வந்து இறங்கியது. கோஷ்டியார் வந்த விவரம் படங்களுடன் பத்திரிகைகளில் வெளியா யிற்று. மேலும் வரவேற்புக் குழுவினர் விருந்தாளிகளுக்கான உபசாரங் களில் சில நாட்டியக் கச்சேரிகளைத் தயாரித்துள்ள செய்தியும் முன்ன தாகவே விளம்பரமாகி இருந்தது. சாருபாலாவின் நாட்டியம் நடை பெறுமென்ற விளம்பரமும் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. புது மோஸ்தர் நாட்டியங்களைப் பார்த்த சில இளைஞர்கள், பழங்காலத்துப் பரத நாட்டியத்தை வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தாளிகளுக்குக் காட்டுவதைச் சரியான காரியமாய்க் கருதவில்லை. “மேலும் எத்தனை எத்தனை குமாரிகள், பேபிகள், நவநவமான ஆடை அலங்காரங்களுடன் திரை மேடையில் ஆடுகிறார்கள்! அவர்களை விட்டுவிட்டுப் பழங்காலத்துச் சராயும் கச்சமும் கட்டிக்கொண்டு, தலைச்சாமான் முதலிய கனத்த நகை களைச் சுமந்து கொண்டு நிற்கும் நாட்டியக்காரியை ஒருகாலும் மேல் நாட்டினர் சகிக்க முடியாது” என்றனர் மற்றும் சிலர். “நாசுக்கான உடையும் மிளிரும் வைரங்களும் தேகமெல்லாம் பளிச்சிட , மின்சார தீபங்கள் வர்ணஜாலங்களை நிமிஷத்துக்கு ஒருவிதம் பொழிய, இக்காலத் திய எழில் பொருந்திய நாகரிக நாட்டியங்கள் எங்கே? ஒன்றையுமே புரிந்து கொள்ளாது வேர்வை உடலையெல்லாம் தெப்பமாய் நனைக்க, செவ்வந்திப் பூச் சுற்றிய ஜடையுடன் ஊசலாடும் உருவம் எங்கே? அதையா ரசிக்க முடியும்?” என்றனர் இன்னும் சிலர்.

இத்தகைய சூழ்நிலையில்தான் மாரியப்ப பிள்ளை சாருபாலாவுடன் பட்டணம் வந்து சேர்ந்தார். சாருபாலாவைப் பழையபடியே நாட்டியத் தில் இறங்கச்செய்ய, சுந்தர மூப்பனாருக்கு இஷ்டம் இல்லை. ஆயினும் சர் ராஜப்ப செட்டியாரின் சிபாரிசுக்காகவும், மேல்நாட்டினர் பார்க்கி றார்கள் என்பதற்காகவும் சற்று இணங்கினார். சாருபாலாவோ, பட்டணம் போவதில் சுயமாய் அதிக ஆர்வம் காட்டாவிட்டாலும், தன் மகள் பரிமளாவின் எதிர்காலச் சௌகரியங்களை நினைந்துதான் ஒப்புக் கொண்டாள்.

பரிமளா பட்டணத்துக்கு வந்தது இதுதான் முதல் தடவை. சமுத் திரத்தைப் பார்த்துக் குழந்தை பிரமித்தே போய்விட்டாள். மெரினாவில் ஆயிரமாயிரமாய்க் கார்களின் வரிசையைக் கண்டு அவளுக்கு என்னவோ உடம்பிலே செய்தது. கைகளைக் கொட்டிக் கூத்தாடினான். காரில் ஏறிக்கொண்டு ஊர் சுற்றுகையில், “தாத்தா, இதென்ன, அதென்ன?” என்று விடாமல் கேள்வி கேட்டு மாரியப்ப பிள்ளையை நச்சரித்தாள். அவரும் பொறுமையாய், தமக்குத் தெரிந்தவைகளை அவளுக்குச் சொல்லி வந்தார்; தெரியாதவைகளை, “கேட்டுச் சொல்லுகிறேன்” என்று சமா தானம் கூறினார்.

கலைஞர் கோஷ்டிக்காக நடந்த ஏற்பாடுகள் பலமாகவே அமைந்தன. இந்தியப் பண்பாட்டுக்குரிய பற்பல விசேஷ நிகழ்ச்சிகளைத் தயார் செய் திருந்தார்கள். இங்குள்ள கலைகளின் உயர்வைப் பிரகாசப்படுத்தப் பிரத்தியேகமாய் ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரபல வித்துவான் களை வரவழைத்து ஒழுங்காய்க் கச்சேரிகள் நடத்தத் திட்டங்கள் உருவாயின.

பெரிய மண்டபம் ஒன்றில் சாருபாலாவின் நடனம் தொடங்கியது. கிரமப்படி நிருத்த வகைகள் முதலில் ஒரு மணி சுமாருக்குச் சாருபாலா வினால் வெகு கவர்ச்சி தரும் பாணியில் செய்யப்பட்டன. நிருத்தமே. உருவெடுப்பதாயின், சாருபாலாவின் வடிவத்தில்தான் வந்திருக்க வேண் டும் என ரசிகர்கள் கருதும்படி அவளுடைய நிருத்தம் அமைந்திருந்தது. அடைவுகளை வெகு லாகவமாய்ப் பிரயோகம் செய்து, முகபாவங்களை அவைகளுக்கு அநுகுண மாகவே விளக்குகையில் எல்லோருமே அநுபவித் தார்கள். அவள் கூத்தாடுகையில் கால்கள் தாம் அவளைத் தாங்குகின்றனவா அல்லது இறக்கைகளே அவளை மேடையின் மேல் மிதக்க வைக் கின்றனவா என்று சந்தேகப்படும்படி இருந்தது. அவள் ஜலத்தின் மேல் அன்னப்பறவை போல் நீந்துகிறாளா என்றே சிலர் பிரமித்து, தங்கள் ஆசனங்களை விட்டு அவளுடைய கால்கள் தெரிகின்றனவா என்று எழுந்து கழுத்தை நீட்டி உற்றுப் பார்த்தார்கள்.

அபிநயம் தொடங்கியது என்பதற்கு ஏற்றாற்போல் பதங்களை அவள் தன் குரலை இசைத்துப் பாடினதும் எல்லோரும் ஒரு தடவை ‘அப்பாடி!’ என்று நீண்ட மூச்சு விட்டார்கள். ஆடுவதைச் சற்றே நிறுத்திவிட்டு, சாருபாலா தனியே பாடினால் தேவலை என்று எண்ணியவர் – சிலர். சிலர் அவள் பாட்டின் கமகமயமான பிடிகளுக்கு அசைவு சுகம் அவள் அங்கங் களில்தான் உண்டாகும் என்ற நம்பிக்கையில் அவைகளை எதிர்நோக்கித் திளைத்தனர். உண்மையாகச் சிரமமின்றி, சாருபாலாவுக்கு அன்று காலும் கையும் இதர அங்கங்களும் சொன்னபடி கேட்டன. க்ஷேத்திரீய பதங்களுக்கு விரிவான வியாக்கியானம் அவள் செய்த பிறகு, தமிழ்ப் பத மொன்றைப் பாடி அபிநயம் பிடித்தாள். அன்று அவள் எடுத்துக் கொண்டது, ‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா’ என்ற அருமையான சாகித் தியம். பக்தன் ஒருவன் ஸ்ரீரங்கத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாளை அவருடைய பன்னக சயனத்தில் பார்த்து அனுபவிக்கும் நிலையைத்தான் அந்தப் பாட்டு வருணிக்கின்றது. முக்கியமான சில கட்டங்களை ராமா யணத்தினின்றும் எடுத்திருப்பதால் அவைகளை அபிநயம் பிடித்தாள் சாருபாலா. சிறுபிராயத்தில் ராமன் தாடகையை அடித்துச் சாய்த்ததும், சிவதனுசை முறித்துச் சீதையை மணம் செய்ததும், பிறகு வனமேகிய: தும், சீதையைப் பறிகொடுக்கு முன் மாரீசனை மானுருவத்தில் கொன்ற. தும், சுக்கிரீவனுடன் நட்புப் பூண்டதும், அநுமனை இலங்கைக்கு அனுப் பியதும், சேது கட்டியதும், ராவணனைச் சங்காரம் பண்ணியதுமே அவள் அபிநயத்தினால் தீட்டிய படங்கள். தாடகையைக் கொல்லுகையில்; வயசில் சிறியவன் ராமன் என்ற கருத்தைச் சாருபாலா மிகவும் பொருத்த’ மாய்க் காட்டினாள். மண்டியிட்டு ஒரு காலைக் குத்திட்டு, வில்லை நன்கு வளைத்து, அம்பறாத் தூணியிலுள்ள பாணங்களை விடாமல் எடுத்து அரக்கியின்மேல் விடுவது, போல் அபிநயம் கச்சிதமாய் அமைந்தது. பிற்பாடு ராவணனைக் கொல்லும் பொழுது கையில் வில் ஏந்தியதை நினைவூட்டினாலும், ராமன் பிரம்மாஸ்திரத்தைச் சத்துருவின்மேல் பிர யோகித்தான் என்பதை மறக்காமல், அவள் நின்றபடியே முன்காலைப் பூமியில் உதைத்துக் கம்பீரமாய் அஸ்திரத்தை ஏவியதுண்டே, அது ரசிகர் உள்ளங்களுக்கு எவ்வளவோ அறிவூட்டும் விளக்கமாகியது.

வெவ்வேறு வயசிலும், வெவ்வேறு அநுபவச் சூழ்நிலையிலும் ராமன் இருமுறை எதிரிகளைத் தாக்கியதாய்க் கதை இருப்பதை அபிநயக் கலையும் தெளிவுடன் பரிமளிக்கச் செய்ய இயலும் என்பதைச் சாருபாலாவின் அபூர்வக் கலைத்திறன் எடுத்துச் சொல்லியது. ஆனால் மற்றவைகளைவிட ஒன்று உயர்ந்த தாய் அன்றைய நடிப்பில் துலங்கியது, கடைசியில் பக வானைப் பக்தன் கேட்கும் வார்த்தைகளுக்குச் சாருபாலா தந்த அநாயாச மான கருத்துரைதான் எனக் கூறவேண்டும். ”ராவணாதிகளை அடித்த வருத்தமோ?” என்று ஓர் அடி வருகிறது. சாருபாலா அதற்கு இழைத்த பாவம் ஒரு தனி அநுபவமாகவே தோன்றும்படி இருந்தது. ராமன் கருணாமூர்த்தி என்பதை இன்னும் பிரகாசப்படுத்தும்படியாக, தம் கையி னால் கொல்லப்படுவதற்குத் தகுதி வாய்ந்த ராவணனை மண்ணில் வீழ்த்தி யதில் பெருமையைவிட, வருத்தத்தையேதான் அவர் அடைந்தார் என்ப தான கருத்து, பிரமாதமாய்ச் சோபித்தது. கருணைக் கடலாய், அகன்ற தோர் பரப்பாய், ஓர் ஓவியத்தை – மனத்திரையில் தீட்டினமையால், உணர்ச்சியினாலும் பக்தியினாலும் உருகிய இருதயங்கள் ‘ஆஆ’ என்று அவ்விடத்தில் கூவி, வேறு உலகில் சஞ்சரித்ததை உணர்த்தினார்கள். அங்கு அமர்ந்திருந்த மேல் நாட்டினர்களுக்கு அவர்களைப்போல் பக்தி பரவசம் ஏற்படாவிடினும், கலையின்பம் உவகையாய்ப் பரிணமித்தது.

அவ்வளவுதான்; விடாமல் கரகோஷம் கிளம்பிச் சில நிமிஷங்கள் தொடர்ந்து மண்டபத்தின் கூரையையும் பிய்த்தது.

சாருபாலா களைத்துவிட்டாள். இருப்பினும் சம்பிரதாயத்தினின் றும் சிறிதும் வழுவாத அவள் நேர்மையுணர்ச்சி, தில்லானா ஒன்றைச் சட்டென எடுத்துக்கொண்டு வெகு விமரிசையாய், தாளக் கோலங்களிட்டு , ரசிகர் உள்ளங்களை நிறைவெய்த வைத்துவிட்டது. இறுதியில் சுலோகமொன்றைச் சுருக்கமாய் அபிநயித்துவிட்டுத் தனது நாட்டியத்தை மங்களம் பாடியும் ஆடியும் முடித்தாள்.

குழுமியிருந்தவர்கள் இடத்தை விட்டு நகராமல் அன்று கண்ட நாட்டியத்தைப் பார்த்து ரசித்தார்கள். சாருபாலாவுக்கு அபாரப் பாராட்டுகளை வெளிநாட்டினர் பிரதிநிதியும், இங்குள்ள வரவேற்புக் குழுவின் தலைவரும் தந்தார்கள். மொத்தத்தில் எல்லோரும், பரத முனிவரின் அழியாத கலையை இங்குள்ள நாட்டியப் பரம்பரைகள் ‘போஷித்துக் காப்பாற்றியதையே ஏகோபித்துப் பாராட்டினார்கள்.

பூமாலைகளும் புகழ்மாலைகளும் சாருபாலாவின் சிரத்தையும் கழுத் தையும் அலங்கரித்தன. வெயர்த்து, நிற்க முடியாமல் அவள் வணக்க மாய்க் கும்பிட்டுவிட்டு, வாய் வார்த்தைகளின்றி அங்க விநயத்தினாலேயே தனது பூர்ண நன்றியை அங்குள்ளவர்களுக்குத் தெரிவித்துக்கொண் டாள். அவளது உள்ளத்தே கனமின்றி உல்லாசமாய் ஆகாய வெளியில் மிதப்பது போன்ற ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. தன்னைக் களைப்பாற்றிக் கொள்ளவே அவள் துடிதுடித்தாள்.

கூட்டம் நகர்ந்ததும், தன் சொந்த ஜாகைக்கு மாரியப்பபிள்ளையை யுேங்கூட அழைத்துக்கொள்ளாமல் கிளம்ப அவள் சித்தமானாள். பரிமளா அன்றுதான் முதல் முதலில் தாயின் முழுச் சதிர்க் கச்சேரியை விடாமல் தொடர்ந்து பார்த்தவள். அவளுடைய சின்னப் புத்திக்கு, தாய் எங்கேயோ ஒரு தேவலோகத்தைச் சேர்ந்தவள் போலப் பட்டது. பிரமித்து, வாய் புதைத்து அப்படியே குழந்தை வேறொன்றையும் நினை யாமல் கடைசி வரையிலும் உட்கார்ந்துவிட்டாள். முடிந்த பிறகும் மண்டபத்தை விட்டு நகர அவளுக்கு மனசே வரவில்லை. மேடையின் மேல் விளக்குகளையும், தாயின் அலைமோதும் நடனக் கலையையும் அவள் தன் அகலக் கண்களால் விழுங்கிக்கொண் டிருந்தாள். மாரியப்பபிள்ளை – அவளிடம் வந்து, ”என்ன குட்டி, எங்கே இருக்கிறாய்? ஏதாவது தெரி கிறதா? அம்மா உன்னை விட்டுப் போய்விட்டாள். வா, நாமும் போக லாம்” என்ற துந்தான் சொப்பன உலகை விட்டு மண்ணுலகிற்கு வந்து சேர்ந்தாள். ஒன்றும் சொல்லாமலே கிழவர் கையைப் பிடித்துக்கொண்டு, காத்திருந்த ஒரு காரில் அவருடன் ஏறிக்கொண்டு, இறங்கியிருந்த ஜாகைக்குத் திரும்பினாள்.

தங்கள் விடுதியை அடைந்ததும், மாரியப்பபிள்ளை அங்கே கண்ட காட்சி வேடிக்கையாய் இருந்தது. சாருபாலா நகைநட்டு ஒன்றையும் கழற்றாமல், கையில் கடிதமொன்றைப் பிடித்துக்கொண்டு, அறையில் இங்குமங்குமாய் நடை போட்டுக்கொண் டிருந்தாள். தானாகவே பேசிக் கொண்டும் இருந்தாள். அவை கிழவரை எதையோ எண்ணவைத்துச் சிரிப்பு மூட்டின. அவருடைய நகையொலியைக் கேட்டதும் சாருபாலா சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். அவள் சொல்லிக்கொண்டிருந்த முடிவான வார்த்தைகள் தாம் அவரை அவ்வாறு செய்ய வைத்தன. “என்ன நல்ல உலகம்! ஓர் அற்பச் செயலுக்காக எவ்வளவு நன்றி காட்டு கிறது! நான் அல்லவா உலகையும், உயர்ந்த . கலையையும் அலட்சியம் செய்தேன்? என் கடமையைச் செய்யத் தவறினேனே?” என்ற வார்த்தைகள் அவளிடமிருந்து வெளிவந்தன.

கையிலுள்ள கடிதத்தை அவள், பிள்ளையைப் பார்த்ததும், அவரிடம் நீட்டினாள். அவர் அதில் உள்ள வரிகளை ஒரு தரம் அல்ல, இரு தரம் வாசித்தார். கடிதம் பின்வருமாறு:

“அம்மணி, இன்று நீங்கள் தாம் நாட்டியமாடினீர்களா அல்லது தேவலோகத்தையே விண்டு இங்கே கொண்டு வந்து வைத்தீர்களா, தெரியவில்லையே! வால்மீகியின் ராமன், கம்பரின் ராமன், துளஸியின் ராமன் என்பதுபோல், உங்கள் ராமனும் உருவாகி, கனிவாய் எங்கள் முன் இன்று தோன்றினான். கருணைக் கடலே தான் ராமன் என்பதை இனி யாரும் மறக்க மாட்டார்கள், மறுக்கவும் மாட்டார்கள்.

“உங்கள் கலையைப் பரம்பரைத் தத்துவமாய் ஆக்க உலகம் இனி எதிர்பார்க்கும். உங்கள் நுட்பமான கலைத்திறன் உங்களுடன் நிற்கலா காது. பரதரும் நந்திகேசுவரரும் ஆனந்த நடன மூர்த்தியினிடமிருந்து நேரில் கற்றதை உலகில் சாஸ்திரமாய்ப் பரவ வைக்கவில்லையா? நீங்களும் உங்கள் பிரத்தியேக உத்தி விசேஷத்தையும், பாவ வெளியீட்டையும் ஒருவர் இருவருக்காவது கற்று வைத்தால்தான் நீங்களும் கருணையை உணர்ந்த உத்தமப் பிறவி என்றாகும். இல்லையேல் கடமையைச் செய்யா தவர் ஆவீர். என் ஆர்வத்தினாற் கூறியதில் பிழையிருந்தால் மன்னியுங்கள்.

இங்ஙனம்,
ஓர் ரஸிகன்.”

மாரியப்பபிள்ளை சாருபாலாவின் வதனத்தையே அதற்கு விடை கேட்கும் விதம் பார்த்தார்.

முகத்தில் ஜில்லென்று ஒரு காற்று அடித்துச் சாருபாலாவின் கூந்தலை நெற்றியில் ஊசலாட வைத்தது. அவள் கூந்தலைக் கையால் கோதிக் கொண்டே தனக்குள் பேசிக்கொண்டாள்: “என் அனுபவம் இன்று உண்மையாயின், யாருக்காவது இதைச் சொல்லி வைத்தே தீருவேன். இது நிச்சயம். என் கடமையுங்கூட.”

குழந்தை பரிமளா அப்பொழுதுதான் உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தாள். தாயைக் காணாத கண்களில் அவளைக் கண்டதும் பெருமிதம் பொங்கியது. சுபாவமாய் உள்ள வெட்கத்தையும் விட்டு அவள் கத்தினாள், “அம்மா, உன்னாட்டமா நேக்கும் ஆடணும். தாத்தாதான் நான் நன்னா ஆடுவேங்கறாரே! கத்துக் கொடுக்கச் சொல்லு, அம்மா” என்று.

அவளைச் சாருபாலா இரு கைகளாலும் கட்டி அணைத்து ஏந்திக் கொண்டு, தன்னையே மறந்தவளாய், “என் செல்வமே, உனக்கு இல்லாமல் வேறு யாருக்காக இதை நான் கற்றுக்கொண்டேன்? நானே உனக்கு வருகிற விஜயதசமி அன்றைக்குச் சொல்லிவைப்பேன். என்னிடமுள்ளதை நீதானடி அடைய வேண்டும்” என்றாள். தன் முகத்தைப் பரிமளாவின் கதுப்புக் கன்னத்திலும் புதைத்துக்கொண்டாள்.

வெற்றிக் குறியுடன் கையிலுள்ள புகையிலைத் தூளை மாரியப்ப பிள்ளை வாயில் அள்ளித் திணித்துக்கொண்டார்.

– அக்டோபர், 1954 – கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *