திரைப்படங்களில் நாம் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதற்கு தகுந்தாற்போல புதுமணத் தம்பதிகள் நிஜவாழ்வில் நடந்து கொள்வதில்லை தான். குளித்து முடித்து, புது டிசைனில் சேலை அணிந்து, ஈரம்காயாத தலைமுடிக்கு துண்டு கட்டி கையில் காபி டம்ளரோடு வரும் நாயகி படுக்கையில் குப்புற விழுந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தும் நம்மைப் பார்த்தும் புன்னகை சிந்துவாள். காபி டம்ளரை பத்திரமாய் டேபிள் மீது வைத்துவிட்டு குளிக்க அனுப்ப கணவனை முதுகில் தட்டி, ‘எழுந்திருங்க கதிர், இன்னும் என்ன தூக்கம்?’ என்பாள்.
நாயகியின் குரல் கேட்டதும் பொய்யாய் தூங்கிக் கொண்டிருந்த கதிர் படுக்கையில் உருண்டு திரும்பி நாயகியை பாய்ந்து பிடித்து தன்னோடு இழுத்து கட்டிக் கொள்வான். ‘இன்னொருமுறை குளிக்க வச்சிடாதீங்க, ப்ளீஸ் கதிர்’ நாயகியின் குரல் அரங்கினுள் சின்னச்சின்ன ஒலிப்பான்களில் ஒலிக்கும். நாமெல்லாம் சில நிமிடங்களுக்கும் முன்புதான் அவர்கள் இருவரும் சேப்பாக்கம் மைதானத்தில் கூட்டமாய் பெண்கள் சிவப்பு வர்ண ஜிகினா உடை அணிந்து கொடிகள் பிடித்தாட அவர்களுக்கு நடுமத்தியில் தனித்துத் தெரிய வேறு வர்ண உடையில் பாடல் பாடி ஆடும் இவர்களை கண்டு ரசித்திருப்போம்.
“கதிர் ப்ளீஸ் விடுங்க! உங்க அம்மா இப்பத்தான் சொல்லி அனுப்பிச்சாங்க கதிர்வேலன் ஒரு மாதிரின்னு! அதன்படியே பண்றீங்க பாத்தீங்களா?” என்று நாயகி சொன்னதும் நாயகன் தன் கிடுக்குப் பிடியை விட்டு விடுவான். நாமெல்லாம் விடும் பெருமூச்சு அரங்கின் ஆஸ்பெட்டாஸ் கூரையை ஒருமுறை மேல்நகர்த்தி விட்டு பின் சரியாய் அமரும்.
அகிலாவுக்கு அப்படியெல்லாம் நாயகன் போல தன் கணவன் தன்னிடம் நடந்து கொள்ள மாட்டானா என்று ஏக்கமாய் இருக்கும். அகிலா தன் கணவன் கதிருக்கு காபி டம்ளரோடு அறைக்குள் வந்த போது கதிர்வேலன் திரையில் வந்த நாயகன் போன்றே அச்சு பிசகாமல் தூங்கிக் கொண்டிருந்தான். கொலுசு ஒலிக்க என்பதை நீங்கள் சேர்த்துக் கொள்ளவும். ஞாயிற்றுக்கிழமை என்றால் கதிர்வேலனை சாமானியமாய் அகிலாவால் எழுப்பவிட முடியாது என்பது அவளுக்குத் தெரியும்.
ஆதலினால் அகிலா கதிர்வேலனின் வெற்று முதுகில் ஒத்தடம் வைப்பது போல காபிடம்ளரை பட்டும் படாமல் வைத்து எடுக்க ‘சுரீர்’ என்று முதுகில் சூடு கண்டதும், ‘பேக்கு’ என்று சொல்லிக் கொண்டே கதிர்வேலன் விருட்டென படுக்கையிலிருந்து எழுந்தான். எழுந்தவன் சுற்றிலும் அகிலாவைத்தேடி ஒருகணம் ஏமார்ந்தான். அகிலா தான் இவனை விட்டு டைவர்ஸ் வாங்கிப்போய் ஒரு வருடமாகி விட்டதே.
கடைசியாய் அகிலாவை இவன் கோர்ட் வாயிலில் பார்த்தது. ஒரு வருடத்திற்கு பிற்பாடு கனவில் வந்திருக்கிறாள் காபி டம்ளரோடு. அகிலாவை மனதிலிருந்து சற்று தள்ளி நிற்க வைக்க இவனுக்கு மிகுந்த போராட்டத்திற்கு உள்ளாக வேண்டியிருந்தது. அகிலா துலா ராசிக்காரி என்பதெல்லாம் திருமணத்திற்கு பிற்பாடுதான் இவனுக்கு தெரிந்தது. துலா ராசிக்காரர்கள் பற்றி அரைகுறை சோதிட நண்பன் சொன்னது ஒன்றே ஒன்று தான். அவங்களுக்கு எல்லாமே சீரா இருக்கணும்! சீரா இல்லீன்னா கொந்தளிச்சுடுவாங்க!
அகிலாவும், கதிரும் சிங்காநல்லூர்க்காரர்கள் தான். அகிலாவை கதிர் திருமணம் செய்து கொண்டது குலுக்கல் முறையில் தான் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அப்படித்தான் நடந்தது. அகிலா அப்போது சிங்காநல்லூர் குயில். அவள் ஆர்.எஸ் புரத்தில் சாப்ட்வேர் கம்பெனிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். கம்பெனி பேருந்து தினமும் இவளையும் இவள் போன்ற சிங்காநல்லூர் தேவதைகளையும் பத்திரமாய் காலையில் கூட்டிப்போய் பதனமாய் இரவில் கூட்டி வந்து இறக்கிச் சென்று கொண்டிருந்தது.
அகிலாவுக்காக உள்ளூரில் நிறையப்பேர் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவர் கையிலும் பல்சர் மற்றும் ரோஜா இருந்ததை நீங்கள் சேர்த்துக் கொள்ளவும். அவர்களை ஜமாளிக்கும் விதமாய் கதிர்வேலன் தன் தாய் தந்தையை இவன் ஜாதகக்குறிப்பேடுகளோடு அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அகிலாவின் தந்தையார் ஜாதகக்குறிபேட்டோடு சேர்த்து இவனது நன்னடத்தை மற்றும் விளையாட்டு சான்றிதழ்களையும் நிராகரித்து அனுப்பி வைத்தார். தொங்கிப்போன முகமுடன் வந்த தன் பெற்றோர்களைக் கண்ட கதிர் நிலைமையை யூகித்து போட்டியிலிருந்து விலகிக் கொண்டான். கிச்சுக்கு அடிக்கும் பாடி ஸ்ப்ரே விளம்பரத்தினால் தேவதைகள் புன்னகை பூப்பார்கள் என்பதில் நம்பிக்கை இழந்தான்.
ஆக அகிலாவின் திருமணப்பத்திரிக்கையும் அவர்கள் வீடு தேடி வந்தமையால் வாழ்த்தியருள இரவே சிங்காநல்லூர் காமாட்சி மண்டபத்திற்கு சென்றிருந்தான். விருந்தில் எல்லா ஐட்டங்களும் சிறப்பு என்று மண்டபத்தில் இவன் சென்ற சமயம் பேசிக் கொண்டிருந்தார்கள். நகை விசயத்தில் ஏதோ தகிடுதத்தம் நடத்தி விட்டதாக மாப்பிள்ளை வீட்டார்கள் கொந்தளித்து கிளம்பி சென்றார்கள். மண்டபம் அதிர்ச்சியில் உறைந்திருந்த சமயம் பெண்வீட்டார் மட்டுமே மண்டபத்தில் குவிந்திருந்தார்கள். அனைவருமே உள்ளூர்க்காரர்கள்.
எல்லாருமே சொந்தக்காரர்கள் என்பதால் அகிலாவின் தந்தையார் மணமேடை ஏறி நின்று, ‘தன் மகளைக் கட்டிக்கொள்ள யாருக்கு சம்மதம்?’ என்றார். சேரில் அமர்ந்திருந்த இளவட்டங்கள் ஐந்தாறு கையைத் தூக்க கதிர்வேலனும் கையை உயர்த்தினான். ஏழுபேர் பெயரை சொந்த பந்தங்கள் முன்னிலையில் தாளில் எழுதி சில்வர் காலிக்குடத்தில் சுருட்டிப் போட்டார் அகிலாவின் தந்தையார்.
அகிலா பட்டுச்சேலை சரசரக்க, நகை நட்டுகள் அலங்கரிக்க ஒயிலாய் வந்தவள் குடத்தில் வளையல்கள் நிரம்பிய தன் வலது கையை விட்டு ஒரு சீட்டை எடுத்து தந்தையிடம் கொடுத்தாள். அதில் இவன் பெயர் இருந்தது! இரவே அகிலாவின் கழுத்தில் தாலிகட்டி கதிர்வேலன் தன் வீடு கூட்டிவருகையில் அவன் பாக்கெட்டில் முன்னூறு ரூபாயும் சில்லரை காசுகளும் மட்டுமே இருந்தன.
திருமணம் முடித்த கையோடு பேரூர் சாலையில் செல்வபுரத்தில் வீடு வாங்கி தனிக்குடித்தனம் வந்து விட்டார்கள் இருவரும். கதிர்வேலன் கணபதியில் வெங்கடேஷ்வரா இஞ்ஜினியரிங் வொர்க்ஸில் மேனேஜராக இருந்தான். கணவனின் அன்பு மழையில் நனைந்த அகிலா ஒரு சுற்று பெருத்தும் விட்டாள்.
பொறுக்க மாட்டாமல் கதிர் ஒருநாள், “ரொம்ப சைனிங் ஆயிட்டே அகிலா.. என்னால ஆபிஸ்ல உட்கார்ந்து வேலை செய்ய முடியல! எந்த நேரமும் என் கண்ணுக்கு முன்னால லலல்லா! பாடுறே!” என்றான். “கண்ணு போடாதே கதிர்” என்று பாய்ந்து அவன் கன்னத்தை செல்லக்கடி வைத்து விட்டாள் அகிலா.
வெற்றிகரமான காதல் குடும்ப வாழ்க்கை வருடம் ஒன்றை தொட்டுவிட இருபது நாட்கள் என்றிருக்கும் போது அகிலா தன் துணிமணிகளை பேக் அப் செய்து கொண்டு தாய் வீடு போய் விட்டாள். மயிரிழையாக இருந்த ஊடல் எப்படியோ நூலாகி, கயிறாகி, பாம்பாகி விவாகரத்து என்ற விசத்தையும் கக்கி விட்டது.
“சாரிப்பா.. ஹெவி வொர்க்! சாப்டுட்டு நீ தூங்குப்பா.. நான் நைட் லெவன் ஓ க்ளாக் ஆகும் வந்து சேர! கார்த்தி ட்ராப் பண்ணிடுவான். சாரிப்பா! வினோத் ட்ராப் பண்ணிடுவான். இனிமேல் ஓவர் டைம் பார்க்க மாட்டேன் ப்ளீஸ்பா! இன்னிக்கி ஜான்சன் ட்ராப் பண்ணிடறேன்னு சொல்லிட்டான்” இப்படித்தான் நடந்து கொண்டே இருந்தது.
“வேலையில இருக்கப்ப என்னை மறந்துடுவியா அகிலா? வரவர ஒரு போன் பண்ணி சொல்லிடணும்னுகூட உனக்கு தோணுறது இல்லை பார். இப்படி யாரோ ஒருத்தன் தினமும் உன்னை இரவில் நம்வீட்டு வாசலில் இற்க்கி விட்டுட்டு போறான். எனக்கு தாங்கலை அகிலா. உன்னை கூட்டிவர நானே வந்துடறேனே” என்றான் கதிர். அகிலா பேக் அப் செய்து விட்டாள்.
மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் தடைபட்டு ஆட்டம் கைவிடப்படுவது போல கதிரின் வார்த்தை மழையில் மேற்கொண்டு நனைவது பிடிக்காமல் அகிலா கைகழுவிவிட்டு போய்விட்டாள். கதிர் இதை எதிர்பார்க்கவில்லை. அகிலாவிடம் இவன் கேட்ட சில மன்னிப்புகளையும் நிராகரித்தாள். “ராமாயணத்தில் சீதை ஒருமுறை தான் தீக்குளித்தாள். இந்தக்காலத்தில் சாப்ட்வேர் சீதைகள் தினம் தினம் தீக்குளிச்சு தன்னை உத்தமின்னு நிரூபிக்க வேண்டியிருக்கு!” என்று முனகினாள்.
எப்படியோ அகிலா கதிரின் கனவில் வந்து விட்டாள். கதிரின் அலைபேசி அந்த சமயத்தில், ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்! யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்” என்று பாடிவிட்டு நின்று போனது! காலையில் யார் மிஸ்டு கால் கொடுப்பது? என்று எடுத்து யாரெனப் பார்த்தான். அகிலாவின் தவறிய அழைப்புதான் அது. புதிய மெசேஜ் ஒன்றும் திறக்கப்படாத கவரில் இருந்தது. அதுவும் அகிலா தான். Are you free to day? Shall I come there? என்று கேட்டிருந்தாள்.
கனவில் அகிலா வந்த நாளன்றே சந்திப்பா? அழைத்துப் பேசுவதற்கு சங்கடப்படுகிறாளோ! இவனாக அகிலாவை அலைப்பேசியில் அழைத்தான். அவளின் ரிங்டோனைக்கூட இன்னமும் அவள் மாற்றவில்லையே! ‘நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ளை அமைஞ்சதடி உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ.’ புதுவீடு வந்த புதிதில் சிம்காரன் நெம்பர் ஐந்தை அழுத்தச் சொல்ல அதை அழுத்தி வைத்துக் கொண்ட பாடல்.
“நான் கதிர் பேசுறேன் அகிலா! என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு மிஸ்டு கால் குடுத்திருக்கே?” என்றான்.
“இல்ல இன்னிக்கு சண்டே, சீக்கிரம் எழுந்திருக்க மாட்டீங்க! அதான் கட் பண்ணிட்டேன். எப்படி இருக்கீங்க கதிர்?” என்றாள் அகிலா. காலையில் கனவில் இவள் வந்ததை சொல்லலாமா! என்று நினைத்தவன் அதனால் எந்த பிரயோசனமும் இல்லை என நினைத்து கைவிட்டான்.
“நல்லா இருக்கேன் அகிலா! நீ இல்லாதது ஒன்னு தான் குறை”
“காலம் போன பிறகுதான் என் அருமை தெரியும் கதிர். அதை விடுங்க, என்னோட ஒரிஜனல் சர்டிபிகேட்ஸ் எல்லாம் பீரோவுல இருக்கும். எனக்கு ஹைதராபாத்துல எல் எம் வி சாப்ட்வேர் சொல்யூசன்ல வேலை கிடைச்சிருக்கு. அடுத்த மாதம் நான் ஜாய்ன் பண்ணுறேன். ஒரு டென் தேர்ட்டிக்கு நான் வீட்டுக்கு வரவா? வந்த உடனே கிளம்பிடுவேன்” என்றாள். இவன் ‘சரி’ என்றதும் தேங்ஸ் சொல்லி கட் செய்து விட்டாள் அகிலா.
கதிருக்கு அடுத்த நிமிடம் முதல் அகிலா அகிலா என்று இதயம் துடிக்க ஆரம்பித்து விட்டது. வீட்டை குப்பை கூலமில்லாமல் சுத்தப்படுத்தினான். அலங்கோலமாய் மேஜையில் கிடந்த புத்தகங்களை அடுக்கினான். விட்டால் ஒட்டடை அடித்து புது வர்ணம் பூசிவிடுவான் போலிருந்தது. ட்ராவில் கிடந்த லேமினேட் செய்யப்பட்ட இவர்களின் ஜோடிப் புகைப்படத்தை எடுத்து அழகு பார்த்தான். அகிலா இவன் தோளைப்பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள். அதை டேபிளின் மேலே வைத்தான் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என! விடைபெற்ற பின்பும் தன் ஞாபகமாகவே இருக்கிறான் என்று அகிலா நினைக்கட்டும்!
குளியல் அறைக்குள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டான். சேவிங் செய்து முகத்தை பளபளப்பாக்கிக் கொண்டான். தலை துவட்டியபடியே தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து, அழகுடா! என்று சொல்லிக் கொண்டான். வெளியே மழை தூறல் போட்டுக் கொண்டிருந்தது. பீரோவில் தேடி குடையை எடுத்தவன் வீட்டை பூட்டிக் கொண்டு சாலையில் இறங்கினான்.
அகிலா ஒருவேளை பேருந்தில் வந்தாள் என்றால் மழைக்குப் பயந்து நிறுத்தத்திலேயே நிற்பாள். குடையுடன் சென்றால் கூட்டி வந்துவிடலாம். அகிலா இப்போது எப்படி இருப்பாள்? அகிலாவை காதலித்த சமயத்தில் மனதில் இருந்த படபடப்பும், தவிப்பும் இப்போது அவனுக்குள் வந்துவிட்டது. பேருந்து நிறுத்தத்தில் அகிலா இல்லை.
நிறுத்தத்தில் காத்திருக்கையில் கதிரின் அலைப்பேசி பாடத் துவங்கியது. நேரம் சரியாக பத்தை தாண்டியிருந்தது. அகிலா தான் கூப்பிடுவது.
“என்னங்க கதிர் நான் வர்றதா சொல்லியும் நீங்க வீட்டை பூட்டிட்டு கிளம்பிட்டீங்க! இன்னுமா கோபமெல்லாம் வெச்சுட்டு இருக்கீங்க நீங்க?” என்றாள்.
“எங்கேயும் போகலை அகிலா! உனக்காகத்தான் பஸ்ஸ்டாப்புல எதிர்பார்த்துட்டு நின்னுட்டு இருக்கேன். தூறல் இருக்கறதால குடை எடுத்துட்டு வந்தேன். இதோ இப்ப வந்துடறேன்” என்றவன் திரும்பவும் வீடு நோக்கி நடையிட்டான்.
அகிலா இளநீலவர்ண சுடிதார் அணிந்திருந்தாள். கையிலும் அதே வர்ணத்தில் குடை இருந்தது. அந்தக்குடைக்கும் கீழ் மீசையில்லாத இந்தி திரைப்பட நாயகன் போல ஒருவன் தன் அலைபேசியை அழுத்திக் கொண்டு நின்றிருந்தான். அவர்கள் வந்திருந்த சுஜூகி மழையில் குளித்துக்கொண்டிருந்தது.
“வா அகிலா” என்று கதிர் சொல்லிவிட்டு தன் வீட்டின் கதவை நீக்கி உள்ளே இருவரையும் அழைத்தான். உள்ளே வந்தவர்கள் ஹாலில் இருந்த ஷோபாவில் புதைந்தார்கள்.
“கதிர் இவர் தான் அடைக்கலராஜ். என்னோட கூட வொர்க் பண்றார். இவரைத்தான் நெக்ஸ்ட் வீக் நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்” என்று அவனை இவனுக்கு அறிமுகப்படுத்தினாள் அகிலா. இருவரும் கைகொடுத்து ஹலோ சொல்லிக் கொண்டார்கள். குலுக்குகையில் அடைக்கலராஜின் கை இரும்புக்கை மாயாவியின் கைபோன்றே இருந்தது. தினமும் ஜிம்முக்கு செல்வான் போலிருந்தது.
“நீங்க பேசிட்டு இருங்க! அகில் நான் கடைவீதி வரை போய் ரீசார்ஜ் பண்ணிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அடைக்கலராஜ் வெளியேறினான். கதிர் சமையல் அறைக்குள் நுழைந்தான் காபி போட. அகிலா உண்மையாகவே நழுவிப்போகும் வேதனை இப்போது தான் மனதைப் பிசைந்தது. காபியோடு இவன் ஹாலுக்கு வந்த போது அகிலா மேஜை அருகே நின்றிருந்தாள். இவனைக் கண்டதும் கையிலிருந்த அவர்களின் புகைப்படத்தை ட்ராவை இழுத்து உள்ளே வைத்தாள். அவள் கண்களில் ஈரத்தை சிறிது பார்த்தான் கதிர்.
“ஸாரி கதிர்! அவர் திரும்ப வந்து இந்த புகைப்படத்தை பார்த்தார்னா ஏதாவது நினைச்சுக்குவார்” என்றவள் இவன் கையிலிருந்த காபி டம்ளரை வாங்கிக் கொண்டாள்.
“ஏக்சுவலா நான் இன்னும் குழப்பத்துல இருக்கேன் கதிர். நான் சரியாத்தான் முடிவு எடுத்திருக்கேனான்னும், இது சரியா வருமான்னும் குழப்பம்” என்றவள் தன் திருமண அழைப்பிதழை கைப்பையிலிருந்து எடுத்து இவனுக்கு நீட்டினாள்.
“ஒரு பத்திரிக்கையை வேஸ்ட் பண்ணாதே அகிலா! அடைக்கலராஜ் கிறிஸ்டியனா அகிலா?” என்றான்.
“இந்துவா? கிறிஸ்டியனா? முஸ்லீமா? யாரா இருந்தால் என்ன கதிர்? எந்த பிடிமானமும் இல்லாம என்னால வாழ்க்கையை வாழ முடியாது. என்னோட சர்டிபிகேட்ஸ்களை எடுத்துக்கறேன் வாங்க வந்து பீரோவைத் திறங்க” என்றவள் பீரோ முன்பாக போய் நின்றாள். கதிர் அவளுக்காய் திறந்து விட்டான். அவசரத்தில் இவள் விட்டுச் சென்றிருந்த மூன்று சுடிதார் செட்டுகள் மட்டுமே அந்த பீரோவில் இருந்தன. கதிரின் பேண்ட், சர்ட் கூட அதில் இல்லை. உள் அறையிலிருந்து தனக்கானவற்றை எடுத்துக் கொண்டாள் அகிலா.
வெளியே பைக் ஹாரன் சப்தம் கேட்டது இருவருக்கும். “அவரு வந்துட்டாரு நான் போறேன் கதிர்” என்றவள் இவன் முகம் பாராமலேயே வெளியேறினாள். இவன் ஜன்னல் அருகே சென்று வெளியே பார்த்தபடி நின்றான்.
அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த அடைக்கலராஜ் இவளிடம் வண்டியை எடுக்கச் சொல்லி சமிக்கை செய்தான். இவள் அமர்ந்து ஸ்டார்ட் செய்யவும் பின்னால் தாண்டுக்கால் போட்டு அமர்ந்து கொண்டான். அகிலா வண்டியை கிளப்பும் முன், ‘ஒருமுறையாவது ஜன்னலை பார்ப்பாளா?’ என்று கதிர்வேலன் பார்த்தது வீணாயிற்று. நாம் பொம்மைக்கு ஏங்கும் குழந்தை போன்ற ஒரு முகத்தை ஜன்னலில் காண்கிறோம்.
நான்காவது கியரில் சாலையில் வண்டி பயணித்தபோது பேசி முடித்திருந்த அடைக்கலராஜ் அகிலாவின் காதுக்கருகில் கேட்டான். “கதிர் வீட்டுல பேசிட்டு மட்டும் தானே இருந்தே அகிலா?”
‘க்ரீஈஈச்’ என்று பேரூர் சாலையில் அகிலா போட்ட ப்ரேக்கின் ஒலி வாசகர்களாகிய உங்களுக்கும் விபத்தோ? என்று நினைக்கும் அளவிற்கு கேட்டிருக்கலாம்!
– செப்டம்பர் 2014