சாந்தி எங்கே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,009 
 
 

பொங்கலுக்கு முதல் நாள்; அந்தத் தெருவிலிருந்து சென்ற வருடம் கல்யாணம் செய்துகொண்டு சென்ற பெண்களெல்லாம் தங்கள் கணவன்மாருடன் தாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள், பொங்கலைத் தங்கள் பிறந்த வீட்டில் கொண்டாட!

அவர்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அமுதாவுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, தன் கண்களில் துளிர்த்த நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

“நல்ல நாளும் அதுவுமாக ஆரம்பித்துவிட்டாயா, மூக்கைச் சிந்த? எல்லாம் உன்னால் வந்தவினைதானே?” என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தார் ஆலாலசுந்தரம்.

ஆம், அமுதாவால் வந்த வினைதான் அது-அவள்தான் என்ன செய்வாள், பாவம்! அவளுக்கென்று இருந்த ஒரே ஒரு பெண், தனக்கென்று ஒருவனைத் தானே தேடிக்கொள்ள முயன்றபோது, அவளால் அதைத் தடுக்கவும் முடியவில்லை; தடுக்கக்கூடியதாக அது இருக்கவும் இல்லை. அவளுடைய கடந்த காலக் கதைதான்!

கதையென்றால் ஒரே இதழில் முடிந்து விடும் சிறுகதையாகவும் இருக்கவில்லை, அது; தொடர்கதையாக இருந்தது.

அவளுக்கும் கல்யாணமாகி இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆயினும், அந்தக்கதை இன்னும் முடியவில்லை; தொடர்ந்து கொண்டே இருந்தது!

இளம் பிராயத்தில் அவளுடைய இதயத்தில் எப்படியோ இடம் பெற்றுவிட்ட அந்த இனியவன், இப்பொழுதும்கூட எப்பொழுதாவது ஒரு நாள் அவளைத் தேடிக்கொண்டு வருவான். “எங்கே வந்தாய்?” என்று கேட்டால், “ஒன்றுமில்லை; உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது-வந்தேன்; பார்த்தேன்; வருகிறேன்!” என்று ஏதோ ஒரு விதமாகச் சிரித்துக்கொண்டே போய் விடுவான்.
அவனுடைய சிரிப்பு நெருப்பாயிருக்கும், அவளுக்கு: தண்ணீரால் அணைக்க முடியாத அந்த நெருப்பைக் கண்ணிரால் அணைப்பாள்.

அணைத்த பின்சிலசமயம் ஆத்திரம் பற்றிக் கொண்டு வருவதும் உண்டு, அவளுக்கு. ‘அவன் ஏன் இன்னும் இங்கே வந்து தொலைகிறான்? எதற்காக என்னை இப்படி வதைக்கிறான்?’ என்றெல்லாம் நினைப்பாள்; ‘இன்னொரு முறை வந்தால், இங்கே வராதே என்று சொல்லிவிட வேண்டும்; வந்தால் அவரிடம் சொல்லிவிடுவேன் என்று அவனைப் பயமுறுத்த வேண்டும்’ என்றெல்லாம் தீர்மானிப்பாள். ஆனால் அவன் வந்து நின்றதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, “எங்கே வந்தாய்?” என்ற அதே அசட்டுக் கேள்வியைத்தான் அவளும் கேட்பாள்; “ஒன்றுமில்லை; உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது-வந்தேன்; பார்த்தேன்; வருகிறேன்!” என்ற அதே அசட்டுப் பதிலைத்தான் அவனும் சொல்வான்.

எல்லாம் வாசலோடு சரி; உள்ளே அவன் ஓர் அடிகூட எடுத்து வைப்பது கிடையாது.

ஒரு நாள் தற்செயலாக அவனைப் பார்த்து விட்ட ஆலாலசுந்தரம், “யார், அது?” என்று கேட்டார், அமுதாவை நோக்கி.

“எங்கள் ஊர்ப் பையன்!” என்றாள் அவள், அவரை ஏமாற்றுவதோடு தன்னையும் ஏமாற்றிக் கொண்டு விடலாம் என்ற நினைப்பிலே.

“ஊர்ப் பையனாயிருந்தால் வாசலோடு அவனை நிற்க வைப்பானேன்? உள்ளே வந்து உட்காரச் சொல்கிறதுதானே? என்றார் அவர், ஏமாந்தும் ஏமாறாமல்.

“வா உள்ளே வா!” என்றாள்.அவள், அவருக்காக,

அவன் வரவில்லை; “ஊஹூம்” என்று தலையை ஆட்டிவிட்டு, அவன்பாட்டுக்குப் போய்விட்டான்.

“ஏன் அவன் உள்ளே வரவில்லை?” என்று கேட்டார்.அவர்.

“அவன் ஒரு மாதிரி!” என்று சொல்லி, அவரிடமிருந்து தப்பப் பார்த்தாள் அவள்.

அவர் விடவில்லை; “ஒரு மாதிரி என்றால் பைத்தியமா?” என்று தொடர்ந்தார்.
“அப்படித்தான் தோன்றுகிறது!” என்று பட்டும் படாமல் சொல்லிவிட்டு, அவள் மெல்ல நழுவப் பார்த்தாள்.

“ஐயோ பாவம், கல்யாணமாகிவிட்டதா அவனுக்கு?’ என்றார் அவர், அப்பொழுதும் விடாமல்.

“இல்லை!” என்றாள் அவள், அவரை நோக்கித் திரும்பாமல் அப்படியே நின்று.

“ஒருவேளை கல்யாணமானால் பைத்தியம் தெளிந்துவிடுமோ, என்னமோ?” என்றார்.அவர்.

“பைத்தியம் தெளிந்தால்தானே கல்யாணமாகும்?” என்றாள் அவள், அத்துடனாவது அவர்தன்னை விட்டால் போதுமென்று.

அவர் சிரித்தார்; அவளும் சிரிக்க முயன்றாள், அவருக்காக. ஆனால் வந்தது?-அழுகை, அதை மறைப்பதற்காக அடுக்களையைத் தஞ்சமடைந்து விட்டாள், அவள்!

***

இந்த நிலையிலேதான் ஒரு நாள் வீட்டைக் கூட்டிக் கொண்டிருந்தபோது, அந்தக் கடிதத்தைக் கண்டெடுத்தாள் அவள்.

யாரோ சந்திரனாம்- அவன் எழுதியிருந்தான், அவள் மகள் தாராவுக்கு.

அன்புள்ள தாரா,

சென்ற வருடம் இதே நாளில் நான் உன்னிடம் ‘நாளை உனக்குப் பிறந்த நாள்’ என்று தெரிவித்தபோது, ‘நீங்கள் சொன்னபிறகுதான் என் பிறந்த நாள் என்னுடைய நினைவுக்கு வருகிறது!’ என்று நீ சொன்னது, உன்னுடைய நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். அதே மாதிரி இந்த வருடமும் நினைவுபடுத்திக் கொள்-நாளை உனக்குப் பிறந்த நாள்!

வழக்கம்போல் நாளைமாலை வடபழனி ஆண்டவர் சந்நிதியில் உனக்காக அர்ச்சனை நடக்கும். முடியுமானால் நீயும் வரலாம், எனக்காக உன் அம்மாவிடம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு!

⁠என்றும் உன்னுடைய, ⁠சந்திரன் இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது அவள் எவ்வளவோ கோபத்துடன்தான் படித்தாள்; ஆனால் படித்து முடித்ததும் அவளுக்கு வந்ததோ, சிரிப்பு!

நல்ல பிள்ளைதான், போ!-ஏதாவது ஓர் ஓட்டல் அறைக்கு, இல்லாவிட்டால் ஒரு ‘மாட்டினி ஷோவுக்கு, அதுவும் இல்லாவிட்டால் கடற்கரைக்கு அல்லவா அழைப்பான் இந்தக் காலத்துக் காதலன், காதலியை? இவன் என்னடா என்றால் கோயிலுக்கு அழைக்கிறானே, கோயிலுக்கு!

அதுவும் எதற்காம்?-அங்கே ஏதாவது ஒரு பாழடைந்த மண்டபத்தைத் தேடவா என்றால், அதுவும் இல்லையாம்; அர்ச்சனைக்காம்!

அட, பாவி! நிஜமாகவே நீ அவளைக் காதலிக்கிறயா, என்ன?

இல்லாவிட்டால் ‘முடியுமானால்’ என்றொரு வார்த்தையை வேறு நீ உன்னுடைய கடிதத்தில் சேர்த்திருப்பாயா? ‘வராவிட்டால் உயிரை விட்டு விடுவேன்’ என்று கடிதத்துக்குக் கடிதம் பயமுறுத்தி, கடைசியில் அவள் உயிரை விடும் அளவுக்கு அல்லவா நீ அவளைக் கொண்டுபோய் விட்டிருப்பாய்?

அதிலும், இன்று நேற்று நீ அவளைக் காதலித்தவனாகவும் தெரியவில்லை; சென்ற வருடத்திலிருந்தே காதலித்து வந்திருக்கிறாய்!- அப்படியிருந்தும், இன்றுவரை ‘கன்னி’யாக விட்டு வைத்திருப்பதற்காகவே அவளை நான் உனக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிடலாம் போலிருக்கிறதே?

ஆனால், அவளுடைய அப்பாவுக்கு?- ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வீடு வீடாக ஏறி இறங்க வேண்டும்; ‘இருபதினாயிரம் ரூபாயாவது எண்ணி வைத்துவிட வேண்டும்’ என்று பிள்ளையைப் பெற்றவர் சொன்னால், ‘எண்ணாமல் வைத்தால் எடுத்துக் கொள்ள மாட்டீர்களோ?’ என்று பெண்ணைப் பெற்றவர் கேட்கவேண்டும். ‘பையன் அமெரிக்காவுக்குப் போய் ஏதோ படிக்க வேண்டுமென்று சொல்கிறான்; அதற்காகும் செலவை உம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமோ?’ என்று அவர் கேட்டால், ‘அப்போதே சொல்லியிருக்கக் கூடாதா? அட்சராப்பியாசத்திலிருந்து ஆன செலவுகளைக்கூட அடியேனே ஏற்றுக்கொண்டிருப்பேன்!’ என்று இவர் சொல்லவேண்டும். ‘நகை மட்டும் ஐம்பது பவுன்களுக்குக் குறையக் கூடாது’ என்று பிள்ளையைப் பெற்றவர் சொன்னால், ‘மேலே போகலாமோ, இல்லையோ?’ என்று பெண்ணைப் பெற்றவர் கேட்க வேண்டும். ‘வெள்ளிப் பாத்திரங்களுக்கென்று ஐயாயிரம் ரூபாய் எடுத்து வைக்க முடியுமோ, உம்மால்?’ என்று அவர் கேட்டால், ‘எடுத்து வைக்கிறேன், யாராவது ஏமாந்தால்!’ என்று இவர் சொல்ல வேண்டும். எல்லாம் ஒத்து வரும்போது பெண்ணின் வயது ஒத்து வராமற்போய், இரண்டாந்தாரமாகவோ மூன்றாந்தாரமாகவோ எவன் தலையிலாவது கட்டி வைக்க வேண்டும்-இதற் கிடையில், ‘எனக்கு ஒன்றும் வேண்டாம்; உங்கள் பெண்ணைக் கொடுங்கள், போதும்!’ என்று நீ வந்து நின்றால் அவர் உனக்குக் கொடுக்கவா போகிறார்? -ஊஹாம், அப்பாக்களின் சரித்திரத்திலேயே அது கிடையாதே

‘தான் தேடாத பொன்னுக்கு மாற்றும் இல்லை, உரையும் இல்லை’ என்பதுபோல, அவர் தேடாத மாப்பிள்ளைக்கு எது இருந்து என்ன பிரயோசனம்?

அதற்காக?-தனக்குக் காதற் பரிசாகக் கிடைத்த கண்ணீர், தன் மகளுக்கும் கிடைக்க வேண்டுமா, என்ன?-இது நடக்காது; அடுக்காது!

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் அவனைத் தானும் ஒரு முறை பார்க்கவேண்டும் போலிருந்தது, அவளுக்கு. ‘பொழுது எப்போது விடியும், பொழுது எப்போது விடியும்?’ என்று காத்துக் கொண்டிருந்தாள்: விடிந்தது. ‘மாலை எப்போது மலரும், மாலை எப்போது மலரும்?’ என்று பார்த்துக் கொண்டிருந்தாள்; மலர்ந்தது.

அதற்குள் தன் அலங்காரங்களையெல்லாம் ஒருவாறு முடித்துக்கொண்டு விட்ட தாரா, “அம்மா, அம்மா! இன்று பாலர் அரங்கில் எங்களுக்காக ஏதோ ஒரு படம் போட்டுக் காட்டுகிறார்களாம், அம்மா! போய்விட்டு வரட்டுமா, அம்மா?” என்றாள், அடிக்கோர் அம்மாவைப் போட்டு.

“போய் வா!” என்று ஏதும் அறியாதவள்போல் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, அவள் சென்ற அரை மணி நேரத்துக்கெல்லாம் அவளுக்குத் தெரியாமல் அவளைத் தொடர்ந்தாள் அமுதா. அங்கே…..

ரதியும் மன்மதனுமாகவல்லவா காட்சி தருகிறார்கள், அவர்கள்! எடுத்த எடுப்பிலேயே அவனைப் பிடித்துப் போய் விட்டது அவளுக்கு. எனவே, மானசீகமாக அவர்களை ஆசீர்வதித்துவிட்டுத் திரும்பினாள்.

***

இதெல்லாம் தெரியாத ஆலாலசுந்தரம், ஒரு நாள் தாராவுக்கென்று யாரோ ஒருவனைத் தானே தேடிக்கொண்டு வந்து நின்றபோது, அதையும் சொல்ல முடியாமல் இதையும் ஒப்புக்கொள்ள முடியாமல், “எனக்குக் கல்யாணமே வேண்டாம், அப்பா!” என்றாள் தாரா.

“ஏன்?” என்று கேட்டார் அவர், ஒன்றும் புரியாமல்.

“என்னமோ பிடிக்கவில்லை!”

“பிடிக்கவில்லையாவது! எது எது எந்த எந்தக் காலத்தில் நடக்கவேண்டுமோ, அது அது அந்த அந்தக் காலத்தில் நடந்துதானே ஆகவேண்டும்?”

“நடக்காவிட்டால் எது நடந்துவிடும் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அது ஒரு நாளும் நடக்காது, அப்பா என்னை நீங்கள் நம்பலாம்!” என்றாள் அவள்.

இதைக் கேட்டதும், ‘நல்ல பெண்தான் போ; நீயும் என்னைப்போல் கடைசிவரை கண்ணீர் விட்டே காலத்தைக் கழித்து விடலாம் என்று நினைக்கிறாயா, என்ன?-அதுதான் என் உடம்பில் உயிருள்ளவரை நடக்காது!’ என்று தனக்குத்தானே சூள் கொட்டிக் கொண்டாள் அமுதா.

ஆனால் அடுக்களையை விட்டு அவள் வெளியே வரவில்லை.

அப்பா தொடர்ந்தார்.

“பைத்தியமா, உனக்கு? பையன் ‘என்ஜினிரிங் காலே’ஜிலே படித்துக்கொண்டிருக்கிறான்; அவன் அப்பா பிரசித்தி பெற்ற ‘பில்டிங் காண்ட்ராக்ட்’ ராயிருந்து வருகிறார்; சென்னையிலே மட்டும் அவர்களுக்குச் சொந்தமாக ஐம்பது வீடுகளுக்குமேல் இருக்கின்றனவாம்; அதைத் தவிர அவர்கள் இப்போது இருந்து வரும் பங்களா வேறு ரூபா இரண்டு லட்சத்துக்கு மேல் போகுமாம். நன்னிலத்திலே நாலு வேலி நன்செய் வேறு இருப்பதாகச் சொல்கிறார்கள். புத்தனேரியிலே பத்து வேலி புன்செய் வேறு இருப்பதாகச் சொல்கிறார்கள்…….” இந்த வர்ணனை ‘நிற்கும், நிற்கும்’ என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் அமுதா; நிற்கவில்லை. அத்துடன் தான் அதுவரைகடைப்பிடித்து வந்த பொறுமை வேறு தன்னைக் கைவிட்டு விடவே, “என்ன இருந்து என்ன பிரயோசனம்? மனம் இருக்க வேண்டாமா?” என்று இடைமறித்துக் கேட்டுக் கொண்டே அடுக்களையை விட்டு அவள் வெளியே வந்தாள்.

“மனம் இல்லாமல் எங்கே போயிற்றாம்?” என்று கேட்டுக்கொண்டே அவளை நோக்கித் திரும்பினார் ஆலாலசுந்தரம்.

“சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டீர்களே?”

கேள்விக்குப்பதில் கிடைக்கவில்லை அவரிடமிருந்து; அதற்குப் பதிலாக இன்னொரு கேள்விதான் பிறந்தது.

“என்ன புதிர் போடுகிறாய்?”

“நானும் புதிர் போடவில்லை; அவளும் புத்தி கெட்டுப் போய்விடவில்லை-பையன் நன்றாய்த்தான் இருக்கிறான்; இவளுக்கு ஏற்றவன்தான் அவன்!”

“எவன்?”

“எவனிடம் அவள் தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறாளோ, அவன்!”

இந்தச்சமயத்தில் தன்னையும் மீறி, “அம்மா!” என்று கத்தினாள் தாரா.

“என்னடி?” என்றாள்.அமுதா.

“நீங்கள் அவரைப் பார்த்தீர்களா, அம்மா?”

“ஆமாம், பார்த்தேன்!” என்றாள் அவள்!”

அவ்வளவுதான்; அவளை அப்படியே சேர்த்துக்கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டாள் தாரா.

“இது நடக்காது. என் உடம்பில் உயிருள்ள வரை இது நடக்கவே நடக்காது” என்றார் ஆலாலசுந்தரம், அழுத்தம் திருத்தமாக.

ஆனால் தன்னைப்போலவே தன் மனைவியும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவர் அப்போது அறியவில்லை-எப்படி அறிய முடியும்?

***

கடைசியில் வெற்றி ‘சிவ’னுக்குக் கிட்டவில்லை, ‘சக்தி’க்குத்தான் கிட்டிற்று-ஆம், ஒரு நாள் இரவு தாயின் ஆசியுடன் தந்தைக்குத் தெரியாமல் தன் வீட்டை விட்டு வெளியேறிய தாரா, மறுநாள் காலை தன்னுடைய திருமணத்தைத் திருநீர்மலையில் வைத்து முடித்துக்கொண்டு வந்துவிட்டாள், தன் தந்தையின் தண்டனை எதுவாயிருந்தாலும் அதைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டு விடுவது என்ற தைரியத்துடன்!

இருவரும் எதிர்பாராதவிதமாக வந்து தன்னுடைய கால்களைப் பற்றிக்கொண்டு, “எங்களை மன்னியுங்கள்; மன்னித்து ஆசீர்வதியுங்கள்” என்று கேட்டுக்கொண்டேபோது, ஆலாலசுந்தரம் அவர்களை மன்னிக்கவுமில்லை; மன்னித்து ஆசீர்வதிக்கவுமில்லை. அந்தக் கணமே அவர்கள் இருவரையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளித் தன் வீட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு விட்டதோடு, இதயக் கதவையும் சாத்திக்கொண்டு விட்டார்!

அதற்குப்பின்அந்த வீட்டில் அடித்த புயல், இடித்த இடி, பெய்த மழை எல்லாவற்றுக்கும் தன்னை மட்டுமே ஈடு கொடுத்துக்கொண்ட அமுதா, சற்றே நிலை சாய்ந்து நின்றாலும் தலை சாய்ந்து விடவில்லை!

***

இது நடந்தது சென்ற வருடத்தில்-இன்று, பொங்கலுக்கு முதல் நாளான இன்று-இன்று கூடவா திறக்கக் கூடாது, இந்த வீட்டுக் கதவு அந்தக் குழந்தைகளுக்காக?

அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்கள் அவர்கள், ஒருவருக்கொருவர் அன்பு கொண்ட குற்றத்தைத் தவிர?

‘எதற்கும் ஒரு வார்த்தை சொல்லித்தான் பார்ப்போமே?’ என்று தோன்றிற்று அவளுக்கு; சொன்னாள்-அவ்வளவுதான்; “போய் உன் வேலையைப் பார்!” என்று போட்டாரே ஒரு சத்தம் பார்க்கலாம்-அதிர்வெடிச் சத்தங்கூட அல்லவா அந்தச் சத்தத்துக்கு முன்னால் நிற்காதுபோலிருக்கிறது!

கொஞ்சநஞ்சமிருந்த நம்பிக்கையும் போய் விட்டது, அவளுக்கு. இனிப் பயனில்லை; இவரை நம்பி இனிப் பயனில்லை-தன்னுடைய கடமைக்காவது, தன்னுடைய பங்குக்காவது, தான் ஏதாவது செய்துதான் தீரவேண்டும்.அதை இங்கே வரவழைத்துத்தான் செய்ய வேண்டுமா, என்ன? அங்கேயே போய்ச் செய்துவிட்டு வந்தால் என்னவாம்? இப்படி நினைத்ததும் மெல்ல அடிமேல் அடிஎடுத்து வைத்து அடுக்களைக்குச் சென்றாள்; அஞ்சறைப் பெட்டியைத் திறந்து அதுவரைதான் அவருக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருந்த ஐந்நூறு ரூபாயை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள்.

இனி அவர் வெளியே போக வேண்டியதுதான் பாக்கி; வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு போய் அவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர் வீடு திரும்புவதற்குள் நாம் திரும்பிவிடலாம்…….

இந்த எண்ணத்துடன் அடிக்கொரு தரம் அவரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்; மனுஷன் அப்படி இப்படி நகருவதாகக் காணோம்.

நல்ல வேளையாக அவருடைய நண்பர் நம்மாழ்வார் வந்து, “உங்களால் ஒரு காரியம் ஆகவேண்டும்; வாருங்கள் போவோம்!” என்று அவரை அங்கிருந்து நகர்த்திக்கொண்டு போனார்.

‘அப்பாடா!’ என்று ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, அவர் சென்ற அரை மணி நேரத்துக் கெல்லாம் அவளும் கிளம்பினாள். வாங்க வேண்டியவற்றையெல்லாம் அவசர அவசரமாக வாங்கிக் கொண்டு போய் அவள் அவர்களுடைய வீட்டுக் கதவைத் தட்டியபோது, வந்து திறந்தது யார் என்கிறீர்கள்?-சாட்சாத் ஆலாலசுந்தரமேதான்!

“வா, வா, பொங்கலுக்கு நான் மட்டும் வந்து மாப்பிள்ளையை அழைத்தால் போதாதென்று நீயும் வந்துவிட்டாயா?-வா வா!” என்றார் அவர்.

அமுதா வாயைத் திறக்கவில்லை; அப்படியே அசந்து போய் நின்றாள்.

***

மறுநாள் காலை மற்றவர்களைப்போல அமுதாவும் புது மணத்தம்பதிகளுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடிக்கொண் டிருந்தபோது அவன்-‘அவள் ஊர்ப்பையன்’ வழக்கம்போல் வந்தான்.

“எங்கே வந்தாய்?” என்று கேட்டாள் அவள்.
“ஒன்றுமில்லை; உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது-வந்தேன்; பார்த்தேன்; வருகிறேன்!” என்றான் அவன்.

“ஏன், என்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா, உன்னால்?”

“முடியும்; இன்னொரு கண்ணையும் இழந்து விட்டால்!”

“ஏற்கெனவே ஒரு கண்ணை இழந்து விட்டாயா, என்ன?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் அவள்.

“ஆம், இழந்துதான்விட்டேன்!” என்று வழக்கம்போல் சிரித்துக் கொண்டே நடந்தான் அவன்.

உண்மையில் அவன் இழந்தது கண்ணையல்ல, தன்னைத்தான் என்பதை உணர்ந்த அமுதா, தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

“யாருக்கு யாரால் சாந்தி கிட்டி என்ன பிரயோசனம் ? அவனுக்கும் எனக்கும் சாந்தி சாவில் தான் கிட்டும்போலிருக்கிறது!”

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *