கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 7,041 
 

அது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரி. கல்லூரியின் 50வது வருட விழா. அதையொட்டி கல்லூரியில் படித்த, ஐந்து சிறந்த சாதனையாளருக்கு கெளரவ விருது அளிக்க ஏற்பாடு.

ஐந்து பேரில், ஒருவர் பத்ம பூஷன் டாக்டர் கந்தசாமி. இந்திய அரசின் ஒரு முக்கிய அணு சக்தி விஞ்ஞான மையத்தில் டைரக்டர். நோபெல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

இரண்டாமவர், கோபாலன், ராணுவத்தில் பணி புரியும் ஒரு கர்னல். கார்கில் புகழ். நாட்டு சேவைக்காக, வீர சக்ர பதக்கம் பெற்றவர்.

மூன்றாமவர், முகம்மது ரபி , பெரிய போலீஸ் அதிகாரி. கறை படியாத சிறந்த அதிகாரி என பெயர் பெற்றவர். தீவிரவாதத்தை ஒழிக்க, ஓயாமல் உழைப்பவர். சிறந்த எழுத்தாளரும் கூட.

நான்காமவர், பத்மஸ்ரீ டாக்டர். நான்சி, நாடறிந்த புற்று நோய் சிகிச்சை நிபுணர்.

ஐந்தாவது, சிம்மன், ஒரு இளம் சினிமா நடிகர். இளைஞர்களின் ‘காதல் இளவல்’. இளைஞிகளின் ‘இதய துடிப்பு’. பி.ஏ, இளங்கலை பட்டம் பெற்று, பின் நடிக்க சென்று விட்டார். சமூக சேவையில் நாட்டம் . தனது ரசிகர் மன்றம் மூலமாக, ரத்த தானம், எய்ட்ஸ் தடுப்பு, உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு என பல நற்பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

பட்டமளிப்பு அரங்கத்தில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் களை கட்டியிருந்தது. கோலாகலமும் கும்மாளமும் அரங்கம் இரண்டு பட்டு கொண்டிருந்தது.

முதல் வரிசையில், ஐந்து சிறப்பு விருந்தினர்களும் அமர்ந்திருந்தனர். நிறைய இளசுகளின் கண்கள் நடிகர் சிம்மன் பேரில். கொஞ்சம் காதலாகி கசிந்து..வழிசல்.

அரங்க மேடை. “அமைதி ! அமைதி ! சைலன்ஸ் ப்ளீஸ்! ” . கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார். பின்னர், பல்கலை கழக துணை வேந்தர், மற்றும் சில தலைமை பேராசிரியர்கள் பேசிய பின், கெளரவ பட்டமளிப்பு விழா துவங்கியது.

முதலில், கந்தசாமி, பின்னர் கோபாலன், முகம்மது ரபி, டாக்டர் நான்சி என ஒருவர் பின் ஒருவராக மேடையேறி விருதை பெற்றுக் கொண்டனர். நன்றி கூறினர். அரங்கம் அமைதியாக இருந்தது. மாணவரிடையே எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

கடைசியாக, முதல்வர், இளம் நடிகரை மேடைக்கு அழைத்தார். அவ்வளவுதான், மாணவர் கூட்டத்தில் ஒரு சிலிர்ப்பு. ஒரு கிளு கிளுப்பு. . நடிகர் சிம்மன் மேடை ஏறியதும், இரண்டாவது வரிசையிலிருந்த மாணவர்கள் எழுந்து கரவொலி எழுப்பினர். ஒருவரை பார்த்து மற்றொருவர். காட்டுத்தீ போல, மற்ற மாணவரிடையே கரவொலி பற்றி கொண்டது.

சில நொடிகளில், அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டனர், ஒரு சிலரை தவிர. கைத்தட்டல் அரங்கம் அதிர்ந்தது.

முன் வரிசை நான்கு சிறப்பு விருந்தினர்களுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. நாமும் எழுந்து கொள்ள வேண்டுமா? கரவொலி எழுப்ப வேண்டுமா? அல்லது இப்படியே அமர்ந்து இருக்கலாமா?

நாமோ பெரிய படிப்பு படித்தவர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள். விருது வாங்க வந்தவர்கள். இந்த சின்ன பையனுக்காக எழுந்து கொள்வதா? கர்னல் கோபாலனின் முகம் கறுத்து விட்டது. மற்ற மூவர் நிலையும் கிட்ட தட்ட அதுவே. சே! ஒரு நடிகனுக்கு கொடுக்கும் வரவேற்பும், மதிப்பும் நமக்கில்லையே! ஆற்றாமையாக இருந்தது அவர்களுக்கு.

ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். தயக்கம்.
பார்த்துகொண்டே இருக்கையில், மேடையில் இருந்த சில மூத்த பேராசிரியர்கள் எழுந்து, நடிகரை வரவேற்றனர். சிலர் கை தட்ட, தயங்கி தயங்கி கல்லூரி முதல்வரும், துணை வேந்தரும் கரவொலி எழுப்பினர். அவர்களுக்கும் தர்ம சங்கடம்.

கல்லூரி முதல்வருக்கு நடிகரை விருது பட்டியலில் சேர்க்க விருப்பமேயில்லை. ஆனால், மாணவ சங்க கோரிக்கைக்கு உடன் பட்டாக வேண்டிய கட்டாய நிலை.

வேறு வழியில்லை. வேண்டா வெறுப்பாக, முதல் வரிசை நான்கு சிறப்பு விருந்தினரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றனர். மேம்போக்காக கை தட்டினர்.

கந்தசாமி முணுமுணுத்தார் “நடிகனை தனியாக கூப்பிட்டு கவுரவித்திருக்கலாம். இப்போ, நமக்கு கொஞ்சம் தலை குனிவுதான்.”.

“ஆமாம்! இந்த கால பசங்களுக்கு ஏன் தான் இந்த சினிமா மோகமோ? உருப்பட மாட்டாங்க ! அழைப்பை ஏற்று ஏண்டா வந்தோமென்று இருக்கு. ” ஆதங்கப் பட்டார் கர்னல் கோபாலன்.

“நடிகனைப் பாருங்க. தாடியும், ஜீன்ஸ் பாண்டும். சகிக்கலை.” – புழுங்கினார் ரபி ஐ.பி.எஸ்.

“இன்றைய கவர்ச்சி இதுதான்! நம்ப சேவையை யார் மதிக்கறாங்க?.” –வருந்தினார் டாக்டர் நான்சி.

மேடையில் விருது வாங்கியதும், நன்றி சொல்ல நடிகர், மைக் அருகே சென்றார். மாணவர் கரகோஷமும் சீழ்க்கை ஒலியும் காதை செவிடாக்கியது.

சிம்மன் பேசத்தொடங்கினான்.

“மதிப்புக்குரிய துணை வேந்தர் அவர்களே!, முதல்வர் அவர்களே, மரியாதைக்குரிய பேராசிரிய பெருந்தகைகளே, கெளரவ விருது வாங்கும் விஞ்ஞானி கந்தசாமி ஐயா போன்ற நாட்டின் சிறந்த தூண்களே! மாணவ மாணவி நண்பர்களே! அனைவருக்கும் வணக்கம்.

உங்களது ஆர்வமும் பாராட்டுக்களும் என்னை திக்கு முக்காட வைத்தது. மிக்க நன்றி. ஆனால்…. இதற்கு நான் உரியவன் அல்ல….”

நிறுத்தினான். அரங்கமே அமைதி. ஐந்து வினாடிக்கு பிறகு தொடர்ந்தான்.

“நான் நிஜமல்ல. நிழல்.

நாட்டுக்காக தங்களை அற்பணிக்கும் விஞ்ஞானி ஐயா, கர்னல் சாப், டி.ஐ.ஜி சார், மதிப்புக்குரிய டாக்டர் நான்சி அம்மா போன்ற இவர்களே உண்மையில் நிஜம். இவர்கள் தொண்டுதான் தேச தொண்டு. இவர்களது பங்கு நாட்டின் அச்சாணி போல. அவர்களால், நமது கல்லூரிக்கும், பல்கலைக் கழகத்துக்கும், மாநிலத்திற்கும் , ஏன் நமது நாட்டிற்கே பெருமை.

இவர்களுடன் சேர்ந்து இந்த மேடையை பகிர்ந்து கொள்வதே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் படித்த கல்லூரியில் நான் படித்தேன் என்பதே எனக்கு கவுரவம். உங்களுடன் சேர்ந்து அவர்களை கவுரவிக்கும் இந்த விழாவில் உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும் அவர்களை என் சிரம் தாழ்த்தி பணிகிறேன்.

அந்த திருப்தியுடன், அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.”

சிம்மன் பேசி முடித்தவுடன், கரவொலி விண்ணை பிளந்தது. முதல்வர் முகத்தில் பெருமை. ‘எனது மாணவன்’. அருகில் சென்று கைகுலுக்கி விடையளித்தார்.

மற்றவருடன் சேர்ந்து , இப்போது கெளரவ விருது பெற்ற நால்வரும் தயங்காமல் எழுந்து கை தட்டினர். முழு விருப்பத்துடன். முகத்தில் மலர்ச்சியுடன்.

சிம்மன் மேடையிலிருந்து இறங்கி, நான்கு சிறப்பு விருந்தினரையும் வணங்கி கைகுலுக்கி விடை பெற்றான்.

கந்தசாமி “ ரொம்ப அழகாக பேசினான். இல்லை?”
டி.ஐ.ஜி “ நம்மை உயர்த்திவிட்டான். ஹி இஸ் கிரேட்! ”
கர்னல் கோபாலன். “ஆமாம். தவறாக நினைத்து விட்டேன்” . அவரது விழியோரம் பனித்திருந்தது
டாக்டர் நான்சி “ பிரமாதம்!. ரொம்ப பெருந்தன்மை சிம்மனுக்கு!’

****

விழா முடிந்து விடை பெறும் பொது, கந்தசாமி கேட்டார் “கர்னல், சிம்மன் போகும்போது நம்மை பார்த்து கண் சிமிட்டினானா என்ன?”

“எனக்கும் அப்படித்தான் தோன்றியது! விளையாட்டு பிள்ளை! ” என்றார் கர்னல்.

****

சிம்மன் தனது காரில் ஏறி அமர்ந்தான். அவனது அம்மாவை அலைபேசியில் அழைத்தான். .

“என்ன சிம்மா! விழா முடிந்ததா? விருது கொடுத்தார்களா?”

“ வாங்கிட்டேம்மா. அம்மா! இன்னொரு விஷயம். அதுக்குத்தான் உன்னை கூப்பிட்டேன். விழாவிலே, இன்னைக்கு அப்பாவை எழுந்து நின்னு எனக்கு கைதட்டல் போட வைத்து விட்டேன். அவரை அழ கூட வைத்து விட்டேன்.”.

“அப்படியா ! அப்பாவையேவா? எதற்கும் அசர மாட்டாரே !பெரிய சாதனை தாண்டா இது! கர்னல் பிள்ளையா? கொக்கா? அவர் உன்னோட பேசினாரா சிம்மா?”

“இல்லேம்மா! அவருக்கு நான் மிலிடரிலே சேரலைங்கற கோபம் இன்னும் குறையலே!.”

அம்மா சிரித்தாள் “பரவாயில்லே விடுடா! இனியாவது உன்னை தனது மகன் என்று சொல்லிக்கிறாரா பார்ப்போம்!. எல்லாம் சரியாயிடும்! “

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)