தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,301 
 

கேட்டை யாரோ தட்டுகிற சப்தம் கேட்டது.
வேணுகோபால், “டிவி’ ஒலியைக் குறைத்தான். எழுந்து, ஜன்னல் திரையை விலக்கி, தெருவைப் பார்த்தான்.
வெளியில் முருகானந்தம். முகம் மலர்ந்த வேணுகோபால், திரையை மூடிவிட்டு, வாசல் கதவைத் திறந்தான். சாவி கொண்டு போய் கேட்டை திறந்து, “”வா… வா…” என்று வரவேற்றான்.
“”சவுக்கியம் தானே…” என்றபடி, உள்ளே வந்தான் முருகானந்தம்.
அவன் உள்ளே வந்ததும், கேட்டை மூடிய வேணுகோபால், எதிர் வீட்டின் மீது பார்வையோட்டினான். புயலடித்து ஓய்ந்தது போல ஒரு மவுனம் அந்த வீட்டில். அப்படியே தெருவை நோட்டமிட்டான். பிறகு திரும்பி வந்து…
“”நேத்தே வர்றேன்னே…”
“”எதிர்பாராத வேலை… வீட்ல யாருமில்லையோ?” என்றபடி, வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை எடுத்து வைத்தான்.
“”எல்லாரும் திருவிழாவுக்கு போயிருக்காங்க. எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து?”
“”எனக்கும் உன் ஞாபகம் தான். என்ன பண்ணட்டும். மதுராந்தகத்துக்கு தூக்கியடிச்சுட்டான் ஒரேயடியா. அதிகாரிங்க கை கால பிடிச்சு, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, மறுபடி சென்னைக்கு வர்றதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிடுச்சு. வந்ததும் முதல் விசிட் உன் வீட்டுக்குத் தான்.”
“”இன்னைக்கு வந்ததும் நல்லதா போச்சு. நேத்து வந்திருந்தால், நம்மால் பேசக்கூட முடிஞ்சிருக்காது… அப்படி ஒரு ரகளை, எதிர் வீட்டில்…”
“”என்னாச்சு?”
“”சொல்றேன்… களைச்சு வந்திருப்பே, கொஞ்சம் சிரமபரிகாரம் பண்ணிக்க,” என்று, ப்ரிட்ஜிலிருந்து குளிர்பானம் எடுத்து வைக்க…
“”சார்…” என்று குரல்.
“”யாரு?”
“”கான்ட்ராக்டர் அனுப்பினாரு…”
“”வந்துட்டான் கடன்காரன்,” என்றபடியே கதவைத் திறந்தான்.
“”அதான், சாயங்காலம் நானே வந்து தர்றேன்னு உங்க ஓனருக்கு சொன்னேனே… அதற்குள் என்ன அவசரம்?”
“”இரும்பு கடைக்கு கொடுக்கணும் சார்.”
“”நில்லு…” என்று சொல்லிவிட்டு, உள்ளே போய், பீரோவிலிருந்து பணம் கொண்டு வந்து முருகானந்தம் கையில் கொடுத்து, “”இதைக் கொஞ்சம் எண்ணு…” என்றான்.
எல்லாம் ஆயிரம் ரூபாய் தாள்கள். மொட மொடப்பான சலவை நோட்டுகள். மொத்தம் இருபத்தைந்து நோட்டுகள்.
“”இருபத்தைந்தாயிரம் இருக்கு.”
அதை வாங்கி, வந்தவனிடம் கொடுத்து, “”சரியாயிருக்கான்னு எண்ணிப் பார்த்து எடுத்துகிட்டு போ…” என்றான்.
வந்தவனும், ஒருமுறைக்கு இருமுறை எண்ணி சரிபார்த்து  கிளம்பியதும், கேட்டைப் பூட்டினான் வேணுகோபால்.
“”பேக் சைட்ல ரூம் எக்ஸ்டண்ட் பண்ணினேன். பத்துக்கு பத்து போட ஒரு லட்சமாயிட்டுது. முக்கால்வாசி செட்டில் பண்ணிட்டேன். கால்வாசிக்கு, இப்படி கால்ல சுடு தண்ணி கொட்டின மாதிரி பதைக்கிறானுங்க…” என்றபடி, நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
“”ரெண்டு பீர் பாட்டில், விஸ்கி புல் பாட்டில் வாங்கி வச்சிட்டேன். இப்பவே ஓப்பன் பண்ணிடவா?”
“”கொஞ்சம் நேரம் போகட்டும். இப்போதைக்கு இது போதும்,” என,  குளிர்பானத்தை கையிலெடுத்த முருகானந்தம், “”ஆமாம்… எதிர் வீட்ல என்ன சமாச்சாரம் நேத்து?”
“”அதை ஏன் கேட்கற… சும்மா சினிமால வர்ற கிளைமாக்ஸ் காட்சி மாதிரி, ஒரே அடிதடி, பரபரப்பு…”
“”அது ரிடையர்டு ஸ்டேஷன் மாஸ்டர் வீடு தானே… அவர் மகன் கூட பெங்களூருல வேலையில இருக்கிறதாய் சொல்லியிருக்கியே…”
“”ஆமாம்… வீட்டை வித்துடலாம்ன்னு மகன் சொல்லியிருக்கான். ஏதோ கடன் இருக்கும் போல தெரியுது. இவங்களும் சரின்னுட்டாங்க. அட் எ டைம், ரெண்டு, மூணு பார்ட்டி மோதுச்சு. பெரிசு ஒரு பார்ட்டிகிட்ட அட்வான்ஸ் வாங்கிருச்சி. முதல் பார்ட்டிய விட அதிகமா தர்றேன்னு இன்னொரு பார்ட்டி சொல்லவும், முதல் பார்ட்டியை கூப்பிட்டு, அட்வான்சை திருப்பி கொடுத்திருக்கார்.
“”என் பையன் இப்ப வீடு விக்க வேணாம்ன்னு சொல்லிட்டான். விக்கறதாயிருந்தால் என்னைக்குன்னாலும், உங்களுக்கே விக்கறேன்னு சொல்லிட்டு, சைலன்ட்டா ரெண்டாவது பார்ட்டிக்கு வித்துடுச்சு. இந்த சங்கதி தெரிஞ்சதும், முதல் பார்ட்டி டென்ஷன் ஆயிட்டான்…
“”அவனும், வீட்டை வாங்கினவனும், தொழில்முறை விரோதிங்க. இவன் பேசி வச்ச இடம், அவனுக்கு கை மாறியது பெரிய கவுரவ பிரச்னையா போச்சு. விடுவானா…
“”நேத்து பகல் பதினொரு மணி இருக்கும். “சர் சர்’ன்னு மூணு காருங்க வந்து நின்னுச்சு… வீட்டு முன்னால கார் நிக்குதேன்னு எட்டிப் பார்த்தேன். கார்லயிருந்து சில பேர் இறங்கினாங்க. டமார்னு கேட்டை உதைச்சுகிட்டு உள்ளே போனாங்க. தொடர்ந்து வீட்டுக்குள்ள, “பட பட’ன்னு ஜன்னல சாத்திக்கிட்டு… “அய்யோ குய்யோ’ன்னு ஒரே அலறல்… ரெண்டு நிமிஷத்துல ஆளுங்க வெளியில் வந்து கார்ல ஏறினாங்க. அடுத்த நொடி காருங்க விர்ரு… விர்ருன்னு கிளம்பிப் போச்சு…
“”பெருசுங்கள நல்லா சாத்திட்டானுங்க ரவுடிங்க…” என்று, சினிமா காட்சியை விவரிப்பது போல, சுவாரசியமாக விவரித்தான் வேணுகோபால்.
“”இதெல்லாம் பார்த்துகிட்டு சும்மாவா இருந்தே…”
“”என்ன பண்ணச் சொல்றே…”
“”தடுக்கறதுக்கு எந்த முயற்சியும் பண்ணலையா?”
“”ஏன்… என்னை என்ன சினிமா ஹீரோன்னு நினைச்சியா… பாய்ஞ்சி போய், ரவுடிங்கள அடிச்சு, பெருசுங்கள காப்பாத்தறதுக்கு. அவனவன், கையில உருட்டுக் கட்டையும், அருவாளுமா வந்து இறங்கியிருக்கான். பார்க்கற போதே, நடுக்கம் வந்துட்டுது. குறுக்கே போயிருந்தால், ஒரே அடியில மண்டையை உடைச்சிருப்பாங்க. அப்புறம் என் குடும்பம் போற வழி என்ன… இப்படியொன்னு நடக்கும்ன்னு தெரிஞ்சதும், தெருவிலிருக்கிற அத்தனை வீடும் கதவை சாத்திருச்சில்ல…”
“”தடுக்க முடியலைன்னா, அட்லீஸ்ட் போலீசுக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்…” என முருகானந்தம் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஜீப் ஒன்று வந்து எதிர் வீட்டு வாசலில் நின்றது. அதிலிருந்து, எஸ்.ஐ., ஒருவர் மிடுக்காக இறங்கினார், இரண்டு கான்ஸ்டபிள்களுடன்.
ஜன்னல் வழியாக பார்த்தான் வேணுகோபால்.
அவர்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரணை நடத்துவது தெரிந்ததும், பரபரப்படைந்தான்.
“”முருகு… போலீஸ் வந்திருக்கு. இங்கேயும் வருவாங்க. நீ எதும் வாய் திறக்காத. நான் சொல்றதுக்கு ஆமாம்ன்னு மட்டும் சொல்லு…” என்று, சொல்லும் போதே, கேட் தட்டப்பட்டது.
போய் கதவை திறந்து, “”ப்ளீஸ் உள்ளே வாங்க சார்…” என்றான்.
“”நேத்து மத்தியானம், எதிர் வீட்டுக்கு சில பேர் வந்து, அந்த வீட்டிலிருந்த பெரியவர்களை தாக்கியிருக்காங்க… தெரியுமா?”
“”கேள்விப்பட்டேன் சார்… ரொம்ப வருத்தமா இருந்துச்சு. நல்லவங்க சார் அவங்க… அவங்களுக்கு இப்படி நேர்ந்திருக்கக் கூடாது…”
“”அதைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்… நீங்க பார்த்தீங்களா… வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?”
“”மனைவி, குழந்தைகள் எல்லாம், திருவிழாவுக்கு ஊருக்கு போய்ட்டாங்க. நானும், நேத்து வீட்ல இல்லை. நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். இவர் தான் அந்த நண்பர்.”
போலீஸ் முருகானந்தம் பக்கம் திரும்பி, “”நீங்க எங்க இருக்கீங்க?”
“”அண்ணா நகர்…”
“”இவர் நேத்து உங்க வீட்ல இருந்தாரா?”
வேணுகோபாலை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “”ஆமாம் சார்…” என்றான். இரண்டொரு கேள்விகளுக்குப் பின் போலீஸ் வெளியேறிவிட, “”ஏன் வேணு… சம்பவம் நடந்தப்பதான், அதை தடுக்க எந்த முயற்சியும் செய்யல; அட்லீஸ்ட் இப்பவாவது போலீஸ்கிட்ட சொல்லியிருக்கலாம்ல. வழக்கை விசாரிக்க போலீசுக்கு ரொம்ப உதவியாய் இருந்திருக்குமே… படிச்ச நீயே, உண்மையை மறைக்கலாமா? நீ பொய் சொன்னதுமில்லாம, என்னையுமில்ல சொல்ல வச்சிட்ட…”
“”பெரியவங்க தாக்கப்பட்டது எனக்கும் வருத்தம் தான். அதுக்காக, போலீஸ்கிட்ட உண்மையைச் சொன்னால், என்னை, “ஐ விட்னஸ்’ ஆக்கி, கேசுல சேர்த்துடுவாங்க. கோர்ட்டுக்கு போச்சுன்னா… சாட்சி சொல்ல அலையணும். அதோடு போச்சா… அடிச்சவன், படியேறி வந்து, சாட்சி சொல்லக்கூடாதுன்னு மிரட்டுவான். ரெண்டு தரப்புக்கு நடுவுல மாட்டிக்கிட்டு, நம்ம பிழைப்பு கெட்டுப் போகும். சென்டிமென்ட் முக்கியமில்லை; சேப்டி தான் முக்கியம்…” என்றபடி, மதுபாட்டிலை எடுத்தான் வேணுகோபால்.
இது நடந்து பத்து நாள் கடந்திருக்கும். அன்று காலை வேணுகோபால், ஆபிசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.
அறை கட்டிக் கொடுத்த கான்ட்ராக்டர் வந்து, வீட்டின் முன் இறங்கினான்.
“”என்ன விஷயம்?”
“”இருபத்தைந்தாயிரம் ரூபாய் பேலன்ஸ் நிக்குதே… வாங்கிட்டு போலாம்ன்னு வந்தேன்…”
“”எத்தனை முறை கொடுப்பாங்களாம்?”
“”எப்ப கொடுத்தீங்க…”
“”பத்து நாளுக்கு முன்ன, உங்க ஆள் வந்து வாங்கிட்டு போனானே… இருபதைந்து ஆயிரம் ரூபா நோட்டு. என் கையால எண்ணி கொடுத்தேனே…”
“”இந்த பையன்கிட்டயா?” வண்டியிலிருந்து இறங்கி வந்தான் அவன்.
“”ஆமாம்… இவனே தான்…”
“”பொய். இவர் அன்னைக்கு பணமே கொடுக்கலை. வாய்க்கு வந்தபடி பேசி, பத்து நாள் கழிச்சு வந்து பாரு… இருந்தால் கொடுக்கிறேன்னு, கழுத்தைப் பிடிச்சு வெளியில் தள்ளாத குறையா விரட்டினாரு, முதலாளி…”
திடுக்கிட்டான் வேணுகோபால். அடி வயிற்றில் அமிலம் சுரந்தது. அவன் மீது பாய்ந்தான்.
“”பொய்யா சொல்ற! அடிச்சி பின்னிப்புடுவேன் ராஸ்கல்.”
“”நிறுத்துங்க சார்… அடிச்சுடுவீங்களா அவனை… பார்த்துகிட்டு நான் சும்மா இருந்துடுவேனா… அவன் பத்து வருஷமா என்கிட்ட வேலை பார்க்கறான். பண விஷயத்துல, அவனைப் போல நாணயஸ்தனை பார்க்க முடியாது. சும்மா டிராமா போடாம, பணத்தை செட்டில் பண்ணுங்க…” என்றார் கான்ட்ராக்டர், சட்டைக் காலரை உயர்த்தியபடி.
“”என்னங்க இதெல்லாம்… கான்ட்ராக்டருக்கு கொடுத்தேன்னு பொய் சொல்லிட்டு, அந்த பணத்தை என்ன பண்ணினீங்க…” என்றாள் மனைவி.
“”நீயும் அவங்களோடு சேர்ந்துகிட்டு என்னை குற்றவாளி ஆக்கிடாதே… இப்படி ஏதும் ஆகக்கூடும்ன்னு தெரிஞ்சு தான், சாட்சியை வச்சுகிட்டு பணம் கொடுத்தேன். இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும், நான் பணம் கொடுத்த உண்மையும், இவன் சொல்ற பொய்யும்…” என்றவாறு அவசரமாக முருகானந்தனுக்கு போன் செய்தான் வேணுகோபால்.
“”முருகு… நீ என் வீட்டுக்கு வந்த அன்னைக்கு, உன் எதிர்ல தானே, ஒரு ஆளுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். நீ கூட எண்ணிப் பார்த்தீயே… அவன் சரியான பிராடு ஆளா இருக்கான். பணமே வாங்கலைன்னு சொல்றான். முதலாளியும், நான் சொல்றத நம்ப மாட்டேங்கறாரு… என் மனைவியும் என்னை சந்தேகப்படறா… நீ உடனே புறப்பட்டு வா…” என்று படபடத்தான்.
மறுமுனையிலிருந்து நிதானமாக பதில் வந்தது.
“”என்ன வேணு… என்னென்னமோ பேசற… நான் எப்போ உன் வீட்டுக்கு வந்தேன்… மெட்ராசுக்கே இன்னைக்கு தானே வந்திருக்கேன்…”
“”முருகு… தமாசு பண்ண இது நேரமில்லை. மேட்டர் சீரியஸ். கத்திமுனையில் நின்னுகிட்டிருக்கேன் நான். இப்ப நீ வந்து சாட்சி சொல்லலைன்னா, விபரீதமாயிடும்…”
“”டென்ஷனாகாத வேணு. இது உன் பிரச்னை. நீ சொல்லியே நம்பாதவங்க, நான் சொல்லியா நம்பப் போறாங்க. நண்பனுக்காக பொய் சொல்றேன்னு தான் நினைப்பாங்க. போலீசுக்கு போனாலும், என் சாட்சி  எடுபடாது… வேற வழியிருக்கான்னு யோசிச்சு பாரு…” என்று போனை துண்டிக்க, அயர்ந்து போய் தலை உயர்த்தினான் வேணுகோபால். எதிர் வீடு தன்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது அவனுக்கு.

– எஸ்.சங்கிலி கருப்பன் (நவம்பர் 2010)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *