கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 9,458 
 
 

பால கிருஷ்ணன் டி.வி.எஸ். 50 யை நிறுத்தி விட்டு குழந்தை பிரியாவை இறக்கி விட்டான். அதற்கு இன்னமும் தூக்கம் முழுவதுமாகக் கலையவில்லை. அப்பா கையைப் பிடித்தவாறே பார்க்குக்குள் நுழைந்தது.

சுற்றிலும் மரங்கள். பூச்செடிகள். சுமார் அரை கி.மீ. அளவுக்கு சதுரமான நடப்பதற்கான பாதை. நடுவில் உட்கார சிமின்ட் பெஞ்சுகள். ஒரு உட்சதுர சுற்றுக் கம்பி வேலிக்குள் சறுக்கு மரம். ஊஞ்சல். புல் அப் செய்யும் பார். பாரலல் பார் என்று விளையாட்டுத் திடல்.

வெய்யில் இன்னும் வரவில்லை. சுமார் முப்பது பேர் விட்டு விட்டு ஒருவராக இருவராக நாலைந்து பேர்களாக பிரதட்சணமாக நடந்து கொண்டிருந்தார்கள். விதம் விதமான நடைகள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய பிரச்னை, மூட்டுவலி, தொப்பை, அழகு, ஃபாஷன் என்று எவ்வளவோ காரணங்கள். வித வித ஆடைகள்.
வேகங்கள். யாரோ ஒருவர் எதிர் திசையில் இடம் வந்தார்.

பாலகிருஷ்ணனுக்கு இது முதல் முறை. அவன் வாழ்நாளில் வாக்கிங் போனதில்லை. அவன் சென்னையில் இதுகாறும் இருந்த தெருக்களில் நடப்பதே ஒரு கலை. பீச் கொஞ்சம் தொலைவில் இருந்தது. வாக்கிங் போகும் எண்ணம் கூட வந்ததில்லை. அது போன்ற விஷயங்கள் தனக்கு விதிக்கப் பட்டதில்லை என்று கூட அவனுக்குத் தோன்றியதில்லை.

உத்யோக உயர்வுடன் மாற்றலுமாகி கோவைக்கு வந்ததும் அதன் சீதோஷ்ணமும், அருகாமையில் இருந்த பார்க்கும், வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலுக்கான சாத்தியமும் இன்று உந்தி அவனை இங்கு அனுப்பியிருக்க வேண்டும்.

அப்பாவும், தங்கையும் சென்னையில் இருந்தார்கள். அதே ஒண்டுக் குடித்தனம். இரண்டு வாரத்துக்கு முன் அம்மாவும், மனைவியும், பிரியாவும் அவன் கூட கோவைக்கு வந்தார்கள். அம்மா குடி வைத்து விட்டு அடுத்த வாரம் போய் விடுவாள். தங்கை பி.எஸ்ஸி. கடைசி வருஷம். முடிந்ததும் குடும்பம் இங்கே வந்து விடும்.

இந்த வீட்டில் ஒரு ஹால், மற்றும் இரண்டு அறைகள், சமயலறை என்று இருந்தது.சின்னதுதான். ஆனால் திருவல்லிக்கேணியின் கூடம், சமயலறை, காமரா அறை என்ற ரயில் பெட்டி ஜாகையை விட சௌகர்யமாக இருந்தது. முக்கியமாக பொது கக்கூஸ், குழாயடி தொந்தரவுகள் இல்லை.

பால கிருஷ்ணனுக்கு ஏ.சி. கோச்சில் பயணிப்பது, லிஃப்டில் போவது, ஆங்கிலத்தில் பேசுவது, சூப்பர் மார்க்கெட்களில் பொருள் வாங்குவது முதலியவை இதயத் துடிப்பை அதிகப் படுத்தும் செயல்பாடுகள். ஹோட்டலுக்குப் போவதே அபூர்வம். போனாலும் அங்கு சர்வரிடம் ஆர்டர் செய்வது ரொம்பக் கஷ்டமான காரியம். ஏனோ அவனுக்கான சர்வர்கள் செவிடர்களாகவே இருந்து விடுகிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு எடுபிடியாக ஆபீஸ் பார்ட்டிக்குப் போன போது அவன் செத்துப் பிழைத்தான்.

அவனுக்குப் பணக்காரர்கள் மீதோ பளபளப்பான வாழ்க்கை மீதோ ஆசையும் இல்லை. எரிச்சலும் நிச்சயம் இல்லை. அவை அவன் உலகத்திலோ, அகராதியிலோ, ப்ரக்ஞையிலோ, ஸ்மரணையிலோ இல்லாத விஷயங்கள்.

இரண்டே பான்ட், சட்டை, இரவல் வாங்கிய அல்லது இரண்டாம் கை புத்தகங்கள், கால்நடை, அம்மா போடும் சாப்பாடு, அப்பாவின் வளவளாப் பேச்சு இவற்றுக்கிடையே வளர்ந்தவன்.

வாழ்க்கை எல்லாவற்றையும் நேரிடச் செய்து விடுகிறது. அவனுக்கும் படிப்பு முடிந்து வேலையும் கிடைத்து கல்யாணமும் ஆகி, காய் வைத்தால் காலையில் பழுத்துக் கனிந்து விடும் காமிரா அறையில் இயற்கையின் ரஸவாதங்களும் நடந்து பிரியாவும் வந்துதித்து அவளுக்கும் வயது ஆறாகப் போகிறது.

கோவைக்கு உத்யோக உயர்வோடு மாற்றல் வந்தபோது ‘இந்த திருவல்லிக்கேணி வாழ்ககையை’ மாற்றுவது பற்றி யோசிப்பது கூட நரக வேதனையாகி அதை கேன்சல் செய்ய எவ்வளவோ முயன்றான். கூடக் கிடைக்கும் ஆயிரம் ரூபாயும், அப்பாவி மனைவிக்கு கிடைக்கக் கூடிய கொஞ்ச நாள் சுதந்திரத்தைப் பற்றி தெளிவின்றி லேசாக உணர்ந்து மறந்து போன சாத்தியமும் அவனை இங்கு கொண்டு வந்து சேர்த்தன.

பணத்தைத் துரத்துபவர்கள் பணக்காரர்கள் என்று சொல்கிறார்கள். ஏழைகளுமல்லவா. உண்மையில் கண்ணுக்கே தெரியாத அதை ஓயாமல் துரத்துபவர்கள் அவர்களே. எப்பொழுதும் கண்ணுக்கே தெரியாமல் தூரத்தில் செல்லும் அதன் குதியங்கால் தெரிந்ததாய் நினைத்து பாலகிருஷ்ணன் கோவை வந்தான்.

சென்னைவாசியான அவனுக்கு தென்னை மரத்தைத் தவிர தாவர அறிவும் காக்காயைத் தவிர பறவை அறிவும் கிடையாது. பார்க்கில் இருந்த மரங்களும் செடிகளும் அவன் கண்ணில் படவில்லை. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், லிஃப்ட் இவற்றுக்குள் ஆவது போலவே என்ன செய்வது என்ற திகைப்பு அவனுக்கு வந்தது. தானும் பிரியாவும் மட்டும்தான் செருப்போடு இருக்கிறோம் என்று அவனுக்குத் தெரிந்தது. பாக்கி எல்லோரும், வேட்டி கட்டிய ஓரிருவரைத் தவிர சாக்ஸ், ஷ¨ஸென்று முறைப்படி வந்திருந்தார்கள். வேட்டிக் காரர்கள் கூட கட் ஷ¨ அணிந்திருந்தார்கள்.

பால கிருஷ்ணன் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு உட்புற விளையாட்டுத் திடலுக்குள் போனான். இரண்டு சறுக்கு மரங்கள். ஒன்றில் இரண்டு வட இந்தியக் குழந்தைகள் ஒன்றை ஒன்று துரத்தியபடி விளையாடிக் கொண்டிருந்தன. அவை போட்ட கூச்சலும், சிரிப்பும், அவற்றின் வேகமும் பிரியாவைக் கொஞ்சம் மிரளவே வைத்தன.

அடுத்த சறுக்கு மரம் காலி. வழக்கமாய் வந்த ஜாக்ரதை உணர்வின் படி அதை பால கிருஷ்ணன் நன்றாகக் கவனித்தான். அதில் ஆணியோ, பிய்ந்த சிலாம்போ இல்லை என்று உறுதி செய்தவுடன் தூக்கி பிரியாவை சறுக்கு மரத்தின் பாதியில் உட்கார்த்தினான். பிரியா அவன் தோள்களைப் பயந்து பற்றிக் கொண்டது. அதன் இடுப்பையும் தோளையும் பிடித்துக் கொண்டு மெல்ல சரிவாக அதை கீழே நகர்த்தி வந்தான். தரையைத் தொட்டதும் நின்று கொஞ்சம் தைரியமாய் அவனைப் பார்த்தது.
‘இன்னொருவாட்டிப்பா’ என்றது. தூக்கி மறுபடியும் இரண்டு தரம் அதே மாதிரி செய்தான். அதன் கண்கள் அகன்று மலர்ந்தன. உதட்டில் சிரிப்பு.

இப்போது நல்ல தைரியம் வந்துவிட்டது. நல்ல வேளை. கிழியாத கவுனும் ஜட்டியும் போட்டுக் கொண்டிருந்தது. செருப்பை சறுக்கு மரத்தடியில் விட்டு விட்டு, பின்புற ஏணி வழியாக ஏறி மேலிருந்து சறுக்கியது. உடனே ஓட்டமாக ஓடி ஏணியில் மறுபடியும் ஏறியது.

“பத்ரம்டா தங்கம்” என்று பால கிருஷ்ணன் கூறினான்.

“சரிப்பா” என்று சறுக்கியது.

பால கிருஷ்ணன் அருகில் நின்றான். தான் என்ன செய்யலாம் என்று யோசித்தான். சிமின்ட் பெஞ்ச்களில் பறவைகளின் எச்சம் தடிமனாகக் கோட்டிங் போட்டிருந்தது. செருப்பைக் கழற்றி புல் தரையில் கால் வைக்கையில் சில்லென்று பித்த வெடிப்புக்கு இதமாக இருந்தது. கூடவே பூச்சி பொட்டு ஏதாவது இருக்குமோ என்று தோன்றியது. உடனே செருப்பில் கால்களை நுழைத்துக் கொண்டான்.

சூரியன் இன்னும் சூடேறவில்லை. நான்கு கிழவர்கள் கிரிக்கட் பற்றிப் பேசிக் கொண்டு போனார்கள். இரண்டொருவர் செல்ஃபோனில் பேசியபடியே ஒரு கையை வீசி வீசி நடந்து கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பிரயத்தனித்தார்கள். மூன்று பெண்கள் இருந்தனர். சூடிதாரில் ஒருவரும், புடவையில் இருவரும். மூவர் காலிலும் கான்வாஸ் ஷ¨. தான் நினைத்தது போலன்றி பலரும் மத்ய தர வர்க்கத்தினராகவே இருப்பது கண்டு பால கிருஷ்ணனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

ஆனால் அவர்களோடும் அவனுக்கு பந்தம் இல்லை. அவன் அந்தக் கூட்டத்துக்குள்ளும் இல்லை.

பிரியாவிடம் “ஜாக்ரதையா விளையாடிண்டு இருக்கியா. இங்கேயே. அப்பா ஒரு ரவுண்ட் போயிட்டு வர்ரேன்” என்று சொல்லி விட்டு தலையாட்டிய குழந்தையிடமிருந்து நகர்ந்து திரும்பித் திரும்பி அவள் சரியாக சறுக்குகிறாளா என்று பார்த்தவாறே நடை பாதைக்கு வந்தான்.

குளிர்ச்சி முகத்தில் அடித்தது. தான் யாரோடும் அங்கு சேர முடியாது என்று அவனுக்குத் தெரிந்தது. வழக்கமான சங்கட உணர்வும் இல்லை. தான் யாரோடும், ஏன் பெற்றோறோடும், சகோதரியோடும், மனைவியோடும் இந்தக் குழந்தையோடும் கூட ஒட்டவில்லை என்று அவனுக்குத் தெரிந்தது. ‘தங்கமும், செல்லமும்’ பழக்க தோஷத்தில் உதிர்ந்த சொற்கள்.

தன்னை உயர்ந்தவனென்றோ தாழ்ந்தவனென்றோ அவன் நினைக்கவில்லை. எதோடும் ஒட்டாமல் எல்லாவற்றுக்கும் மத்தியில். அவனுக்கு நண்பர்களே இல்லை. ஆனால் ஆபீஸில் எல்லோருக்கும் வேண்டியவன். அக்கம் பக்கத்திலும் அப்படித்தான். காதலியும் கிடையாது. குழந்தையிலிருந்தே கவலை, கடமை என்றே வாழ்க்கை ஓடிவிட்டது. இன்று பார்க்குக்கு வந்ததே கல்யாணத்திற்குப் பிறகு அவனுடைய பெரிய அதிசயம். பிரியாவோடு இரண்டு, மூன்று முறைகள்தான் தனியாக வெளியே வந்திருக்கிறோம் என்ற ஞாபகம் தெறித்தது. பள்ளிக்குக் கொண்டு விடுவது, டாக்டர் வீடு எல்லாவற்றையும் மனைவியோ அம்மாவோ பார்த்துக் கொண்டு விட்டனர். அவன் முதலாளிக்கு அவன் இருபத்து நாலு மணி நேரமும் வேலை செய்தாலும் திருப்தி வருவதில்லை. மனைவியோடு கூட உறவினர் வீடுகள், கோவில் என்று போனது மிகவும் கம்மி. அதிலும் முக்கால் வாசி பெற்றோர் சகிதமாகத்தான் போய் வந்திருக்கிறான். அதில் அவனுக்குக் குறையுமில்லை.

எதிலும் ஒட்டவில்லை. எதுவும் ஒட்டவில்லை. தான் திடீரென்று மாயமாகி விட்டால் பொருளாதார காரணங்களுக்காக அன்றி யாருக்கும் அது தெரியக் கூட செய்யாது, தனக்கும் அது பாதகமில்லை என்று தோன்றியது. சுற்றி வருகையில் உள்ளே இன்னும் பிரியா சறுக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது, பக்கங்களைக் கைகளால் பற்றியபடி.

பிரியா யாரோ போல் தெரிந்தாள். அவளிடமிருந்து அவனை நோக்கி பிரத்யேகமாக எதுவும் நிகழவில்லை. அந்த வட இந்தியக் குழந்தைகள் போன்றே அவளும் யாரோ. அவளுக்கும் தனக்கும் தனிப் பட்ட உறவு ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. இப்படியே அவளை விட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டு விட்டு நடந்து கூடப் போய் விடலாம். அதனல் பாதகம் இல்லை. அது ஒரு பொருட்டு இல்லை. தான் ஒரு போதும் அது போல் செய்யப் போவதில்லை என்றாலும் அது ஒன்றும் செயற்கையாகவோ துக்ககரமானதாகவோ பாவமாகவோ வக்கிரமாகவோ அவனுக்குத் தோன்றவில்லை.

பிரியா யாரோ கோடி கோடி யாரோக்களில் ஒருத்தி. தான் போய் விட்டால் அது என்ன செய்யும்? கஷ்டப்படும். வீட்டிற்குப் போக அதற்குத் தெரியாது. விலாசமும் தெரியாது. ஆனால் இவற்றையெல்லாம் காரணமாகக் கொண்டு சேர்ந்து வாழ்வது மீண்டும் கடமையைத் தவிர வேறென்ன?

இந்த எண்ணம் ஏற்படுத்திய திகைப்போடு அதை மறுதலித்து அவன் மீண்டும் உள்ளே விளையாட்டுத் திடலுக்குள் வந்தான். சறுக்கு மரத்தை நெருங்கினான். அதன் உச்சியிலிருந்து பிரியா சறுக்கிக் கொண்டு வந்தது. இப்போது பக்கங்களைப் பிடிகாமல், கைகளை உயர்த்தியபடி. தரையை அடைந்ததும் ‘ஜிங்’கென்று எழுந்து நின்று அவனைப் பார்த்து வெற்றிகரமாகச் சிரித்தது.

“போலாமா” என்றதும் ‘இன்னொரு வாட்டி’ என்று கேட்காமல் செருப்பை அணிந்து கொண்டு தலையை ஆட்டிக் கொண்டு கிளம்பியது. அவனுக்கு என்ன தோன்றியதோ அதைத் தூக்கிக் கொண்டான். தூக்குவதற்கான குழந்தைகளை விட அவள் உய்ரமும், வயதும் சற்று அதிகம்தான். ஆனால் அவள் ரொம்ப ஒல்லி. அதனல் கூட உயரமாகத் தெரிந்தாள். அவள் உடல் அவன் மார்பில் பாதி அகலம் கூட இல்லை. அவன் கழுத்தின் மேல் கையை மாலையாகப் போட்டுக் கொண்ட போது நான்கு வருஷத்துக்கு முன் டி.வி.எஸ். ஃபிப்டியில் முதன்முறையாக முன்னால் நிற்க வைத்துக் கொண்டு போன போது, அது சந்தோஷம் தாங்காமல் திரும்பி அவனை முத்தமிட்டது ஞாபகம் வந்தது.

வேகமாகத் துடிக்கும் அதன் இதயம் அவன் இதயத்துக்குள் துடித்தது. அவன் அதன் வலது கன்னத்தில் ஆர முத்தமிட்டான். அது வாய்விட்டு சிரித்தவாறே தலையை வளைத்து தன் இடது கன்னத்தைக் காட்டியது.

– சொல்வனம், அக்டோபர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *