(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சம்மந்தக் குடிய நினைத்த போது அஸ்மாவின் ஈரக்குலையிலிருந்து குமட்டிக் கொண்டு புறப்பட்ட எச்சிலைக் காறித் தெருவில் துப்பினார். “ஒரு லோகத்துலயும் இப்படிப் பாக்கலாம்மா … தூ…’’மறுபடியும் துப்பினாள்.
“என்ன மைனி… ஒரு மாதிரியா வாறியோ… யாருட்ட உள்ள கோவமாக்கும்….”எதிர் வீட்டு ஆத்துனாச்சி பெத்தா விசயம் சேகரிக்கும் ஆவலில் வாசலின் விளிம்புக்கு வந்தாள். “எனக்கு மூத்த மவள கெட்டிக் கொடுத்த சம்மந்தகுடி சீர நெனைச்சித்தான் ஏழு வருசமாச்சி ’
துக்கயளுக்கு ஒரு நெறவு வேண்டாமா?…தூ…‘’துப்பிக் கொண்டேதான் அஸ்மா தொடர்ந்து சொன்னாள் “இங்க யாராவது மோளணும்னாலும்… அவாளுட்ட சொல்லணுமாம். அவாளுக்கு அனுமதி கெடச்சதுக்குப் பொறவுதான் இங்க உள்ள ஆளுவ மோளணுமாம்… புள்ளைய கெட்டி கொடுத்தாச்சின்னு சொல்லிட்டு அவாளுக்கென்ன அடிமை சாசனமா எழுதிக் கொடுக்க முடியும். ஏழு வருசமா இந்த நாயளுட்ட நாய்படாத பாடு படுதோம்…’’
ஆத்துனாச்சி பெத்தாவுக்கு ஒரு எழவும் புரிவில்லை. அஸ்மாவின் பேச்சிலிருந்து பிரச்சினை தொடங்கியதன் சாராம்சத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. துளைத்துக் கேள்வி கேட்டால் தெரிந்து கொள்ள முடியும்தான். ஆனால் அஸ்மாவே இப்படி இப்படி விசயம் என்பதைச் சொல்லிவிட்டால் ஆத்துனாச்சி பெத்தாவுக்குக் கேட்டுக் கொண்டிருக்க கொஞ்சம் கெளரவமாக இருக்கும்.
மூன்றாவது பிரசவத்திற்கு மக்களைச் சாயங்காலம்தான் ஆஸ்பத்திரிக்குக் கார் பிடித்துக் கூட்டிக் கொண்டு போனாள். ஒரு மணிநேரத்தில் திரும்பி வந்து நடையில் கால் வைக்கும்
முன்னால் காறித்துப்பிக் கொண்டே புழு புழுக்கிறாள்.
“எரணம் கெட்டதுவோ… அதுகளுக்கு வந்திருக்க வரிசை படச்சவன் ஒருத்தன் இருக்கான்..”
ஆத்துனாச்சி பெத்தா அஸ்மாவைக் கையாளத் தெரியாமல் திணறினாள். இவளின் கேள்விகளுக்கு அஸ்மாவின் பதில் வேண்டும். சரியான பதில்கள் கிடைத்துவிட்டால் அஞ்சாறு வீடுகளுக்குப் போகலாம். கசினா பணியாரமோ, அச்சப்பமோ, கூடவே சாயாவும் வரும். குடித்துக் கொண்டே பேசப்பேச வாய்பொழந்து கோழைவடிய கேட்பவர்களை ஐந்தாறு வீடுகளில் பார்த்துவிடலாம் ஆவலோடு ஆஸ்மாவின் முதல் கேள்வியை வைத்தாள்.
“ஒனக்கு மொவ எப்படி இருக்கா…”
“சும்மாதான் இருக்கா… நாளைக்கு காலையில பெறுவான்னு லேடி டாக்டர் சொன்னா. நான் சீலை துணியெல்லாம் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்…”
“சாயங்காலமே வலி ஆரம்பிச்சிதானே கூட்டிட்டு போனியோ..”
“அதான் மைனி – வலி ஆரம்பிச்ச ஒடனே வந்துடுங்கன்னு தான் சொல்லியிருந்தா. அதனாலதான் நானும் சடார்னு கூட்டிட்டுப் போனேன். அந்த எரப்பாளி மூளியோ ஆசுத்திரியில் வந்து.- நெலயளிஞ்சு நிக்காளுவோ…
“எனக்க சம்மந்தக்காரி சொல்லா. வலியெடுத்த உடனே மொதல்ல எனக்கு ஆள் சொல்லி விட்டிருக்கணும்னு… சம்மந்தக்குடியின்னு ஒரு மதிப்பு மரியாதை கெடையாது…. எல்லாம் ஓங்க ஓங்க இஷ்டம் தானா.. இவ என்ன டாக்டரா மைனி இவளுட்ட மொதச் சொல்ல… ஒரு ஞாயத்த சொல்லுங்க பாப்போம்…”
“ஆமா…” ஆத்துனாச்சி பெத்தா ஆமாம் போடத் தொடங்கினாள்.
“ஒனக்கு மருமவ மேல பாசம்ணா.. மொதல்லயே வந்து நிக்கணும்.. புள்ளய கூட்டிட்டு வந்து மூணு மாசமாச்சு… ஒரு நாள் இந்த நடையிலே வந்து பாத்திருப்பாளா. அவளுக்கு கோழி அறுத்து ஓரட்டிச்சுட்டு கொடுக்கலயாம்… வெக்கமில்லாம சொல்லுதா பாத்துக்குங்கோ… நோஸ்மாரெல்லாம் அவளப் பாத்து சிரிக்காவோ… ஆம்புள புள்ளைக்கு ம்மாண்ணா அவளுக்கு படச்சவன் ரெண்டு கொம்பையா கொடுத்திட்டான்? பண்ணிக்கு பொறந்தவளுவோ… வெளங்க மாட்டாளுவோ மைனி.”
“ஒனக்கு மருமவன் லெட்டர் என்னமும் போட்டாரா?” ஆத்துனாச்சி பெத்தா கேள்வி கேட்டாள்.
“அந்த எழவ ஏன் கேக்கியோ… எல்லாம் தலையெழுத்து… ம்மாக்கு பணத்த அனுப்பி பொண்டாட்டிக்கு கொடுக்கச் சொல்லுவாரு.. அவ எல்லாத்தையும் பொக்கையிலே போட்டு ஏப்பம் உட்டுட்டு கெடக்கா. யாருட்ட போய் அழதுக்கு. நேரத்த போணும் மைனி.. எனக்க இரண்டாமத்த மவளாக்கும் காவலுக்கு இருக்கா. அவ மாமியாரு அதுக்கு மேல…”
அஸ்மா கதவைத்திறந்து உடுதுணி எடுத்துக்கொண்டு கதவைப் பூட்டி மீண்டும் வாசலுக்கு வந்தபோது, ஆத்துனாச்சி பெத்தா தெருவில் நாலாவது வீடு தாண்டிப்போய்க் கொண்டிருந்தாள். அஸ்மா ஏழு மணி பஸ்சைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு வந்தபோது சம்மந்தக்காரி குடும்பம் யாரும் இல்லை.
“ஒனக்க மாமியாரு போயிட்டாளா…”
“இப்பதான் …. ஆபரேஷன் தியேட்டர்ல கூட்டிட்டு போனதும் நீ கார் அனுப்பிடணுமாம்…” ஜெரினா கிண்டலாக சொன்னாள்.
“ஆமா.. அவ வாப்பாக்க மொதலு இங்க கெடக்கு.. காரு அனுப்பதுக்கு.”
“காரு அனுப்பலனா பிளேன் அனுப்பு” இரண்டாவது மகள் பானு சிரித்துக்கொண்டே சொன்னாள். பேரன் பேத்திகளெல்லாம் வரண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தனர். மொய்து சாகிபு சாப்பாடு வாங்கிக் கொண்டு ஒவ்வொரு படியிலும் நின்று நின்று மெல்ல நடந்து வந்தார். தளர்ந்து போன சரீரம் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஜெரினாவின் கல்யாணம் நடப்பது வரை கம்பீரமாக இருந்த ஒடம்பு. ஒரு குஸ்தி பயில்வானுக்கு நிகரான சரீரம். இன்று கூன் விழுந்து கிடந்தது. எல்லாம் மூன்று பொட்டப் புள்ளைகளை பெத்து போட்டதால் வந்த வினை.
மொய்து சாகிபு மிகக் கடுமையான உழைப்பாளி. சைக்கிளில் ஜவுளி கட்டிக் கொண்டு போய் விற்பவர் நாலுநாள் ஐந்து நாள் அப்படியே போய்விடுவார். ஏதோ ஒரு ஊரில் தூங்கி சாப்பிட்டு … கிட்டத்தட்ட ஒரு நாடோடி வாழ்க்கைத்தான். அவரின் கடுமையான உழைப்பில் சொந்த வீடு ஒன்று உருவானது. சில ஆண்டுகள் ஓடிப்போனது. இரண்டு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டார். இன்னும் சில நிலபுலன்களின் சேர்க்கை, மூத்தமவள் ஜெரினாவிற்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். அரேபியா மாப்பிள்ளை. அஸ்மாவுக்கு பிடித்துப் போய்விட்டது. அந்த அரேபியா மாப்பிள்ளைக்கே மகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது அஸ்மாவின் தவமாக இருந்தது. பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டபோது மொய்து சாகிபு துணிந்து விட்டார். என்ன விலை ஆனாலும் அரேபியா மாப்பிள்ளையை அமுக்கி விட வேண்டும். ஜெரினாவின் கழுத்தில் கரிசமணிமாலை விழுந்தபோது மொய்து சாகிபின் கடுமையான உழைப்பில் உருவான அந்த இரண்டு கடைகளுக்கும் கால் முளைத்துவிட்டது. அன்றுதான் அவரின் உடம்பில் சீணம் விழுந்தது.
“அப்பா வந்தாச்சு…”வராண்டாவில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த பேரன் பேத்திகளெல்லாம் மொத்தமாகக் கூடினார்கள். மொய்து சாகிபு சாப்பாட்டுப் பொட்டலத்தோடு ஆஸ்பத்திரி அறையில் வந்து “படைச்சவனே..” என அமர்ந்தார்.
ஜெரினா ஒருக்களித்துப் படுத்துக் கிடந்தாள். வாப்பாவைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. அஸ்மா பொட்டலங்களை வாங்கிக் கொண்டு பானுவிடம் கொடுத்தபடி “புள்ளைகளுக்கு கொடுரம் கேட்டியளா… காரு ரெடி பண்ணி வைங்கோ… ஓங்க சம்மந்தக்காரிக்கு அனுப்பணும்.. எலிசபெத்து ராணி கரெக்டா வருவாளாம்..”
ஒரு நர்ஸ் உள்ளே வேகமாக வந்தாள். டாக்டர் கொடுத்த மருந்துச் சீட்டை நீட்டினாள். மொய்து சாகிபு மறுபடியும் மெல்ல மெல்லப் படியிறங்கினார். பானு வெளியே வந்து படியிறங்கிப் போகும் வாப்பாவைப் பாவமாய்ப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்து அக்காவிடம் சொன்னாள்.
“ஏம்புளா… ஒனக்க கொழுந்தன்மாரே எவனையாவது வரச்சொல்லி உடப்புடாதா.. வாப்பாவுக்கு ஏறயும் எறங்கயும் கழியாதுல்லா….
ஜெரினா பதில் ஒன்றும் சொல்லவில்லை.
வராண்டாவில் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மெல்ல மெல்ல நடந்தாள். அருகில் ஆதரவாய் அவள் புருஷன். ஜெரினாவின் அறையை இரண்டு மூன்று தடவை அங்கேயும் இங்கேயுமாகக் கடந்து போனார்கள். மறுபடியும் கடந்து போகும் போது ஜன்னல் வழியாகப் பார்ப்பதற்காகப் பார்வையைத் தீட்டி வைத்துக் கொண்டிருந்தாள். நான்காவது முறையாக நடந்து போகும்போது அந்தப் பெண்ணின் தோளில் அவள் புருஷனின் கரம் இருந்தது. ஜெரினாவுக்குள் அந்த நினைவு பளிச்சென்று மின்னியது. அவளின் தோளில் கைவைத்தபடி சலீம் மெல்ல அவளை நடத்திக் கூட்டிப் போகிறான். கண்களில் சிறுதுளியாய்க் கண்ணீர் திரண்டது. ஜெரினா மொத்தமாக முகத்தைத் துடைப்பதைப் போல் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
கல்யாணம் முடிந்த நாற்பதாவது நாள் கதவுக்குப் பின்னால் நின்ற ஜெரினாவின் கண்ணீரைக் கூட துடைக்க முடியாதவனாய் சலீம் அரேபியாவுக்குப் புறப்பட்டுப் போனான். இருபது நாட்களுக்குப் பிறகு கடிதம் வந்தது. சுகசெய்திகளுக்குப் பிறகு ம்மாவின் சொல் கேட்டு நடக்க வேண்டும் என சலீமின் ஆணை . அவள் உண்டானதை உணர்ந்தபோது அவளின் அகம் சலீமின் முகத்தைத் தேடியது. கடிதம் கொண்டு போனது ஜெரினா கருவுற்று இருக்கும் செய்தியை ஜெரினாவுக்கு சலீமின் முகம் காணும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போனது. அவன் அணைப்புக்கிடையே சிக்கிக் கிடந்ததும், அந்த அணைப்பின் கதகதப்பும் அவள் நினைவில் வந்து முள்ளாய்க் குத்தியது. தொழுகைப் பாயில் நீண்டதுவாக்களும் சூராக்களும் என நீண்டு கொண்டே போயின; இரவுகளும் அப்படித்தான். “
வெவ்வேறு வடிவமாக மாறிவந்த ஜெரினாவின் உப்பிய வயிற்றைச் சலீம் பார்த்ததில்லை. அவளின் அடிவயிற்றில் எழுந்த சிசுவின் துடிப்பை அவனின் கரம் தொடுதல் மூலம் உணர்ந்ததில்லை. தன் உப்பிய வயிற்றையும், தாய்மை நிரம்பிய முகத்தையும் அவன் காணவேண்டும் என்பதெல்லாம் அவளின் உள் விருப்பங்களாக இருந்தன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சலீம் ஊருக்கு வந்தபோது அவனைக்கண்டு மிரள மிரள விழிக்கும் ஒரு வயது தாண்டிய ஓர் ஆண்மகன். எல்லோரும் சொல்லிக் கொடுத்தார்கள். “இதுதான் வாப்பா.”
குழந்தை அழுது கொண்டு ஜெரினாவிடம் ஓடியது. பத்து தினங்களுக்குப் பிறகுதான் சலீமை அவன் மகன் வாப்பா என்று முழுமையாக ஒத்துக்கொண்டு ஒட்டிக் கொண்டான்.
வெந்து வெந்து நீறிச் சாம்பலாய்க் கிடந்த உணர்வுகள் ஜெரினாவுக்கு உயிரூட்டப்பட்டது போலத்தான் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் பூச்சூடிய கூந்தல். அவன் வருகைக்குப் பிறகு பூ மீண்டும் கூந்தல் ஏறியிருக்கிறது. பூவின் வாசம் அவள் நாசிக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குத்தான். அவளின் இந்த வாழ்க்கை விசித்திரமாகத் தெரிந்தது. இந்த இரண்டு மாதங்களுக்குள் கிடைத்தவரை வாழ்ந்துவிட வேண்டும் என்ற தீவிரம் சலீமுக்கு நிறையவே இருந்தது . ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு முக்கியமானதாக இருந்தன.
ஒவ்வோர் உடையாக மகனுக்குப் போட்டுப் பார்த்தான். மடியில் தூக்கி வைத்துக்கொண்டான். மார்பில் கிடத்திக் கொண்டான்… “மகன டாக்டராக்கணும்”ஜெரினாவிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டான்.
“லே… நீ அவனுட்ட ரொம்ப கொஞ்சாதே” ம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“ஆமலே…. நீ பாட்டுக்கு இன்னும் முப்பது நாப்பது நாளுலே போவே… அப்புறம் நாங்கல்லா பாக்கணும்”சலீம் கொஞ்சநேரம் மெளனமாக இருந்தான். பட்டென்று சொன்னான்.
“நான் போவலே… எனக்கு இந்த பொழப்பு வேண்டாம்… நான் இங்கே ஏதாவது பண்ணப் போறேன்…”உம்மாவின் தலையில் இடி விழுந்து விட்டது.
ஜெரினாவை மொறைத்தாள். அவள் சொல்லித்தான் இவன் பேசுவதாக நினைத்துக் கொண்டாள். அடிவயிறு பற்றி எரிந்து ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டு ஆலோசித்தாள்.
சலீம் புறப்படும்போது மகன் சத்தம் போட்டு அழுதான். சலீம் கண்கள் கலங்கின. கதவுக்குப் பின்னால் வழக்கம்போல் ஜெரினா. அவள் கண்களில் வழிந்த நீர் அவள் சரீரத்தின் கனலைச் சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.
ஜெரினா இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள்.
முதல் குழந்தைக்கு நிறைய சம்பிரதாயங்களைச் செய்து மொய்து சாகிபு ஒடிந்தே போய்விட்டார்.
சம்மந்தக்காரி அடுக்கிக் கொண்டே போனாள். குழந்தைக்குப் போடும் தங்க ஆபரணங்களைப் பற்றி, அதற்கு முன்னால் ஜெரினா உண்டான நேரத்தில் மூன்று மாசப் பலகாரம், ஐந்து மாசப்பலகாரம், ஏழு மாசப்பலகாரம், ஒன்பது மாசப் பலகாரம் என குத்துப்போணியிலும், வாளியிலுமாக, சுமந்து சுமந்து மொய் துசாகிபு சுத்தமாகிப் போனார். அதன்பிறகுதான் நகைகளின் பட்டியலைச் சம்மந்தக்காரி சொன்னது. பழைய கதைகளை ஆலோசித்துக்கொண்டே அஸ்மாவிடம் சொன்னார்.
“பிள்ளே கொஞ்சம் மாவிடிச்சு வை… வெளவுகாரிட்ட சொல்லி முறுக்கு சுத்தணும்”
“ஆமா முறுக்க கொடுத்தா… ஒம்ம மவளர் திங்கா? அங்க உள்ள ஹபுஸ் தான இடிச்சி இடிச்சி சீனிபோட்டு நல்லா முழுங்கா..”
ஆனாலும் அஸ்மா மாவிடித்து எல்லா வேலைகளையும் மளமளவென முடித்துவிட்டாள்.
கார் பிடித்து பலகாரங்களைக் கொண்டு கொடுத்து விட்டு இரண்டாவது பிரசவத்திற்காக மகளை அழைத்து வந்தார்.
முதல் பிரசவத்தைப்போல ஜெரினாவுக்கு அவ்வளவாகப் பயம் இல்லை. பெண் குழந்தை பிறந்தது. சலீமுக்கு மூணு நாட்களுக்குப் பிறகுதான் தகவல் போனது. ரெண்டாவது குழந்தை பிறந்த அன்றும் சம்மந்தக்காரி நிறைய சல்லியம் காட்டினாள்.
“என்ன நீங்கோ… இரிக்கதுக்கு நல்ல சேர்கொண்டு போடப் புடாதா?.. எனக்க தங்கச்சி மொவ வந்தாளோ… ஒரு கப்பு ஆர்லிக்ஸ் கலக்கி கொடுத்தியாளா..?”
வள்ளவிளை மாமிக்குக் கோபமாய் வந்தது. சம்மந்தக்காரி போனதும் கொட்டித் தீர்த்தாள். வலிச்சம் காட்டி அபிநயமாய்ப் பேசினாள்.
“பிள்ளா ஜெரினா… இந்த எளவுட்டே எப்படிளா காலந்தள்ளே… அவளுக்கு கெப்பர் மயிரு. ஆர்லிக்ஸ் இல்லன்னா கெடக்கமாட்டா… சேரு கொண்டு போட்டியா. பெரிய அவுலியா.. ம்மாக்க மாப்பிள்ளைக்கு சக்கரம்னு நெனச்சிருக்காளோ… காக்கா உன்னய அரைச்சி குடிப்பாளுவோ…”
“நீங்கள் ஊருக்கு வரவேண்டும். எனக்கு ஒங்க ஞாபகமாகவே இருக்குது. மகள் உங்களைப் போலவே இருக்கிறாள். மகனும் அடிக்கடி வாப்பா எப்போ வரும் என நச்சரிக்கிறான்” இப்படியான செய்திகளோடு ஜெரினா கடிதம் அனுப்பினாள்.
“எனக்கும் ஒன்னையும் குழந்தையவும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இல்லையா.. நான் எவ்வளவு வேதனைகளோடு இங்கு நாட்களை நகர்த்துகிறேன் என்பது உனக்குத் தெரியாது. இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டு முடித்துக்கொண்டு ஊர்வருவேன்.’’இப்படியாக செய்திகளோடு கடிதம் சலீமிடமிருந்து வந்தது. சலீமின் இரண்டாவது வருகை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. விமான தாவாளத்தில் மகனும் மகளும். சலீமின் கண்களில் நீர் பொட்டித் தெறித்தது.
சலீமுக்கு இரண்டு குழந்தைகள் வானத்திலிருந்து கிடைத்தது போலத்தான். குழந்தைகளின் அன்றாட வளர்ச்சியை அவன் அறிந்திருக்கவில்லை. குடும்பத்தில் எல்லோரும் கூடியிருந்தார்கள். எல்லோரையும் தாண்டி கண்கள் கதவுக்குப் பின்னாள் நிலைத்தன. “சொகமாக இருக்கியளா..?”இமைகள் உயர்ந்து தாழ்ந்து பேசின. கடகடவென உருண்ட ஐந்தாறு துளி கண்ணீர் கதவுக்குப் பின்னால் மறைந்து கொண்டு சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டாள்.
எல்லோரும் போன பிறகு சலீமின் உம்மா கேட்டாள். “எத்தனை மாசம் லீவு மோனே..?” சலீம் பதில் சொல்லவில்லை. உள்ளே ஜெரினாவைத் தேடினான். அவள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெட்டியில் மடக்கி வைத்திருந்த சலீமுக்குப் பிடித்தமான அந்தக் கலர் சேலையைக் கட்டியிருந்தாள். கூந்தலில் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு குண்டு மல்லிப்பூவின் குடியேற்றம்.
மறுநாள் ஒன்றிரண்டு உறவினர்கள் வந்துபோனார்கள். போகும்போது எல்லோர் கைகளிலும் ஒரு வெளிநாட்டுப் பொருள். எல்லோரும் மறக்காமல் கேட்ட ஒரு கேள்வி.
“இனி எப்போ போணும்..?”
மகளின் பள்ளிக்கூட புத்தகங்களைப் பார்த்தான். ஒட்டிக் கொண்டிருந்த மகள் விலகவேயில்லை . மகன் நிறையப் பேசினான். சலீமின் காதுகள் குளுமையாகிக் கொண்டிருந்தன. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? நவுழப் படித்து, எழும்பி நிற்கப் படித்து நடக்கப் படித்து? அது அவனுக்குத் தெரியவே இல்லை . ஐந்து வருடமாகிறது. இந்த ஐந்து வருடத்தில் ஜெரினாவோடு சேர்ந்திருந்த நாட்கள் நூற்றுக்கும் குறைவே.
மூன்று மாதங்களுக்குப் பிறகு சலீம் மீண்டும் பயணம் புறப்பட்டான். இங்கே என்ன செய்வது என்ற கேள்வி அவன் இதயத்திற்குள் எழுந்திருக்க வேண்டும்.
ஏதாவது செய்தாலும் மாதம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமா? யாட்லி பவுடரும் அத்தரும் ரெடோ வாச்சியும் வருமா? அரேபியாக்காரன் என்ற கவுரவம் கிடைக்குமா?… அரேபியாகாரன் தூ… பொண்டாட்டிப் புள்ளையளுக்கு மொகத்தப் பார்க்கமுடியாத வாழ்க்கை. வெலவெலத்துப் போனான். ஆழமான ஆலோசனை அவனைப் பயப்படுத்தியது. சோர்ந்து போனான். ஜெரினாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாத கோழையானான். ஆனாலும் கதவுக்குப் பின்னாலே ஜெரினாவின் கண்ணீரைப் பார்த்தும் பாராதவனாய் இரண்டு
குழந்தைகளும் வாசலில் நின்று “வாப்பா, வாப்பா..?” என்று அழுத குரலைக் கேட்டும் கேட்காதவனாய்ப் போன சலீமைச் சுமந்த விமானம் மண்ணை விட்டு விண்ணில் பறந்தது, ஜெரினாவிற்கு மூன்றாவது முறையாகக் கர்ப்பம்.
மிச்சமிருந்த மொய்து சாகிபின் முதுகெலும்பும் முறிந்து விடும்போல இருந்தது. ஏழாவது மாதத்திலேயே மகளை அழைத்து வந்து விட்டார் சம்பிரதாயங்களில் சம்மந்தக்காரி ஒரு சுற்றுப் பெருத்து விட்டாள். மொய்து சாகிபுவின் நிலைதான் பரிதாபம். ஜெரினாவுக்கு முன்னால்தான் பானுவின் இரண்டாவது பிரசவம். எல்லாம் அரேபியா மாப்பிள்கைள். அவர் என்ன செய்வார். அவருக்குக் கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் இருப்பதாக சம்மந்தக்குடிகளில் நினைப்பு அஸ்மா கோபத்தில் மண் அள்ளிப் போட்டுத் திட்டுவாள். ஆனாலும் அவர்களைக் கண்டால் காட்டிக் கொள்ள மாட்டாள். மகளின் வாழ்க்கை .. கொடுத்த இடம்… குனிஞ்சித்தான் போகணும்… வயிற்றெரிச்சலோடு சொல்லுவாள். “படைச்சவனே… நீ பார்த்துக்கோ …”
“அப்பா வந்தாச்சி… அப்பா வந்தாச்சி….” என்ற குழந்தைகளின் கூக்குரலில்தான் ஜெரினா நினைவுகளை விலக்கிக் கொண்டாள். டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டையும், மருந்தையும் அஸ்மாவிடம் கொடுத்தார். பிள்ளைகள் சூழ்ந்து கொண்டு சத்தம் போட்டனர். “பிள்ளே பானு. அந்த நேள்ஸை கூப்பிடுளா.. எல்லாத்துக்கும் ஊசிப்போட்டாத்தான்-“
அஸ்மா முடிக்கு முன்னால் குழந்தைகள் மெளனமாகின. நர்ஸ் வந்து மருந்தை வாங்கிப் போனாள். அஸ்மாதான் ஒரு தட்டில் மூன்று இட்லிகளை வைத்து மொய்து சாகிபுவிடம் கொடுத்தாள். வாப்பா… இங்கே இரிங்கோ..”பானு எழுந்து கொள்ள மொய்து சாகிபு பெஞ்சிலிருந்து இட்லியைப் பிய்த்து வாயில் போட்டார். கட்டிலில் படுத்திருந்த ஜெரினாவிற்கு வலி ஆரம்பித்தது. அஸ்மா ஓடிப்போய் நர்ஸிடம் சொன்னாள். நர்ஸ் வந்து பார்த்துவிட்டுப் பிரசவ அறைக்குப் புறப்படச் சொன்னாள். வலி கூடியது. ஜெரினா மெல்லச் சத்தமிட்டாள்.
“கொஞ்சம் பொறுத்துக்கோ” அஸ்மா சொல்லிக்கொண்டே ஜெரினாவைக் கைத்தாங்கலாய்ப் பிடித்துக்கொள்ள, இட்லியை வைத்துவிட்டு மொய்து சாகிபு எழுந்தார். ஜெரினாவைப் பிரசவ அறைக்கு அழைத்துப் போனார்கள்.
மொய்து சாகிபு மெல்லப் படியிறங்கினார். சப்போட்டாக கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டேதான் இறங்கினார். மூச்சு வாங்கியது.
– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002
– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com